கோடை காலத்தில், இரவில், திறந்த மேல் மாடியில், காற்றாடப் படுத்திருப்பதைப் போன்ற இன்பகரமான காரியம் வேறு கிடையாது என்பது என் அனுபவம். வானத்திலே சந்திரனும், அண்டையிலே அன்பர்களும் இருந்துவிட்டால் சிலாக்கியந்தான். இல்லா விட்டாலும் பாதகமில்லை. நிலவில்லாத முன்னிருட்டு இரவுகளில், பல்லாயிரங் காதங்களுக்கு அப்பாலிருந்து கொண்டு சுழன்று நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் அத்தனிமையிலே நமக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாகத்தான் காட்சியளிக்கின்றன. அவற்றைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கிடப்பதில் தான் என்ன பேரானந்தம் இருக்கிறது! எல்லையற்ற இன்பம் அது. பார்க்கப் பார்க்க மனிதனுடைய புண்பட்ட உள்ளத்திலே ஒரு சாந்தியும் அமைதியும் குடியேறி நிலைக்கின்றன. ஆயுள்காலம் முழுவதையும் அந்த நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்த்துக் கொண்டே கழித்து விடலாமே என்று தோன்றுகிறது. ஆயுள் காலத்தைமட்டுந்தானா? அதற்கப்பாலுள்ள “காலன் கடந்த காலத்தையும்” அப்படியே கழித்துவிடலாம்.

பகல் என்று ஒன்று தோன்றுவானேன்? நம்முடைய சகோதரர்களின் கண்ணில் நாம் படுவானேன்? தினசரி அல்லல் தொல்லை பூசல்களில் அகப்பட்டு உழன்று சாவானேன்? பகலெல்லாம், அற்ப விஷயங்களை எண்ணி எண்ணி ஏங்கி, ஆடிப்பாடி, ஓடித் திரிந்து உழைத்து ஓய்வதெல்லாம் வீண்தானே என்று அப்பொழுது தோன்றுகிறது. வானத்திலே எப்பொழுதுமே நட்சத்திரங்கள் இருக்கலாகாதா? வாழ்க்கையின் வியர்த்தத்தையும், துன்பங்களையுமே காட்டும் சூரிய ஒளி ஏன் தோன்றவேண்டும்? மனிதன் நட்சத்திர ஒளியிலேயே, இன்பகரமான வாழ்க்கை நடத்துவதென்பது முடியாத காரியமா?

முடிவு காண முடியாத இம்மாதிரியான பெரும் பிரச்னைகளிலிருந்து தூரத்து மாதா கோயில் மணி கேட்டு மனம் திரும்புகிறது. இரவின் சலனத்தையும் அமைதியையும் புனிதத்தையும் கெடுத்துக்கொண்டு எழுந்த ஓசை அலை அடித்து ஓய்ந்த பின் என் மனத்தில் வேறு ஓர் எண்ணம் உதிக்கிறது.

“இத்தனை அழகும் இன்னும் ஓர் இருபது நாழிகை நேரந்தானே நீடிக்கும் ?” என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளுகிறேன். மறுபடியும் இவ்வழகைக் காணக் குரூரமான பகலில் ஒரு முப்பது நாழிகை நேரம் காத்திருக்கவேண்டுமே! எப்படிக் காத்திருப்பது?” இப்படி இன்பத்திலே பிறந்த ஒரு துன்பத் திகைப்பு.

இந்தச் சிந்தனைக்கு மாற்றாகச் சீனத்துக் கவி ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. வானம் தான் இன்று எவ்வளவு அழகாயிருக்கிறது ! அண்ணாந்து அண்ணாந்து, பார்த்துப் பார்த்து எனக்குக் கழுத்தில் வலி எடுத்து விட்டது. வானத்தின் அழகைச் சற்று நேரமாவது மறைத்து, என் கழுத்துக்கும், கண்ணுக்கும் ஓய்வு கொடுக்கும் மேகங்களே ! உங்களுக்கு என் நன்றி உரியதாகிறது.”

வானத்துக்கும் எனக்கும் இடையே இன்று இரவும் சிறு சிறு மேகங்கள் திட்டுத் திட்டாகப் பவனி வந்து கொண்டு இருக்கின்றன. நட்சத்திர ஒளியிலே அவை மங்கிய வெண்மையாகக் காணப்படுகின்றன. இம்மா திரியான இரவுகளில் தான், அழிக்கும் தெய்வமாகிய ருத்திரன், சாந்த சொரூபியாய், பரமேசுவரனாகப் பார்வதி சமேதராய், ரிஷப வாகனாரூடராய், கைலாஸ பர்வதத் துடன் பூலோக சஞ்சாரம் செய்ய வருகிறார் என்று சுந்தாப் பாட்டி சொல்லுவாள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியாது. ஆனால் அவள் பொய் சொல்லவில்லை என்பது மட்டும் நிச்சயம். இக்காலத்தவர்களாகிய நமக்குத்தான் அவள் சொன்னதை எல்லாம் நம்புவதற்கான தெம்பு இல்லாமல் போய்விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.

இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிறுவனாயிருந்தபோது, எனக்கும் என் தம்பி தங்கைகளுக்கும் சுந்தாப் பாட்டி மாலை வேளையில், மேல் மாடி முற்றத்தில் இருந்து கொண்டு, கைலாஸ பர்வதம் மேகக் கூட்டமாக ஆகாயத்தில் மிதந்து வருவதை அநேகந் தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறாள். அந்தப் பர்வதத்தின் சிகரத்தில் பார்வதி பரமேசுவராள் வீற்றிருந்தது சுந்தாப் பாட்டியின் கிழக் கண்களுக்குத் தெரிந்தது; நன்கு தெரிந்தது என்றே நான் நம்புகிறேன். ஆனால் எனக்கோவெனில், அது அன்றும் தெரியவில்லை ; இன்றும் தெரியவில்லை. என்றாவது தெரியுமா என்பதும் சந்தேக மாகவே இருக்கிறது.

சுந்தாப் பாட்டியின் ஞாபகம் வந்தவுடனேயே என்னுடைய சுற்றுப்புறமெல்லாம் எனக்கு மறந்துபோய் விட்டது. இருளின் ஆழமும் வானத்தின் அமைதியும் நட்சத்திரங்களின் அழகும் திடீரென்று மறைந்து விட்டன. ஒரு கனவு லோகத்திலே நான் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டேன் எட்டாத் தொலையிலுள்ள ஒரு காலத்தை, இன்பமே மூச்சான என் குழந்தைப் பருவத்தை, சுந்தாப் பாட்டி எனும் ஒரு சிறு மந்திரத்தைக் கொண்டு நான் எட்டிப் பிடித்துவிட்டேன். அந்த நாட்களில் வாழ்க்கைப் புயலின் கொடுஞ் சீறல்கள் என் காதில் விழுந்திருக்கவில்லை; அனுபவங்கள் எனும் கற்பாறைகளின் மேல் நான் மோதி முட்டிக் கொள்ள ஆரம்பித்து விடவில்லை. அப்போது உலகத்தையும் அதனுடைய உண்மைச் சொரூபத்தையும் பற்றி நான் அறிந்திருந்த தெல்லாம் என் பாட்டியின் கதைகள் மூலந்தான். அப்போ தெல்லாம் சுந்தாப் பாட்டியினுடைய மடியே எனது சொர்க்கம்; அவள் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதே எனக்குச் சொர்க்க போகம். நட்சத்திரங்கள் நிறைந்த மாலை வானத்தையும் விட அவள் இனிமையானவள். அவள் மறைந்து போய் எவ்வளவோ ஆண்டுகள் கழிந்துவிட்டன எனினும் இன்னும் அவளுடைய ஞாபகமே எனக்கு எல்லையற்ற இன்பம் பயப்பதாக இருக்கிறது.

இப்போதெல்லாம் அவளுடைய உருவம் என் ஞாபகத்துக்கு வருவதில்லை. அவள் இறக்கும்போது அவளுக்கு வயது எண்பதுக்கு மேலிருக்கும் என்று எண்ணுகிறேன் – எனினும் அவள், உலகம் தோன்றுவதன் முன்னரே தோன்றியவள் என்று தான் நான் எண்ணியிருந்தேன். அவள் அறியாதது ஒன்றுமே கிடையாது. ஆல் அமர் வித்து முதல் குஞ்சிதபாதம் வரையில் எல்லாத் தத்துவங்களையும் அவள் அறிந்திருந்தாள். அறிந்திருந்தது மட்டுமல்ல ; எவ்வளவு பெரிய தத்துவத்தையும் கதையில் பிணைத்து, குழந்தை உள்ளத்தைத் தொடும்படியான வகையில் அமைத்துச் சொல்ல வல்லவள் அவள்.

ஏற்கெனவே சொன்னபடி எனக்கு இப்போது அவளுடைய உருவம் ஞாபகத்துக்கு வருவதில்லை. ஆனால் அவள் எனக்குச் சொல்லிய கதைகள் எல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கின்றன. உண்மையிலேயே அந்தி வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கணக்கிட்டாலும் கணக் கிடலாம். ஆனால் சுந்தாப் பாட்டியின் கதைகள் ஓர் எண்ணிக்கையில் அகப்படா. அவைகளின் தொகை உண்மையிலேயே எண்ணிறந்தது தான். எண்ணிக்கையில் மட்டுமின்றி, தன்மையிலும் அவளுடைய கதைகள் ஆச்சரியகரமானவை; சிறப்பானவை. பழங் கதைகளைத் திருப்பிச் சொல்லவும் புதுக் கதைகளைப் புனையவும் அவள் போதிய அறிவும் கற்பனையும் மனோ தர்மமும் பெற்றிருந்தாள். அவளைப்போல உலகில் எந்த இலக்கியத்திலும் எந்த ஏடும் யாருக்கும் கதை சொன்னதில்லை என்றே நான் நினைக்கிறேன்.

காற்றாட மேல் மாடியில் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு படுத்துக் கிடக்கும் இச்சமயம் சுந்தாப் பாட் டியின் கதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவற்றில் சிலவற்றைத் திரும்பவும் (எனக்குள்ளேயேயாயினும்) சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை தட்டுகிறது. விஷயம் என்னவோ கிட்டத்தட்ட ஞாபகம் இருக்கிறது. ஆனால் சுந்தாப் பாட்டியின் கற்பனைக்கும் பாணிக்கும் மேதைக்கும் நான் போவதெங்கே?

“ஒரே ஒரு ஊரிலே” என்றுதான் சுந்தாப் பாட்டி எப்போதுமே தன்னுடைய கதைகளை ஆரம்பிப்பாள். அது எந்த ஊர் என்று அவள் குறிப்பிடமாட்டாள்; பெயர் சொல்ல மாட்டாள். அது ஜனகன் ஆண்ட மிதிலையாக இருக்கலாம். அந்த ராமனே ஆண்ட அயோத்தியாகவும் இருக்கலாம். அல்லது சிலப்பதிகாரம் போற்றும் பூம்புகாராக இருக்கலாம். மாணிக்கச் சோதியாய்ச் சிவன் மன்றில் நின்றாடும் தில்லையம்பலமாகவும் இருக்கலாம். வீதி விடங்கன் பிறந்து தேர் உருட்டிய திருவாரூராகவும் இருக்கலாம். கோசம்பி, பாடலீபுரம், அளகாபுரி, அமராவதி…… புகழும் அழகும் பொருந்திய கணக்கற்ற நகரங்களின் விசேஷ அம்சங்கள் எல்லாம் விசேஷமாக அமையப்பெற்றது அந்த ஊர். ஆனால் ஒன்று. அது இன்றைச் சென்னையுமல்ல; டெல்லியுமல்ல ; லண்டனுமல்ல.

“அந்த ஊரிலே ஒரு ராஜா இருந்தான்’ என்பாள் பாட்டி. ராஜா என்றால்… அவன் சாதாரண ராஜாவா என்ன? இல்லவே இல்லை. அவன் மன்னாதி மன்னன். ஐம்பத்தாறு தேசத்து அரசர்களையும் வென்று, இப் பூவுலகு முழுவதையும் ஒரு குடையின் நிழலிலிருந்து ஆளுபவன். மகா விஷ்ணுவின் அம்சங்கள் எல்லாம் பரிபூரணமாகப் பொருந்தியவன்.

“அந்த ராஜாவுக்கு வெகு நாளாகப் புத்திரபாக்கியம்” இல்லாதிருந்தது என்று கதையைத் தொடர்வாள் பாட்டி. அவளுடைய கதைகளிலே இது ஒரு முக்கியமான அம்சம். புத்திர பாக்கியத்தின் மகிமையையும் முக்கியத்தையும் பூரணமாக அறிந்தவள் பாட்டி ஒருத்திதான். அவளுடைய கதையில் வரும் நாயகர்கள் புத்திர பாக்கியத்துக்காகக் காட்டில் வருஷக் கணக்காகத் தவங் கிடப்பார்கள்.

இந்த ரீதியிலே சுந்தாப் பாட்டியினுடைய கதைகள் ஓடும். சில சமயம் ராஜ குடும்பத்துக்குத் தாழ்ந்த குடும்பங்களைப் பற்றியும் அவள் கதைகள் சொல்லுவதுண்டு…. மலைமேல் ஏறி நின்று கொண்டால் வானத்தின் உச்சியைத் தொட்டு விடலாம் என்று எண்ணும் அசட்டுக் குழந்தையைப் போல நானும் சுந்தாப்பாட்டியின் கதைகள் சிலவற்றை இங்கே சொல்ல முயலுகிறேன். அசட்டு அத்தைப் பாட்டிக் கதைகள், குருட்டு நம்பிக்கைகள் நிறைந்தவை, அர்த்த மற்ற பழம் பொய்க் குப்பல்கள் என்று நாகரிக உலகம் நகைக்கலாம். நகைக்கட்டும். நானும் உலகத்துடன் ஒட்டிக்கொண்டு என் கதைகளைக் கண்டு நகைக்கத் தயாராகவே இருக்கிறேன்.

கா.. சுப்ரமண்யம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *