
தெய்வ ஜனனம் – க. நா. சுப்ரமண்யம்
3
கலை விழாவின் கடைசிநாள் அன்று மாலை. சிற்பக் காட்சியின் பரிசை அளிப்பதற்காக அரசசபை கூடியிருந்தது. பூம்புகார் நகரின் மாந்தர் அனைவரும் அங்கே வந்து குழுமியிருந்தார்கள். பரிசு யாருக்கு என்பதைக் காலையிலேயே அரசன் நகரெங்கும் பறைசாற்றுவித்து விட்டான். நர்த்தன சுந்தரரின் சிருஷ்டிகர்த்தாவான மயனுக்குத்தான் பரிசு என்று ஏகமனதாக சகோதரச் சிற்பிகளும் பதஞ்சலி போன்ற அறிஞர்களும் தீர்ப்பளித்து விட்டார்கள். ஆஸ்தான சிற்பிகள் பலருக்கு யாரோ முன்பின் பெயர் தெரியாத ஒருவன் அப்படிப் பரிசை அடித்துக் கொண்டு போவதுபற்றி ஆத்திரம் மூண்டு மூண்டு வந்தது. ஆனால் அவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.
மயனைக் கௌரவிப்பதற்காகவே சபை கூடியிருந்தது என்று சொல்லலாம். மயனுக்கு அடுத்தபடியாக வஸுதேவனுக்கும் பிராக்ஸிடிலிஸுக்கும் இரண்டு பரிசுகள் அளிப்பதாக மன்னர் தீர்மானித்திருந்தார். சபையில் அவர்களும் வீற்றிருந்தார்கள். நர்த்தன சுந்தரரைக் காட்சிச் சாலையில் போய்ப் போய்ப் பார்த்து உள்ளம் பறிகொடுத்திருந்த மாந்தர்கள் எல்லோரும் அதனுடைய சிருஷ்டி கர்த்தாவைக் காண ஆவலுள்ளவர்களாக வந்திருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
தன்னுடைய கௌரவ ஆசனத்தில் மயன் தான் எவ்வளவு கம்பீரமாக வீற்றிருந்தான்! பிராக்ஸிடிலிஸ், வஸுதேவன் இவர்கள் அருகில் அவனை வைத்துப் பார்க்கும் போது அவன், அனுபவம் முதிராத இளம் பிள்ளையாகவே காட்சி அளித்தான். ஆனால் அவனுடைய சிருஷ்டியோ வெனில்-அதைப் போற்றுவதற்குக் கவிகள்தான் பிறந்தாக வேண்டும். முதல்தரமான கவிகளின் வார்த்தைகளே அந்தச் சிற்பத்தின் சிறப்பையும் மேன்மைகளையும் வெளியிட முடியும்.
கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்து தனக்குச் செய்யப்பட்ட மரியாதைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டான் மயன். ஆனால் அவனுடைய ஞாபகம் வேறு எங்கேயோ இருந்தது. மன்னனே வந்து கலைஞனுக்கு மாலை அணிவித்துப் பரிசான பொன் முடிப்பையும் கையில் தந்து, உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொன்னபோது கூட அவன் கவனம் முழுவதும் அங்கில்லை.
நகரத்துப் பெண்களுக்கென ஒதுக்கி விடப்பட்டிருந்த இடத்திலும் அவளைக் காணவில்லை. அவன் நான்கு நாட்களாகவே அவளை மறுபடியும் சந்தித்து ஒரு வார்த்தை கேட்டுவிட வேண்டும் என்று எண்ணியவனாக நகர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டான். பதஞ்சலியோ முதல் நாள் இரவு தாம் கூறிய புத்திமதியையே திரும்பத் திரும்பக் கூறினார். அவள் பெரிய குலத்துதித்த பெண் என்று மட்டும் சொன்னாரே தவிர, மற்றப்படி வேறு எவ்விதமான விவரமும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவளும் அவனைக் காணவே விரும்பியதாகவும் அவர்கள் சந்திக்கக்கூடாதென்று தாமே தடுத்துவிட்டதாகவும் பதஞ்சலி கூறினார். அவர்கள் சந்திப்பதால் கெடுதி நேருமே தவிர, நன்மை எதுவும் நேராது என்று தமக்குத் தோன்றுவதாகவும் சொன்னார் அவர்.
எது எப்படியானாலும் அவளின்றி வாழ்க்கை நடத்துவது முடியாத காரியம் என்று மயன் தீர்மானித்து விட்டான். நான்கு நாட்களாகப் பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் உலாவும் இடங்களில் எல்லாம் அவன் பைத்தியக்காரன் போல, “சித்திராங்கி, சித்திராங்கி” என்று வாய் முணுமுணுக்கத் தேடித் திரிந்துவிட்டான். அவன்
கண்ணில் சித்திராங்கி படவேயில்லை. பிடிவாதமாக அவளை மறுபடியும் சந்தித்து, நேரில் மனம் விட்டுப் பேசி, அவளை மணப்பது என்று மயன் தீர்மானித்தான். அதை நிறைவேற்ற அவள் அவன் முன் எதிர்ப்பட்டால் தானே !
சபையில் பெரிய குலத்து ஸ்திரீகளுக்கென ஒதுக்கி விடப்பட்டிருந்த பிரதேசத்தில் அவள் உருவம் கண்ணில் படுகிறதா என்று மறுபடியும் ஒருதரம் தன் கண்களைக் கொண்டு துழாவினான். அவளையும் காணோம்; அவளுடைய ஸகியையும் காணோம். தன் மனத்தில் இருந்தது போன்ற ஆவல் அவளுடைய மனத்திலும் இருந்திருக்குமே யானால் அவள் வராமல் இருந்திருப்பாளா என்று மயன் யோசித்தான்.
திடீரென்று இன்னொரு யோசனை அவன் மனத்தில் தோன்றியது. வீரசேனன் என்னும் துஷ்டனைப்பற்றி அவன் இந்த மூன்று நான்கு நாட்களில் விசாரித்து அறிந்து கொண்டிருந்தான். அவன் சோழ மன்னனின் சகோதரியின் புத்திரனாம். தன்னுடைய குமாரத்தியை அவனுக்குத் தான் மணம் செய்விக்கவேண்டும் என்று அரசன் எண்ணியிருந்தாலும் அந்த எண்ணத்துக்கு விரோதமா யிருந்தவள் ராஜ குமாரி தான் என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். வீரசேனன் ஸ்திரீலோலன் ; அயோக்கியன் ; துஷ்டன்; தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள எதையுமே துணிந்து செய்வான் என்று ஊரார் அவனைத் தூற்றினார்கள். இவ்வளவு கெட்ட பெயர் உள்ளவனை அந்த ராஜகுமாரி மணம் புரிய மறுத்தது நியாயந்தான் எ ன்று மயனுக்கும் தோன்றியது. வீரசேனனை மயன் நேருக்கு நேர் சந்தித்ததில்லை எனினும் அவனுடைய ஆட்களின் கைத்திறனைக் கண்டிருந்தான். அவனுக்கிருந்த கெட்ட பெயர் நியாயமானது என்றுதான் அவ னுக்கும் தோன்றிற்று.
சபையில் வீரசேனன் எங்கிருக்கிறான் என்று கண்டு கண்கள்
கொள்ள மயனுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. அரசனின் உயர்ந்த சகோதரியின் மகன் சற்று உயர்ந்த ஆசனத்திலேயே சபையின் மேல் அமர்ந்திருந்தான். அவன், மாடிச் சாளரத் திரை மூலம் தெரிந்த எதையோ உற்றுப் பார்த்துக்கொண் டிருப்பதை மயன் கவனித்தான்.
மயனும் அந்தச் சாளரத் திரைப்பக்கம் தன் கண்ணை ஓட்டினான். மெல்லிய பட்டுத் திரைக்கப்பால் இரண்டு பெண்களின் உருவம் தெரிந்தது. ஒருத்தி திரையைச் சற்றே விலக்கிவிட்டுத் தன்னையே கண்களால் பருகிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தான். அவன் உடம்பில் புல்லரித்தது. அந்தக் கண்கள்! எத்தனையோ கோடி கண்களிலும் அவற்றைத் தனியாகக் கண்டு கொள்ளக் கூடிய உள்ளம் படைத்தவன் அன்றோ மயன்? சாளரத் திரைக்குப் பின்னால் இருந்தது சித்திராங்கிதான்; சந்தேகமில்லை. அரச குடும்பத்தவருக்கென்று ஏற்பட்ட இடத்தில் அவள் இருந்தாள்; மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பாளோ அவள் என்று மயன் மனத்தில் சந்தேகம் உதித்தது. அரச குமாரியாகவே இருந்து விட்டால்? கேவலம் சிற்பிக்கு அரச குமாரி கிட்டுவாளா? பதஞ்சலி தன்னைத் தடுத்ததெல்லாம் இதனால்தான் இருக்குமோ? என்று மயன் யோசித்தான்.
இருக்கலாம். எனினும் தன் உடம்பிலும் அரசர்களின் ரத்தம் ஊறி ஓடுகிறது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான் மயன். புஷ்பகத்தீவின் மன்னன் தன்னை அங்கீகரிக்க மறுத்துவிட்டான் என்றால் அதனால் என்ன வந்தது? உடம்பில் உள்ள ரத்தமும் முறிந்து போயிருக்குமா என்ன?
மறுபடியும் ஒருதரம் மேல்மாடிச் சாளரத் திரைப் பக்கம் அவன் தன் கண்களை ஓட்டினான். அவளை அடைவதற்கு வழி தேடியே யாகவேண்டும்; எது எப்படி யானாலும் சரி என்று அவன் தீர்மானித்தான்.
மன்னன் தன்னை நோக்கி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தன் கனவுகளிலிருந்து விழித்துக் கொண்டான் மயன்.
“தங்களுடைய சிற்பத்துக்கு விலைகொடுத்து வாங்குவ தென்பது முடியாத காரியம் என்பது உண்மைதான். எனினும் பொன்னும் மணியும் தங்களுக்கு வேண்டியதைக் கொடுத்து அந்த நடன சுந்தரரை என்னுடைய சொத்தாக்கிக் கொள்ள நான் விரும்புகிறேன் என்றான் சோழ மன்னன்.
“எனக்குப் பொன்னும் மணியும் தேவையில்லை” என்றான் மயன்.
“நர்த்தன சுந்தரரைக் கண்டு கற்பனையில் சிருஷ்டித்துவிட்ட மகானுக்கு எதுவும் தேவையிராது என்று எனக்கும் தெரிகிறது. எனினும் எளியவனான நான் தாங்கள் கேட்டதை எல்லாம் கொடுப்பேன். இந்த விக்கிரகத்துக்கு ஈடாக வேண்டியதைக் கேளுங்கள் ” என்றான் மன்னன்.
துணிகரமான ஓர் எண்ணம் மயன் மனத்தில் உதித்தது. திரும்பி ஒருதரம் சாளரத்திரைக்குப் பின்னால் நின்ற யுவதியைக் கண்ணெடுத்துப் பார்த்தான். அதே சமயம் யுவதியும் திரையைச் சற்று அதிகமாகவே விலக்கி, சபையில் வீற்றிருந்த சிற்பியை நோக்கிக்கொண்டிருந் தாள். மறுபடியும் ஒருதரம் இரண்டு காதலர்களுடை கண்களும் சந்தித்தன. தன்னுடைய துணிகரமான எண்ணத்தில் திடம் அடைந்தவனாக மயன் எழுந்து நின்றான்.
“அரசே! என்னுடைய நர்த்தன சுந்தரரை விற்க நான் துணியமாட்டேன். அது தகாத காரியம் என்றே எனக்குத் தோன்றும். ஆனால் ஒரே ஒரு பொருளுக்கு அதையும் நான் விற்கத் தயாராக இருப்பேன் என்றான். என்ன பொருள் அது? சொல், தருகிறேன் ” என்றான் மன்னன்.
“என்ன பொருள் நான் வேண்டுவது என்று அறிந்து கொள்ளாமல் ‘தருகிறேன்’ என்று வாக்களித்து விடுவது சுலபம். ஆனால் அறிந்தபின்…” என்றான் மயன்.
மயனுடைய மனத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த பயங்கரமான எண்ணத்தை ஊகித்து அறிந்துவிட்டார் பதஞ்சலி. தம் ஆசனத்திலிருந்து எழுந்திருக்க முயலுபவர் போல ஒரு வினாடி இருந்தார். அவர் கை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. ஆனால் விதி விட்டவழி விடட்டும் என்ற முடிவுக்கு வந்தவர் போல அடுத்த வினாடியே அவர் மறுபடியும் சாந்தமடைந்து விட்டார்.
சபையில் எல்லோரும் அறிய மறுபடியும் மன்னன் “தருகிறேன் ” என்று வாக்களித்தான்.
தங்கள் குமாரி சித்திராங்கியை எனக்கு மணம் செய்து தரவேண்டும் என்று மயன் கேட்டான். அதைக் கேட்டுவிட்டு அண்ணாந்து சாளரத்திரையைப் பார்த்தான். திரை காற்றில் ஆடியதோ; இல்லை, அதற்குப் பின்னிருந்த ஸ்திரீதான் அசைந்தாளோ, அந்த உருவம் ஒருதரம் நடுங்கி நிலைத்தது. சித்திராங்கியின் கண்கள் இன்னமும் தன்னையே கவ்விப் பருகிக்கொண்டிருந்தன என்பதை மயன் கண்டான்.
மயன் மறுபடியும் பூலோகத்துக்கு வந்து நினைவு தெளிந்து தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்த போது அவன் திடுக்கிட்டு விட்டான். அரசசபை அலங்கோல சபையாக இருந்தது. வீரசேனன் தன் வாளை உருவிக்கொண்டு மயனை நோக்கிப் பாய்ந்து வந்தான். அவனைப் பதஞ்சலி தடுத்தார். மன்னனோ கோபத்தால் மீசை துடிக்கப் துடிக்கப் பல்லை நறநற வென்று கடித்துக் கொண்டு மயனை நோக்கி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய முதல் வார்த்தைகள் மயன் காதில் விழவில்லை. விழுந்த வார்த்தைகள் இவ்வளவு தான். “ஊர், பெயர் தெரியாத அற்பப் பதர்களுக்குக் கௌரவம் அளிப்பது தவறு என்று சாஸ்திரம் இதனாலன்றோ விதித்திருக்கிறது? மந்திரி ! நமது வீரர்களை அனுப்பி இவனையும் இவனுடைய சிற்பத்தையும் நமது நகர் எல்லைக் கப்பால் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வரச் சொல்லு. இன்றே செல்லட்டும். இனி நம் நகரில் இவன் அடி வைத்தானானால் தன் உயிரை இழப்பான்; நிச்சயம்.”
பதஞ்சலி குறுக்கிட்டு மன்னனைச் சாந்தப்படுத்தினார். “அவனை எல்லை கடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். நாளை மாலைக்குள் அவன் வெளியேறி விடுவான்” என்றார்.
பதஞ்சலியை உற்று நோக்கினான் மன்னன்.
” சரி ” என்றான்.
சபை கலைந்தது.
“மயனுடன் சிற்பக்கலையும் சோழ நாட்டை விட்டு வெளியேறிவிடும் ” என்று வஸுதேவன் உரக்கக் கூறியது அரசன் உள்பட எல்லோர் காதிலும் விழுந்தது. “எங்கள் நாட்டில் கலைஞர்களை அற்பப் பதர்கள் என்று சொல்லமாட்டார்கள்” என்றான் பிராக்ஸிடிலிஸ். அரசன் மகளைக் காதலிப்பது அப்படி என்ன, மனிதன் செய்யத்தகாத குற்றமா?” என்றான் பதுமன்.
சாளரத்திரைக்குப் பின்னால் உருவம் இல்லை என்று மயன் கண்டான். ஆனால் தான் கேட்ட வரத்தை அவள் மனப்பூர்வமாக ஆதரித்திருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். சிந்தனையில் ஆழ்ந்தவனாய் மயன் பதஞ்சலியைப் பின் பற்றினான்.
அரச சபையை விட்டுக் கிளம்பிய மயனும் பதஞ்சலியும் மௌனமாகவே ஆற்றங்கரை யோரமாகச் சென்ற ராஜபாட்டையிலே ஆசிரமத்தை நோக்கி நடந்தார்கள். [
துறவியின் மனத்திலும் வாலிபனுடைய மனத்திலும் விவரிக்க வொண்ணாத சிந்தனைகள், உணர்ச்சிகள் கொந்தளித்து அலை மோதிக் கொண் டிருந்தன.
பதஞ்சலி ஆசிரமத்துக்கு இப்பால் இருந்த படித் துறையை அடைந்தவுடனே அந்த மௌனத்தைத் தாள மாட்டாமல் மயன் சொன்னான்: “துரதிருஷ்டசாலியாகிய நான் வந்து சாந்தியும் ஆனந்தமும் நிறைந்திருந்த தங்களுடைய ஆசிரமத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சிலநாளிலேயே அசுசியாக்கி விட்டேன்; பாழாக்கி விட்டேன். அந்தப் பாவத்துக்கு இப்போது என்ன பரிகாரம் செய்வது என்றுதான் எனக்குத் தெரியவில்லை.”
இதற்கு நேரடியாகப் பதஞ்சலி எதுவும் பதில் சொல்லவில்லை. தம் மனத்திலிருந்ததைப் பற்றிச் சொன்னார். “நீ மட்டும் இன்னும் சற்றுப் பொறுமையுடன் இருந்திருப்பாயானால்……”
அவர் இப்படிச் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டிருக்கவே மயனுக்குப் பொறுமையில்லை. அவர் அவ் வாக்கியத்தை முடிக்குமுன் குறுக்கிட்டான் : ” ஸ்வாமி! தாங்கள் துறவியேயானாலும் என்னிடம் வைத்துள்ள பாசத்தால் தெய்வ சித்தம் இது என்பதையும் மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்'” என்றான். “என் மனத்தைக் கொள்ளை கொண்டவள் அரச குமாரியாகவே இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்குத் தோன் றியவுடனேயே அசட்டு ஆசை என்னைத் தூண்டிற்று. என் அதிர்ஷ்டத்தைப் பரீக்ஷை செய்து பார்த்தேன். நேர்முகமாகவே அரசனை வரங்கேட்டுப் பார்த்து விட்டேன். இனி ஆசைப்படவும் வேண்டியதில்லை ; ஏமாறவும் வேண்டிய தில்லை அல்லவா?”
பதஞ்சலி சொன்னார்: “நடந்தது என்னமோ நடந்து விட்டது. அதைப்பற்றி இனியும் பன்னிப் பன்னிப் பேசிக் கொண்டிருப்பானேன்? பேசித்தான் பயன் என்ன?”
“நான் இப்படி வரங்கேட்டதைச் சித்திராங்கியும் ஆமோதித்திருப்பாள் என்றே நான் நம்புகிறேன்” என்றான் மயன் திடமாக.
‘இரண்டு அசட்டுச் சிறுசுகள் !’ என்று சொல்லித் துக்கம் நிறைந்ததோர் புன்னகை புரிந்தார் பதஞ்சலி. “நடனராஜனே! நர்த்தன சுந்தரா! உன் குழந்தைகளை இனியும் சோதிக்காதே!” என்று வானத்தை நோக்கிக் கைகூப்பிச் சொன்னார்.
சற்று நேரம் மறுபடியும் அவர்களிடையே மௌனம் நிலவியது. இந்தத்தடவை மௌனத்தைக் கலைத்தவர் பதஞ்சலிதான். “போனதெல்லாம் போகட்டும். இனிச் செய்ய வேண்டியதைக் கவனிப்போம். நாளை மாலை வரையில் தான் நீ புகார் நகரிலோ அதன் சுற்றுப்புறங்களிலோ தங்கலாம். அதற்குப் பின் தங்கினால் மறுபடியும் அரசன் கோபத்துக்கு ஆளாவாய்.”
“நான் யாருடைய கோபத்துக்கும் பயப்படவில்லை” என்றான் மயன். “என்னுடைய வாழ்க்கையில் கழிந்து விட்ட இருபத்தைந்து வருஷங்களையும் யாருக்கும் பயப்படாமலே கழித்துவிட்டேன். இனிமேலும் பயப்படமாட்டேன். ஆனால் நாளை வரையில் எனக்கு அவகாசம் எதற்கு? நான் இன்றிரவே கிளம்பிவிடுகிறேனே !”
“அதெப்படிச் சாத்தியமாகும்?” என்றான் மயன்.
“சாத்தியமாகாமல் என்ன?”
“தங்கள் ஆசிரமத்தில் என் குதிரை தயாராய் இருக்கிறது. இடையிலே என் வாள் இருக்கிறது. பூம்புகாருக்குள் பதினைந்து இருபது நாட்களுக்கு முன் வந்தது போலவே யார் கண்ணிலும் படாமல் திரும்பிவிடு கிறேனே!”
“இடையில் நடந்துவிட்டதை எல்லாம் உன்னால் மறந்துவிட முடியுமா?” என்றார் பதஞ்சலி.
மயன் சற்றுத் தயங்கினான்.
“என்ன ஸ்வாமி இது? தாங்களும் என்னைச் சோதிப்பது என்று தீர்மானித்து விட்டீர்களா?” என்றான்.
இரக்கமான அன்பு ததும்பும் கண்களுடன் மயனை ஒரு கணம் நோக்கினார் பதஞ்சலி. அப்புறம் சொன்னார் : “இவ்வளவு நாள் எனக்குக் கிடைக்காத ஒரு பொக்கிஷத்தை நான் இப்போது பெற்றுவிட்டேன்- உன் மூலம். உன்னுடன் செல்லுகிறார் நர்த்தன சுந்தரர். அவருடன் உலகின் கோடிவரையில் நானும் செல்லத் தயார்.”
மயன் திகைத்துப்போய் அவரைப் பார்த்தான். “ஸ்வாமி! நீங்கள் சொல்லுவது சரியல்ல. தவிரவும் நாடோடியான நான் இந்த நடன ராஜ விக்கிரகத்தை என்னுடன் தூக்கிக்கொண்டு அலைவதென்பது எப்படிச் சாத்தியமாகும்? அதைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டுப் போவதாகவே நான் தீர்மானித்துள்ளேன்” என்றான்.
“நான் உன்னுடன் புகாரை விட்டு வெளியேறிவிடுவதாகத் தீர்மானித்து விட்டேன். இன்று கலைஞனை நகரை விட்டு விரட்டும் மன்னன் நாளைக்குத் துறவிகளை விரட்ட மாட்டான் என்பது என்ன நிச்சயம்? நம்முடன் நர்த்தன சுந்தரர் விக்கிரகம் வரட்டும். வேறு ஓர் ஊரில் வேத சாஸ்திர ஆகமப்படி அந்த விக்கிரகத்தை வைத்துக் கோயில் கட்டி, ஆகவேண்டியதைச் செய்ய ஏற்பாடு செய்யலாம்” என்றார் பதஞ்சலி.
“அந்தப் பணியில் என்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் தாழ்மையுடன் வேண்டிக் கொள்ளுகிறேன்” என்று ஓர் இனிமையான பெண் குரல் அவர்கள் அருகில் கேட்டது.
மயனும் பதஞ்சலியும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். புன்சிரிப்புடன் அவர்கள் அருகில் வந்து நின்றாள் ராஜ குமாரி சித்திராங்கி.
ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் மயன் “சித்தி ராங்கி ……!” என்றான்.
“பதஞ்சலியும் பிரமித்துப் போய்விட்டார்”
“இதென்ன குழந்தாய்?” என்று நாக்குழறக் கேட்டார்.
சித்திராங்கி புன்சிரிப்புடன் அமைதியாகப் பதில் அளித்தாள்: “நான் என் நாதனாக எண்ணி வரித்து விட்டவர் புகாரை விட்டு நீங்கிய பின் எனக்கு மட்டும் இங்கே என்ன வேலை? நானும் அவருடன் நீங்குவதாகத் தீர்மானித்துவிட்டேன்.”
தீர்மானமும் எக்களிப்பும் தொனித்த அந்த வார்த்தைகளைக் கேட்டு மயன் புளகாங்கிதமடைந்தான். ஆனால் அந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தன்பொருட்டு அவள் செய்யும் தியாகம் மகத்தானது என்று அறிந்து அவன் ஆச்சரியப்பட்டான். அவளுடைய அன்பின் ஆழத்தைக் கண்டு அவன் ஆனந்தங்கொண்டான். திரும்பிப் பதஞ்சலி மாமுனியின் முகத்தை ஒருதரம் பார்த்தான். எப்போதும் ஆசாபாசங்கள் தீர்ந்து நிச்சலமாக இருக்கும் அவருடைய உள்ளத்திலே கிளம்பியிருந்த புதுமையான புயல் அவருடைய முகபாவத்தில் தெரிந்தது.
சித்திராங்கியைப் பார்த்து மயன் சொன்னான். “அரச குமாரி! உன் அந்தஸ்தும் மேன்மையும் தெரியாத போது நான் தைரியமாக உன்னைக் கண்ணெடுத்துப் பார்த்துச் சகஜமாக வார்த்தையாடி விட்டேன். கேவலம் நாடோடியான சிற்பி நான். உன்னை என் மனத்தாலும் சிந்திக்க லாயக்கற்றவன். துரதிருஷ்டசாலியான என்னை மறந்துவிட்டு, உன் பதவிக்கும் அந்தஸ்துக்கும் தக்கபடி நடந்துகொள்ளுவாய். அதுதான் உத்தமம்; இந்தப் புத்தி மதியைத்தான் உனக்கு உன் குருவான பதஞ்சலியும் சொல்லுவார்.”
“நாதா!’ என்று ஒரு புன்னகையுடன், உரிமையுள்ளவள் போல மயனை அழைத்துச் சொன்னாள் யுவதி. “நாதா! தாங்கள் இன்னும் பதஞ்சலி மாமுனிவரைச் சரியாக அறிந்துகொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். என் மனத்துக்கும், உள்ளத்துக்கும் விரோதமாக நான் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு நாளும் சொல்லமாட் டார். தவிரவும் அவருக்கு வெகு காலமாக என்னைத் தெரியும். நான் ஒரு காரியத்தைச் செய்வது என்று மனம் வைத்து விட்டேனானால் என் தீர்மானத்தை அந்தப் பிரும்ம தேவனாலும் மாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும்.”
“அதை இவனும் கூடிய சீக்கிரமே அறிந்துகொண்டு விடுவான்” என்று மயனைச் சுட்டிக்காட்டிப் பதஞ்சலி சொன்னார். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்ற சந்தோஷம் அவர் குரலில் தொனித்தது. ஆனால் அந்தச் சந்தோஷத்துக்கு மாற்றாக அவர் மனத்தில் என்றுமில்லாத ஓர் ஏக்கமும் அதைரியமும் அடுத்த வினாடியே வந்து குடி புகுந்தன. “நாம் மூவரும் சேர்ந்திருப்பதை அரசராவது அவரது ஆட்களாவது கண்டுவிட்டார்களானால் அதற்கப்புறம் நாம் உயிருடன் தப்புவது சிரமமாகிவிடும்” என்றார் பதஞ்சலி.
“கிழவருக்கு இந்த வயசில், இப்போதுதான் உயிர் மேல் ஆசை வந்திருக்கிறது!” என்று சொல்லிக் களுக் கென்று நகைத்தாள் சித்திராங்கி.
“கேலி செய்துகொண்டு நிற்பதற்கேற்ற தருணமல்ல இது. நான் போய்ப் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்” என்றார் பதஞ்சலி. இன்று இரவு நிலவு இருபது, இருபத்திரண்டு நாழிகை வரையில் உண்டு. நிலவு மறையும் முன் கொள்ளிடத்தைத் தாண்டி விட்டால் தான் நல்லது.”
சித்திராங்கியையும் மயனையும் தனியே ஆற்றங்கரை மேடையில் விட்டுவிட்டு அவர் ஆசிரமத்துக்குள் போனார். பிரயாணத்துக்கு ஆயத்தம் செய்ய அவருக்கு இரண்டு நாழிகை நேரத்துக்கதிகமாகவே பிடித்தது. அந்த இரண்டு நாழிகை நேரமும் காதலர்கள் இருவருக்கும் ஒரு வினாடி போலக் கழிந்தது.
பதஞ்சலி முனிவர் நான்கு குதிரைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ராஜகுமாரியும் மயனும் அவரவர்களுடைய குதிரைகளின் மேல் அமர்ந்து கொண்டார்கள். மூன்றாவது குதிரையின்மேல் பதஞ்சலி முனிவரின் சிஷ்யன் ஒருவன் குதிரை சவாரி செய்யப் பழக்கப்பட்டவன்- நடனராஜ விக்கிரகத்துடன் ஏறி உட்கார்ந்து கொண்டான். ஜடாமகுடதாரியான பதஞ்சலி ஒரு தாவுத் தாவி நாலாவது குதிரையின் மேல் ஆரோகணித்தார். அவருடைய திறமையைக் கண்டு மயன் வியந்தான்.
அவன் வியப்புக்கு, “பூர்வாசிரமத்தில்…” என்று முணுமுணுத்துப் பதஞ்சலி பதில் சொன்னார்.
“தாத்தாவுக்கு வாலிபம் திரும்பிவிட்டது!” என்று கைகொட்டிச் சிரித்து அவரைக் கேலி செய்தாள் சித்தி ராங்கி.
நிலவு மறைய வெகு நேரம் இருக்கும்பொழுதே அவர்கள் கொள்ளிடத்தின் கரையை எவ்வித இடையூறுமின்றி அடைந்து விட்டார்கள். கொள்ளிடக் கரையில் வீரசேனனும் அவனுடைய ஆட்களும் அவர்களை மேலே செல்ல வொட்டாமல் தடுத்துவிட வேண்டுமென்று வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
நிலவு வெளிச்சத்திலே தன் இஷ்ட நாயகனுக்கும் பத்துப் பன்னிரண்டு துஷ்டர்களுக்குமாக நடந்த அந்த வாட்போரைச் சித்திராங்கி தன் ஆயுள் உள்ள அளவும் மறக்கவில்லை. அவள் கிழவியாகிப் பேரன் பேத்திமார் எடுத்த பிறகும் கூட அந்த வாட் போரை விவரித்துக் கதை சொல்லும்போது, அவள் உடலும் உள்ளமும் நடுங்கும். தடியூன்றித் தள்ளாடி நடக்க மாட்டாமல் நட மாடிக் கொண்டிருந்த தங்கள் தாத்தாவா அன்று ஒருவராகப் பத்துப் பன்னிரண்டு பெயர்களைச் சமாளித்தார் என்று நம்பமாட்டாமல் குழந்தைகள் வியந்தன. தெய்வந் தான் அன்று அந்த இளங் காதலர்களுக்குத் துணை புரிந்திருக்க வேண்டும். வாள் போரின் முடிவில் வீரசேனனும் அவனுடைய ஆட்களில் மூவரும் மடிந்து விழுந்துவிட்டார்கள். எஞ்சியவர்கள் சமாளிக்கமாட்டாமல் ஓடி விட்டார்கள்.
வீரசேனன் விழுந்ததைக் கண்ட பதஞ்சலி “சோழ நாட்டைப் பிடித்திருந்த பீடை இன்றுடன் ஒழிந்தது” என்றார்.
அவர்கள் மேலே செல்வதைத் தடுக்க வேறு யாரும் முன் வரவில்லை. கொள்ளிடத்தின் அக்கரை சேர்ந்தவுடன் புகார் நகரம் இருந்த திக்கை நோக்கிப் பதஞ்சலி சபித்தார். “கலையையும் அறிவையும் ஒருங்கே விரட்டி அடித்து வெளியேற்றிய அந்தப் பூம்புகார் கூடிய சீக்கிரமே இருந்த சுவடு தெரியாது அழியட்டும் !”
“ஸ்வாமி!” என்று கைகூப்பினாள் சித்திராங்கி. “என் பிறப்பிடம் அதுதான்” என்று துக்கம் ததும்பக் கூறினாள்.
“அதை மறந்து விட்டு ஆத்திரத்தில் சபித்து விட்டேன் நான்” என்று ஆதங்கத்துடன் கூறினார் பதஞ்சலி. சிறிது யோசித்துவிட்டு “நகரம் அழியட்டும்; அழிந்தாலும் அதன் புகழ் என்றும் நின்று நிலவும்” என்றார்.
கதை அவ்வளவுதான் என்றாள் சுந்தாப் பாட்டி. பதஞ்சலி நல்ல நாளில் நல்ல யோகத்தில் மயனுக்கும் சித்திராங்கிக்கும் விவாகம் செய்து வைத்தார். நடன ராஜனைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். உலகத்துப் பாமர மக்களுக்கு அன்று முதல் தெய்வம் ஜனனமாகி விட்டது.”
“ஏன் பாட்டி? எனக்கு இரண்டொரு சந்தேகங்கள் தோன்றுகின்றன” என்றேன் நான்.
“படிச்சவனோல்லியோ, சந்தேகத்துக் கென்ன குறைச்சல். என்ன சந்தேகம்? கேளு சொல்றேன்” என்றாள் பாட்டி.
“சோழ நாட்டு அரசன் தன் மகளைத் திருப்பி அழைத்துக் கொள்ளவே இல்லையா?” என்றேன்.
“இதென்ன அசட்டுக் கேள்வி?” என்று என்னைக் கடிந்தாள் பாட்டி. “ஒரே மகள்; அழைத்துக் கொள்ளாமலும் இருந்திருப்பானா? தன் இஷ்டத்துக்கு மாறாகக் கலியாணம் செய்து கொண்டாளே” என்று முதலில் ரொம்பவும் கோபமாகத்தான் இருந்திருப்பான். அது தீராத கோபமாகவும்தான் அப்போது தோன்றியிருக்கும். ஆனால் அது தீருவதும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அங்கீகரிப்பதும் சகஜந்தானே! தவிரவும் கோயில் கட்டச் சோழன் கொடுக்காவிட்டால் பதஞ்சலியிடம் பணம் எங்கிருந்து கிடைத்திருக்கும்? நீதான் சொல்லேன்.
அது சரி என்று நான் ஒப்புக்கொண்டேன். “என்னுடைய இரண்டாவது சந்தேகம் இதுதான். நடன ராஜருக்குக் கோயில் கட்டியபின் தான் தெய்வமே உலகில் தோன்றியது என்கிறாயே நீ ? அது சரியா ?”
இதோ பார். அனாதி காலமாகவே தெய்வம் உண்டு என்பது சரிதான். ஆனால் தெய்வத்துக்கு உருவம் ஏற்படாதவரையில், அறிவாளிகளைத் தவிர மற்றவர்கள் தெய்வத்தைப் பற்றிச் சிந்தனை செய்யவே முடிந்திராது. என்னையும் உன்னையும் போன்ற பாமரர்களுக்குத் தெய்வம் ஜனனமானது அது உருவமான போது தான்” என்றாள் பாட்டி.
“நடன ராஜன்தான் முதல் தெய்வ உருவம் என்கிறாயே! அது எப்படி?” என்றேன்.
“எப்படி என்றால், அப்படித்தான். நடனராஜன் தோன்றிய பின்தான் தெய்வத்துக்கு உருவம் கொடுக்க முடியும் என்று மனிதர்களுக்குத் தெரிந்தது. பிறகு தங்கள் தங்கள் இஷ்டப்படி தெய்வத்துக்கு உருவம் கொடுத்துப் பூஜிக்கத் தலைப்பட்டார்கள். கிருஷ்ணன் என்றும் பாண்டுரங்கன் என்றும் சுப்பிரமணியன் என் றும் விதவிதமான உருவங்கள் தெய்வத்துக்கு ஏற்பட்டன ” என்றாள் பாட்டி.
“அப்படியானால் தெய்வத்துக்கு ஏற்பட்ட முதல் கோயில் நடனராஜருடையது தான், இல்லையா?”
“ஆமாம். சந்தேகமென்ன?” என்றாள் பாட்டி. “விக்கிரக ஆராதனை அநாகரிகமானது என்கிறார்களே?” என்று கேட்டேன் நான்.
“அப்படிச் சொல்லுகிறவர்கள் ரொம்ப நாகரிகமானவர்களோ, அல்லது அறிவாளிகள்தானோ?” என்றாள் சுந்தாப் பாட்டி.
நான் பதில் பேசவில்லை.



