
ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
ஒன்பதாம் அத்தியாயம் : உத்தரபாராப் பிரசங்கம்
உங்களுடைய சபையின் வருஷாந்தரக் கூட்டத்தில் பேசும்படி நீங்கள் என்னைக் கேட்டுக் கொண்டபொழுது, இன்றை விஷயமாகிய ஹிந்து மதத்தைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுவதாக உத்தேசித்திருந்தேன். இப்பொழுது நான் அந்தப்படி செய்யப்போகிறது சந்தேகம். ஏனென்றால், நான் இங்கே உட்கார்ந்திருந்த பொழுது உங்களுக்குச் சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை என் ஞாபகத்திற்கு வந்தது. இந்திய சமூகத்திற்கே நான் சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை அது. அது எனக்கு முதலில் சிறையில் உபதேச மொழியாக வந்தது; சிறையிலிருந்து வெளியே வந்ததும், நான் அதை என் நாட்டினருக்குச் சொல்ல வேண்டி இருக்கிறது.
நான் இங்கே வந்து ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டது. நான் அப்பொழுது தனி யாக வரவில்லை. தேசீயத்தின் மகா தீர்க்க தரிசிகளில் ஒருவர் என் பக்கத்தில் இருந்தார். கடவுளின் ஆக்ஞையால் தனிமையைப் பெற்று, சிறையின் மௌனத்திலும் ஏகாந்தத்திலும் அவர் அந்த வார்த்தையை அறிந்தார். அதிலிருந்து அவர் வெளிவந்த சமயம் அப்பொழுது. அவரை வரவேற்க நீங்கள் ஆயிரக் கணக்கில் வந்து கூடினீர்கள். இப்பொழுது அவர் கண் காணாச் சீமையில் இருக்கிறார்; அவருக்கும் நமக்கும் இடையே ஆயிரக் கணக்கான மைல்கள் இருக்கின்றன. என்னுடன் வேலை செய்து எனக்கு அறிமுகமான இன்னும் சிலர் இங்கில்லை. தேசத்தில் அடித்த புயல் அவர்களை நானா திக்குகளிலும் சிதற வடித்துவிட்டது. இந்தத் தடவை நான் ஒரு வருஷம் சிறை வாசம் செய்துவிட்டு வெளியே வந்து பார்க்கும் பொழுது எல்லாம் மாறியிருக்கிறது. என் னுடன் கூடவே இருந்து என்னுடன் தொண்டு செய்தவர் பர்மாவில் கைதியாக இருக்கிறார்; மற்றொருவர் எங்கோ வடக்கே கைதியாகச் சீரழிகிறார். சிறையிலிருந்து வெளி வந்ததும் தேடினேன்; யோசனையும் உத்ஸாகமும் அளித்த நண்பர்களைத் தேடினேன், காணவில்லை.
அது மட்டுமல்ல : நான் சிறை சென்ற பொழுது நாடு முழுவதும் வந்தே மாதர கோஷத்தில் உயிர் ததும்பி நின்றது; தேசத்தின் நம்பிக்கை உயிர் கொண்டெழுந்திருந்தது. மெள்ள அடிமைத்தனத்திலிருந்து தலைதூக்கிய கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை அது. சிறையிலிருந்து வந்தவுடன் காது கொடுத்துக் கேட்டேன். அந்தக் கோஷத்தைக் காணோம். ஒரு நிச்சப்தந்தான் இருந்தது. தேசமே பேச்சற்றுப் போய் நின்றது; மக்கள் பிரமை கொண்டவர்கள் போலத் தோன்றினார்கள். எதிர்கால நம்பிக்கைகளும் ஆசைகளும் நிறைந்த ஒரு திவ்விய தரிசனத்திற்குப் பதிலாக எங்கே பார்த்தாலும் ஆகாயம் கறுத்து மனிதன் கைகள் இடியும் மின்னலும் பொழிந்து கொண்டிருந்தன. எப்படிப் போவது என்று ஒருவனுக்கும் தோன்றவில்லை. “என்ன செய்வோம் இனி மேல்?” என்ற கேள்விதான் எங்கும் உதித்தது. எனக்குக்கூட எந்த வழியில் போவது என்று தெரியவில்லை; மேலே என்ன செய்வது என்றும் தோன்றவில்லை. ஆனால் எனக்கு ஒன்று தெரிந்தது. அந்தக் கோஷத்தையும், அந்த நம்பிக்கையையும் தூண்டிக் கிளப்பிய அதே ஈசுவர சக்திதான் இந்த நிசப்தத்திற்கும் மூலம் என்பது தெரிந்தது. இந்த இரைச்சலிலும் இயக்கத்திலும் இருந்தவன்தான் இந்தத் தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் இருந்தான் என்பது நிச்சயம். இது எதற்காக?
