ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்

பதினோராவது அத்தியாயம் : எழுத்துக்கள்

1893-ஆம் வருஷம் முதல் 1906-ஆம் வரையில் பரோடாவில் இருந்த பொழுதே ஸ்ரீ அரவிந்தர் காவியங்களும் கட்டுரைகளும் அதிகமாக எழுதினார்; அவை யெல்லாம் புதுச்சேரியிலிருந்த பொழுதுதான் புத்தக உருவில் வெளிவந்தன. அவற்றுடன் அரவிந்தர் உபநிஷத்துகளையும் கீதையையும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார்.

கீதையைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கீதைக்கு ஒரு புது வியாக்கியானமாக – பாஷ்யமாக – இருக்கின்றன. அந்த பாஷ்யம் அவருடைய யோக முறையை அனுசரித்தே இருக்கிறது. அவர் அதற்கு கீதையில் ஆதாரம் காட்டியே எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகள் அரவிந்த யோகத்தைப் பற்றிய சாஸ்திரம் என்று சொல்லிவிடலாம்.

பரிணாம வாதத்தைப் பற்றியும் ஜெர்மன் வேதாந்தியான நீட்ஷாவின் அதிமானுஷ தத்துவத்தைப் பற்றியும் லட்சியத்தைப் பற்றியும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் நுட்பமான ஆராய்ச்சியிலும் அழுத்தமான நடையிலும் சிறந்தவை.

யோகமும் அதன் நோக்கங்களும்’, ‘மாதா’, ‘யோக விளக்கம்’, ‘யோகத்தின் மூலாதாரங்கள்’, ‘சிருஷ்டி விசித்திரம்’, ‘கர்ம யோகியின் லட்சியம்’ முதலிய புத்தகங்கள் ஸ்ரீ அரவிந்தருடைய புதுச்சேரி அனுபவங்களிலிருந்து ஏற்பட்ட சிதர்மணிகள் ; அதிலும் ‘மாதா’ என்ற புத்தகத்தில் ஸ்ரீ அரவிந்தருடைய மணிவாக்கு உச்ச நிலையை அடைந்திருக்கிறது.

‘இந்திய மறு மலர்ச்சி’, ‘கலையின் தேசீய அம்சம்’, ‘இந்தியாவின் சிறப்பு’, ‘ரிஷி பங்கிம் சந்திரர்’, ‘காளிதாஸன்’, ‘தேசீயக் கல்வி திட்டம்’ என்று இலக்கியத்திலும் கலையிலும், தமது ஆழ்ந்த ஆராய்ச்சியின் பலனாக ஏற்பட்ட புதுப் புதுக் கருத்துக்களையும் எண்ணங்களையும் அழகும் வேகமும் பொருந்திய நடையில் எழுதியிருக்கிறார்.

அவருடைய ஆங்கிலத் தனிப் பாடல்களிலும் காவியங்களிலும் கற்பனை அழகும், சொல்லழகும் வேகமும் இசையும் பொங்கித் ததும்புகின்றன.

அவருடைய எல்லா எழுத்துக்களுக்கும் பொதுவான அம்சம், முதலாவது உணர்ச்சியால் ஏற்படும் நடைவேகமும், கருத்து வேகமும் ஆகும். இரண்டாவது, நடையிலிருக்கும் தெளிவும் தேர்ச்சியும்; மூன்றாவது, (அதுதான் முக்கியமானது) அதில் தவறாமல் இடையறாது தென்படும் கவிதைப் பொருள் ஆகும். ஆழ்ந்த வேதாந்த நுட்பங்களையும் யோக முறைகளையும் விளக்கும் போது கூட ஸ்ரீ அரவிந்தர் கவியாக இருக்கிறார். கவிமுற்றித்தானே யோகி?

ஸ்ரீ அரவிந்தர் கவியாக இருந்து யோகியாகி இருக்கிறார் என்பது அவருடைய எழுத்துக்களைக் கால வரிசைக் கிரமமாக ஆராய்ந்தால் நன்றாய் விளங்கும்; அதாவது, கவியின் ஒரு முதிர்வுபெற்ற மன நிலையே யோகியின் மனநிலை என்பது தெளிவுபடும். ‘அமிருதம் இஹ பவதி’ என்ற மகத்தான உண்மையைக் கவியின் மனோபாவத்தைக் கொண்டு ஊகித்தார்; யோகியின் வாழ்க்கை நிலையில் அதை அனுபவமாகக் கண்டார். இதைத்தான் ஆங்கிலகவி கீட்ஸ் ‘மனோபாவம் எதை அழகென்று பற்றுகிறதோ அதுதான் உண்மை’ என்றார். (What the Imagination seizes as Beauty must be Truth.)

