ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்

ஐந்தாம் அத்தியாயம் : “நீயும் என்னுடன் வருவாயா?”

1906-ஆம் வருஷத்திற்குச் சற்று முன்பே ஸ்ரீ அரவிந்தருடைய வாழ்க்கையில் மற்றொரு திரும்பு முனைக்கு அடிப்பாரங்கள் ஏற்பட்டு விட்டன. இருபது வயதிற்குள் மேல் நாட்டு விஞ்ஞானம் முழுவதும் அறிந்துவிட்டார் ; மற்றொரு பத்து வருஷங்களில் நம் நாட்டு விஞ்ஞானம் முற்றும் ஆராய்ந்து பார்த்து விட்டார். மேல்நாட்டு அறிவில் லட்சியத்திற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதைக் கண்டார். மேல்நாட்டார் வேதாந்த ஞானத்தை ஒரு வித்தையாகக் கொண்டிருந்தார்களே ஒழிய, வாழ்க்கையில் அனுஷ்டானத்திற்கு வரவேண்டிய ஸாதனம் என்று கொள்ளவில்லை. நம் நாட்டு ரிஷிகளும் யோகிகளும் அவ்விதம் கருதவில்லை. நம் பெரியோர்கள் அறிவிற்கும் ஆத்மாவிற்கும் ஒரு பிணைப்பு ஏற்படுத்தித்தான் இருந்தார்கள். லட்சியமும் வாழ்க்கையும் ஒன்றுபட வேண்டும் என்று ஸித்தாந்தம் செய்தார்கள். மேல்நாட்டில் ஒரு சில ஸித்த புருஷர்களைத் தவிர மற்றெல்லோரும் வெறும் பண்டிதர்கள்; ஞானிகள் அல்ல.

பக்தி யோகமும், ஞான யோகமும், கர்ம யோகமும் வேதாந்தத்தின் ஆறு தர்சனங்களில் தனித் தனியாகச் சிறப்புப் பெற்று இருந்தன. அவைகளுக்கிடையே சூக்ஷ்மமான தான ஒரு பூர்ணப் பிணைப்பு இல்லையென்று ஸ்ரீ அரவிந்தருக்குப் பட்டது. அத்வைதம் ஞான மார்க்கத்தையே விசேஷமாகக் கொண் டது ; விசிஷ்டாத்வைதம் பக்தியை மேலாகக் கொண்டது. கீதா சாஸ்திரத்தின் மூலம் ஸ்ரீ அரவிந்தர் கர்ம யோகத்தின் மகிமையையும் ஆராய்ந்து அதனுடைய சேர்க்கையாலுந் தான், யோகமே பூர்ணமாகும் என்று ஊகித்தார்.

இந்த ஊகத்தில் அவருக்கு ஒருவிதத்தில் மேல் நாட்டு விஞ்ஞான சாஸ்திரம் உதவி அளித்தது. அதில் பிரசித்திபெற்ற பரிணாமவாதத்தின் ஸாரம் ஸித்த புருஷ தத்துவம். இந்தப் பரிணாம விதியின்படி ‘ஊர்வன’ என்ற நிலையிலிருந்து பறப்பனவும் நடப்பனவும், அதற்குப் பிறகு பறவை விலங்கு உருவங்களின் பரிணாமமாக, மாறி மாறி அபிவிருத்தி அடைந்து உறுப்புக் கூறிலிருந்து குரங்கும் மனிதனும் ஏற்பட்டதாகக் கொள்கை. அதைப்போல உணர்வு அம்சத்திலும் ஒரு பரிணாமம் இருக்கிறது. ஜடத்திலிருந்து உயிர் உற்பத்தியாகிறது. மரம் செடி விலங்குகளில், உணர்வு முதல் முதலாகத் தோன்றுகிறது. மனிதனுடைய உருவத்தில் தான் மனது ஏற்படுகிறது. அதைக்கொண்டு தான் மனிதன் விஞ்ஞானத்தின் ஆழத்தை அளக்க முயலுகிறான். ஆனால் மனிதனின் மனம், ஐம்புலன்களின் கட்டுக்கு உட்பட்டு வேலைசெய்வதால் அவற்றிற்கு மேற்போன தத்துவத்தை அறிய முடியாது. உடல்,உயிர், மனம் என்று படிப்படியாக ஏற்பட்ட பரிணாமத்தில் மனத்திற்கு அடுத்தபடி ஸித்த புருஷன் மனம். மனிதனின் மனம் ஸாதனையின் மூலம் ஸித்தபுருஷனின் மனமாக மாறவேண்டி யிருக்கிறது.

அந்த ஸித்த புருஷ மனம் என்பது என்ன? பிரகிருதியை மாயையென்று திரஸ்கரித்து, ஆத்மா பிரம்மத்துடன் சேர்ந்தது, அதன் அம்சம், என்ற ஞானம் கொண்டதல்ல அது; ஸ்ரீ அரவிந்தரின் கொள்கைப்படி இந்த ஸித்த புருஷ மனந்தான் பரிணாம தசை பெற்றிருக்கும் பிரகிருதியையே வியாபித்து, அதையே பிரம்ம பூர்ணமாக்குவது; ஓரிடத்தில் கொஞ்சமாக ஆரம்பித்த தீப்பொறி, எப்படி ஒரு கரித் துண்டு முழுவதையும் கனல் நிறைந்ததாக்கி விடுகிறதோ அப்படி. இதுதான் மனிதன் முனைந்து பெறவேண்டிய நிலை; இதற்கு முயற்சி செய்யவில்லை யென்றால், மனிதனுடைய வாழ்க்கையே அர்த்தமற்றது; ஸித்த புருஷன் உற்பத்தியாவதற்குத்தான் மனிதனே ஏற்பட்டான். மனிதன் சிருஷ்டியின் முடிவல்ல, உச்சியல்ல. அவனுக்கு மேற்பட்ட ஒரு படி இருக்கிறது.

இது ஸ்ரீ அரவிந்தர் தம் மனோபாவப் போக்கில் ஊகித்தறிந்த உண்மை. மனோ பாவம் எதைச் சத்தியமென்று கிரகிக்கிறதோ அதே கடைசியில் சத்தியமாகும் என்பது ஞானிகளின் முடிவு. அதுவே தர்மமுமாகும். இந்தப் பாதை அரவிந்தர் கண்ணில் கிழக்கு வெளுப்பது போலப் பட்டது.

ஸ்ரீ அரவிந்தரது மனம், இப்படி உயர்வு வேட்கை கொண்டு விம்மியதற்குக் காரணம் என்ன ?

வாழ்க்கையில் அவருக்கு இடர்கள் ஒன்றும் இல்லை. முதலில் பரோடா அரசாங்கத்தின் இரகசிய இலாகாவில் ஏதோ வேலை பார்த்தார்; பிறகு திவானி ஆபீஸில் இருந்தார்; பிறகு சிறிதுகாலம் மகாராஜாவுக்கு அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தார். கடைசியாக மாதம் ரூ. 750 சம்பளத்தில் பரோடாக் காலேஜின் உதவித் தலைமை ஆசிரியர் ஆனார். ஆகையால் வாழ்க்கையில் அவருக்கு ஒரு தொந்தரவும் இல்லை. அவருடைய மனைவி மிருணாளினி தேவியோ சர்வ லக்ஷணமும் கல்வி அறிவும் படைத்தவள். அரவிந்தருக்குப் பரோடாவில் நல்ல செல்வாக்கு, மரியாதை; வயதோ சரியான யௌவனம். அப்படியிருந்தும் ஏன் இந்தக் கிளர்ச்சி, இந்த அமைதியின்மை, இந்த மகா வேட்கை?

அந்த வேட்கை, வாழ்க்கையின்பத்தின் இனிய பானீயத்தால் தணிவதன்று, அது மகான்களுக்கு ஏற்படும் தாகம். புத்தனுக்கு ஏற்பட்டது; ராஜ்யத்தையும் யசோதரையை யும் விட்டுவிட்டு வெளியேறினார். ஆதி சங்கர ருக்கு ஏற்பட்டது; வாழ்க்கையையே துறந்து விட்டுத் திரிந்தார். அரவிந்தருக்கும் ஏற்பட்டது; உத்தியோகத்தையும் சுகத்தையும் வெறுத்தார்.

அந்தத் தாகத்தைத் தணிப்பது கர்ம யோகம் ஒன்றுதான். அது அரவிந்தர் வாழ்க்கையில் மூன்று விதங்களில் தோன்றிற்று. அவர் தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில்,பிரம்மோபதேசம் போல அந்தரங்கமாக அதை அவளுக்கு அறிவிக்கிறார். [ இந்தக் கடிதத்தை ஸ்ரீ அரவிந்தர் 30-8-1905-ல் தன் மனைவிக்கு எழுதினார்; பிறகு, வழக்கில் இது எக்ஸிபிட் டாகத் தாக்கல் செய்யப்பட்டது. ]

எனக்கு மூன்று பைத்திய எண்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஒருவனுக்குக் கிடைத்த அறிவு, புலமை, கல்வி, செல்வம் முதலிய ஸாதனங்களை, ஒருவன் தனது குடும்பத்திற்கு எவ்வளவு அத்தியாவசியமாகத் தேவையோ அவ்வளவுதான் செலவிடவேண்டும் என்பது எனது துணிபு. கடவுள் கொடுத்த ஸாதனங்களை யெல்லாம் நமக்காக மட்டும் செலவிட்டுவிடக் கூடாது. அவசியமானது போக பாக்கியைக் கடவுளுக்கே சமர்ப்பித்து விடவேண்டும். என் சொத்துகளை யெல்லாம் நான்மட்டும் பயன்படும் படியாகச் செலவழித்தால் நான் குற்றவாளி – திருடன். …கடவுளுக்குக் கொடுப்பது என்றால் என்ன? நல்ல வழிகளில் சொத்துக்களைச் செலவழிப்பதே கடவுளுக்குச் சமர்ப்பிப்பதாகும்….ஒருவன் தன்னை அண்டியவர்களை ஸம்ரக்ஷணை செய்வதால் மட்டும் இதைச் செய்து முடித்தவனாக மாட்டான். பந்துக்களுக்கு உதவி செய்வது போதாது. நாடே இன்று எனது உதவியை நாடுகிறது; என் வீட்டு வாசலில் வந்து நின்று உதவி கேட்கிறது போலிருக்கிறது. நாட்டின் முப்பது கோடி சகோதர சகோதரிகளிற் பலர் வறுமையாலும், பிணியாலும், துயரத்தாலும் வாதைப் படுகின்றார்கள். அவர்களுக்கு உதவி செய்யவேண்டியது கடமை. உன் அபிப்பிராயம் என்ன?

…. சாதாரண மனிதனைப்போல வாழ்க்கை நடத்தி மிகுந்ததை, மேற்சொன்னபடி ஈசுவர கைங்கரியத்தில் உபயோகிக்க உத்தேசித்து விட்டேன். உனக்கும் அந்த வழியைக் காட்டுகிறேன்.நீயும் என்னுடன் வருவாயா ?….

….பரமாத்மாவை நேராகக் காணவேண்டு மென்பது என்னுடைய இரண்டாவது சபலம். அதற்கு வழி நம்மிடத்திலேயே இருக்கிறது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வழியைக் கடைப்பிடித்து பெரியோர்கள் சில நியதிகளும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நான் அந்த முறைகளைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். சிறிது காலத்திற்குள்ளேயே நம் சாஸ்திரங்கள் கூறுவது உண்மைதான் என்பது எனக்குப் புலனாகிவிட்டது. அந்தச் சாஸ்திரங்களில் குறிப்பிட்டிருக்கும் சில அடையாளங்கள் என் அனுபவத்தில் தென்படுகின்றன. இதிலும் நீ என்னுடன் வருவாயா ?

….எனது மூன்றாவது பிரமை என்ன தெரியுமா? இந்த நாடே என் முன் தாய் உருவமாகத் தென்படுகிறது. வீழ்ச்சி யடைந்து கிடக்கும் இந்த நாட்டை எழுப்பி நிறுத்த எனக்கு வலிமை இருக்கிறதென்று எண்ணுகிறேன். ஆனால் பலாத்காரத்தால் நான் அதைச் செய்யப் போவதில்லை. ஆத்ம சக்தியாலேயே அதை ஸாதிக்க முடியும்…. இதற்காகவே நான் ஜன்மம் எடுத்திருக்கிறேன். பதினாலாம் வயதில் இந்த இச்சை என்னுள் முளைத்தெழுந்தது. பதினெட்டாம் வயதில் இது கிரியா சக்தியாக என்னுள் ஸ்வரூபம் பெற்று விட்டது யாராலும் அதைத் தடைசெய்ய முடியாது….

…… இந்த விஷயத்தில் உன் அபிப்பிராயம் என்ன ? மனைவிதான் புருஷனுக்கு வலது கை, அவனுடைய செயலாற்றல். என் முயற்சியில் நீ ஈடுபடாவிட்டால் எனக்குச் சக்தி குறையும். நீயும் என்னுடன் வருவாயா?

கடவுளைச் சரண் புகுந்தால் உனக்குத் தைரியம் வரும்……..என்னுடன் வா ! கடவுள் எதற்காக நம்மைச் சிருஷ்டித்தாரோ அந்தக் காரியத்தைச் செய்து முடிப்போம் !

இது எனது ரகசியம். யாரிடமும் சொல்லாமல் நீயே தனியாகக் கடவுளைப் பிரார்த் தனை செய்துகொள் !”

இந்தக் கடிதம் ஒரு மகத்தான உபதேச கிரந்தம். ஸ்ரீ அரவிந்தர் முதன் முதலாகத் தம் தத்துவத்தைத் தம் மனைவிக்கு உபதேசம் செய்து அவளைத் தம் மார்க்கத்திற்கு அழைக்கிறார். பின்னால், அவருடைய வாக்கிலும் எழுத்திலும் மூலமந்திரமாக ஆகப்போகிற மாதா (தாய்) சக்தி ரூபத்தில் இங்கேயே சான்னித்யம் கொண்டுவிட்டாள்.

ஸ்ரீ அரவிந்தர் பராசக்தி ஸ்வரூபமான பாரத மாதாவை முதலில் அடிமைத்தனத்திலிருந்து நீக்கவேண்டுமென்று பைத்தியம் கொள்ளுகிறார்; அதற்கு வேண்டிய கிரியா சக்தியைப் பெற, அதற்கு முதல் மார்க்கமாக, தம்மையே ஈசுவரார்ப்பணம் செய்துவிட வேண்டுமென்று பைத்தியம் கொள்ளுகிறார். இவ்வளவையும் லகுவாகச் சாதித்து முடிக்க வாழ்க்கைத் துணைவியான பெண் சக்தியின் உதவியைக் கேட்கிறார்.

துர்ப்பாக்கிய வசமாக அந்த உதவியை அவர் பெறவில்லை ; ஆனால் அவர் பைத்தியம் நீங்கவில்லை. அது அந்த மூன்று அம்சங்களில் வேரூன்றி விருத்தியடைய ஆரம்பித்தது.

அதன் முதற் பலனாக அவருடைய தேசீயம் வெளிக்கிளம்பிற்று. அது கிளம்புவதற்கும், நாட்டில் அதற்கேற்றாற் போலத் தேசீயக் கிளர்ச்சி ஒரு நெருக்கடியான சமயத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

ஸ்ரீ அரவிந்தர் இந்திய விடுதலைப்போரில் அதன் முதல் தீர்க்க தரிசியாக 1906-ஆம் வருஷத்தில் தோன்றினார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !