

ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
முகவுரை
“ஸ்ரீ அரவிந்த யோகி” என்னும் நூலை எழுத இன்றியமையாத ஒரு தேவை உண்டு; அதுதான் கவித்துவம். அது ஸ்ரீ கு. ப. ராஜகோபாலன் அவர்களிடம் பிறவிக் குணமாகக் காணப்படுகிறது. கனிந்த, காட்சி நிறைந்த உள்ளம், தெளிந்த, எழில் பொறித்த சொல், மண்டும் சுவை, தனக்குத்தானே விளங்கும் அவ்வளவு எளிமை – இவை ஸ்ரீ கு. ப. ராஜ கோபாலன்.
இவைகளை வைத்துக் கொண்டு, அவர் சொல்வதைக் கவனிப்போம்: “ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பற்றி ஒளியுடன் எழுத ஒரு சாதகனுக்குத்தான் முடியும் யோகானுபவம் ஒரு சிறிதேனும் உடையவன் தான் அந்தக் காரியத்தைச் சரியாகச் செய்ய முடியும். நான் ஸ்ரீ அரவிந்த யோகத்தைக் கலை முறையில் அறிய (அறிவிக்கவும்) முயற்சி செய்கிறேன்” இதனால் அவருடைய நிறையும் குறையும் எவ்வளவு, எத்தகைத்து என்பதை ஒரே மூச்சில் தெளிவுபடுத்துகிறார்.
கவி முற்றி யோகி ஆகிறான் என்பதைப் பன்முறை தெரிவிக்கிறார். எனது அநுபவம் ஒரு சிறிது வேறுபாடுடைத்து. சாதாரணமாக வழங்கும் அருத்தத்தில், கவி என்பவன் எழுத்துச் சிற்பி சாயத்தைத் தீட்டும் ஒளியனைப்போல், கல்லை வெட்டி உருவாக்கும் கற் சிற்பியைப் போல். யோகியோ, வாழ்க்கைச் சிற்பி; தினே தினே, தன்னை அண்டி உள்ளவர்களின் வாழ்க்கையை உருவாக்கித் தருபவன். கவி,கலைஞன், ஓவியன், சிற்பி, சாஸ்திரக்ஞன் (நூலோன்) முதலிய யாவரும் யோகிக்கு முதலிடம் கொடுத்தாக வேண்டி யிருக்கிறது. இவர்கள் தங்கள் தங்கள் வழியில் எவ்வளவிற்கு முற்றிய போதிலும் யோகி ஆகிவிட முடியாது.
“ஸ்ரீ அரவிந்த யோகி” என்னும் புஸ்தகத்தில் “உத்தரபாராப் பிரசங்கத்தின்” மொழி பெயர்ப்பு முக்கியமான அம்சம். நான் இதுவரை இந்தப் பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பில் இரண்டைப் பார்வை யிட்டிருக்கிறேன். அவை ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் ஸ்ரீ கு. ப. ராஜகோபாலன் அவர்களுடைய தமிழ்ப் படுத்தலானது, இணையற்று நிற்கிறது. இதற்குக் காரணம் அவரது கவித்திறன் மட்டுமல்ல ; அவரது புஸ்தகத்தைப் படிக்கும்பொழுது, அவருடைய அநுபவ உணர்ச்சித் தெளிவும், கனிவின் மையால் ஏற்படும் படபடப்பு இல்லாமையும், நிதானமான வேகமும், செம்மையும், ஆராய்ச்சி நுகர்ச்சியால் ஏற்படும் அறிவின் விரிவும், உள்ளத்தினது ஊக்கத் தீயின் வெளிச்சமும் நிறைந்து காணப்படுகின்றன.
“ஸ்ரீ அரவிந்த யோகி” என்னும் புஸ்தகத்தைப் படிக்கும்பொழுது ஆசிரியரின் கவனம் எங்கு ஊன்றியுள்ளது என்பது வெகு தெளிவாய்ப் புலனாகிறது. நான் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி இரண்டொரு சுவடிகள் படித்திருக்கிறேன். அவைகளில் ஸ்ரீ அரவிந்தரின் வெளி வாழ்க்கையைப் பற்றி, தினசரிக் குறிப்புப் புஸ்தகம் போல் பல விஷயங்கள் எப்பொழுது படுக்கிறார், என்ன சாப்பிடுகிறார் போன்றவை காணப்படுகின்றன. ஸ்ரீ கு. ப. ராஜகோபாலனின் கவனமனைத்தும் ஸ்ரீ அரவிந்தரின் உள்ளப்போக்கை ஆராய முயலுவதிலும், தெளிவதிலும் சென்றிருக்கிறதென்பது என் நெஞ்சில் பூரிப்பைத் தருகிறது.
கவி யுள்ளத்திற்கு ஒரு தனிப் பார்வை, தனி உணர்ச்சி உண்டு. கவி யுள்ளம் ஒரு சாதாரண மனிதனின் உள்ளம் போன்றதல்ல. “ஸ்ரீ அரவிந்த யோகி” என்னும் புஸ்தகத்தின் முக்கிய அம்சம், உத்தரபாராப் பிரசங்கம்; அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, வெகு நுட்பமாகவும், வெகு அழகாகவும் ஸ்ரீ அரவிந்தரின் சரிதையும், ஸ்ரீ அரவிந்த யோகமும் பிரசங்கத்தைச் சுற்றிக் கோக்கப்பட் டிருக்கின்றன. சரிதையில் முக்கிய அம்சங்கள் எதுவும் விடப்படவில்லை. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையில், “திரும்பு முனை”யாக நிற்கும் முக்கிய அம்சத்திற்குக் குறி, உத்தரபாராப் பிரசங்கம். ஆனால் புஸ்தகத்தைப் படித்து முடிக்கும்பொழுது, ஸ்ரீ அரவிந்தருடைய சரிதை மிகவும் பிரதானமெனவும், உத்தரபாராப் பிரசங்கம் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கைப் பாதையில் எரிந்துகொண்டிருக்கும் வழிகாட்டி போன்ற தீப ஸ்தம்பமெனவும் நம் மனத்தில் பதிகிறது. ஸ்ரீ அரவிந்தரின் சரிதையை ஸ்ரீ கு.ப.ராஜகோபாலன் எழுதிய வண்ணம் படித்துக்கொண்டு போகும்போது, ஒரு கரைகாணா விரிகடலைப் பரப்பி, நினைப்பரிய ஒரு பேர் அமைதியை நிறுவி, நடுவில் ஸ்ரீ அரவிந்தரின் சிலையைச் செதுக்கிச் சிற்பித்துவிட்டு அவர் சொல்லும் போது “1909-ல் தான் ஸ்ரீ அரவிந்தருடைய ஜீவியத்தில், பொது வாழ்க்கையில் அவர் ஈடுபட்டதன் உச்ச நிலை. முன்பும் தனிமை ; பின்பும் தனிமை ” விண்டுரைக்க அரிய ஒரு மர்மத்தை எட்டிய மாதிரி, ஒரு கலக்கமற்ற மகிழ்வும், மர்மத்தைத் தீண்டுவோமோ என்ற விசனத் தூண்டலினால் ஏற்படும் வேட்கையும் உண்டாகின்றன ஆச்சரியம் கலந்து. கவியின் போக்கே வேறு. அவன் கண்ணிற்கு, சாதாரண மனிதன் பார்வைக்கு எட்டாத தெல்லாம் புலனாகும். கவி தடிப்பு நீங்கியவன்.
மறுபடியும், ஸ்ரீ அரவிந்தயோகி என்னும் புஸ்தகத்தை எடுத்துக்கொள்வோம் : மற்றவர்களைப் போலல்லாது, விஷயங்களைப் பன்னிரண்டு பகுதிகளாக வகுத்திருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும், நல்ல, இனிய பெயர் தந்திருக்கிறார். உதாரணம்: முதல் கட்டம், “சிறு வரலாறு, இரண்டாவது, “விதை நிலம்”, மூன்றாவது, “விளையும் பயிர்”, நாலாவது, “உரம்”, ஐந்தாவது, “நீயும் என்னுடன் வருவாயா…?” என்பன போன்ற பெயர்கள் எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன வென்பதைச் சொல்லத் தேவையில்லை. ” நீயும் என்னுடன் வருவாயா…?” என்னும் பெயர், ஸ்ரீ அரவிந்தர் தம் பத்னிக்கு எழுதிய கடிதத்தில் காணப்படுகிறது. அதைத் தலையங்கமாக்கி, சரிதையின் போக்கில் உள்ளத்தின் வளர்ச்சியின் கதியை ஒப்ப நல்ல பொருத்தமான கட்டத்தில் ஏற்ற பெயராகத் தந்திருக் கிறார், கு.ப.ராஜகோபாலன் இது நாவலர் திறன்.
கடைசியாக ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தை சொல்லிவிட்டு நிறுத்துவதாக இருக்கிறேன். முதன் முதலாக ஸ்ரீ அரவிந்த யோகத்திற்கு அஸ்திவாரம் வேதம். அவர் யோக வழியில் தாமாகச் சென்று கொண்டிருந்த பொழுது, ரிக் வேதம் அகஸ்மாத்தாய் அவர் கைக்கு எட்டியது. வேத ரிஷிகளின் அனுபவங்களுக்கும் தம்முடைய அநுபவங்களுக்கு முள்ள ஒற்றுமையைக் கவனித்தார். வேதம் உதவியாயிற்று. பல பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, வேதம் கேவலம் கர்மகாண்டமல்ல வென்பதையும், பாரமார்த்திக அநுபவங்கள் எண்ணற்று அதனுள் பொதிந்து கிடக்கின்றனவென்பதையும் எழுத்து மூலம் “ஆர்யா”வில் தெரிவித்தார். பாரமார்த்திக வாழ்க்கையைத் தேடுபவனுக்கு வேதம் ஒரு பேருதவி என்பதும் காரியாம்சத்தில் புலனாயிற்று. ஆனால் இத்துடன், ஸ்ரீ அரவிந்தர் நின்றுவிடவில்லை. அவர் இந்த உலகிற்கே புதியதோர் புத்தம் புதியதோர் விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறார். மகோன்னதமான விஷயம். சிலர் சொல்லுவது போல், அத்துவைதத்தையும், துவைதத்தையும், விசிஷ்டாத்து வைதத்தையும், ஸ்ரீ ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த தத்துவத்தையும், இயேசு சொன்னதையும், தற்கால மேனாட்டு “ஸயன்ஸின்” முடிவுகளையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பிசைந்து, ஒத்து வாராததை உதறித்தள்ளி, மிகுந்து நின்றதை ஒரு புதிய மார்க்கமாகப் போதிக்கிறார் என்று கருதுவதானது சுத்தப் பிழையாகும். ஸ்ரீ சங்கராசாரியார் சொன்னதையாவது, ஸ்ரீ ராமாநுஜர் சொன்னதையாவது அல்லது மற்ற எவர் சொன்னதையாவது திரும்பச் சொல்ல ஸ்ரீ அரவிந்தர் இவ்வுலகில் அவதரிக்கவில்லை. அவர் சொல்வது ஒரு மகத்தான, புதிய உண்மை.
நான் சிறு வயதில் என் பாட்டி பல தடவைகளில், கடைசியில் வைகுந்தத்திற்குப் போய் லட்சுமீ ஸமேதரான ஸ்ரீமந் நாராயணனுக்கு நித்திய ஸேவை செய்ய வேணும். இதற்கு இந்தப் பூமியில் எத்தனையோ கோடி ஜன்ம மெடுத்து பாபங்களைக் கழித்து ஆக வேணும் ” என்று சொல்ல அவள் மடியிலிருந்தபடியே கேட்டிருக்கிறேன். நானோ வைஷ்ணவன். லோகத்தை மாயை என்று சொல்லாதவன். இருந்தும், இவ்வுலகம் கேவலம் பாபத்தைக் கழிப்பதற்காக மட்டிலுமாயின், ஸ்ரீ சங்கராசாரியாரைப் போல் “ஜகன் மித்யா” என்று சொல்லுதல் உசிதம். இவற்றிற்கெல்லாம் மாறாக, முதன் முதலாக ஸ்ரீ அரவிந்தர், இந்த ஜகத்தை பரமனின் தோற்ற மென்கிறார். உணர்வின் பரிணாமத்தை விளக்கும்போது, அதன் குறி அல்லது உத்தேச்யம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறார். உடல், உயிர், உணர்ச்சி, அறிவு, தன்னறிவு என்ற வேறுபாடுகளைப் படிப்படியாகக் காட்டுகிறார். ஸ்தூல உலகம் – கல், மண் ; உயிர் -உணர்ச்சியின் தோற்றம் – மரம், செடி, விலங்கு; அறிவின் ஆட்சி- மனிதனிடம் ; தன்னறிவு – மனிதரிடைப் பாரமார்த் திக நாட்ட முடையோரிடம். இதற்கும் அப்பால் மனோ ஸமுத்திரத்திற்கப்பால், விஞ்ஞானம் இருக்கிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். அதுதான் ஸத்ய உலகம்.
இந்த ஸத்ய உலக உணர்வின் மீது, மனிதன் வேட்கை கொள்ளும்போது, அது அவனிடம் முழுமையும் குடியேறும். அப்பொழுது அவன் அதி மானுஷன் ஆகிறான். விலங்கிற்கும் மனிதனுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ, அதற்கு மேலாக மனித னுக்கும் அதிமானுடனுக்கும் வித்தியாசம் இருக்கும் என்பது கொள்கை.
கீதையில் ஸமர்ப்பணத்தைப் பற்றிக் கூறியிருக்கிறது. ஸமர்ப்பணத்தின் பிறகு பயிற்சிக்கு வேண்டிய முறைகளைக் கீதையில் காண்பதரிது. உபநிடதம் மனத்திற்கப்பால் எவ்வித ஒளி உள்ளதென்பதை மனத்திற்குப் புலப்படுத்துகிறது. வேதம் தேவருலகை எடுத்துக் காட்டுகிறது. மேனாட்டு அப்படியே “ஸயன்ஸு” வெளிப் போக்கில் அடியோடு ஈடுபட்டு, கிடக் உள்ளத்தின் ரகசியங்களை அறிய இயலாது கிடக்கிறது: உள்ளத்தை ஆராயும்போது கூட, வெளியுலகு கஜக்கோலை ஆதாரமாகக் கொள்கிறது. இதனால் ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றிக்கொண்டு வெளிப்புகல முடியாது நிற்கிறது.
இது சமயம், பயிற்சியினால் படிப்படியாக, எவ்வாறு உயர ஏறலாமென்றும், மேல் நிற்கும் சக்தியிடம் அடைக்கலம் புகுந்து ஈடுபட்டு, அவளை வேண்டி உறுதித் தீ மூட்டி உள்ளத்தில் குடி புகச் செய்து உயரத்தில், மனத்திற்கப்பால் ஒழுங்குற, சீராய் நிற்கும் உண்மையை ஆவாகனம் செய்து தரச்சொல்ல வேண்டும் என்றும் ஸ்ரீ அரவிந்தர் சொல்வது போலத் தோன்றுகிறது. உடல், உயிர், மனம் இவை மூன்றும் ஒளி வலி இன்பமாக மாறும் வழியைத் தம்முடன் உருப்படுத்த ஸ்ரீ அரவிந்தர், இப் புவிமீது ஸ்ரீ அன்னையை அவதரிக்கச் செய்திருக்கிறார்.
ஸ்ரீ அரவிந்தாசிரமம்,
புதுவை.
க.அமுதன்



