
மணமக்களுக்கு
கி.ஆ. பெ. விசுவநாதம்
மணமக்களுக்கு
தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! வணக்கம். எல்லோருடைய நல்லெண்ணப்படியும், வாழ்த்துதற்படியும், இன்று இங்குத் தமிழ்த் திருமணம் நடைபெறுகிறது. நாமனைவரும் சான்று கூறவும், வாழ்த்துக் கூறவும் கூடியுள்ளோம்.
தமிழ்த் திருமணம்
மணமக்களின் பெற்றோர்கள் இத்திருமணத்தைத் தமிழ்த் திருமணமாக நடத்திவைக்க முன்வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக மணமக்களின் பெற்றோர்களைப் பாராட்டுகின்றேன்.
புதிய முறை
இங்கு வந்துள்ள சாதித்தலைவர்கள், நாட்டாண்மைக்காரர்கள், பெரிய தனக்காரர்கள், வயது முதிர்ந்தவர்களில் யாராவது ஒருவர், இத்திருமணம் புதிய முறையில் நடக்கிறதே என்று எண்ணினால், தயவுசெய்து அவர்கள் முதலில் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதுதான் பழைய முறை.
பழைய முறை
பழங்காலத்தில், தமிழகத்தில் ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த வயது, ஒத்த கல்வி ஆகிய இவைகளையுடைய காளையும் கன்னியும் ஆகிய இருவரும், பெற்றோர் கொடுக்கக் கொண்டு, வாழ்க்கை ஒப்பந்தம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர். ஆரியர்களை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்துகிற முறை தமிழகத்திலே இடைக்காலத்திலே புகுந்த ஒன்று, அது இடைக்காலத்திலே அழிந்து போயிற்று; அவ்வளவுதான்.
பழைய முறையே இப்பொழுது மறுமலர்ச்சியடைந்து வருகிறது. வந்திருக்கின்ற பெருமக்கள் அனைவரும் மன மகிழ்வோடு இதை வாழ்த்துவதுடன், தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்ற பிறகு, அங்கும் இம்மாதிரித் திருமணங்கள் நடைபெற வேண்டுமென முயற்சிப்பது நல்லது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில்,இப்பொழுது சுயமரியாதைத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், தமிழ்த் திருமணம், அரசியல் திருமணம், பதிவுத் திருமணம் எனப் பல்வேறு முறைகளில் திருந்திய திருமணங்கள் பல்வேறு வகையாக நடைபெற்று வருகின்றன. இவையனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு ஒரேமுறையில் நடைபெற வேண்டுமென விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். பெருமக்களாகிய நீங்களும் இவ்வாறே விரும்ப வேண்டுமென்பது எனது எண்ணம்.
நான் இன்று நடத்திவைக்கும் திருமணம் இரண்டாயிரத்து முந்நூற்றைத் தாண்டிய திருமணம். கடந்த 47 ஆண்டுகளாகவே திருமணத்தை நடத்தி வருகிறேன். நான் நடத்திவருகிற இத்தமிழ்த் திருமண முறை, தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்கள் என் மக்களுக்கு நடத்திவைத்த முறை. எல்லோரும் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
பதினாறு பேறு
இப்பொழுது திருமணத்தில் வாழ்த்துக் கூறுவது ஒரு சடங்காகப் போய்விட்டது. பழங்காலத்தில் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல. ஒருவனுடைய வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டுமானால், அவன் பதினாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டுமென்பது கருத்து. அப்பேறுகள்: மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் என்பன.
யாரோ நல்லவர் ஒருவர் இப்பேறுகளை எண்ணாமல் பதினாறு பிள்ளைகளை எண்ணி, என் தாய் தந்தையர்களை வாழ்த்திவிட்டதனால், நாங்கள் பதினாறு பிள்ளைகள் பிறந்து விட்டோம். நான்தான் பதினாறாவது பிள்ளை. எனக்குத் தம்பியும் இல்லை-தங்கையும் இல்லை. இக் காலத்தில் இவ்வாழ்த்துதல் பொருந்துமா? பொருந்தாது.
தனம், தான்யம்
இரண்டாவதாக, இருபதாண்டுகளுக்கு முன்புவரை, மணமக்களை வாழ்த்தும்போது “தனம், தான்யம், வெகு புத்திரலாபம், தீர்க்காயுசு, சுபமஸ்து” என்று வாழ்த்தி வந்தார்கள். இன்று இப்படி வாழ்த்த முடியாது. வாழ்த்தக் கூடாது. ஏனெனில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய்விட்டது. தனம் – தங்கக்கட்டுப்பாடு; தான்யம் – தானியக்கட்டுப்பாடு; வெகுபுத்திர லாபம் – குடும்பக் கட்டுப்பாடு; ஆகவே இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது.
யாரைப் போல
மூன்றாவது வாழ்த்துவதில் ஒரு புதிய முறை. புலவர்களெல்லாம் மலரும் மணமும் போல, வானும் நிலவும் போல, கரும்பும் சுவையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள் என்று மணமக்களை வாழ்த்துகிறார்கள். நல்லறிஞர்கள் பலர் இராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியும் போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள். அரசியல் தலைவர்கள் சிலர் காந்தியடிகளும் கஸ்தூரி பாயும்போல, அறிஞர் அண்ணாவும் இராணியும் போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள் இந்த 70 ஆண்டுகளாகத் திருமணங்களில் பங்கு பெற்று வருகின்றேன். எவராவது ஒருவர் என்னைப்போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை. அதனால்தான் அவர்கள், அவர்களைப்போல, இவர்களைப்போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள். நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப்போல, என் மனைவியைப்போல, என்னைப்போல என் கணவனைப்போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாகவேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாகவேண்டும்.
பொறுப்பு அதிகம்
ஐயரை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணம் நடத்துகிற மணமக்கள், எவ்வளவு தவறுகளைச் செய் தாலும், இந்த நாடு தாங்கிக்கொள்ளும், இம்மாதிரிச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்ட மணமக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் நாடு தாங்காது; ஏற்காது. இன்று புதிதாக இல்லறத்தில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள், இதை உள்ளத்தே வைத்துத் தம் வாழ்க்கையைத் தொடங்கியாகவேண்டும். சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளுகிறவர்களுக்குப் பொறுப்பு அதிகம் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.
வாழ்த்துப் பலிக்க
நல்லவர்கள் வாழ்த்துவதினாலேயே நாம் வாழ்ந்துவிடலாமென்று மணமக்கள் நம்பிவிடக் கூடாது. அப்படி நம்பினால் ஏமாற்றமடைவார்கள். நல்லவர்களின் வாழ்த்துதலுக்கேற்ப மணமக்கள் உறுதியாகவும் திறமையாகவும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தலைவர்களின் வாழ்த்துக்களும் பலிக்கும்.