தேசம் ஒருக்ஷணம் பின்வாங்கி, தன்னைத் தானே ஆராய்ந்து பார்த்துக்கொண்டு கடவு ளின் இச்சையை அறிவதற்காகத் தான். இந்த அமைதியால் நான் கலக்கம் அடையவில்லை; ஏனெனில், சிறையில் எனக்கு இந்த அமைதி சகஜமாகி விட்டது. மேலும் இந்த அமைதியின் தாமதத்தில்தான் நான் இந்த உபதேசத்தைப் பெற்றேன். விபின சந்திரபாலர் சிறையிலிருந்து வெளியில் வந்தபொழுது ஒரு செய்தி யுடன் வந்தார். அது திவ்விய வாக்கு உதிர்த்த செய்தி. அவர் இங்கே செய்த பிரசங்கம் எனக்கு நினைவில் இருக்கிறது. அதில் அரசியல் கூட அவ்வளவில்லை ; அதில் அத்தியாத்ம அனுபவந்தான் நிறைய இருந்தது. தமக்குச் சிறையில் ஏற்பட்ட ஞானத்தைப் பற்றியும், நம்முள் இருக்கும் கடவுட் சக்தியைப் பற்றியும், தேசத்தில் இருக்கும் கடவுள் ஸான்னித்யதைப் பற்றியும் அதில் பேசினார். பின்னால் ஸப்தப் பிரதேசங்களிலும் இயக்கத்தின் சக்தி சாதாரண மானதல்ல வென்றும், அதன் நோக்கமும் சாதாரணமல்ல வென்றும் விளக்கினார்.
இப்பொழுது நானும் உங்களைச் சந்தித்து விட்டேன். நானும் சிறையிலிருந்துதான் வந்திருக்கிறேன். இப்பொழுதும் உத்தரபாராப் பிரஜைகளான நீங்கள்தான் என்னை முதல் முதலாக வரவேற்கிறீர்கள் – அரசியல் கூட் டத்தில் அல்ல – நமது சனாதன தர்மத்தை காக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சபையின் ஆதரவில். பக்ஸார் சிறையில் விபின சந்திர பாலருக்குத் தந்த ஸந்தேசத்தைக் கடவுள் அலிபூர் சிறையில் எனக்குக் கொடுத் தார். நான் சிறையில் வசித்த பன்னிரண்டு மாதங்களிலும் ஒவ்வொரு நாளுமாகக் கடவுள் அந்த ஞானத்தை எனக்குப் புகட்டினார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அதை உங்களுக்குத் தெரிவிக்கும் படியாக எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
நான் விடுதலை யடைந்து வெளிவருவேன் என்று எனக்குத் தெரியும். ஒரு வருஷம் தனிமையில் தவம் செய்ய வேண்டியதற்குத் தான் அந்தச் சிறைவாசம் ஏற்பட்டது. ஈசுவர சங்கல்பத்திற்குத் தேவையான அளவிற்கு மேல் எவனால் என்னைச் சிறையிட்டு வைத்திருக்க முடியும்?
ஒரு வார்த்தையை வெளியிடும்படி என் னிடம் சொல்லியிருக்கிறார்.
ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார். நான் அந்த வார்த்தையைச் சொல்லி முடிப்பதற்கு முன் என் வாயை அடக்க யாராலும் முடியாது; அந்தக் காரியத்தை நான் செய்து முடிக்குமுன், எந்தப் புருஷ சக்தியும் கடவுளின் கருவியை நிறுத்த முடியாது. இது எனக்குத் தெரியும். அந்தக் கருவி எவ்வளவு சிறிதாயிருந்தால் என்ன, வலிவற்றதாய் இருந்தாலென்ன? நான் வெளியே வந்து விட்டதால், இப்பொழுது தான் நான் பேச வேண்டுமென்று எண்ணாத அந்த வார்த்தையை எனக்கு அவர் நினைப்பூட்டி விட்டார். நான் எண்ணினதைத் தள்ளிவிட்டார்; நான் இப்பொழுது பேசுவது அவர் நிர்ப்பந்தத்தால்; அது இப்பொழுது தோன்றினதுதான்.
என்னைக் கைது செய்து லால் பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோன பொழுது எனக்குக் கொஞ்சம் அவரிடம் இருந்த நம்பிக்கை தளர்ந்தது; ஏனென்றால் அவருடைய கருத்து எனக்கு அர்த்தமாக வில்லை. ஆகையால் நான் ஒரு நிமிஷம் தயங்கி எனக்குள்ளேயே பிரலாபித்துக் கொண்டேன்: “இதென்ன எனக்கு இந்த மாதிரியாகிவிட்டதே ? என் நாட்டு மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது என்றும், அது முடியும் வரை நீ என்னைப் பாதுகாப்பாய் என்றுமல்லவா எண்ணினேன்? எதற்காக என்னை இங்கே கைது செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் ? “
ஒருநாள், இரண்டு நாட்கள், மூன்று நாட் கள் கழிந்தன. எனக்குள்ளிருந்து ஒரு குரல் கிளம்பி, “பொறுத்துப் பார்!” என்றது. உடனே நான் அமைதியடைந்து காத்திருந் தேன். லால் பஜாரிலிருந்து என்னை அலிபூருக்குக் கொண்டுபோய் அங்கே தனிக் காவலில் வைத்தார்கள் ஒரு மாதம். என்னுள் இருந்த கடவுளின் குரலைக் கேட்பதற்கு இரவும் பகலுமாக அங்கே செவி சாய்த்துக் கொண்டிருந்தேன் – அவர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்க, நான் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிய. இந்தத் தனிமையில்தான் எனக்கு முதல் முதலாகத் தத்துவ போதம் ஏற்பட்டது. எனக்கு முதற் பாடம் அங்கேதான் ஆரம்பமாயிற்று. அப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது. நான் கைதியாவதற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பே எனக்கோர் உத்தரவு பிறந்திருந்தது.
எல்லாக் கைக் காரியங்களையும் தூர வைத்துவிட்டு தனியாகச் சென்று ஆத்ம சோதனை செய்துகொண்டு கடவுளுடன் இன்னும் அதிகமாக நெருக்கம் கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று.
ஆனால் அப்பொழுது சபல புத்தியால் அந்த அழைப்பிற்கு இணங்காமல் இருந்துவிட்டேன். நான் செய்து கொண்டிருந்த தொண்டு எனக்குப் பெரிதாகத் தென் பட்டது. நான் இல்லாவிட்டால் அந்த வேலையே நடக்காது, நின்றே போய்விடும் என்று அகங்காரம் கொண்டிருந்தேன். மறுபடியும் எனக்கு அவர் உபதேசம் செய்தது போல் தோன்றிற்று. “நீயாகவே அறுக்கத் துணியாத பந்தங்களை நான் அறுத்துவிட்டேன். ஏனென்றால், அது அப்படி நடைபெற வேண்டுமென்பதல்ல என் இஷ்டம். நான் உனக்கு வேறு வேலை வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் நான் உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறேன் – நீயாகத் தெரிந்து கொள்ளாத ஓர் உண்மையை உனக்குத் தெளிவுபடுத்தத்தான்; உன்னை என் வேலைக் குத் தயார் செய்யத்தான்.
பிறகு பரமாத்மா கீதையை என்னிடம் கொடுத்தார். அவருடைய சக்தி என்னுள் புகுந்தது; கீதையின் ஸாதனையைக் கைக்கொண்டேன். அர்ஜுனன் என்ன செய்யவேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் எதிர்பார்த்தார் என்பதை அறிந்ததோடு மட்டுமின்றி உணரவும் ஆரம்பித்தேன். அதிலிருந்து பகவான் தம் காரியத்தைச் செய்ய ஆவல் கொண்டவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் உணர்ந்தேன். விருப்பு வெறுப்பின்றிக் கர்மாவைச் செய்யவேண்டும்; பலனை எதிர்பார்க்காமல் அவர் ஏவலைச் செய்ய வேண்டும். காரத்தை ஒழித்து அவர் கைக் கருவியாக வேண்டும். உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும், சத்துருவையும் மித்திரனையும், வெற்றியையும் தோல்வியையும் ஒரே விதமாகப் பாராட்ட வேண்டும். அவர் வேலையைச் சிரத்தையுடன் செய்ய வேண்டும். ஹிந்து மதத்தின் அர்த்தத்தை உணர்ந்தேன். ஹிந்து மதத்தையும் சனாதன தர்மத்தையும் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அது என்ன என்பதை நாம் சரியாக உணரவில்லை. எல்லா மதங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளுமாக இருக்கின்றன. ஆனால் சனாதன தர்மம் வாழ்க்கை. அது அவ்வளவு கொள்கை கூட அல்ல; சனாதன தர்மம் வாழ்க்கையின் நடப்பு. உலகம் உய்வதற்காக இந்த நாட்டில் தனியாக வளர்ந்தது இந்தத் தர்மம். இந்த மதத்தை உலகிற்கு அளிக்கத்தான் இந்தியா சீறி எழுந்திருக்கிறது. இதர நாடுகளைப் போலத் தனக்காக இந்தியா விழித்தெழவில்லை; பலங்கொண்டு எளியோரை நசுக்க இந்தியா எழுந்திருக்கவில்லை. தன்னிடத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கும் சனாதன ஒளியை உலகத்திற்கு ஊட்டவே எழுந்திருக்கிறது. மனித சமூகத்திற்காகத்தான் இந்தியா என்றும் இருந்திருக்கிறது; தனக்காக மட்டும் அல்ல; மனித சமூகத்திற்காகத்தான், தனக்காக அல்ல, இந்தியா புத்துயிர் பெறவேண்டும்.
ஆகையால் இதுதான் அவர் எனக்கு அடுத்தபடியாக உணர்த்தியது. ஹிந்து மதத்தின் மூலாதார தத்துவத்தை எனக்குப் புகட்டினார். சிறை காப்பாளர்கள் என்னைக் கண்டு இரங்கும்படி தூண்டினார். “தனிக் காவலில் அவர் கஷ்டப்படுகிறார். காலையும் மாலையும் அரைமணியாவது சிறைக்கு வெளியில் உலா வட்டும்” என்று ஆங்கில ஜெயில் அதிகாரியிடம் சிபார்சு செய்தார்கள். அந்தமாதிரி ஏற்பாடாயிற்று. நான் அப்படி உலாவிக் கொண்டிருக்கையில் தான் அவர் சக்தி மறுபடி யும் எனக்கு உண்டாயிற்று. மனிதர்களிடமிருந்து என்னைப் பிரித்துத் தனிமைப்படுத்தி வைத்திருந்த சிறையைப் பார்த்தேன். அதன் சுவர்களல்ல என்னைச் சூழ்ந்திருந்தவை ; வாஸ தேவன் என்னைச் சூழ்ந்துகொண்டிருந்தார்! என் அறைக்கு முன்பு இருந்த மரத்தின் கீழ் உலவிய பொழுது அது நிழலாக எனக்குத் தென்படவில்லை. அது வாஸூதேவன்! ஸ்ரீ கிருஷ்ணபகவான் அங்கே நின்றுகொண்டு தம் நிழலை எனக்கு அளித்தார். என் அறைக்கதவிலிருந்து கம்பிகளைப் பார்த்தேன், கதவைப் பார்த்தேன்- எல்லாம் வாஸூதேவன்! நாராயணரே அங்கே காவலாளியாக நின்று கொண்டிருந்தார். அங்கே அவர்கள் கொடுத்திருந்த முரட்டுக் கம்பிளியில் நான் படுத்துக் கொண்டபொழுது ஸ்ரீ கிருஷ்ணபகவான் கை என்னைத் தழுவிக்கொண் டது – என் காதலனின் கை ! அவர் அருளிய ஞானதிருஷ்டியின் முதல் பிரயோஜனம் இது தான்: கைதிகளையும், கொலை செய்தவர்களையும், திருடர்களையும் பார்த்தபொழுது எனக்கு வாஸூதேவனுருவந்தான் கண்ணில் பட்டது. அந்தச் சிதைந்த உயிர்களிலும் ஆத்மாக்களிலும் நாராயணர் ! அந்த வழிப்பறிக்காரர்கள் நடுவிலும் என்ன இரக்கம், அனுதாபம், அவ்வளவு கஷ்டத்திலுங்கூட வெற்றி பெற்று வெளித்தோன்றும் தயை! ஒரு தடவை அங்கே எழுதப் படிக்கத் தெரியாத ஒரு குடியானவனைச் சந்தித்தேன். அவன் புண்ணிய புருஷன். வழிப்பறிக்காரன் என்று அவனுக்குப் பத்து வருஷம் கடுங்காவல் ஏற் பட்டிருந்தது. மறுபடியும் பகவான் என்னைப் பார்த்து, “பார், எவர் நடுவே உன்னை இட்டு என் வேலையைச் சொல்லி இருக்கிறேன். நான் உத்தாரணம் செய்யும் தேசமே இப் படிப்பட்டதுதான் ; இதற்காகத்தான் அதை எழுப்புகிறேன்” என்றார்.
கீழ்க் கோர்ட்டில் விசாரணை ஆரம்பமாகி எங்களை நீதிபதி முன்பு கொண்டு போன பொழுதும் எனக்கு இதே தரிசனந்தான் ஏற்பட்டது. “உன்னைச் சிறையிலிட்டபொழுது நீ உள்ளம் தளர்ந்து ‘உன் பாதுகாப்பு எங்கே ?” என்று கதறவில்லையா? இப்பொழுது நீதிபதியைப் பார், பிராஸிக்யூஷன் தரப்பு வக்கீலைப் பார்.”
பார்த்தேன். நான் பார்த்தது மாஜிஸ்ட்ரேட் அல்ல ; வாஸுதேவன், நாராயணன் தான் அங்கே நீதிபதியாக உட்கார்ந்திருந்தார். எதிர்த்தரப்பு வக்கீலைப் பார்த்தேன். ஸ்ரீகிருஷ்ணன், என் தோழன், என் காதலன், அங்கே உட்கார்ந்து கொண்டு புன்னகை புரிந்தார்.
“இப்பொழுது நீ கலங்குகிறாயா? நான் எல்லா மனிதர்களிடமும் இருக்கிறேன். நான் அவர்கள் செய்கைகளையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துகிறேன். நான் உன்னைப் பாதுகாத்துத்தான் வருகிறேன்; கலங்காதே. உன் மேல் தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்ளுகிறேன். இந்த விசாரணைக் காக நான் உன்னை இங்கே கொண்டு வரவில்லையே. அது வேறு காரியம். என் காரியத்திற்கு இந்த வழக்கு ஒரு காரணம். அவ்வளவுதான்” என்றார் பகவான்.
