
ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
பன்னிரண்டாவது அத்தியாயம் : ஸ்ரீ அரவிந்த யோகம்
ஸ்ரீ அரவிந்த யோகத்தைப்பற்றி ஒளியுடன் எழுத ஒரு சாதகனுக்குத்தான் முடியும் என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். யோகானுபவம் ஒரு சிறிதேனும் உடையவன் தான் அந்தக் காரியத்தைச் சரியாகச் செய்ய முடியும். நான் ஸ்ரீ அரவிந்த யோகத்தைக் கலை முறையில் அறிய முயற்சி செய்கிறேன். ஆகையால் என்னுடைய ஆராய்ச்சியில் நிச்சயம் ஓரளவு குறைவு இருக்கத்தான் செய்யும்.
சொல்லப்போனால் யோகத்தைப் பற்றிய எந்த எழுத்துமே அனுபவத்திற்குக் குறைந்துதான் இருக்கும்.
கவி முற்றி யோகி ஆகிறான் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்த உண் மையைப் பொதுவாகக் கவிகளுக்கும் யோகிகளுக்கும் ஒரு சோதனை அளவாக வைத்தாலே தெரியும். அரவிந்தருடைய மன வளர்ச்சியைப் பார்த்தாலே இது நன்றாக விளங்கும். அவரே கவி முற்றித்தான் யோகியாகி இருக்கிறார்.
யோகம் என்பதுதான் என்ன? அதற்கு ஏதாவதொரு சுருக்கமான விளக்கம் உண்டா என்று பார்ப்போம். ஸ்ரீ அரவிந்தரே தம்முடைய கிரந்தங்களில் பல இடங்களில் அதன் சாராம்சத்தை இரண்டொரு வாக்கியங்களில் அடக்கி இருக்கிறார். “யோகம் என்றால் கடவுளுடன் ஐக்கியம் என்று பொருள். பரமாத்மாவுடனாவது, பிரகிருதியுடனாவது, அல்லது அந்தராத்மாவுடனாவது ஒன்றுபடுதலோ அல்லது, இம்மூன்றுடன் ஒன்றுபடுதலோ தான் யோகம். அகங்காரம், மனசு, சரீரம் இவற்றின் பந்தங்களுக்கு மேற்போன ஒரு சுத்த சைதன்னியம் பெறுவது யோகம். அந்த நிலையில் ஒருவருக்குப் பரமாத்மாவுடனோ, பிரகிருதியுடனோ அல்லது அந்தராத்மாவின் உண்மையான நிலையை அறியும் சேதனையுடனோ பிணைப்பு ஏற்படும். இந்த யோக நிலையில் விஷயங்கள் மட்டுமல்ல, சக்திகளும், அந்தச் சக்திகளுக்கு ஆதாரமான சைதன்ய ஸ்வரூபமும் நன்றாக விளங்கும். இதெல்லாம் தன்னிடத்தில் மட்டுமல்ல, அகில சிருஷ்டியிலும் இருப்பது துலங்கும்.”
ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகத்தை (Synthetic yoga) வேதாந்த யோகத்திற்கும் தாந்திரீக யோகத்திற்கும் ஏற்பட்ட ஒரு பிணைப்பு என்று சுருக்கமாகவும் சௌகரி யார்த்தமாகவும் சொல்லலாம். வேதாந்த யோகத்தில் புருஷனுக்குப் பிராதான்யம்; தாந்திரீகத்தில் பிரகிருதிக்குப் பிராதான்யம்; இந்த இரண்டு முறைகளுக்கும் ஏற்பட்ட ஒரு சமரஸம் பூரணயோகம். புருஷனும் பிரகிருதியும் இணைப்புக் கொண்டால்தான் சிருஷ்டி, செயல். வேதாந்த யோகத்தின் பலன் முக்கியமாகப் பிரம்மைக்கியம். தாந்திரீக யோகத்தின் பலன் முக்கியமாகப் பிரகிருதிலயம். வேதாந்த யோகத்தில் ஞானம் முக்கியம் வாய்ந்தது. தாந்திரத்தில் ஸித்தி பிரதானம். சிவசக்தி சம்பந்தம்போல ஞானத்திற்கும் ஸித்திக்கும் பிணைப்பு ஏற்படுத்துவது பூரண யோகத்தின் முயற்சி. ஸித்தி மூலம் துலங்கிச் சுத்தமாக்கப்பட்ட பாத்திரத்தில் ஞான அமிருதம் இறங்கி அதை நிரப்புகிறது. பாத்திரம் அமிருத பூர்ணமாகிறது. பாத்திரம் அமிருதம் ஆகிறதில்லை. பூரண யோகத்தில், பிரகிருதி பிரம்மத்தில் லயித்து மறைந்து விடுகிறதில்லை. பரிசுத்தமான பிரகிருதி பிரும்ம பூர்ணம் ஆகிறது.
‘அமிருதம் இஹ பவதி’ என்ற மகா வாக்கியத்தின் பொருள் இதுதான்.
பூரண யோகத்தின்படி இந்த நிலை, யோகியினுடைய சேதனையிலும் அகண்ட சிருஷ்டியின் சேதனையிலும் ஏற்படுவதற்கான சாதனை, நம்பிக்கை (Faith) ஆகாங்க்ஷை (Aspiration), சரணாகதி (Surrender) இந்த மூன்றின் மூலமாக ஏற்படவேண்டும். ‘கிருஷ்ணார்ப் பணம் அஸ்து’ என்ற முறையில் கிரியையை, சக்திக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டால் கிரியையே சக்தியாக மாறிவிடுகிறது. சக்தியே நமது சித்தாந்தப்படி மூன்று உருவங்கள் கொண்டவள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி. மனித சேதனையே இந்த மூன்று சக்தி ஸ்வரூபங்களாகப் பரிணாமம் கொண்டுவிட்டால் யோகம் சித்தித்து விடும். செய்யும் ஒவ்வொரு செயலும் சக்திஸ்வரூபமாக ஈசுவரனுக்கு அர்ப்பணமாகி விட்டால், மனிதனின் கீழ் இயல்பு (கீழ் பிரகிருதி) அற்றுப்போய், மேல் இயல்பு (மேல் பிரகிருதி) நிறைவு கொள்ளும். கீழ்ப் பிரகிருதி அஞ்ஞானமும் அகங்காரமும் நிறைந்தது; மனத்தின் அதிகாரம் பெற்றது; இந்திரியங்கள் பற்றுக்கொண்டது. மேல் பிரகிருதி தான் பராசக்தி ; சச்சிதானந்த ஸ்வரூபமானது. கரித்துண்டில் நெருப்புப் போல பராசக்தி இப்படி மனித சேதனையில் பரவினால் அது மாசற்றுப் போகும்.
இப்படிச் சேதனையானது உயிர், உடல், மனம், விஞ்ஞானம் என்று படிப்படியாக உயர்ந்து பரிணாமம் பெறுவது பூரண யோகத்தின் முடிவு. உயிர் உடல் மனங்களை விஞ்ஞான மயம் ஆக்குவதுதான் சாதனை. பிராணிகளில் உயிரும் உடலும் சேதனையாக இருக்கின்றன. மனிதனிடத்தில் மனமும் சேருகிறது; அதிமானுஷன் என்று சொல்லக்கூடிய சித்த புருஷனிடத்தில் விஞ்ஞானம் (மனோதீத மானது) இந்தப் பரிணாமத்தின் சிகரமாக விளங்குகிறது.
தாந்திரிக யோக முறையிலிருந்து ஓர் உபமானத்தை எடுத்துக் கொள்ளலாம். மூலா தாரத்தில் குண்டலினி சக்தி தூங்கிக் கொண்டிருக்கிறது. ஹடயோகத்தின் மூலம் அதைக் கிளப்பினால் அது சீறிக்கொண்டு மேலே போய் ஸஹஸ்ராரத்தில் சேரும். உடனே ஹட யோகம் செய்தவன் சித்தி பெறுவான். அது போலச் சேதனை யென்ற மூலாதாரத்திலிருக்கும் பிரகிருதியென்ற குண்டலினி சக்தியைத் தூண்டினால் அது ஸஹஸ்ராரத்திலிருக்கும் புருஷனுடன் சேர்க்கைக் கொள்ளும். அதன் பலனாகப் புருஷனின் அமிருத கலசம் சிவனுடைய ஜடையில் போல விஞ்ஞான கங்கையாகப் பொங்கும்.
அந்த விஞ்ஞான வெள்ளத்தை மறுபடியும், பகீரதன் போல், மகாப் பிரயத்தனமான கிரியையில் ஈடுபட்டுப் பிரகிருதி பூமிக்குக் கொண்டு வந்தால் உயிர், உடல், மனம் என்ற மூன்றும் அந்த வெள்ளப் பெருக்கில் அமிழ்ந்து சுத்தமாகிவிடும். அப்பொழுது மனிதன் தேவன் ஆவான்.
பூரண யோகம் பிரகிருதியின் பரிணாமத்தைத் துரிதமாக்க முயலும் கருவி. சேதனையை அமர வேட்கை கொள்ளச் செய்வதால் மனித சமூகத்தையே, சிருஷ்டியையே, அமர சங்கமாக்க முயலும் மார்க்கம் அது.
மனிதப் பிரகிருதி சதா புருஷோத்தமனிடம் வேட்கை கொண்டு விரிந்து மலர்ந்து உயர்கிறது; புருஷன் அவளுடைய அகண்ட ஆலிங்கனத்தில் கனிந்து மகிழ இறங்கிவந்து அவளுடன் கலக்கிறான். இரண்டறக் கலக்கும் அந்தக் கலவியின் உற்பத்தி சச்சிதானந்த மயமான சிருஷ்டி.
யோகத்தைப்பற்றி எழுத வந்தவன் கவிதையைப்போல் ஏதோ அர்த்தமில்லாமல் எழுதிவிட்டேனே என்று நண்பர்கள் நினைக்கலாம். நான் ஏற்கெனவே சொன்னபடி கவிதை முற்றித்தான் யோகமாகிறது. லயிப்பு, கவிதையில் ஓரளவில் நின்று விடுகிறது; யோகத்தில் சம்பூர்ணமாகி விடுகிறது; அவ்வளவுதான். உலகத்தின் மகா கவிகளில் சிலர் யோகிகளாக இருந்திருக்கிறார்கள்; யோகிகள் எல்லோரும் கவிகள். சொல்லப் போனால் யோகிகளே உண்மையான கவிகள் என்று கூடச் சித்தாந்தம் செய்துவிடலாம். ‘வேதாந்தேஷ யமாஹு ரேகபுருஷம் ‘ என்று மகத்தான யோக வாக்கியத்தை எழுதினான் மகாகவி காளிதாஸன். ‘நந்தவனத்திலோராண்டி’ என்று ஒரு சித்தன் எழுதினான்.
ஸ்ரீ அரவிந்த யோகம் உன்னதமான கர்மயோக மார்க்கம். கீதைக்கு அரவிந்தர் செய்திருக்கும் நிகரற்ற வியாக்கி யானத்தில் இதை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விளக்குகிறார். அவருடைய கீதா பாஷ்யம் உண்மையில் அவருடைய யோகத்தின் விளக்கம்.
தாய் என்று அரவிந்தர் இடைவிடாமல் ஆராதிக்கும் சக்தி அவருடைய யோக ஸூத்திரத்தின் தேவதை. பாரதி இந்த சக்தி தரிசனத்தைக் கவிதையில் கோவையாக்கி விட்டார். ‘தாய்’ என்று அரவிந்தர் அருள் வாக்குடன் எழுதியிருக்கும் நூல் அவர் கொள்கையைக் காவிய நடையில் விளக்குகிறது.
இந்தக் கொள்கையில் நமது நாட்டின் வேதாந்தத்தினுடைய பொருளும், மேல் நாட்டு நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பொருளும் கலந்திருக்கின்றன என்று முதலில் சொன்னேன். அதை இப்பொழுது ஒரு விதமாக மாற்றிச் சொல்லிவிடுகிறேன். நமது நாட்டின் வேதாந்தக் களஞ்சியத்தை ஆராய்ந்து அதன் பல மணிகளைச் சேர்த்து ஒரு பூரண யோகத்தைக் கற்பித்திருக்கிறார் அரவிந்தர் ; அதன் தத்துவத்திற்கு மேனாட்டு விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவு பூரண ஆதரவு கொடுக்கிறது.
ஸ்ரீ அரவிந்தரின் யோகம் ஓர் அம்சத்தில் புதிதல்ல என்று கூடச் சொல்லிவிடலாம். பகவத் கீதைக் கட்டுரைகளில் இதை ஸ்ரீ அரவிந்தரே சொல்லுகிறார். கீதையின் வாக்கியங்களில் அமைந்திருக்கும் உண்மையை ஸ்ரீ அரவிந்தர் வெளியிட்டுக் காட்டித் தாமும் அதைத் தம் சாதனை வழியாகக் கொண்டு விட்டார். அதனால் ஸ்ரீ அரவிந்தரே ஒரு நிகரற்ற கீதா பாஷ்யம்.
முற்றும்.
★ ★ ★