இல்லறம்
நான் ஒரு நாடோடி. 70 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்துக்கள் அல்லாத இஸ்லாமிய, கிறிஸ்தவ,புத்த,சமண பார்சியக் குடும்பங்களிலெல்லாம் கணவன் மனைவி சன்டைகள் மிகக் குறைவு, பாழ்பட்ட நம்முடைய சமுதாயத்தில்தான் கணவன் மனைவி சண்டைகள் மிகமிக அதிகமாக இருக்கின்றன இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் திருமணக் காலங்களில், அவரவர்களின் மதகுருமார்கள், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்வது எப்படி? என்பதை உணர்த்தி, மணமக்களுக்கு அறிவு ரையும் கூறி வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்கள்.
ஆனால் நாமோ,அறியாத ஒருவரைக் கொண்டுவந்த வைத்து, தெரியாத சடங்குகள் எதை எதையோ செய்து, புரியாத மொழியில் எது எதையோ சொல்லி, வாழ்க்கை என்றால் இன்னதென அறிவிக்காமலேயே, அவர்களை வாழ்க்கையில் ஈடுபடுத்தி வருகிறோம். அதன் விளைவே இது.
இனியேனும் இத் தவறுகளைச் செய்யாமல், திருமண நாட்களில் சில தமிழ் அறிஞர்களைக்கொண்டு மணமக்களுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறுவது நலமாகும். அவ்வகையில் நான் இன்று சில அறிவுரைகளை அறவுரைகளைக் கூறுகிறேன்.
அறவுரை
1. மணமகனுக்கும் மணகளுக்கும் நாளையிலிருந்து மாமியார் வீடு புதிது. உடுத்துகின்ற உடையெல்லாம் புதிது. உண்ணுகின்ற உணவெல்லாம் புதிது படுக் கின்ற இடமெல்லாம் புதிது. பார்க்கின்ற முகமெல்லாம் வேற்று முகம் என்ன செய்வது என்றே தெரியாமல் விழிப்பார்கள். வாழ்க்கையிற் சிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் மனமுடைந்துவிடுவார்கள். உலகமும் இருண்டுவிட்டது போலத் தோன்றும். அவர்களின் வாழ்வில் ஒரு துன்பம் விளைவதுபோலத் தோன்றும். இந்நிலையிலுள்ள மக்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பிறந்த வள்ளுவர் ஒரே ஒரு குறளைக் கூறிப் போயிருக்கிறார். அது இன்றைய மணமக்களுக்குப் பயன்படுமென எண்ணுகிறேன்.
சேற்று நிலம் மழை பெய்து வரப்பெல்லாம் வழுக்குகிறது. பயிரில் களை அதிகமாக மண்டியிருக்கிறது. களை பிடுங்க எண்ணி வரப்பில் நடக்கிறான் உழவன். வரப்பு அவனை நடக்கவிடாமல் வழுக்கிக் கீழே வீழ்த்துகிறது. வரப்பு வழுக்குகிறதே என்று உட்கார்ந்தான். களை
மண்டிப் பயிர் பாழாகிறதே என்று மீண்டும் நடக்கத் தொடங்கினான். மறுபடியும் அவனை வரப்பு வழுக்கி. வீழ்த்துகிறது. இப்படித்தான் இல்லறமும் என்று உணர்ந்துகிறார் வள்ளுவர். அறிவு என்ற அரிவாள் கொண்டு பககத்திலுள்ள மரக்கிளைகளில் ஒரு கொம்பை வெட்டிக் கொடுத்தார் வள்ளுவர். வாங்கி ஊன்றினான் உழவன். கால் மூன்றாயிற்று. வழுக்கலில் வெற்றிநடை போட்டுச் சென்று பயிர்களில் உள்ள களைகளை எடுத்துவிட்டான்.
சேற்று நிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கிறவனுக்கு ஒரு ஊன்றுகோல் துணைசெய்வதுபோல, வாழ்க்கையில் வழுக்கி வழுக்கி நடக்கிறவர்களுக்குப் ஒரு ஊன்றுகோல் தேவை. அது தனக்கு முன்னே இல்லறத்தை நடத்தி வெற்றிகண்ட நல்லறிஞர்களின் வாய்ச் சொல்; அவ்வாய்ச்சொல்லை வாங்கி ஊன்றுங்கள்: வாழ்க்கை வழுக்காது என்று கூறுகிறார் வள்ளுவர். குறள் இதுதான்:
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”
வாய்ச்சொல் என்பதிலும், படித்தவனுடைய வாய்ச் சொல், பட்டம் பெற்றவனுடைய வாய்ச்சொல், வயது முதிர்ந்தவனுடைய வாய்ச்சொல், பதவியில் இருப்பவனு டைய வாய்ச்சொல், பணக்காரனுடைய வாய்ச்சொல் என்று கூறாமல், ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்லை வாங்கி ஊன்றுங்கள், வாழ்க்கை வழுக்காது என்று கூறியிருக்கிறார். இன்றைய மணமக்கள் இவ்வறிவுரையைப் பின்பற்றி வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.
இல்லாததென்?
2. திருவள்ளுவர் ஒருநாள் ஒரு சாலையில் நடந்து செல்லும் பொழுது, ஓர் ஏழைக் குடிசையில் புகுந்தார். கூரைத் தாழ்வாரம், அதிலுள்ள பல ஒட்டைகள், கிழிந்த பாய், சில சட்டிகள் மட்டுமே இருந்தன. அந்த ஏழை, வள்ளுவரைக் கண்டதும் வணங்கி, “ஐயா! என் குடிசைக்கா வந்தீர்கள்? என்னிடம் ஒன்றும் இல்லையே” என்றான். வள்ளுவர் மனமகிழ்வோடு பார்த்தார். அவன் அருகிலுள்ள மனைவி நற்குண நற்செய்கைகளையுடையவளாய்க் காணப்பட்டாள். தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்ன ஏழையிடம் கேட்டார். “அடே! உனக்கு என்னடா இல்லை;” என்று வெளியில் வந்தார்.
உள்ளது என்?
எதிர் வீட்டில் ஒரு செல்வன் ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டிக்கொண்டு, வள்ளுவரை என் இல்லத்திற்கு வாருங்கள் என்று எதிர்கொண்டழைத்தான் வெள்ளிக் கொப்பறை, தங்கத் தாம்பாளங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், முத்துக்கள், மணிகள், எளிதில் உருளும் நிலைப் பெட்டிகள், என்றும் அசையாத இரும்புப் பெட்டிகள் முதலியவைகளெல்லாம் காட்டி, ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்று, இங்குத் தெரிகிற 200 காணி நன்செய் நிலங்களும் என்னுடையவை; இரண்டு குளத்து நீரும் எனக்குச் சொந்தப் பாசனம்; இருபது காளைகள், பத்துப் பசுக்கள், இரண்டு குதிரைகள் யாவும் இருக்கின்றன; ஒரு யானையும் நாளை வந்து விடும் “எனக்கு எல்லாம் இருக்கிறது” என்று மகிழ்ந்து கூறினான். வள்ளுவர் உற்றுக் கவனித்தார். அவன் அருகிலிருந்த மனைவி நற்குண நற்செய்கைகளை உடையவளாய்க் காணப்பட வில்லை. தனக்கு எல்லாம் இருக்கிறது என்று சொன்ன செல்வனிடம், “பாவிப் பாயலே உனக்கு என்னடா இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு, வெளியில் வந்துவிட்டார். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப்பெற்றுவிட்டால், அவனுக்கு என்ன இல்லாவிட்டாலும் எல்லாம் இருக்கிறது என்றும், ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெறாவிட்டால் அவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், ஒன்றும் இல்லை என்றும் நன்கு விளங்குகிறது இல்லாதது என்ன? எங்கே? குடிசையில். எப்போது? இல்லவள் மாண்பானால் உள்ளது என்ன? எங்கே? மாளிகையில். எப்போது? இல்லவள் மாணாக்கடை. குறளும் இதுதான்;
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?”
இக்குறளை மணமகனும் மணமகளும் தங்கள் உள்ளத்தே வைத்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது.
சகிப்புத் தன்மை
3. வீட்டுச் சண்டையிலிருந்து நாட்டுச் சண்டை வரை, கணவன் மனைவி சண்டையிலிருந்து காங்கேய நாட்டுச் சண்டைவரை அடிப்படைக் காரணம் இரண்டே இரண்டுதான். பிறருடைய தேவையை அறிய மறுப்பது, பிறருடைய உரிமையை ஒப்ப மறப்பது ஆகிய இந்த இரண்டுந்தான். எங்கே பிறருடைய உரிமையை ஒப்ப மறுக்கிறார்களோ, அங்கே உடனே தோன்றுவது சண்டைதான். கணவனுடைய தேவையை அறிய மறுத்தாலும், மனைவியினுடைய உரிமையை ஒப்ப மறுத்தாலும், பாகிஸ்தானின் தேவையை அறிய மறுத்தாலும், இந்தியாவின் உரிமையை ஒப்ப மறுத்தாலும், உடனே அங்கு தோன்றுவது சண்டைதான். அச் சண்டை ஒழிய மருந்தும் இரண்டுதான். அவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், சகிப்புத் தன்மையுமே இதை மணமக்கள் இருவரும் நன்குணர்ந்து வாழ்க்கையை நடத்துவது நல்லது.
வாழ்வில் ஒளி
4. ஆணாகப் பிறந்தவர்களெல்லாம் ஆணல்ல; ஆண்மையை உடையவனே ஆண். பெண்ணாகப் பிறந்தவர்களெல்லாம் பெண்ணல்ல; பெண்மையை உடையவளே பெண். இத்தகைய ஆண்மையையும், பெண்மையையும், இன்றைய மணமக்கள் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால், அவர்கள் வாழ்வில் ஒர் ஒளி வீசுவதை அவர்களே கண்டு மகிழ்வார்கள்.
புகுந்த வீடு
பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும். இதற்காகப் பிறந்த குடிப்பெருமைகளை எல்லாம் புகுந்த வீட்டிற் போய்ப் பேசிக்கொண்டிருப்பதல்ல இதற்கு வழி. ஒரு பெண் பேசினான், “எங்கள் வீட்டுச் சாக்கடையெல்லாம் பாலும் நெய்யும் ஒடும்” என்று. மற்றொரு பெண் பேசக்கேட்டேன்,”எங்கள் வீட்டில் பிச்சைக்காரர்களுக்குப் போடுகிற அரிசி கூட, இந்த வீட்டில் உலையில் போடுவதில்லை” என்று. உள்ளம் நடுங்கிற்று. அப்படிப் பேசினால், அது பிறந்த குடிக்குச் சிறுமையைத் தான் தேடித் தரும். பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. அது புகுந்தகுடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம்தான் முடியும், ஆகவே, இன்றைய மணமகள் புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம், பிறந்தகுடிப் பெருமையை நிலைநிறுத்தியாக வேண்டும். இது பிறந்த
குடிக்கும், புகுந்த குடிக்கும் பெருமை தேடியதாக முடியும், இதை மணமகள் தன் உள்ளத்தில் வைத்து வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.
பெண்ணின் கடமை
5.தன்னைக் காத்துக்கொண்டு, தன்னைக் கொண்ட கணவனைப் பேணி, பிறர் புகழும்படியான வழியில் நடந்து, சோர்வு இல்லாமல் உழைத்து, இல்லறத்தை நடத்துபவளே பெண் என வள்ளுவர் கூறுகிறார். குறளும் இதுதான் :
“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
ஆணுக்குக் கற்பு
6.இக்கால மக்களிற் சிலர் வள்ளுவர்மீதும் குறைகூறத் தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண்களுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தி ஆண்களை அடியோடு விட்டுவிட்டார் என்பதுதான். அது தவறு. உண்மையுமல்ல. ஆண்களுக்குக் கற்பை மிகமிக வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதுவும் பெண் மக்களையே உவமையாகக் காட்டிக் கூறியிருக்கிறார்.
“ஆண்மகனே! இதோ பெண் மக்களைப்பார். அவர்கள் எப்படிப் பிறர் துணையின்றித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்கின்றார்களோ, அப்படி நீயும் கற்புநெறி நின்று உன்னை நீ காத்துக் கொள்ளாவிடில், உனக்கு ஏதடா பெருமை” என்று கன்னத்தில் அறைந்ததுபோல, அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறார். குறளும் இதுதான்:
“ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு”
மணமகனும், மணமகளும் இவ்விரண்டு குறள்களையும் மனப்பாடம் பண்ணியாக வேண்டும், பிறகு அக்குறள் களை வாழ்க்கைக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
உப்பில்லாப் பத்தியம்
7.திருமணமாகாத ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன், உப்பில்லாப் பத்தியம் இருப்பவர்கள். உப்பை எவ்வளவு பெரிதாகக் கருதுகிறார்களோ அப்படித் திருமணத்தை எண்ணியிருக்கிறார்கள். திருமணத் திற்குப் பின் பத்தியம் முறிந்து உப்பைச் சேர்த்துக் கொள்ளும்பொழுது, உப்பைப்பற்றி எவ்வளவு சிறிதாக எண்ணுகிறார்களோ அப்படியே திருமணம் முடிந்த பின் திருமணத்தையும் எண்ணுகிறார்கள். ஆனால், திருமணம் எதற்காக என்றுமட்டும் எண்ணுவதில்லை. எப்படியும் வாழலாம் என்பது வாழ்வல்ல; இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்வு.
தியாக வாழ்வு
8. திருமணம் என்பது மணமக்கள் தாங்கள் மட்டும் வாழ்வதற்காக அல்ல; பிறரை வாழவைத்து வாழ வேண்டும் என்பதை மணமக்கள் முதலில் உணர வேண்டும். பிறகு வாழத் துவங்கவேண்டும். வாழ்வில் தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று உண்டு. அதுவே தலைசிறந்த வாழ்வாகும். இதைத் தியாக வாழ்வு என வடமொழியாளர் கூறுவர்.
(அ) மழையானது மக்களுக்கு உணவுப் பொருள்களையெல்லாம் உண்டுபண்ணித் தருகிறது. அதோடு அது நின்று விடுவதில்லை. தானும் ஒரு உண்ணும் நீராக மாறி உண்பவர்களின் வயிற்றில்போய், அவர்களை வாழவைத்துத் தான் மடிந்துவிடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது எந்தப் பலனையும் எவரிடமும் எதிர்பார்ப்பதில்லை.
(ஆ) மஞ்சட்காமாலை நோய் வந்தால், கீழாநெல்லிச் செடி எங்கே இருக்கிறது என்று தேடிப்பிடித்து, அதை வேரோடு பிடுங்கி அம்மியில் வைத்து ஒரே அரைப்பாக அரைத்து, நோயாளிக்குக் கொடுத்து விடுகிறார்கள். நோயாளி பிழைத்துக்கொள்கிறான் மருந்துச்செடி பூண்டோடு அழிந்துவிடுகிறது. இவனைப் பிழைக்க வைப்பதற்காகவே அது பிறந்து வளர்ந்தது போன்று காணப்படுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்!
(இ) கோழிகளை ஒருவன் விலை கொடுத்து வாங்கித் தன் வீட்டில் விட்டு வளர்ப்பான். அதற்கு இவன் தீனி போடுவதில்லை. பக்கத்து வீட்டில்போய் அரிசியைத் தின்றுவிட்டு,இவன் வீட்டில் வந்து முட்டையை இடுகிறது. இவனையும் இவன் பிள்ளைகுட்டிகளையும் தன் முட்டையைக் கொடுத்து வளர்க்கிறது. இறுதியில், தானும் அவர்களுக்கு உணவாகி அடியோடு அழிந்து போய்விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது அடைந்த பலன்?
(ஈ) ஆடு இன்னும் ஒரு படி அதிகம். மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து, தானே உணவைத் தேடித் தின்றுவிட்டு, இவன் வயலைத் தேடி வந்து எருவிடுகிறது. தன்னை விலை கொடுத்து வாங்கியவனின் உணவு உற்பத்திக்குப் பெருந்துணை செய்து, இறுதியில் அவனுக்குத் தன்னையே உணவாகவும் தந்து மடிந்துவிடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது அடைந்த பலன் ?
(உ) மாடு காலமெல்லாம் உழைக்கிறது. அதன் உழைப்பு மிகப் பெரியது. உழைப்பை மனிதன் மாட்டினிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். மாட்டின் உழைப்பிற்குக் கூலி மனிதன் போடும் தீனியல்ல. எவ்வளவு தீனி போடுகிறானோ அவ்வளவிற்கும் சாணி கொடுத்து விடுகிறது. எவ்வளவு கழுநீர் கொடுத்து விடுகிறானோ அவ்வளவுக்கும் சிறுநீர் கொடுத்துவிடுகிறது. தீனிக்குத் தகுந்த சாணி, கழுநீருக்குத் தகுந்த சிறுநீர். அது அன்றன்றே தன் கணக்கை நேர் செய்துவிடுகிறது. அது எப்போதும் தன் கணக்கில் அதிகப் பற்று வைக்கவிடுவதில்லை. அதன் உழைப்பு தனி. அதற்கு உழவன் கூலியே தருவதில்லை. அது எதையும் எதிர் பார்ப்பதுமில்லை. உழைத்து உழைத்து ஒடாகிவிடுகிறது. எஞ்சியுள்ள இறைச்சியையும் உழவனுக்கு உணவாகக் கொடுத்துவிட்டு அழிந்துபோய்விடுகிறது. அதன் தியாகம் ஆடு, கோழியைப் போல அல்லாமல், இன்னும் ஒருபடி தாண்டுவதை நினைக்க நம் உள்ளம் சிலிர்க்கிறது.
மாட்டுக்கு உரியவன், அது உழைத்து மடிந்ததும் அதன் இறைச்சியைத் தின்றுவிட்டு, அதன் தோலை மரக் கிளைகளிலே காயவைத்தான். அந்தத் தோல் தன் உழவன் கல்லிலும் முள்ளிலும் நடப்பதைக் கண்டு வருந்தி, ‘ஐயா நான் எதற்காக இருக்கிறேன்? என் தோலில் ஒரு செருப்பைத் தைத்துக் காலில் போட்டுக்கொண்டு நடங்கள்’ என்றும் கூறுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதனால் அது அடைந்த பயன்?
(ஊ) இஸ்லாமியர்கள் இறைவனை வழிபடும்போது ஊதுவத்தியைக் கொளுத்தி வைக்கிறார்கள். பாத்தியா முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. இந்த நல்ல காரியத்திற்கு துணைசெய்த ஊதுபத்தி எங்கே? அது அடியோடு தன்னை அழித்துக்கொண்டு சாம்பலாகி விடுகிறது. இது அது செய்யும் தியாகம்!
(எ) கிருஸ்தவ சமயத்தவர் மாதா கோயில்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். ஜபம் முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. இறுதியில் மெழுகுவர்த்தியைக் காணோம். இறை வழிபாட்டிற்குத் துணை செய்த அந்த மெழுகுவர்த்தி தன்னை அடியோடு அழித்துக் கொண்டு விடுகிறது. இது அது செய்யும் தியாகம்.
(ஏ) இந்துக்கள் தங்கள் கோயில்களில் சூடக்கட்டிகளை எலுமிச்சம்பழ அளவு கொண்டுவந்து கொளுத்தி, சுவாமியையும் அம்மனையும் பக்தியோடு வணங்குகிறார்கள். வழிபாடு முடிகிறது. மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இறுதியில் சூடம் இருந்த இடமே தெரிவதில்லை. இறை வழிபாட்டிற்குத்துணைசெய்த அது. இறுதியில் தன்னையே அடியோடு அழித்துக் கொள்ளுகிறது. இது அது செய்யும் தியாகம்!
புதிதாக இல்லற வாழ்வில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள் இந்த 8 நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். மழை நீரைப்போன்ற, மருந்துச் செடியைப் போன்ற, ஆடு மாடு கோழிகளைப்போன்ற, ஊது பத்தி மெழுகுவர்த்தி சூடம் ஆகியவைகளைப் போன்ற தியாக வாழ்வை, பகுத்தறிவு பெற்றுள்ள மக்களாகிய நாமும் பின்பற்ற வேண்டாமா என்ற ஒரு கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். பிறருக்காக வாழ்ந்து மடிகின்ற அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்ய முடியாவிட்டாலும், மிகச் சிறிய அளவிலாவது தியாக வாழ்வு வாழ்ந்தாக வேண்டும் என்ற உணர்வாவது உண்டாக வேண்டும். அது பிறரை வாழவைத்து நாம் வாழ வேண்டும் என்பதே. இதையே ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என நல்லறிஞர்கள் கருதுகிறார்கள்.
சிக்கனம்
9. இல்லற வாழ்வில் சிக்கனம் வேண்டும். எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் எறிருப்பது நல்லது. சிலர் சிக்கனத்தைக் கருமித்தனம் என்று கருதுகிறார்கள். சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. சிக்கனம் வரவேற்கத் தகுந்தது; கருமித்தனம் வெறுக்கத் தகுந்தது. எது சிக்கனம்? எது கருமித்தனம்? என்பதை மணமக்கள் உணர்ந்துகொள்வது நல்லது.
எட்டு மைல் உள்ள ஒரு ஊருக்கு வாடகைக் காரைக் கூப்பிட்டு இருபது ரூபாய் கொடுத்துப் போய் வருவது டம்பச் செலவு. தேவையில்லாதது.
அவ்வூருச்கு 50 காசு கொடுத்துப் பேருந்துகளில் ஏறிப் போய் வருவது சிக்கனச் செலவு: விரும்பக்கூடியது.
50 காசும் கொடுக்க விரும்பாமல், 5 காசுக்குப் பட்டாணிக் கடலையை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு நடந்து செல்வது கருமித்தனம்; இது வெறுக்கத்தகுந்தது.
இப்படியே சென்னைக்குச் செல்ல எண்ணி முதல் வகுப்பில் பயணம் செய்து, அங்குள்ள மிகப்பெரிய தங்கும் விடுதிகளில் தங்கி, வாடகைக் கார்களில் ஊரைச் சுற்றி வந்து ரூ. 500 செலவிட்டு வருவது டம்பச் செலவு. இது தேவையில்லாதது.
20 ரூபாய் செலவில் இரண்டாம் வகுப்பில் படுத்துறங்கிச் சென்று, 10 ரூபாய் செலவில் ஒரு அறையில் தங்கி, பேருந்துகளில் செல்லவேண்டிய இடங்களுக்குச் சென்று, ரூ. 50,60 செலவில் சென்னைக்குப்போய் வேலையை முடித்து வருவது சிக்கனம். இது வரவேற்கத் தகுந்தது.
சாலைகளில் காத்திருந்து குறைந்த செலவில் லாரிகளில் பயணம் செய்து, சென்னை சென்று, ரயில்வே பிளாட்பாரத் திலேயே தங்கியிருந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து சென்று, சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை வாங்கித் தின்று தண்ணிரைக் குடித்துவிட்டுத் திரும்புவது கருமித்தனம், இது வெறுக்கத் தகுந்தது.
ஒர் ஆண்மகன் விலை உயர்ந்த பட்டு சரிகை உடைகளை அணிந்து திரிவது டம்பம்; தேவையில்லாதது. தூய்மையான வெள்ளை ஆடைகளை அணிந்து வாழ்வது சிக்கனம்; விரும்பத் தகுந்தது. அழுக்கு நிறைந்த – கிழிந்த உடைகளை உடுத்திச் செல்வது கருமித்தனம்; வெறுக்கத் தகுந்தது.
இம் மூன்றையும் பெரும் பணக்காரர்களையோ,கடும் ஏழை மக்களையோ நினையாமல் நம்மைப் போன்ற நடுத்தர மக்களை எண்ணியே கூறுகிறேன்.
இவற்றிற்கு ஒரு இலக்கணமும் உண்டு. அது, ‘தேவைக்குமேல் செலவு செய்வது டம்பம்; தேவையின் அளவு செலவு செய்வது சிக்கனம்; தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம்’ என்பதே. இதை மணமக்கள் தம் வாழ்நாளெல்லாம் கையாள்வது நல்லது.
சேமிப்பு
10. குடும்ப வாழ்க்கையில் சேமிப்பு இன்றியமையாத ஒன்று. எவ்வளவு ரூபாய் வருமானம் வந்தாலும், அவ்வளவையும் செலவு செய்து வாழ்வது நல்லதல்ல. அதற்குமேல் அதிகச் செலவு செய்து கடன் வாங்கி வாழ்வது ஒரு கெட்ட பழக்கம். இது வாழ்க்கையைக் கெடுத்துவிடும். ஆகவே வருவாயில் சிறிதளவேனும் மிச்சப்படுத்தி வங்கிகளில் சேமித்தாக வேண்டும். இவ்வாறு சேமிப்பது 5, 10 ஆக இருப்பினும், பின்னால் அது ஒரு பெருந்தொகையாகக் காட்சியளிக்கும். தேவைக்கு மேற்பட்ட சாமான்களை வீட்டில் அடைத்துவைக்கக் கூடாது அது வீட்டிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, மூளையிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, நாள்தோறும் துன்புறுத்தி வரும், தேவையான பொருள்களை மட்டும் வாங்கி வைத்து, வீடுகளில் அழகாக அடுக்கி வைத்து, காண்போர் மனம் மகிழும்படி சிக்கன வாழ்வு வாழ்வதே நல்வாழ்வுக்கு வழியாகும்.
உணவிலும், உடையிலும். பயணத்திலும், பொருளாதாரத்திலும், சேமிப்பிலும் மட்டுமல்ல, குழந்தை பெறுவதிலும் சிக்கனத்தைக் கையாண்டு தீரவேண்டும் பலர் அதிக சாமான்களை எடுத்துக்கொண்டு இரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செல்கிறார்கள். இவற்றைத் தாங்களும் தூக்க முடியாமல், தூக்குவதற்கு ஆளும் கிடைக்காமல் கிடைக்கும் இடங்களில் அதிகக் கூலியும் கொடுக்க நேர்ந்து, சாமான்களும் களவுபோய், போகவேண்டிய இடங்களுக்குப் போக முடியாமல் தவித்துத் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.இத்தகையோருடைய வழிப்பயணத்தையும், சுமையையும், தொல்லையையும், துன்பத்தையும் அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களும் அனுபவித்தாக வேண்டும். ஆகவே எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்ற வாழ்க்கையை மணமக்கள் இன்று முதலே கையாளத் தொடங்குவது நல்லது.
ஒழுக்கம்
11. ஐயரை வைத்து, மந்திரம் கூறி, அக்கினி வளர்த்து, சடங்குகள் பலவற்றைச் செய்து திருமணம் செய்து கொள்கிறவர்கள், வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும் இவ்வுலகம் தாங்கிக் கொள்ளும். தமிழ்த் திருமணம், சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் சிறிது தவறி நடந்தாலும் இவ்வுலகம் தாங்காது பழிதுாற்றத் தொடங்கிவிடும். அது, மணமக்களுக்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு, அவர்களின் சமூகங்களுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்குமே பழியாக வந்து முடியும். ஆகவே, சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொள்கின்ற மணமக்களுக்குப் பொறுப்பு அதிகம்.
அவர்கள் பிறரைப் பார்த்து, அதன்படி நடந்து கொள்ளக் கூடாது. தங்களைப் பார்த்து, பிறர் பின்பற்றுகிற மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் உயிரினும் சிறந்தது, “உயிரைக் காப்பாற்றுவதைவிட ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும்” என்பது வள்ளுவர் வாக்கு.
‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை’ என்பது வள்ளுவர் கருத்து. இதிலிருந்து ஆடை, அணிகலன்,படிப்பு:பட்டம்,பணம்,பதவி, எழுத்து,பேச்சு ஆகியவைகளால் அடைய முடியாத மேன்மையை,ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்று தெரிகிறது. அது மட்டுமல்ல.”ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை’ என்பது, மேன்மையை அடைவதற்குரிய ஒரே வழி ஒழுக்கம் ஒன்றுமட்டுமே என்பதையும் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
ஒழுக்கத்தை இழந்துவிட்டார்கள், பழியையே அடைவார்கள். பின்பு ஒருகால் அவர்கள் திருந்தி ஒழுக்கமாக நடந்து கொண்டாலும், உலகம் அவர்களை நம்பாது. அப்போதும் அவரடைவது பழியையே. ஒழுக்கத்தை இழந்து விட்டவர்கள், தாம் செய்த தவறுக்கு மட்டுமே.
பழியேற்க மாட்டார்கள், செய்யாத தவறுக்கும் பழியேற்கும்படி வந்துவிடும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். அது “இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ என்பதே. இவ்வறிவுரைகளை மணமக்கள் தங்கள் உள்ளத்தில் நன்றாகப் பதிபவைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
அறம்
12. அறம் என்பது கடமை எனப் பொருள்படும். ஆதுலர்க்கு அன்னம், ஒதுவார்க்கு உணவு, அறவைப் பிணஞ்சுடுதல், காதோலை, கருகமணி முதலியன. மக்களாகப் பிறந்த எவரும் கடமையைச் செய்தாக வேண்டும். வாழ்த்தா, வசையா? வெற்றியா, தோல்வியா? எனப் பாராமல், ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்தாக வேண்டும். காலையிலிருந்து மாலைவரை கடமைகளைச் செய்தாகவேண்டும். இரவில் படுக்கும்போது இன்று நான் என் கடமைகளைச் சரிவரச் செய்தேன் என்று மகிழ்ந்து படுக்க வேண்டும். நல்ல உறக்கம் வரும். நோய் நொடி அணுகாது. வாழ்க்கையில் வெற்றியைக் காணலாம். கடமையைச் செய்யத் தவறியவர்களிடம் கவலையும், தூக்க மின்மையும், நோயும்’ துன்பமுமே உறவாடிக் கொண்டிருக்கும்.
‘உண்மையான மகிழ்ச்சி என்பது, அவனவன் கடமையைச் செய்வதில்தான் இருக்கிறது’ என்பது நபிகள் பெருமான் வாக்கு இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தே வள்ளுவர் பெருமாள்,”அறத்தால் வருவதே இன்பம்” என வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இவற்றை மணமக்கள் இடைவிடாமல் கையாண்டு வருவது நல்லது.
கொடை
13. அறம் என்பது கொடை வழங்குவதையும் குறிக்கும், இயன்ற வரையில் எளியவர்க்கு உதவ வேண்டும். பசித்தோர் முகம் பார்த்து மனம் இரங்க வேண்டும். உண்ணும்போது ஒரு கைப்பிடியாவது வழங்குவது எல்லோர்க்கும் எளிதானது. வறுமையில் உழல் வோர்க்கு மனமிரங்கி முடிந்ததைச் செய்வது நல்லது. ‘ஐயம் இட்டு உண்’ என்பது ஒளவை காட்டும் வாழ்வு நெறி. பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதலும், பழிக்கு அஞ்சி நடந்து பகுத்துண்டு வாழ்தலும் நல் வாழ்வுக்கு துணை செய்யும் என்பது பொய்யா மொழி. வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்பதும், இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் என்பதும் வள்ளற் பெருமான் வாக்கு.
ஈயென்று கேட்பது இழிவு: அவ்வாறு கேட்போரிடம் இல்லையென்று கூறுவது அதைவிட இழிவு என்பது புறநானூறு கூறும் புதுநெறி.
இந்த அறநெறியையும், அருள் நெறியையும் மண மக்கள் உயிர் உள்ள வரை மறவாது, உள்ளத்தில் வைத்து நடந்தொழுகுவது நல்லது.
மகள் கொடை
14. பெண் வீட்டார் திருமணம் செய்து கொடுப்பதை மகட்கொடை என்பர். மகட்கொடையோடு பொருட் கொடையும் கொடுப்பர். இதை வரதட்சணை எனவும் கூறுவர். இது சமூகத்தைப் பற்றியுள்ள ஒரு தீய பழக்கம். இதை நாட்டுப் பற்றுடையோரும், சமயத் தலைவர்களும், சமூகத் தலைவர்களும் வெறுத்து வருகின்றனர், என்றாலும் இது ஒழிந்தபாடில்லை. கட்டாயம் இது ஒழிந்தே தீரவேண்டும். இதற்கா கச் சாதித் தலைவர்களும், ஊர்த்தலைவர்களும் மட்டுமல்லாமல், இளைஞர்களும்கூட முன்னின்று இக் கொடுமையைத் தமிழகத்திலிருந்தே ஒழித்தாக வேண்டும்.
ஆண்களைவிடப் பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள். படித்த பெண்கள் அதிகமாகவும், படித்த பையன்கள் குறைவாகவும் காணப்படுகிறார்கள். இதனால் படித்த பெண்களுக்குப் படித்த ஆண்களைத் தேடுவதில் வரதட்சிணை அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை இப்பொது எல்லாச் சமூகத்திலும் ஏற்பட்டு விட்டது. இது பெண்ணை ஏன் படிக்க வைத்தாய்? என்று கேட்டு அபராதம்போடுவது போன்றிருக்கிறது. இது பெருந் தவறு.
பெண்ணைப் பெற்று வளர்த்துப் படிக்கவைத்து அறிவாளியாக்கி ஒருவனுக்கு வழங்கும் பெற்றோர்களுக்கு,மணமகனாக வருபவன் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நல்ல நிலைமை தமிழகத்தில் மலர, தமிழ்ச் சமுதாயத்தினர் கடுமையாக உழைத்தாக வேண்டும்.
நாயும் பூனையும்
15. வீட்டிலுள்ள முதியவர்கள், கணவனும் மனைவியும் சண்டையிடுவதைப் பார்த்தால், “ஏன் நாயும் பூனையுமாக அடித்துக் கொள்கிறீர்கள்” எனக் கூறுவதுண்டு. கணவன் மனைவி சண்டையை நாய், பூனை சண்டைக்கு ஏன் ஒப்பிடுகிறார்கள் என்பது, பல ஆண்டுகளாக எனக்குப் புரியவில்லை. இதற்காக நான்கு பூனைகளையும், ஐந்து நாய்களையும் வளர்த் தேன். பிறகே இதன் பொருள் எனக்கு விளங்கியது.
நாயைப் பூனையும், பூனையை நாயும் புரிந்துகொள்ள முடியாது. நாய்க்கு மகிழ்ச்சி வந்தால் வாலை ஆட்டுகிறது. பூனைக்கு கோபம் வந்தால் வாலை ஆட்டுகிறது. எப்படி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முடியும்?
பூனைக்கு மகிழ்ச்சி வந்தால், தன் காதை நிமிர்த்தி விரைககிறது. நாய்க்குக் கோபம் வந்தால் காதை நிமிர்த்தி விரைக்கிறது. எப்படி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முடியும்?
இவற்றிலிருந்து. நமக்குப் புலப்படுகிற உண்மையெலலாம்,”கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும். அதுவே இல்வாழ்க்கைக்கு,ஏற்றவழி” என்பதே.
குழந்தை வளர்ப்பு
16. நம் நாட்டில் குழந்தை வளர்ப்புக்களில் அதிகமான கவனிப்பு இல்லை.குறைவாகக் குழந்தைகளைப் பெறுவதே அவர்கள் நன்றாகக் குழந்தைகளை வளர்க்கத்துணை புரியும். உணவை அதிகமாகக் கொடுப்பதை விட, சத்தான உணவைக் குறைவாகக் கொடுத்து வளர்ப்பது நல்லது. அவர்களைப் புழுதியில் புரள விடாமல், கெட்ட பிள்ளைகளோடு சேரவிடாமல், தீய சொற்களைப் பேசவிடாமல், மிகவும் பாதுகாப்பாக வளர்த்தாக வேண்டும்.
பிள்ளைகளின் உடலை வளர்ப்பதைவிட, அறிவை வளர்ப்பதே நலம் பயக்கும். பிள்ளைகள் பள்ளியில் படிப்பதனால் மட்டும் அறிவைப் பெற முடியாது. பெற்றோர்களும் ஆசிரியர்களாக மாறி அவர்களுக்குக் கல்வியையும், ஒழுக்கத்தையும் நாள்தோறும் கற்பித்து, நல்லவழியில் நடத்தியாக வேண்டும்.
குழந்தைகள் தவறு செய்தால், அடித்துத் திருத்துவதை விட அதட்டித் திருத்துவதுதான் நல்லது தவறு செய்த பிள்ளைகளை, ‘ஏன் செய்தாய்?’ என்று கேட்டு மிரட்டுவதைவிட, ‘இனிமேல் அப்படிச் செய்யாதே’ என்று அன்போடு கூறி வளர்ப்பது நல்லது.
பெற்ற பிள்ளைகளுக்குப் பொருளைத் தேடி வைப்பதைவிட, புகழையும் பெருமையையும் தேடி வைப்பதே பெற்றோர்களின் கடமையாகும். இதில் மணமக்கள் கருத்தைச் செலுத்துவது நல்லது.
வாழ்வு உயர
17. மணமக்களின் வாழ்வு உயர வேண்டுமானால், அவர்கள் தங்கள் உளளங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளம் உயராவிடில், ஒருபோதும் வாழ்வு உயராது.
தாமரைக் குளத்தில் உள்ள பூக்கள் அதிலுள்ள நீரின் அளவைவிட உயர்ந்திருக்கும். ஒரு அடி நீர் இருந்தால் பூ ஒரு அடி உயரத்தில் இருக்கும். மூன்றடி தண்ணிர் வந்து விட்டால் பூ மூன்றடியிலும், ஐந்தடி தண்ணிர் வந்துவிட்டால் பூ ஐந்தடி உயரத்திலும் இருக்கும் அக்குளத்தில் 9 அடி தண்ணிர் வந்துவிட்டால், பூவும் ஒன்பதடி உயரத்தில் காட்சி அளிக்கும். ‘வெள்ளம் உயர உயர மலர் உயரும், உள்ளம் உயர உயர நீ உயர்வாய்’ என்பது வள்ளுவர் வாக்கு. குறளும் இதுதான்:
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு”
இதிலிருந்து. வாழ்வை உயர்த்திக் கொள்வதற்கு உள்ளத்தை உயர்த்திக் கொள்வது ஒன்றே சிறந்த வழி என்பது புலனாகிறது. ஆகவே மணக்கள் தங்கள் உள்ளத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பறங்கிக்காய் அளவு பூசணிக்காய் அளவு பெரிதாக்க முடியாவிட்டாலும் தேங்காயளவு மாங்காயளவேனும் பெரிதாக்கிக் கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், நெல்லிக்காய் அளவேனும் கடுக்காய் அளவிலேனும் தங்கள் உள்ளத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். கடுகு உள்ளமும், துவரை உள்ளமும் ஒரு போதும் கூடாது.
உள்ளத்தை உயர்த்திக் கொள்ளுவது என்பது பெருமனம் படைப்பது என்றாகும். அது தாமும் வாழ்வது பிறரும் வாழ்வது என்பது, பிறரை வாழவைத்து வாழ்வதே பெருவாழ்வு என்பது வள்ளுவர் கருத்து. அது இரக்க மனம் படைப்பதும், இரப்பவர்க்கு வழங்குவதும், எளியவர்க்கு உதவுவதும் ஆகும். இதுமட்டுமல்ல; தாழ்ந்த வரைப் பழிக்காததும், உயர்ந்தவரைத் தாழ்த்தாததும் உள்ளத்தை உயர்த்திக் கொண்டவருடைய செயல்களாகும். இவையே நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகள், இவைகளை மணமக்கள் உள்ளத்தே வைத்து, வாழத் தொடங்குவது நல்லது.
ஒத்த உரிமை
18. ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். இருவரும் B.Sc, பட்டதாரிகள். இருவருக்கும் ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம், ஆக, இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்குப் பெற்றோருடைய ஒப்புதலையும் பெற்றுவிட்டனர். ஆனால், திருமணம் மட்டும் நடை பெறவில்லை.
மாப்பிள்ளையின் தந்தை காங்கிரஸ்காரர். மாமன் கம்யூனிஸ்டு. பெண்ணின் தந்தை தி.மு.க. மாமன் தி.க. நடைபெறுமா கல்யாணம்? யாரை வைத்துத் திருமணம் நடத்துவது என்ற குழப்பத்திலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. கடைசியாக அழைப்பு எனக்கு வந்தது. நான் போய் அத்திருமணத்தை நடத்தி வந்தேன். அப்பொழுது ஒத்த கல்வி. ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம் ஆகியவைகளில் ஒன்றுபட்ட நீங்கள், ஒருவருக்கொருவர் ஒத்த உரிமையும் கொடுத்து வாழுங்கள் என்று அறவுரை கூறி வந்தேன்.
ஆறுமாதம் கழித்து, மணமகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நீங்கள் கூறிய அறவுரை எனக்கு தொல்லையாய்ப் போயிற்று. பெண் எதற்கெடுத்தாலும் சம உரிமை கோருகிறது. தண்ணீர் இறைப்பதிலும், துணி துவைப்பதிலும், சமைப்பதிலும்கூட நான் பங்குபெற வேண்டுமெனக் கட்டாயப் படுத்துகிறது. நான் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. ஒரு நாள் கதவைச் சாத்திவிட்டு, மனைவியை உட்கார வைத்து, ‘நமக்குள் சண்டை வேண்டாம். தண்ணிர் இறைக்கவும் வேண்டாம். அடுப்புப் பற்றவைக்க வேண்டாம். சமைக்கவும் வேண்டாம். பக்கத்திலுள்ள ஒட்டலுக்குச் சென்று உணவு வாங்கி வந்து, நாம் இருவரும் சாப்பிட்டு விடலாம்’ என்றேன். அதற்கு என் மனைவி ‘இது நல்ல யோனைதான், எனக்கும் சம்மதமே’ எனக் கூறி, இன்றைக்கு நீங்கள் போய்ச் சாப்பாடு வாங்கி வாருங்கள்: நாளைக்கு நான் போய்ச் சாப்பாடு வாங்கி வருகிறேன்’ என்று கூறுகிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, இதற்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்; ஏனென்றால், இது உங்கள் அறவுரையால் வந்த வினை’ என்று எழுதப்பெற்று இருந்தது.
வந்த கடிதத்தில் என் விடைக்கு ஒரு அஞ்சலட்டையும் இருந்தது. இதைக் கண்டு நான் அஞ்சவில்லை. அஞ்சலட்டையின் நடுவில், “அடக்கிப்பார்” என்று ஏழு எழுத்துக்களை மட்டும் எழுதி அனுப்பிவிட்டேன்.
இதைப் பார்த்ததும், துணிகளைத் துவை என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறான். அப்பெண் நீங்கள் இரண்டு துவையுங்கள். நானும் இரண்டு துவைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறது. துவைக்கிறாயா இல்லையா என்று அதட்டிக் கையை ஓங்கியிருக்கிறான். அப் பெண் அருகில் வந்து, மெதுவாக என்ன இரண்டு நாட்களாக வேறு மாதிரிக் காட்சியளிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறது. “கி.ஆ.பெ. கடிதம் எழுதியிருக்கிறார். இதோ பார் என்று எடுத்துக் காட்டியிருக்கிறான். அதைப் பார்த்த அப் பெண், “கி.ஆ. பெ யுமாச்சு, நீங்களுமாச்சு. நான் மணப்பாறைச் சந்தையில் வாங்கி வந்த மாடு அல்ல. என்னை அடிமைப்படுத்துவதற்கு” என்று கூறிவிட்டது, மறுநாள் எனக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான். அதில் ‘உங்கள் ஆலோசனை பயன் தரவில்லை; நான் என்ன செய்யட்டும்?’ என்று எழுதியிருந்தான். அப்பொழுதுதான் நான் சிந்திக்கத் தொடங்கினேன். இவனுக்கு ஏழு எழுத்து தப்பு என்று எண்ணி, ஒரு எழுத்தைக் குறைத்துக் கொண்டு, ஆறே எழுத்தில் ஒரு சொல்லை எழுதி அனுப்பி விட்டேன். அது “அடங்கிப் போ” என்பது.
இது பெரும் பலன் தந்தது. படித்த பெண் அல்லவா? அடக்க அடக்க அடங்காத பெண், அடங்க அடங்க அடங்கிப் போய்விட்டது, அவர்கள் வாழ்வில் நல்லொளி வீசியது.
சென்னையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபொழுது, அவர்கள் இல்லத்திற்குச் சென்று நலம் வினவினேன். இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை, ‘நாங்கள் நல்வாழ்வு வாழ்கிறோம். எங்களைப்போல மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள் இங்கு வேறு எவருமில்லை’ யெனக் கூறினர். மகிழ்ந்தேன். இதையே நான் இப்பொழுதும் கூறுகிறேன். அடக்கிப் பார்க்க வேண்டும்; முடியாது போனால் அடங்கிப் போக வேண்டும். ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
என்ஜினானாலும் காரானாலும் இரட்டை மாட்டு வண்டியானாலும் ஒத்தை மாட்டு வண்டியானாலும், வண்டியை ஒட்டுபவர் ஒருவராய்த்தான் இருக்கமுடியும். இவரால் ஒட்ட முடியாது. ஓட்டினாலும் சரியாக ஓடாது” அதுபோலத்தான் இல்லறமும் ஆண் நடத்துவதில் பெண் தவறு கண்டால், குடும்பத்தையும் வருமானத்தையும் பெண்ணிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆண்டு முழுவதும் போராட்டமோ தொல்லையோ இராது. இல்லறம் அமைதியாக நடைபெறும்.
காது,கண்,வாய்
19. மணமகனுக்கு தேற்றுவரை இரு கண்கள். இனி அது கூடாது. நாளையிலிருந்து மணமகளின் இருகண்களையும் பயன்படுத்தி, உற்றார், உறவினர்களையும், உலகத்தையும் நான்கு கண்களால் பார்த்து வாழ்வைத் தொடங்கவேண்டும், மணமகளுக்கு நேற்குவரை இரு காதுகள். இனி அது போதாது. நாளையிலிருந்து மணமகனின் இரு காதுகளையும் பயன் படுத்திக் கொண்டு, நான்கு காதுகளால் உற்றார் உறவினர்களின் செய்திகளையும், உலகின் செய்திகளையும் கேட்டு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும்.
வாழ்வில் வெற்றி பெற இவ்விரண்டு மட்டும் போதாது. மணமகனும், மணமகளும் தங்களின் வாய்கள் இரண்டையும் நான்காகப் பெருக்கிக் கொள்ளாமலும், இரண்டாக வைத்துக் கொள்ளாமலும், ஒன்றாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் வாழ்வில் வெற்றி காண முடியும், கணவன் உண்டால் மனைவி உண்டது போல, மனைவி உண்டால் கணவன் உண்டதுபோல: கணவன் ஒருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டால் மனைவி வாக்குக் கொடுத்ததுபோல, மனைவி ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் கணவன் வாக்குக் கொடுத்ததுபோல, காதுகளும் கண்களும் நான்கு; வாய் நான்கு மல்ல, இரண்டுமல்ல, ஒன்று என்று ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொதுதான், வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம். இதை மணமகனும் மணமகளும் உள்ளத்திற் கொண்டு வாழ்வைத் தொடங்குவது நல்லது.
வாழ்த்து
20. பெரியோர்களே! மேலும் உங்களின் அருமையான காலத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. இங்கு மேடையிலுள்ள நாங்கள் மட்டும் மணமக்களை வாழ்த்த வரவில்லை. இங்கு வந்திருக்கிற தாய்மார்களும் பெரியோர்களும் ஆகிய எல்லோரும் மன மக்களை வாழ்த்தியாக வேண்டும். அதற்கு நேரமின்மையால், நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துவதாக உங்கள் எல்லோருடைய சார்பிலும் நான் மண மக்களை வாழ்த்துகிறேன்.
மணமகன் மணமகள் ஆகிய இருவரும் பன்னெடுங் காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து, நன்மக்களைப் பெற்று எல்லா மொழிகளையும் ஆராய்ந்து, தமிழை ஆழமாகக் கற்றறிந்து, நன் மக்களோடு பழகி, நல்ல வழியில் பொருளைத் தேடி, சிக்கனமாகச் செலவழித்து, எஞ்சிய பொருளைச் சேமித்து வைத்து, அதையும் பல நல்ல அறச் செயல்களிலே ஈடுபடுத்தி, நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்ய வேண்டிய நற்றொண்டுகளைச் செய்து, நல்வாழ்வு வாழ. வேண்டுமென முழுமனதோடு வாழ்த்துகிறேன்.
வாழ்க மணமக்கள்!



