
ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
பத்தாம் அத்தியாயம் : விடுதலை
அலிபூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வெளிவந்தது 1909-ஆம் வருஷம் மே மாதம்.
உத்தரபாராப் பிரசங்கம் ஸ்ரீ அரவிந்த ருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம் என்று நான் ஏற்கெனவே சொல்லியது அந்தப் பிரசங்கத்திலிருந்து தெளிவாக விளங்கும். அவர் மனம் பூர்ணமாகப் பக்குவம் அடைந்து விட்டதற்கு அபரிமிதமான அத்தாட்சிகள் அந்தப் பிரசங்கத்தில் இருக்கின்றன. அரவிந்த யோகத்தின் மூலாதாரமான எண்ணங்கள் எல்லாம் அதிலே தென்படுகின்றன. நாற்றங்காலில் தென்படும் முளைகள் போல, சொல்லப் போனால் உத்தரபாராப் பிரசங்கம் அரவிந்த யோக சூத்திரம் என்று சொல்லிவிடலாம். அதுமட்டுமல்ல; அவருடைய பிற்காலத்துப் போக்கே அதில் சூசனையாக அமைந்து இருக்கிறது.
தேசீயம் என்ன என்பதைத் தீர்க்கதரிசி போலச் சொல்லவே கடவுள் முதலில் அவரை நியமித்தார். அப்பணியைச் செய்யத் திறம்படைத்த இளைஞர்கள் பலர் காத்திருந்தார்கள். அவர்கள் கையில் அதை ஒப்பித்து விட்டு இன்னும் அதிகமான தனிமையில் போய்ச் சனாதன தர்மத்தை வாழ்க்கை நியதியாகச் செய்து காட்டவேண்டியது தம் வேலை யென அவர் கருதினார்.
வெளியில் வந்ததும், அவர் பிரசங்கத்தில் கூறுவது போல, நாட்டில் எங்கும் ஒரு தேக்கம் ஏற்பட்டிருந்தது. அவருடைய கூட்டாளிக ளெல்லாம் சிறையில் இருந்தார்கள். ஆனால் அரவிந்தர் கவலை கொள்ளவில்லை. பகவான் தம் சங்கல்பத்தை நிறைவேற்றும் வழி அது என்று உணர்ந்தார். தாம் செய்ய வேண்டி யது கர்மம்; முடிவை அனுமானிக்கவோ, தீர் மானம் செய்யவோ தமக்கு அதிகாரம் கிடையாது என்றும் தேர்ந்தார். ஆகையால் “கர்ம யோகி” என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும், “தர்மம்” என்ற வங்காளி வாரப் பத்திரிகையும் ஆரம்பித்துத் தேசீயம் -அதாவது சனாதன தர்மம் – வளர்வதற்கு வேண்டிய சாதனங்களைப் பற்றிப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஈசுவரன் அவருக்கு அந்த வேலை இடவில்லை. அவருடைய வேலை வேறு திக்கில் என்பதை உணர்ந்தார். 1910-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் சந்திரநாகூருக்குச் சென்று கொஞ்சம் தனிமையில் இருந்தார். ஏப்ரல் மாதம் புதுச்சேரிக்குப் புறப்பட்டார்.
மறுபடியும் அநேகமாகப் பொது வாழ்விற்குத் திரும்பிவர மாட்டோமென்று அவருக்குத் தெரியும். ‘கர்மயோகி’ பத்திரிகையில் தேசத்திற்குத் தமது இறுதியான சாஸனத்தை எழுதிப் பிரசுரித்துவிட்டு விடை பெற்றுக்கொண்டார். அதில் காந்தீயத்தின் மூல தத்துவங்கள் காணப்படுகின்றன. எனவே, ஒரு முறையில் அரவிந்தர் விட்டுப் போன வேலையைக் காந்திஜி தொடங்கிச் செய்தார்; எவ்வளவு வெற்றியுடன் செய்தார் என்பதை உலகம் அறியும். சநாதன தர்மத்தின் மகிமை உலகளாவிப் பரவிவிட்டது.
“என்னை நாடு கடத்தவேண்டுமென்று போலீஸார் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறதாக வதந்தி. ஆகையால் நாட்டிற்கு இந்தக் கடிதத்தை எழுத எண்ணுகிறேன். தற்காலம் என்ன செய்யவேண்டியது என்பதையும் எதிர்காலத்தின் தேவைகளையும் இதில் குறிக்கிறேன். நான் திரும்பி வராவிட்டால் தேசத்திற்கு இதுதான் என் இறுதியான சாஸனம்……….
“தேசீயத்திற்கு வேண்டியவை ஒரு காரிய திட்டமும் தலைவனுமே யாகும். காரிய திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். தலைவனைக் கடவுள்தான் அருள வேண்டும். பெரிய இயக்கங்களெல்லாம் தலைவனுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றன.
“ஆகையால் தேசீய வாதிகள் பொறுமையுடன் தலைவனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். நாம் நம் நாட்டினருக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே ஒரு மோட்ச வழியைக் காட்ட வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதை மறக்க முடியாது.
“அந்நியர்கள் இடத்திலாவது அந்நிய அரசாங்கத்திடமாவது பகைமை காட்டுவது தேசீயத்தின் லட்சியம் அல்ல. அந்நிய ஆட்சியைச் சுய ஆட்சியாக்குவதுதான் நமது லட்சியம். அது பகையிலும் பலாத்கார உணர்ச்சியிலும் உண்டாவதல்ல; தேசபக்தி, அன்பு, இவைகளில் உண்டாவது.
“தன் உதவி, சாத்வீக எதிர்ப்பு; இந்த இரண்டுந்தான் நமது சாதனங்கள்.”
தமது தீர்க்க தரிசனத்தின் சக்தியால், கடவுள் ஆக்ஞையால், இவ்வாறு கூறிவிட்டு அரவிந்தர் புதுச்சேரியில் வந்து தீவிரமாக யோகசாதனத்தில் ஈடுபட்டார். 1909-ல் தான் அவருடைய ஜீவியத்தில் பொது வாழ்க்கையில் அவர் ஈடுபட்டதன் உச்ச நிலை. முன்பும் தனிமை ; பின்பும் தனிமை.
நான்கு வருஷங்கள் மௌனமாகத் தவம் புரிந்தார். 1914-ஆம் வருஷத்தில் ‘ஆர்யா’ என்னும் மகத்தான மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். அதில்தான் அவருடைய முக்கியமான வேதாந்த கிரந்தங்கள் எல்லாம் பிரசுரமாயின. இந்திய நாகரிகத்தையும், கலையையும், காவியத்தையும் பற்றி நுணுக்கமாக எழுதினார். பொதுவாக அறிவைப் பற்றியே ஆழ்ந்து உணர்ந்து எழுதினார். அவருடைய கவிதைகளும் இப்பொழுது பிரசுரிக்கப்பட்டன. 1921-ஆம் வருஷம் வரையில் ஆர்யாவின் மூலமும் புத்தகங்கள் மூலமும் ஸ்ரீ அரவிந்தர் தமது அத்தியாத்ம ஞானத்தின் விளைவுகளை நிகரற்ற நேர்மையுடன் எழுதினார்.
1921- ஆம் வருஷத்துடன் அந்தச் செய்கையையும் நிறுத்தி விட்டார். இப்பொழுது பூரண யோகத்தில் ஆழ்ந்து எழுத்தும் பேச்சுமற்ற ஓர் அனுபவ யோகத்தில், கர்மாவில் ஈடுபட்டு விட்டார். இதன் இறுதி எப்பொழுதோ யார் கண்டார்கள்? எவ்வாறு வெளி வருவாரோ, கடவுள் சங்கல்பம் எப்படியோ?
1909-ஆம் வருஷந்தான் உத்தர பாரத்தை (அக்கரையை) அடைந்தார்; சம்பூர்ணமாக யோக வழியில் திரும்பினார் ; என்றாலும், 1905-ல் பரோடாவில் இருக்கும் பொழுதே அந்தப் பாதையில் இறங்கி விட்டார் – அதாவது, முன் குறித்தவாறு, அவருடைய முப்பத்து மூன்றாவது வயதில்; இப்பொழுது வயது அறுபத்து ஏழு.
முதலில் ஸ்ரீ அரவிந்தர் தம் வீட்டில் சில சகாக்களுடன் வசித்தார். பிறகு பின்னும் சிலர் வந்து சேர்ந்தார்கள். 1920-ஆம் வருஷம் மாதா வந்து சேர்ந்தார். நாளடைவில் வந்தவர்களுக்கு இடமும் உணவும் வசதிகளும் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆசிரமம் முழுதும் ஸ்ரீ அரவிந்தருடையது பழைய காலத்து ஆசிரமத்தைப் போல. ஆசிரமம் ஒரு பொது ஸ்தாபனம் அன்று. முதலில் சுமார் 12 பேர்களே இருந்தார்கள். இப்பொழுது அரவிந்த ஆசிரமத்தில் நூறு சாதகர்கள் இருக்கிறார்கள். மாதம் 6, 7 ஆயிர ரூபாய்கள் செலவாகின்றன. சில சிஷ்யர்கள் தாம் பணம் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லை.
சிஷ்யர்கள் சேரவேண்டுமென்று பிரசாரம் கிடையாது. யார் யார், தாமே அதில் ஈடுபட்டு வருகிறார்களோ அவர்கள் அங்கே தங்குகிறார்கள்.
1926 -ஆம் வருஷம் முதல் ஸ்ரீ அரவிந்தர் தீவிர தபஸில் இறங்கி விட்டார். வருஷத்தில் மூன்று தினங்களில் தான் ஆசிரம சாதகர்கள் கூட அவரைத் தரிசிக்கலாம். அவருடைய ஜன்ம தினம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி; அவருடைய அத்தியாத்ம வாழ்க்கையில் ஒரு முக்கியமான தினம் நவம்பர் 24-ம் தேதி. ‘மாதா’ என்ற பிரஞ்சு அம்மையார் (ஸ்ரீமதி மீராதேவி) பிறந்த தினமாகிய பிப்ரவரி 21-ஆம் தேதி; இதரரும் இந்த மூன்று தினங்களில்தான் அவரைக் காணலாம். அதற்கும் முன் கூட்டியே உத்தரவு பெற வேண்டும். அந்தத் தினங்களிலும் அவர் பேசுவதில்லை ! சிஷ்யர்கள் ‘மாதா’ வின் மூலந்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும்.
தபஸின் பலனாக ஸ்ரீ அரவிந்தருடைய தேகம் ஸ்வர்ண விக்கிரகம் போல இருக்கிறதாம். உணவும் நித்திரையும் எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு தானாம். ஆனாலும் தமது 67-ஆம் வயதில் ஸ்ரீ அரவிந்தர் பழுத்த பழம் போல இருக்கிறார். ஹடயோகத்தால் கடைந்து களிம்பு நீக்கப்பட்ட அவருடைய தேகத்தில் பூர்ணயோகத்தால் மலர்ந்த விக்ஞான சம்பத்து நிறைந்திருக்கிற பொழுது கேட்பானேன்?
அரவிந்த யோகி வேத ரிஷிகளின் மரபில் வந்தவர்; உபநிஷத்தின் ஞான விருத்தர்களுடைய சந்ததியில் தோன்றினவர்; சித்தர்களும் பக்தர்களும் மண்டின நாட்டின் புத்திரர்; அவர்களுடைய அனுபவத்தில் மூழ்கி முமுக்ஷவானவர்.



