
ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
ஏழாம் அத்தியாயம் : பாரத சக்தி
1906-ஆம் வருஷம் ஜூலை மாதம் நிரந்தரமாகப் பரோடாவை விட்டு வெளியேறிக் கல்கத்தாவில் ஜாகையாக வந்துவிட்டார் ஸ்ரீ அரவிந்தர். ஒரு ஸம்ஸ்தானத்தில் இருந்து கொண்டு இந்திய அரசியல் கிளர்ச்சியில் பரிபூர்ணமாக ஈடுபட முடியாதென்று அப்படிச் செய்தார்.
முன் கூறியவாறு இந்திய அரசியல் கிளர்ச்சியின் ஒரு நெருக்கடியான காலத்தில் அவர் அதில் நுழைந்தார்; ஆனால் அவர் ஈடுபட்டதற்கு அந்த நெருக்கடி ஒரு வெளித் தூண்டுதலே யொழிய உள்தூண்டுதல் வேறு. அத்தூண்டுதல் அவர் பல வருஷங்களாகச் சிந்தனை செய்த ஒரு சித்தாந்தத்தின் தூண்டுதல். அந்தச் சித்தாந்தம் என்ன?
உலகிற்கு உத்தம வழியைக் காட்டுவதற்குக் கடவுள் அருளிய நாடு இந்தியா. இந் தியா தன் கடமையைச் செய்து படைப்பின் ஸார்த்தகத்தைப் பெறவேண்டும். அப்போது தான் இந்தியாவும் உலகமும் கடைத்தேறும். அப்படிச் செய்வதற்கு இந்தியா முதலில் தன்னைத் தானே ஒன்றாகவும் சக்தி சம்பன்னமான சமூகமாகவும் உணர்ந்து ஈசுவர சங்கற்பத்தில் ஈடுபட வேண்டும். அதற்குத்தான் தனிமையை முதலில் ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வதேசீயம் என்ற மூர்த்தன்யமான இயக்கத்தால்தான் அந்தத் தனிமையை நிலைநாட்ட முடியும். அந்தத் தனிமைதான் விடுதலை; அது தான் ஸ்வராஜ்யம்; அதுதான் தேசீயத்தின் முடிவான பலன். இந்தியா விடுதலை அடைவது தனக்காக அல்ல; உலகத்திற்காக. கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக கடவுளாகவே ஆவதற்காக என்று சொல்லிவிடலாம்.
முன்னோர் இடத்தில் ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னேன். மனித சரீரத்திலிருக்கும் சக்தி, யோகத்தால் விருத்தியாகிச் சரீரத்தையே வியாபித்து (கரிக்கட்டியில் நெருப்புப் பரவுவது போல) நிற்கும்; அதேபோல தேசத்திலிருக்கும் பாரத சக்தி ஸ்வதேசீய யோகத்தால் நாடெங்கும் வியாபித்து ஜகத் ஜோதியான விசுவபாரத சக்தியாக விளங்கும்; முறையே அந்த சக்தி அபிவிருத்தி பெற்று உலக சக்தியாகும். அப்பொழுது ஈசுவரன் அந்த விச்வ சக்தியின் பரிணமிப்பில் கலந்து வானுலகைச் சிருஷ்டி செய்கிறான். அந்தப் பிறவிதான் பூரண யோகத்தின் லட்சியம்.
ஸ்ரீ அரவிந்தரின் இந்த மூலாதாரமான எண்ணத்திலிருந்துதான் அவருடைய தேசீயம் ஜனிக்கிறது; அவர் குடியேற்ற நாட்டு அந்தஸ்தைக் கேட்கவில்லை; சட்ட சபைகளில் பெரு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்கவில்லை; விடுதலையையும் கூட அவர் கேட்கவில்லை. விடுதலை யாரிடமிருக்கிறது கேட்டுப் பெற்றுக்கொள்ள? நம்மிடம் இருக்கிறது. ஸ்வராஜ்யம் நம்முள் இருக்கிறது. அதை நாம் அறிந்து அடைய வேண்டும். நாம் அடையப் போகும் விடுதலை ஆங்கிலேயர்கள் கொடுக்கக் கூடியதல்ல; அது அவர்களிடமும் இல்லை, கொடுக்க. விடுதலை நம்மிடம் இருக்கிறது; அதை நாம் அறியவேண்டும். அறிந்தால் பெற்றுவிடுவோம்.
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஸ்வதேசீயம்’ என்ற மார்க்கம் இந்த ஞானத்தைப் பெறுவதற்காகத்தான். ஆத்ம ஞானம் ஏற்படுவதற்கு வழி, பஞ்ச பூத சக்திகளை ஒன்றுபடுத்திக் கர்ம யோக மார்க்கத்தில் ஈடுபடுவதேயாகும். இந்தியர்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங் களிலும் இந்தியராக, ஸ்வதேசீயராக இருந்து ஒரு கட்டுப்பாடாக வாழ்ந்தால் இந்தியாவின் தனிப்பெருமை வெளியாகும். அப்பொழுது இந்தியா பிறகுணமற்ற விடுதலைப் பூமி ஆகும். சக்தி அதன் ஒவ்வோர் அங்கத்திலும் சம்பூர் ணமாக நிற்கும். தைரியமாகக் குரலெடுத்துத் தான் பயின்ற முறையை உலகிற்குக் கூறலாம். உலகம் அப்போது செவிசாய்த்துக் கேட்கும்.
ஆங்கில நாகரிகத்திலேயே ஊறின மன மொன்று இப்படி இந்திய நாகரிகத்தின் தனிமையை உணர்ந்து அந்த ரகசியத்தை மூல மந்திரத்தைப் போல வெளிப்படுத்தியது எதனால்? தன் உருவையே மாற்றும் நீரில் ஊறிய விதை தானே வெடித்து வளர்ச்சியை அறிகிறது? அரவிந்தர் நினைப்பது தேசீயம்; சொல்வது தேசீயம்; செய்வது தேசீயம். அவர் தேசீ யத்தின் பிரத்தியக்ஷமான ஸ்வரூபம்.
ஆகையால் அரவிந்தரின் தேச பக்தியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? அவருடைய விடுதலை வேட்கையைப் பற்றித்தான் சொல்ல வேண்டுமா?
விடுதலைதான் அவர் உச்சரிக்கும் மந்திரம். அது ஸாதனையால் கிட்டும். நம்பிக்கை, சிரத்தை, தியாகம் இவற்றால்தான் அந்த ஸாதனை ஸித்தியாக வேண்டும். இந்த மூன்றும் தைரியத்தாலும், பலத்தாலும், ஆண்மையா லும் இடையற்று நிற்க வேண்டும்.
எந்த இடையூறாலும் நம்பிக்கையோ, சிரத்தையோ, தியாகமோ தளரக்கூடாது. எந்தப் பலாத்காரத்திற்கு முன்பும் அவை தணியக் கூடாது. எந்த ஆசைகளாலும் தூண்டுதல்களாலும் அவை மறையக்கூடாது.
இந்த இடத்தில் ஸ்ரீ அரவிந்தருடைய கொள்கையில் இருக்கும் ‘சர்வ மதப் பிணைப்பு’ (Synthesis) நன்றாக வெளியாகிறது. அது ஹிந்து யோக முறைகளுடைய கூட்டு மட்டும் அன்று; மேல் நாட்டு ஆராய்ச்சி முடிவுகள் கூட அதில் கலந்திருக்கின்றன. நீட்ஷா என்னும் ஜெர்மன் விஞ்ஞானியினுடைய கொள்கை எவ்வளவு தூரம் அரவிந்த யோகத்தில் பிணைப்புக் கொண்டிருக்கிறது என்பது அவர் பலத்திற்கும், தைரியத்திற்கும், ஆண்மைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து விளங்கும். நமது வேதாந்தத்தில் இவற்றிற்குத் தலைமை இல்லை என்பதல்ல; நமது ஹட யோகத்தின்படி சரீரத்திற்கு ஏற்படும் முக்கியத்துவந்தான் இது. என்றாலும், பரிணாம வாத ரீதியில் நீட்ஷா, சரீரத்திற்குக் கொடுத்திருக்கும் சிறப்பை அரவிந்தர் அங்கீகரித்து தமது ஆத்ம பரிணாம ஸித்தாந்தத்தில் பிணைத் திருக்கிறார் என்று எனக்குப் படுகிறது.
இந்த அம்சத்தைப் பின்னால் அரவிந்த யோகத்தைப் பற்றிக் கூறும்பொழுது விஸ் தரிக்கிறேன்.