பிறகு செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை ஆரம்பமான பொழுது என் வக்கீலுக்கு ஒத்தாசையாக, எதிர் சாட்சியத்தில் எது எது பொய்யென்றும், சாட்சிகளை எந்த எந்த விஷயத்தில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென்றும் விரிவாகக் குறிப்புகள் தயாரிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது நான் எதிர்பாராத ஒரு சம்பவம் நேர்ந்தது. என் தரப்பில் வாதிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்ட வக்கீல் மாறி வேறொருவர் வந்தார். அவர் எதிர்பாராமல் வந்தார். அவர் என் நண்பர் தாம். ஆனால் அவர் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். வேறு ஜோலிகளைக் கவனிக்காமல், தம் இதர வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு இரவாக உட்கார்ந்து பல மாதங்கள் ஆராய்ந்து என் கட்சியை எடுத்துப் பேசித் தம் உடல் நிலைக்கே சீர்குலைவைத் தேடிக் கொண்டாரே – சித்தரஞ்சனதாஸ்! அவரைப் பார்த்தவுடனேயே எனக்குத் திருப்தி யுண்டாகிவிட்டது. இருந்தாலும் அவருக்கு வேண்டிய தகவல் கொடுக்கவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அந்த எண்ணங்களை யெல்லாம் மறக்க வடித்து ஓர் உத்தரவு உள்ளேயிருந்து பிறந்தது. “இந்த மனிதன் தான் உன்னை, உன் காலைச் சுற்றிக்கொண்டிருக்கும் பந்தங்களிலிருந்து நீக்கப் போகிறான். அந்தக் காகிதங்களை யெல்லாம் தூர எறிந்துவிடு. அவனுக்கு உதவி செய்கிறவன் நீ யல்ல, நான்” என்று அவர் சொன்னார்.
அதுமுதல் என் வக்கீலிடம் நான் ஒரு வார்த்தை பேசவில்லை. கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில் என் கட்சிக்கு சாதகமாகவே இல்லை. நான் அதை அவரிடம் ஒப்பித்துவிட்டேன். அவர் அதை மனப்பூர்வமாகக் கைக்கொண்டு எவ்விதம் சாதித்து முடித்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கடவுள் என்ன விதிக்கப் போகிறார் என்பது ஆதிமுதல் தெரியும். ஏனென்றால், அடிக்கடி என்னுள்ளிருந்து குரல் கிளம்பிற்று; “நான் நடத்துகிறேன். பயப்படாதே! நான் உன்னை எதற்காகச் சிறைக்குக் கொண்டு வந்தேனோ அந்த விஷயத்தில் ஈடுபடு. வெளியில் வந்தவுடன் ஞாபகமிருக்கட்டும்; பயப்படாதே, தயங்காதே! நான் தான் செய்கிறேன், வேறு யாரும் இல்லை என் பதை மறக்காதே. ஆகையால் என்ன தடங்கல்கள் ஏற்பட்டாலும், என்ன கஷ்டங்கள், அசந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும், எதுவும் அசாத்தியமில்லை, எதுவும் கஷ்டமில்லை. நான் இந்தத் தேசத்தில் இருக்கிறேன்; இதன் எழுச்சியில் இருக்கிறேன். நான் வாஸுதேவன், நான் நாராயணன். நான் சங்கற்பிப்பது நடந்தே தீரும். பிறர் எண்ணுவது நடவாது. நான் உற்பத்தி செய்யத் தீர்மானிப்பதை எந்த மனுஷ்ய யத்தனத்தாலும் தடுக்க முடியாது.”
அதற்குள் என்னை அவர் தனிமையிலிருந்து வெளியே கொண்டுவந்து, என்னுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு என்னையும் வைத்தார். என் தியாகத்தையும் தேச பக்தியையும் பற்றி நீங்கள் இன்று பலவாறு புகழ்ந்து பேசினீர்கள். நான் சிறையிலிருந்து வெளிவந்த நாள் முதல், இதைப்போலவே தான் எங்கும் காதில் படுகிறது; அது எனக்குச் சங்கடமாக இருக்கிறது; மனவேதனை கூட ஏற்படுகிறது. ஏனென்றால், என் குற்றங் குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். இதற்கு முன்னாலும் நான் அவற்றை அறியாமலில்லை. தனிமையில் அவை மூண்டெழுந்து என்னை எதிர்த்தன. அப்பொழுது அவற்றின் பலத்தை அறிந்தேன். நான் ஒரு தோஷப் பிண்டம் என்றும் பிற வலிமை ஏதாவது என்னுள் நுழைந்தால்தான் நான் பலம் கொள்வேன் என்பதையும் அறிந்தேன். அப்பொழுது நான் இந்த இளைஞர்களின் நடுவே பலரிடத்தில் பெரிய தைரியத்தையும் தியாகத்தையும் கண்டேன். அவர்களுடன் ஒத்துப்பார்த்தால் நான் ஒன்றுமில்லை.
ஓரிருவர் என்னைக் காட்டிலும் விசேஷமான உறுதியும் குணமும் பெற் றிருந்ததைக் கண்டேன். அதுமட்டுமல்ல. எனக்குச் சமானமில்லை என்று நான் கர்வம் கொண்டிருந்த புத்தி வலுவிலும் பலர் என்னை மீறி இருந்தார்கள். பகவான்; “இது புதுத் தலைமுறை. என் ஆக்ஞையின் பேரில் தலையெடுக்கும் மகத்தான புது தேசம். உன்னைக் காட்டிலும் இவர்கள் தீரர்கள். உனக்கென்ன கவலை ? நீ தூங்கினாலும், விலகினாலும் காரியம் நடக்கும். நீ நாளைக்கு வெளியே போய்விட்டாலும் உன் காரியத்தைத் தொடர்ந்து நடத்தும் வாலிபர்கள் இதோ இருக்கிறார்கள். நீ செய்ததைக் காட்டிலும் இன்னும் அதிகமான திறமையுடன் இவர்கள் அதைச் செய்யக்கூடியவர்கள். இந்தத் தேசத்திற்கு நீ என் உபதேசத்தைத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் இந்தத் தேசத்திற்கு மோட்ச சாதனமானது. அதைத் தெரிவிப்ப தற்காகத்தான் உனக்குக் கொஞ்சம் வலிமை அளித்திருக்கிறேன் !” என்று எனக்கு அடுத்தாற்போல் அருளினார்.
