
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
முகவுரை
(வித்வான் ல. சண்முகசுந்தரம்)
முழு நிலாப் போன்ற வட்டமுகம், அகன்ற நெற்றி, புன்முறுவல் பூக்கும் அதரங்கள், அன்பர்களையும் நண்பர்களையும் தழுவி அணைக்கும் கண்கள், உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட ஓங்கு தாங்கான கரிய திருமேனி. இப்ப்டி ஒரு தோற்றப் பொலிவோடு அரசதோரணையில் நடமாடியவர்தான் அறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள். ஒரு போர்வீரனின் வல்லமை மிக்க உடம்பை விட வலுவான உடல் படைத்தவர்தான் தொண்டைமான். ஆனாலும் அந்த உடம்புக்குள் மலரினும் மெல்லிய இதயம் பூத்துக் கிடந்தது. இலக்கியம், சிற்பம். ஒவியம், கம்பர், தமிழ், இசை, விருந்தோம்பல், அன்பு, நன்றி மறவாமை, பொறையுடைமை, நேர்மை, உறுதி என்று இதழ் இதழாக விரிந்து மணம் பரப்பியது அந்த இதயத் தாமரை.
பாஸ்கரத் தொண்டைமானை அப்படியே ஒவியத்தில் வரைந்து காட்ட முடியும். ஆனால் அந்த இதயத் தின் உணர்ச்சித் தேனை, தமிழ்க்காதலை கலை மோகத்தை, அன்பின் வேகத்தை, பண்பின் ஒய்யாரத்தை எப்படி ஒவியத்துள் கொண்டு வர முடியும்? குழந்தை போன்றவர் தொண்டைமான். உத்சாகம் வந்துவிட்டால் அதை அமுக்கி மறைக்கத் தெரியாது தொண்டைமானுக்கு. குழந்தை போலவே விழுந்து விழுந்து சிரிப்பார். அவர் சிரிக்கிற சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும் பார்க்கின்றவர்களுக்கு. அறுபது வயதை எட்டிய ஒருவர் இப்படித் துடிப்பாக இருக்கிறாரே என்று இருபது வயது இளைஞர்கள் கூட வியப்பார்கள். அப்படி வாழ் நாள் முழுவதும் கலகலப்பாகவும் சுறு சுறுப்பாகவும் இருந்தவர் தொண்டைமான்.
முப்பது வருஷங்களுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்தவர் தொண்டைமான். ரெவினியூ இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து, வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என்று உத்தியோக உலகை அலங்கரித்தவர் அவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் போய் பணியாற்றியிருக்கிறார். உத்தியோக சம்பந்தமாக இருந்த பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ்ச் சங்கங்களை நிறுவுவார். கம்பர்விழா, வள்ளுவர் விழா, தமிழ் விழா என்று கோலாகலமாகக் கொண்டாடுவார். நந்தவனம், பசுமடம், கோயில், தமிழ் மன்றம், கருத்தரங்கம், பட்டிமன்றம், ஊர் ஒற்றிமை, சுத்தம் சுகாதாரம் அவ்வளவும் தொண்டை மானின் புண்ணியத்தில் அங்கங்கே எழுந்து நிற்கம். நகரங்களில் உள்ள வசதிகள் கிராமங்களிலும் இருக்க வேண்டும் என்கிற கொள்கையோடு பாடுபட்டவர் தொண்டைமான். உத்தியோகத்தோடு அப்படிப் பொது நலப் பணி ஆற்றியவர் திரு. தொண்டைமான்.
ரசிகமணி, டிகேசியின் கலைக்களஞ்சியத்தைத் திறந்து அதிலிருந்து கவி நயங்களை, பண்பாட்டு நயங்களை முத்து முத்தாக மணி மணியாக எடுத்துத் தொடுத்து, தமிழ் மக்களுக்கு, டிகேசியை இனம் காட்டியவர் தொண்டைமான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ரசிகமணி டிகேசி பற்றித் தொண்டைமான் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதுபோன்ற ஒரு நூல், டிகேசி பற்றிய வரலாற்று நூல் இன்றும் வரவில்லை.
ரசிகமணி டி.கே.சி – தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைச் சேகரித்து, அவற்றை வகுத்தும் தொகுத்தும், டிகேசியின் கடிதங்கள் என்று ஒரு நூலை உருவாக்கினார் தொண்டைமான்.
அற்புதமான நூல் அது. கடிதங்களைக் கொண்டே, அருமையான இலக்கியம் ஒன்றைப் படைக்க முடியும் என்பதை தமிழில் முதல் முதலாக எடுத்துக் காட்டியவர் அவர்.
தொண்டைமான் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி, பேச்சோ, எழுத்தோ, ஆராய்ச்சியோ, கட்டுரையோ எதுவானாலும் அவற்றில் தனித்த முத்திரை ஒன்று இருக்கும். யாராலும் அதை அடைக்க முடியாது. வானளாவிய கோபுரங்களோடு நிமிர்ந்து நிற்கும் கருங்கற் கோயில்கள் தமிழகமெங்கும் கடவுள் தத்துவத்தை உணர்த்தி நிற்கின்றன. தமிழகத்தை அப்படியே கையில் எடுத்துக் காட்டும் ஒவ்வொரு கோயிலும். தமிழ் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, கலை, நோக்கம், உணர்வு, போக்கு வரவு அவ்வளவும் கோயிலின் கருங்கற்களுக்குள் பத்திரமாய்ப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. மெய்யுணர்வின் மூலமாகக் கோயில்களையும், கோயில்களின் கலைப் பொக்கிஷங்களையும் ஆராய்ந்து, அனுபவித்து, பிறரும் அனுபவிக்கும்படி, அற்புத இலக்கியங்களாக வடித்தெழுதியிருக்கிறார்கள் தொண்டைமான்.
தமிழர்கள் எல்லோரும் கண்ணைத் திறந்து அதிசயித்துப் பார்த்தார்கள். அருமை நண்பர், நீதிபதி மகராஜன் சொன்னார், “கோயில்களைப் பற்றி எழுதி, அவற்றுக்கு ஒளியும், உயிரும், பொலிவும் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர் பாஸ்கரன்” என்று. நீதிபதியின் தீர்ப்புக்கு அப்பீல் ஏது?
தொண்டைமான் நூல்களை தமிழ் மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். படிக்கப் படிக்க மனம் தூய்மை பெறும். பக்தி கலை உணர்வு, இப்படி எழுதினவர், வாசிக்கிறவர் எல்லோரையும் பரவசப்படுத்தும் தொண்டைமான் நூல்கள். அது போதாதா நமக்கு?