ஸ்ரீ அரவிந்தருடைய எழுத்துக்கள் அவர் நாட்டிற்கு அளித்த பெரும் பொக்கிஷம். அனுபவத்தை முற்றிலும் எழுத்தில் கொண்டுவர ஒருகாலும் எந்தத் தலைசிறந்த எழுத்தாளராலும் முடியாது என்றாலும், எழுத்து அனுபவத்தின் அடையாளமாக இருக்கிறது; வார்த்தை (வாக்கு) பொருளின் (அர்த்தத்தின்) அடையாளமாக இருப்பதுபோல. அந்த எழுத்திலிருந்துதான் அவரவர்கள் புலனுக்கெட்டியபடி பிறர், ஆசிரியனின் அனுபவத்தைக் கிரகிக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட எழுத்தாளரின் மனப்போக்கில் ஈடுபட்டவன் தான் அந்த அனுபவத்தைச் சுலபமாகப் பெறலாம்; அதற்காகத் தான் நம் பெரியோர்கள் சில உண்மைகள் அறிய மாணவன் ‘அதிகாரி’ ஆகவேண்டு மென்று கருதினார்கள்; “அதிகாரி” ஆவது என்பது எழுத்தின் பொருளை அறிவதற்கேற்ற திறமையை, மனப்பக்குவத்தைப் பெறுவதுதான்.

ஸ்ரீ அரவிந்த யோகியின் எழுத்தையோ கருத்தையோ அல்லது வாழ்க்கையையோ, அனுபவத்தையோ, யோக முறையையோ அறிய நான் சரியான ‘அதிகாரி’ அல்ல என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொண்டு விட்டேன். ஆனாலும், ஸ்ரீ அரவிந்தர் மகா சக்தியின் சந்நிதானத்தில் பூஜாரியாக நிற்கிறார். அவர் மூலம் எனக்கு அவள் தரிசனம் கிடைக்கும். இருட்டில் இடறி விழுந்து கொண்டு கர்ப்ப கிருகத்திற்கருகே போய்விட்டால் அவர் திரையை யகற்றித் தீபமேற்றி உண்மை உருவை எனக்குக் காட்டுவார் என்று துணிந்து விட்டேன். யோகாம்பிகையின் சந்நிதியில் பிரசாதம் பெற்றுவிட்டால் பிறகு ஆத்ம நாதனின் தரிசனம் நிச்சயம்.

இந்தச் சிறு புத்தகத்தில் நான் அவருடைய வாழ்க்கைப் போக்கைச் சுருக்கமாக, அதன் முக்கியமான திருப்பங்களில் மட்டும், சற்று விஸ்தரித்து எழுதுவதில், அவருடைய அனுபவங்களை ஒருவாறு சுட்டிக் காட்டியிருக் கிறேன். அவருடைய எழுத்துக்கள் எல்லாம் திரும்பித் திரும்பி இந்த அனுபவங்களின் வெளி விஸ்தரிப்புதான். அவற்றில் ஒரு சிலவே தமிழில் கிடைக்கின்றன. அரவிந்த ஆசிரம சாதகரான ஸ்ரீ சுத்தானந்த பாரதி யார் சிலவற்றை மொழி பெயர்த்திருக்கிறார்; அரவிந்தரைப் பற்றியும் அரவிந்த யோகத்தைப் பற்றியும் மிகவும் உபயோகமான புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீ அரவிந்தருடைய உத்தரபாரப் பிரசங்கத்தில் அவருடைய சித்தாந்தத்தின் மூலாதாரமான அம்சங்கள் அருள் வாக்காக விமரிசனம் பெற்றிருக்கின்றன; ஆகையால் அதையே முழுதும் மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டேன். அந்தப் பிரசங்கத்தில் அவர் விவரிக் கும் விசுவரூப தரிசனந்தான் அவர் யோகியாக ஸித்தி பெற்றுவிட்டதற்கு அடையாளம். எல்லா மகா யோகிகளுக்கும் அப்பேர்ப்பட்ட காட்சிகள் (Visions) ஏற்பட்டிருக்கின்றன. கவியனுபவமும் யோக அனுபவமும் ஒன்றாகக் கலக்கும் அமுத எல்லைக்கோடு அந்த மகத்தான பிரமேயம். அப்பொழுது காவியம் வேதாந்தமாகிறது; வேதாந்தம் காவியமாகிறது. அந்தப் பரவச நிலையை ஒரு மின்னல் காட்சியைப் போலக் கண்டு நான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். அச்சிறு ஒளியின் உதவி கொண்டு அரவிந்த யோகம் என்ன என்பதை நான் வெறும் கவியுள்ளத்துடன் கிரகித்த அளவு விவரிக்க முயலுகிறேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !