

இளங்கோவும் சிலம்பும்
கி. ஆ. பெ. விசுவநாதம்
சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை.
‘கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்றும் கூறிய பாரதியார், சிலப்பதிகாரத்தைக் கூறும்போது, “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என உள்ளம் குளிர்ந்து பாடுகின்றார்.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காப்பியம் என்றாலும், இன்னும் எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூடப் படிப்போர்தம் நெஞ்சையள்ளும் சீர்மையைச் சிலப்பதிகாரம் பெற்றிருக்கிறது. முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரித்தாகி, சேர சோழ பாண்டிய நாட்டினரைத் தொடர்புபடுத்தித் தமிழ் நாட்டின் சிறப்பை உலகுக்கு உணர்த்திக்காட்டும் முத்தமிழ்க் காப்பியமாக இது விளங்குகிறது.
தமிழின் தொன்மை, தமிழ் மக்களின் பண்பாடு, உயரிய வாழ்க்கை, செல்வ வளம், அரசியல், சமுதாயம், கலை, தொழில் முறைகள், வணிகம், வெளிநாட்டுத் தொடர்புகள் முதலிய பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தும் சீரியதோர் தமிழ்க் கருவூலமாகச் சிலப்பதிகாரம் இருந்து வருகிறது.
அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி போன்ற அறிஞர் பெருமக்களும், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மற்றும் தமிழன்பர்கள் பலரும் இக் கருவூலத்தில் நுழைந்து, முத்து மணிகளைக் கொணர்ந்து அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.
‘இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’
என்பதற் கிணங்க, நாளும் தமிழாய்ந்து -தமிழ் வளர்த்து – தமிழ் காத்துவரும் முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள், தம் ஆய்வுப் பார்வையை இம் முத்தமிழ்க் காப்பியத்தின் கண் செலுத்தியுள்ளதன் விளைவே இந்நூல்.
நூல் கைக்குச்சிறியதாயிருப்பினும், கருத்திற்குப் பெரிதாயுள்ளது. சொல்ல வந்ததைத் தெளிவாகவும், சுருக்கமாவும், இனிமையாகவும் சொல்லுகின்ற பாங்கு முத்தமிழ்க் காவலர் அவர்களுக்குக் கைவந்த தொன்றாகும். சான்றுக்கு ஒன்று:
“இளங்கோவடிகள் நாட்டைத் துறந்தார். முடியைத் துறந்தார். நல் அணிகளைத் துறந்தார். அரண்மனையைத் துறந்தார். பட்டு பஞ்சணைகளைத் துறந்தார். இளமையிலேயே இல் வாழ்க்கையையும் துறந்தார். எல்லாவற்றையும் துறந்த இளங்கோவடிகளால் தமிழை மட்டும் துறக்க முடியவில்லை. அவரது துறவாத தமிழுக்கு இறவாத சிலப்பதிகாரம் இன்றைக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கிறது” (பக்.2).
இது போன்ற இனிய நடையழகுகள் இந்நூலில் அமைந்து நம்மை ஈர்க்கின்றன.
தமிழரிடத்தில் மூன்று என்ற எண்ணிக்கைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்பதைப் பற்பல மேற் கோள் காட்டி நிறுவுவதும் (பக். 7-9), பர்மாவே இந்திர லோகம் என்றும், இலங்கையே நாகலோகம் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்குக் காரணங்கள் காட்டுவதும் (பக். 9-10), சிலர் சொல்லுவதுபோல் காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையில் வேறொரு பெண்ணை மனத்தில் நினைத்துக் கோவலன் யாழிசை மீட்டவில்லை; தன் ஆருயிர் மனைவி கண்ணகியை நினைத்தே யாழிசை பாடினான் என்பதைக் கானல்வரிச் சான்று கொண்டு நிறுவுவதும் (பக்.15-16), கண்ணகி மாதவி முதலியோரின் பண்புநலம் காட்டுவதும் (பக்.33-35)-
இன்னும் இவைபோன்ற பற்பல கருத்துக் களைத் தக்க சான்றுகளோடு இந் நூலின்கண் நிலை நிறுத்திக் காட்டுவதும், நம் நெஞ்சில் நிலைக்கின்றன.
முத்தமிழ் சிறந்தோங்க நம் முத்தமிழ்க் காவலர் நலமுடன் நீடு வாழவேண்டும் எனத் தமிழன்னையின் சீர்மிகு திருவடிகளை வணங்குவோமாக.
அன்பன்,
க. செல்லப்பன்



