கம்பர் நாற்பது
வ. சுப. மாணிக்கம்

கம்பர் நாற்பது

கடவுள் வணக்கம்

1. உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.

உலகங்கள் எல்லாவற்றையும் தாமே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் நீங்காத, எண்ணற்ற விளையாட்டுக் களை உடையவர் யாவரோ, அவரே தலைவர்; அவர்க்கே நாங்கள் அடைக்கலம்.

நூலின் பெருமை

2. ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி யறையலுற் றேன்மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ!

அலையோசையோடு உயர்ந்தெழும் திருப்பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுவதையும் ஒரு சிறு பூனை ஆசையினால் பருகப் புகுந்ததுபோல, யானும் குற்றமற்ற வெற்றியுடைய இராமனின் கதையை என் ஆசையினால் சொல்லத் தொடங்கினேன்.

அவையடக்கம்

3. அறையு மாடரங் கும்படப் பிள்ளைகள்
தறையிற் கீறிடில் தச்சருங் காய்வரோ?
இறையு ஞான மிலாதவென் புன்கவி
முறையின் நூலுணர்ந் தாரு முனிவரோ?

பிள்ளைகள் தரையில் வீட்டறைகளும் நாடக சாலைகளும் தோன்றுமாறு கிறுக்கினால் அவை சிற்ப முறைப்படி இல்லையென்று சிற்பியர் கோபிக்கமாட்டார்.அது போல, சிறிதும் அறிவில்லாத என் பாடல்கள் குற்றமுடையனவாயினும் முறையாக நூலுணர்ந்த புலவர்கள் என்னை முனிய மாட்டார்கள்.

மழைவளம்

4. புள்ளி மால்வரை பொன்னெனல் நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்ந்தெனத் தாரைகள்
உள்ளி யுள்ளவெ லாமுவந் தீயுமவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே.

பொன்மயமான இமயமலைமேல் வெள்ளிக் கம்பிகளை ஊன்றியது போலவும், உள்ளவற்றை எல்லாம் உவந்து வழங்கும் வள்ளல்களைப் போலவும், மேகங்கள் மழையைக் கொட்டின.

கோசலநாட்டு வளம்

5. வரம்பெலா முத்தம் தத்தும் மடையெலாம் பணிலம் மாநீர்க் குரம்பெலாஞ் செம்பொன் மேதிக் குழியெலாங் பவளஞ் சாலிப் பரம்பெலாம் பவளஞ் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க் கரும்பெலாஞ் செந்தேன் சந்தக் காவெலாங் களிவண் டீட்டம்.

வயல் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள்; தத்துநீர் மடைகளில் எல்லாம் சங்குகள்; வாய்க்காலின் கரைகளில் எல்லாம் செம்பொன்; எருமைகள் படிந்து புரளும் குழிகளில் எல்லாம் செங்கழுநீர்ப் பூக்கள்; பரம்படித்த வயல்களில் எல்லாம் பவழங்கள்; நெற்பயிர் எரந்த வயல்களில் எல்லாம் அன்னங்கள்; பக்கங்களில் உள்ள கரும்புகளில் எல்லாம் சந்தேன்; சந்தனச் சோலைகளில் எல்லாம் தேனுண்டு களிக்கும் வண்டுக் கூட்டங்கள். கோசலநாட்டு மருதநிலம் இவ்வளவு பெரிய வளம் மிக்கது.

மருதநில நாட்டியம்

6. தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

சோலை அரங்குகளில் மயில்கள் நடனமாடவும், தாமரைக் கொடிகள் பூவிளக்குக்களைத் தாங்கவும், மேகங்கள் மத்தளம் ஒலிக்கவும், கருங்குவளைகள் கண்விழித்துக் காணவும், அலைகள் திரைச்சீலையாகவும், வண்டுகள் யாழிசை யொலிக்கவும், கோசலநாட்டில் மருதநிலமென்ற மன்னன் அரசு வீற்றிருப்பான்.

இயற்கையின் அமைதி

7. நீரிடை யுறங்குஞ் சங்கம் நிழலிடை யுறங்கும் மேதி தாரிடை யுறங்கும் வண்டு தாமரை யுறங்குஞ் செய்யாள் தூரிடை யுறங்கும் ஆமை துறையிடை யுறங்கும் இப்பி போரிடை யுறங்கும் அன்னம் பொழிலிடை யுறங்குந் தோகை.

சங்குகள் நீரிடையே உறங்குகின்றன; அவற்றிற்கு இடையூறு செய்யாமல் எருதுகள் நிழலிடையே உறங்குகின்றன; ஆடவர் அணிந்திருக்கும் மாலைகளில் வண்டுகள் உறங்குகின்றன; செந்தாமரைப் பூக்களில் திருமகள் உறங்குகின்றாள்; சேற்றிடங்களில் ஆமைகள் உறங்குவதனால் துறையிடங்களில் முத்துச் சிப்பிகள் உறங்குகின்றன; வைக்கோற் போர்களில் அன்னங்கள் உறங்க, சோலைகளில் மயில்கள் உறங்குகின்றன. இவ்வாறு கோசல நாட்டில் அடுத்தவர்க்கு இடையூறின்றி எல்லாம் இன்புறுகின்றன.

பிள்ளை வளர்ப்பு

8.சேலுண்ட வொண்க ணாரின் திரிகின்ற செங்க லன்னம் வளர்த்திய மழலைப் பிள்ளை மாலுண்ட நளினப் பள்ளி காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா லாட்டும் பண்ணை.

கோசலநாட்டுப் பண்ணைகளில் கயற்கண்களுடைய மகளிர் நடைபோலத் திரிகின்ற அன்னம், தாமரைப் படுக்கையில் கிடத்திச் சென்ற அன்னப் பிள்ளை, கன் றுகளை நினைத்த எருமைகளின் மடியிலிருந்து பெருகிய பாலையுண்டு துயிலும். அப்போது பச்சைத் தவளைகள் தாலாட்டுப் பாடும்.

தேன்வளம்

9. ஆலைவாய்க் கரும்பின் தேனும் சோலைவீழ் கனியின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் தொகையிழி இறாலின் தேனும் மாலைவா யுகுந்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப வுண்டு மீனெலாங் களிக்கு மாதோ.

கோசல நாட்டிலுள்ள ஆலைகளில் கருப்பஞ் சாறாகிய தேனும், தென்னம்பாளைத் தேனும், கனிகளின் தேனும், தேனீக் கூட்டிலிருந்து வழிந்த தேனும், மாலைகளிலிருந்து சிந்திய தேனும், இவையெல்லாம் அளவுகடந்து ஓடிக் கடலிற் சேர, அதிலுள்ள மீன்களெல்லாம் இத் தேன்களையுண்டு களிப்படையும்.

பால்வளம்

10. ஈர நீர்ப்படிந் திந்நிலத் தேசில கார்க ளென்ன வருகரு மேதிகள் ஊரில் நின்றகன் றுள்ளிட மென்முலை தாரை கொள்ளத் தழைப்பன சாலியே.

குளிர்ந்த நீரில் மூழ்கிக் கிடந்து, நிலத்து மேகம்போல எழுந்துவரும் எருமைகள் தம் கன்றுகளை நினைத்து மடி சுரந்த பால்வெள்ளத்தால் கோசல நாட்டில் செந்நெற் பயிர்கள் தழைத்து வளரும்.

அட்டில்வளம்

11. முட்டி லட்டில் முழங்குற வாக்கிய நெட்டு லைக்கழு நீர்நெடு நீத்தந்தான் பட்ட மென்கமு கோங்கு படப்பைபோய் நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே.

சமையற்கூடங்களில் உலையரிசி கழுவிய நீர் வெள்ளம் நீர்க்கரைகளில் வளர்ந்தோங்கிய மெல்லிய பாக்கு மரத் தோட்டத்தின் வழியே ஓடிக் கழனிகளில் நடப்பட்ட செந்நெல் நாற்றுக்களை வளர்க்கும்.

ஓசைவளம்

12. தினைச்சி லம்புவ தீஞ்சொ லிளங்கிளி நனைச்சி லம்புவ நாகிள வண்டுபூம் புனைச்சி லம்புல புள்ளினம் வள்ளியோர் மனைச்சி லம்புவ மங்கல வள்ளையே.

கோசல நாட்டுத் தினைப்புனங்களில் இனிய சொற்பேசும் இளங்கிளிகள் ஒலிக்கும்; பூவரும்புகளில் மிக்க இளமையான வண்டுகள் ஒலிக்கும்; நீர்நிலைகளில் பறவைக் கூட்டங்கள் ஒலிக்கும்; வள்ளல்களின் மனைகளில் நெல் குற்றும் மகளிர் பாடும் மங்கலமான வள்ளைப் பாட்டுக்கள் ஒலிக்கும்.

திணைநெருக்கம்

13. வள்ளி கொள்பவர் கொள்வன மாமணி துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி புள்ளி கொள்வன பொன்விரி புன்னையிற் பள்ளி கொள்வன பங்கத் தன்னமே.

குறிஞ்சி நிலத்தில் வள்ளிக்கிழங்குகளைத் தோண்டி எடுக்கும் போது உடன்கிடைக்கும் மாமணிகளை வீசியெறி வதனால், பக்கத்தில் உள்ள மருதநிலத்து மாங்கனிகள் சிதைந்து தேன் துளிகளைச் சிந்தும்; மருதநிலத்துத் தாமரைகளில் தங்கும் அன்னம் பக்கத்தில் உள்ள நெய்தல் நிலத்துப புன்னை மலர்க் கொத்துககளில் படுத்துக் கொள்ளும். இவ்வாறு கோசல நாட்டில் நானிலங்களும் நெருங்கிக் கலந்திருந்தன.

பெண்கல்வி

14. பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்து மன்றி விழைவன யாவையே.

பெரிய கண்களையும் பிறைமதி போன்ற நெற்றியையும் உடைய மகளிர்க்கெல்லாம் தக்க செல்வச் செழிப்பும் கல்வியறியும் இருப்பதனால், வறுமையால் வாடி வந்தோர்க்கு வழங்குதலும், நாள்தோறும் விருந்தினரை ஓம்புதலுமே செய்வர்.

குடியொழுக்கம்

15. கலஞ்சு ரக்கும் நிதியங் கணக்கிலா நிலஞ்சு ரக்கும் நிறைவளம் நன்மணி பிலஞ்சு ரக்கும் பெறுதற் கரியதம் குலஞ்சு ரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்.

குடிகளுக்கெல்லாம் கணக்கில்லாத செல்வங்களைக் கடல் கடந்து சென்றுவரும் வணிகக் கலங்கள் கொடுக்கும்; நிறைந்த விளைவுச் செல்வத்தினை நிலங்கள் கொடுக்கும்; சிறந்த மணிகளை நிலச்சுரங்கங்கள் கொடுக்கும்; பெறுதற்கரிய ஒழுக்கத்தினைத் தத்தம் குலங்கள் கொடுக்கும்.

மாறில்லாதவை

16. கூற்ற மில்லையோர் குற்றமி லாமையால் சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செம்மையால் ஆற்ற நல்லற மல்ல திலாமையால் ஏற்ற மல்ல திழிதக வில்லையே.

எக்குற்றமும் இல்லாமையால் யாருக்கும் முன்பே இறப்பு நேருவதில்லை; சிந்தையில் செம்மைப் பண்பு இருப்பதால் யாருக்கும் சினம் விளைவதில்லை; நல்லதுதவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லாமையால் கோசல நாட்டவர்க்கு ஏற்றமே யன்றி இழிவென்பதில்லை.

இலக்கியக் கனிகள்

17. கோதைகள் சொரிவன குளிரின நறவம் பாதைகள் சொரிவன பருமணி கனகம் ஊதைகள் சொரிவன உயிருறு மமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.

மாலைகளெல்லாம் குளிர்ந்த இளந்தேனைச் சொரியும்; வழி நடக்கும் பாதைகளெல்லாம் மணிகளையும் பொன் களையும் சொரியும்; குளிர்ச்சியுடைய காற்றுக்களெல்லாம் அமுதச்சாரலைச் சொரியும்; இலக்கியமெல்லாம் செவிகள் நுகரும் கனிகளாகிய பாக்களைச் சொரியும்.

தேவையில்லாதவை

18. வண்மை யில்லையோர் வறுமை யின்மையால் திண்மை யில்லையோர் செறுந ரின்மையால் உண்மை யில்லைபொய் யுரைவி லாமையால் வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்.

அந்நாட்டில் சிறிதும் வறுமை இன்மையால் கொடை யென்பதில்லை; போரிடுவோர் இன்மையால் எவரிடத்தும் வலிமை வெளிப்படவில்லை; யாரும் பொய் சொல்லாமையால் உண்மையென்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கும் பல்வகைக் கேள்விச் செல்வம் பொருந்தியிருத்தலால் அறியாமைக்கு இடமில்லை.

நிலைக்களங்கள்

19. பொற்பின் நின்றன பொலிவு பொய்யிலா நிற்பின் நின்றன நீதி மாதரார் அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே.

நாட்டு மக்களின் நற்பண்பாகிய அகத்தழகில் புறத் தழகுகள் நிலைபெற்றன; அவர்களின் பொய்ம்மையற்ற வாழ்வில் நீதிகள் நிலைத்து நின்றன; மகளிர் அன்பினில் இல்லறங்கள் நிலைபெற்றன; அவர்தம் கற்பினில் காலந்தவறாத பருவ மழைகள் நிலைபெற்றன.

அயோத்திநகர்ச் சிறப்பு

20. தெள்வார் மழையுந் திரையாழியும் உட்க நாளும் வள்வார் முரச மதிர்மாநகர் வாழு மாக்கள் கள்வா ரிலாமைப் பொருட்காவலு மில்லை யாதும் கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களு மில்லை மாதோ.

மேகத்தையும் கடலையும்விட ஓசை மிகுந்த முரசம் நாள் தோறும் ஒலிக்கும் அயோத்தி நகர மக்களுள் யாரும் கள்வர்கள் இல்லாமையால் எப்பொருட்கும் காவலுமில்லை; ஒரு பொருளையும் இரப்பார் இல்லாமையால் கொடுப்பாரும் இல்லை.

இராமன் அம்பு

21. சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரங் கரிய செம்மல் அல்லொக்கு நிறத்தி னாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே!

சாபச்சொல்லை யொத்த கடுமையான வேகமுடைய அம்பினை இராமன் இருள்போன்ற தாடகை மேல் விட்டான். விட்டவுடன் அவ்வம்பு வைரமலை போன்ற அவளது நெஞ்சில் தைத்து நிற்காமல், அதனை ஊடுருவி முதுகுப்புறம் வெளிப்பட்டது. வெளிப்பட்டு, நல்லோர் சொன்ன கருத்துக்கள் கல்லாதவர் நெஞ்சில் நில்லாமற் போவனபோலப் போய்விட்டது.

கொடிகளின் காட்சி

22. மையறு மலரி னீங்கி யான்செய்மா தவத்தின் வந்து செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிக ளென்னும் கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை யொல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா.

‘திருமகள் தான் எப்போதும் தங்கியிருக்கும் தாமரை மலரை விட்டு யான் செய்த பெருந்தவப் பேற்றினால் என்னிடத்து வந்து அவதரித்திருக்கின்றாள்; அவளை மணக்க நீ விரைந்து வருவாயாக’ என்று மிதிலை நகரம், அழகிய கொடிகளென்னும் தன் கைகளையசைத்து இராமனை யழைப்பது போல் அந்தக் கொடிகள் அசைந்தன.

இராமன் வீதியுலா

23. தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னா னுருவுகண் டாரை யொத்தார்.

மிதிலை நகரவீதியில் உலாவரும் இராமனின் தோள்களையும் அடிகளையும் தனித்தனி கண்ட பெண்கள் அவ்வவற்றையே கண்டு நின்றனர். அவன்தன் வடிவழகு முழுவதையும் கண்டவர் யாருமில்லை. இக் காட்சி கட வுளின் ஒவ்வொரு வடிவத்தையே பார்த்து அதனையே வழிபடும் வேறுபட்ட சமயத்தாரைப் போன்றது.

கையேயி கூறிய தசரதன் ஆணை

24. ஆழிசூ ழுலக மெல்லாம் பரதனே யாள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற் கொண்டு பூமிவெங் கானம் நண்ணிப் புயீணயத் துறைக ளாடி எழிரண் டாண்டின் வாவென் றேவினன் அரச னென்றாள்.

இந் நிலவுலகையெல்லாம் பரதனே ஆளுமாறு, நீ சடைகளைத் தாங்கித் தவத்தினை மேற்கொண்டு காட்டினை யடைந்து புண்ணிய நதித்துறைகளில் நீராடிப் பதினான்கு ஆண்டுகள் கழித்துப் பின்னர் வா என்று உன் தந்தை தசரத மன்னன் ஏவினான்” என இராமனிடம் கைகேயி மொழிந்தாள்.

இராமனின் முகப்பொலிவு

25. இப்பொழு தெம்ம னோரால் இயம்புதற் கெளிதோ யாரும் செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு பின்பவ் வாசகம் உணரக் கேட்ட அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா!

அவ்வாறு கைகேயி மொழிந்ததைக் கேட்ட நிலையில் இராமனது திருமுகப்பொலிவினை இப்பொழுது எம் போல்வார் சொல்வதற்கு எளிதாகுமோ? இயல்பாகத் தாமரை மலரை ஒத்திருந்த இராமன் முகம் இக் கொடியசொல்லைக் கேட்டபின் மிக்க மகிழ்வால் தாமரையை வென்றுவிட்டது.

இராமன் விடைபெறுதல்

26. மன்னவன் பணியன் றாகின் நும்பணி மறுப்பெ னோவென் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னினி யுறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னொளிர் கான மின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்.

‘இது மன்னவன் பணியன்றாயினும் நீர் பணித்த பணியை மறுப்பேனோ? என் பின் பிறந்தோனாகிய பரதன் அடைந்த அரசுச்செல்வம் அடியேனாகிய யான் அடைந்ததன்றோ? இதனைவிட நன்மை யாதுளது? இப் பணியைத் தலைமேற் கொண்டேன். காட்டிற்கு இன்றே போகிறேன். விடையினையும் பெற்றுக் கொண்டேன்’ எனக் கைகேயிடம் கூறிப் புறப்பட்டான் இராமன்.

ஊழ்வினை

27. வாழ்வினை நுதலிய மங்க லத்துநாள் தாழ்வினை யதுவரச் சீரை சாத்தினான் சூழ்வினை நான்முகத் தொருவன் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?

அரச வாழ்க்கைக்குரிய மங்கல நாளில் காட்டு வாழ்க்கை வர அதற்குரிய மரவுரியை இராமன் உடுத்தினான். முறைப்படி வரும் வினையை நான்முகனும் ஒழிக்க முடியாது.

இராமன் மேனியழகு

28. வெய்யோ னொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்பொய்யோவெனு மிடையாளொடும் இளையானொடும் போனான்மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான்.

சிற்றிடைச் சீதையோடும் தம்பி இலக்குவனோடும் காட்டிற்குச் செல்லும் இராமன் தன் கருநிற வொளியில் கதிரவனின் செவ்வொளி மறையப் போனான். அவன் மேனி நிறம் கரிய மையோ, மரகத மணியோ, கடலோ, சூல்கொண்ட மேகமோ ! அவை யெல்லாவற்றினும் மேம்பட்ட அழகு டையவன் அவன்.

குகன் நட்புரை

29. ஆழநெ டுந்திரை யாறு கடந்திவர் போவாரோ வேழநெ டும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ?
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை யேசாரோ.

பரதன் படையொடு வருவது பார்த்து, ‘இக் கங்கை யாற்றைக் கடந்தும் இப் படையாளர்கள் இராமனிடம் போவார்களா? இவர்களின் யானைப் படையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கும் வீரனோ நான்? தோழன் என்று இராமன் என்னைச் சொல்லிய அச்சொல்லும் ஒப்பற்ற சொல்லன்றோ. கடந்து போக இவர்களை விடுவேனாயின் அதனை எதிர்த்து யான் இறந்தொழியவில்லையே என்று எல்லோரும் என்னை ஏசமாட்டாரோ’ என வெகுண்டுரைத்தான் குகன்.

குகன் வீரவுரை

30. ஆடு கொடிப்படை சாடி யறத்தவ ரேயாள வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ நாடு கொடுத்தவென் நாயக னுக்கிவர் நாமாளும் காடு கொடுக்கில ராகி யெடுத்தது காணீரோ.

‘வேட்டுவ வீரர்களே! தான் ஆளுதற்குரிய நாட்டினையே இவர்களுக்குக் கொடுத்துவிட்ட இராமனுக்கு, நாம் ஆளுகின்ற காட்டினையும் கொடுக்க விடாதபடி அவன்மேல் படை யெடுத்து வருவதைப் பார்க்க மாட்டீரோ? பார்த்து, அப் படைகளை மடியத்தாக்கி அறத்தவராகிய இராமஇலக்குவரே ஆளுதற்குக் கோசல நாட்டை வேடுவர்கள் கொடுத்தார்கள் என்ற புகழை நீங்கள் அடையவேண்டாமா?’

குகன் கண்ட பரதனின் நிலை

31. வற்கலையினுடையானை மாசடைந்த மெய்யானை நற்கலையின் மதியென்ன நகையிழந்த முகத்தானைக் கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் விற்கையின் றிடைவீழ விம்முறறு நின்றொழிந்தான்.

மரவுரியை உடையாக உடுத்தவனை, மாசுபடிந்த உடம்பினனை, கலையில்லாத மதிபோல ஒளியிழந்த முகத் தினனை, கல்லும் இளகும்படி பெருந்துன்பம் உடையவனான அப் பரதனைக் குகன் பார்த்தான்; பார்த்தவுடன் தன் கைவில் கீழே விழச் செயலற்று நின்றான்.

ஒப்பிலாப் பரதன்

32. தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியினம்மா!

‘புகழுடைய பரதனே! உன் தாயின் வரத்தைக் கொண்டு தந்தை உனக்களித்த அரசாட்சியைத் தீயதுபோல் ஒதுக்கி விட்டாய். கவலை தேக்கிய முகத்தோடு இராமனை அழைத்துப் போக வந்தாய். உன் இயல்பினை நோக்கினால் ஆயிரம் இராமரும் உனக்கு ஒப்பாவரோ’ என்று பரதனைப் பாராட்டினான் குகன்.

தெய்வத் தமிழ்

33. உழக்குமறை நாலினும் உயர்ந்துலகம் ஓதும் வழக்கினு மதிக்கவி யினுமரபின் நாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்.

மழுப்படையும் நெற்றிக்கண்ணும் செம்மேனியும் உடைய சிவபெருமான், நான்மறையிலும் சிறந்த, உலகவழக்கும் செய்யுள் வழக்கும் உடைய தமிழை ஆராய்ந்து அகத்தியனுக்குத் தந்தான்; அகத்தியன் அதனை உலகுக்குத் தந்தான்.

சங்கப்பாடலும் கோதாவரியும்

34. புவியினுக் கணியா யான்ற பொருள்தந்து புலத்திற் றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்.

கோதாவரியாறு, சங்கப் புலவோர் பாடிய அகத்திணைப் பாடல்களைப் போல இந் நிலவுலகுக்கு அணியாகும்; நிறைந்த பொருள்களைத் தரும் விளக்கம் பெற்றதாகும்; துறைகளை யுடையதாய்க் குறிஞ்சி முதலான ஐந்திணைகளின் வழியே ஓடும்; செம்மையுறத் தெளிந்து ஒழுங்குறச் செல்லும். சங்கத் தமிழிலக்கியம் போல விளங்கும் இத்தகைய ஆற்றினை இராமனும் இலக்குவனும் கண்டனர்.

பாண்டநாட்டுச் சிறப்பு

35. அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நாடு ஒத்தி ருக்குமென றாலுரை யொக்குமோ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ் முத்தும் முத்தமி ழுந்தந்து முற்றலால்.

சீதையைத் தேடிச் சென்ற வானரவீரர் கண்ட பாண்டிய நாடு, ஏழுலகத்தினரும் புகழுகின்ற முத்துக்களையும் முத்தமிழையும் தருகின்றது. இவற்றைத் தராத வானுலகம் பாண்டி நாட்டுக்கு ஒப்பாகுமா?

சீதையின் தவக்கற்பு

36. விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பின் நங்கையைக் கண்டேன் நல்லேன் நற்பெருந் தவத்த ளாய இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்.

இராமனே! இலங்கையில் மிக்க தவம் செய்து கொண்டிருக்கும் சீதையைக் கண்ட பேறு பெற்றேன். நற்குடிப் பிறப்பு, மிக்க பொறுமை, திண்மையான கற்பு என்றவையெல்லாம் சீதையாக வடிவெடுத்து நடம்புரியவும் பார்த்தேன்.

நாம் எழுவர்

37. குகனொடும் ஐவ ரானோம் முன்புபின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவ ரானோம் எம்முழை யன்பின் வந்த அகனமர் காத லைய நின்னொடும் எழுவ ரானோம்

புகலருங் கானந் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை.

“அயோத்தியில் நால்வராக உடன்பிறந்த நாங்கள் முன்னர்க கங்கைக் கரையில் குகனொடு சேர்ந்து ஐவரானோம். பின்னர்க் கிட்கிந்தையில் சுக்கிரீவனொடும் சேர்ந்து அறுவரானோம். இப்பொழுது எம்மிடத்தே அன்பினால் வந்தடைந்த வீடணனே, நின்னொடும் சேர்ந்து எழுவரானோம். புகுதற்கரிய காட்டினை எனக்குத் தந்து, நும் தந்தையாகிய தசரதன், புதல்வர்களைப் பெருக்கிக் கொண்டான்” என்று வீடணனுக்கு அடைக்கலமளித்த இராமன் கூறினான்.

அருள் வீரம்

38. ஆனை யாவுனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

இளம் பாக்கு மரத்தில் வாளைமீன் தாவிக் குதிக்கும் வளமிக்க கோசலநாட்டையுடைய வள்ளலாகிய இராமன், தன்னிடத்து முதற்போரில் தோற்று மகுடமிழந்து வெறுங் கையனாய் நிற்கும் இராவணனை நோக்கி, ‘இன்று உன்னுடன் வந்த படைகளெல்லாம் பெருங்காற்றினால் வீசப்பட்ட பூளைப் பூக்களைப்போல் சிதறிப் போயினதைப் பார்த்தாய்.

இந்நிலையில் நீ இன்று உன் இருப்பிடம் போய்ப் படையோடு நாளைக்குப் போர்செய்ய வா’ எனக் கருணையோடு சொல்லி விடுத்தான்.

தோல்விச் சோர்வு

39. வாரணம் பொருத மார்பும் வரையினை யெடுத்த தோளும் நாரத முனிவற் கேற்ப நயம்பட வுரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

முதற் போரில் இராமனிடத்துத் தோற்ற இராவணன் திகையானைகளைப் பொருத மார்பையும், கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்த தோளையும், நாரத முனிவனுக்கேற்ப நயம்படப் பாடிய நாவையும், பத்து மணிமுடிகளையும், சிவ பெருமான் கொடுத்த வாளையும், தன்னுடைய வீரத்தையும் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு, வெறுங்கையோடு மீண்டும் இலங்கையிற் புகுந்தான்.

இராமன் திருமுடி சூடல்

40. அரியணை யனுமன் தாங்க

அங்கதன் உடைவா ளேந்த பரதன்வெண் குடைக விக்க இருவருங் கவரி வீச விரைசெறி குழலி யோங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.

அரியணையை அனுமன் தாங்கவும், உடைவாளை அங்கதன் ஏந்தவும், பரதன் வெண்குடையைப் பிடிக்கவும், இலக்குவ சத்துருக்கனர் இருவரும் வெண்கவரி வீசவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய சீதை அருகே வீற்றிருக்கவும்- திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் மூதாதையர் திருமுடியை ஏந்திக் கொடுக்க, அதனை வாங்கி வசிட்டனே இராமனுக்கு முடிசூட்டினான்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 3 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *