
இளங்கோவும் சிலம்பும்
கி. ஆ. பெ. விசுவநாதம்
இளங்கோவடிகள்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதி தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கி உதவிய பெருமகன் இளங்கோ அடிகள். சேரநாட்டு மன்னன் நெடுஞ்சேரலாதனுடைய இளைய மகன். சேரன் செங்குட்டுவனின் தம்பி.
இளையமன்னன் ஆதலின் ‘இளங்கோ’ என்று அழைக்கப் பெற்றார். துறவுபூண்டதும் அடிகள் என்பதும் சேர்ந்து இளங்கோ அடிகள் என்றாயிற்று. அவரது இயற்பெயர் என்ன என்பதை அறிய முடியவில்லை. இவரைச் சேரமுனி என்றும் அழைப்பர்.
இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனத் தெரியவருகிறது. இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன் சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோவில் விழாவிற்கு வந்திருந்ததாகச் சிலப்பதிகாரத்தினாலும், இலங்கை மகாவம்சம் என்ற நூலினாலும் அறிய முடிவதால், அக் காலம் ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்னையது என்று தெரிகிறது.
இவர் காலத்துப் புலவர்கள் சங்ககாலத்துப் புலவர்களல்லர். மதுரைக் கூலவாணிகன் சாத்தனார். பரணர் முதலியோரே ஆவர்.
இவர் துறவு பூண்ட வரலாறு மிகவும் வியப்பிற் குரியது. வடபுலத்திலிருந்து சேரநாட்டுக்குவந்த நிமித்திகன் (கணிகன்) மன்னனது அரண்மனையில் தந்தை நெடுஞ்சேரலாதனையும் அவன் மக்கள் இருவரையும் உற்றுப்பார்த்து, நெடுஞ்சேரலாதனின் காலத்திற்குப்பின் சேரநாட்டை முடிசூடி ஆளும் தகுதி இளையவனுக்கே இருக்கிறது என்று கூறினான். அதைக் கேட்டதும் இளங்கோ தன் தமையனின் முகவாட்டத்தைத் தவிர்க்கவும், தங்கள் அரசபரம்பரை முறையை நிலைநிறுத்தவும் எண்ணி உடனே துறவு பூண்டார். இது பெரிதும் வியப்பிற்குரிய ஒன்று.
துறவு பூண்டதும் வஞ்சி நகரத்தின் கிழக்கே குணவாயிற் கோட்டம் என்ற இடத்திலிருந்து, தவ நெறியை மேற்கொண்டு வாழ்ந்ததோடு, தமிழ் ஆயும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
இளங்கோவடிகள் நாட்டைத் துறந்தார். முடியைத் துறந்தார். நல் அணிகளைத் துறந்தார். அரண்மனையைத் துறந்தார். பட்டு, பஞ்சணைகளைத் துறந்தார். இளமையிலேயே இல்வாழ்க்கையையும் துறந்தார். எல்லா வற்றையுந் துறந்த இளங்கோவடிகளால் தமிழைமட்டும் துறக்க முடியவில்லை. அவரது துறவாத தமிழுக்கு இறவாத சிலப்பதிகாரம் இன்றைக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கிறது.
இளங்கோவடிகள் காலத்தைப்பற்றியும் சிலப்பதிகார காப்பியத்தைப் பற்றியும் மாறுபட்ட கருத்துக்கள் சிலவற்றைக் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த சில எழுத்தாளர்கள் கூறினர்; எழுதினர். ஆனால், அறிஞர் உலகம் அவற்றை ஏற்கவில்லை.
இவர் சமண சமயத்தைச் எல்லாச் சமயத்தின்மீதும்
ஒரு பொதுநோக்குடையவராகக் காணப்படுகின்றார். ஐயைக் கோட்டம், ஊர்க் கோட்டம், உச்சிக்கிழான் கோட்டம். பலதேவன் கோயில், நெடியமால் கோவில், ஆறுமுகன் கோவில், அருகன் கோயில், சாத்தன் கோயில் முதலிய பல தெய்வக் கோயில்களையும் இக்காப்பியத்தில் காட்டி, அதன் வழிபாடுகளையும் ஒரேயளவாகக் கூறியிருப்பது அவரது பொது நோக்கையே நமக்குக் காட்டுகின்றது. இதிலிருந்து இளங்கோவடிகள் அன்பு நெறியையும், அருள் நெறியையும், தமிழ் நெறியையும் தழுவிய பெருமனமும் பேராற்றலும் கொண்டவர் என்பது நன்கு விளங்குகிறது.
இவர் தன்னுடைய சேரநாட்டின் பெருமையை உயர்த்திக் கூறியிருக்கும் அளவிற்குச் சோழநாட்டின் பெருமையையும், பாண்டிய நாட்டின் பெருமையையும் உயர்த்திக் காட்டியிருப்பது, இவருடைய தூய்மையான மனத்தையும் நடுவுநிலைமையையும் நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது.
இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் இவர் பெரும் புலமை பெற்றவர்.
தமிழகத்தில் இன்று கிடைக்கின்ற பழமையான இலக்கண இலக்கிய நூல்கள் மூன்று. அவை தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம். இம்மூன்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக இல்லாமல் முதல் நூல்களாகவே அமைந்தவை. இதன் ஆசிரியர்கள் முறையே தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் என்றாவர். இம் மூவரும் முனிவர்கள். ஆகவே இளங்கோவடிகள் தொல்காப்பியரோடும், திருவள்ளுவரோடும் வைத்து எண்ணப்பட வேண்டியவர். இவர்களது காலமும் முறையே மூவாயிரம், இரண்டாயிரம், ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முன்பாகும். ஆகவே இவர் பிற்காலத்திலே தோன்றிய முனிவரல்லாத, மொழிபெயர்ப்பு நூல்செய்த புலவரோடும் வைத்து எண்ணப்பட வேண்டியவரல்லர்.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயரை முதன்முதலில் வைத்த பெருமை இளங்கோவடிகளுக்கே உரியது. இவ்வுண்மையைத் “தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை” என்ற அவரது வாக்கால் அறியலாம்.
தமிழகத்தே தோன்றிய புலவர் பெருமக்களெல்லாம், தாங்கள் சிறு நாட்டிலிருந்தாலும், அவர்கள் செய்த நூல்களில் முதற்பாடலின் முதலடியில் முதற்சொல்லாக உலகத்தை வைத்தே செய்திருக்கிறார்கள். சேக்கிழார்- பெரியபுராணம்— “உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்’; கம்பர்-இராமாயணம்-“உலகம் யாவையும் தாமுளவாக்கலும்”; நக்கீரர் -திருமுருகாற்றுப்படை- “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு”; நம்பி- அகப் பொருள்- “மலர்தலை உலகத்து வாழ்வோரெல்லாம்”; கபிலர்- அகவல் “உலகத்தீரே உலகத்தீரே”; திருவள்ளுவர்- திருக்குறள்- “ஆதிபகவன் முதற்றே உலகு”; இளங்கோவடிகளும் இம்மரபைப் பின்பற்றியே “அங்கண் உலகளித்தலால் திங்களைப் போற்றுதும்” என்று காப்பியத்தைத் தொடங்கியிருப்பது நம்மை மகிழ்விக்கிறது.
இளங்கோவடிகள் கண்ணகியைக் குலமகளாகவும், மாதவியைக் கலைமகளாகவும் காட்டி, கற்பின் திறத்தில் இருவரையும் ஒன்றாகவே வைத்து இக்காப்பியத்தைப்
படைத்திருப்பது இளங்கோவடிகளின் பெருமனத்தைப் புலப்படுத்துகிறது. மாதவியின் கலைத்திறன் அனைத்தையும் மூன்றாவது காதையாகிய அரங்கேற்றுகாதையில் புகுத்தி, ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே உள்ள தமிழகத்தின் இசைக்கலையின் நுணுக்கங்களையும் அதன் விளக்கங்களையும் விரிவாகக் கூறியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மதுரை கூலவாணிகன் சாத்தனார் என்பவரும் சீத்தலை சாத்தனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கருதி வரலாற்றுச் செய்திகளில் குழப்பத்தை ஏற்படுத்து கின்றனர். இவ்விருவரும் ஒருவர் அல்லர். சீத்தலை சாத்தனார் என்பவர் சீத்தலை என்னும் ஊரில் பிறந்தவர். சங்க காலத்தவர். மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பவர் மதுரையில் பிறந்தவர்; இக்காப்பியத்தைச் செய்ய இளங்கோவடிகளுக்குத் துணை புரிந்தவர். இவர்கள் இருவருக்கும் இடை டயே உள்ள காலமும் இருநூறு ஆண்டுகள் ஆகும்.



