தெய்வ ஜனனம் – க. நா. சுப்ரமண்யம்

2

முன்பகுதியில் கூறிய சம்பவங்கள் நடந்த மறு நாள் மாலை ; அஸ்தமிக்க ஏழெட்டு நாழிகை நேரம் இருக்கும் போது புகார் நகரத்து மேலைக் கோட்டை வாசல் வழியாக ஒரு குதிரை வீரன் வெளியே வந்தான். தோற்றத்திலிருந்து அவனை அன்னிய தேசத்தவன் என்றுதான் மதிக்க வேண்டும். எனினும் அவன் தமிழரைப் போலவே ஆடை அணிந்திருந்தான்; இடுப்பில் கச்சமாகப் பத்துமுழம் வேட்டியும் மேலே துல்லியமான வெள்ளைத் துண்டும் தரித்திருந்தான். வயது இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். நல்ல கட்டுமஸ்தான தேகம்; நல்ல உயரம். இடுப்பில் கச்சையிலிருந்து ஒரு குட்டையான வாள் உறையுடன் தொங்கிக்கொண் டிருந்தது. அதைத் தவிர அவனிடம் வேறு எவ்விதமான ஆயுதமும் இல்லை.

கோட்டை வாசல் காவற்காரன் குதிரை வீரனை விசாரித்தான். அந்த வாசல் வழியாகப் போகும் அன்னியர்கள் எல்லோரையுமே விசாரித்துப் பதிந்து கொள்ளுவது அவன் வேலை. “உன் பெயர் என்ன?”

“மயன்”

”ஊர்?”

“இப்ப சத்தியாகப் புகார் தான் என் ஊர். அப்படியே குறித்துக்கொள்” என்றான் மயன்.

அவனுடைய தமிழ்ப் பேச்சைக் கேட்டதுமே வாசல் காப்போன் குறித்துக் கொள்வதை நிறுத்திவிட்டான். “நீ அன்னியன் அல்லவே?” என்றான்.

“இல்லை.”

“சரி, போகலாம் ” என்று கோட்டைக் கதவைத் திறந்து விட்டான் காவற்காரன். “இரவில் நேரம் கழித்து வந்தால் இந்தக் கதவு திறக்காது. வடக்கு வாசல் வழியாகத்தான் போக வேண்டும்” என்றான்.

மயன் அவன் கையில் இரண்டு வெள்ளிக் காசுகளை வைத்துவிட்டு ராஜபாட்டையில் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். அவனுக்கு எங்கும் செல்ல அவசரம் எதுவும் இல்லை போலும். கடிவாளத்தைக் கையில் தளரப் பிடித்துக் கொண்டு குதிரையை அதன் வேகத்திலேயே நடக்க விட்டவனாக வீற்றிருந்தான்.

சாலை நெடுக மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. ஒருபுறத்தில் கம்பீரமாகக் காவேரி ஆறு ஓடிக் கொண்டிருந்தது; இரு கரையும் புரள ஜலம் ஓடிக் கொண்டிருந்தது. எதிர்ப் புறத்தில் கண்ணுக்கெட்டிய வரையில் பச்சைப் பசேல் என்ற நெல்வயல்கள். இந்தக் காட்சியை மயன் கண்டு அனுபவித்துக் கொண்டே பத்துப் பன்னிரண்டு கல் போயிருப்பான். எதிரே மரங்கள் அடர்ந்த தோப்பொன்று தென்பட்டது.அதைக்காடு என்று சொல்ல முடியாது; காட்டின் ஆரம்பம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதை ஒட்டி, மரங்கள் அடர்த்தியாக இருண்டு வளர்ந்திருந்த இடத்தில் ஆற்றில் ஒரு படித்துறை கட்டப்பட்டிருந்தது. காரியம் ஒன்றுமில் லாமல் வந்திருந்த மயனுக்கு அந்த இடம் மிகவும் மனோகரமானதாகப் பட்டது. குதிரையிலிருந்து இறங்கி ஆற்றில் அதற்குத் தண்ணீர் காட்டி விட்டுப் பாதையில் போவோர் வருவோர் கண்ணில் படாமல் அதை ஒரு புதருக்கப்பால் கட்டிவிட்டு ஆற்றங்கரைப் படிக்கட்டில் கடைசிப் படியில் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்த தெளிந்த ஆற்று ஜலத்தில் காலைத் தொங்க விட்டுக் கொண்டு உட்கார்ந்தான். ஒரு வினாடிக்கெல்லாம் அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். அது மிகவும் இன்பகரமான சிந்தனை என்பதை அவன் முகத்தில் லேசாகப் படர ஆரம்பித்த புன்னகை அறிவுறுத்தியது.

வெய்யில் தாழ்ந்துவிட்டதே தவிர இன்னமும் இருட்ட ஆரம்பிக்கவில்லை. தலைக்கு மேலே நடுவானத்தில் வெளிறிட்ட அரைச் சந்திரன் மிதந்து கொண்டிருந்தது. வானத்தில் நீலம் ஆழ்ந்து கிடந்தது; நிர்மலமாக இருந்தது. நமது குதிரை வீரன் உட்கார்ந்திருந்த துறைக்கு எதிர்த் துறையில் அழகான மண்டபம் ஒன்றிருந்தது. அந்த இடத்தின் அமைதியைக் கெடுக்க அங்கே மனித சஞ்சாரமே இல்லை. மயன் தன் கைகளால் தலையைத் தாங்கிக் கொண்டு ஆற்று ஜலத்துக்குள் உற்றுப் பார்த்தபடியே சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தான்.

திடீரென்று அவனுடைய சிந்தனைகளும் அவனைச் சுற்றியிருந்த மௌனமும் கலைந்தன. இரண்டு குதிரைகள் வேகமாக வரும் சப்தம் கேட்டு அவன் எழுந்து நின்று பாதையைக் கவனித்தான். மேற்கே, காட்டுக்குள்ளிருந்து இரண்டு வெள்ளைப் பரிகள் வேகமாக வெளியே வந்தன. அந்தக் குதிரைகளின் சேணங்களும் மேலே விரித்திருந்த பட்டும் மாலை வெயிலில் பளபளத்தன. அந்தக் குதிரைகளின் மேல் இரண்டு யுவதிகள் வீற்றிருந்தார்கள். காட்டிலிருந்து வேகமாக வந்தவர்கள் ஒரு கணத்தில் நமது குதிரைவீரன் நின்றிருந்த படித்துறையைத் தாண்டிச் சென்று விட்டார்கள். ஆனால் அந்தக் கணத்திலேயே அவர்களுடைய எழிலையும் முகப் பொலிவையும் பார்த்து விட்டான் மயன். ஒருத்திக்கு வயது பதினைந்து பதினாறு தான் இருக்கும்; உலகத்தில் உள்ள அழகை எல்லாம் திரட்டி எடுத்து அவளைச் சமைத்திருந்தான் போலும் பிரும்மதேவன். மற்றவள் வயதில் சற்று மூத்தவள் ; அழகிலும் சற்றுக் குறைவுதான்.

இதற்குமுன்னர் ஒருதரம் மயன் அந்த இருவரையுமே சேர்ந்தாற் போலப் பார்த்திருக்கிறான்; சிற்பக் காட்சிச் சாலையில் முந்திய தினம் மாலை. அப்பொழுதே கலைஞனான அவன் தன்னுடைய உள்ளத்தை அந்த இருவரில் இளையவளிடம் பறிகொடுத்துவிட்டான். ஆற்றங்கரைப் படித்துறையில் உட்கார்ந்துகொண்டு அவன் உண்மையில் அவளைப் பற்றித்தான் பகற்கனவுகள் கண்டுகொண் டிருந்தான். பெரிய குடும்பத்தவர்கள் என்பதைத் தவிர அவன் அவர்களைப்பற்றி வேறு எதுவுமே நிச்சயமாக அறிந்து கொள்ள அப்போது இயலவில்லை.

இப்படி இன்று தெய்வாதீனமாக அவர்கள் மறுபடியும் தன் கண்ணில் பட நேர்ந்ததை ஒரு நல்ல சகுனமாக அங்கீகரித்தான் அவன். தன் கனவுகள் பலிக்கலாம்; பலிக்கலாம்… தெய்வம் தன் பக்கம் இருந்தால், பலிக்கலாம். இதை எண்ணியவுடனே அவனுக்கு மயிர்க்குச்செறிந்தது.

முதலில் அந்த நங்கை யார் என்று அறிய வேண்டி யது அவசியம். அதை எப்படிச் செய்வது?” என்று தனக்குள் யோசித்தான் மயன். அந்த யுவதிகளை இப்போதே நகருக்குப் பின்பற்றிச் சென்றால் அவர்கள் எங்கே செல்லுகிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம். அதற்கப்புறம் தீர விசாரித்துக் கொள்ளலாம் என்று அவன் யோசித்தான். அவனுக்குத்தான் அப்பொழுது வேறு ஒரு வேலையும் இல்லையே! இந்த யோசனை உதித்ததுதான் தாமதம். அவன் உடனே இரண்டெட்டில் தன் குதிரை கட்டியிருந்த இடத்தை அடைந்தான். குதிரையின் சேணம் முதலியவற்றைச் சரிப்படுத்திக் கொண்டு கிளம்ப இரண்டு வினாடிகளே பிடித்தன. ஆனால் ராஜபாட்டையில் அந்த இரண்டொரு வினாடிகளுக்குள்ளேயே அந்த யுவதிகளின் குதிரைகள் வெகு வேகமாக முன்னேறி வெகுதூரம் சென்றுவிட்டன. மயன் ராஜபாட்டையை அடைந்தபோது தூரத்தில் வானம் பூமியைத் தொடுமிடத்தில் அவர்களுடைய உருவங்கள் இரண்டு சிறு புள்ளிகளாகத் தெரிந்தன. வாலிபன் தன் குதிரையைத் தட்டிவிட்டான். அந்த உயர்ந்த ஜாதி அரபிக்குதிரை தன் யஜமானின் குதிகால் அதன் விலாவில் பட்ட உடனேயே அவனுடைய எண்ணத்தை அறிந்து கொண்டது போல ரோஷத்துடன் பறந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் எங்கேயோ வெகு தொலைவில் சிறு புள்ளிகளாகத் தோன்றிய உருவங்கள் இரண்டும் மனித உருவங்களாக- ஆனால் இன்னமும் சிறிய உருவங்களாகவே – தோன்றின. நகரம் சேரும் வரையில் இதை விட அதிகமாக அவர்களை நெருங்க வேண்டியதில்லை என்று மயன் தீர்மானித்தான்.

இந்தத் தீர்மானமும் அதற்கெதிராகக் காரியம் செய்யவேண்டி நேர்ந்ததும் அடுத்தடுத்த வினாடிகளில் நிகழ்ந்தன. திடீரென்று சாலையின் இரு புறங்களிலிருந்தும் நான்கு குதிரை வீரர்கள் வந்து அந்த யுவதிகளை வளைத்துக்கொண்டதை மயன் கண்டான். அதைக் கண்ட வினாடியிலேயே மயனுடைய குதிகால் அவனுடைய குதிரையின் விலாவில் பள்ளம் பறித்தது. குதிரையும் மின்போல முன் நோக்கிப் பாய்ந்தது. யுவதிகளின் பயந்த குரல் எழுந்து அடங்குமுன் அவர்களுக்கு இருபது கஜ தூரத்தில் வந்துவிட்டான் நமது குதிரை வீரன்.

யுவதிகளை வளைத்துக் கொண்டிருந்த குதிரை வீரர்கள் நால்வரும் சேனை வீரர்கள் போல எல்லாவிதமான ஆயுதங்களும் தரித்திருந்தார்கள். அதைக்கண்ட பின் கூட மயன் தன் இடுப்பிலிருந்த குட்டைவாளை உருவவில்லை. நால்வருடன் தனியாக எதிர்த்துப் போர் செய்யத் தன் வாள் போதாதென்று அவன் அறிந்திருந்தான். ஆகவே யுக்தியினாலும் சாதுரியத்தினாலுமே அவர்களை வெல்ல வேண்டுமென்று அவன் தீர்மானித்தான்.

மயனின் வருகையால் தங்களுடைய துஷ்ட காரியத்தில் அந்தக் குதிரை வீரர்கள் சற்றுத் தயங்கினார்கள். ஆனால் அங்கே தங்களை எதிர்க்க, ஆயுதபலம் அதிகமில்லாத ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கண்டவுடன் அவனை வெருட்டி அனுப்பிவிட்டுத் தங்கள் காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணினார்கள் போலும். அந்தக் கோஷ்டியின் தலைவனாகத் தோன்றிய ஒருவன் ரகசியமாகத் தன் ஆட்களுக்கு ஏதோ சொன்னான். உடனே இருவர் தங்கள் குதிரைகளைத் திருப்பிக்கொண்டு கனவேகமாக மயனை நோக்கி வந்தார்கள். தலைவனும் மற்றவனும் அணங்குகளுக்குக் காவலாக, அவர்களுடைய குதிரைகளின் சேணத்தைப் பிடித்துக்கொண்டு, திரும்பிப் பார்த்தபடியே, குதிரைமேல் வீற்றிருந்தார்கள். தங்களுக்கு உதவி செய்யப் பாய்ந்து வந்த வீரனின் கதி என்ன ஆகுமோ என்று பயந்தவர்களாக, வெளுத்த முகத்துடன் யுவதிகள் இருவரும் கற்சிலைகள்போலத் தங்கள் குதிரைமேல் அமர்ந்திருந்தார்கள்.

அடுத்து நடந்த காரியங்கள் ஒரே வினாடியில், கண்மூடிக் கண் திறப்பதன் முன் முடிந்துவிட்டன. தன்னுடைய விருப்பத்தை மயன் தன் குதிரைக்குத் தன் குதிகால் மூலம் தெரிவித்ததுதான் தாமதம். அது ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு வெகுவேகமாக ஓடிப்போய் தீர்த்து வந்த இரண்டு வீரர்களில் இடதுபுறத்தில் இருந்தவனுக்கு இடதுபுறமாக மோதித் திரும்பி நின்றது. அந்தக் குதிரையும் குதிரைவீரனும் அந்த மோதல் வேகத்தால் தயங்கினார்கள். வீரன் கையிலிருந்த உருவிய வாள் தடுமாறிற்று. இந்தத் தடுமாற்றத்தை எதிர்பார்த்திருந்த மயன் எட்டிப்பிடித்து வெகு சுலபமாக அவன் கையிலிருந்த நீண்ட வாளைப் பிடுங்கிக் கொண்டான். அடுத்த வினாடி வாளை இழந்தவனும் அவன் குதிரையும் மண்ணில் விழுந்து புரண்டன: குதிரையும் எழுந்திருக்கவில்லை ; மனிதனும் எழுந்திருக்கவில்லை.

இரண்டாவது வீரன் தன் குதிரையின் வேகத்தைச் சரியான சமயத்தில் நிறுத்தமாட்டாமல் பத்தடி முன் சென்றுவிட்டான். அவன் தன் குதிரையைச் சமாளித்துத் திருப்பிக்கொண்டு வரும்போது மயன், கையில் நீண்ட வாளுடன் அவனை எதிர்க்கத் தயாராகவே இருந்தான். அவன் எவ்விதத்திலும் மயனுக்கு ஈடுசொல்லக்கூடியவன் அல்ல.

அவனுடைய திராணியைக் கண்ட மயன் வீணாக உயிர்க்கொலை செய்வானேன் என்றுதான் போலும், வாளைத் திருப்பிக் கொண்டு மட்டைப் பக்கத்தால் அவன் மண்டையில் ஓங்கி அடித்தான். குதிரை மேலிருந்தபடியே மூச்சை யிழந்து அவன் தரையில் சாய்ந்தான்.

தங்கள் நண்பர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு மற்ற இரண்டு குதிரை வீரர்களும் நடுங்கிப் போனார்கள். இரண்டுபேருக்கு ஏககாலத்தில் ஒருவன் பதில் சொல்லுகிறானே என்று ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அது அடுத்த வினாடி ஆக்ரோஷமாகவும் ஆத்திரமாகவும் மாறிற்று. தங்கள் காவலிலிருந்த யுவதிகளையும் மறந்து விட்டு, உருவிய கத்திகளுடன் குதிரைகளைத் திருப்பித் தட்டி விட்டுக் கொண்டு வந்தார்கள்.

முதல் தடவையாக மயனின் குரல் அங்கே ஒலித்தது. தன்னை எதிர்த்து வந்த இருவரையும் நோக்கிச் சொன்னான்: “நண்பர்களே ! வேண்டாம். ஏன் வீணாக உங்கள் ரத்தத்தைச் சிந்த விரும்புகிறீர்கள்? என் கை வாளுக்கு யாருமே தப்புவது அரிது. உங்கள் துஷ்டத்தனத்தை மன்னித்து விடுகிறேன். ஓடிவிடுங்கள்” என்றான்.

துஷ்டர் கோஷ்டியின் தலைவன் அவன் வார்த்தைகளை லக்ஷியமே செய்யவில்லை. ஏளனமான புன்னகையுடன் வாளை உருவிப் பயங்கரமாகச் சுழற்றிக்கொண்டு குதிரையை விரட்டிக் கொண்டு வந்தான். அவனுடைய தோழன் சற்றுப் பின் தங்கியே தயங்கித் தயங்கி வந்தான்.

முதலில் வந்தவன் ஒரே அடியில் எதிரியை வெட்டி வீழ்த்திவிட வேண்டுமென்ற உத்தேசத்துடன் அவன் மண்டையைப் பிளக்கத் தயாராக வாளை உயர ஓங்கிக் கொண்டு வந்தான். ஓங்கிய அவனுடைய கை கீழே இறங்குமுன் அவனை நோக்கிப் பாய்ந்து மயன் அவனுடைய குதிரையின் தலையைச் சீவினான். குதிரை விழுந்தது. அத்துடன் ஓங்கிய வாளும் கையுமாக மயனுக்கோ அவனுடைய குதிரைக்கோ எவ்வித ஹானியும் விளைவிக்காமலே துஷ்டர் தலைவன் மண்ணைக் கவ்வினான். அவன் எழுந்திருக்கு முன் மயனும் தரையில் குதித்தான். தன்னுடைய எதிரியைத் தூக்கி நிறுத்தினான். வீணாக உயிரைக் கொடுக்காதே! சொல்லுகிறேன் கேள்; வாளை எறிந்துவிட்டு ஓடிவிடு” என்றான்.

துஷ்டர் தலைவன் சிறிதுநேரம் தயங்கினான். ஒரு தரம் மயனை விரைக்கப் பார்த்தான். அவன் கீழே வீழ்த்திய தன்னுடைய சகாக்கள் இருவரையும் பார்த்தான். பின் தங்கிவிட்ட தன்னுடைய நாலாவது ஆசாமியையும் திரும்பிப் பார்த்தான். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு குதிரைகளின் மேலேயே வீற்றிருந்த குமாரிகள் இருவரையும் பார்த்தான். அப்புறம் மறுபடியும் மயனை ஒருதரம் பார்த்தான். தன் வாளை உறையில் செருகினான். “நாம் மறுபடியும் சந்திப்போம்” என்று மயனைக் கருவிச் சொன்னான். தன்னுடைய நாலாவது ஆள் பின்தொடரக் காட்டை நோக்கி நடந்தான்.

“மயன் கால் நடையாகவே குதிரைமேலிருந்த யுவதிகளை அணுகினான். இனி நீங்கள் நிர்ப்பயமாக உங்கள் வழியே செல்லலாம். யாரும் உங்களை ஹிம்சிக்கத் துணிய மாட்டார்கள் ” என்றான்.

இரண்டு யுவதிகளும் மயனையே உற்று நோக்கிக் கொண்டு சிறிதுநேரம் மௌனமாகவே இருந்தார்கள்.

பிறகு அவனுடைய மனத்தைக் கவர்ந்த யுவதி “ஐயா! தாங்கள் யார் என்று தெரியவில்லை. தங்கள் உயிரையும் திருணமாக மதித்து, நால்வரை எதிர்த்து, எங்களைப் பேராபத்தினின்றும் காத்து மீட்டீர்கள். நாங்கள் என்றும் தங்களுக்குக் கடமைப்பட் டிருக்கிறோம். தங்களுடைய பெயரையும் இருப்பிடத்தையும் தெரிவித்தீர்களானால் தக்க சமயத்தில் தங்களுக்கு எங்களாலான கைம்மாறு செய்யத் தவறமாட்டோம்” என்று சொன்னாள்.

அவள் இன்னும் கொஞ்சம் பேசமாட்டாளா என் றிருந்தது மயனுக்கு. அவள் குரலில்தான் என்ன இனிமை இருந்தது! தன் மனத்தில் கொந்தளித்து எழுந்த உணர்ச்சிகளை எல்லாம் அடக்கிக்கொண்டு, குரலில் தொனிக்காத வண்ணம் சமாளித்தவனாக அவன் பதில் அளித்தான்: “ஏதோ உங்களுக்குச் சிரமம் நேர இருந்த காலத்தில் நான் அருகிலிருந்தேன்; என்னாலானதைச் செய்தேன். எந்த வீரனும் இதைச் செய்திருப்பான் என்றே நான் நம்புகிறேன். நான் அருகிலிருக்க நேர்ந்தது என் பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். கைம்மாறு எதுவும் கருதிச் செய்யப்பட்ட காரியம் அல்ல இது. தங்கள் பிதாவின் பெயர், இருப்பிடம் முதலியவற்றைத் தெரிவித்தீர்களானால், நான் நகர்வரையில் உங்களுடன் வந்து ஜாக்கிரதையாக உங்களை வீட்டில் சேர்ப்பிக்கிறேன். அதற்குத் தேவையில்லை” என்றாள் மற்றொருத்தி. “தவிரவும் பல காரணங்களால் நாங்கள் யார் என்பதை வெளியிட முடியாமல் இருக்கிறது. எங்களை மன்னிக்க வேண்டும். நாழியாகிறதே, சித்திராங்கி.

தன் மனத்தைக் கவர்ந்த வனிதையின் பெயர் சித்திராங்கி என்றறிந்து மயன் “எவ்வளவு அழகான பெயர்!” என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். சித்திராங்கியின் மதுரமான குரல் அவன் காதில் விழுந்தது: “ஆமாம், ஐயா. இச்சம்பவத்தை இத்துடன் தாங்கள் மறந்து விடவேண்டும் என்று நானும் வேண்டிக் கொள்ளுகிறேன். பல காரணங்களால் இது அவசியமாக இருக்கிறது என்பதை நான் சொன்னால் நீங்கள் அதைத் தப்பாக எண்ணிக் கொள்ளமாட்டீர்கள் என்றே கருதுகிறேன். நாங்கள் என்றும் தாங்கள் செய்த உதவியை மறக்கமாட்டோம்” என்றாள் சித்திராங்கி.

“இந்தச் சம்பவத்தை மறந்துவிட நான் தயார்தான். ஆனால்…” என்று வாக்கியத்தை முடிக்காமல் குறையாக நிறுத்தினான் மயன்.

“ஆனால் என்ன?” என்று குறும்பாக, குறிப்பாகச் சித்திராங்கியைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் அவள் தோழி. இருவருடைய அர்த்தத்தையும் புரிந்து கொண்ட சித்திராங்கியின் முகம் நாணத்தால் சிவந்தது. சற்றே கண் புதைத்துத் தலைகுனிந்தாள். அப்புறம் தலையை நிமிர்த்தி மயனைப் பார்த்துச் சொன்னாள்: “என் ஞாபகார்த்தமாக இந்த முத்துமாலையை அங்கீகரிக்கவேண்டும் என்று நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்”

தன் கழுத்திலிருந்த முத்துச்சரம் ஒன்றை எடுத்து மயனிடம் கொடுத்தாள்.

இருவருடைய கண்களும் ஒரு வினாடி சந்தித்துப் பேசிக் கொண்டன. முகம் சிவக்க யுவதி தன்னுடைய கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.

சித்திராங்கியின் தோழி அர்த்த புஷ்டியான அந்த மௌனத்தைக் கலைத்தாள். “நாம் சந்திப்பது இது முதல் தடவை அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. தங்களை இதற்குமுன் எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே” என்றாள்.

“சிற்பக் கண்காட்சியில் நேற்று அந்த நர்த்தன சுந்தரர் விக்கிரகத்துக்கு முன்…” என்று முணுமுணுத்தாள் சித்திராங்கி.

“தனக்கிருந்ததுபோலவே அவளுக்கும் அந்தச் சந்திப்பு ஞாபகம் இருந்தது என்று கண்டு மயன் புளகாங்கித மடைந்தான். இரண்டு தடவையும் நமது சந்திப்பு தெய்வாதீனமாக ஏற்பட்டதுதான் என்று எனக்குப் படுகிறது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் நான் என் ஆயுள் உள்ளவரையிலும் மறக்கமாட்டேன்” என்றான் மயன்.

சித்திராங்கி அதே விஷயத்தை வாய்விட்டுச் சொல்லவில்லை எனினும் அவள் விஷயத்திலும் அது உண்மை என்பதை அவளுடைய கண்கள் அறிவுறுத்தின.

சித்திராங்கியின் தோழி அவளை அவசரப்படுத்தினாள். “நாழியாய்விட்டதே சித்திராங்கி ! இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடுமே. இன்னும் வரக்காணோமே என்று உன் பிதா தேடினாலும் தேடுவாரே!” என்றாள்.

மயனும் சித்திராங்கியும் தங்களுடைய பகற் கனவு களிலிருந்து விடுபட்டு விழித்துக் கொண்டார்கள். மறுபடியும் ஒருதரம் அவர்களுடைய கண்கள் சந்தித்துப் பேசிக் கொண்டன. ஒருவரை ஒருவர் விழுங்கிவிட விரும்புகிறவர்கள் போலப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவருள்ளமும் ஆசையும் மற்றவருக்குத் தெள்ளெனத் தெரிந்து விட்டது. அதுவரையில் இல்லாத ஒரு நாணம் சித்திராங்கியைப் புதிதாக வந்து பாதித்தது. இவ்வளவு நேரம் நேரே மயனுடன் வார்த்தையாடிய அவள் தன் தோழியைப் பார்த்துச் சொன்னாள்: “ஸகி! அவருடைய ஊரையும் பெயரையும் இருப்பிடத்தையும் விசாரித்து அறிந்துகொள். பின்னால்…”

“இவ்வளவு தூரம் நடந்த பின் சொல்லாமலும் இருந்து விடுவாரா அவர்? தாமாகவே சொல்லுவார்” என்று சற்றுக் கேலியாகவே சொன்னாள் தோழி.

இந்தக் கேலியை லக்ஷியம் பண்ணாமலே சித்திராங்கியின் கேள்விக்கு மயன் பதில் அளித்தான்: “நான் தமிழனேயானாலும் இங்கே ஒரு அன்னியன்தான். இப் பரந்த உலகில் எந்த ஊரும் என் ஊர்தான். என்னுடைய எனக்கே சொல்லத் நாளைய இருப்பிடம் எது என்று தெரியாது. புஷ்பகம் முதல் மிசிரம், யவனம் வரையில் எல்லா நாடுகளிலும் நான் சுற்றி அலைந்திருக்கிறேன். என் பெயரைப் பல ஊர்களில் பலவிதமாகச் சொல்லுவார்கள். இங்கே மயன் என்று சொல்லுகிறார்கள்.”

இந்தப் பதில் இரண்டு யுவதிகளுக்கும் ஆச்சரியத்தை விளைவித்தது என்பதில் சந்தேகமேயில்லை. மயன்தான் நர்த்தன சுந்தரரின் சிற்பி என்பது புகார் நகரம் முழுவதுமே அறிந்திருந்த விஷயம். அந்த மயனா, கேவலம் ஒரு சிற்பியா, குதிரை வீரர்கள் நால்வருடன் ஒருவனாகத் தனித்து வாட் போர் செய்து வெற்றி பெறும் வீரம் வாய்ந்தவனாக இருந்தான்? நம்பும்படியாக இல்லையே.

அவர்களுடைய ஆச்சரியத்தை அவர்கள் வெளியிடு முன் இன்னொரு ஆசாமி திடீரென்று வந்து அந்தக் கோஷ்டியில் கலந்து கொண்டார். தங்களுடைய பேச்சிலேயே கவனமாக இருந்து விட்ட யுவதிகளும் மயனும் பதஞ்சலியினுடைய வருகையைக் கவனிக்காமலே இருந்து விட்டார்கள். மயனுடைய கடைசி வாக்கியம் அவருடைய காதிலும் விழுந்தது. சிற்ப சாலையில் மறுபடியும் ஒருதரம் போய் நர்த்தன சுந்தரரான நடனராஜ மூர்த்தியைத் தரிசித்துவிட்டு வந்திருந்த அவர் மயனருகே வந்து ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றார். “நர்த்தன சுந்தரரின் சிற்பி நீ தானா? இரண்டு நாளாக நான் உன்னையே தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் ” என்றார்.

வெகு விநயமாக அவரை வணங்கிக் கைகூப்பி நின் றான் மயன். அவர் யார் என்று அவனுக்குத் தெரியாது. எனினும் அவர் தோற்றத்தைக் கொண்டே அவரை மதிப்பிட முடிந்தது. யாரோ மகான், முனீசுவரர் என்று அவன் எண்ணினான்.

பதஞ்சலியினுடைய குரல் கேட்டவுடனே சித்திராங்கியும் அவளுடைய தோழியும் தங்களுடைய குதிரைகளைவிட்டு இறங்கி வந்து அவரை வணங்கினார்கள்.

“குழந்தாய்!” என்று சித்திராங்கியைக் கூப்பிட்டு ஆசீர்வதித்தார் பதஞ்சலி. “இதென்ன இந்த நேரத்தில் இந்தச் சாலையில் ஏதோ அமர்க்களம் நடந்திருக்கிறது போலிருக்கிறதே! என்ன குழந்தாய் இது? என்ன நடந்தது, சொல்?” என்றார்.

“ஸ்வாமி! தங்களைத் தரிசிக்க வேண்டும் என்று நாங்கள் தங்களுடைய ஆசிரமம் சென்றிருந்தோம். அங்கே தங்களைக் காணாமல் இருட்டும் முன் ஊர் திரும்பிவிடலாம்” என்று வந்து கொண்டிருந்தோம் என்று ஆரம்பித்து நடந்ததை எல்லாம் சித்திராங்கி விவரமாகச் சொன்னாள். வாட் போரை விவரிக்கும்போது அவள் பேச்சிலும் முகத்திலும் பீதியும் ஆச்சரியமும் மாறி மாறித் தொனித்தன.

மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மயனை நோக்கினார் பதஞ்சலி. “சிற்பம் மட்டுமல்ல ; வாள் வித்தையும் உனக்கு நன்கு வரும்போல் இருக்கிறதே!” என்றார். சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு “இந்தக் குழந்தைகளைத் துன்புறுத்த முற்பட்ட அந்தத் துஷ்டர்கள் யார் என்று விசாரித்து அறிந்து கொண்டாயா?” என்று கேட்டார்.

“இல்லை” என்றான் மயன்.

“விசாரித்து அறிந்துகொண்டிருந்தால் நலமாயிருந் திருக்கும் ” என்றார் பதஞ்சலி.

“ஒருவன் வீரசேனனின் அந்தரங்கமான ஆள் என்று எனக்குத் தெரியும்” என்றாள் சித்திராங்கி.

“அப்படித்தான் இருக்கும் என்று நானும் எண்ணி னேன்” என்றார் பதஞ்சலி. மயனைப் பார்த்துச் சொன்னார் : “தம்பி! நீ விரோதித்துக் கொண்டுள்ளவர்களின் விஷயம் உனக்குத் தெரியாது. நீ சற்று ஜாக்கிரதையாகவே தான் இருக்க வேண்டும். இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.”

அவர் குரலில் தொனித்த பாவத்தைக் கண்டு சித்திராங்கி பயந்துபோனாள். பயத்தால் அவள் முகம் இருண்டது. சட்டென்று திரும்பி மயன் பக்கம் பார்த்தாள். அவன் கண் சிமிட்டாமல் தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டாள். தன் மனத்தில் தோன்றியதை அவன் ஊகித்து அறிந்துகொண்டு விட்டான் என்பதை அவன் முகபாவத்திலிருந்து அவள் அறிந்து கொண்டாள். சட்டென்று நாணத்தால் தலை குனிந்தாள்.

மயன் சாவதானமாகவே பதஞ்சலி முனிவருக்குப் பதில் அளித்தான். ” ஸ்வாமி! எல்லாம் அறிந்திருந்தும் தாங்கள் எதுவும் அறியாதவர் போலப் பேசுகிறீர்களே! மனுஷ்யர்கள் ஜாக்கிரதையில் என்ன இருக்கிறது? ஈசுவர சங்கல்பப்படி எது நேர வேண்டுமென்று இருக்கிறதோ அது நேர்ந்தே தீரும். நான் எப்போதுமே ஜாக்கிரதையுள்ளவன்தான்; எப்போதுமே அஜாக்கிரதையானவன் தான். ஆனால் யார் அந்த வீரசேனன்? அவன் இந்த வனிதைகளைத் துன்புறுத்த முற்படுவானேன்? எல்லாவற்றையும் எனக்குச் சற்று விவரமாகக் கூறினீர்களானால் நன்றி யுள்ளவனாக இருப்பேன்.”

பதஞ்சலி உடனே பதில் சொல்லவில்லை. திரும்பிச் சித்திராங்கியைப் பார்த்தார். பிறகு சொன்னார்: ‘இருட்ட ஆரம்பித்துவிட்டது. முதலில் நீ இவ்விரு குழந் தைகளையும் ஜாக்கிரதையாக நகர் வரையில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு என் ஆசிரமத்துக்கு வா.’

“இரவு என் ஆசிரமத்தில் நீ தங்கலாம், உனக்கு வேறு எவ்வித ஜோலியும் இல்லாவிட்டால். இந்தச் சாலையுடன் மேற்கே போனால் ஆற்றங்கரையில் காடு ஆரம்பிக்குமிடத்தில் இருக்கிறது என் ஆசிரமம். வா.”

“என் பாக்கியம், வருகிறேன்” என்று அவரை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, மயன் தன்னுடைய குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தி அதன் மேல் ஏறி அமர்ந்துகொண்டான்.

சித்திராங்கியும் அவளுடைய தோழியும் சிறிது நேரம் தாழ்ந்த குரலில் பதஞ்சலியுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசினார்கள். பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு குதிரையின் மேல் ஏறி உட்கார்ந்து கொண் டார்கள். பதஞ்சலி தம்முடைய ஆசிரமத்தை நோக்கி நடந்தார். மற்ற மூவரும் புகார் நகரை நோக்கிக் குதிரைகளைச் செலுத்தினார்கள். நடுவில் சித்திராங்கியும் வலது புறம் மயனும் இடது புறம் அவளுடைய தோழியுமாகச் சாலையை அடைத்துக்கொண்டு அவர்கள் சென்றார்கள்.

சாலையில் ஜனசஞ்சாரமே இல்லை. நிர்மலமான வானத்திலிருந்து நிலவு பால் போலப் பொழிந்து கொண்டிருந்தது. அலை வீசிச் சலசலத்துக் கொண்டிருந்த காவேரி நதிப் பரப்பு நிலவில் பார்க்க மிகவும் மனோகரமாக இருந்தது. வெகுநேரம் மூவரில் ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஐந்து வினாடிக்கொருமுறை மயனுடைய கண்களும் சித்திராங்கியினுடைய கண்களும் சந்தித்துக் கொண்டன. ஒருவர் பார்க்காமல் இருக்கும்போது மற்றவர் பார்ப்பது என்பது சிரமமான காரியமாக இருந்தது.

நகரத்துக் கோட்டை மதில் தென்பட்டதும் சித்திராங்கி சொன்னாள்: “பதஞ்சலி முனிவர் தம் ஆசிரமத்தில் தங்கள் வருகைக்காகக் காத்திருப்பார். இனி எங்களுக்கு எதுவும் நேராது. பயமில்லை. தாங்கள் திரும்பலாம்.”

மயன் “பதஞ்சலி…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

சித்திராங்கி “அவர் நமது நண்பர் என்றாள். நமது என்ற வார்த்தையில் விழுந்த அழுத்தம் மயனுக்குத் திருப்திகரமாக இருந்தது.”

“நாம் மறுபடியும் சந்திப்பது எப்பொழுது?” என்று கேட்டான் மயன், துணிகரமாகவே.

சித்திராங்கி பதில் சொல்லும் முன் சற்றுத் தயங்கினாள்: “தாங்கள் சற்று முன் சொன்னதுபோல ஈசுவர சங்கல்பப்படியே எல்லாம் நடக்கும். நாம் கவலைப் படுவானேன் ?”

சொல்லிவிட்டு “வா, ஸகி! போவோம்” என்றாள். இருவரும் ராஜபாட்டையிலிருந்து விலகிக் கோட்டையை நோக்கிச் சென்ற ஒரு கொடி வழியைப் பின்பற்றிக் குதிரையை விட்டார்கள்.

நிலவொளியில் சித்திராங்கியின் உருவம் கோட் டைக்குள் சென்று மறையும் வரையில் அதையே பார்த்துக்கொண்டு நிலைத்து நின்றான் மயன். அவள் உருவம் மறைந்தவுடன் தன் குதிரையைத் திருப்பிக்கொண்டு கிளம்பினான். முதலில் வேகமாகவே ஓடிய அவன் குதிரை, தன் யஜமான் சிந்தனையில் ஆழ்ந்து உலகையே மறந்திருப்பதை உணர்ந்தது போலச் சற்று நேரத்துக்கெல்லாம் மெதுவாகத் தளர் நடையாகவே செல்ல ஆரம்பித்தது.

மயனுடைய அப்போதைய சிந்தனைகளின் வேகத்தையோ இன்பத்தையோ தரத்தையோ வார்த்தைகளால் அளந்து சொல்லமுடியாது என்ற காரணத்தினால் அதைச் சொல்லாமலே இருந்துவிடுவோம்.

பதஞ்சலி முனிவர் தம் ஆசிரமத்தில் மயனுடைய வருகையை எதிர்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். மயன் தன் குதிரையை ஒரு மரக்கிளையில் கட்டிவிட்டு ஆசிரமத்துக்குள்ளே போனான். பதஞ்சலி மாமுனியின் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். அவனை வாரி எடுத்துப் பதஞ்சலி ஆலிங்கனம் செய்து கொண்டார்; உச்சி மோந்தார்.

“அப்பனே ! என்ன இது? நீ என்னை நமஸ்கரிப்பது சிறிதும் தகாது. நடன ராஜனின் சிருஷ்டி கர்த்தாவான உன்னை நானன்றோ வணங்க வேண்டும்! என்னப்பனின் உண்மைச் சொரூபத்தை அறியமாட்டாது தவித்துக் கொண்டிருந்த இக்கபோதிக்குக் கண் அளித்தவன் நீயன்றோ?” என்றார். அவர் கண்களில் நீர் துளித்தது.

மயன் என்ன பதில் சொல்லுவது என்று அறியமாட்டாமல் மௌனமாகவே இருந்தான். தவிரவும் அவன் உள்ளமும் வேறுவிதமான சிந்தனைகளால் நிறைந்திருந்தது. சற்று நேரம் பொறுத்துப் பதஞ்சலி சொன்னார். “நர்த்தன சுந்தரரின் திவ்யப் பிரதாபங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு ஊண் உறக்கத்துக்கு அவசியமே ஏற்படாது. என் அசட்டுத்தனத்தில் உனக்கும் அப்படித் தான் என்று நான் எண்ணிவிடுவேன். ஆகவே முதலில் உணவருந்தி விடுவோம். இங்கே தேவையான காய் கனி வகைகள் இருக்கின்றன. அதில் உனக்குப் பிடித்ததை அருந்து” என்று காய் கனிகளைக் கொண்டுவந்து வைத்து அவனை உபசரித்தார்.

ஒரு வழியாக உணவை எல்லாம் முடித்துக்கொண்ட பின் கிழவரும் வாலிபனும் ஆற்றங்கரையோரமாக இருந்த மேடைமீது போய் அமர்ந்து கொண்டார்கள். வெகுநேரம் இருவருக்கும் இடையே ஆழ்ந்த மௌனம் நிலவியது. பதஞ்சலி மாமுனி நர்த்தன சுந்தரரைப் பற்றிய திவ்வியமான சிந்தனைகளில் ஈடுபட் டிருந்தார். மயன் வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தான். இருவரு ஈடுபாடும் ஒரே தரமானதுதான், ஆழத்தையும் பக்தி சிரத்தையையும் பொறுத்தவரையில் நர்த்தன சுந்தர விக்கிரகம் பதஞ்சலியினுடைய மனத்தைக் கவர்ந்தது போலவே, சித்திராங்கி என்னும் விக்கிரகம் மயனின் மனத்தைக் கவர்ந்திருந்தது.

மயன் ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தான்: “இதுவரை என் வாழ்க்கை வரலாற்றை நான் யாரிடமும் சொன்னதில்லை. வெகு ரகஸ்யமாகவே காப்பாற்றி வந்திருக்கிறேன். இன்று என்னவோ என் மனத்தைத் திறந்து எல்லாவற்றையும் தங்களிடம் சொல்லவேண்டுமென்று ஏதோ ஒரு சக்தி என்னைத் தூண்டுகிறது. அனுபவமற்ற ஒரு சிறுவனின் வார்த்தைகளில் தாங்கள் கவனம்செலுத்த முடியுமானால் கேளுங்கள். அதனால் தங்களுக்கு ஒரு லாபமும் இருக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் என் மனத்தைவிட்டு ஒரு பெரிய பாரம் நீங்கியதுபோல் இருக்கும்.”

“சொல் கேட்போம்” என்றார் பதஞ்சலி.

மறுபடியும் சிறிது நேரம் மயன் மௌனம் சாதித்தான்; மறுபடியும் பெருமூச்சு விட்டான். பிறகு சொன்னான். ஆரம்பத்திலிருந்தே சொல்லிவிடுகிறேன். இருபத்தாறு இருபத்தேழு வருஷங்களுக்கு முன் சோழ நாட்டின் தலைநகராகிய பூம்புகாருக்குப் புஷ்பகத் தீவின் இளவரசன் வந்து போனது தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

“இருக்கிறது” என்றார் பதஞ்சலி.

“அவர் பூம்புகாரில் தங்கியது மூன்று மாதங்களே என்று எண்ணுகிறேன். ஆனால் அதற்குள் அவர் இங்கே ஒரு தமிழ்ப் பெண்ணின் காதலைப் பெற்று அவளை ரகசியமாக மணந்து கொண்டார். பூம்புகாரிலிருந்து அவ் வரசகுமாரன் வடநாட்டுக்கு விஜயம் செய்ததும் தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தம் ரகசியக் காதலியைப் புகாரிலேயே இருத்திவிட்டு, அவர் தம் தேசம் திரும்பும்போது அவளையும் உடன் அழைத்துச் செல்லுவதாக வாக்களித்துச் சென்றார். சென்றவர் சென்றவர் தான்; புகார்ப் பக்கம் அதற்கப்புறம் திரும்பவேயில்லை. அவர் விட்டுச் சென்ற காதலி அப்போது கர்ப்பிணியாய் இருந்தாள். நாளடைவில் ஒரு பிள்ளையையும் பெற்றெடுத்தாள். அந்தத் துரதிருஷ்டசாலியான பிள்ளை தான் நான்.”

மறுபடியும் சிறிதுநேரம் ஆற்றங்கரை மேடையில் மௌனம் நிலவியது. மயன் தானாகவே தன் கதையை மேலே சொன்னான்: “தன் காதலர் திரும்பி வருவார், வருவார் என்று என் தாய் வெகு நாள் காத்திருந்தாள். புஷ்பகத் தீவிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. புஷ்பகத்து இளவரசர் புஷ்பகத்தின் அரசரேயாகி விட்ட செய்தியும் வந்தது. அப்போதாவது தன்னை ஞாபகப்படுத்திக் கொண்டு அழைத்துச் செல்வார் என்று தாய் எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை. பிறகு புஷ்பகத்து அரசருக்குக் கலியாணம் நடக்க இருந்த செய்தியும் எட்டியது. புஷ்பகத்தில் கணவனுக்குச் சரியா சனத்தில் இருந்து பட்டமகிஷியாக ஆளவேண்டிய என் தாய்க்கு அதற்கு மேல் தாங்கவில்லை. காத்திருந்து உபயோகமில்லை என்றும் புஷ்பகத்தீவுக்குத் தன் மகனுடன் சென்று தன் உரிமைகளை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதென்றும் அவள் கருதினாள். எப்படியோ ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினாள். அந்தக் கடல் பிரயாணம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதுதான் என் வாழ்க்கையிலே முதல் முதலாக என் மனத்தில் பதிந்துள்ள அனுபவம். அப்போது எனக்கு வயது ஐந்து தான் இருக்கும்.

ஏதோயோசனையில் ஆழ்ந்தவனாக மயன் சற்றுநேரம் பேசாமல் இருந்தான். பதஞ்சலி மேலே கதையைச் சொல்ல அவனைத் தூண்டினார். “புஷ்பகத்திலே?” என்றார்.

புஷ்பகத்தீவை நாங்கள் அடைந்தபோது தீவு முழுவதிலும் ஒரே குதூகலமாகவும் உத்ஸாகமாகவும் கேளிக்கையாகவும் இருந்தது. ஜனங்கள் தங்களுடைய மன்னனின் கலியாண மஹோத்ஸவத்தைக் கொண்டாடிக் கொண் டிருந்தார்கள். அரசனை அணுகுவதே சிரம சாத்தியமான காரியமாக இருந்தது. அந்த நாட்களில் என் தாயார் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் என்னால் இப்போதுதான் ஒருவாறு ஊகித்தறிய முடிகிறது. நான் அப்போது சிறுவன்; எனக்கு அவ்வளவாக ஒன்றும் ஞாபகமில்லை. எப்படியோ ஒருநாள் என் தாயார் அரண்மனைக்குள் புகுந்துவிட்டாள். ஆனால் அவள் அதனால் அடைந்த பலன் ஒன்றுமில்லை என்று தான் சொல்லவேண்டும். புஷ்பகத்து அரசனுக்குத் தன்னை ஞாபகப்படுத்திக் கொள்ள என்னென்ன சொல்ல வேண்டுமோ அத்தனையையும் சொல்லிப் பார்த்தாள் : ஒன்றும் பயன்படவில்லை. மந்திரிகளும் அரசனுமாகக் கூடிக்கொண்டு என் தாயையும் அவள் கூறியதையும் கேட்டு நகைத்தார்கள். தன் புதுப் பட்டமகிஷுக்கு என் தாயையும் அவள் பக்கத்தில் நின்றிருந்த என்னையும் சுட்டிக் காட்டி நகைத்தான் அந்த அதர்மக்காரன். அந்நகைப்பு இன்றும் என் காதில் எதிரொலித்துக்கொண் டிருக்கிறது.’

அந்த நகைப்பின் சப்தம் தன் காதுக்குள் புகாமல் தடுக்க விரும்புகிறவன் போல மயன் தன் கைகளால் காதைப் பொத்திக் கொண்டான். சிறிது நேரம் கழித்துக் கதையைத் தொடர்ந்து சொன்னான். “அதற்கப்புறம் என் தாயார் வெகுநாள் ஜீவித்திருக்கவில்லை. மனமுடைந்து அவள் இறந்துவிட்டாள். அனாதரவாக விடப் பட்ட என்னை எடுத்து யாரோ ஏழை எளியவர்கள் வளர்த்துக் கல்வி புகட்டினார்கள். என்னுடைய பன்னிரண்டாவது வயதுவரையில் புஷ்பகத்தீவிலேயே ஒரு சிற்பியின் வீட்டில் அவன் ஆதரவில் வசித்து வந்தேன். அவன் சிற்ப சாஸ்திரத்தில் மகா மேதாவி. அவன் இரண்டொரு வருஷங்கள் எனக்குச் சிற்ப சாஸ்திரம் பயிற்றுவித்தான். எனக்கு இப்போது தெரிந்ததெல்லாம் என் இளவயதில் அவனிடம் கற்றுக்கொண்டது தான். என் அதிர்ஷ்டம், என்னுடைய பன்னிரண்டாவது வயதில் அந்தச் சிற்பியும் இறந்துவிட்டான். பன்னிரண்டாவது வயது முதல் இன்று வரையில் நான் திரியாத தேசம் கிடையாது; செய்யாத தொழில் கிடையாது. குதிரை யேற்றம், வாள்வித்தை, வான சாஸ்திரம், சிற்பம், சங்கீதம் எல்லாவற்றிலும் எனக்குப் பரிசயம் உண்டு. ஆனால் எதிலும் என் மனம் நிலைத்து நிற்கவில்லை. என்னைப் போல என் மனமும் இவ்வளவு நாள் நாடோடியாகவே இருந்துவிட்டது. என்றுதான் துறைமுகம் சேர்ந்து நங்கூரம் பாய்ச்சி நிலைத்து நிற்குமோ; ஈசுவரனுக்குத்தான் தெரியும்.”

மறுபடியும் பெருமூச்செறிந்தான் மயன். ஆறுதலாகப் பதஞ்சலி ஏதாவது வார்த்தை சொல்லுவார் என்று அவன் எண்ணியிருந்தானானால் ஏமாற்றமடைந்தான் என்றே சொல்ல வேண்டும். பதஞ்சலி ஒன்றுமே சொல்லாமல் வானத்தில் மின்னிய மீன்களையும் காவேரி நதியில் தெரிந்த அவற்றின் நிழல்களையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“யவனத்தில் கால் நடையாக, அகப்பட்டவேலையைச் செய்துகொண்டு ஈசன் அளித்ததை அனுபவித்துக் கொண்டு இருபத்திரண்டு மாதங்கள் திரிந்திருக்கிறேன். திராக்ஷை பறித்து மதுவாக்கும் ஆலைகள் முதல், பிராக்ஸிடிலிஸ் போன்ற கலைஞர்களின் சித்திர கூடங்கள் வரையில் எல்லா இடங்களிலும் நான் வேலை செய்திருக்கிறேன். மிசிரத்திலும் ஏழெட்டு மாதங்கள் இருந்திருக் கிறேன். மிசிர தேசத்தில் அடிமையாகி, அவர்கள் எழுப்பும் பிரும்மாண்டமான மண்டபங்கள் கட்டுவதற்காக மண் வெட்டிக் கொட்டியிருக்கிறேன். அந்த அடிமை நாட்களில் என் முதுகில் விழுந்த கசையடிகள் கணக்கில் அகப்படா; அவற்றின் தழும்புகளை இன்னமும் என் முதுகில் காணலாம். பாரத புண்ணிய பூமியில் கைலாசம் முதல் குமரிவரையில் திரிந்து பார்த்திருக்கிறேன்……

பதஞ்சலி குறுக்கிட்டார்: “புகாரில் தங்குவது இது தான் முதல் தடவையோ?”

“இல்லை. இதற்குமுன் மூன்று தடவைகள் வந்து போயிருக்கிறேன். என் தாயார் இறக்கும் போது அவ ளுடைய தம்பி ஒருவர் புகாரில் இருப்பதாகவும் அவரை நான் எப்படியேனும் சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தாள். அவள் கட்டளையை நிறைவேற்று வதற்காக நான் பூம்புகாருக்கு மூன்றுதரம் வந்தேன். எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்துக்கொண்டு என் மாமனைக் கண்டுபிடிப்பது சாத்தியமான காரியமாகத் தோன்றவில்லை. எனினும் கண்டுபிடித்து விடுவேன் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. விசாரித்துக்கொண்டு தான் இருக்கிறேன் ” என்றான் மயன்.

முற்றும் துறந்த முனிவர் பெருமூச்சு விட்டார். “அதெல்லாம் சரி, நர்த்தன சுந்தரர் உருவம் பெற்றதைச் சொல்லாமல் விட்டுவிட்டாயே!” என்றார்.

“அதுவா?” என்று சற்றுத் தயங்கினான் மயன். தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் முன் என்னுடைய அறிவும் ஆற்றலும் எம்மாத்திரம்? நான் சமைத்தெடுத்த ஒரு சிற்பத்தை வெகுவாகப் புகழ்கிறீர்கள். ஆனால் என் அறிவையும் ஆற்றலையும் மீறிய சக்தி ஒன்று அதுதானே எனக்கு இப்போது முக்கியம் – அதைச் சமைக்க என்னைத் தூண்டியது. என் ஆயுள் நாள் முழுவதும் அந்த ஒரே கற்பனையை என் மனத்தில் போற்றி வளர்த்துக் கடைசியில் தங்கத்தில் வார்த்தும் எடுத்து விட்டேன். அது அசட்டுக் கற்பனை அல்ல என்று யார் சொல்ல முடியும்?”

அசுர சிற்பியின் பெயரைப் படைத்த நீ தெய்விக மானதோர் சிற்பத்தைப் படைத்துவிட்டாய்.

அது அசட்டுக் கற்பனை என்று யார்தான் சொல்லமுடியும்? தெய்வத்துக்கு வடிவு காணாமல் தவித்துக் கொண்டிருந்த மானிட உலகம் உன்னால் உய்யும். தெய்வத்துக்கு ஓர் உருவத்தை நீ அளித்துவிட்டாய் அந்த உருவம் அழியாதது; உலகம் உள்ள அளவும் போற்றத்தக்கது. இதைப் பதஞ்சலியாகிய நான் சொல்லுகிறேன் என்றார் பதஞ்சலி. அவருடைய உத்ஸாக வேகத்தில் அவரால் உட்கார்ந்து கொண்டே பேச முடியவில்லை; எழுந்து மேடைமேல் உலாவிக் கொண்டே பேசினார்.

அவருடைய வேகத்தைக் கண்டு திடுக்கிட்டான் மயன்.

பதஞ்சலி மேலும் சொன்னார்: “தெய்வத்துக்கு ஓர் உருவம் தராவிட்டால் மனிதனால் அதை அறியமுடியாது; அனுபவிக்க முடியாது ; வாழ்க்கையுடன் ஒட்டி அமைக்க நான் பல வருஷங்களாகவே இந்தச் சிந்தனையில் ஈடுபட்டு ஈசுவரனுக்கு ஓர் உருவத்தைச் சமைக்க முயன்றுகொண்டு வந்திருக்கிறேன். முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஈசுவரனிடமிருந்து இவ்வளவு நாள் விலகிநின்ற கலை உன்னால் இன்று முதல் அவனிடம் ஒட்டிவிட்டது. நான் சொல்லுவதைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் இன்றே தோன்றலாம்; ஆயிரம் வருஷங்கள் கழித்துத் தோன்றினாலும் தோன்றலாம்; பிரளய காலம் வரை உலகில் தோன்றாமலே இருந்தாலும் உண்மை இருந்துவிடலாம். அது எப்படியானாலும் சரி. என்பது என்றும் உண்மைதானே !”

“தாங்கள் சொல்லுவதில் பாதி எனக்கே புதிராக இருக்கிறது” என்றான் மயன். “நான் நினைத்ததையும் செய்ததையும் சொல்லி விடுகிறேன். என் தாயும் நானும் என்னுடைய ஐந்தாவது வயதிலே கப்பலேறிப் புஷ்பகத் தீவு சென்றோம் என்று சொன்னேனல்லவா? அந்தக் கப்பல் பிரயாணத்தின்போது ஓர் இரவு தனியாகக் கப்பலின் மேல்தளத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். வானத்திலே சுடர்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஒரு நட்சத் திரக் கூட்டம் வெகுவாக என் மனத்தைக் கவர்ந்தது. அதன் பெயர் திருவாதிரை என்று என் தாயை விசாரித்து அறிந்து கொண்டேன். ஒரு மனிதன் நின்று தாண்டவமாடுவதுபோல் இருந்தது அந்த நட்சத்திரக்கூட்டம். கப்பல் அலைகள் மேல் ஆடி அசைந்து சென்று கொண்டிருந்ததால் இந்தக் கற்பனைக்குச் சற்று அதிகமாகவே உண்மையும் சேர்ந்து கொண்டது. அன்றுமுதல் கனவிலும் நனவிலும் வானத்து நடனராஜனை நான் காண ஆரம்பித்தேன். ஒரு நாள் என் நினைப்பில் அந்த நடனராஜன் விசுவரூபம் எடுப்பான் ; உலகெலாம் தாங்காத அளவு பெருகி ஆடுவான். அவன் கை அசைவில் வானங்கள் அசையும் ; கால்களின் நட்சத்திரங்கள் உதிரும். அவனுடைய அசைவில் பாதாளமும் மற்ற கீழ் லோகங்களும் கிடு கிடென ஆடும். ஒவ்வொரு நாள் அந்த நடனராஜன் பரமாணுவிலும் சிறிய அணுவாகக் காட்சி அளிப்பான். என் வாழ்க்கைச் சலனத்தின் சின்னத்தை நான் அந்த ஆட்டத்திலே கண்டேன். புஷ்பகத் தீவில் சிற்பியிடம் இருந்த இரண்டு வருஷங்களில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அந்த நடனத்தை உருவாக்குவதற்கு வேண்டிய அம்சங்களை எல்லாம் தேடித்தான் நான் ஊர் ஊராக உலகெங்கும் அலைந்தேன். மலையிலும் காட்டிலும் நாட்டிலும் நகரிலும் மாந்தர்களின் வீட்டிலும் மிருகங்களின் வாசஸ்தலங்களிலும் இதற்கு வேண்டிய அம்சங்களைத் தேடி நான் அலைந்திருக்கிறேன். என் அலைச்சல் முடிய வேண்டிய காலம் வந்துவிட்டது; அதனால்தான் இந்த நர்த்தன சுந்தர நடனராஜனும் உருவகமாகிவிட்டான் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.”

பதஞ்சலி சொன்னார்: “அனாதிகாலமாக உள்ள சிருஷ்டி தத்துவத்தையே நீ இந்தச் சிற்பத்தில் சிருஷ்டித்து விட்டாய்.”

“ஈசுவர சங்கல்பம், என்னால் இது சிருஷ்டிக்கப்பட வேண்டுமெனறிருந்தது போலும்; சிருஷ்டிக்கப்பட்டு விட்டது. இந்தச் சிற்பம் உருவகமாகி வந்தவுடனே என் இதயத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கி விட்டதுபோல் இருந்தது. இனி நான் சுயேச்சையாக எவ்விதத் தடையும் இன்றிச் சாதாரண மனிதனைப் போன்ற வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணம் எனக்கு உதித்தது” என்றான் மயன்.

கையைப் பின்கட்டாகக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பதஞ்சலி, மயனை அணுகி நிலா வெளிச்சத்தில் அவனை உற்றுப்பார்த்தார். “புதிர்கள் போட ஆரம்பித்து விட்டாயே நீ !” என்றார்.

“புதிர் ஒன்றுமில்லை” என்றான் மயன். “இந்தக் கற்பனை உருவகமாகாமல் என் உள்ளத்தில் இருந்த வரையிலும் எனக்கு அடங்காத ஏதோ ஒன்று என்னை உந்திக் தள்ளிக் கொண்டு போவது போன்ற உணர்ச்சி இருந்தது எனக்கு. அதை மீறி எதையும் நான் செய்ய அசக்தனாயிருந்தேன். இரவு பகலாக எனக்கு இதைத்தவிர வேறு ஞாபகம் கிடையாது. இப்பொழுது அதை என் உள்ளத்திலிருந்து பிரித்து எடுத்து அப்புறப்படுத்தி வைத்தாய் விட்டது. என்னைக் கட்டிப் பிடிக்க இனி அதற்குச் சக்தியில்லை. நான் சுதந்தர மனிதனாகி விட்டேன். எல்லோரையும் போலச் சாதாரண மனிதன் ஆகிவிட்டேன். இனி மற்றவர்களைப் போல நானும் சாதாரண வாழ்க்கையில் ஈடுபடலாம். அதற்கான சாதனத்தையும் இன்று மாலை நான் கண்டு விட்டேன்.”

சற்றுக் கடினமான குரலிலேயே கேட்டார் பதஞ்சலி: “எதையப்பா சொல்லுகிறாய் நீ? உன் வார்த்தைகள் எனக்குப் புரிய வில்லையே.”

மயன் பதில் அளிக்கவில்லை.

பதஞ்சலி மேலும் சொன்னார்: “நீ சித்திராங்கியைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது. அதை இந்த வினாடி முதல் மறந்து விடு. அம்மாதிரி எதுவும் நடப்பது சாத்தியமல்லாத காரியம். அவள் யார் என்றுகூட நீ அறிய முடியாது.”

பிறகு ஒரு தரம் அவர் மேடையில் குறுக்கே நடந்தார். ஆற்றின் எதிர்க் கோடி ஓரத்தைப் பார்த்தவண்ணம் நின்று கொண்டு சொன்னார்: “வாள் வித்தையும், யௌவனமும் சிற்ப சாஸ்திரமும் போதாது அவளை அடைய. உனக்கு அவள் எவ்விதத்திலும் எட்டாதவள். மறந்து விடு அவளை.”

இதை ஞாபகம் வைத்துக்கொள்.

“அவள் உள்ளமும் என்னை நாடுகிறது என்று நான் அறிந்து கொண்டேன்” என்றான் மயன்.

அப்படியானால் ஈசுவரன் தான் உங்களிருவரையும் காப்பாற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஈசனே! உன் குழந்தைகளை அதிகமாகச் சோதிக்காதே என்று மேலை வாயிலில் விழுந்து மறைந்து கொண்டிருந்த சந்திரனை நோக்கிக் கை கூப்பினார் பதஞ்சலி.

“போவோம் வா. நேரமாகிறது. உறங்கலாம். ஆனால் இன்னொரு விஷயமும் இம்மேடையை விட்டு இறங்குமுன் சொல்லி விடுகிறேன். நீ தேடியதாகச் சொன்னாயே அந்த மாமன் நான்தான்- அதாவது என்னுடைய பூர்வாசிரமத்தில்… வா போகலாம். பாக்கி விஷயங்களைக் காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லிக் கொண்டே மயனுக்குப் பேச அவகாசம் கொடுக்காமலே போய் விட்டார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *