தெய்வ ஜனனம் – க. நா. சுப்ரமண்யம்

தெய்வ ஜனனம்

சோழ நாட்டின் தலை நகரான பூம்புகாரில் அந்த நாட்களில் மனிதர்களுக்கிடையே இது ஒன்றுதான் பேச்சு. வேறு எதையுமே யாரும் லக்ஷியம் பண்ணியதாகத் தெரிய வில்லை. தினசரி அலுவல்களாகிய ஊண் உறக்கம் முதலியவற்றை நடத்துவதே சிரம சாத்தியமான காரியமாகி விட்டது.

“போயிருந்தாயா?” என்று தெருவோடு போகும் நண்பன் ஒருவனை ஒருவன் கேட்பான். “சிற்பக் காட்சிக்குத் தானே? போயிருந்தேனே …ஆஹா…” என்று மற்றவன் ஆரம்பித்து விடுவான்.

“பார்த்தாயா? ” என்று அந்த நாட்களில் யாராவது யாரையாவது கேட்டால் அதற்கு, “சிற்பக் காட்சியைப் பார்த்தாயா?” என்று தான் அர்த்தம்.

சிற்பக் காட்சி ஒரு பத்து நாட்கள் நடந்தது. அந்தப் பத்து நாட்களில் சுமார் பத்து லட்சம் பேர்வழிகளாவது மன்னனுடைய சிற்பக் காட்சிச் சாலைக்குள் புகுந்து புகுந்து புறப்பட்டிருப்பார்கள். அங்கே காட்சி அளித்த விதவிதமான அற்புதமான தெய்வாதீதமான சிற்பங்களைக் கண்டு களித்தவர்களின் தொகை உண்மையிலேயே எண்ணில் அடங்காது என்றுதான் தோன்றுகிறது; அந்தக் களிப்பும் ஓர் எல்லையில் அடங்காது என்றுதான் சொல்லவேண்டும். பண்டிதர்கள், பாமரர்கள் எல்லோரும் பார்த்து ரஸித்தனர். சாதாரணமாக அழகைப்பற்றிச் சிந்திக்கப் போதிய அவகாசமோ உள்ளமோ இல்லாத மனிதர்கள் கூட அந்தப் பத்து நாட்களும் தங்கள் கண்களுக்கு அழகெனும் விருந்தளித்தார்கள்; கல்லினும் கடினமான தங்கள் உள்ளங்களை அழகுக்குப் பறி கொடுத்துக் கரைந்து உருகினார்கள்.

நாடெங்குமே இந்தப் பத்து நாட்களையும் கலையின் விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று சோழன் உத்தரவிட்டிருந்தான். காவிரிப்பூம்பட்டினம், கந்தருவ லோகப் பட்டினமாகக் காட்சியளித்தது. நகரத்து மாந்தர் மட்டுமன்றி, விழாக் கொண்டாடக் குதூகலத்துடன் நாட்டுப் புறத்து மாந்தர்களும் வந்து தலை நகரில் குழுமி யிருந்தனர்.

ஐம்பத்தாறு தேசங்களுக்கும் அதற்கப்பாலுங் கூடச் சோழமன்னன் தூதுவரை அனுப்பி இந்தச் சிற்பக் கண்காட்சியைப் பிரஸித்தப் படுத்தியிருந்தான். அந்தந்த நாட்டுச் சிற்பிகள் தங்கள் தங்களுடைய சிறந்த சிருஷ்டிகளுடன் வந்து தன் சிற்பக் காட்சியைக் கௌரவிக்க வேண்டுமென்று ஓலை அனுப்பியிருந்தான். ஒவ்வொரு வரையும் ஏற்றபடி உபசரிக்கவும் ஏற்பாடு செய்திருந்தான். காட்சி பத்து நாட்கள் நடைபெற ஏற்பாடாயிருந்தது. காட்சிச் சாலையில் வைக்கப்பட்ட சிறந்த சிற்பத்துக்கு ஆயிரம்பொன் பரிசளிப்பதாகச் சோழன் தீர்மானித்திருந்தான்.

மன்னனுடைய அழைப்புக் கிணங்கிக் காச்மீரத்திலிருந்தும் காமரூபத்திலிருந்தும் கங்கைக்கரையிலிருந்தும் சாவகத்திலிருந்தும் யவனத்திலிருந்தும் புஷ்பகத்தி லிருந்தும் மிசிரத்திலிருந்தும் சிறந்த சிற்பிகள் பலர் வந்திருந்தனர். அவர்களுடன் வந்திருந்த சிற்பங்கள் நவநவமான வேலைப்பாடுகள் அமைந்தவை; பார்க்குந் தோறும் பார்க்குந்தோறும் மேலும் மேலும் அதிகமாக இன்பம் பயப்பவை. நகரத்து ஜனங்களுக்கு அந்தச் சிற்ப சிருஷ்டிகளையும் அவற்றின் சிருஷ்டி கர்த்தாக்களையும் பார்ப்பது அற்புதமான ஆனந்தகரமான அனுபவமாய் இருந்தது.

யவனச் சிற்பிகளின் தலைவனாக வந்திருந்த பிராக்ஸிடிலிஸ் என்பவனின் பெயரும் உருவமும் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு வேடிக்கையாக இருந்தன. ஆனால் அவனுடைய அழகுக்கும் காம்பீர்யத்துக்கும் ஈடாக வேறு ஒன்றையுமே சொல்லுவதற்கில்லாமல் இருந்தது. தன்னுடைய அழகிலும் காம்பீர்யத்திலும் ஓரளவு அவன் தன்னுடைய சிருஷ்டிக்கும் அளித்திருந்தான். அவனுடைய சிருஷ்டி ஒரு நிர்வாண ஸ்திரீயின் உருவம். அது தங்கள் நாட்டு அழகுத் தெய்வம் என்றும் அதன் பெயர் வீனஸ் என்றும் அவன் சொன்னான். உண்மையிலேயே அழகிகள் நிறைந்த என்று நாடாகத்தான் இருக்கவேண்டும் யவனர் நாடு தமிழ் மக்கள் பேசிக் கொண்டார்கள். யவனர்கள் காட்சிச் சாலையில் வைத்திருந்த மற்ற சிற்பங்களிலும் ஒரு தெய்விகமான அழகு நிரம்பித் ததும்பி வழிந்துகொண்டிருந்தது.

யவனர்களின் நிர்வாண ஸ்திரீக்கு அடுத்தபடியாக ஜனங்களின் மனத்தைக் கவர்ந்தது நேபாளத்திலிருந்து வந்திருந்த பதுமன் என்பவனின் சிருஷ்டிதான். கடித்துக் கொல்லும் பயங்கரமான பாவத்திலே இரு கரு நாகங் களையும் அவற்றின் குட்டிகளையும் அவன் செய்திருந்தான். அதற்கடுத்தாற் போல் வைக்கப்பட்டிருந்த காமரூபத்துப் பிராமண சிற்பியான வஸுதேவனின் சிருஷ்டி மனிதனுடைய கற்பனைக்கே எட்டாத அதீதமானதோர் அற்புதம். அது என்ன என்று கண்டுகொள்ள முயன்று கொண்டே அதன் எதிரில் நின்றபடியே ஊணுறக்கமில்லாமல் நாட்கணக்காகத் தள்ளிவிடலாம் போல் இருந்தது; அவ்வளவு அழகிய புதிர் அது. ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டு நின்றிருந்தார்கள் ; இடையிடையே இரண்டொரு ஸர்ப்பங்கள், ஒரு யானை, இன்னும் உருத்தெரியாத, முழுவதும் உருவகமாகாத பல உருவங்கள், எல்லாம் ஒன்றோடொன்று பிணைந்து முறுக்கிக்கொண்டு கிடந்தன. ஏதோ அழகிய கற்பனைதான்; ஆனால் அதன் அர்த்தம் என்ன என்று தான் யாராலும் சொல்லமுடியாமல் இருந்தது. வஸுதேவனும் தன் வாயைத் திறந்து அதன் அர்த்தத்தை விளக்க முன் வராமலே இருந்துவிட்டான்.

பொன்னாலும் வெள்ளியாலும் மரத்தாலும் மண்ணாலும் கருங்கல்லாலும் நெட்டியாலும் ஆன சிற்பங்கள் பல அங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எதனால் செய்யப்பட்டவை என்பதே ஊகிக்க முடியாமல் இருந்தன. உதாரணமாக மிசிர தேசத்திலிருந்து வந்திருந்த அந்தப் பிரும்மாண்டமான உருவம் ஏதோ கறுப்பான வஸ்துவால் செய்யப்பட்டது. கல்லா களிமண்ணா. மரமா நெட்டியா அது ? தன்னுடைய பிரும்மாண்டமான சிருஷ்டிக்கருகே ஒரு குள்ளனைப்போல நின்றிருந்த ஆஜானுபாகுவான மிசிர சிற்பி அது தேவ ரகசியம், சொல்லக் கூடாது என்றான். அந்த உருவம் மிசிர தேசத்து அரசர்களில் ஒருவருடையது என்றான் அந்தச் சிற்பி. அதேபோலப் புஷ்பகத்தீவிலிருந்து வந்திருந்த சிற்பியின் சிருஷ்டியும் எதனால் ஆனது என்று சொல்ல முடியாமலே இருந்தது. அவன் சிற்பத்தில் மட்டுமல்ல, வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்பதைக் காட்டியது அவனுடைய சிருஷ்டி; இரவின் அழகை அவன் தத்ரூபமாக, அப்படியே வர்ணக் கற்களாலும் வேறு பலவித யுக்திகளாலும் சமைத்திருந்தான்.

இப்படியாக அண்டை அயல் நாடுகளிலிருந்து வந்திருந்த சிற்பங்கள் நூற்றுக்கணக்காகச் சிற்பக்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றைத் தவிர, தமிழ் நாட்டுச் சிற்பங்களிலும் நூற்றுக்கணக்கானவை அங் கிருந்தன. கலையிலும் ரஸனையிலும் தாங்கள் எந்த நாட்டினர்க்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காட்ட விரும்புகிறவர்கள் போலத் தமிழ்ச் சிற்பிகளும் அற்புதமான பாவங்களையெல்லாம் கல்லிலும் மண்ணிலும் உலோகத்திலும் சமைத்திருந்தனர். காட்சிச் சாலையில் அவை தனியாக வைக்கப்பட் டிருந்தன. அவையும் சிற்பப் போட்டியில் சேர்ந்தவைதான். அவற்றில் ஏதாவதொன்று விடச் அங்குள்ள பிற சிற்பிகளின் சிருஷ்டிகளை சிறந்தது என்று தீர்ப்பளிக்கப்படுமாயின், சோழன் பரிசாக அளிப்பதாகச் சொல்லியிருந்த ஆயிரம் பொன்னும் தமிழ் நாட்டான் ஒருவனுக்கே போய்ச் சேர்ந்துவிடும்.

ஆனால் நகரத்து மாந்தர் தங்களுக்குப் பழக்கமான இந்தத் தமிழ் உருவங்களையும் சிருஷ்டிகளையும் அவ்வளவாக ஊன்றிக் கவனிக்கவில்லை. அவை என்றும் தங்கள் நாட்டிலேயே தங்கிவிடக் கூடிய செல்வங்கள். என்றைக்கு வேண்டுமானாலும் திருப்தியாகு மட்டும் கண் கொண்ட மட்டும் பார்த்துக் கொள்ளலாம். வெளிநாட்டுக் கலைச் செல்வங்களே சுலபத்தில் பார்க்கக் கிடைக்காதவை. அவற்றைப் பார்த்துப் பூரணமாக அனுபவித்து விடவேண்டும் என்று தீர்மானித்தவர்களாக,மக்கள் திரும்பத் திரும்பக் கண்காட்சிச் சாலைக்குப் போனார்கள். காலையில் போனவர்கள், இடையில் சாப்பாட்டுக்கு ஏதாவது ஏற்பாடு செய்துகொண்டு, மாலை வரையில், காட்சிச் சாலையை மூடும் நேரம் வரையில், அங்கேயே இருந்து விடுவார்கள். மறுநாளும் காலையிலேயே மறுபடியும் போய்விடுவார்கள் பலர். இப்படியாகக் காட்சிச் சாலையில், அது திறந்திருந்த நேரமெல்லாம் ஒரே கும்பலாக இருந்தது. பூம்புகார் முழுவதிலுமே இந்தச் சிற்பக் காட்சியே எல்லோருடைய ஞாபகமாகவும் பேச்சாகவும் இருந்தது.

இந்தச் சிற்பக் கண்காட்சியின் ஐந்தாவது நாளை ஒரு விசேஷ நாளாகச் சொல்ல வேண்டும். அன்று காலையில் ஒரு விசேஷம் நடந்தது. அப்போது சிற்பக் காட்சிச்சாலையில் சுமார் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் இருந்தார்கள். விசேஷம் நடந்த இடத்தில் மட்டும் குறைந்த பக்ஷம் ஐந்நூறு பேராவது இருந்திருப்பார்கள்.

யவனச் சிற்பிகளின் தலைவனான பிராக்ஸிடிலிஸும், நேபாளத்துப் பதுமனும் தமிழ் நாட்டுச் சிற்பங்கள் வைத்திருந்த கூடத்தில் ஒவ்வொரு சிற்பமாகப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். அவர்களுடன் கூட எப்போதும் போலவே மெளனமாகக் காமரூபத்தவனான வஸுதேவனும் வந்தான். அவர்களுக்குப் பின்னால், மரியாதையாக, நாலடி தூரத்துக்கப்பால், அவர்கள் எந்தெந்தச் சிற்பங்களைக் கவனிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டும் அவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டும் அவர்களுடைய நடையுடை பாவனைகளை ரஸித்துக் கொண்டும் பூம்புகாரின் மக்கள் கூட்டம் ஒன்று வந்து கொண் டிருந்தது.

திடீரென்று வஸுதேவன் தன் நண்பர்கள் இருவரையும் முன்னே செல்ல விட்டுவிட்டுப் பின் தங்கினான். அவன் கவனத்தைக் கவர்ந்தது என்ன என்று யோசித்தவர்களாகப் பின்னால் வந்து நின்று கொண்டிருந்த புகார்வாசிகளும் விட்டனர். தனக்குள்ளேயே பேசிக்கொள்ளுபவன் போல வஸுதேவன் மெல்லிய கீச்சுக்குரலில் சொன்னான்: “இதென்ன? ஏன் இந்தச் சிற்பம் இப்படி வெளிச்சமே இல்லாத இடத்தில், யார் கண்ணிலும் படாதவாறு வைக்கப்பட்டிருக்கிறது ? ” அவன் குரலில் அளவற்ற ஆத்திரமும், குதூகலமும் ஒருங்கே தொனித்தன.

முன்னால் சென்றுகொண் டிருந்த பிராக்ஸிடிலிஸ் தன் நண்பனுடைய குரலைக் கேட்டுத் திரும்பிப்பார்த்தான்; நகைத்தான். “மதுவுக்குக்கூட அசைந்து கொடுக்காத உன் நாக்கு எதைக்கண்டு இப்படித் தானாகவே அசைய ஆரம்பித்து விட்டது?” என்று கேலியாகக் கேட்டான்.

யவனத்தானுடைய கேலியை லக்ஷியம் பண்ணாமலே வஸுதேவன் கையை நீட்டி, மௌனமாகவே ஒரு மூலையில் சுட்டிக் காட்டினான். பிராக்ஸிடிலிஸ், பதுமன் உள்பட அங்கிருந்தவர்கள் எல்லோருமே வஸுதேவன் சுட்டிக் காட்டிய சிற்பத்தை நோக்கினார்கள். ஒரு பத்து வினாடி நேரம் அங்கே நிசப்தமாக இருந்தது; யாரும் மூச்சுவிடக் கூடத் துணியவில்லை போல் இருந்தது.

சிற்பச் சாலையிலேயே அது தான் சற்று இருட்டான இடம். இரண்டு சுவர்கள் சேரும் மூலையில் இருளில் பளபளவென லேசாக மின்னிய ஓர் உருவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுற்றுப் புறத்து மங்கிய இருளுக்கு மாற்றாக அந்த விக்கிரகத்தின் மங்கிய பளபளப்புத் தெரிந்தது. மூடுபனியின் மூலம் அக்கினிப் பிழம்பைப் பார்ப்பது போல இருந்தது அந்தக் காட்சி. வெளியிலே நல்ல வெளிச்சத்தில் வைத்திருந்தால் உலகத்து ஒளியெலாம் திரண்டு அச் சிற்பத்தில் வந்து குடி புகுந்து விடும்போல் இருந்தது.

உற்றுப்பார்க்கும் போது ஒளிப் பிழம்பினுள்ளே ஓர் உருவம் தெரிந்தது; நடனமாடும் ஓர் உருவம் லேசாகத் தெரிந்தது. நடனத்தின் ஒரு பாவம் மட்டுமல்ல, எல்லாப் பாவங்களுமே பூரணமாக, நிரந்தரமாக அந்த உருவத்தில் சமைக்கப்பட்டிருப்பது போல் இருந்தது. கண்மூடிக் கண் திறப்பதன் முன் அவ்வுருவம் நடனமாடி ஓய்வது போலவும் ஓய்ந்து மறுபடியும் நடனமாடுவது போலவும் தோன்றிற்று. எடுத்த காலும் எடுத்த கைகளும் அந்த ஒரு பாவத்தைக் காட்டி முடித்து விட்டு அடுத்த பாவத்தைக் காட்டத் துடித்துக் கொண் டிருப்பது போல் இருந்தன.

பதுமன் தான் முதலில் பேசினான். “எதனால் அப்பா சிற்பி இந்த விக்கிரகத்தைச் செய்திருக்கிறான்? இது வரையில் என் ஆயுளில் இது மாதிரியான சிற்பத்தை நான் கண்டதில்லையே!” என்றான் அவன்.

தூரத்திலிருந்து பார்க்க மிகவும் அழகாய் இருப்பது போலத்தான் தோன்றுகிறது. கிட்டப் போய்ப் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டே பிராக்ஸிடி லிஸ் இரண்டெட்டில் அந்த விக்கிரகத்தை அணுகினான். வஸுதேவன் மறுபடியும் தன் வாயைத் திறந்து பேசினான். “அருகில் சென்று பார்த்தாலும் அழகாகவே தான் இருக்கும். இதை உணர்ந்து கொள்ள ஆற்றலற்ற நீ யவனத்தின் சிறந்த சிற்பி என்று சொல்லிக்கொண்டு கடல் கடந்து வந்து விட்டாயே? ” என்று கேலி செய்து புன்னகை புரிந்தான். அவனும் யவனத்தானைப் பின் தொடர்ந்து அந்தப் புது விக்கிரகத்தை அணுகினான்.

மூன்றாவதாக வந்த பதுமன் சிற்பத்தின் வடிவத்தை ரஸிப்பதற்குப் பதிலாக அது எதனாலானது, எப்படி ஒளி வீசுகிறது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு நின்றான். “தங்கம் மாதிரிதான் இருக்கிறது. ஆனால் அதற்கு இந்த ஒளி இராதே !” என்றான்.

“இது உலோகமே அல்ல” என்றான் என்றான் பிராக்ஸி டிலிஸ், விக்கிரகத்தைப் பரீக்ஷித்துப் பார்த்து விட்டு. இது உருக்கிய உலோகமுமல்ல; செதுக்கிய கல்லுமல்ல; பிசைந்து வைத்த மண்ணுமல்ல; ஒளியையே பிடித்து வடிவாகச் சமைத்து வைத்திருக்கிறானடா!” என்றான். பிறகு ஒரு நிமிஷம் மெளனம் சாதித்துவிட்டு “இது பொய்யானால் என்னை ஜீயஸ் தண்டிக்கட்டும்!” என்றான்.

அவன் குரலில் அதுவரையில் இல்லாத பயமும் பக்தியும் தொனிப்பது கண்டு கலைஞர்களைத் தொடர்ந்து வந்திருந்த புகார்வாசிகள் எல்லோருமே ஆச்சரியப்பட்டனர். அந்த உருவம் ஒளி வடிவாகவே தான் இருந்தது என்பதை எல்லோருமே ஒப்புக்கொண்டார்கள்.

இது வரையில் அது அவர்கள் யாருடைய கண்ணிலும் படாமல் தப்பி ஒளிந்துகொண் டிருந்ததுதான் எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை.

யவனத்துச் சிற்பியினுடைய வார்த்தைகளையும் விட அதிகமாகக் காமரூபத்து வஸுதேவனின் முகபாவமும் செய்கையும் ஜனங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தை மூட்டிவிட்டன. அவன் முகத்திலே பயமும் பக்தியும் ஆச்சரியமும் நிறைந் திருந்தன. அவன் கண்களில், காணாது கண்டது போன்றதோர் ஒளி வீசியது. அந்த உருவத்தின் அழகை எல்லாம் அப்படியே விழுங்கி விடுபவன் போல இரண்டு வினாடிகள் அதையே பார்த்துக் கொண்டு நின்றான். அப்புறம் மேலே போர்த்துக் கொண்டிருந்த சால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு சாஷ்டாங்கமாக அந்த விக்கிரகத் துக்கு நமஸ்காரம் பண்ணினான். ஜனங்கள் திக்பிரமையுடன் வஸுதேவனையும் அவன் எதிரேயிருந்த விக்கிரகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

எழுந்து நின்று வஸுதேவன் அந்தக் கூடம் முழுவதும் கேட்கும்படியாகப் பெருமூச்சு விட்டான். அந்த நிசப்தத்திலே அவன் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்ட வார்த்தைகள் அந்தக் கூடத்திலிருந்தவர்கள் எல்லோருடைய காதிலும் விழுந்தன. இந்த மாதிரியான கலை மனுஷ்யனால் சாத்தியமாவது என்று எனக்குத் தோன்றவில்லை. சிருஷ்டி ரகசியத்தின் சின்னத்தைச் சிருஷ்டிக்கத்தான் நான் நாற்பது ஆண்டுகளாக இரவு பகல் ஓயாமல் முயன்று வருகிறேன். இதோ இந்தத் தமிழ்ச் சிற்பி சுலபமாகச் செய்து முடித்து விட்ட சிற்பத்தின் முன் என்னுடைய சிறந்த சிற்பம் குழந்தை கையில் அகப்பட்ட களிமண் உருண்டை போல் ஆகிவிட்டது. இனி என்னுடைய சிருஷ்டியை உடைத்து எறிந்து விட வேண்டியது தான். அதற்கு இனி அவசியமில்லை…”

மறுபடியும் வஸுதேவன் கையெடுத்து அந்த விக்கிரகத்தைத் தொழுதான்.

பிராக்ஸிடிலிஸும் பதுமனும் அந்த விக்கிரகத்தை விட்டுக் கண்ணை எடுக்கமாட்டாமல் நின்றார்கள்.

“அதன் முகத்திலேதான் என்ன பேரானந்தம் படிந்திருக்கிறது பார்? உலகத்திலுள்ள ஆனந்தம் பூராவையுமே திரட்டி அதில் வைத்திருப்பது போலல்லவா இருக்கிறது?” என்றான் பதுமன்.

‘நம்மால் ஒரு வினாடியைத்தான் சிற்பத்தில் பிடித்து வைத்துக் காட்ட முடிகிறது. ஒரு சுவையின் ஒரு பாவத்தைத் தான் காட்ட முடிகிறது. இதில் காலம் இடம் முதலிய வரையறைகள் கடந்த சுவையையும் சலனத்தையும் ஒரே வினாடியில் காட்டி யிருக்கிறானே!’ என்று யவனன் வியந்தான்.

“கண்களிலே தான் என்ன அன்பு?”

“கைகளிலே தான் என்ன லாகவம்?”

“அதன் கையிலுள்ள உடுக்குச் சப்தம் கேட்கவில்லையா உனக்கு ?”

இப்படி அவர்கள் மாறிமாறிப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜனங்கள் வியந்து நின்றார்கள். சிற்ப வல்லுநர்கள் என்று தேசாந்தரங்களிலிருந்து வந்திருந்த அவர்கள், பாடம் கேட்டுப் பலன் அடையாத கற்றுக்குட்டிகள் மாதிரி இப்படி ஒவ்வொன்றாக அலசிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு உண்மையிலேயே எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“எடுத்த இந்தப் பாதத்தில் தான்…என்ன ……. என்ன…?” என்று வார்த்தை அகப்படாமல் தடுமாறினான் பிராக்ஸிடிலிஸ். ஜீயஸ்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்! வளம் நிறைந்த எங்கள் யவன பாஷையிலே கூட இந்தப் பாதத்தின் தன்மையை வருணிக்க வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லையே. தமிழில் எங்கே இருக்கப் போகிறது?”

தமிழில் இருக்கிறது வார்த்தை. அருள் என்று சொல்லுவோம் என்று பிராக்ஸிடிலிஸின் கேள்விக்கு ஒரு புதுக்குரல் பதில் சொல்லிற்று.

எங்கிருந்தோ அங்கே திடீரெனத் தோன்றிய அந்த ஜடாமகுடதாரியான கிழவரைக் கண்டு ஜனங்கள் “பதஞ்சலி, பதஞ்சலி வந்திருக்கிறார்” என்று முணு முணுத்துக் கொண்டார்கள்.

அது பிராக்ஸிடிலிஸின் காதில் விழுந்தது. அவனும் விக்கிரகத்தினின்றும் தன் கண்ணை எடுத்து விட்டு வந்தவரை நோக்கினான்.

வந்தவர் கிழவர். நரைத்து அடர்ந்திருந்த கேசமும் தாடியுமாக, வார்த்தைகளில் அகப்படாத ஒரு முகப் பொலிவுடனும் தேஜஸுடனும் காட்சியளித்தார்.

அவருடைய தோற்றத்தினால் கவரப்பட்டவனாக பிராக்ஸிடிலிஸ் “ஸ்வாமி! வருக. வணங்குகிறேன்” என்றான்.

இம்மாதிரித் தோற்றமுள்ள மனிதர்களைக் கண்டு பழக்கப்பட்டவர்களான பதுமனும் வஸுதேவனும் கைகூப்பி அஞ்சலி செய்து தலை வணங்கினர். தம்முடைய இரு கைகளையும் தூக்கிப் பெரியவர் அந்த மூன்று கலைஞர்களையும் ஆசீர்வாதம் செய்தார்.

“யவனத்துக் கலைஞனே!” என்று பிராக்ஸிடிலிஸை அழைத்து அவர் சொன்னார். “நீ சற்று முன் இந்த நடன ராஜனின் பாதத்தைக் கண்டு வியந்து, அதனுடைய பாவத்துக்கும் முத்திரைக்கும் ஏற்றதாக வளமிகுந்த உங்கள் பாஷையிலேயே வார்த்தை கிடையாதே என்று வருந்தினாய். தற்செயலாய் இங்கே வந்து சேர்ந்த நான் உன்னு டைய வாக்கியத்தைக் கேட்டேன். தமிழில் அதற்குத் தக்க பதம் இருக்கிறது. ஆனால் தமிழர்களிலேயே பலருக்கு அந்தப் பதமும் அதனுடைய அர்த்தமும் தெரியாமல் இருக்கும்போது உன்னைப் போன்ற அன்னியனுக்கு அது எப்படித் தெரிய முடியும் ?”

பிராக்ஸிடிலிஸ் பணிவாகவே சொன்னான்:“ என்னு டைய அறியாமை எனக்குத் தங்களை அறிமுகம் செய்து வைத்தது என்பது பற்றி நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன். ஆனால் தங்களுடைய திருநாமம், வரலாறு முதலியவற்றைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்து கொண்டேனானால் நான் இன்னும் அதிகத் திருப்தியடைவேன்.”

“நீ இந்தத் தேசத்துக்குப் புதியவன். அதனால்தான் நீ என்னுடைய காஷாயத்தைக் கண்டே நான் துறவி என்பதை அறிந்து கொள்ளவில்லை. காய் கனிகளைத் தின்றுகொண்டு மனித சஞ்சாரமில்லாத காடுகளில் வாழும் துறவி நான். ஈசுவர சிருஷ்டியிலே உள்ள பரமாணுக்களிலே மிகவும் சிறியதோர் அணு நான். என்னைப் பதஞ்சலி என்று சொல்லுவார்கள். ஈசுவர நாமத்தையே துதித்துக் கொண்டு காலங் கடத்துபவன் என்றார் பெரியவர்.

பதஞ்சலி என்ற பெயரைக் கேட்டவுடனே வஸூ தேவன் முன்னிலும் அதிக வணக்கத்துடன் கைகூப்பி அஞ்சலி செய்தான். “யோக சூத்திரங்களின் ஆசிரியரைக் கண்கள் காணும் பாக்கியம் செய்தனவே!” என்றான். அவன் கண்களில் நீர் பெருகியது. பரவச நிலையை எய்தி நின்றான் அவன்.

“ஆம். என் சிற்றறிவுக் கெட்டியவரையில் யோகத்தை விளக்கி ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறேன்” என்றார் பதஞ்சலி.

“இன்று தங்களுடைய தரிசனத்தால் நாங்கள் கிரு தார்த்தர்களானோம்” என்றான் பதுமன்.

தன்னுடைய இரண்டு நண்பர்களுடைய பரவசத்தையும் கண்டு திகைத்துப் போனான் பிராக்ஸிடிலிஸ். “இந்தப் பாரத வருஷத்து ஜனங்களின் நடவடிக்கைகளே இப்படித்தான். நமக்கு ஒன்றுமே புரிவதில்லை” என்று முடிவு கட்டிக் கொண்டான். திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று.

“ஸ்வாமி! தாங்கள்தான் இந்த நடனராஜ சிற்பத்தினுடைய சிருஷ்டிகர்த்தாவோ?” என்று பதஞ்சலியைக் கேட்டான். அவர் அதன் சிருஷ்டிகர்த்தராக இருந்தாரானால் தானும் அவரை வணங்கத் தயாராகவே இருந்தான்.

“இல்லை அப்பா, இல்லை! நல்ல வேளையாக என்னப்பன் என்னிடமிருந்து இது மாதிரியான விளையாட்டுக்களை எல்லாம் எதிர் பார்ப்பதில்லை” என்றார் பதஞ்சலி.

இந்தப் பாரத நாட்டில் தனக்கு விளங்காத புதிர்கள் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான் பிராக்ஸிடிலிஸ். அப்புறம் சொன்னான்: “இந்தச் சிற்பத்தைச் செய்தவன் சிருஷ்டியின் ரகசியத்தைப் பரிபூர்ணமாக அறிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“ஆம். அறிந்தவனாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதில் அருள் இப்படி வழிந்தோடாது” என்றார் பதஞ்சலி.

“அருள் என்ற பதத்திற்கு……?”

“அதன் அர்த்தந்தான் கண்ணெதிரில் உருவெடுத்து நிற்கிறதே,பார்க்கிறீர்களே!” என்றார் பதஞ்சலி. “பிரபஞ்ச சிருஷ்டியின் தத்துவத்தையே இதில் வடித்தெடுத் திருக்கின்றான் சிற்பி என்று எனக்குத் தோன்றுகிறது. சிற்பக் கலையில் வல்லவர்களாகிய நீங்களும் என்போலவே அபிப்பிராயப்படுவது கண்டு நான் சந்தோஷப்படுகிறேன்.

“சிற்பக் கலையின் சிகரம் இது என்று எனக்குத் தோன்றுகிறது.”

“சந்தேகமே இல்லை” என்றான் பிராக்ஸிடிலிஸ். ஆம். அதில் சந்தேகமே இல்லை என்றான் வஸூ தேவன். பதுமனும் தலையை அசைத்தான்.

“இனித்தங் கசிய எடுத்த இப் பொற்பாதத்தை மானிடர் கண்ணாரக் கண்டு உய்யுங்காலம் வந்துவிட்டது என்று நான் சந்தோஷப்படுகிறேன். அத்தனே! உன் கருணையே கருணை!” என்று அந்த விக்கிரகத்தை நோக்கிக் கைகூப்பினார் பதஞ்சலி.

அங்கே கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கை கூப்பினார்கள். வஸுதேவனும் பதுமனும் கைகூப்பினார்கள். பிராக்ஸிடிலிஸ்கூட இந்தியப் பாணியில் தன்னையும் மறந்து கைகூப்பினான்.

பரவச நிலையிலே மெய்விதிர்க்க, கண்கள் நிறையப் பதஞ்சலி, சிறிது நேரம் கைகூப்பிய படியே நின்றார். அப்புறம் சொன்னார்: “என்னப்பன் இனி என் கனவுகளிலே இந்த உருவத்திலேதான் காட்சி அளிப்பான்.”

இந்தப் பரவசத்திலிருந்து முதலில் விடுபட்டது யவனத்தவனாகிய பிராக்ஸிடிலிஸ்தான். “ஸ்வாமி, என்னை மன்னிக்க வேண்டும். என்னுடைய அறியாமைக்கு இரங்கித் தாங்கள் இரண்டொரு கேள்விகளுக்கு விடைதர வேண்டும்” என்றான்.

“கேள். என்னால் முடியுமானால் பதில் அளிக்கிறேன் ” என்றார் பதஞ்சலி.

“இதைச் சிருஷ்டித்தவன் யார் என்று தங்களுக்குத் தெரியுமோ?”

“தெரியாது. இந்தச் சிற்பத்தையே நான் சற்று முன் தான் இக் கண்களால் கண்டேன். அதற்குள்ளேயே நான் துறவி என்பதையும் மறந்துவிட்டு என் உள்ளத்தை இதற்குப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன்” என்றார் பதஞ்சலி.

“இந்தச் சிற்பி யார் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமென்று தங்களுக்கும் தோன்றவில்லையா?”

“அதில் ஒன்றும் சிரமம் இராது என்றே நினைக்கிறேன். சிற்ப சாலையின் அதிகாரியான தேவமித்திரனைக் கூப்பிட்டுக் கேட்டால் தெரிந்துவிடும். யாராவது அவனை அழைத்து வாருங்கள் ” என்றார் பதஞ்சலி.

ஜனத்திரளில் ஓரிருவர் பதஞ்சலியின் கட்டளையை நிறைவேற்ற ஓடினார்கள்.

பிராக்ஸிடிலிஸ் சொன்னான்: இவ்வளவு சிறந்த சிற்பத்தை யார் கண்ணிலும் படாமல் ஒரு மூலையில் இருட் டில் போட்டுவிட்டார்களே ! நாங்களும் ஐந்து நாட்களாக இந்தச் சிற்ப சாலையில் இருப்பவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு நடமாடுகிறோம். எனினும் எங்கள் கண்ணில் கூட இது இவ்வளவு நாளாகப்படாமலே இருந்துவிட்டதே! இன்று கூட நாங்கள் இதைத் தாண்டிப் போய்விட்டோம். வஸுதேவன் இதைக் கவனித்திரா விட்டால்……”

இப்படி அவன் சொல்லி முடிக்குமுன் தேவமித்திரன் ஓட்டமும் நடையுமாக வந்துசேர்ந்தான். பதஞ்சலி முனிவரே தன்னை அழைக்க ஆளனுப்பினார் என்று அறிந்தும் அவன் தாமதிக்க முடியுமோ? அவனை விசாரித்ததன்மேல் பின்வரும் விஷயங்கள் தெளிவாயின.

அந்தச் சிற்பத்தின் கர்த்தா தன் பெயர் மயன் என்று தெரிவித்திருந்தான். அது அவனுடைய உண்மைப் பெயர் அல்ல என்றே தோன்றிற்று. அவன் தமிழன்தான்; மாயூரத்துக்கருகில் காவிரி நதிக்கரையிலுள்ள ஒரு கிராமத்தவன் என்று அவன் சொல்லிக்கொண்டான். தன் சிற்பத்துக்கு அவன் நர்த்தன சுந்தரர் என்று பெயரிட்டிருந்தான். காட்சி திறந்த அன்றே அவன் அந்த விக்கிரகத்தைத் தேவமித்திரனிடம் ஒப்பித்து விட் டான். அவன் புகார் நகரில் எங்கே தங்கியிருந்தான் என்பது தேவமித்திரனுக்கும் தெரியாது. விக்கிரகத்தை ஒப்பித்துவிட்டு, தேவமித்திரன் கொடுத்த ஓலை நறுக்குடன் அவன் போய்விட்டான். சிற்பக்காட்சியின் பத்தாவது நாள், அதாவது பரிசளிக்கும் தினத்தன்று, அரச சபைக்கு வருவதாக அவன் சொல்லிவிட்டுப் போயிருந்தான். மற்றவர்களைப் போல அவன் காட்சிச் சாலைக்குள் புகுந்து மற்ற சிற்பங்களைப் பார்வையிடக் கூட இல்லை என்றான் தேவமித்திரன்.

பிராக்ஸிடிலிஸ் கேட்ட ஒரு கேள்விக்குப் பின்வருமாறு தேவமித்திரன் பதில் அளித்தான். “நர்த்தன சுந்தரர் உருவத்தை நான் காட்சிச் சாலை ஆட்களிடம் உடனே ஒப்பித்து விட்டேன். அதை வைக்க வேறு இடங் காணாததால் என் ஆட்கள் மூலையில் இருட்டில் வைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. அது இருட்டில் கிடக்கும் விவரம் இதுவரையில் எனக்குத்தெரியாது அதை நல்ல இடத்தில் எடுத்துவைக்க ஏற்பாடு செய்து விடுகிறேன்.”

தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டு தேவ மித்திரன் பதஞ்சலிக்கும் மற்றவர்களுக்கும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு போனான்.

பதஞ்சலி சொன்னார்: “மயன் என்றால் அசுர சிற்பி என்று அர்த்தம். ஆனால் இந்தச் சிற்பம் தெய்விகமான சிற்பம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.”

“காட்சிச் சாலைக்குள்கூட வந்து பார்க்கவில்லையாமே அந்த மயன் என்று பிராக்ஸிடிலிஸ் குறைப்பட்டுக் கொண்டான்.”

“கலையின் பரிபூரணத்தை எட்டி விட்டவனுக்கு அரைகுறையான நமது சிருஷ்டிகளை எல்லாம் காண வேண்டுமென்ற ஆசை இல்லாதுபோவது நியாயந்தானே!” என்றான் வஸுதேவன்.

பிராக்ஸிடிலிஸ் கண்களைப் பரக்க விழித்து வஸு தேவனை ஒருதரம் பார்த்தான். அப்புறம் அவனுடைய “நண்பா! கையைத் தன் கைகளில் கோத்துக்கொண்டு போவோம் வா. உணவருந்தும் நேரமாகிவிட்டது என்றான். பதஞ்சலியை வணங்கி விடை பெற்றுக்கொண்டு எல்லோரும் கிளம்பினார்கள். பதஞ்சலி மட்டும் சிறிது நேரம் தனியாக அந்த நர்த்தன சுந்தர விக்கிரகத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்தவராக நின்றிருந்தார். விக்கிரகத்தை நடு அறையில் உயரமான பீடத்தில் ஏற்றி வைக்கத் தேவமித்திரனுடைய ஆட்கள் வந்ததால் தியானம் கலைந்து பதஞ்சலியும் தம் இருப்பிடம் ஏகினார்.”

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *