காந்தி யார் ?
வெ. சாமிநாத சர்மா

எழுபத்திரண்டு சதுர மைல் விதீரணமுள்ள வாழ்க்கை யென்னும் யுத்த மைதானத்தில், அன்பு, அஞ்சாமை என்ற இரண்டு ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, முகத்திலே புன்சிரிப்புத் தவழ, கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு போர் வீரனாகக் காட்சியளிக்கிறார் காந்தியடிகள் இன்று நமக்கு. இந்த எழுபத்திரண்டு வருஷ காலத்தில், அவர் எத்தனையோ போர்களை நடத்தி யிருக்கிறார்; எத்தனையோ பேரைத் தாக்கியிருக்கிறார்; எத்தனையோ பேரால் தாக்கப்பட்டுமிருக்கிறார். ஆனால் அவர், தமது முகத்தில் சலிப்புக் காட்டியதோ, அகத்தில் வன்மம் கொண்டதோ கிடையாது. யுத்தத்தில் சகஜமாக ஏற்படக் கூடிய அநேக காயங்களை அவர் பட்டிருக்கிறார். ஆனால், எல்லாம் மார்பிலே தான். அவருடைய முதுகிலே ஒரு வடுவைக் கூடக் காண முடியாது. அப்படியே, எதிரிகளைத் தாக்குகிறபோதும், அவர்களுடைய மார்பிலேதான் காய முண்டுபண்ணினாரே தவிர, அவர்களுடைய முதுகுப்பக்கம் ஓர் அடி கூடக் கொடுத்ததில்லை. மற்றும், சத்துருக் களின் தனிமையையோ, அசதியையோ, அசட்டு அகங்காரத்தையோ அவர், தமது வெற்றிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டதில்லை. எதிரிகளுடைய பலவீனத்தின் மீது வெற்றிக் கொடி நாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் சந்தர்ப்பவாதியாக இருக்கவில்லை; இருக்க மறுத்துவிட்டார். ஒரு யுத்த வீரனுடைய லட்சணத்தினின்று அணுவளவு பிறழவும் அவர் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட யுத்த வீரனாகிய அவர், இன்று, தமது ஜீவன யாத்திரையின் எழுபத்து மூன்றாவது மைற்கல்லையடைந் திருக்கிறார். அவரை நாம் வாழ்த்தி வணங்குவோமாக.

காந்தியடிகளின் வாழ்க்கையைச் சதுரமைல் கணக்கில் தான் மேலே நாம் வருணித்திருக்கிறோம். ஏன் தெரியுமா? அவருடைய வாழ்க்கை, எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகிக் கொண்டு போகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அகலமாகியும் கொண்டுபோகிறதினால் தான். உலகத்திலே தோன்றிய மகான்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், ஒன்று நீளமாகவாவது இருக்கும்; அல்லது அகலமாகவாவது இருக்கும். இரண்டும் ஒன்று சேர்ந்திருக்கக் காண்பது அரிது. சங்கராச்சாரியாரென்ன, விவேகானந்தரென்ன, இப்படிப்பட்டவர் களுடைய வாழ்க்கை யெல்லாம் நீளமான வாழ்க்கையல்ல; அகன்ற வாழ்க்கை. ஆனால், புத்தர் பிரானுடைய வாழ்க்கை, நீளமும் அகலமும் சேர்ந்த சதுர வாழ்க்கை. அது போலவே காந்தியடிகளுடைய வாழ்க்கையும் சதுர வாழ்க்கையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே யாருடைய சதுர வாழ்க்கையும், தனித்துவமும் மகத்துவமும் பொருந்திய தாகவே இருக்கும். இன்று காந்தியடிகளுடைய திரு நாமம் உலகத்தில் எதிரொலியுடன் முழங்கிக் கொண்டிருக்கிற தென்று சொன்னால், அஃது அவருடைய புனித வாழ்க்கைக்குத் தானே தவிர, அவருடைய தளர்ந்த உடலுக்காகவல்ல; குறுகிய உருவத்திற்காகவல்ல. அவர், மகா மேதாவியுமல்ல; அவரைவிடச் சிறந்த அறிஞர்கள், உலகத்தின் நானா பாகங்களிலும் ஆயிரக்கணக் காக இருக்கிறார்கள். அல்லது அவருடைய உறுதியான கடவுள் நம்பிக்கை, அவரை இந்த உன்னத பதவியில் கொண்டுவைத்திருக்கிற தென்றும் சொல்ல முடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களையும், சூரதாஸையும், கபீரையும், மீராபாயையும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கான பேரையும் கண்ட பாரத தேசத்திற்கு, காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை ஒரு புதுமையுமல்ல; விசேஷமுமல்ல. எத்தனையோ பக்தர்களைப் போல் அவர் ஒருவர். அவ்வளவுதான்.

இப்படி அவர் ஒரு சாதாரண மனிதராகக் காணப்பட்ட போதிலும், உலகத்திலுள்ள அறிஞர்களெல்லோரும் அவருக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள்; பக்தர்களெல்லோரும் அவரைப் பூஜிக்கிறார்கள்; பயில்வான் களெல்லோரும் அவர் முன்னே, நூற்றுப் பன்னிரண்டு பவுண்ட் நிறையுள்ள அவர் முன்னே, கைகட்டி நிற்கிறார்கள்; அழகுத் தெய்வங்களெல்லாம், அவருடைய பொக்கை வாய்க்கு முன்னே வாய் பொத்தி நிற்கின்றன; நாவலர்களெல்லோரும் அவருடைய மௌனத்திற்கு முன்னே நாவடங்கி நிற்கிறார்கள்; ஆனால், அவர் நாவசைந்தால் நாடு அசைகிறது. இவை மட்டுமா? மேற்படி அறிஞர்களும், பக்தர்களும், பயில்வான்களும், நாவலர்களும், இன்னோரன்ன பலரும் அவருடைய திருமுன்னர், தங்கள் தங்கள் கலைத்திறமை, தொழில் திறமை முதலியவைகளைக் காட்டி அவருடைய ஆசிர்வாதத்தைப் பெறப் போட்டி போடுகிறார்கள்; அந்த ஆசிர்வாதத்தைக் கொண்டு பிரகாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பிரகாசிக்கிற பிரகாசந்தான் உண்மையான பிரகாசமென்று, சாசுவதமான பிரகாச மென்று நம்புகிறார்கள். இஃதென்ன வேடிக்கை!

1927ஆம் வருஷம், மகாத்மா காந்தி, தேக அசௌக்கியங் காரணமாக, பெங்களூருக்கு வந்திருக்கிறார். குமாரா பார்க் என்ற மாளிகையில் மைசூர் அரசாங்கத்தார் அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து உபசரித்து வருகிறார்கள். ஒரு நாள் காலை நேரம். அடிகளார், தமது அறையில் கட்டிலொன்றின் மீது சாய்ந்த வண்ணம் படுத்திருக்கிறார். அவருடைய புகழொளியைக் கண்டு வெட்கப்பட்டோ என்னவோ, சூரியன், ஜன்னல் வழியாக அவரை எட்டி எட்டிப் பார்க்கிறான். அடிகளின் முகம் மலர்ந்திருக் கிறது. அப்பொழுது ஆறரை அடி உயரமுள்ள ஒரு கம்பீர உருவம் உள்ளே நுழைந்தது. நரைத்த தாடி மீசை. முற்காலத்து முனிவர்கள் போன்ற முகத் தோற்றம். அந்த முகத்தில் அறிவும் சாந்தமும் குலவிக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்த அந்த வடிவம், சாய்ந்து படுத்திருந்த உருவத்தை மூன்று முறை வலம் வந்தது. பின்னர் சாஷ்டாங்கமாக நமகாரஞ் செய்துவிட்டு, கூப்பிய கையோடு, பக்தி மேலீட்டால் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிக் கொண்டிருக்க, இமய பர்வதம்போல் அசையாது நின்று கொண்டிருந்தது.

ஆஜானுபாகு வான அந்த உருவத்தைப் பார்த்துக் காந்தியடிகள் என்னை இப்படிப் பரிகசிக்கலாமா? தங்களுடைய அறிவுக் கோயிலின் நுழைவாயிலில் கையேந்தி நிற்கும் ஒரு பிட்சுகன் அல்லவா நான்? என்றார். அப்படிச் சொல்லக்கூடாது. தாங்கள் ஒரு சமுத்திரம். அதிலிருந்து தெறிக்கும் ஒரு திவலை நான். ஆத்ம சக்திக்கு முன்னே அறிவு எம்மாத்திரம்? சூரியன் முன்னே மின்மினிப்பூச்சி மாதிரி. என்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நான் இங்கு வந்தேனேயன்றி, தங்களைத் தொந்தரவு படுத்துவதற்காக வல்ல என்றது வேத ஒலியின் எதிரொலி போன்ற அந்தக் குரல். இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், காந்தியடிகளின் கண்களில் நீர் ததும்பியது. வணங்கி நின்ற அந்த உருவமும், மௌனமாக விடை பெற்றுக் கொண்டு, அறையை விட்டு வெளியே சென்று விட்டது. இந்தக் காட்சியை நாம் எத்தனை தரம் நமது அகக்கண்ணால் தரிசித்தாலும் அத்தனை தரமும் நமது உள்ளத்தில் ஊறாத அமிழ்து ஊறி நம்மைப் பரவசப்படுத்து கின்றது. வணங்கிய அவர் யார்? அப்பொழுது மைசூர் சர்வ கலா சாலையின் வைசான்ஸலராக இருந்த ஸர் வ்ருஜேந்திர நாத சீலர்; உலக அறிஞர்களிலே ஒருவர். சகல கலைகளிலும் அவருக்குள்ள புலமையைப் பாராட்டு முகத்தான் அவரைச் சாதாரணமாக நடக்கும் அகராதி என்று நண்பர்கள் அழைப்பார்கள். ஸர் ஜகதீஸ சந்திரபோஸ், ஸர் பிரபுல்ல சந்திர ரே, ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி முதலிய அறிவு அரசர்களெல்லோரும், வ்ருஜேந்திரநாத சீலரை, தங்களுடைய அறிவுச் சக்ரவர்த்தியாகப் போற்றி வந்தார்கள். ஆனால், இந்த அறிவுச் சக்ரவர்த்தி, அந்தச் சத்தியாத்மாவுக்கு முன்னே அடங்கி ஒடுங்கி நின்றார். இப்படி இந்திய நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல, மேல்நாட்டு அறிஞர்களான ஆல்பர்ட் ஈன்டீன், கில்பர்ட் முர்ரே, சி.இ.எம். ஜோட், பெர்ரிடேல் கீத், கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் முதலிய பலரும் அவருக்குத் தங்களாலான காணிக்கையைச் செலுத்திய வண்ணமிருக்கிறார்கள். இஃதென்ன புதிர்!

இங்கிலாந்தில் மிஸ் மாட் ராய்டன் என்ற ஓர் அம்மையார். கிறிஸ்துவ ஞானிகளின் கூட்டத்திலே இவருக்கு அதிக மதிப்பு உண்டு. காந்தியடிகள், 1931ஆம் வருஷம் வட்ட மேஜை மகா நாட்டை முன்னிட்டு லண்டனுக்குச் சென்றிருந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மண்டபத்திற்கு வெளியே வந்தார். பிறகு நடைபெற்றதை மேற்படி மாட் ராய்டனே வருணிக்கட்டும்:-

அவரை ஏராளமான ஜனங்கள் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள். என்னுடைய மோட்டார் எங்கேயிருக்கிறதென்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவருக்கு எதிரில் ஒவ்வொரு வண்டியும் வந்துவந்து போகிறது. தங்களுடைய வண்டியில் மகாத்மா ஏறிக்கொள்ள வேண்டு மென்ற ஆசை அந்த ஒவ்வொரு மோட்டார் சொந்தக்காரருக்கும். அன்று நிரம்பக் குளிர். அதிகமான உடைகளையும் மகாத்மா தரித்துக் கொண்டிருக்க வில்லை. அவரை அதே இடத்தில் அதிக நேரம் தாமதித்து வைத்திருக்கக் கூடாதென்று எண்ணினேன். அகப்பட்ட வண்டியில் போய்விடுங்கள் என்று அவரிடம் சொன்னேன். இல்லை; உங்களுடைய வண்டிக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். ஹா! அந்த வார்த்தைகள் எனக்கு மகுடாபிஷேகம் செய்தது போலிருந்தன. அவருக்கென்று ஒன்றுமில்லை; ஆனால் எல்லாம் அவருடை யனவே என்ற யேசுநாதரின் சிஷ்யர் ஒருவருடைய வாசகம் எனக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. காந்தியடிகளுக்கென்று ஒரு மோட்டார் கிடையாது. ஆனால், அவரைச் சுற்றி எத்தனை மோட்டார்கள்!

ரகுபதி ராகவ ராஜாராம் – பதிதபாவன சீதா ராம் என்ற நாமாவளியை எல்லோர் இதயத்திலும் ஊன்றி விட்டுச் சென்றவரும், புனா கந்தர்வ மஹாவித்யாலயம் என்ற சங்கீத தாபனத்தின் தந்தையும், ஏறக்குறைய ஒவ்வொரு காங்கிரஸ் மகா சபையின் போதும், தம் சிஷ்யர்களுடன் விஜயஞ் செய்து பாரதமாதாவின் மீது இசையமுதைப் பொழிந்து, அனைவருடைய இதயத்தையும் குளிர்வித்துக் கொண்டிருந்த வருமான காலஞ்சென்ற பண்டித விஷ்ணு திகம்பரர், தமது சங்கீதப் புலமை, தெய்விகத் தன்மை யடைய வேண்டுமென்பதற்காக, சங்கீதமே அறியாத, ஆனால் சங்கீதத்தின் இங்கிதத்திலே தம்மை இழந்துவிடும் ஆற்றல் வாய்ந்த காந்தியடிகளின் தலையசைவையும், அருட்பார்வையையும் எதிர் பார்த்தாரே தவிர, வர, சுருதி, தாளபேதங்களைப் பற்றிச் சச்சர விட்டு அந்தச் சச்சரவில் சங்கீதத்தையே இழக்கும் சாமர்த்திய முடைய சங்கீத வித்துவான்களின் கரகோஷத்தை எதிர்பார்த்தா ரில்லை.

காந்தியடிகள், லண்டனில் பாரிடர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தபோது மேல்நாட்டு நடனத்தைக் கற்றுக்கொண்டார் என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தோ என்னவோ, இப் பொழுது பால் ரோபெஸன், என்ற நீக்ரோ நடிகர், அவர் முன்னிலையில், தமது நடிகத் திறமையைக் காட்ட விழைகிறார்.

உலகப் பிரசித்தி பெற்ற காமா என்கிற பயில்வான், தமது தேக வலிமைக்கு அவருடைய ஆசீர்வாத முத்திரை தேவை என்று விழைகிறார். காந்தியடிகள், சிறு பையனாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, தேகப் பயிற்சி விஷயத்தில் சிறிது கூடக் கவலை செலுத்தாமலிருந்ததும், ஒரு நாள் தேகப் பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலிருந்ததற்காக இரண்டணா அபராதம் செலுத்தியதும் காமாவுக்கு ஞாபகமில்லை போலும்!

கீளார் கோவண முடுக்கும் காந்தியடிகளின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பெருமையடைய அரச குடும்பத்தினர் அநேகர் ஆவல் கொள் கிறார்கள். இங்கிலாந்திலும் இத்தாலியிலும் அரச குடும்பத்தினர் அவருக்கு அளித்த உபசாரங்களை யார் மறக்க முடியும்?

காந்தியடிகள் சிறந்த ஓர் அரசியல்வாதியென்றோ, ராஜதந்திரி யென்றோ சொல்ல முடியாது. தாம் அந்த மாதிரி அழைக்கப் பட்டால், அதை அவர் விரும்புவதுமில்லை. தம்மை ஒரு சாதாரண விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் அவர் பெருமையும் திருப்தியுமடைகிறார். ஆயினும், உலகத்தையே ஆட்டிவைக்கும் சாமர்த்தியமுள்ள அரசியல் வாதிகளும் ராஜ தந்திரிகளும் அவரைக் காணவும் பின்வாங்குகிறார்கள். பிடிவாதமுள்ள ராஜ தந்திரியான ஸ்ரீ வின்டன் சர்ச்சிலும், தந்திர அரசியல் வாதியான லார்ட் வில்லிங்டனும் அவரைக் காணக்கூட மறுத்து விட்டார்கள்!

இவைகளையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு பார்க்கிற போது, காந்தியடிகள் ஒரு புதிர் என்ற முடிவுக்குத்தான் யாரும் வரக்கூடும். இந்தப் புதிரை விடுவிக்க, அநேக அறிஞர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிற் பெரும்பாலோர் இந்தப் புதிரிலேயே சிக்கிக் கொண்டு விட்டார்கள். உண்மையிலேயே அவர் ஒரு புதிரா? இதற்கு விடை ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். அரசியல் பீடத்தில் அவரை வைத்திருத்திப் பார்க்கிற போது, அவருடைய சொற்களிலும் செயல்களிலும் அநேக முரண்பாடுகளிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மகான் தன்மை என்னும் பரிசுத்த ஆகாயத்தில், அதாவது மேலான நிலையில், அவர் எவ்விதக் களங்கமுமில்லாத ஒரு சந்திரனாகவே பிரகாசிக்கிறார். அவர் ஒரு மகான்; வீரன்; இவையிரண்டினைக் காட்டிலும் மேலாக அவர் ஒரு மனிதன். இந்த அமிசங்களைப் பற்றிச் சிறிது விதரித்துக் கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கம்.

காந்தியடிகளை, மகாத்மா வென்று பட்டஞ் சூட்டியே நாம் போற்று கிறோம். மகாத்மாவென்றால் என்ன அர்த்தம்? இதை ரவீந்திரநாத் தாகூர் ஓரிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:

தனி மனிதனிடத்திலுள்ள நான் என்பது விடுதலை பெற்று, எல்லோரிடத்திலும் தான் ஆகப் பரிணமிக்கிற போது, மகாத்மாவாகிறது. உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளையும், யாரொருவர், தாம் ஆகப் பார்க்கிறாரோ அவர் தான் மகாத்மா.

சாதாரண விவகார பாஷையில் இதைச் சொல்லப் போனால், யாரொருவர் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்துகிறாரோ, எல்லோருடைய துன்பத்தைத் தமது துன்பமாகவும், எல்லோருடைய இன்பத்தைத் தமது இன்பமாகவும் ஏற்றுக் கொள்கிறாரோ அவரே மகாத்மா. இப்படிப் பட்டவர்களை மகான்களென்றும், மகா புருஷர்களென்றும், தீர்க்கதரிசிகளென்றும், பரம ஞானிகளென்றும், லட்சியத்திற்காக உயிரைத் துரும்பென மதிக்கும் மகா வீரர்களென்றும் பல பட அழைப்பது வழக்கம். இவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; பிறருக்காகவே வாழ்கிறார்கள். பணிசெய்து கிடப்பதுதான் இவர்கள் கடன்.

இத்தகைய மகான்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் சிறிது ஊன்றிப் பார்த்தோமானால், துன்பமும் துயரமுமே இவர் களுடைய வாழ்க்கையின் நியதிகளாயிருக்கின்றன. இவர்கள், அநேக சமயங்களில் தாங்களே வலிய, துன்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்; சில சமயங்களில் பிறரால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அந்தத் துன்பங்களை யெல்லாம் பொருட் படுத்துவதே யில்லை. அவற்றைப் பார்த்து இவர்கள் பரிகசிக்கிறார்கள்; புன் சிரிப்புச் சிரிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஹென்ரி தோரூ என்ற ஓர் அமெரிக்க ஞானி இருந்தான். அவன் சிறைவாசத்தை அனுபவித்தான். அப்பொழுது கூறுகிறான்:-

என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சிறைச்சாலைச் சுவர்களைக் கட்டுவதற்காகச் செலவழிக்கப்பட்ட கல்லும் சுண்ணாம்பும் வீண்தான். சிறையதிகாரிகள், என் தேகத்தை எவ்வளவு பத்திரமாகப் பூட்டி வைக் கிறார்கள்! ஆனால், என்னுடைய மனம், எவ்விதத் தங்கு தடையுமில்லாமல் அவர்களோடேயே உலவிக் கொண்டிருக்கிறதே! பாவம்! சிறு பிள்ளைகள், தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எதிர்ப்பட்டால், அவர்களை நேராக எதிர்க்கத் தைரியமில்லாமல், தங்களுடைய நாயைப் பிடித்துத் திட்டுவார்கள். அதைப் போலிருக்கிறது இந்தச் சிறையதிகாரிகள் என்னைப் பூட்டி வைத்திருப்பது!

இதைப்போல் மகான்கள் சிறையையோ சங்கிலியையோ லட்சியஞ் செய்யமாட்டார்கள். மகான்களின் புனிதத் தன்மை யானது, அதாவது தூயமனமானது, தூக்கு மரத்தில்தான் இன்பம் நுகர்கிறது என்ற வாசகப்படி, இவர்கள் உலக வாழ்க்கையிலே எவ்வளவு துன்பங்களையனுபவித்தாலும், அவைகளைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவதில்லை; சலிப்புக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, இவர்களுடைய மகான் தன்மையானது, மேற்படி துன்பங் களை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடும்படி இவர்களைத் தூண்டுகிறது. இப்படிப் போராடிப் போராடி இவர்கள் உலகத்துக்குச் சாந்தியை வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தினால் உலகம் இன்புறுகிறது.

இவர்கள் ஏன் வலிய இப்படித் துன்புறுகிறார்கள்? எல்லா ஜீவராசிகளிடத்திலும் இவர்கள் கொண்டுள்ள அன்புதான் இதற்குக் காரணம். அன்பும் துன்பமும் இணைபிரியாத இரட்டைச் சகோதரர்கள் மாதிரி. இவையிரண்டும் மனிதனுடைய இரண்டு கண்கள் போலிருக்கின்றன என்கிறார் அறிஞர் ராதாகிருஷ்ணன். கண்களில்லாதவன் மனிதனாக மாட்டான். அதைப்போல் அன்பு செலுத்தாதவர்களும் துன்ப மனுபவியாதவர் களும் மனிதர்களாக மாட் டார்கள். துன்பத்திற்குப் பயந்து அன்பு செலுத்த மறுக்கிறவன் மனிதனல்ல; அவன் ஒரு ஜடவஸ்து; எதற்கும் உதவாத ஒரு பிண்டம். தாந்தே என்ற இத்தாலிய மகா கவிஞன் கூறிய மாதிரி உலகத்தினிடம் அன்பு செலுத்துகிற மகான்கள் எந்த யுகத்தில் அவதரித்த போதிலும் அவர்கள் மகத்தான துயர மென்னும் மகுடத்தையே அணிந்து கொண்டிருக் கிறார்கள் எவனொருவன் உண்மையாகவே அன்பு செலுத்துகிறானோ அவன் துன்பமனுபவிப்பதினின்று தப்ப முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு ஒருவன் மற்றவர்கள்மீது அதிகமாக அன்பு செலுத்துகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவன் துன்பத்தை அனுபவிக்கிறான். ஒரு தாய், தன் குழந்தையின் இன்பத்திற்காக எத்தனையோ விதமான துன்பங்களை அனுபவிக்கிறாள். அப்படி அனுபவிப்பதிலே ஒரு திருப்தி கொள்கிறாள். அந்தத் திருப்தியே அவள் அடைகிற இன்பம். அதைப் போலவே, மகான்களுடைய அன்பும் இருக்கிறது. தாய், தன் குழந்தையினிடத்தில் அன்பு செலுத்தாமல் எப்படி இருக்க முடியாதோ, அப்படியே மகான் தன்மையுடையவர்களும், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத் தாமலிருக்க முடியாது. தாய் எப்படி, அந்த அன்பின் மூலமாகத் துன்பத்தை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறாளோ அப்படியே மகான்களும் துன்பத்தை வலிய ஏற்றுக் கொள்கிறார்கள்.

இங்ஙனம் இவர்கள் அன்பையும் துன்பத்தையும் ஒரு கண் கொண்டு பார்ப்பதினால்தான் இவர்களுடைய செயல்களில் அநேக முரண்பாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இவர்கள், தங்களைப் பொறுத்தமட்டில் அன்பெனும் உயர்ந்த சிகரத்தில் இருக்கிறார்கள். ஆனால், கீழே அதாவது உலகத்திலே, அறியாமை, வறுமை முதலிய துன்பங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார்கள். இவர்கள் இதயம் துடி துடிக்கிறது. பரம கருணையினால், தங்கள் உச்சநிலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். மேலான உண்மைகளை உபதேசிக்கிறார்கள். அவைகளை அறிந்து கொள்ளக் கூடிய தகுதி ஜனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா வென்பதை இவர்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்க ளுடைய துன்ப நிலையை இன்ப நிலையாகக் கருதிக் கொண்டிருக்கி றார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சிறந்த உண்மைகளை உபதேசிக்கிற போது, அவை அவர்களுக்கு முரண்பாடாகவே தெரிகின்றன. இரண்டு கடல் நீர்கள் ஒன்று சேர்கிறபோது, இரண்டுக்கும் வேறுபாடு நன்றாகத் தெரிகிறது போல், மேலான தன்மையும் கீழான தன்மையும் ஒன்று சேர்கிறபோது, சில மாறுபாடுகள் இருக்கவே செய்யும். அடிப்படையில் ஒன்றுதான். எல்லாம் நீர்தான். நீரின் நிறத்தில், கனத்தில், கலப்பில், வித்தியாசங்கள் இருக்கக் கூடும்.

ஆனால், இப்படிப்பட்ட முரண்பாடுடையவர்களாலேயே உலகத்திற்கு நன்மை செய்ய முடியும். இவர்கள் தான் உலகத்திற்கு நன்மை செய்திருக்கிறார்கள். பிரபஞ்ச இதிகாசம், இந்த உண்மையை நமக்குச் சதா அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகத்திலே தோன்றின எந்தப் புரட்சியை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள். தங்களுடைய சுற்றுச் சார்பைக் கண்டு அதிருப்தி கொண்டவர்கள்தான், புரட்சிகளுக்கெல்லாம் காரணர் களாயிருக்கிறார்கள். இவர்களுடைய சமகாலத்தவர் இவர்களைக் கிளர்ச்சிக்காரரென்றும், கலகக்காரரென்றும், புரட்சிக்கார ரென்றும் சொல்லி, இவர்களைப் பலவிதமாக இம்சிக்கிறார்கள். ஆயினும் இவர்கள், புதிய கொள்கைகளை, புதிய இயக்கங்களை விதைத்து விட்டு மறைந்து விடுகிறார்கள். வருங்கால சந்ததியார், இந்த விதையிலிருந்து கிடைத்த மகசூலை அனுபவிக்கிறார்கள். அப்பொழுதுதான் இவர்களுடைய பெருமை தெரிகிறது. மகான்க ளென்று இவர்கள் போற்றப்படுகிறார்கள். புத்தர்பிரான், தமது காலத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு களையும் எதிர்த்துப் போராடினார். பலபேருடைய பரிகாசத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். யேசுநாதர், தம்மைச் சுற்றியிருந்த ரோம ஏகாதிபத்தியத்தின் போலித் தனத்தையும் ஆடம்பரத்தையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். ஆனால், ஜனங்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள்; சிலுவையிலே அறைந்தார்கள். ஸாக்ரடீ என்ன, மார்ட்டின் லூதர் என்ன, பிரெஞ்சுப் புரட்சிக்கு விதை யூன்றின ரூஸோ என்ன, கார்ல் மார்க் என்ன, லெனின் என்ன, இப்படிப்பட்டவர்கள் புரட்சிக்காரர்களென்று முத்திரையிடப் பெற்று அநேக அவதிகளுக் குட்படுத்தப் பட்டார்கள். ஆனால், இவர் களெல்லோரும் மகான்கள்.

இவர்கள் வெளிப்பார்வைக்கு அநாகரிகர்கள் போலவும் பித்தர்கள் போலவும் நடந்து கொள்ளலாம். ஆனால், உலகத்தை நாகரிகப்படுத்தவும், உலகத்தின் பித்தத்தைத் தெளிவிக்கவுமே இவர்கள் பாடுபடுகிறார்கள். நாம் இப்பொழுது நம்மை நாகரிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் நாம் நாகரிகத்தை யடைந்திருக்கிறோமா? நாகரிக வாழ்க்கையின் அடிப்படை யென்ன வென்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்குப் பதில் சொல்லு முகத்தான் ஓர் அறிஞன் கூறுகிறான்:-

ஒரு சமுதாயத்தில், வலியார், எளியாருடைய சுமையை எவ்வளவுக் கெவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு அந்தச் சமுதாயத்தின் வாழ்க்கையானது நாகரிகமடைகிறது.

இந்த அளவு கொண்டுதான் மகான்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள். உள்ள நிலையைக் கண்டு இரங்குகிறார்கள்; அதிருப்தி கொள்கிறார்கள். விளைவது என்ன? புரட்சி; இவர்களுக்குச் சிறைவாசம், அல்லது தூக்கு மேடை.

ஆயிரம் பேரில் ஒருவர்தான் நன்றாகப் பேசமுடியும். நன்றாக பேச முடிந்த ஆயிரம் பேரில் ஒருவர்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும். தெளிவாகச் சிந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவர்தான், வாழ்க்கையில் தங்களுடைய லட்சியம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தெரிந்து கொண்டு விட்டால் மட்டும் போதுமா? அதனை அடைய வேண்டாமா? தெரிந்து கொண்ட ஆயிரம் பேரிலே ஒருவர்தான், தங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமென்ற ஆவல் கொண்டு, அதனை நோக்கிப் பிரயாணஞ் செய்யமுடியும். அப்படிச் செல்வோரில் எத்தனையோ பேர், வழியில் களைப்பினால் பின்தங்கி விடலாம்; வேறுசிலர் வேறு ஆசைகளினால் தூண்டப் பட்டு வேறு பாதைகளுக்குச் சென்றுவிடலாம்; இன்னுஞ் சிலர் லட்சியப் பிரகாசத்தினால் கண் கூசிக் குருடர்களாய் மேல் நோக்கிச் செல்லாமலேயே பின் தங்கிவிடலாம். இங்ஙனம் லட்சியப் பாதை யானது மகா கடினமான பாதையா யிருந்த போதிலும், யாரொருவர் அந்தப் பாதையில் அடி எடுத்து வைக்கிறார்களோ, அடியெடுத்து வைக்கக் கூடிய ஆற்றலையும் துணிச்சலையும் பெறுகிறார்களோ, அவர்களெல்லோரையுமே பொதுப்படையாக மகான்களென்று உலகம் அழைக்கிறது.

மகான் தன்மைக்குரிய இந்த மாதிரியான லட்சணங்களைக் கொண்டு காந்தியடிகளை நாம் நோக்கிறபோது, அவர் ஒரு மகானென்பது நன்கு தெரியும். சிலருடைய வாழ்க்கையில், இளமையிலேயே இந்த மகான் தன்மை விகாசமடைகிறது. இன்னுஞ் சிலரிடத்தில், வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே விகாச மடைகிறது. எப்படி, எப்பொழுது விகாசமடைந்தாலும், சிறு பிராயத்திலேயே இதற்கு முளை தோன்றி விடுகிறது. ஆனால், இந்த முளையை ஒரு சிலரால்தான் அறிய முடிகிறது; பெரும்பாலோரால் அறிய முடிவதில்லை. காந்தியடிகளின் சுய சரித்திரத்தை ஊன்றிப் படிப்போர்க்கு இந்த உண்மை புலனாகும். காந்தியடிகள் ஒரு மகானென்பதை இந்திய மகாஜனங்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்த தெல்லாம், அவர் இந்தியாவில் ரெளலெட் சத்தியாக்கிரகம் தொடங்கி நடத்திய பிறகுதான். ரவீந்திர நாத் தாகூர் 1921ஆம் வருஷம் சபர்மதி ஆசிரமத்திற்கு விஜயம் செய்திருந்த போது, காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டஞ் சூட்டினார். அது முதற் கொண்டே அந்தப் பெயர் உலகத்தில் முழங்கிக் கொண்டு வருகிறது. ஆனால், இந்த மகாத்மா தன்மை, காந்தியடிகளிடத்தில் இருப்பதை அவருடைய அரசியல் குரு வான கோபால கிருஷ்ண கோகலே, 1912-ஆம் வருஷத்திலேயே தெரிந்துகொண்டு விட்டார். அவர் கூறுகிறார்:-

வீரர்களும் மகான்களும் எந்தத் தன்மைகளைக் கொண்டு தயாரிக்கப் படுகிறார்களோ அந்தத் தன்மைகளெல்லாம் காந்தியடிகளிடத்தில் இருக்கின்றன. இதில் சந்தேகமில்லை. இது தவிர, தம்மைச் சுற்றியுள்ள சாதாரண மனிதர்களை வீரர்களாகவும் மகான்களாகவும் ஆக்கிவிடக் கூடிய அபாரமான ஆத்ம சக்தியும் அவரிடத்தில் இருக்கிறது.

இந்த மகான் தன்மை அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரை ஏன் ஜனங்கள் மகாத்மா வென்று போற்றுகிறார்கள்? அவரைக் காட்டிலும் அறிவு, அனுபவம், வயது முதலியவைகளில் சிறந்த வர்கள் பலரிருக்க, அவருக்கு மட்டும் ஏன் இந்தத் தனி மதிப்பு? இதைச் சிறிது விளக்குவோம். அல்டோ ஹக்லி என்ற நமது சமகாலத்து மேனாட்டு அறிஞன் ஓரிடத்தில் கூறுகிறான்:-

அரசியல் பரம்பரை இருக்கிறதே அது மகா அயோக்கியத்தனமான பரம்பரை. உலகத்தில் இரண்டுவிதமான தர்மங்கள் இப்பொழுது அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. தனிப்பட்ட நபர்களுக்கென்று ஒரு தர்மம்; ஜாதிக்கென்று அதாவது தேசத்திற்கென்று வேறு தர்மம். ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் யோக்கியனாகவும், கருணை நிறைந்தவனாகவும், மற்றவர் களுடைய குறை நிறைகளைப் பாராட்டுகிறவனாகவும் இருக்கிறான். ஆனால், அதே மனிதன், ஒரு ஜாதியின் பிரதிநிதியாகவோ, அல்லது ஏதோ ஒரு கட்சியின் பிரதிநிதியாகவோ வருகிறபோது, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தக் காரியங்களைச் செய்தால் இழிவு என்று கருதுகிறானோ அதே காரியங்களைக் கூச்சமின்றிச் செய்கிறான். அப்படிச் செய்வது தான் நியாயமென்றும் சாதிக்கிறான்.

இதனால் என்ன ஏற்படுகிற தென்றால், ஒரு ஜாதிக்கு, சக்தியும் புகழும் இருக்கிறதென்றும், ஆனால் அதற்கு ஒழுக்கம் அல்லது தர்மம் என்பதே கிடையாதென்றும் நாம் கருதிக் கொள்வதாக ஏற்படுகிறதல்லவா? ஜாதி என்ற முறையில் நாம் கேவலமாக நடந்து கொள்வது சரியென்று நம்புகிறோம்.

காந்தியடிகள், அரசியலை ஒரு பாரமார்த்திக நிலைக்கு உயர்த்தியிருக்கிறார் என்று சொல்வதின் தாத்பரியமெல்லாம் இதுதான். அதாவது, நாம் நமது சொந்த விவகாரங்களில் எந்த நியாயத்தை, எந்த தர்மத்தை அனுசரித்து நடக்கிறோமோ அதே நியாயத்துடனும் தர்மத்துடனும் பொது விவகாரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் நம் சகோதரர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எப்படி கண்ணியமாகவும் பொறுப்பறிந்தும் நடந்து, அதன் மூலமாக அவர்களுடைய அபிமானத்தையும் நன் மதிப்பையும் பெறவேண்டுமென்று ஆவல் கொள்கிறோமோ அதைப்போல், தேசீய விவகாரங்களிலும் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் வேறே, தேசம் வேறே என்று பிரிக்கக் கூடாது. தேசீய வாழ்க்கையில் நமது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிக்கின்றி நமக்கென்று ஒரு வாழ்க்கை யும் தேசத்திற்கென்று ஒரு வாழ்க்கையுமாக, வாழ்க்கையை இரண்டு கூறுபடுத்திக்கொண்டு நடப்போமானால் நாமும் அபிவிருத்தி யடைவதில்லை; தேசமும் பாழடைகிறது.

நம்முடைய அரசியல் தலைவர்களிற் பெரும்பாலோர், வாழ்க்கையை, இங்ஙனம் இரண்டு கூறுபடுத்தியே பார்க்கிறார்கள். பொதுஜன அபிப்பிராயம், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை யென்று சொன்னால், அஃது அதனுடைய குற்றமா? ஆனால், காந்தியடிகள், தமது வாழ்க்கையை ஒரு மொத்தத் தொகுப்பாகவே பார்க்கிறார். நாம் வேறே, தேசம் வேறே என்று பார்ப்பதில்லை. தேசத்தின் க்ஷேமத்திலே தான் தம்முடைய க்ஷேமம் இருக்கிற தென்பதை அவர் பல முறை தம் செயல்களால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தேசத் திற்காக அவர் இருக்கிறாரே தவிர, அவருக்காக தேசம் இல்லை. இந்த மாதிரியான விரிந்த மனப்பான்மையை, எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் நாம் காண்கிறோமா? இல்லையே. இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா அரசியல் வாதிகளிடத் திலும் இந்த இரண்டுவித வாழ்க்கைத் தோற்றங்கள்தான் காணப்படு கின்றன. போரும் பகைமையும் உலகத்திலே இது போழ்து மலிந்திருப்பதற்கெல்லாம் காரணம், அரசியல் வாதிகள் இங்ஙனம் இரண்டுபட்ட வாழ்க்கையை நடத்துவதுதான். மகாத்மா காந்தியி னிடத்தில் இந்த இரண்டுபட்ட தன்மை இல்லாததினாலேயே அவர் உலகத்தினரால் போற்றப்படுகிறார்.

ஸ்தூலமாகப் பார்க்கிறபோது, இன்றைய மனிதன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறான். அவனுடைய அறிவு, திறமையின் கோபுரத்தின் மீது கொலுவிருக்கிறது. நமக்கு விவசாய நிலங்களும், போக்குவரவு சாதனங்களும் அதிகப்பட்டிருக் கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் ரேடியோ இருக்கிறது. பிரதி யொருவனும் சொந்தமாக ஓர் ஆகாய விமானத்தை வைத்துக் கொண்டிருக்கக் கூடிய காலம் விரைவிலே வரக்கூடும். உலகத்தில் வியாதியே இல்லாதபடி செய்யப்பட்டு விடலாம். தொழிலாளர்களுக்கு வயோதிகச் சம்பளம் கொடுத்து அவர்களைக் கவலைக் கடலினின்று கரையேற்றி விடலாம். இவையெல்லாம் நடைபெற்று விட்டாலும், மனிதன் சாந்தி பெறக் கூடுமா? அவன், தன் வாழ்க்கையில் ஆறுதல் காண்பானா? மாட்டான். வாழ்க்கை யென்பது என்ன? வயிறு நிறைய ஆகாரம் உண்பதா? அல்லது அறிவுக் கடலில் மட்டும் மிதந்து கொண்டிருப்பதா? இல்லை; இல்லை. எவனொரு வன் தன் அந்தரங்கத்தில் இன்பத்தை யடைகிறானோ, அதாவது இதய சாந்தி பெறுகிறானோ அவன்தான் வாழ்க்கையை நடத்துகிறவன். இந்தத் தூய வாழ்க்கையைப் பொதுவாக உலக மக்களுக்கு, சிறப்பாக இந்திய மகா ஜனங்களுக்கு அளிக்கவேண்டுமென்பது தான் காந்தியடிகளின் ஆவல். இதற்காகவே அவரை எல்லோரும் போற்றுகிறார்கள். எல்லாத் தலைவர்களிடத்திலும் இந்த ஆவல் இருக்கிறதா? இல்லையே.

அரசியல் தலைவர்களிற் பெரும்பாலோர், மனிதனுடைய புறத் தேவைகளை மட்டும் கவனித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் காந்தியடிகள், மனிதனுடைய அகத் தேவை யொன்று இருக்கிற தென்பதை உணர்ந்து அதனைப் பூர்த்தி செய்ய விழை கிறார். இதற்காக அவர், புறத்தேவைகளைப் புறக்கணிக்கவில்லை. ஒரு செடியானது செழிப்பாக வளர வேண்டுமானால் அதற்கு எப்படி நல்ல உரம் போட்டு, ஒழுங்காக நீர் பாய்ச்சிக் கொண்டு வர வேண்டுமோ, அதைப் போல், மனிதனுடைய அக வளர்ச்சியானது, அவனுடைய புற வளர்ச்சியை ஒட்டியிருக்கிறது. ஏதோ ஏகதேசமாக ஒரு சில மகான்கள்தான், புறத்தைப் பொருட்படுத்தாமல் அக வாழ்க்கையில் முன்னேற்ற மடைந்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய புறத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தால் தான், அவர்களுடைய அக வளர்ச்சிக்கு நாம் வழி காட்ட முடியும். காந்தியடிகளின் உறுதியான நம்பிக்கை இதுதான். மனிதனுடைய வயிற்றுப் பசியைத் தீர்ப்பதைக் காட்டிலும் அவனுடைய ஆத்மப் பசியைத் தீர்ப்பதுதான் சிரேஷ்ட மென்று ஒரு சமயம் ரவீந்திர நாத் தாகூர் கூறியதற்குக் காந்தியடிகள் என்ன விடையளிக்கிறார் பாருங்கள்!

கவிஞர் தமது கவிதா உணர்ச்சிக்குப் பொருத்தமாக எதிர்காலத்தின் பொருட்டு வாழ்கிறார். நம்மையும் அந்த மாதிரி வாழுமாறு சொல்கிறார். காலை நேரத்திலே, பட்சிகள் ஆகாயத்தில் குதூகலமாகப் பறப்பதை அவர் நமக்கு வருணித்துக் காட்டுகிறார். வாஸ்தவம். இந்தப் பட்சிகளுக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்து விட்டது. முந்திய நாள் இரவு ஓய்வு கொண்டதினிமித்தம் அவைகளின் தேகத்தில் நல்ல ரத்தம் ஓடிக் கொண்டிருக்க, ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கின்றன. ஆனால் நான் காண்கிற பட்சிகள் சிறகுகளை அசைக்கக்கூட முடியாத பலவீனத்தோடிருக் கின்றன. என் ஆசை வார்த்தைகள், அந்தச் சிறகுகளுக்குப் பலத்தை அளிக்க வில்லை. இந்திய ஆகாயத்தின் கீழ் வாழும் மனிதப் பறவை யானது, முன்னாளிரவு எவ்வளவு பலவீனத்துடன் படுக்கச் சென் றதோ அதைவிட அதிக பலவீனமாக மறுநாள் காலையில் எழுந்திருக்கிறது. லட்சக் கணக்கான இந்திய மக்களுக்கு, எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்க வேண்டியிருக்கிறது; அல்லது மெய் மறந்த நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இந்த நிலையை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். நோய்வாய்ப்பட்டுக் கதறும் நோயாளிகளை ஒரு பாட்டுப்பாடி என்னால் குணப்படுத்த முடியவில்லை. பசி நோயால் அவதியுறும் லட்சக் கணக்கான இந்திய மக்கள் ஒரே ஒரு பாட்டைத்தான் கேட்கிறார்கள். அஃதென்ன? பலத்தை அளிக்கக் கூடிய ஒரு கவளச் சோறு.

பொதுவாக உலகத்திலுள்ள ஏழை மக்களும், சிறப்பாக இந்திய மக்களும் காந்தியடிகளை ஒரு தெய்வமாகக் கொண்டாடுவதின் ரகசியம் இதுதான். அவர், ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு மட்டும் இருக்கவில்லை; உணர்ந்து, அந்த உணர்ச்சியைச் செயல் மூலமாக வெளிப்படுத்துகிறார். மற்றத் தலைவர்கள், ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்து கொண் டிருப்பதோடு மட்டும் திருப்தியடைகிறார்கள்.

சாத்வீக எதிர்ப்பு முறையை முதன் முதலாகக் கையாண்டவர் காந்தியடிகளேயென்றும், இந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் அவரே யென்றும், இதற்காகவே உலகம் அவரைப் போற்றுகிற தென்றும் சிலர் சொல்லுகிறார்கள். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. இதற்காக, காந்தியடிகளை உலகம் போற்றுகிறதென்று சொன்னால், அது மலிவான போற்றுதல் என்றுதான் நாம் கொள்கிறோம். அதாவது அவருடைய உயர்நிலைக்கு இது தக்க மதிப்பல்ல. இதைச் சிறிது விஸ்தரித்துக் கூற விரும்புகிறோம்.

சாத்வீக எதிர்ப்பு அல்லது ஒத்துழையாமை யென்பது, காந்தியடிகளால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப் பட்டதுமல்ல; இந்தியாவின் சரித்திரத்திற்குப் புறம்பானதுமல்ல; புதிதுமல்ல; தீங்கிழைத்தவருடைய வாசற்படியில் உட்கார்ந்து, அந்தத் தீங்குக்குப் பரிகாரம் தேடிக்கொடா விட்டால் இறந்து போவதென்று நிச்சயப் படுத்திக் கொள்வது, மரணம் வரையில் பட்டினி கிடப்பது, சட்டங்களை மறுப்பது, தேசத்தினின்று வெளியேறுவது, அரசனைத் திரகாரஞ் செய்வது, அரசனைப் பகிரங்கமாகக் கண்டிப்பது முதலியவைகளெல்லாம் அஹிம்ஸா தர்ம முறையில் அனுஷ்டிக்கப் படக்கூடிய ஆயுதங்களென்று நம் புராதன நூல்களில் கூறப்படுகின்றன என்ற பாபு பகவான் தாஸின் வாசகம் இங்குக் கவனிக்கத் தக்கது.

ஜடப் பொருளின் ஆராய்ச்சியில் அதிகமான நம்பிக்கை வைத்து, அதிலேயே வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறதென்று முடிவுகட்டுகிற மேனாட்டார் கூட இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாண்டிருக்கிறார்கள். சென்ற சில நூற்றாண்டுகளில் மேனாட்டிலும் இந்தியாவிலும் எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறை அனுஷ்டிக்கப் பட்டிருக்கிறதென்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறோம்.

1. ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த ஹங்கேரியின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவன் கோஸுத் என்ற அறிஞன் என்றுதான் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரியும். ஆனால், இவனால் ஹங்கேரிக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் படவில்லை. உண்மையில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவன் பிரெங்க் டீக் என்பவன். இவன் ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்திற்கு விரோதமாகச் சாத்வீக முறையில் ஒத்துழையா இயக்கத்தை நடத்தி 1867ஆம் வருஷம் வெற்றி பெற்றான். இவனால்தான், ஹங்கேரி யின் தனி அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது.

2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் ஜெர்மனியில், பிஸ்மார்க் கொண்டு வந்த சில திட்டங்களை எதிர்த்து, முக்கியமாக இரண்டு ஒத்துழையா இயக்கங்கள் நடைபெற்றன. ஓர் இயக்கம், கத்தோலிக்க கிறிஸ்துவர்களால் நடத்தப் பெற்றது. மற்றொன்று, தொழிலாளர்களால் நடத்தப்பெற்றது. இவை யிரண்டும் வெற்றி பெற்றன.

3. ருஷ்ய ஆதிக்கத்தின் கீழிருந்த பின்லாந்து வாசிகள், தங்களுடைய துன்பங்கள் சிலவற்றிற்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு 1901ஆம் வருஷத்திலிருந்து 1905ஆம் வருஷம் வரை சாத்வீக ஒத்துழையா இயக்கத்தை நடத்தி வெற்றிபெற்றார்கள்.

4. இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகத்தில், புகையிலை உரிமையை எதிர்த்து பர்ஷியர்களும், பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை எதிர்த்து எகிப்தியர்களும், அந்நியர்களுடைய பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்துச் சீனர்களும் சாத்வீக முறையில் போராடியது அனைவருக்கும் நினைவிருக்குமல்லவா?

5. 1812ஆம் வருஷம், பாரத நாட்டின் புண்ணிய க்ஷேத்திரமாகிய காசியில், அரசாங்கத்தார் சில புதிய வரிகளை விதித்தனர். இதனை ஜனங்கள் சாத்வீக முறையில் எதிர்த்தார்கள். எல்லா கடைகளும் மூடப்பட்டன. ஜனங்கள் எவ்வித வேலையிலும் ஈடுபடவில்லை. தலைவர்கள் சொற்படி ஜனங்கள் நடந்தனர். இயக்கம் வெற்றி பெற்றது. அரசாங்கத்தார் வரியை ரத்து செய்தனர்.

6. 1830ஆம் வருஷம் மைசூர் சமதானத்தில் சில அட்டூழியங்கள் நடை பெற்றன. இவைகளை அஹிம்சா முறையில் எதிர்த்து ஜனங்கள் போராடினார்கள். ஜனங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி விட்டார்கள். நிலங்களில் யாரும் வேலை செய்யவில்லை. வரி செலுத்த மறுத்து விட்டார்கள். கடைசியில் அரசாங்கம் பணிந்தது.

7. வங்காளப் பிரிவினையை எதிர்த்து 1907ஆம் வருஷம் இந்தியா வெங்கணும் சாத்வீக முறையில் நடைபெற்ற இயக்கத்தை யாருமே அறிவர்.

இங்ஙனம் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்கள், பல நாடுகளில் பல காலங்களில் பலவாக நடைபெற்றிருக்கின்றன. ஆதலின் காந்தியடிகள் தான் இந்த இயக்கத்தின் சிருஷ்டிகர்த்தர் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த இயக்கத்தைப் பொறுத்த மட்டில் காந்தியடிகளின் முக்கியத்துவம் எதிலிருக்கிறதென்றால், விஸ்தீரணமான ஒரு தேசம் பூராவுக்குமாக இந்த இயக்கத்தைப் பிரயோகம் செய்து பரீட்சை பார்த்ததில்தான். குறிப்பிட்ட ஒரு பிரிவார், குறிப்பிட்ட ஒரு குறைக்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு இந்த முறை இதுகாறும் எங்கும் கையாளப்பட்டதே தவிர, தேசப் பொதுவில் இதனை யாரும் கையாளவில்லை. இதில் காந்தியடிகள் தான் முதன்மையானவர். அவர், இந்தப் பரீட்சையில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார், இதனால் அந்நிய ஆதிக்கத்தின் பிடிப்பு எவ்வளவு தூரம் தளர்ந்திருக்கிறது. ஆயுத பலத்தையும், மனோ பலத்தையும், ஜாதீய உணர்ச்சியையும் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு ஜாதியாரை அஹிம்சைப் பரீட்சைக்குட்படுத்துவது சரியா, ஆத்மீக சோதனையை அரசியல் களத்திலே கொண்டுவந்து நடத்தலாமா என்பன போன்ற பிரச்னைகளில் கருத்து வேற்றுமை களிலிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், வெற்றியோ தோல்வியோ, பலனோ, நிஷ்பலனோ, ஒன்றையுமே பொருட் படுத்தாமல் இந்தப் பரிசோதனையில் இறங்கிய துணிச்சல் இருக்கிறதே அது யாருக்கும் உண்டாகாது; இது வரை யாருக்கும் உண்டாகவுமில்லை. இஃது அசாதாரணமான துணிச்சல் மட்டு மல்ல; அமானுஷ்யத்தன்மையுள்ள துணிச்சலுங்கூட. கடமையைச் செய்ய வேண்டுமென்ற ஆவலினால் ஏற்பட்ட துணிச்சல் இது. இந்தத் துணிச்சலின் மற்றொரு பக்கந்தான் மகான் தன்மை. இந்தத் துணிச்சலுக்கும் மகான் தன்மைக்கும்தான் காந்தியடிகள் போற்றப்படுகிறாரே தவிர, அவர் அடைந்த வெற்றி தோல்விகளுக்காக வல்ல.

சாத்வீக எதிர்ப்பு, ஒத்துழையாமை என்று பல பெயரிட்டு அழைக்கப் படுகிற இந்த அஹிம்ஸை இயக்கம், லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமே தவிர. இதுவே லட்சியமல்ல. ஒழுங்கும் தன்னலத் தியாகமு மில்லாமல் எந்த ஒரு ஜாதியும் உண்மையான முன்னேற்றத்தையடைய முடியாததால், இந்த ஒழுங்கும் தன்னலத் தியாக உணர்ச்சியும் இந்திய தேச மக்களிடையே ஏற்பட வேண்டுமென்பதற்காகவே ஒத்துழையா இயக்கம் தொடங்கப் பட்டிருக்கிறதென்று 1920ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் லாலா லஜபதிராயின் தலைமையில் கூடிய விசேஷ காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ஒத்துழையாத் தீர்மானம் கூறுவதை இங்கு நேயர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். பாரத ஜாதியானது எல்லாவகையிலும் சுபிட்சமாயிருக்க வேண்டு மென்ற உன்னத லட்சியத்தை அடைவதற்கு இந்த ஒத்துழையா இயக்கம் சரியான சாதனமா வென்பதைப்பற்றி, மேலே நாம் கூறிய வாறு அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சாதனத்தைக் கையாண்டதினால் இந்திய தேசீய வாழ்வைப் பொறுத்தமட்டில் சில நன்மைகள் உண்டாயிருக்கின்றன வென்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நன்மைகள் காலவேகத்தை யொட்டி யனவாயில்லாமலிருக்கலாம்; நாம் அடைய வேண்டிய லட்சியத்தை உத்தேசிக்கையில், மிகச் சொற்பமாயிருக்கலாம். அதுவேறு விஷயம். ஆனால், நன்மைகள் உண்டாயிருக்கின்றன வென்பதை நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவை யாவை?

1. ஒத்துழையா இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து, அதாவது காந்தியடிகள் காங்கிரசின் மேலாதிக்கம் பெற்ற காலத்திலிருந்து, அரசியலில் எல்லா ஜனங்களுக்கும் ஒரு சிரத்தை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் அறிந்தார்க்கு மட்டும் அடைக்கலம் அளித்துவந்த இந்த அரசியலில் நமக்கும் உரிமையுண்டு, இதனை யறிவது நமது கடமையென்று, பாமர ஜனங்களென அர்த்தமில்லாமல் அழைக் கப்படுகிற சாதாரண ஜனங்கள் கருதலானார்கள்.

2. இப்படி இவர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட பகிரங்கமான பலன் என்ன வென்றால், பொதுக்கூட்டங்களில் ஆங்கில பாஷையில் பேசி, ஜனங்களின் கரகோஷத்தையும் அதிகாரிகளின் கைகுலுக்குதலையும் பெறுவதுதான் சிலாக்கிய மென்றிருந்த போலி கௌரவம் போய் விட்டது. அவரவர்களுடைய தாய் மொழியில் பேசுவது நல்லதென்றும், தாய்மொழியின் மூல மாகவே ஒரு தேசத்தின் தன்மதிப்பு வளருமென்றும் ஆங்கிலமறிந்த அரசியல்வாதிகள் எண்ணி அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தார்கள். பொதுவாக தேச பாஷைகளுக்கு ஒரு கௌரவம் ஏற்பட்டது.

3. இந்தியாவிலே யுள்ளவரனைவரும் ஒரே ஜாதியினர் என்ற உணர்ச்சி லேசாக ரேகை விட ஆரம்பித்தது.

4. ஆடம்பர வாழ்விலிருந்த மோகம் போய், எளிய வாழ்வு என்று சொல்லப்படுகிற இயற்கை வாழ்விலே ஒரு பற்றுதல் உண்டா யிற்று.

5. அன்றாட வாழ்க்கையின் தேவைகளை அந்நியப் பொருட் களைக் கொண்டு பூர்த்தி செய்வதென்ற பழக்கம் குறைந்தது. சுய தேசத்தில் உண்டாகிற பொருள்களை உபயோகிக்க வேண்டு மென்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் சுதேசத் தொழில் முயற்சிகள் பல தொடங்கப் பட்டன.

6. தமக்கென்று ஒரு நாகரிக பரம்பரை உண்டு என்பதை, அடிமைத் தனத்தின் காரணமாக அடியோடு மறந்திருந்த இந்தியர்கள், அப்பொழுதிருந்து அந்தப் பரம்பரையைப் பற்றிச் சிறிது சிந்திக்கப் தலைப்பட்டார்கள்.

7. ஆளப்படும் நாட்டைப்பற்றி அது காறும் அசட்டை மனப் பான்மை கொண்டிருந்த ஆளும் சாதியினர், இப்பொழுது அதன் அரசியல் துடிப்புக்களை அறிந்த கொள்ள ஆவல் கொண்டார்கள்.

8. இந்திய மகாஜனங்களிடத்தில் குடி கொண்டிருந்த அச்சம் விலகத் தலைபட்டது. அதன் தானத்தில் அஞ்சாமை குடிகொள்ள ஆரம்பித்தது.

இவற்றில் சிரேஷ்டமானவை இரண்டு. ஒன்று, பாரத ஜாதிக்கு அதன் நாகரிக பரம்பரையை உணர்த்தியது; மற்றொன்று, இந்திய மகாஜனங்களுக்கு அளித்த அஞ்சாமை யென்னும் ஆயுதம். காந்தியடிகளின் மகத்தான இந்த இரண்டு நன்கொடைகளுக்காகவுமே அவரை நாம் என்றும் நன்றியுடன் போற்றவேண்டும்.

எப்படி அன்பும் துன்பமும் இணைபிரியாச் சகோதரர்களோ அதைப் போல் அடிமைத்தனமும் கோழைத்தனமும் இணைபிரியா சகோதரர்கள். எதனால் எது ஏற்பட்டது, அதாவது அடிமைத்தனத்தினால் கோழைத்தனம் ஏற்பட்டதா, அல்லது கோழைத்தனத்தினால் அடிமைத்தனம் ஏற்பட்டதா வென்பதை நாம் பாகுபடுத்திக் கூறமுடியாது. ஒன்றொழிந்தால் மற்றொன் றொழியும்; ஒன்றிருந்தால் மற்றொன்றிருக்கும். அவ்வளவு தான் நமக்கும் தெரியும். இவ்விரண்டும் ஒரு ஜாதியை, பனிபோல் மூடிக் கொண்டு விட்டால், அந்த ஜாதி இருக்கிற இடமே தெரிவதில்லை. அஃது இருந்தும் இல்லாமலேயே இருக்கிறது. இதனாலேயே நமது பெரியோர்கள் அஞ்சாமையைப்பற்றி அதிகமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள்.

அஞ்சாமை யல்லாற் றுணை வேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் செயின்

என்ற வள்ளுவர் வாக்கு முதல் அச்சமில்லை; அச்சமில்லை யென்ற பாரதியாரின் வாசகம் வரையில், எந்த மகா புருஷர்களுடைய திருவாக்குகளைப் பரிசீலனை செய்து பார்த்தோமானாலும் அவற்றிற்கு அடிப்படையில் அஞ்சாமையென்ற ரேகை ஒளிவிட்டுக் கொண்டிருக் கிறதைக் காண்கிறோம். அஞ்சாமை என்கிற ஆயுதத்தைத் தரித்துக் கொண்டிருந்ததினால் தான், திருநாவுக்கரசர், நாமார்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்; நரகத்திலிடர்ப் படோம்; நடலையில்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணி வோமல்லோம்; இன்பமே என்னாளுந் துன்பமில்லை என்று வீறு கொண்டு பேசினார். அஞ்சாமையுடையவர்கள்தான் மனிதத் தன்மையில் சுலபமாக வளர்ச்சி பெறக்கூடும். இந்தியர்கள், மனிதர்களாக மதிக்கப்படுவ தில்லை யென்று சொன்னால், அதற்கு அவர்களிடத் திலே குடிகொண்டிருக்கிற அச்சந்தான் காரணம். சுவாமி விவேகானந்தர் ஓரிடத்தில் கதறுகிறார்: நான் மனிதர்களை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால், இந்தியாவில் ஸ்திரீகளும் பேடிகளுந்தான் இருக்கிறார் களென்பது எனக்குத் தெரியும். விவேகானந்தர் செய்து கொண்ட இந்தச் சங்கல்பத்தை காந்தியடிகள் செயலில் கொண்டுவந்து காட்டியிருக்கிறார்.

காந்தியடிகளை ஒரு வீரன் என்று முதலில் குறிப்பிட்டோம். வீரமென்பது புறத்தோற்றத்திலே இல்லை. சீலத்திற்கும் சாந்தத் திற்கும் இடங்கொடுத்து அவைகளைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகிற எந்தத் திண்ணிய நெஞ்சமுண்டோ அந்த நெஞ்சத்திலேதான் வீரத்திற்கு இடமுண்டு காந்தியடிகள் இத்தகைய நெஞ்சுடையவர். ஆனால், இந்த நெஞ்சத்திலிருந்து, இமயம் போன்ற உறுதியான இந்த இருதயத்திலிருந்து, கருணையானது சதா பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் அவருடைய அரசியல் விரோதிகளும் அவரைக்கண்டு அஞ்சவும் அஞ்சு கிறார்கள்; அதே சமயத்தில் பக்தியும் செலுத்துகிறார்கள். ஜான் குந்தர் என்ற பிரசித்த பிரயாண நூலாசிரியன், காந்தியடிகளைப் பின்வருமாறு மதிப்பிடுகிறான்:-

காந்தியடிகளின் வாழ்க்கை முழுவதும் வீர வாழ்க்கையாகவே இருக்கிறது… அவர் விதியை எதிர்த்துப் போராடினார். அது மட்டுமல்ல, அந்த விதியைக் காட்டிலும் வலிமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துப் போராடினார்.

காந்தியடிகளிடத்தில் அஞ்சாமை குடிகொண்டிருக்கிற தென்று சொன்னால், அதற்குக் காரணம் என்ன? இதனைச் சிறிது சுருக்கமாக இங்கு எடுத்துக்காட்ட விழைகிறோம். யாரொருவர், தமக்கென்று ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல், எல்லாம் பிறருக்காகவே என்று வாழ்க்கையை நடத்துகிறாரோ அவர், யாருக்கும் அச்சப்பட வேண்டியதில்லை. உலகத்திற்கு எவனொருவன் அடிமைப் பட்டுக் கிடக்கிறானோ அவன் தான் அஞ்சி அஞ்சி வாழ்க்கையை நடத்துகிறான். உலகத்தை எவனொருவன் அடிமைப் படுத்திக் கொள்கிறானோ, அவன் யாருக்கும் அஞ்சவேண்டுவதில்லை. உலகத்திலே தோன்றிய ஒவ்வொரு ஜீவராசியும் ஏதோ ஒரு விதமான அச்சத்துடன் தான் வாழ்கின்றது; அதனால் துன்பத்தையும் அடைகிறது ஸர் எட்வின் ஆர்னால்ட் என்ற ஆங்கில அறிஞன் தனது ஆசிய ஜோதி என்ற நூலில், இதை மிக அழகுபடக் கூறியிருக்கிறான். துறவுத் தத்துவத்தின் ரகசியமே இதுதான். அதாவது, எவனொருவன், தனக்கு, தனக்கு என்று எல்லாவற்றையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு எல்லாரையும் ஆளப் பார்க்கிறானோ அவன் எல்லாவற்றையும் இழந்து எல்லாருக்கும் அடிமையாகி விடுகிறான். அதே பிரகாரம் எவனொருவன், தன்னுடைய சர்வத்தையும் பிறருடைய நலனுக்காக அர்ப்பணம் செய்கிறானோ அவன் சர்வத்தையும் அடைகிறான்; சர்வமான பேருக்கும் எஜமானனாகிறான். அப்படித் தன்னுடைய தியாகத்தினால் எஜமான பதவியை அடை கிறவன், யாருக்கு அஞ்ச வேண்டும்? அஞ்ச வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லையே. அஞ்சவும் அவனுக்குத் தெரியாதே. அச்ச மில்லாதவிடத்தில் அன்பு குடிகொள்வது இயற்கை யல்லவா? இதனாலேயே அஞ்சாமையும் அன்பும் ஒரே மரத்திலிருந்து பிரிகிற இரண்டு கிளைகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த மரம் யாது? அதுதான் துறவு. துறவு என்று சொன்னால், தன்னையே இழந்து விடுவது என்று அர்த்தமல்ல. தன்னுடைய தென்று சொல்லி எதனெதன் மீது பற்று வைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பற்றைத் துறந்து விடுவது என்பதுதான் அர்த்தம். அந்தத் துறவானது மனிதத் தன்மையிலே வளர்ந்து சேவையாகப் பரிணமிக்க வேண்டும். தன்மீது வைத்திருக்கும் பற்றைத் துறக்கிறவன் பிறர் மீது காதல் கொள்கிறான். இந்தக் காதலுக்கு பிரேமை என்று பெயர். எனவே, துறவு, அஞ்சாமை, அன்பு, சேவை என்பன ஒன்றை யொன்று பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலி மாதிரி. பர்த்ருஹரி என்ற வடமொழிப் புலவன், தனது வைராக்கிய சதகம் என்ற நூலில், துறவையும் அஞ்சாமையையும் எப்படிப் பொருத்தப் படுத்திக் கூறுகிறான் பாருங்கள்:

செல்வத்திலே வறுமை பயம், அறிவிலே அறியாமை பயம், அழகிலே வயோதிகம் என்ற பயம், புகழிலே புறங் கூறுகிறவர் களைப் பற்றின பயம், வெற்றியிலே பொறாமை என்கிற பயம், தேகாபிமானத்திலே மரண பயம், இப்படி உலகத்திலுள்ள எல்லா வற்றிலும் பயம் குடிகொண்டிருக்கிறது. எவனொருவன் எல்லா வற்றையும் தியாகஞ் செய்து விடுகிறானோ அவன்தான் பயப்படாதவன்.

இத்தகைய அஞ்சாமை காந்தியடிகளிடத்தில் நிரம்பியிருக்கிறது. இதனாலேயே, அஹிம்சை என்பது அவருக்குச் சர்வ சாதாரணமான ஓர் ஆயுதமாயிருக்கிறது.

உத்தம வீரர்களுடைய லட்சணம் என்னவென்றால், அவர்கள் ஆபத்துக்குப் புறமுதுகு காட்ட மாட்டார்கள்; ஆனால் ஒரு கொசுவினிடத்திலும் இரக்கங் காட்டுவார்கள். அவர்கள் ராட்சத பலமுடையவர்கள்; அந்தப் பலத்தைத் தமது நலத்திற்காக உபயோகிக்கவே மாட்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் மனிதத்தன்மை குடிகொண்டிருக்கிறது. சுமார் ஒரு தலைமுறைக்கு முன்னர் காந்தியடிகளுக்கு எதிரியாயிருந்த தளபதி மட் அவருடைய (அதாவது காந்தியடிகளுடைய) எந்தக் காரியத்திலும் ஒருவித மனிதத் தன்மை குடிகொண்டிருந்ததையே இங்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். அவர் தென்னாப்பிரிக்காவில் சிறையிலிருந்த போழ்து என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடிகளைத் தயாரித்து, விடுதலையானவுடன் எனக்குச் சன்மானமாக அளித்தார்! என்று பாராட்டிச் சொல்லியிருப்பதை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

காந்தியடிகளின் ஒவ்வொரு செயலிலும் மனிதத் தன்மை ஒளிவிட்டு வீசுவதாலேயே அவரை ஒரு மனிதர் என்று அழைக் கிறோம். வெளிப் பார்வைக்கு அவர் எல்லோரையும் போல் ஒரு சாதாரண மனிதராகவே காணப் படுகிறார். எல்லா மகான்களும், எல்லா வீரர்களும், எல்லாத் தியாகிகளும் இப்படித்தான் காணப்படு கிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளமானது, எவ்வித சஞ்சலத்திற்கும் இடங்கொடாமல் சாந்தமாக இருக்கிறது. ரோமெய்ன் ரோலந்து, காந்தியடிகளைப் பற்றிக் கூறும் ஒரு வாக்கியம் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது:-

அவருடைய அறிவு, அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது. அவருடைய இருதயம், தான் என்ற அகங்காரமில்லாமல் இருக்கிறது. மற்றெல்லா மனிதர்களைப் போல அவரும் ஒரு மனிதரே.

மகா புருஷராகவும், வீரராகவும், மனிதராகவும் முக்கோணத்திலிருந்து நமக்குக் காட்சியளிக்கிற காந்தியடிகள் இன்று எழுபத்து மூன்றாவது வயதையடைந்திருக்கிறார். அவருடைய வயது முதுமையாகிக் கொண்டு போகிறது; ஆனால் அவருடைய வாழ்வு இளமையாகிக் கொண்டு வருகிறது. வயதாக ஆக, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ள வேண்டு மென்று சொல் வார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கை, வயதாக ஆக விரிந்து கொண்டு போகிறது. அவர் ஒரு ஞானி போலிருக்கிறார். ஆனால் உலக மெல்லாம் அவருக்குக் குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும், பொருளும் வேண்டுமென்று பிச்சை கேட்கிறார். ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக் காண ஏழை மக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக் கணக்கானவர்களுடைய நிரந்தர உபவாசத்தைத் தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர்களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்றுகோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்கு தாம் ஓர் ஊன்று கோலாயிருக்க வேண்டுமென்ற ஆவலினால். அவர், கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுகிறார். ஆனால், அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத் தான் வணங்குகிறார். அவருடைய லட்சியத்திலே, அதாவது பாரத ஜாதியின் மகோன்னத வாழ்விலே நமது பார்வையைத் திருப்பி, அந்த நல்வாழ்வுக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதன் மூலம் அவரை வணங்குவோமாக.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *