இளங்கோவும் சிலம்பும்
கி. ஆ. பெ. விசுவநாதம்

காப்பியத்தில் ஒரு பார்வை

    சிலம்பு தமிழ்த்தாயின் திருவடிகளில் இருந்து கொண்டு தமிழை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு தமிழை மட்டுமல்ல, முத்தமிழையுமே ஒலிக்கிறது.

    சிலப்பதிகாரம் காப்பியமாக மட்டுல்ல, வரலாற்று நூலாகவும் காட்சியளிக்கிறது.

    1800 ஆண்டுகளுக்குமுன் உள்ள தமிழகத்தையும் குறிப்பாகத் தமிழ் மன்னர்களையும், தமிழக மக்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது; தமிழகத்தில் பல்லவர் ஆட்சி கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலேயே காணப்படுகிறது. ஆனால் இந்நூலில் பல்லவர்களைப்பற்றிக் குறிப்பு ஒன்றுமே இல்லாததால், பல்லவர் ஆட்சிக் காலத்திற்கு முற்பட்டதே இந்நூல் என்று துணிந்து கூறலாம்.

    அக்காலத்திய பூம்புகார் நகரத்தின் சிறப்பைச் சிலப்பதிகாரமும், பட்டினப்பாலையும் நன்கு உயர்த்திக் காட்டுகின்றன. அவற்றுள் ஒரு வரி பூம்புகாரின் கடற்கரையில் உள்ள கப்பல்களில் முத்து, மணி, பவளம், அகில், சந்தனம் முதலியவைகள் ஏற்றப்பெற்று மேலை நாடுகளுக்குச் செல்ல நிற்கின்றன என்பது.

    இது நமக்கு என்னென்ன செய்திகளை அறிவிக்கிறது என ஆராயலாம்.

    1.மணி, மலையின் உச்சியில் விளைவது. அகில், சந்தனம், காடுகளில் விளைவது. பவளம் தீவுகளில் விளைவது.முத்து, கடலின் ஆழத்தில் விளைவது. அக்காலத் திய தமிழ்மக்கள் மலையின் உச்சியில் சென்று மணிகளையும் காடுகளின் ஊடே சென்று அகில் சந்தனங்களையும், தீவுகளுக்குச் சென்று பவளங்களையும், கடலின் ஆழத்திற்குச் சென்று முத்துக்களையும் கொண்டுவரும் ஆற்றல் படைத்திருந்தார்கள்.

    2. அவைகளைக் கொண்டு உள்நாட்டுத் தேவைகளை நிரப்பி, எஞ்சியுள்ளவைகளை(surplus) வெளி நாடுகளில் விற்கும் வாணிக முறையைக் கைக்கொண் டிருந்தார்கள்.

    3. கீழ்த்திசையை நோக்கிக் காற்று வருகின்றபொழுதும், அக்காற்றைப் பலதிசைகளிலும் வாங்கும் பாய்களை மரங்களில் கட்டி காற்று வரும் மேற்குத் திசையை நோக்கியே கப்பலை ஒட்டுகின்ற ஆற்றலைப் படைத்திருந்தார்கள்.

    4. பனி, மழை,காற்று,வெயில் முதலிய நான்கையும் தாங்கிப் பகலிலும் இரவிலும் கப்பலை ஓட்டி, விண்மீன்களின் துணைகொண்டு செல்லும் திசையறிந்து கப்பலை ஓட்டும் வானநூல் அறிவையும் பெற்றிருந்தார்கள்.

    5. அக்காலத்தில் கடற்கொள்ளைக் கூட்டமும், சுறாமீன் கூட்டமும் கப்பல்களைத் தாக்கி அழிப்பதுண்டு. அவற்றைத் தங்கள் கைகளில் உள்ள வாள்களால் எதிர்த்துத் தாக்கித் தம் பொருள்களைப் பாதுகாத்துப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தும் வலிமையும் பெற்றிருந்தார்கள். என்பவைகளை, 1800 ஆண்டுகளுக்குமுன் பழங்காலத்தில் இருந்த தமிழ் மக்களின் அறிவையும் திறமையையும், துணிவையும், வலிமையையும் இக்காப்பியங்கள் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் தமிழரிடத்தில் தமிழ்மொழியில் மூன்று என்ற எண்ணிக்கைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகம் மூன்று-மேலுலகம், கீழுலகம், இவ்வுலகம். தெய்வங்கள் மூன்று-பிர்மா, விஷ்ணு, ருத்திரன்; தமிழில் தாணு, மால், அயன். பெண் தெய்வம் மூன்று-சரஸ்வதி, லக்குமி, பார்வதி; நல்ல தமிழில் – கலைமகள், அலைமகள், மலைமகள்; தாமரையை வைத்துக் கூறினால், வெண் தாமரையாள், செந்தாமரையாள், பொன்தாமரையாள் எனக் கூறுவர். கிறிஸ்துவத்திலும் மூன்று-பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இஸ்லாமியத்திலும் மூன்று.- பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித்திருத்தல். புத்த சமயத்திலும் மூன்று- புத்தம் சரணம், தம்மம் சரணம், சங்கம் சரணம். சைவத்திலும் மூன்று- பதி, பசு, பாசம். சன்மார்க்கத்திலும் மூன்று- அன்புநெறி, அருள்நெறி, கருணைநெறி. காலம் மூன்று-இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம். பழம் மூன்று-மா, பலா, வாழை. தமிழ் மூன்று-இயல், இசை, நாடகம். தமிழ் எழுத்து யும் மூன்று-உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து. தமிழ் எழுத்தின் இனமும் மூன்று-வல்லினம், மெல்லினம், இடையினம். சொற்றொடரின் அமைப்பும் மூன்று – எழுவாய், பயனிலை, செயப்படு பொருள். இவற்றை நாம் நன்கு அறிவோம். இதே அடிப்படையில் தான் சிலப்பதிகாரம் தோன்றியிருக்கிறது எனத் தெரிகிறது. நாடு மூன்று சேர நாடு, சோழ நாடு பாண்டிய நாடு. மன்னர் மூவர்- சேர சோழ, பாண்டியர். அவர்கள் ஆண்ட தலைநகரங்கள் மூன்று-புகார், மதுரை, வஞ்சி. அத்தலை நகரங்களுக்கு எழுத்தும் மூன்று. பு -கா – ர் ம – து – ரை; வ -ஞ் – சி. காண்டமும் மூன்று-புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம். வணக்கம் மூன்று – திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும். தொடக்கம் மூன்று- பொதியிலாயினும், இமயமாயினும், பொதுவறு சிறப்பிற் புகாரேயாயினும். அடக்கம் மூன்று-அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றம் ஆவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுதலும். பாவகை மூன்று-இயற்பா, இசைப்பா. நாடகப்பா. இயற்பா வகையும் மூன்று—அகவற்பா. ஆசிரியப்பா, வெண்பா. இசைப்பா வகை மூன்று- விருத்தப்பா, வஞ்சிப்பா, களிப்பா. நாடகப்பா வகை மூன்று- கானல்வரி, வேட்டுவவரி, ஊர்சூழ்வரி. பதிப்பாசிரியர்கள் மூவர் – சுப்பராய செட்டியார் (1872), ஸ்ரீநிவாச ராகவாச் சாரியார் (1876),உ.வே.சா. (1892). உரையாசிரியர் களும் மூவர் அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா. இவை போன்ற பிறவும் மூன்றின் சிறப்பை உயர்த்திக் காட்டுகின்றன.

    சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தை ஆண்ட வேந்தர்களின் பெயர்கள் கரிகாற்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் எனத் தெரிகிறது.

    சிலப்பதிகாரத்தில் நாம் காணும் வியப்புக்குரிய செயல்களிலெல்லாம் உயர்ந்துநின்று நம் உள்ளத்தை வியப்படையச் செய்வது ஒன்றே ஒன்றுதான். அது பாண்டியன் அவையில் கண்ணகி நின்று நீதி கேட்கும் நிலையே.

    கண்ணகி ஒரு எளிய குடிமகள். அதுவும் வேற்று நாட்டுப் பெண். அவள் அடுத்த நாட்டு மன்னன் அவையிற் சென்று அறங்கூறி அவனை நடுங்கச்செய்வது நம்மையும் நடுங்கவைக்கிறது. 1800 ஆண்டுகளுக்கு முன்பு குடிமக்களுக்கு உள்ள உரிமையைச் சிலப்பதிகாரம் இன்றைக்கும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

    புகாரில் நடந்த இந்திரவிழா பர்மா நாட்டு மன்னன் புகார் நகருக்கு வந்துசென்ற நினைவு நாளாக இருக்குமென்று கருதுகிறேன். காற்றடித்துக் கப்பல் கீழ்த் திசைக்குச் சென்று பர்மா நாட்டை அடைந்தவன் அதை இந்திரலோகம் என்று கூறியிருக்க வேண்டும். அமராவதி நதி, வெள்ளையானை, அன்னப்பறவை, பொன், மணி, இரத்தினங்கள், இந்திரதனுசு முதலிய அனைத்தும் பர்மா நாட்டில்தான் இருக்கின்றன. தேவலோகப் பெண்கள் என்றும் இளமையாக இருக்கிறார்கள் என்பதையும், காலில் பொன்னால் நகை அணிந்திருக்கிறார்கள் என்பதை யும் படித்திருக்கிறோம். அவற்றையும் பர்மாவில்தான் காணலாம். பர்மியப் பெண்களின் கண் புருவங்களில் மயிர் குறைவாக இருப்பதால், அவர்கள் இமைப்பது தெரியாது. அதனாலேயே தேவலோகப் பெண்களை இமையா நாட்டத்தினர் என்று கூறியிருக்கின்றனர் போலும்.

    இவ்வாறே கடலில் திசை தப்பித் தெற்கே சென்றவர்கள் இலங்கையைக் கண்டு அங்கு நாகவணக்கம் இருப்பதால் அதை ‘நாகலோகம்’ என்று கூறினர் போலும்.

    புகார் நகரில் பட்டு நூலாலும் பருத்தி நூலாலும் மட்டுமல்ல, எலிமயிராலும் ஊசியால் பிணிக்கும் நுண்ணிய தொழில்களைச் செய்யும் பட்டுச் சாலியர் இருக்கும் இடங்கள் பல இருந்தன என்று சிலம்பு கூறுகிறது. இது தமிழகத்தின் அக்காலத்திய நெய்தல் தொழிலைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறது.

    கதையில் உள்ளவையும் இவை தான்.

    கோவலனும் கண்ணகியும் புகார் நகரத்திலுள்ள செல்வம் நிறைந்த வணிகர்களின் மக்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது கோவலனுக்கு ஈறெட்டு ஆண்டு (16), கண்ணகிக்கு ஈறாறு ஆண்டு (12). இவர்களுடைய இல்வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பது மாதவியின் நடனம். இதை அரங்கேற்று காதை நன்கு விளக்குகின்றது.

    மாதவி விலைமகள் மரபினளாக இருந்தும், கோவலன் மனைவியைவிட்டு அவளோடு இன்பம் துய்த்திருந்தும், சிலப்பதிகாரத்தில் சிற்றின்ப காமச்சுவையைப் பற்றி விளக்கிக் கூறாமல் கலையையும், கலை அழகையும், கலைச் சுவையையுமே விரிவாகக் கூறியிருப்பது இளங்கோவடி களின் பண்பாட்டையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது.

    கண்ணகி கணவனைவிட்டுப் பிரிந்து இருப்பதை அறிந்த தேவந்தி எனும் தோழி அவளைச் சோமகுண்டம், சூரியகுண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டத்தைத் தொழுதால் கணவனோடு சேர்ந்து இன்புறலாமென அறிவுரை கூறுகின்றாள். அதைக் கேட்ட கண்ணகி அது “பீடன்று” (பெருமைதராது)என்று கூறுகின்றாள். இதுவே கண்ணகி பேசிய முதல் பேச்சு. இதனால் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் தமிழகத்தின் கற்புநெறியைக் கண்ணகி கைக்கொண்டிருந்தாள் என அறியலாம்.

    இந்நூல் மூன்று மன்னர்களையும் மூன்று நாடுகளையும் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறியிருந்தாலும், இது ஒரு வணிகக்குடும்பத்தின், குடிமக்களின் காவியமாக, அதிலும் பெண் இனத்திற்குப் பெருமை தேடும் ஓர் உயர்ந்த காவியமாகவே அமைந்திருக்கிறது.

    “கண்ணின் நீர் கொள்ள உயிர்கொடுத்த
    கோவேந்தன் வாழியரோ”

    என்று வாழ்த்துரையில் கூறப்பெற்றிருப்பதையும்

    “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை”

    என்று வள்ளுவர் கூறியிருப்பதையும் பார்க்கும் பொழுது,

    துன்பப்படு வோரின் கண்ணீர்த்துளிகள் ஒரு வீரம் செறிந்த படையையும் அப்படைக்குரிய மன்னனையும் அழித்துவிடும் என்பதையே மெய்ப்பிப்பதாகும்.

    காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையின் அலைகள் இறாமீன்களை வழங்கிவிட்டு பூமாலைகளை இழுத்துச் சென்றன என்று கற்பனை செய்து பாடியுள்ளார். அதற்கு மாறாக இளங் கோவடிகள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் அலைகள் முத்துக்களை வழங்கிவிட்டு மலர்மாலைகளை இழுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இது நயமுடையதாகக் காணப்படுகிறது.

    திருமண வாழ்த்துப் பாடலில் ஆங்குக் கூடியுள்ள பெண்கள் “காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல் தீது அறுக” என்று வாழ்த்துவதாக இளங்கோவடிகள் கூறியிருக்கிறார். இது பின்னே காதலர் பிரிவதையும். கவவுக்கை நெகிழ்வதையும், தீமைகள் நடப்பதையும் முன்னதாகவே கூறியதாக நமக்குப் புலப்படுத்துகிறது.

    பாரதியார் தமிழ்நாட்டைக் குறிப்பிடும்பொழுது “கம்பன் பிறந்த நாடு” என்று மட்டுமே கூறினார். வள்ளுவனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவனைப் பெற்று வளர்த்து உலகுக்கு வழங்கிய நாடு என்று கூறினார், சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கூறும்பொழுது அதைத் தனக்கென்றே படைத்துக்கொண்ட நாடு என்று கூறுகின்றார்.இது சிலப்பதிகாரத்தின் சிறப்பைப் பெரிதும் பாராட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

    டாக்டர் இராசமாணிக்கனார் அவர்கள், ‘கண்ணகி திருமணத்தில் தாலி அணியவில்லை. மங்கல அணி என்பதற்கு இயற்கை அழகு என்றே பொருள். அது தாலி அல்ல’ என்று பல மேற்கோள்கள் காட்டியும், அடியார்க்கு நல்லார் உரையைச் சுட்டிகாட்டியும் நிலை நாட்டியிருக்கிறார். “கோவலனை விட்டுத் தனித்திருந்த போது மங்கல அணியைத் தவிர பிற அணிகளை அவள் அணியாதிருந்தாள்” என்று இளங்கோவடிகள் கூறியிருக் கின்றார். இதில் மங்கல அணி என்பது தாலியைத்தவிர வேறு எதுவாக இருக்கலாமென்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

    நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம் வீரம், வெகுளி, உவகை, நடுநிலை ஆகிய ஒன்பது சுவைகளும் இக் காப்பியத்தில் திகழ்கின்றன. என்றாலும் அவலச்சுவையும் வீரச்சுவையும் இக்காப்பியத்துள் உயர்ந்து சிறந்து நிற்கின்றன.

    தமிழ்நாட்டிற்கு என்று ஒரு வரலாறு இல்லை; தமிழ் மக்களுக்கு என்று ஒரு வரலாறு இல்லை; என்ற குறையைப் போக்க இந்நூல் ஒரு வரலாற்றுக் காப்பியமாகத் திகழ்வதோடு, தமிழின், தமிழரின், தமிழகத்தின் கலைக்களஞ்சியமாகவும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *