ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்
ப. ஜீவானந்தம்

திருச்சி நகரப் பொதுமக்களே ! ! அன்புள்ள தோழர்களே ! ! கடந்த நான்கு நாட்களாக மகாநாடு நடத்தி, அதில் நிறைவேற்றிய தீர்மானத்தை விளக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட் டிருக்கிறது.

இந்த மகாநாடு கூட்டப்பட்ட சந்தர்ப்பத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எனக்கு முன் பேசிய தோழர்களும் கூறினார்கள். நானும் கூறுகிறேன்.

இது கம்யூனிஸ சகாப்தம்

வால்டர் லிப்மன் யார் என்பது ”ஹிந்து’ பத்திரிகை படிப்பவர்களுக்குத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகா உலகிலே தலை சிறந்த அரசியல் விமர்சகர்களில் அவரும் ஒருவர். அவரது கட்டுரைகளை ஹிந்து பத்திரிகையில் படித்தவர்கள் அநேகர் இங்கு இருப்பார்கள். வால்டர் லிப்மனை மென்னஸோடா என்ற அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தார்கள். ‘மயக்கத்தின் மரணம்’ என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அவர் கூறியதை அப்படியே சொல்லுகிறேன், கேளுங்கள் :

” எகிப்து நாட்டில் தாலமி என்ற வான நூல் வல்லுனர் இருந்தார். அவர், பூமி பிரபஞ்சத்தின் மையமாக இயங்குகிறது என்றார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த இதாலிய வான நூல் வல்லுனரான கோப்பர் நிகஸ் என்பார், பூமி சூரிய மண்டலத் தில் ஒரு கிரகம் மாத்திரமே” என்று கூறினார். இந்த மாறுதலைப் போல், சிறிது காலத்துக்கு முன் வரையில் அரசியல் பிரபஞ்சத்தின் மையமாக விளங்கிய மேலைநாடுகள், இன்று விரிவடைந்துள்ள சூரியமண்டலத்தில் ஒரு கிரகமாகிவிட்டது. அமெரிக்காவும் அவற்றில் ஒரு கிரகம், வேண்டுமானால் பெரிய கிரகம் என்று கூறலாம். அவ்வளவு தான்” என்றார் லிப்மன்.

தமிழ்ப் பெருங்குடி மக்களே! முதலாளித்துவ விமர்சகனான வால்டர் லிப்மனை இப்படிக் கூறும்படி நிர்ப்பந்திக்கக் கூடிய ஒரு சகாப்தத்தில் இங்கே நாம் கூடியிருக்கிறோமென்பதை உங்கள் கவ னத்துக்குக் கொண்டு வருகிறேன்.

ராபர்ட் பூத்பி என்பவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சர்ச்சிலின் கன்ஸர்வேடிவ் (மாறுதல் வேண்டாதார்) கட்சி அங்கத்தினர். கடந்த அக்டோபர் மாதம் ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் அவர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா? கம்யூனிஸம் மேலைநாடுகளைத் தோற்கடித்துவிட்டது. செயற்கை கிரகங்களை விடுவதிலும், ஜலவாயு ஆயுதங்களிலும், இராஜ தந்திரத்திலும், தொழில் வளர்ச்சியிலும், இயந்திர நுட்பத் திறமையிலும், சகல துறைகளிலும் கம்யூனிஸம் முன்னேறிவிட்டது” என்று எழுதினார்.

ஏகாதிபத்தியவாதியாகிய பூத்பியை கம்யூனிஸத்தைப் பற்றி இவ்விதம் கருத்து தெரிவிக்கும்படி பிடரியைப் பிடித்து உந்தியிருக்கிற ஒரு சகாப்தத்திலே நாம் வாழுகிறோம், (கரகோஷம்.)

“அண்மையில் இந்திய அரசாங்கத் தலைவர் பண்டித ஜவஹர் லால் நேரு தமிழ் ராஜ்யத்தில் சுற்றுப் பிரயாணம் நடத்தினார். சென்னைக்கு வந்ததும், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் “இந்த சகாப்தம் செயற்கைச் சந்திரன் சகாப்தம்” என்று கூறினார். இதன் அர்த்தம் என்ன?

கம்யூனிஸம் உலகத்தை மட்டுமல்ல, பிரபஞ்சத்தையே ஆக்ர மித்துக் கொண்டிருக்கிறது. (பலத்த கரகோஷம்)

அப்படிப்பட்ட சகாப்தத்தில் நாம் இங்குக் கூடியிருக்கிறோம். இன்று கம்யூனிஸம் உலகத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

பேசாதவர்கள் பேசுவது ஏன் ?

“அமெரிக்க ஐக்கிய நாட்டில் தென்பகுதியில் சென்று பேசுகிறபொழுது, பழுத்த ஏகாதிபத்தியவாதியான பார்ன்ஸ் என்பான், ஜனநாயகத்தைப்பற்றி வெண்ணையாய் உருகி, நெய்யாய் ஒழுகவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஏன்? அவ்வாறு பேசாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள். அவர்கள் என்றால் எவர்கள்? (சிரிப்பு;) அந்தப் பக்கம் என்றால் எந்தப் பக்கம்? (மீண்டும் சிரிப்பு) அவர்கள், நீக்ரோக்கள்! (கர கோஷம்) அந்தப் பக்கம், கம்யூனிஸ்ட் முகாம்! (மீண்டும் கர கோஷம்) ஆகவே கம்யூனிஸத்தின் செல்வாக்கு நீக்ரோ மக்கள் எல்லோரையும் இழுத்துக் கொள்ளாமலிருக்க பார்ன்ஸ் நிர்ப்பந்தமாக ஜனநாயகம் பேசவேண்டியதேற்பட்டிருக்கிறது.

“நிறத்துவேஷம் பயங்கரமாகத் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் நீக்ரோக்களை வலை வீசிப் பிடிக்க ஜனநாயகம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுமட்டுமல்ல.”

“முழுச் சம்பளப் பிரச்னையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏகாதிபத்யவாதிகள் இன்று ஆதரவுப் பேச்சுப் பேசுகிறார்கள். ஏன்? இல்லையானால், அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள்

(சிரிப்பு) பாதிச் சம்பள பென்ஷனை எடுத்துக் கொள்ளுங்கள்! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள். (சிரிப்பு) பெண்ணுக்கும் ஆணுக்கும் சம சம்பளப் பிரச்னை எடுத்துக்கொள்ளுங்கள்! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடுவார்கள் (சிரிப்பு). நிறத்துவேஷத் தடைச் சட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இல்லையானால் அவர்கள் அந்தப் பக்கம் போய்விடு வார்கள் (சிரிப்பு).

‘இது மாதிரியான பிரச்னைகளையெல்லாம் இதுவரை பேசாதவர்கள் இன்று பேசுகிறார்கள். ஏன்? இல்லாவிட்டால் அவர்கள் அந்தப் பக்கம் போய் விடுவார்கள்.

“மேற்கூறிய பிரச்னைகளிலெல்லாம் சோவியத் யூனியனில் தீர்வு காணப்பட்டுவிட்டன. உலக மக்கள் சோவியத்தின் பக்கம் திரும்பிவிடாமலிருக்க, உலக ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகள் தட்டுத் தடுமாறி, காலம் தாமதித்து, அரைகுறையாக, வேண்டா வெறுப்போடு, இந்தத் திசையில் செல்லவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டிருக்கிறது.”

இவ்வாறு உலகத்தையே ஆட்டிப் படைக்கவல்லதாக உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்துள்ள சகாப்தத்தில் நாம் கூடியிருக் கிறோம். (பலத்த கரகோஷம்)

நமது கற்பனைக்குமெட்டாத வெற்றிச் சாதனைகளை சோவியத் யூனியனில் கம்யூனிஸம் எவ்வாறு பெறமுடிந்தது? உலக இலக்கிய மகா மேதைகளில் ஒருவரான மாக்ஸிம் கார்க்கி என்ன சொல்லுகிறான் கேளுங்கள்!

நமது பாரதி இங்கு கூறியதுபோல், ‘பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு, குருடர்களாய், செவிடர்களாய் வாழ்கின்றோம்’ என்று நம்மைப்பற்றிப் பாடினாரே அதேபோல், “அன்று ரஷ்யாவில் அறியாமையிலும் அறியாமையால் மூழ்கி நெளிந்த, பாமர மக்கள், கலப்பையின் நுகத்தடியில் கோவேறு கழுதையோடு பூட்டப்பட்டு உழவுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பாமர மக்கள் இன்று இலட்சக்கணக்கில் தொழில் நிபுணர்களாய், இன்ஜினியர்களாய், பேராசிரியர்களாய் கலைஞர்களாய், விஞ்ஞான மேதைகளாய் விளங்குகிறார்கள்” என்று கார்க்கி, கூறுகிறான்.

“சோஷலிஸ்ட் அரசாங்கம் பொது மக்களிடம் புதைந்து கிடக்கும் எல்லையற்ற சிருஷ்டி சக்தியைக் கட்டவிழ்த்து விட்டிருப் பதுதான் இதற்கு உரிய காரணம் என்று எடுத்துக் காட்டுகிறான்.”

இவ்வாறு கம்யூனிஸம் உலகப் பொதுமக்களின் கட்டுண்டு கிடக்கும் படைப்பாற்றல்களுக்கு விடுதலை அளித்து வருகிறது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் கூடியிருக்கிறோம்.

(நீண்ட நேரம் கைதட்டல்)

“உலக முழுவதும் கம்யூனிஸம் அலைமேல் அலை மோதிக் கொண்டிருக்கிற காலத்தில், ஒலியும் எதிரொலியும் கிளப்பிக் கொண்டிருக்கிற காலத்தில் இங்கு நாம் கூடியிருக்கிறோம்.

3 கோடியே 30 லக்ஷம் படைவீரர்கள்

“எனக்கு முன் பேசிய எங்கள் மாகாணக் கட்சியின் தலைவர் எம். ஆர். வெங்கட்ராமனும், தோழர் மோகனும் புதிய கேரளத்தைப் பற்றியும், அதன் வெற்றிச் சாதனைகளைப் பற்றியும் குறிப்பிட் டார்கள். அத்தகைய கேரளம் இன்று உலகத்துக்கே ஒரு புது அனுபவத்தைக் காட்டி வருகிறது.

“கேரள கம்யூனிஸ்ட் தலைவர் எம்.என்.கோவிந்தன் நாயர் மாஸ்கோவில் தோழர் குருஷ்சேவைச் சந்தித்த பொழுது, குருஷ் சேவ், கோவிந்த நாயரின் கையைக் குலுக்கிக் கொண்டு, ”உங்களைக் கடுமையான கடமை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார். இவ்வாறு உலக முழுவதும் நிலை குத்திய கண்களோடு கேரளத்தில் என்ன நடக்கிறது என்று ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கும் விதத்தில், கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்தை நடத்திக் கொண்டிருக்கும் காலகட்டமிது. (கரகோஷம்)

“தோழர்களே! இன்று அரசியல் பிரபஞ்சத்தின் மையம் கம்யூனிஸத்தின் பக்கம் வந்துவிட்டது, காலம் நமக்கு அனுகூலமாக இருக்கிறது. கம்யூனிஸம் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடித்த கால கட்டத்தில், கம்யூனிஸத்தின் சாதனையான செயற்கைச் சந்திரனைப் பறக்கவிட்டு தலை நிமிர்ந்து நிற்கும் கால கட்டத்தில் நாம் கூடியிருக்கிறோம்.”

“நான் ஆரம்பத்தில் கூறியவாறு, உலகத்தில் மூன்றிலொரு நிலப் பரப்பிலே, உலக மக்களில் ஐந்தில் இரு பங்கு மக்களுக்கு நமது செங்கொடி ஆட்சிக் கொடியாக இருப்பதுடன், 3 கோடியே 30 லட்சம் கம்யூனிஸ்ட் அங்கத்தினர்கள் அணி வகுத்திருப்பதாகவும் குறிப்பிட்டேன்.

இந்த மகத்தான, பொழுதொரு வண்ணமாக, பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் இந்தியக் கம்யூனிஸ்ட் சுட்சி. அதன் ஒரு பகுதிதான் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி.

உலக முழுவதிலும் வீசும் வீச்சு இந்தியாவிலும் தமிழகத்திலும் வீசுகிறது. “70 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாக இருந்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி 3 லட்சம் கொண்டதாகவும், 5000 அங்கத்தினர்களாக இருந்த தமிழ்நாடு கட்சிப் பகுதி 20 ஆயிரம் அங்கத்தினர்களைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது.”

“தோழர்களே! சென்ற சில ஆண்டுகளில் 150-க்கு மேல் புதிய கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்துள்ளோம் என்று சோவியத் நாட்டார் இன்று நியாயமாகவே பெருமையடித்துக் கொள்ளுகிறார்கள். இந்தப் பெருமைக்குக் காரணம் என்ன? கார்க்கி அன்று கூறியது போல், நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பாமரத் தன்மையில் மூழ்கிக் கிடந்த கோடானு கோடி பொதுமக்களின் சிருஷ்டித் திறன் கட்டவிழ்த்து விடப்பட்டதே காரணம் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு முக்கிய காரணம், நவீன உலகியல் அறிவு முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் வெகு விரைவாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ததே! தாய் மொழியால் மாத்திரமே பாமர ஜன சமுத்திரத்தைக் கப்பிக் கிடக்கும் அறி யாமைக் காரிருளைக் கிழித்தெறிந்து, அறிவியல் ஒளி வீசச் செய்ய முடியும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்கமுடியாது.

இந்த நம் கால சரித்திர உண்மையை, பிரத்தியட்ச உண்மையை நாம் கவனத்தில் வைத்துக்கொண்டு மொழிப் பிரச்சினையைக் கவனிக்கவேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மொழிப் பிரச்சினையில் நாம்

தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு அமளி துமளிப்படுகிறது. பல்வேறு கட்சிக்காரர்களும், கருத்தோட்டமுடையவர்களும் ஒன்றித்து நின்று, இந்தி நுழைவுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள், இந்திக்கு எதிராக ஆங்கிலப் பெருமையை பல “பெரியார்கள் ” உயர்த்திப் பிடிக்கிறார்கள் “இந்தி ஒரு நாளும் கூடாது? ஆங்கிலமே எந்நாளும் வேண்டும்!” (Hindi Never ! English Ever!) என்ற கோஷம் செவிடுபடுகிறது.

எங்களுடைய மாகாண மகாநாட்டில், இந்த மொழிப் பிரச்னையைப்பற்றி நீண்டதொரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அந்தத் தீர்மானத்தின் அடக்கம் முழுவதையும் நான் இப்பொழுது உங்களுக்கு விளக்கிச் சொல்லப் போவதில்லை. மொழிப் பிரச்னையில் பிரதேச மொழியின் இடம், அதாவது நமக்கு தமிழின் இடம் எது வென்ற முக்கியமான கருத்தை மட்டுமே நான் விளக்கிச் சொல்லப் போகிறேன்.

இந்தி எதிர்ப்பாளர்கள், இந்திக்கு எதிரிடையாக ஆங்கிலத்தின் தேவையையும் பெருமையையுமே முதன்மைப் படுத்துகிறார்கள். எனது நண்பர் தி. மு. க. பொதுச் செயலாளர் நெடுஞ் செழியனைப் போன்றவர்கள் ‘தமிழ் அரசு’ புரியவேண்டும் என்று ஒப்புக் கொள்ளுகிறபொழுதே, ‘ஆங்கிலத்துக்கு முத லிடம், ஆங்கிலமே எந்நாளும்’ என்கின்ற முழக்கொலிகளைக் கிளப்புகிறார்கள்.

இதைப் பற்றிக் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்லுகிறது. என்பதை அறிய நீங்கள் விரும்புகிறீர்கள். தமிழுக்குத்தான் முதலிடம் என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி, எல்லாத் துறைகளிலும் பிரதேச மொழிகளின் தங்குதடையற்ற வளர்ச்சிதான் முதன் முதலில் கவனிக்கப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அத்ததைய வளர்ச்சி ஏற்பட்டுள்ள குழ் நிலையில் “இந்தியா? ஆங்கிலமா?” என்ற பிரச்னை சுமுகமாகச் சுலபமாக பைசலாகிவிடும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து. இதைச் சிறிது விளக்கிக் கூறுகிறேன்.

தமிழுக்கே முதல் இடம்

இன்று நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது, அந்நியர் ஆதிக்கம் அகன்றுவிட்டது. தமிழ் ராஜ்யம் பெற்றுள்ள நாம் தமிழே எல்லாத் துறைகளிலும் அரசு வீற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பே. வேறு எந்தப் பிரச்னையில் நம்மிடையே கருத்து வேற்றுமை இருந்தாலும் இந்தப் பிரச்னையில் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. சட்ட சபையில் தமிழ் மொழி ஆட்சி செலுத்த வேண்டும். சர்க்கார் காரியாலயங்களில் அவை ராஜ்ய சர்க்கார் காரியாலயமாயினும் சரி, மாவட்ட, வட்ட ஸ்தல அரசாங்க அலுவலகங்களாயினும் சரி, எங்கும் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும். கல்லூரிகளில் தமிழ்! விஞ்ஞானத்தில் தமிழ் தொழில் நுட்பத்தில் தமிழ்! உயர்நீதி மன்றம் முதல் சகல நீதிமன்றங்களிலும் தமிழ் !

இவ்வாறு தமிழகமெங்கும் தமிழ் மொழி தனியரசு ஓச்ச வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி இத்தனை கோரிக்கைகளோடு மட்டும் நிற்கவில்லை.

இந்திய பாராளு மன்றத்தில் தமிழகப் பிரதிநிதிகள் தமிழில் பேசவும், சகல தஸ்தாவேஜுகளும் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க ஆன உத்தரவாதம் வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளெல்லாம் தமிழனுக்கு தமிழில் கிடைக்க உத்தரவாதம் வேண்டும்.

அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டிலிருக்கும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறை கிளைகள், தமிழ் மக்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ் மாதிரி ஒவ்வொரு பிரதேச மொழியின் அந்தஸ்தும் உயர வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையை வளர்க்க மத்திய சர்க்காரும் தங்கு தடையின்றி பொருளுதவிகளும் இதர உதவிகளும் புரிதல் வேண்டும். இந்த நிலைமை நடப்புக்கு வந்துவிட்டால், மொழிப் பிரச்னையில் இன்று ஏற்பட்டுள்ள கடிய கொடிய சிக்கல் நிச்சயமாகத் தீர்ந்துவிடும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

நம்மைப் பொருத்த மட்டில் தமிழ் இருக்க வேண்டிய இடங்களில், தமிழை இருக்கவிடாமல் செய்து இன்றும் அநீதமாக இருந்துகொண்டிருக்கும் மொழி எது? சட்டசபையிலும், சர்க்கார் காரியாலயங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், விஞ்ஞான தொழில்நுட்பக் கல்விகளிலும், நீதி மன்றங்களிலும், இன்னபிற இடங்களிலெல்லாம் ஆதிக்கம் வைப்பது இன்றும் ஆங்கிலமே. சுதந்திரம் கிடைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பின்னா லும், இன்னும் ஆங்கிலமே இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மேற்கூறிய இடங்களிலெல்லாம் இந்தி இன்று ஆதிக்கம் வகிக்கவில்லை என்பது ஒரு யதார்த்தம். ஆகவே, பிரத்தியட்ச உண்மையை நிதானமாகக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், பொது மக்களுடைய ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்கிற கண்ணோட்டத் துடன் பார்த்தால், கோடானுகோடி மக்களின் பக்கத்தில் நின்று கொண்டு, மொழிப் பிரச்னையை நாம் பார்த்தால், தமிழ் மொழியின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இன்னும் ஆங்கில ஆதிக்கம்தான் பெரும் எதிரி என்று விளங்காமற் போகாது.

ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில், எந்த மொழியிடமும் துவேஷமில்லை. ஆங்கிலத்தைப் பொருத்தமட்டில் துளிகூட துவேஷம் கிடையாது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தை, பெர்னாட்ஷாவின் ஆங்கிலத்தை, ஷெல்லியின் ஆங்கிலத்தை, கீத்தின் ஆங்கிலத்தை, பைரனின் ஆங்கிலத்தை, சிறந்த இலக்கியங்களையும் சிறந்த விஞ்ஞானச் செல்வத்தையும் உலகுக்கு அளித்துள்ள ஆங்கிலத்தை நமது சகோதர மக்களான ஆங்கில மக்களுடைய மொழியான ஆங்கிலத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. எந்த விதான புத்தியுடையவனும் எதிர்க்கமாட்டான்.

கம்யூனிஸ்ட் கட்சி ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை. ஆங்கிலம் இந்த நாட்டில் இருக்கிற இருப்பை, அதாவது தாய்மொழி (தமிழ்) இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிற இருப்பை, அதாவது ஆங்கிலத்தின் நியாயமற்ற, பிரதேச மொழிகளின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு பேரிடையூறாக இருக்கும் ஆதிக்கத்தைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது நண்பர் நெடுஞ்செழியன், “விஞ்ஞான மொழியாகவும் தொழில்நுட்ப மொழியாகவும் ஆங்கிலம் விளங்க வேண்டும். கல்லூரிகளில் ஆங்கிலத்தின் இடம் இன்றுபோல என்றும் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

தமிழின் சக்தி அறிவீர்

இந்தி எதிர்ப்புணர்ச்சி அவரிடம் மேலோங்கி நிற்பதின் விளைவாக ஆங்கிலமே சர்வதேச மொழி என்று ஆங்கிலத்தைப் பற்றி பெருமை பேசுகிறார். இதனால்தான் ராஜாஜி, சர். சி. பி. ராமசாமி அய்யர், ரத்னசாமி, மிர்ஸா இஸ்மேயீல், பி.டி. ராஜன் முதலிய அந்த “நல்லறிவாளர்” வரிசையில் அண்ணாத்துரையும், நெடுஞ்செழியனும் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த “நல்லறிவாளர் ” களின் கருத்துக்கள் தங்குதடையற்ற தமிழ் வளர்ச்சிக்கு உறுதியான உதவியளிக்குமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமது கவிச் சக்கரவர்த்தி பாரதி,

வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே வானமளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே.”

என்று பாடினான். இவ்வாறு பாடுவதின் மூலம், இந்தப் பிரபஞ்சம் கண்ட எந்த உண்மையையும் தமிழனால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறான்.

எந்த மொழியில் வெளியிடும் கருத்தையும் தமிழில் வெளியிட முடியும் என்ற உறுதி இந்த நூற்றாண்டைய, வளரும் ஜனநாயகத் தமிழனின் உறுதி. இதனால்தான், அன்று பாரதி,

புத்தம்புதிய கலைகள்பஞ்ச பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லைஅவை சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை;

மெல்லத் தமிழினிச்சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.”

என்றந்தப் பேதை உரைத்தான்!
இந்த வசையெனக் கெய்திடலாமோ ?
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.”

என்று நமக்கு ஆணையிட்டான்.

சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரையும், பிறமொழி கண்ட சிறந்த கருத்துக்களை தமிழில் வடித்தெடுக்க முடியாது என்று தமிழ் என்றுமே நொண்டியடித்ததில்லை.

அணுவைத் துளைத்து எழுகடலைப் புகட்டி
குறுகத் தரித்த குறள்.

அருளிய வள்ளுவப் பெருந்தகை தமிழன்னையின் மணிவயிறுபெற்ற பிள்ளை என்ற உண்மையை எனது நண்பர் நெடுஞ்செழியன் அறியாததல்ல. அதேபோன்று,

எல்லையொன் றின்மை எனும் பொருள் அதனை
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்.”

முயற்சியைக் கண்ட கம்பன் தமிழ், தமிழன் வளர்த்த தமிழ் என்பது தமிழறிந்த நெடுஞ்செழியனுக்குத் தெரியாததல்ல. இத்தகைய தமிழுக்கு, “விஞ்ஞானம், தொழில் நுட்பம் எட்டாத தூரம்” என்று கூறுகிற மதிப்பிற்குரிய லெட்சுமணசாமி முதலியார், ரத்தினசாமி முதலியார், சி. பி. ராமசாமி அய்யர் ஆகிய அந்த “நல்லறிவாளர்” வரிசையில் நெடுஞ்செழியனும் நிற்கிறார். (கைதட்டலும்,சிரிப்பும்). அந்த நல்லறிவாளர் ” இதை அறியார்களா ?

கடந்த ஐம்பதாண்டுகளாக மாதவய்யாக்களும், பண்டித மயில் வாகனய்யாக்களும், பாரதியார்களும், அப்புசாமிகளும், சீனிவாசன்களும், பற்பல பேராசிரியர்களும், தமிழ்ப்பற்றுமிக்க இளைஞர்களும், தமிழில் விஞ்ஞானம் பேசி வருகிறார்கள். கலைச்சொல் அகராதிகளும், கலைக்களஞ்சியத் தொகுதிகளும், கலைக்கதிர் போன்ற பத்திரிகைகளும் தமிழ் விஞ்ஞான அறிவுத்துறையில் முன்னேறி வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தி வருகின்றன. ஆங்கிலத்துக்குப் பதில், பள்ளிக்கூடப் பாடங்களில் புகுந்த தமிழ், பள்ளி இறுதிப் படிப்பைத் தாண்டி, கல்லூரிகளில் நுழையத் தகுதி பெற்று வந்துவிட்டது. இந்த உண்மைகளையெல்லாம், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் இன்றும் என்றும் ஆங்கிலத்திலேயே வேண்டும் என்கின்ற “நல்லறிவாளர்கள்” அறியமாட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.

பல்கலைக் கழக சுயாட்சிக்குப் பயந்து, கல்லூரிகளில் தமிழை அரியணை ஏற்ற, தயங்கித் தயங்கி நின்ற ஆளவந்தார்களும், கல்லூரிகளில் இனித் தமிழை போதனா மொழியாக ஆக்குவோம் என்று தீர்மானித்து விட்டார்கள். சர்வ ஜன சம்மதமாக வரவேற்கத் தகுந்த இந்த நற்செய்தியும் நம் “நல்லறிவாளர்கள் ” அறியாத தல்ல. இவ்வளவுக்கும் பின், இந்த ‘நல்லறிவாளர்கள் ” ‘ஆங்கிலம்தான் விஞ்ஞான மொழியாக இருக்க முடியும், தொழில் நுட்ப மொழியாக இருக்க முடியும் ‘என்று கூறினால், இது எதைக் காட்டுகிறது. சுடச்சுடக் கண்டுபிடிக்கப்படும் புத்தம் புது விஞ்ஞான உண்மைகளைச் சுடச்சுட தெரிந்துகொள்ளும் பொருட்டு, விஞ்ஞானத்துறை ஆராய்ச்சி மாணவர்கள், அண்ணாமலை, சென்னை பல்கலைக் கழகங்களிலும் சரி, இதர பல்கலைக் கழகங்களிலும் சரி, ஆங்கிலம் போதாதென்று ஜெர்மன் மொழியைக் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறார்களென்பது நமது “நல்லறிவாளர் ” களுக்குத் தெரியாதா, என்ன?”

தமிழா? ஆங்கிலமா என்பதே கேள்வி

தோழர்களே! எனது பேச்சின் தொடக்கத்தில் எடுத்துக் காட்டியபடி, இந்த சகாப்தம், செயற்கைச் சந்திரன் சகாப்தமாக உருவாகிவிட்டது. ஆங்கில, அமெரிக்க, ஜெர்மன் விஞ்ஞானிகள், சோவியத் விஞ்ஞானிகளின் துரித துரிதாதீத முன்னேற்றத்தைக் கண்டு திகைப்பும் வியப்பும் கொண்டு மூக்கில் விரல் வைத்து நிற்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் சோவியத் விஞ்ஞானிகளின் முன்னேற்றத்தைத் தங்களால் ஏணி வைத்தும் எட்டிப்பிடிக்க முடியாது என்றும் பகிரங்கமாக ஒப்புக்கொள் கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில்தான், நமது “நல்லறிவாளர்கள் ” விஞ்ஞான மொழியாக ஆங்கில மொழியே இருக்க வேண்டும் என்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது ?

நேற்று முன்னால் ஆங்கிலத்தில் விஞ்ஞானம் கற்ற உலகம், நேற்று ஜெர்மன் மொழியில் கற்கத் தொடங்கிற்று; இன்று ரஷ்ய மொழியில் கற்கத் தொடங்குகிறது, நாளை சீன மொழியிலும், வங்க மொழியிலும், நமது உயிருக்குயிரான தமிழ்மொழியிலும் கற்கத் தொடங்காது என்று இந்த “நல்லறிவாளர்களால்” தீர்க்கதரிசன மாகக் கூறமுடியுமா? ஒரு மொழி உலகு தழுவும் விஞ்ஞான மொழியாகச் சிறந்து விளங்குவது அந்த மொழியின் சுயம்பான தன்மையில் மட்டும் அடங்கவில்லை. அந்த மொழி பேசும் மக்களின் விஞ்ஞான முயற்சியின் நன்முயற்சியிலும் முன் முயற்சியிலும்தான் சிறப்பாக அடங்கியிருக்கிறது. ஆங்கிலம்தான் விஞ்ஞான மொழியாக இருக்க வேண்டுமென்று கூறும் நமது “நல்லறிவாளர்கள்” ஆங்கில மக்கள்தான் என்றென்றும் விஞ்ஞானத் துறையில் முன் நிற்பார்கள் என்று கருதுகிறார்களா? ஜெர்மானிய மக்களோ, அதைவிட சோவியத் மக்களோ, ஆங்கில மக்களைவிட விஞ்ஞானத் துறையில் முன்னேறவில்லையென்றோ, முன்னேற முடியாதென்றோ கூறுகிறார்களா? தமிழ் மக்களால் அத்தகைய முன்னேற்றம் நாளா வட்டத்தில் பெறமுடியாது என்பதும் தமிழ் மக்களின் முன்னேற்ற உணர்ச்சியும், கூரிய சீரிய மதிநலமும் அஸ்தமித்து விட்டது என் பது இவர்களின் முற்றமுடிந்த முடிபா?

ராஜாஜியாலும், அண்ணாத்துரையாலும், நெடுஞ்செழியனாலும், ராமசாமி, லெட்சுமணசாமி முதலியார்களாலும், டாக்டர் அய்யர்களாலும், அவர்கள் காலத்தில் கல்லூரிகளில் தமிழை விஞ்ஞான மொழியாக்க முடியாதென்றால், யார் அந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள்? அவர்கள், அவர்களுக்குப் பின்வரும் தலைமுறைகளில் தோன்றும் சுரணை கொண்ட தமிழர்கள் செய்ய வேண்டுமென்பதுதானா அவர்களின் கருத்து?

வளர்ந்துவரும் தமிழனையும், வளர்ந்துவரும் தமிழையும், தமிழ் எத்துறையிலும் அரசு வீற்றிருக்க முடியும் என்கின்ற நன்னம்பிக்கை முழுநிறைவாக ஏற்படுகிறது.

அவர்களால் உச்சிமேல் வைத்து மெச்சப்படும் ஆணானப்பட்ட ஆங்கிலம் பிறமொழித் தயவின்றி எடுத்த எடுப்பிலேயே விஞ்ஞான மொழியாகிவிட்டதா ? விஞ்ஞானத் துறையில் 200, 300 ஆண்டுகள் வளர்ந்த பிறகும், ஆங்கிலம் இன்றும் எத்தனையெத்தனையோ விஞ்ஞானச் சொற்களையும், கலைச் சொற்களையும் லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து எடுத்து உபயோகித்து வருகிறது என்பது யாரே அறியார்? எனவே, தமிழனும் தமிழில் விஞ்ஞான அறிவுச் செல்வத்தைக் கொண்டு வந்து விட வேண்டுமென்று துணிந்து இடையறாத முயற்சியில் இறங்கி விடுவானானால்-இன்று இறங்கி வருகிறான் – உலகத்து மக்களோடு ஈடு ஜோடாக முன்னேறுவான் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகத்துக்கிடமில்லை. வேண்டுவதெல்லாம் தமிழ் வளர வாய்ப்பும் வசதியும்தான். தண்ணீரில் இறங்கினால்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும். கல்லூரிகளில் தமிழை விஞ்ஞான மொழி ஆக்கினால்தான் தமிழ் விஞ்ஞானத் துறையில் முன்னேற பெரும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.

பல நாட்டு அனுபவங்களும் தேசீய, நமது ஜனநாயக இயக்க வரலாறும், ஐயம் திரிபுக்கிடமின்றிக் கற்றுக் கொடுக்கும் படிப்பினை இதுதான்.

ஆகவே, மூன்றுகோடி தமிழ் மக்களும் எத்தகைய பேதமும் பாராட்டாது கல்லூரிகளில் விஞ்ஞானத் துறையிலும், தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் நாட்டில் தமிழ் மக்களின் சகல துறைகளிலும் தமிழே ஆட்சி செலுத்தத் தகுந்த சிறந்த சூழ்நிலையை ஒன்றுபட்டு உருவாக்குவதே அவசர அவசியக் கடமையாகும். இதுதான் கம்யூனிஸ்டுக் கட்சியின் பணிவான வேண்டுகோள்.

ஹிந்தியின் இடம்

இந்தச் சூழ்நிலை உருவாகிவிடுமானால், இதற்காக மத்திய சர்க்காரும் ராஜ்ய சர்க்காரும் தமிழின் தங்குதடையற்ற வளர்ச்சிக்குப் பண உதவியும், இதர உதவிகளும் செய்ய முன்வந்து மக்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் பெற்று விடுவார்களானால், ‘இன்றைய ஆங்கில ஆதிக்கத்தின் இடத்தில் இந்தியின் ஆதிக்கம் ஏற்படும்’ என்ற பயத்துக்கு இடமிராது என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது இந்தியும், ஆங்கிலமும் பாரத நாட்டிலும் சரி, தமிழகத்திலும் சரி, நியாயமாக எந்தெந்த இடங்களில் இருக்க வேண்டுமோ அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும்.

மத்திய சர்க்கார் நிர்வாக மொழியாகவும், மத்திய-ராஜ்ய சர்க்கார் இணைப்பு மொழியாகவும், இந்திய மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒற்றுமைக்கு துணை மொழியாகவும் இருக்க வேண்டிய அளவே, இந்தி மொழிக்கு பொதுத்தேவை இருக்கும்.

நவீன உலகியல் கருத்துக்களைத் தெரிந்துகொள்வதற்கு, உலக விவகாரங்களுக்கு உதவிகரமாக இருப்பதற்கு தேவைப்படுகிறவர்கள், பிரெஞ்சு, ரஷ்ய, ஜெர்மன், சீன மொழிகளைப் போன்று ஆங்கிலமும் கற்றால் போதுமென்ற நிலைமை ஏற்படும். அந்தச் சூழ்நிலை ஏற்படுகிறவரையில் ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கவில்லை ” என்றார்.

இந்தி எதிர்ப்பாளர் போக்கு

‘தோழர்களே! இனி இன்றைய இந்தி எதிர்ப்பைச் சற்று கவனிப்போம். இந்தி எதிர்ப்பு உணர்ச்சி ஓட்டம் முக்கவுடுகளாகத் திரிந்து இயங்குகிறது’ என்று கருதுகிறேன்.

ஒன்று இந்தி மொழியை எதிர்த்து, சிறுமைப்படுத்திப் பேசுவதே மேலோங்கி நிற்கும் போக்கு, இந்தியை அநியாயமாக இந்தி அல்லாதார் தலையில் திணிப்பதை எதிர்த்துப் போராடுவதுதான் வியாயமேயன்றி, இந்தி மொழியையே எதிர்ப்பது சிறிது கூட அழகல்ல. இந்தி பேசும் கோடானு கோடி மக்களும் இந்தி திணிப்பு வெறியர்களும் ஒன்றெனப் பார்ப்பது சற்றும் அழகல்ல. கடந்த 150, 200 ஆண்டைய ஆங்கில ஆதிக்கத்தால் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் வளர்ச்சியில் பின் தங்கிக் கிடக் கின்றன. ஏகாதிபத்ய எதிர்ப்புணர்ச்சியும், தேச பக்தியும் நம்மிடம் முளைத்தெழ ஆரம்பித்த பிறகு தமிழும், இந்தியும் இதர மொழிகளும் சிறிது சிறிது முன்னேறத் தொடங்கின.

எனவே, இந்த நாட்டில் எந்த மொழியும் ஆங்கிலம் போல் முன்னேற வாய்ப்பு கிடைக்கவுமில்லை; முன்னேறவுமில்லை. தமிழைப் போல், இந்தி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்டு இலக்கியம் வளர்ச்சி யடைந்த மொழி என்றும் யாரும் இந்திக்கு பெருமை சூட்ட வரவில்லை.

இவ்வாறாக, இந்தக் கருத்தோட்டத்தினர் ஒரேயடியாக இந்தியை ‘லம்பாடி’ மொழியென்றும், மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிற குரங்குகளைப் போல் இந்தி எழுத்துக்கள் இருப்பதாகவும், இன்ன பிறவும் கூறிப் பழிப்பது, தமிழைப் பழித்தால் நமக்கு எத்தகைய ஆத்திரம் வருமோ, அத்தகைய ஆத்திரம் தாம், குற்றமற்ற இந்திப் பொதுமக்களுக்கும் ஏற்படும்.

இது தமிழ் மக்களுக்கும், இந்தி மக்களுக்கும் பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்க்காது. விரோத குரோதத்தை அடிப்படையாகக் கொண்ட, தமிழர்களுக்கு லாடமற்ற இந்த மாதிரியான எதிர்ப்பு தவிர்க்கப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

இரண்டாவதாக, ஆங்கிலத்தை இந்திக்கு எதிர்ப்பாக வைத்து இந்தியை எதிர்க்கும் போக்கு இந்தக் கருத்தோட்டக்காரர்கள் ஆங்கிலமே அன்றிருந்தபடி அழியாதிருக்க வேண்டுமென்று ஆரவாரம் செய்கிறார்கள். அதற்காக, ஆங்கிலம் சர்வதேச மொழி யென்றும், நவீன கலைகளெல்லாம் ஆங்கிலத்தில் சிறக்கக் காண முடிகிறதென்றும்,எனவே, அதுதான் அரசாங்கப் பொது மொழியாயிருக்க எவ்வளவும் தகுதியுடையதென்றும் நியாயம் பேசுகிறார்கள்.

ஆங்கிலம் இந்தியாவுக்கு அன்னிய மொழி என்பது ஒரு தலை ஆயினும் ஆங்கிலமும் இந்திய தேசீய மொழிகளில் ஒரு மொழியாக மாறிவிட்டது என்று கட்சி பேச இந்தக் கருத்தோட்டக் காரர்கள் தயங்கவில்லை.

இன்றைக்கு சர்வதேச மொழியென ஆங்கிலத்தை சர்வ தேசத்தார்களும் அங்கீகரித்து விடவில்லை யென்பதையும், ஐ.நா. சபையில்கூட, ஆங்கிலத்தை மட்டும் அதிகார மொழி ஆக்கிவிட வில்லை யென்பதையும் இவர்கள் காணத் தயாராயில்லை.

விஞ்ஞானத் துறையிலும் ஆங்கிலத்துக்கு ஈடு ஜோடாக, ஏன் ஆங்கிலத்தை மிஞ்சிக்கொண்டு ஜெர்மன் மொழியும், ரஷ்ய மொழியும் முன்னேறி வருகின்றன என்பதையும் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்.

150 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் ஆங்கிலத்தை போதிய அளவு கற்றவர்கள் நூற்றுக்கு ஒருவர் கூட இல்லையென் பதையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறுகிறார்கள்.

இந்திய மொழிகளில் ஒரு மொழிதான் இந்திய அரசாங்கத்தின் நிர்வாக மொழியாக இருக்க முடியும், இருக்க வேண்டும். என்ற ஜனநாயக உணர்வையும் கோரிக்கையையும் கணக்கிலெடுக்க இவர்கள் விரும்பவில்லை.

தம்மையே பார்ப்பதால்

காரணம், ஜனநாயக இந்தியாவில் ஜனநாயக தமிழகத்தின் எதிர்காலத்தை முக்கியப்படுத்துவதை விட, இன்றைய தங்கள் நலனுக்கு எத்தகைய இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என்பதையே முக்கியப்படுத்துகிறார்கள். ஆங்கில அறிவால் கிடைத்த பட்டம் பதவிகளுக்கு, கலகோச்சிகளுக்கு அபாயம் நேருமோ என்ற அச்சத்திலிருந்துதான் ஆங்கிலத்தைப் பற்றி அதிகப் பெருமை அடித்து, ‘ஆங்கிலம் எந்நாளும் வேண்டும், இந்தி ஒரு நாளும் கூடாது’ என்ற ஆவேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். ஆங்கிலமே என்றென்றும் வேண்டுமென்ற கூக்குரல், ஆங்கிலம் படித்த தங்களின் நலன்களை, சாசுவதமாக்கப் போடும் கூக்குரலேயாகும்.

மூன்றாவதாக, மொழிப்பிரச்னையில், இவர்கள் கோடானு கோடி மக்கள் பக்கம் நின்று பார்க்காமல், தங்கள் பக்கம் நின்று பார்ப்பதினால் இந்த “நல்லறிவாளர்” வரிசையில் யாரைப் பார்க்க முடிகிறதும் ஆங்கிலம்தான் சர்வ வல்லமையுடையது என்கின்ற “திட சித்தர்களும்”, இந்தியை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அர்ச்சனை செய்பவர்களும் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கிறோம்.

தமிழின் வளர்ச்சியில் நம்பிக்கை உடையவர்களையோ தமிழில் -பிரதேச மொழியில் -தங்கு தடையற்ற வளர்ச்சியை உறுதி யாகக் கோருகிறவர்களையோ காணமுடியவில்லை. எனவே, தமிழில் முடியும் என்று பேசிவந்த ராஜாஜி போன்ற நமது மதிப்பிற்குரிய தலைவர்களும், எனது மதிப்பிற்குரிய நண்பர் நெடுஞ்செழியன் போன்றவர்களும் தமிழைப் பின்னுக்குத் தள்ளி மறைக்கிறார்கள்.

ஜாதி ஒழிப்பும், திராவிடக் கழகமும்

தோழர்களே ! இனி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கிய தீர்மானமான, “ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும்” என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பும், தேசியக் கொடி எரிப்பும் ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈ.வெ.ரா. பெரியாரால் நடத்தப்படுகிற திராவிடக் கழகப் “போராட்டம்” தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக் குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய “அறப்போர்’ முறைகள் இந்த நகரத்தில்தான் செயல்படுத்தப்பட்டன.

இக்கூட்டத்துக்கு வரும்போது அருகாமையிலுள்ள ஒரு ஒட்டலில் நுழைந்துவிட்டு வந்தேன். அங்கு ராமசாமி பெரியாருக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கேட்டுவிட்டு தலைகால் புரியாத ஆவேசத்தோடு தூள் பறத்திக் கொண்டு வந்த சிலர், மூன்று ‘ட்யூப் லைட்’களை கல்மாரி பொழிந்து தூள் தூளாக்கி விட்டார்கள் என்று புகார் கூறப்பட்டது.

பீமநகருக்குச் சென்று பாருங்கள். முன்பு ஆர்.டி.ஒ. இருந்த வீட்டின் சுவரில் ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறதாம். அந்தச் சித்திரம் தாரினால் எழுதப்பட்டிருப்பதால் சுலபத்தில் அழிந்து போகாது இன்றும் நாளையும் நீங்கள் சென்று பார்க்கலாம். அந்தச் சித்திரம் என்ன தெரியுமா? உச்சிக்குடுமியுள்ள ஒரு பார்ப்பான் போல் ஒரு படம் வரைந்திருக்கிறார்கள். உச்சிக்குடுமி கத்தரிக்கப்படுவதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. கத்தரிக்கும் இடத்திலிருந்து இரத்தம் பொலபொல என வடிவதையும் காட்டியிருக்கிறார்கள். அரசியல் சட்டப் புத்தகம் தமிழகத்தின் பல்வேறு இடங் களில் எரிக்கப்பட்டது போல் இந்நகரத்திலும் எரிக்கப்பட்டது.

ஆகவே, திராவிடக் கழகப் போராட்டத்தின் பல்வேறு நடவடிக்கைகளை நேருக்கு நேர் கண்டு அனுபவித்தவர்கள் திருச்சி மக்களாகிய நீங்கள்.

இந்தப் ” போராட்ட முறை” சரியா, தப்பா என்பதைப் பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்கவேண்டும். ஜாதி ஒழிப்புக் காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வெ.ரா. பெரியார் கூறுகிறார்.

இங்கு ஜாதி ஒழிப்பைப் பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை முதலில் சொல்லி விடுகிறேன்.

அடிமைப்படுத்துதல், சுரண்டுதல், ஏமாற்றுதல் முதலிய அடிப்படை சமூகக் கேடுகள் துளியும் காணக் கிடையாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியம், இதை வர்க்க பேதமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது என்று உலகம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள்.

வேறு எந்த நாட்டிலுமில்லாத ஜாதீய அமைப்பு இந்த நாட்டில் மட்டும் இருக்கிறது. இந்த அமைப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் அமுலாக்கிக் கொண்டிருக்கிறது. ஜாதீய முறை எப்பொழுது, ஏன், எதற்காக ஏற்பட்டது என்பது இப்போது கேள்வி அல்ல. இன்று ஜாதிமுறை நமது முன்னேற்றத்துக்குத் துணை செய்யவில்லை. முன்னேற்றத்துக்கு மூச்சினும் தேவைப்படுகிற பொதுமக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது. பிற்போக்குக்கும் சுரண்டலுக்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஜாதீய அமைப்பிலிருந்து வளர்ந்துள்ள கொடுமைகளும், அழிம்புகளும், அடாச் செயல்களும் சொல்லும் தரத்தவை அல்ல.

சுருக்கத்தில், படுகேடு விளைக்கும் இந்த ஜாதீய முறை,நம் நாட்டில் ஜனநாயகம் தழைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. (கரகோஷம்)

சாதியற்ற சமுதாயமே நமது லட்சியம்

எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியம், வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதோடு, ஜாதி பேதமற்ற சமுதாயத்தையும் உருவாக்குவதாகும். ” வர்க்கபேதமற்ற” என் பதில் கம்யூனிஸ்டுகளின் பார்வையில், ” ஜாதிபேதமற்ற” என்பதுவும் அடங்கும். ஆயினும் பொதுமக்களுக்கு தெளிவுபடக் கூறவே, வர்க்கபேதமற்ற, ஜாதி பேதமற்ற சமுதாயம் என்று சந்தேகத் திற்கிடமின்றி விளக்கமாகச் சொல்லுகிறேன்.

முதலாளி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி, மிராசுதார் எதிர்ப்புப் போராட்ட மாதிரி ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நாங்கள் முக்கியப்படுத்தவில்லை யென்று குறை கூறுகிறார்கள் சிலர், இவர்கள் நிதானமாக உண்மை முழுவதையும் கணக்கிலெடுத்துப் பார்க்காமல், இவ்வாறு பேசுகிறார்கள் ; அல்லது ஜாதி எதிர்ப்பு உணர்ச்சி கொண்டுள்ள பொது மக்களிடம் உண்மையைத் திரித்துக் கூறவேண்டுமென்று பேசுகிறார்கள். (கரகோஷம்) எப்படி? ஜாதி ஒழிப்புக்கு எத்தகைய நடவடிக்கைகள் வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள் ! அப்பால், ஜாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் எங்களுடைய கருத்து என்ன? செயல்பாடு என்ன என்பதைக் கவனித்துப் பாருங்கள்! உண்மை விளங்கும்.

இன்றைய சமுதாயத்தில் காணக்கிடக்கும் சகல அநீதங்களை யும் பிற்போக்குகளையும் குழி தோண்டிப் புதைக்கவேண்டும். சகலருக்கும் சம வாய்ப்பும் சம உரிமைகளையும் நல்கும், புதிய சமுதாயத்தை மலரச் செய்யவேண்டும் என்கின்ற புதிய சமுதாயப் புரட்சிக்கு, எத்தகைய எதிர்ப்புக்கும் மார்பைக் காட்டி நிமிர்ந்து நின்று போராடும் நாங்கள், ஜாதி ஒழிப்பில் மட்டும் பின்னடித்து விடுவோமென்று பேசுவது பொருந்தாது என்பதை உங்களால் உணர முடியும். (கரகோஷம்)

இனி ஜாதி ஒழிப்புக்காகப் போராடுவதாகப் பெருமையடித்துக் கொள்ளும் எந்தக் கட்சியை விடவும், எந்த ஸ்தாபனத்தை விடவும், ஜாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட் கட்சி இளைத்து நிற்கிறதா என்று நீங்களே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். (கரகோஷம் ) அதற்காக சில உண்மைகளைக் கூறுகிறேன். ஜாதி வெறியோ, மத வெறியோ, இன்னபிற உயர்வு தாழ்வுக்கான, பேதா பேதத்திற்கான எந்த வெறிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆகாயத்துக்கும் பாதாளத்துக்கும் உள்ள தூரம் என்பதை எங்களை அறிந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

எங்கள் திருமணம்

நாங்கள் மறந்தும் ஜாதி பாராட்டுவது கிடையாது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களை பிரமுகர்களை எடுத்துக் கொள்ளுங்கள்! திருமணம் புரிந்து கொள்ளுவதில் நாங்கள் ஜாதீய முறைக்கு இடம் கொடுக்கவில்லை.

என்னை எடுத்துக் கொள்ளுங்கள்! நான் எந்த ஜாதியோ? என் வாழ்க்கைத் துணைவியார் என்ன ஜாதியோ? நாகர்கோவில் பக்கத்தான் நான். சென்னைக்காரி அந்த அம்மையார். நான் தமிழன் அந்த அம்மாள் தெலுங்கச்சி (ஒரே சிரிப்பு). நாங்களிருவரும் குடும்பம் நடத்துகிறோம். எங்கள் குழந்தைகள் தமிழகத்தின் மனிதர்கள்.

எங்கள் கட்சியின் தலைவர் ராமமூர்த்தி ஒரு ஜாதியில் பிறந்தவர். ராமமூர்த்தியின் வீட்டரசியார் (மீண்டும் சிரிப்பு) வேறொரு ஜாதியில் பிறந்தவர், ஜாதி ஒழிப்பின் சிறந்த சின்னமாக இரண்டு செல்விகள் அவர்களுக்கு உண்டு

எங்கள் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர் சீனிவாசராவ். அவரும் கலப்பு மணம் புரிந்து ஜாதி ஒழிப்பில் தனது பங்கை உறுதியாகக் காட்டியிருக்கிறார்.

இதோ! தோழர் சங்கரய்யாவும் கலப்பு மணம் செய்தவர் தான். கட்சியின் செயற்குழு அங்கத்தினர் 5 பேரில் 4 பேர் கலப்பு மணம் செய்தவர்கள்.

தோழர் மோகன் குமாரமங்கலம், டாக்டர். சுப்பராயன் அவர்களின் பிள்ளை. வங்கத்துக் கல்யாணியை (சிரிப்பு) வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு, ஜாதி ஒழிப்பில் முன் நிற்கிறார். இது போல் இன்னும் எவ்வளவோ பெயர்களை என்னால் குறிப்பிட முடியும். நேரமில்லை. (கரகோஷம்)

எங்கள் சட்ட சபைக் கட்சித் தலைவர் தோழர் கல்யாண சுந்தரத்தையோ, எங்கள் கட்சி செயலாளர் தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனையோ பற்றிக் கேட்டு விடாதீர்கள் அவர்கள் அந்த நாளில் கல்யாணம் செய்தவர்கள். அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றுவதற்கு முன்னாடியே கல்யாணம் செய்தவர்கள். அவர்களால் ஊக்கப்பட்ட, முடித்து வைக்கப்பட்ட கலப்பு மணங்கள் பலப்பல. (கரகோஷம்)

இவ்வாறு எங்கள் கட்சியின் முக்கியமானவர்கள், பொதுவாக அவரவர் வீதாச்சாரம் கல்யாணத்தால் ஜாதி ஒழிப்பில் பங்கு செலுத்தியிருக்கிறார்கள்.

எங்கள் கட்சி தஞ்சை ஜில்லாவில் காஞ்சி வாயில் வைத்திய நாதன் பழுத்த வைதீக சாஸ்திரியின் பிள்ளை. சேரி வாழ்ந்த ஒரு பழந்தமிழ் சகோதரியை மணம் புரிந்துகொண்டார். (நீண்ட நேரம் கைதட்டல்) வைதீக சாஸ்திரிகள் ஒன்று திரண்டு அணிவகுத்து இந்த புரட்சிகரமான திருமணத்தை தடைசெய்து விட விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியை ஒரு அக்குகூட அசைக்க முடியவில்லை. இது ஜாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் பரம்பரை. (கரகோஷம்)

இங்கு மட்டுமல்ல. அனைத்திந்தியாவிலும் இதுதான் பரம்பரை. ஆகவே, இந்தத் துறையில் நாங்கள் யாருக்கும் இளக்கமானவர்கள் அல்ல என்பது மட்டுமல்ல; கொஞ்சம் எடுப்பானவர்கள் என்று கூறக்கூட துணிகிறேன்.

இனி, எங்கள் குடும்ப வாழ்க்கையை வந்து பாருங்கள்? கட்சிப் பொதுக் குடும்ப வாழ்க்கையை (கம்யூன் வாழ்க்கை) வந்து பாருங் கள்! தெரியாதவர் போல் வந்து பாருங்கள்! ஜாதி நடைமுறை இருக்கட்டும், ஜாதிப் பேச்சாவது எங்களிடையில் காணக் கிடக் கிறதர என்று பாருங்கள்! மருந்துக்கும் மறந்தேனும் எங்களிடையில் அத்தகைய உணர்ச்சியைப் பார்க்கமுடியாது.

சமீப காலத்தில் பெரியார் சில ஜாதி ஒழிப்பு மாநாடுகள் கூட்டினார். அவற்றில் நான் கலந்து கொண்டேன். தோழர் ராம மூர்த்தி கலந்துகொண்டார். தோழர் ஏ. எஸ். கே அய்யங்கார் கலந்து கொண்டார். எங்கள் கட்சியின் சில பிரமுகர்களும் கலந்து கொண்டோம். அந்த மகாநாடுகளில் பேச்சிலோ, தீர்மானங்களிலோ ஜாதீய முறைகளோடு நாங்கள் சமரசம் பேசினோமா என்று கேளுங்கள், இதை எதற்காகக் கூறுகிறேன் தெரியுமா? மற்றவர்களோடு கூட்டணி வகுத்து ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடத்துவதில் நாங்கள் முன்னணியில் நின்று வந்திருக்கிறோமே யன்றி, பின்னணிக்குச் சென்றோமில்லையென்பதை எடுத்துக் காட்டுவதற்குத் தான். (கரகோஷம்)

வர்க்கப் போராட்டத்தில் ஜாதி ஒழிப்பு

விவசாயக் கூலிக்காகவும் ஏழை விவசாயிக்காகவும், குன்னியூர் அய்யரையும், திருவாடுதுறை மடத்தையும், வானமாமலை ஜீயரையும், வலிவலம் தேசிகரையும், பி. டி. ராஜனையும் இத்தகைய நிலப் பிரபுக்கள் பலரையும் எதிர்த்துப் போராடிய போராட்டங்கள் ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் அல்லவா என்று உங்களை நான் பணிவன்புடன் கேட்கிறேன்.

சிமிண்டு ஆலையில் சங்கரலிங்க அய்யரையும், மோட்டார் தொழிற்சாலை டி.வி.எஸ். அய்யங்காரையும் ஜி.டி. நாடுவையும் இன்னபிற பண-ஜாதி அதிபதிகளையும் தொழிலாளர் போராட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்த்துப் போராடுவது, ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்கு அரண் கட்டுவதாகாதா என்று உங்களை வினயமாகக் கேட்கிறேன்.

இந்த நிலப்பிரபு எதிர்ப்பு முதலாளி எதிர்ப்பு போராட்டங்களின் வழியாக, ஜாதிபேதம் பாராட்டாது சகல மக்களையும் திரட்டுவது ஜாதி ஒழிப்புக்கு இணைந்த செயல் அல்லவா என்று கேட்கிறேன்” என்று கேட்டார்.

“தோழர்களே! மேற்கூறியபடி சொல்லும் செயலும் உள்ள நாங்கள், ஜாதி ஒழிப்பு என்ற பேரால் பெரியார் நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம். ஏன்?”

ஜாதி முறையின், வெளியீடுகளை அறவே துடைக்க வேண்டுமானால், ஜாதி நடைமுறையில் சமுதாயக் கொடுமைகளை, பிற் போக்கு நிலவரங்களை உணர்வு பூர்வமாகக் காணும் சகல கட்சியி னரும், சகல பகுதி மக்களும் ஒன்றுபட்டு பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

ஜாதீய முறையை விரும்பாத, ஜாதீய முறையை எதிர்க்கிற தம்மைப் பொறுத்த முறையில் ஜாதீய முறையை ஒழித்துவிட்ட எல்லாப் பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கை களால் மாத்திரமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

கம்யூனிஸ்டுகளோ, திராவிடக் கழகத்தார்களோ, திராவிட முன்னேற்றக் கழகத்தார்களோ மட்டுமல்ல, ஜாதியை ஒழிக்க விரும்புகிறார்கள், பாடுபடுகிறார்கள். சோஷலிஸ்டுகள், பிரஜா- சோஷலிஸ்டுகள், தமிழரசுக் கழகத்தார் முதலியவர்களும் ஜாதி அழிப்புக்கே நிற்கிறார்கள். ஏன், காங்கிரஸ்காரர்களிலும் பெரும்பாலான, தேச பக்தியுள்ள, தேசீய ஒற்றுமையில் நாட்டமுள்ளவர்களும் ஜாதி ஒழிப்பை விரும்புகிறார்கள்.

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல; அரசியல் கட்சிகளில் ஈடுபடாத படிப்பாளிகளும் நல்லன்பர்களும், இன்று ஜாதி முறை, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்றும், ஜாதிமுறை தேவை யில்லையென்றும், அது ஒழிக்கப்பட வேண்டுமென்றும் எண்ணுகிறார்கள். பல்வேறு ஜாதிகளையுடைய இந்த நாட்டில், பார்ப்பனரிலிருந்து ஹரிஜன் வரை எல்லா ஜாதிகளும் ஒழியவேண்டுமென்று உண்மையாகவே, உறுதியாக விரும்புகிறார்கள். இவர்களையெல் லாம் ஒன்றுபடுத்தி மயக்கத்தாலும், மௌடீகத்தாலும் ஜாதி முறைக்கு இரையாகிக் கொண்டிருக்கும் இதர பகுதி மக்களையும் இந்த முகாமில் இழுக்கத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலமே, ஜாதி முறையை நிச்சயமாக ஒழிக்கத் தகுந்த பாதையில் வெற்றிகரமாக முன்னேற முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தப் பெரும் பணியை ஆற்றுவதற்கு ஜனநாயகரீதியான சமாதானமான மனமாற்றும் முறைதான் (The Method of Persuasion) மிகச் சிறந்த முறை என்பதையும், பலாத்கார முறை (The Method of cohersion) தகுந்த முறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக்கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதீய தீய பிரதிபலிப்புகளை, இதோ ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும், மற்றபடி இந்த சில்லரை பலாத்காரத்தால் ஜாதி ஒழிப் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்து விட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்கமாட்டான்.

இனி பெரியார் ஜாதி ஒழிப்பைப்பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.

ஈ.வெ.ரா. ரஷ்யா சென்று வந்த பின் 1924-25-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ. வெ. ரா, “காங்கிரஸ் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழியவேண்டும்” என்றும், அப்பால் “பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்” என்றும், அப்பால் “பார்ப்பனீயம் ஒழியவேண்டும்” என்றும், அப்பால், “ஜாதி ஒழியவேண்டும்” என்றும், அப்பால் “வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும்” என்றும், அப்பால் “சனாதன தர்மம் ஒழியவேண்டும்” என்றும் அப்பால் “இந்து மதம் ஒழிய வேண்டும்” என்றும், அப்பால் “மதங்களே ஒழிய வேண்டும்” என்றும், போகப் போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார். (ஒரே சிரிப்பு.)

பின்னர் 1932ல் ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்து, சமதர்மப் பிரச்சாரம் நடத்தினார். ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவிக்காரர். அல்லாதார் மாநாடு போன்ற மாநாடுகளை யெல்லாம் கூட்டினார்.

1994ல் என்று ஞாபகம். வடாற்காடு ஜில்லா திருப்பத்தூரில் லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில் ஈ. வெ. ரா. பேசிய பேச்சு, குடியரசு பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. குடியரசின் அந்த ஆண்டு தொகுதியை எடுத்து இன்றும் நீங்கள் பார்க்கலாம்.

அந்தப் பேச்சில், ஜாதி ஒழிப்பைப் பற்றி அவர் என்ன கூறினார் தெரியுமா? சமதர்மம் பேசத் தொடங்கிய பின் பேசத் தொடங்கியது என்பதையும், சோவியத் யூனியனுக்குச் சென்றுவிட்டு வந்த பின் பேசிய பேச்சு அது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பேச்சில் என்ன பேசினார் தெரியுமா?

“பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமென்றும், வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டுமென்றும், ஜாதிகள் மதங்கள் ஒழிய வேண்டுமென் றும் எவ்வளவோ காலம் பேசிவிட்டோம். ஒரு சுக்குக்கும் பலன் ஏற்படவில்லை. இன்று அந்த ஜாதிகளையும், பதங்களையும் தாங்கி நிற்கும் சமுதாயத்தையும், அந்தச் சமுதாயத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்” என்று பேசினார்.

அன்பர்களே! அன்று நான் அவரோடு சமதர்மப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன் என்பதும் திருச்சி நகரவாசிகளாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். யாரிடமாவது பழைய ‘குடியரசு”த் தொகுதி இருந்தால் அவசியம் படித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். அப்பொழுது, அன்றே ஈ.வெ.ரா. ஜாதி ஒழிப்புக்கு என்ன பாதையைக் காட்டினார் என்பது நன்றாகப் புலப் படும்.

தென்னூர் கூட்டத்தில் நான்

இவ்வாறு பேசியவர், 1935-ம் ஆண்டில் வேறொரு பாதையைக் காட்டினார். இதே நகரத்தில், இன்றைய திராவிடக் கழகத்தின் நிர்வாகத் தலைவரான எனது மதிப்பிற்குரிய நண்பர் டி. பி. வேதாசலம் அவர்கள் வீட்டில், ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டினார். அந்த பார்ப்பனரல்லாதார் கூட்டம் தென்னூரில் கூட்டப்பட்ட பொழுது, நான் பெரியாரிலிருந்து கருத்து மாறுபட்டு விட்டேன். அன்று அவரோடு இணைந்து நிற்கவில்லை. அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ஒரு நண்பரைச் சந்திக்கும் பொருட்டு நான் தென்னூருக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் திருவாளர்கள்: கி.ஆ. பெ.விசுவநாதமும், சௌந்தர பாண்டியனும் என்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைத்தார்கள். ஒரு நண்பரைப் பார்க்க மாத்திரமே வந்தேன் என்றும், எனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையென்றும்கூறி, அவர்களுடைய அழைப்பை மறுத்தேன். அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி, என்னை கூட்டத்தின் மத்தியில் அழைத்துச் சென்று உட்கார வைத்தார்கள்.

“பலர் பேசினார்கள். பின்னர், மீண்டும் அந்தக் கூட்டத்தில் எனது கருத்தைத் தெரிவிக்கும்படி வற்புறுத்தினார்கள். நான் எதிரிடை அபிப்பிராயம் உடையவன். என்னைப் பேசச் சொல்ல வேண்டாம். அதில் லாபமொன்றுமில்லை” என்று அழுத்தமாகக் கூறிப் பார்த்தேன். அவர்கள் விடவில்லை.

நான் பேசினேன். “நான் ஒரு சோஷலிஸ்ட். நான், பிராமணன் பிராமணரல்லாதான் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. சுய மரியாதை இயக்க ஆரம்ப காலத்திலிருந்து, அதோடு நெடுகலும் தொடர்பு கொண்டிருந்தவன் நான். ஆயினும் நீங்கள் பிராமண ரல்லாதார் என்று சொல்லுகிற சொல்லை, எந்த அர்த்தத்தோடு கூறுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. பிராமணரல்லாதார் என்றால் அக்கிரகாரத்தில் பிறக்காதவர்கள் என்ற அர்த்தத்தில் நீங்கள் உபயோகப்படுத்தினால் பிராமணரல்லாத காங்கிரஸ் காரர்களாகிய டாக்டர் நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தரனார் போன்றவர்களை இந்த மகாநாட்டுக்கு நீங்கள் அழைத்தீர்களா? பிராமணியம் அல்லாதார் என்று நீங்கள் கூறினால், ‘பிராமணீயம்’ என்பதற்கு புரோகித மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, இந்துமத மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பவற்றையெல்லாம் அடக்கி, நீங்கள் பொருள் கொண்டால், அப்படிப்பட்ட பிராமணீயத்தை ஒழித்துள்ள காங்கிரஸ் பிரமுகர்களான ராய சொக்கலிங்கம் செட்டியார், சேலம் பவானி சிங், டி. எஸ். சொக்கலிங்கம் போன்றவர்களை இந்த மாநாட்டுக்கு அழைத்தீர்களா? இல்லை. அதேபொழுதில், நாள் தவறாமல் பழனிக்குச் சென்று வேலாயுதத்தையும் குலாயுதத்தையும் வணங்குவது மட்டுமல்ல, பார்ப்பன புரோகிதனிடம் தீர்த்தமருந்திவரும் பி.டி. ராஜன் போன்றவர்களை இந்த மகாநாட்டுக்கு அழைத்துள்ளீர்கள்.

ஆகவே உங்கள் “பார்ப்பனரல்லாதார்” எல்லாம் காங்கிரஸ் எதிர்ப்பும் ஜஸ்டிஸ் கட்சி ஆதரவும்தான். இந்தக் கூட்டத்தில் எனக்கு ஒட்டுமில்லை ; உறவுமில்லை” என்று கூறினேன்.

சமதர்மத்தை விட்டு, ஐஸ்டிஸ் கட்சி பக்கம் ஈ.வெ.ரா. திரும்பிய பிறகே மேற்படி தென்னூர் கூட்டம் கூட்டப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபாலாச்சாரியை ஆதரிப்பார். மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம் ! (சிரிப்பு) வேறொரு பித்தம் கிளம்பினால், அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.

நேற்று நடந்த பொதுத்தேர்தலில், காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார், அதற்கொரு காரணம் சொன்னார். (சிரிப்பு) இன்று, ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார்:

ஆணானப்பட்ட கௌதம புத்தன், ஜாதியை ஒழிக்க முயன்றான், முடியவில்லை! ஆள்வார்களும் நாயன்மார்களும் முயன்றார்கள், முடியவில்லை, நான் ஜாதியை ஒழித்து விடுவேன் என்று இன்று ஈ.வெ.ரா. பெரியார் கையில் கத்தியை தடுக்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக, அவர் ஜாதியை எப்படி அழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ் நாட்டில் ஜாதீய வெறியும் ஜாதிப் பூசலும் ஒழியவில்லை யென்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

“அன்பர்களே ! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்த மட்டில், ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈ.வெ.ரா. என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே, இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.

பூணூலிலும் உச்சிக்குடுமியிலுமா ஜாதி ?

‘ இனி, இன்று அவர் நடத்தும் போராட்ட நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

காவேரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் – இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும் அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்கு நேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள் – தங்கள் வழக்கப்படி குளித்து, பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர், அவர்கள் வைத்திருந்த ஒரு சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள். அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள் ; ஓடஓட துரத்தினார்கள், பெரியாரைப் பின்பற்றுகிற தி.க.வினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.

சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ? (ஒரே சிரிப்பு) காவிரி ஆற்று வெள்ளம் ஒரு தனி மனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிற பொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக்கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா?

(சிரிப்பு).

நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால், எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்?

(சிரிப்பு).

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா? (சிரிப்பு) ஓட்டல்களிலுள்ள ‘ட்யூப் லைட்டுகளை’ உடைத்து நொறுக்கினால், ஜாதிமுறையை உடைத்து நொறுக்கிவிட்டதாகக் கருதுகிறார்களா ? (சிரிப்பு).

பூணூலையும்,உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும் உச்சிக்குடுமிகளையும் உடையவர்களெல்லாம் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்குப் பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற்காப்புக்குத் துணிய மாட்டார்களா? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது, பக்கத்திலிருப்போர்க ளெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவனெல்லாம் தண்டக்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத் திட்டத்தில் இயங்கும் சமுதாயத்தில் எந்த சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டு இருக்குமா?

சகலரின் ஒத்துழைப்பு

எந்த வகையாலும், இத்தகைய அநாகரீகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக்கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டுமென்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு, சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்த பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரீகச் செயல்கள் அல்ல, அநாகரீகச் செயல்கள் என்கின்றோம். நிதானமான நடவடிக்கைகள் அல்ல, வெறிச்செயல்கள் என்கின்றோம்.

எனவே, இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இது மட்டுமல்ல, சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால்… என்று வைத்துக் கொள்ளுவோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு).

இதிலிருந்து வெட்டுப்பழி குத்துப்பழிக்கு வழி பிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு இந்த அநாகரீகப் போக்கு அனுமதிக்கப்படத்தக்கதுதானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்ளுகிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியைத் தனிமைப்படுத்தி, அநாகரீகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.

ஆதரவு கிடைக்காது

இன்றைய எதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால், பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிரிகள் என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்களெல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்லுவதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதர வாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.

ஆகவே, ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும்- இன்னார் இனியார் என்று பாராமல் -தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக் கூட பொருந்தாத தரம் கெட்ட செயலாகும்.

மேலும், இந்த மாதிரி வெறிச்செயல்களுக்கு பற்பல ஜாதியிலும் பிறந்துவிட்ட நல்லெண்ணம் படைத்தவர்கள், ஜாதி ஒழிய வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும், ஜாதி ஒழிப்பின் பெயரால் மேற்படி வெறிச் செயல்கள் நடந்தால் ஆதரவளிப் பார்களா? மாட்டார்கள். ஆகவே, ஜாதி ஒழிப்புச் சாக்கோடு நடைபெறும் இந்த வெறிச் செயல்களுக்குப் பெருவாரியான மக்களின் ஆதரவு கிடைக்க முடியாது. அதே பொழுதில்,அவர்கள் ஆதரவளிக்காது கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அக்கிரமமான பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற அநாகரீக வெறிச் செயல்களை எதிர்க்கவும் செய்வார்கள். இதனால் ஜாதி ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு ஈ.வெ.ரா. தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டமுறை ஜாதி ஒழிப் புக்குத் தேவையான ஒற்றுமையைத் திரட்டுவதில் வெற்றி பெறாது. மாறாக மோதுதல்களையே விளைவிக்கும்.

எனவே, இந்த வெறிச் செயல்கள் ஜாதி ஒழிப்புக்கு உதவாது, ஜாதீயச் சண்டைகளுக்கே தூப தீபம் போடும்.

இந்த இடத்தில் வேறொரு உண்மையையும் கூறிவிட விரும்புகிறேன். பூணூலை அறு, உச்சிக் குடுமியைக் கத்தரி, பீமநகரில் எழுதியிருப்பது போல் இரத்தம் ஒழுகும்படி உச்சிக் குடுமியைக் கத்தரிப்பதாய் படம் தீட்டு, என்று ஈ.வெ.ரா. கூறினார் என்றோ அல்லது பக்கத்தில் நின்றுகொண்டு தூண்டிவிட்டார் என்றோ நான் சொல்ல வரவில்லை. அவர் பேசி வருகிற பேச்சுக்கும், அவருடைய பத்திரிகையான விடுதலையில் எழுதிவரும் எழுத்துக் கும் இந்த மாதிரி வெறிச் செயல்களில் சில பல வாலிபர்கள் ஈடுபடுவதில் பொறுப்புண்டு என்பதை மறுக்க முடியாது.

திராவிடக் கழகத் தலைமையின் பேச்சும், எழுத்தும், ஏற்றுகிற கொடிய துவேஷத்தின் விளைவுதான் இத்தகைய, நல்ல மனிதர் யாரும் விரும்பத்தகாத அநாகரீக வெறிச் செயல்களுக்கு காரணம் என்பதை தமிழ் மக்கள் உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதோடு மட்டுமல்ல; ஐாதி ஒழிப்புக்கு வேறு சில கட வடிக்கைகளையும் ஈ.வெ.ரா. பெரியார் காட்டியுள்ளார்.

1. இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தை எரித்தல்.

2. காந்தியடிகள் பட எரிப்பு.

3. தேசீயக் கொடி எரிப்பு.

இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, இவை எப்படி ஜாதியை ஒழிக்கும் என்பதை அலசிப் பார்ப்போம் என்று பலத்த கரகோஷத்திற்கிடையே ஜீவா பேசினார்.

அரசியல் சட்டத்தை எரிப்பதால் ஜாதி ஒழியுமா ?

”அன்பர்களே! அரசியல் சட்டத்தில் அகற்றவேண்டிய பல பிற்போக்கு அம்சங்கள் இருக்கின்றன என்பதை கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக்கொள்ளுகிறது. அந்தப் பிற்போக்கு அம்சங்களை மாற்றுவதற்கு சகல ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும் என்பதையும் அங்கீகரிக்கிறது.

உலகத்தில் எந்த நாட்டு அரசியல் சட்டத்திலும் இல்லாத அளவு இந்திய அரசியல் சட்டம், ஜனாதிபதிக்கு சர்வாதிகாரம் அளிக்கிறது. ஜனாதிபதி பிடித்துவைக்கிற பிள்ளையார்கள் தான் கவர்னர்கள். இந்தக் கவர்னர்கள், வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்று சொல்லுவதுபோல், விரும்பினால் சட்ட சபையை விட்டு வைக்கலாம்; பிடிக்காவிட்டால் ஜனப் பிரதிநிதி சபையைக் கலைத்து விடுவதற்கும் உரிமை உண்டு.

மற்றொன்று, எந்த நகரத்திலேனும் மக்கள் தங்கள் பிரச்சினைக்கான போராட்டத்தை நடத்துகிறபொழுது, ஜனாதிபதி விரும்பினால் அதற்குக் கலகம் என்று பெயர் சூட்டி பாராளுமன்ற அனுமதியின்றியே, ஆகாய விமானத்தின் மூலம் குண்டுமாரி பொழிந்து அதை நசுக்கிவிட அவருக்கு அதிகாரம் அரசியல் சட்டம் அளிக்கிறது. இத்யாதி இத்யாதி எத்தனையோ பயங்கரமான அதிகாரங்களை அரசியல் சட்டம் ஜனாதிபதியிடம் குவித்து வைத்திருக்கிறது.

ஜனநாயக விரோதமான ஜனாதிபதியின் இந்த சர்வாதிகாரம் ஒழிக்கப்படவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்ப முதலே போராடி வருகிறது.

சட்டத்திலுள்ள இந்த அம்சத்தையா ஈ. வெ. ரா. பெரியார் எதிர்க்கிறார்? இல்லை.

அரசியல் சட்டத்தில் வரும் விஷயங்கள் மூன்று வகையானது.

1. யூனியன் சர்க்காரை ஒட்டிய விஷயம்.

2. யூனியன் சர்க்காரையும் ராஜ்ய சர்க்கார்களையும் ஒட்டிய விஷயம்.

3. ராஜ்ய சர்க்காரை மட்டும் ஒட்டிய விஷயம்.

யூனியன் சர்க்கார் விஷயத்தில் ராஜ்ய சர்க்கார் தலையிட முடியாது. யூனியன் சர்க்காரும் ராஜ்ய சர்க்காரும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யூனியன் சர்க்கார் அனுமதியின்றி ராஜ்ய சர்க்கார் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.

ராஜ்ய சர்க்காரின் பிரித்தாளும் விஷயங்களான போலீஸ், கல்வி, விவசாயம் போன்ற விஷயங்களிலும், மத்திய சர்க்காருடைய அனுமதி பெற்றே காரியங்களைச் செய்யவேண்டிய நிலைமை சட்டப் படி இருக்கிறது.

ஐ.சி.எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி. எஸ். அதிகாரிகள், ராஜ்ய சர்க்காருக்கு உட்பட்டவர்களாயினும் அவர்கள் மீது மத்திய சர்க்காரின் அனுமதியின்றி எவ்வித நடவடிக்கையும் ராஜ்ய சர்க்காரால் எடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது.

கேரளத்தில் கல்வி மசோதா சட்டசபையில் நிறைவேற்றப் பட்டும், ஜனாதிபதியின் அனுமதி கிடைக்காததால், அமுலுக்கு வர இயலாமல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. ராஜ்ய சர்க்காருக்கே சம்பந்தப்பட்ட விஷயத்திலும்கூட, மத்திய சர்க்காருக்கு எவ்வளவு பயங்கரமான ஆதிக்கம் இருக்கிறது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

சொத்துரிமை விஷயத்தில் அது ஒரு உள்ளங்கை அகலமுள்ள நிலமாயினும் சரி, மத்திய சர்க்காரின் அனுமதியின்றி ராஜ்ய சர்க்கார் தான் நிறைவேற்றுகிற சட்டத்தை அமுல் நடத்திவிட முடியாது.

ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் தேவை

இவ்வாறு அதிகாரம் பணம் முதலிய விஷயங்களை அரசியல் சட்டம் மத்திய சர்க்காரிடமே குவித்து வைத்திருக்கிறது. எனவே, ராஜ்யங்களிலிருந்து ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்கிற குரல் நியாயமாகவே கிளம்பிக் கொண்டிருக்கிறது.

பண விஷயத்தைப் பொறுத்த வரையில் மத்திய சர்க்காரி லிருந்து, மாகாண சாக்கார்களுக்கு இன்று கிடைப்பதைவிட அதிக தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாகவே, எல்லா ராஜ்யங்களிலும் எழுந்துள்ள கோரிக்கையாகும்.

சமீபத்தில் சந்தானத்தை தலைமையாகக் கொண்ட நிதிக் குழுவை மத்திய சர்க்கார் அமைத்தது. அதன் சிபாரிசு என்ன தெரியுமா? வருமான வரியில் 50 சதமானம் ராஜ்யங்களுக்குக் கிடைத்து வந்ததை 55 சதமானமாக உயர்த்த வேண்டுமென்றும், அதே பொழுதில் ஏற்கனவே ராஜ்யங்களுக்கு கலால் வருமானத் தில் கிடைத்துவந்த 50 சதமானத்தை 25 சதமானமாகக் குறைக்க வேண்டுமென்றும் சிபார்சு செய்திருக்கிறது. கூட்டுவது 5 சதமானம் ! குறைப்பது 25 சதமானம் ! இந்த முறையில் மத்திய சர்க்காரிடமே மேலும் மேலும் பணத்தைக் குவிக்கிறது.

மேற்கூறியவாறு அதிகாரத்தையும், பணத்தையும் மேலும் மேலும் யூனியன் சர்க்காரிடமே குவித்து வைக்கும் முயற்சியை முறியடித்து, ராஜ்யங்களுக்கு அதிக அதிகாரங்களும் அதிக பணமும் கிடைக்கும்படி இந்தியா முழுவதிலுமுள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டுப் போராடி ஆகவேண்டும். குறிப்பாக நம்முடைய ராஜ்யத்துக்கு அதிக அதிகாரமும் அதிகப் பணமும் கிடைக்க நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டியது அவசர அவசியம்.

அரசியல் சட்டம் இதற்கு குறுக்கே நிற்கிறது என்பதை நாம் மேலே பார்த்தோம். அரசியல் சட்டத்திலுள்ள இந்தப் பெரும் குறையை எதிர்த்த ஈ.வெ.ரா.போர்க் கொடியை உயர்த்தியிருக்கிறார்? அல்லவே அல்ல.

அரசியல் சட்டம் புனிதமானது, அதில் மாற்றம் ஏற்படக் கூடாதென்று கம்யூனிஸ்ட் கட்சி அன்றும் சொன்னதில்லை, இன்றும் சொல்லவில்லை. அன்று அரசியல் சட்டம், அரசியல் நிர்ணய சபை யில் விவாதிக்கப்பட்ட பொழுது, அரசியல் நிர்ணய சபையில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட்தான் இருந்தார். அந்த சபையில் கம்யூனிஸ்ட் அங்கத்தினராக இருந்த எங்கள் வங்க கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் சோமநாத் லாகிரி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் சட்டத்துக்கு எத்தனையோ திருத்தங்களை வைத்தார்.

பெரும்பான்மைக் கொடுமையால் ஒரு திருத்தம்கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்குள் 6 தடவை காங்கிரஸ்காரர்களே மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் அன்று கொடுத்த திருத்தங்கள் சிற்சில, இன்று அரசியல் சட்டத்திற்குள் புகுந்திருக்கின்றன.

இன்னும் பற்பல திருத்தங்களுக்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகவாதிகள் அங்கீகரிக்கத் தகுந்த, ஜனநாயக வாதிகள் எடுத்துக் காட்டுகிற, அரசியல் சட்டத்திலுள்ள குறைகளை ஒழிக்க இன்று ஈ.வெ.ரா. முன் வந்திருக்கிறாரா? அதுதான் இல்லை.

நல்ல அம்சத்தை கொளுத்துகிறார்

சட்டத்திலேயே ஒரேயொரு நல்ல அம்சம் என்று ஜனநாயக வாதிகள் எல்லோரும் ஒப்புக்கொள்ளத் தகுந்தது, “அடிப்படை உரிமைகளைப்பற்றிக் கூறும் (Fundamental Rights) சட்டத்தின் 13-வது பிரிவாகும்.” ஈ.வெ.ரா. இதை ஆட்சேபித்துத்தான் சட்டப் புத்தகத்தை நெருப்பிட்டுக் கொளுத்துகிறார்.

இந்தப் பிரிவிலுள்ள மத சுதந்திரப் பகுதி ஜாதி ஒழிப்புக்கு பெரிய இடறு கட்டையாக இருக்கிறது என்று சாக்குச் சொல்லித் தான், அவர் எரிப்பு இயக்கத்தில் குதிக்கிறார்.

சகலவிதமான ஏற்றத் தாழ்வுகளுக்கும் பரம விரோதியாக விளங்குகிற சோவியத் அரசியல் சட்டத்திலும், சீன அரசியல் சட்டத்திலும் இந்த ‘மத சுதந்திர’ உரிமை ஜம்மென்று இடம் பெற்று இருக்கிறது. அங்கு சமுதாய ஏற்றத் தாழ்வு ஒழிப்புக்கு குறுக்க மறுக்க நடமாடமுடியாத இந்த மத சுதந்திரப் பகுதி இங்கு மட்டும் ஜாதியை ஒழிக்கவிடாது என்று பூச்சி காட்டி, சட்டப் புத்தகத்தை எரிக்கும் திருப்பணியில் இறங்குகிறார் ஈ.வெ.ரா.

இந்தப் போக்கு உண்மையில் ஜாதியை ஒழிக்க உதவுமா? உதவாது.

சட்டப் புத்தகத்தைக் கொளுத்துவது ஜாதி ஒழிப்புக்குச் சரியான வழி என்று ஈ.வெ.ரா. கருதினால், அவருடைய வழியை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரோடு ஒத்துழைக்க முடியுமா? ‘நமது அரசியல் சட்டம்’ என்று கருதுகிற சகல அரசியல் கட்சிகளும், சகல பகுதி மக்களும் ஈ.வெ.ரா.வின் சட்டப் புத்தக எரிப்பு நடவடிக்கையை எதிர்க்காமலிருக்க முடியுமா? முடியாது. அப்பொழுது என்ன ஏற்படுகிறது? திராவிடக் கழகத்துக்கும் நேரு சர்க்காரின் பிற்போக்குக்கும் அல்ல போராட்டம் நடக்கும்! சட்டப் புத்தக எரிப்புச் செயல் தி. க. வினருக்கும் அரசியல் சட்டத்துக்கும் பெருமை அளிக்கிற பகுதி மக்களுக்கும் இடையில் பிளவை உண்டு பண்ணுகிறது; மோதுதலை விளைவிக்கிறது.

இது எரிப்பு – எரிப்பு எதிர்ப்பு பிளவாக முடியுமே ஒழிய, ஜாதி ஒழிப்பு ஒற்றுமையாக உருவாகாது.

ஆகவே, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு, ஜாதி ஒழிப்புக்கு கொஞ்சமும் துணைபோகாது என்பதோடு, மக்களின் ஒற்றுமையை உடைத்து பூசலைப் பெருக்கும் என்பதனால், கம்யூனிஸ்டுக் கட்சி இந்த தகாத செயலை அழுத்தமாகக் கண்டிக்கிறது.

அன்று காந்தி நாடு‘! இன்று காந்திபட எரிப்பு!

அன்பர்களே! பெரியோர்களே! இதுவரை சட்டப் புத்தக எரிப்பு ஜாதி முறையை ஒழிக்காது என்பது மட்டுமல்ல, ஜாதி எதிர்ப்பு சக்திகளை ஒன்றுபடுத்தவும் உதவாது என்று எடுத்துக் காட்டினேன். அதோடு, மக்களிடையில் மோதுதலுக்கு தொண்டி டித்து, மக்கள் ஒற்றுமையை உடைக்கும் பேரபாயமும் கொண் டது என்பதை எடுத்துக் காட்டினேன்.

“ஈ. வெ. ரா.வின் போராட்டத் திட்டத்தில் மற்றொன்றான காந்தியடிகள் பட எரிப்பு நடவடிக்கை ஜாதி ஒழிப்புக்கு நன்மை செய்யாது; பதிலாகத் தீமையே விளைக்கும்.”

காந்தியடிகள் இறந்தபொழுது ஈ. வெ. ரா. என்ன கூறினார், என்ன எழுதினார்? காந்தியடிகளை உச்சிமேல் தூக்கி வைத்து மெச்சி, ‘இந்திய நாடு’ என்று இந்த நாடு அழைக்கப்படுவதற்குப் பதில் இனிமேல் ‘காந்தி நாடு’ என்று அழைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திக் கோரினார். செத்துப்போன காந்தி திரும்பவும் வந்து ஜாதி முறையை நிலை நிறுத்துவதில் என்ன பங்கெடுத் துக் கொண்டார், என்று நமக்கு யாருக்கும் தெரியவில்லை. (சிரிப்பு)

அப்படியிருக்க, இன்று ஜாதி ஒழிப்புப் பேரால், காந்தி அடிகள் பட எரிப்பு நடத்தவேண்டும் என்று பெரியார் கோருகிறார். ஜாதி முறை நீடிப்பதற்கான பழியை இன்று காந்தி அடிகள் மீது சுமத்துகிறார்,

அன்று காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்றது ஒரு நாக்கு. இன்று அதே காந்தியின் படத்தை எரிக்க வேண்டு மென்கிறது வேறொரு நாக்கு. இந்த இரண்டு பேச்சுக்கும் இடையில் காந்தி அடிகள் நம் மத்தியில் இல்லவும் இல்லை. பணிவுடன் கேட்கிறேன், ஈ.வெ. ரா, வுக்கு இரண்டு நாக்கா என்று.

காந்தியடிகள் மறைந்தபொழுது அந்த மறைவில் உணர்ச்சி வசப்பட்டு நின்ற கோடிக்கணக்கான மக்களை திருப்திப்படுத்தி பெருமை அடித்துக் கொள்ள அன்று காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கூறினாரா, அல்லது எதார்த்தத்தில் காந்தியைப் பெருமைப்படுத்தக் கூறினாரா?

இதை நீங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஈ.வெ.ரா மாறி மாறிப் பேசுவதிலும், முன்னுக்குப் பின் முரணாகச் செயல் புரிவதிலும் உள்ள உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதிருக்கட்டும்! காந்தி பட எரிப்பால், ஜாதி ஒழிப்பை வெற்றிப்படுத்த முடியுமா? முடியவே முடியாது. ஏன்?

காந்தி அடிகளின் கருத்தோட்டத்தை ஒத்துக் கொள்கிறவரும் சரி ஒத்துக்கொள்ளாதவரும் சரி, இந்தியா முழுவதிலும் தமிழ் நாடு உட்பட, இந்த நூற்றாண்டில் அவருக்கு நிகரான பெரியார் வாழ்ந்ததில்லையென்று கருதுகிறார்கள். இந்த நாடு முழுவதிலும் பெருவாரியான மக்கள் அவரை ‘தேசப் பிதா’ என்று பேரன்போடும் பெரு மரியாதையோடும் அவருக்கு வணக்கம் செலுத்துகிறார் கள். இவர்களெல்லாம் ஜாதி நீடூழி வாழவேண்டும் என்று பிடி வாதம் காட்டுகிற பத்தாம்பசலி வைதீகர்கள் அல்ல, கம்யூனிஸ்டுகளை விட்டுவிடுங்கள், சோஷலிஸ்டுகள், பிரஜா – சோஷலிஸ்டுகள், தமிழரசுக் கழகத்தார், ஜனநாயக காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் காந்தீய வாதிகள், பூதான இயக்கத்தார், சர்வோதய வாதிகள், இவர்களெல்லாம் -காந்தீயத்தை மதிக்கிறவர்கள் என்பது மட்டுமல்ல, ஜாதி ஒழிப்பிலும் கூட்டணியாக முன்வரக் கூடியவர் கள்.

காந்தி பட எரிப்பு நடவடிக்கை மேற்கூறிய அத்தனைப் பேருடைய எதிர்ப்பையும் கொண்டுவரும் என்று நான் கூறத் தேவை இல்லை.

இந்த எதிர்ப்பை அடிமடியில் வாங்கிக் கட்டிக்கொண்டும், ஜாதி ஒழிப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை நாட்டில் இருக்கிறதா? இவ்வாறு எல்லோருடைய எதிர்ப்பையும் அநாவசியமாகப் பெற்றுக் கொண்டு ஜாதி ஒழிப்பில் குதிக்கிறவர்கள் உண்மையில் ஜாதி ஒழிப்புக்காக இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் என்று பொறுப்புணர்ச்சியும் நிதான புத்தியும் உடையவர்கள் எண்ண முடியுமா?

மேலும், ஒரு நல்ல மனிதன் ஒரு நாகரீக மனிதன், ஒரு ஜன நாயகவாதி, ஒரு சமாதான விரும்பி, காந்தி படம் எரிப்பதை கண்ணால் பார்த்துக் கொண்டே வாளாயிருக்க முடியுமா?

ஆகவே, பெரியாரின் காந்தி பட எரிப்பு திருப்பணி, சகல பகுதி மக்களையும் எதிர்ப்புக் குரல் எழுப்பி நிர்ப்பந்திக்குமேயன்றி ஜாதியை ஒழிக்க, தூசு கூட துணை போகாது என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தம் திருத்தமான கருத்து. (பலத்த கரகோஷம்)

தேசீயக் கொடி எரிப்பு

அடுத்தது தேசீயக் கொடி எரிப்பு. தேசீயக் கொடி ஒருவரின் சொத்தோ அல்லது ஒரு கட்சியின் சொத்தோ அல்ல. நமது தேசீய கெளரவத்தின் அறிகுறி அது.

தேசீயக் கொடியின்கீழ், இன்று நாட்டை ஆளுவோர், பல தவறுகள் இழைக்கலாம். தேசீயக் கொடியின் கீழ் ஆளவந்தார் எடுக்க வேண்டிய, எடுக்க முடிந்த பல நடவடிக்கைகளை எடுக்காமல் நாகரீகத்தைப் பழிக்கும் விதத்தில் பல ஜாதீயக் கொடுமைகள் இன்னும் நீடிக்கலாம். இதற்கு தேசீயக் கொடி அல்ல பொறுப்பாளி. ஆட்சி பீடத்திலிருப்பவர்களும் அவர்கள் கடைப்பிடிக்கும் பிற்போக்கான கொள்கைகளுமே பொறுப்பாளிகள். இதை நாம் உணர்ந்தால், ஆட்சியில் மாற்றத்தை, ஆள்வோர்களின் மாற்றத்தைக் கொண்டுவர முற்படுவோமேயன்றி தேசீயக் கொடியை எரிக்கும் வெறியாட்டத்துக்கு தேவை ஏற்படாது.

தேசியக்கொடி புனிதமானது, நமது நேர்மையான தேச பக்தியை விடுதலை இலட்சியத்தை, இன்னபிற சீரிய புத்துணர்ச்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது. கட்சி பேதங்களைத் தாண்டி, இந்நாட்டிலுள்ள எல்லா தேச பக்தர்களும் அவரவர் விகிதாசாரப் படி உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம்செய்து உருவாக்கியது. ஏன், ஒரு காலத்தில், ஈ. வெ. ரா.வும் நேர்மையான உணர்ச்சியுடன் இந்தக் கொடியின் உருவாக்கத்திற்குப் பங்கு செலுத்தியிருக்கிறார் என்பது நாம் அறியாததல்ல.

இத்தகைய பொன்னான கொடியை எரித்து ஜாதியை ஒழிக்க முற்படுகிறேன் என்பது எதையோ நினைத்துக்கொண்டு எதையோ செய்வதாகும். (சிரிப்பு) இந்தச் செயல், ஜாதியை எதிர்ப்பவர் களில் பெரும்பாலாருடைய எதிர்ப்பைத்தான் திரட்டுமேயொழிய, உண்மையில் ஜாதியை ஒழிக்க கொஞ்சமும் உதவிகரமாக இராது.

எனவே, ஜாதி ஒழிப்பு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, சென்ற காலத்தில் ஈ.வெ.ரா.வோடு ஒத்துழைத்தபோதிலும், இன்றும் முறையாக, ஜனநாயக ரீதியாக, ஒரு வகுப்புத் துவேஷமு மின்றி, சகல பகுதி மக்களையும் திரட்டி, ஜாதிமுறையை ஒழிக்க துணிகிற நடவடிக்கைகளில், கம்யூனிஸ்டுக் கட்சி முன்னணியில் நிற்கத் தயாராக இருந்தபோதிலும் ஈ.வெ.ரா. தலைமையில் இன்று தி.க. வினர் நடத்திவரும் மேலே நான் விளக்கிக் காட்டிய போராட்ட நடவடிக்கைகள் பலவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாகக் கண்டிக்கிறது.

உண்மையாகவே ஜாதீயக் கொடுமைகளும் ஜாதீய முறையும் ஒழிய வேண்டுமென்று விரும்புகிற சகல கட்சிகளும், சகல பகுதி மக்களும் தங்கள் உணர்விலும், நடைமுறையிலும், ஜாதியை ஒழிக்க முன்வர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

அதேபொழுதில், ஜாதி ஒழிப்பு பெயரால், பெரியார் தூண்டும் நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்த, கூட்டாகத் தடுத்து நிறுத்த குரல் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறது.

பிராமணர் கடமை

இனி இந்தப் பிரச்னையில் ராஜ்ய, மத்திய சர்க்கார்களின் நிலை, கடமை ஆகியவற்றைப் பற்றியும், பெரியார் போராட்டத் தாக்குதலுக்கு இரையாகி நிற்கும் குறிப்பிட்ட பகுதியினரின் கடமைப் பற்றியும் சிற்சில கூற விரும்புகிறேன்.

“அன்பார்ந்த தோழர்களே! தமிழ்ப் பொது மக்களே ! அரசியல் சட்டப் புத்தகத்தையும், காந்தியடிகள் படத்தையும் தேசீயக் கொடியையும் எரித்து, ஜாதி ஒழிப்பின் பெயரால் ஈ.வெ.ரா. நடத்தும் போராட்டம் நாட்டுக்கு ஒரு பெரிய பாதகத்தையும் விளைவிக்கிறது. அதாவது வளர்ந்துவரும் ஒன்றுபட்ட ஜனநாயக இயக்கத்தைச் சீர்குலைக்க உதவுகிறது. எப்படி?

“தமிழகப் பெரு மக்களுக்கு எதிராக, பலவித நடவடிக்கைகளை காமராஜ் சர்க்கார் எடுத்துவருகிறது. இந்த சர்க்காரின் தலைவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்ற ஒரே காரணத்துக்காக, ஈ.வெ.ரா, அவரை ஆதரித்து வருகிறார். ஈ.வெ.ரா.பெரியார் கைது ஆன பிறகு அவர் வெளியிட்ட செய்தியில்கூட, காமராஜ் சர்க்கா பரின் கையைப் பலஹீனப்படுத்துகிற எந்தக் காரியத்தையும் மறந்தும் செய்யக்கூடாது என்று தமது பக்தகோடிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இவையெல்லாம், ஏதோ தற்செயலாக நடக்கிறவைகளல்ல. பெரியார் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கை எப்படி பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தை தேடித்தருகிறது என்தையே இவை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று உங்களை வேண்டிக் கொள்ளு கிறேன்.

“நான் ஏற்கனவே கூறியதுபோல், மேற்படி வெறிச்செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, நாட்டின் நலனிலும், ஜாதி ஒழிப்பிலும் நாட்டம்கொண்ட சகல பகுதி மக்களுடையவும் அவசர அவசியக் கடமை என்பதை எங்கள் மாநாட்டுத் தீர்மானம் சுட்டிக் காட்டுகிறது.

இதே பொழுதில், பிராமண நண்பர்களுக்கு ஒரு வார்த்தை. தி.க.வினரின் பலாத்காரத் தாக்குதலிலிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பிராமணர் சங்கம் போன்ற ஜாதீய அடிப் படையில் புதிய சங்கங்களைத் தோற்றுவிக்கும் பாதை பெரிதும் உதவிகரமாக இராது என்பதை அவர்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கொள்ளுகிறது. மீண்டும் ஜாதீய சங்கங்களை உருவாக்குவது, ஜாதீய உணர்வைப் போக்காது. மேற்படி வெறிச்செயல்களை முறியடிப் பதற்கான மக்கள் ஒற்றுமையை திரட்டாது. ஜாதீய சங்க அமைப்பில் சகல பகுதி மக்களுடைய ஒத்துழைப்பில்தான் இந்த வெறிச் செயல்களுக்கு வெற்றிகரமாக முடிவுகட்ட முடியும் என்ற அனுபவப் பூர்வமான உண்மை மறைக்கப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட நண்பர்கள், மேற்படி அநாகரீகம் போக்கை, வெறிச் செயல்களை, எதிர்க்கும் எல்லாப் பகுதி மக்க ளோடும் ஒன்றுபட்டுப் போராடுவதுதான் நிலையான பாதுகாப்பை அளிக்கும் என்று அவர்களுடைய கவனத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி நிதானமாகக் கொண்டுவர விரும்புகிறது.

பிராமண இளைஞர்கள் முன்னணியில் நின்று, காலப்போக்கை உணர்ந்து இந்தத் திசையில், தங்களுடைய பங்கைச் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

காமராஜரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் பொறுப்பு

இனி சர்க்காருடைய கொள்கையைக் கவனிப்போம். அண்மையில், ஜாதி வெறியைத் தூண்டிவிடும் போராட்டத்தை பண்டித நேரு, வன்மையாகக் கண்டித்தார் என்பது மெய், இந்தக் கண்டனம் மட்டும் போதுமா? இவ்வாறு வெறிச் செயல்கள் உருவாவதற்கு சர்க்காரின் கொள்கையும் குறிப்பிடத்தக்க அளவு காரணமாக இருக்கவில்லையா?

பெரியாரின் ஜாதி வெறிப் போக்குக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக காமராஜர் சர்க்கார் ஊக்கமளித்து வந்திருக்கிறது என்பது தமிழ் மக்கள் அறிந்த விஷயம்.

ஈ.வெ.ரா. காங்கிரசுக்கு தேர்தலில் ஓட்டு திரட்டிக் கொடுத்தார். ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு ஓட்டு திரட்டிக் கொடுத்தார். காங்கிரஸ் கட்சி அந்த ஜாதி வெறிப் பிரச்சாரத்தை கொஞ்சம் கூட எதிர்த்தது கிடையாது. இந்த சங்கதி காங்கிரஸ் மேலிடத்துக்குத் தெரியாதா? காங்கிரஸ் மேலிடத்துக்கும் இந்தச் சம்பவங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையா? அவ்வாறு யாரும் சொல்லிவிட முடியாது.

நேருவும் பொறுப்பே

பண்டித நேரு உட்பட, காங்கிரஸ் மேலிடம் இந்த மாதிரியான – இந்த மாதிரியான கோடு கிழித்து கொள்ளுங்கள்; காங்கிரஸ்-தி.க. உறவுகளை அனுமதித்தே வந்திருக்கிறது.

இரண்டொரு உதாரணம் கொடுக்கிறேன். சென்ற பொதுத் தேர்தலின் போது பண்டித நேரு சென்னையில் பேசினார். பக்கத்தில் காமராஜர் உட்கார்ந்திருந்தார். நேரு பேசும்பொழுது திரா விட இயக்கத்தை ஒட்டு மொத்தமாகக் கண்டித்துப் பேசத் தொடங்கினார். காமராஜர் தி. மு. க. வை மட்டும் கண்டியுங்கள் என்று குறிப்பிட்டார். அந்தத் திருத்தத்தோடு, பின்னர் தன் பேச்சில் தி.க. வை விட்டு விட்டு தி.மு.க. வையே தாக்கிப் பேசினார். இது எதைக் காட்டுகிறது. இது அரசியல் சந்தர்ப்ப வாதத்தைக் காட்டவில்லையா? இது ஒன்று…

கேரளத்தில் லீகுடன் குலாவினார்கள்

கேரளத்தில் கம்யூனிஸ்ட் மந்திரி சபை ஏற்படுத்துவதற்கு முன், ஒரு பொதுத் தேர்தல் ஏற்பட்டதல்லவா? அந்தத் தேர்தலின் போது பண்டித நேரு அங்கு சென்று சூறாவளிப் பிரச்சாரம் நடத் தினார். மலபாரில் சென்ற இடங்களிலெல்லாம், இங்கு அண்மை யில் தி.க.வைத் தாக்கிப் பேசினது மாதிரி, முஸ்லீம் லீக்கை தாக்கிப் பேசினார். நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்றெல்லாம் காரசாரமாகத் தாக்கினார். அவர் கேரளத்திலிருந்து திரும்பிச் செல்ல காரில் காலெடுத்து வைக்கவில்லை. அதற்குள்ளாக கேரள காங்கிரஸ் பிரமுகர்கள் முஸ்லீம் லீகோடு கூட்டணி வகுக்கக் குழையடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குழையடிப்பு இன்றுவரையும் நிற்கவில்லை.

இவ்வாறு, அரசியலில் ஜாதீயத்தை, வகுப்பு வாதத்தைப் புகுத்தும் ஜனநாயக விரோதமான போக்கை, காங்கிரஸ் மேலிடம் தெரிந்தே அனுமதித்து வந்திருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்! சென்ற பொதுத் தேர்தலில் ஒரிசாவில் நாங்கள் கணதந்திரப் பரீஷத்தோடு ஜார்கண்ட் கட்சியோடு, இத்தகைய வகுப்புவாதக் கட்சிகளோடு கூட்டணி வகுக்க ஒப்புக்கொண்டிருந்தால் காங்கிரஸ் கவிழ்ந் திருக்கும்; மந்திரி சபையில் எங்களுக்கும் இரண்டு இடங்கள் கிடைத்திருக்கும்.

வகுப்புவாதமற்ற ஒரே கட்சி

காங்கிரஸ் எதிர்ப்பைவிட, வகுப்புவாத எதிர்ப்பையே நாங்கள் பெரிதுபடுத்தினோம். எனவே அவர்களோடு நாங்கள் சேர வில்லை. மாறாக, எங்களை ஒழிக்க, கேரளத்தில் வகுப்பு வாத முஸ்லீம் லீகோடு காங்கிரஸ் கொஞ்சிக் குலாவுகிறது. இந்த ராஜ் யத்தில் எங்களைத் தோற்கடிக்க, தங்களுக்கு அதிக ஸ்தானங்கள் பெறவும் திராவிடக் கழகத்தின் ஜாதிவெறிப் பிரச்சாரத்தை அனு மதித்தது.

அன்பர்களே! வகுப்புவாதத்துக்கோ, ஜாதீய வாதத்துக்கோ கிஞ்சிற்றும் இரையாகாத ஒரு அரசியல் கட்சி அனைத்திந்தியா விலும் இருக்கிறதென்றால், அது கம்யூனிஸ்ட் கட்சியே என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அரசியல் ஆதிக்கத்துக்காகவும், சுரண்டலை எதிர்த்து பொது மக்கள் நடத்தும் போராட்டங்களில் உருவாகும் ஒற்றுமைக்கு உலை வைப்பதற்காகவும் பிற்போக்காளர்கள் ஜாதி வெறியைப் பயன் படுத்தி வருகிறார்கள், என்பது நமது நாட்டு ஜனநாயக இயக்கத் தின் நடைமுறையில் நாம் கண்ட அனுபவம்.

முதுகுளத்தூர் படிப்பினை

இதைப்போல், பதவிவேட்டை திருவிளையாடல்களிலும் ஜாதி வெறியைப் படுமோசமாக உபயோகப்படுத்தி வருவதும் நாம் கண்கண்ட அனுபவம் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஜாதி வெறிவை அரசியல் ஆதிக்கத்துக்காக உபயோகப்படுத்தத் தொடங்கினால், அது எத்தகைய பயங்கர விளைவுகளை உண்டு பண்ணும் என்பதற்கு முதுகுளத்தூர் சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

எனவே,நாட்டின் வளர்ச்சியிலும், ஜனநாயக வளர்ச்சியிலும் ஜாதிக் கொடுமைகளற்ற சமுதாய வாழ்வில் அக்கறை கொண்டுள்ள சகல அரசியல் கட்சிகளும், சகல ஸ்தாபனங்களும், ஜாதி வெறிச் செயல்களில் ஈடுபடும் போக்கை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டும் என்று எங்கள் மகாநாட்டுத் தீர்மானம் பணிவன்போடு கேட்டுக்கொள்ளுகிறது.

ஜாதி உணர்ச்சியினால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் தீங்குகளை தெள்ளத் தெளிவாக உணர்த்தி, அதை அறவே அகற்றப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், ஜாதிக் கொடுமைகள் எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் அவற்றை விட்டு வைக்காமல் இடைவிடாது எதிர்த்துப் போராட வேண்டு மென்றும், இவை கம்யூனிஸ்டுகளின் கடமைகள் என்றும் எங்கள் மாநாட்டுத் தீர்மானம் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

இத்தகைய கடமைகளை கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் நிறைவேற்ற முயற்சி செய்வதில், பொதுமக்களாகிய நீங்கள், பரிபூரண ஆதரவு தரவேண்டுமென்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் . அன்பர்களே ! நான் நீண்ட நேரம் பேசிவிட்டேன். இனியும் நான் பேசிக்கொண்டிருக்க இந்தக் கூட்டம் இடம் தராது. வெகு சீக்கிரத்தில் எனது பேச்சை முடித்துவிடுவேன்.

உலகம் நிலைகுத்திய கண்களோடு, கூர்ந்து கவனிக்கப்படுவதும், கம்யூனிஸ்டுத் தலைமையில் வளர்ந்து வருவதுமான கேரள ஜனநாயகத்தைப் பற்றியும் கொஞ்சம் இந்தக் கூட்டத்தில் பேச விரும்பினேன் நேரமில்லை.

தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமனும், மோகன் குமார மங்கலமும் முறையே அவர்களுடைய பேச்சில் கேரளத்தின் வெற்றிச் சாதனைகளைப் பற்றிப் பேசியதை நீங்கள் கேட்டீர்கள். எனக்குப் பின்னால் தலைவர், ஒருக்கால் அதைப் பற்றியும் இதர விஷயங்களைப் பற்றியும் பேசக்கூடும் என்று நினைக்கிறேன்.

ஆகவே ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் சில வார்த்தை கள் பேசிவிட்டு எனது பேச்சை முடித்துக்கொள்வேன்.

ஜாதி ஒழிப்பைப்பற்றிக் குறிப்பிடுகிற பொழுது, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிக் குறிப்பிடாதிருக்க முடியாது என்பது என் கருத்து.

தாழ்த்தப்பட்ட மக்களும் வர்க்க ஸ்தாபனங்களும்

ஜாதி ஒழிப்புத் துறையில் அக்கறை காட்டி கலப்பு மணங்கள் புரிய, சமபந்தி போஜனங்கள் நடத்த பலரும், பல கட்சிகளும் நடவடிக்கைகள் எடுக்க முன்வந்திருக்கலாம் என்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. அரிஜன சேவா சங்கம் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்கள் முன்னேற சில பல நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் என்பதையும் நான் மறுக்க வரவில்லை. ஆனால் தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயே முதன் முதலாக தொழிற்சங்கங்களின் மூலமாகவும் இன்னும் விரிவாக நாட்டுப்புறங்களில் விவசாய சங்கங்களின் மூலமாகவும், சமுதாயத் தின் அடித்தட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதி இந்துக்களையும், சாதியை மறந்து, குறிப்பிட்ட லட்சியத்திற்காக ஒன்றுபட்டு நின்று போராட, இரத்தம் சிந்த, உயிர் கொடுக்க, போராட்டத்தின் மூலம் வெற்றி காணச் செய்த பெருமை கம்யூனிஸ்டுக் கட்சிக்குத்தான் உண்டு என்று பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன். (பலத்த கை தட்டல்) இது இருக்கட்டும்

இந்திய அரசியல் சட்டம், அனைத்திந்தியாவிலுமுள்ள ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒவ்வொரு குடி மகளுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் என்று பல உரிமைகள் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த உரிமைகளை அனுபவிக்க உத்தரவாதம் இருக்கிறதா ! அதுதான் இல்லை. கோடானு கோடி பின் தள்ளப் பட்ட மக்களுக்கு, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுகின்றன.

சமுதாய வாழ்வின் முதுகெலும்பாக, நகரங்களில் தொழிலாளிகளாகவும், நாட்டுப்புறங்களில் விவசாயக் கூலிகளாகவும் மிகப் பெருவாரியாக விளங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. பொதுக் கிணறுகளை உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இது போலுள்ள இன்னும் பலவகைகளில் அவர்களுக்கு ஜீவாதார உரிமைகள் மறுக்கப்படு கின்றன. பேச்சுப் பல்லுக்காக வெளிச்சம் போட்ட போதிலும் பத்து ஆண்டுகள் தாண்டிய பிறகும் காங்கிரஸ் சுயராஜ்யத்தில் நடைமுறை, இந்தத் துறையில், நொண்டியடிக்கத்தான் செய்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

இந்த நிலைமைகள் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஜீவாதார உரிமை உத்தரவாதமாக, அனுபவ பாத்தியமாவதற்கு, பாடுபடவேண்டியது கட்சி, ஸ்தாபன, வேறு பாடுகளோ மாறுபாடுகளோ காட்டாமல், சகல ஜனநாயகவாதி களுடையவும் கடமை என்றும், எங்கள் மாநாட்டின் ஜாதி ஒழிப்புத் தீர்மானம் தமிழ்ப்பெரு மக்களுக்குப் பணிவன்புடன் எடுத்துக். காட்டுகிறது.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *