நவகாளி யாத்திரை
சாவி

பூர்வாங்க ஏற்பாடுகள்

ஒரு நாள் மாலை நான் தியாகராயநகர் பனகல் பார்க்கைச் சுற்றிச் சுற்றி வேகமாக நடை போட்டுக் கொண்டிருந்தேன்.

என்னைக் கவனித்த நண்பர்கள் சிலர் என் அருகில் வந்தார்கள்; நான் அவர்களைப் பார்க்காதவன் போல் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நண்பர்கள் என்னைப் பின்தொடர ஆரம்பித்தார்கள். நான் மேலும் வேகமாக நடந்து சென்றேன்; நண்பர்கள் விடுவதாக இல்லை.

“ஸார்!” என்றார்கள். திரும்பிப் பார்த்தேன்.

”நேற்று வரை நன்றாயிருந்தீர்களே? இன்றைக்குத் தங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று அவர்கள் என்னைப் பார்த்துத் துக்கம் விசாரிக்கத் தொடங்கினார்கள்.

”என்னை ஏகாந்தமாகச் செல்ல விடுங்கள். என் பின்னோடு யாரும் வந்து தொந்தரவு கொடுக்க வேண்டாம். நான் நவகாளி ஜில்லாவுக்குப் போகப் போகிறேன். அதற்காகவே இப்படிச் சாதகம் செய்து கொள்கிறேன்!” என்று பதில் கூறினேன்.

”என்ன, என்ன! நவகாளிக்கா போகிறீர்கள்? கால்நடையாகவா?” என்று ஆச்சரியமும், ஆவலும் நிறைந்த குரலில் கேட்டார் ஒரு நண்பர்.

”இல்லை ஐயா, இல்லை; நவகாளிக்கு ரயிலில்தான் செல்கிறேன்; கூடுமானால் ஆகாய விமானத்திலேயே போவேன், ஆனால்…” என்றேன்.

”நல்ல வேளை தாங்கள் நடந்து பழகும் வேகத்தைப் பார்த்தால் ஒருவேளை நவகாளிக்கே நடந்து போய் விடுவீர்களோ என்று பயந்து போனேன். அது சரி; நவகாளியில் தங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டார் நண்பர்.

“அங்கே மகாத்மாஜி தமது அஹிம்சாப் பிரசாரத்தின் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டும் பொருட்டுக் கிராமம் கிராமமாகக் கால்நடையாகவே யாத்திரை கிளம்பியிருக்கிறார் அல்லவா?”

“ஆமாம்!”

”காந்தியடிகள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி அடியேனும் செல்லப்போகிறேன். மகாத்மாஜி ரொம்பவும் வேகமாக நடப்பவராகையால் அவருடன் பிரயாணம் செய்யும் பொருட்டே இம் மாதிரி வேகமாக நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன்!” என்று கூறினேன்.

என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்கள் அத்துடன் திருப்தி அடைந்தவர்களாகி வேறு திசையில் தங்கள் நடையைக் கட்டினார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!