அப்பொழுது திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. என்னை ஒருகணத்தில் ஒருதனி அறைக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
அப்போது அங்கே எனக்கு என்னவெல்லாம் நேர்ந்தன என்பதை நான் இங்கே கூறவில்லை.
இதுமட்டும் சொல்லுகிறேன்: ஒவ்வொரு நாளும் மேன்மேலும், அவர் தம்முடைய அற்புதங்களைக் காண்பித்தார். ஹிந்து மதத்தின் உண்மையை அறியச்செய்தார். அதற்கு முன்னால் எனக்கு அநேக சந்தேகங்கள் இருந்தன. பிறர் பழக்க வழக்கங்களினிடையே, முற்றும் எதிரிடையான ஒரு சூழ்வில் இங்கிலாந்தில் நான் வளர்ந்தவன். ஹிந்துமதத்தில் பலவற்றை வெறும் கட்டுக்கதை என்று நான் ஒரு சமயம் எண்ணியதுண்டு; வெறும் கனவென் றும், ஏமாற்றமென்றும், மாயையென்றும் கருதியதுண்டு. ஆனால் இப்பொழுது நாள் ஆக ஆக ஹிந்துமதத்தின் உண்மைகளை என் மனத்தில் உணர்ந்தேன்; என் உள்ளத்தில் உணர்ந்தேன்; என் சரீரத்திலேயே உணர்ந்தேன். அவை எனக்குப் பிரத்யக்ஷ அனுபவங்களாகி விட்டன. எந்த விஞ்ஞான சாஸ்திரத்தாலும் தெளிவுறாத தத்துவங்கள் எனக்குத் துலங்கின.
நான் முதல் முதலில் அவரை அணுகின பொழுது, நான் ஒரு பக்தன் என்ற முறையில் நெருங்கவில்லை. ஞானி என்ற முறையிலுங் கூட நெருங்கவில்லை. ஸ்வதேசி இயக்கம் ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன், பொது வாழ்வில் நான் ஈடுபடுவதற்கு முன் பரோ டாவில் இருந்தபொழுது நான் அவரை அணுக ஆரம்பித்தேன்.
நான் அப்பொழுது பகவானை அறிய விரும்பின பொழுது எனக்கு அனுபவ பூர்வகமான நம்பிக்கை கிடையாது. நிரீசுவர வாதியாகவும், நம்பிக்கையற்றவனாகவும் இருந்தேன். கடவுள் இருக்கிறார் என்ற நிச்சய புத்தி அப்பொழுது எனக்குக் கிடையாது. அவர் இருப்பதை நான் உணரவில்லை. ஆனால் எதனாலோ நான் வேதங்களின் பிரமாணத்தில் ஈடுபட்டேன்; கீதையின் தத்துவத்தில் லயித்தேன்; ஹிந்து மதத்தின் உண்மையை அறிந்தேன்; யோக சாஸ்திரத்தில் ஏதோ மகத்தானஉண்மை இருக்க வேண்டுமென்று ஊகித்தேன்; வேதாந் தத்தில் வேர்கொண்ட மதத்தில் உண்மை யிருக்கவேண்டுமென்று நிச்சயித்தேன். ஆகையால் நான் யோகாப்பியாசம் செய்ய ஆரம்பிக்கும்பொழுது இந்தப் பாவனையுடனும் பிரார்த்தனையுடனும் ஆரம்பித்தேன்: “நீ இருப்பது வாஸ்தவமானால் உனக்கு என் உள்ளம் தெரியும். நான் முக்தியைப் பெற விரும்பவில்லை யென்று நீ அறிவாய் ; பிறர் கேட்கும் எதுவும் எனக்குத் தேவையில்லை. நான் வேண்டுவது ஒன்றுதான். இந்தத் தேசத்தை உத்தாரணம் செய்ய சக்தி வேண்டும். இந்த மக்களுக்கு என்னால் இயன்றதைச் செய்யவேண்டும்; அந்தப் பணியிலேயே நான் காலந்தள்ள வேண்டும்.”
யோகசித்தி பெற வெகுநாள் பாடுபட் டேன். பிறகு ஓரளவு வெற்றி பெற்றேன்; ஆனால் நான் விரும்பியது மட்டும் கிடைக்கவில்லை. அந்தச் சிறையின் தனிமையில், தனி அறையில், அதை மறுபடி வேண்டினேன்: “உன் ஆக்ஞை என்ன ? என்ன வேலை செய்வது? எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஓர் உத்தரவு கொடு” என்று வேண்டினேன். யோகமுறையில் எனக்கு இரண்டு கட்டளைகள் பிறந்தன. ஒன்று, “உனக்கு ஒரு காரியம் விதித்திருக்கிறேன்: இந்த நாட்டை நீ உயர்த்து; கூடிய சீக்கிரம் நீ விடுதலை அடைவாய். இந்தத் தடவை நீ தண்டனை பெறவேண்டுமென்றோ அல்லது இதரர் போல நாட்டிற்காகச் சிறையில் வாட வேண்டுமென்றோ நான் எண்ணவில்லை. நான் உன்னை வேலைக்குக் கூப்பிட்டு விட்டேன். நீ கேட்கும் உத்தரவு பிறந்துவிட்டது. வெளியே போய் உன் வேலையைச் செய் என்று உனக்கு ஆதேசம் தருகிறேன்.
இரண்டாவது: இந்த ஒரு வருஷத் தனிமையில் உனக்குச் சில நுட்பங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன ; உனக்குச் சில சந்தேகங்கள் இருந்தன, ஹிந்து மதத்தின் உண்மைகளைப் பற்றி. உலகத்திற்காக நான் இப்பொழுது ஹிந்து மதத்தை உத்தாரணம் செய்கிறேன். ரிஷிகள், ஸாதுக்கள், அவதாரங்கள் மூலமாக அதை நான் விருத்தி செய்து வரையறுத்து விட்டேன். இனி அது என் வேலையைத் தேசங்களிடையே செய்தாக வேண்டும். என் உபதேசத்தை வெளியிடுவதற் காகத்தான் நான் இப்பொழுது இந்த நாட்டை உயிர்ப்பிக்கிறேன். இதற்கு முன் நீ அறியாத சனதன தர்மம் இதுதான். இப்பொழுது அதை உனக்கு உபதேசம் செய்துவிட்டேன். உன் அவநம்பிக்கையும் சந்தேகமும் தீர்ந்து விட்டன ; ஏனெனில், வெளியிலும் உள்ளிலும் நான் உனக்கு அத்தாட்சிகள் காண்பித்திருக் கிறேன். சாரீரமாகவும் அந்தக்கரணத்திலும் உனக்கு ருஜுக்கள் தென்பட்டிருக் கின்றன. அவை உனக்குத் திருப்தி அளித்து விட்டன. நீ வெளியே போய் உன் நாட்டினருக்கு, சனாதன தர்மத்திற்காகத்தான் அவர்கள் புத்துயிர் பெறுகிறார்கள். அவர்களுக்காக அல்ல வென்பதைச் சொல்லவேண்டும். உலகத்திற்காக அவர்கள் உயிர்த்தெழுகிறார்கள். ஆகையால் ‘இந்தியா எழுச்சி அடைக’ என்றால் என்ன பொருள்? சனாதன தர்மம் எழுச்சி அடைக என்பதுதான் அர்த்தம். ‘இந்தியா பெருமை கொள்க’ என்றால், ‘சனாதன தர்மம் பெருமை கொள்க,’ என்றுதான் அர்த்தம். இந்தியா விரிவடைந்து பெருகவேண்டுமென்று சொல்லும்பொழுது சனாதன தர்மம் விரிவடைந்து பெருகவேண்டுமென்பதுதான் கருத்து. அந்தத் தர்மத்திற்காகவும் தர்மத்தாலுந்தான் இந்தியா வாழ்கிறது. அந்த மதத்தை மேன்மைப்படுத்துவதற்காக நாட்டை மேன்மைப்படுத்த வேண்டும். நான் எங்குமிருக்கிறேன், எல்லா மனிதர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் இருக்கிறேன், இந்த இயக்கத்திலும் இருக்கிறேன் என்பதை உனக்கு நிரூபித்திருக்கிறேன். நாட்டிற்குப் பாடு படுகிறவர்களிடம் மட்டும் நான் இல்லை; அவர்களுக்கு இடைஞ்சலாக அவர்கள் வழியை மறிப்பவர்களிடமும் நான் இருக்கிறேன். நான் எல்லோர் உள்ளிருந்தும் வேலை செய்கிறேன். மனிதர்கள் என்ன செய்தாலும், எண்ணினாலும், என் காரியத்திற்கு அவர்கள் ஒத்தாசைதான் செய்ய முடியும். அவர்களும் என் காரியத்தைச் செய்து உதவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் என் விரோதிகள் அல்ல; என் கருவிகள். நீ எங்கேபோகிறாய் என்று தெரியாமலேயே உன் காரியத்தில் முன்னேறுகிறாய். ஒரு காரியத்தைச் செய்ய எண்ணுகிறாய்; மற்றொன்றைச் செய்துமுடிக்கிறாய்.
ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறாய்; உன் முயற்சி நேர் எதிரிடையானதோ அல்லது மாறானதோ ஒரு பலனுக்கு உதவியாக இருக்கின்றன. ஜனங்களிடையே சக்தி இன்று ஆவிர்ப்பவித்து விட்டது. வெகு நாளாக நான் இதைத் தயார் செய்து வருகிறேன். இந்த எழுச்சிக்கு, இதுதான் தருணம். அதை நான் வெற்றியுடன் நிறைவேறச் செய்வேன்.”
நான் உங்களுக்குச் சொல்லவேண்டியது இதுதான். உங்கள் சங்கமே மதத்தைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. மதத்தின் பாதுகாப்பு, ஹிந்து மதம் உலகத்தின் முன் உயர்ந்தெழும்படி செய்வது- இதுதான் உங்கள்முன் இருக்கும் வேலை. ஆனால் ஹிந்து மதம் என்பது என்ன? சனாதனம் என்று நாம் கூறும் இந்தத் தர்மம் என்ன?
அதற்கு ஹிந்து மதம் என்று எதனால் பெயர் என்றால், ஹிந்து ஜாதிதான் அதைப் பாதுகாத்து வந்திருக்கிறது. மலையும் கடலும் சூழ்ந்த இந்தத் துவீபத்திலேதான் அது வளர்ந்தது; இந்தப் புராதன புண்ய பூமியில் ஆரிய ஜாதியினர் யுக யுகாந்தரமாக இதைக் காக்க வேண்டுமென்பது கடவுள் ஆக்ஞை. ஆனால் இது ஒரு நாட்டின் எல்லைக்குள் கட்டுப்படாதது. உலகத்தின் ஒருபாகத்திற்கு மட்டும் இது எந்நாளும் உரியது என்பதில்லை. ஹிந்து மதம் என்று நாம் சொல்வது உண்மையில் சனாதன மதம்; ஏனெனில், எல்லா மதங்களையும் தனக்குள் அடக்கிக்கொண்டு இருக்கும் விசுவமதம் அதுதான். ஒரு மதம் உலகளாவியது அன்று என்றால், அது சனாதனமாகாது. ஒரு குறுகிய மதம், ஒரு வகுப்பு மதம், ஒரு பிரத்தியேக மதம், ஒரு குறுகிய காலம், ஒரு குறித்த காரியம் ஆகும் வரையில்தான் நிலை நிற்க முடியும். நவீன விஞ்ஞான சாஸ்திரங்களின் முடிவுகளையும் வேதாந்தங்களின் முடிவுகளையும் முன் கூட்டி ஊகித்து அனுசரிக்கும் ஹிந்து மதந்தான் பௌதிக வாதத்தை வெல்ல முடியும்.
நமக்கும் பகவானுக்கும் இருக்கும் நெருக்கத்தை உணர்த்தி மனிதன் பகவானை அடைவதற்குச் சாத்தியமான எல்லா மார்க்கங்களையும் கூறுவது இதுதான். அவர் எங்கும் இருக்கிறார். அவர் ஆக்ஞையால் தான் நாம் உலவி உயிர் வாழ்கிறோம் என்று எல்லா மதங்களும் ஒப்புக்கொள்ளும். உண்மையை ஹிந்து மதந்தான் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வோர் எண்ணத்திலும் செய்கையிலும் வற்புறுத்துகிறது. இந்த உண்மையை உணர்வது மட்டுமன்றி, நம்புவது மன்றி, வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் அனுபவிக்கச் செய்வது இந்த மதந்தான். உலகம் என்ன என்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவது இதுதான். உலகம் வாஸ் தேவரின் லீலை. அந்த லீலையின் நுட்பமான நியதிகளிலும் உன்னதமான விதிகளிலும் நாம் எப்படிச் சரியாக நடந்து கொள்ளலாம் என்பதை ஹிந்து மதம் புகட்டுகிறது. வாழ்க்கையை ஒரு சின்னஞ்சிறிய அம்சத்திலும் மதத்திலிருந்து பிரிக்காமலிருப்பது இதுதான். அமிருதத்வம் என்ன என்பது இதில் தெரியும்; மரண பயத்தை முற்றிலும் போக்குவது இது தான்.
உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி எனக்கு உத்தரவாகியிருக்கும் வார்த்தை இது தான். நான் பேச எண்ணினது போய்விட்டது. உத்தரவுக்கு மேல் பேச எனக்கு அதிகாரமில்லை. என் வாயில் வரும்படி ஏற்பட்ட வார்த்தையைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்க முடியும். அதைச் சொல்லிவிட் டேன். முன்னொரு தடவை இதேமாதிரி ஆவேசத்துடன் பேசிய பொழுது இந்த இயக்கம் அரசியற் கிளர்ச்சி அல்ல என்றேன். தேசீயம் அரசியல் அல்ல என்றேன். அது ஒரு மதம், ஒரு கொள்கை என்றேன். அதைத் திரும்ப இன்று சொல்லுகிறேன்; வேறொரு விதமாக தேசீயம் மதமென்று நான் இப்பொழுது சொல்லவில்லை; அது சனாதன தர்மம் என்றேன். அதுதான் நமக்குத் தேசீயம் ; ஹிந்து ஜாதி சனாதன தர்மத்துடன் பிறந்தது; அத்துடன் வாழ்கிறது; வளர்கிறது. சனாதன தர்மம் க்ஷணித்தால் தேசம் க்ஷணிக்கிறது; சனாதன தர்மம் நசிக்கக் கூடுமானால் ஹிந்து ஜாதியும் நசிக்கும். சனாதன தர்மந் தான் தேசீயம். இதுதான் நான் உங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய உபதேசம்.



