ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்

இரண்டாம் அத்தியாயம் : விதை நிலம்

ஸ்ரீ அரவிந்தர் 1872-ஆம் வருஷம் ஆகஸ்டுமாதம் 15-ஆம் தேதி கல்கத்தா நகரத்தில் பிறந்தார்.

அவர் பிறந்த பொழுது வங்காளத்தில் புத்துயிரின் விதை வெடித்து இலை விட்டுக் கொண்டிருந்தது; ஜோதிஷ ரீதியாக ஒருவன் எப்படி ஒரு குறித்த நேரத்தில் பிறந்தால் குறித்த கிரகங்களின் பலத்தைப் பெற்று, வாழ்க்கையிலும் அவைகளால் பாதிக்கப்படுகிறான் என்கிறார்களோ, அதே மாதிரி அந்தப் புது வாழ்க்கையின் தலைக்காலத்தில், அதுவும் அது முதல் முதல் பிறந்த இடமாகிய வங்காளத்தில் தோன்றிய காரணத்தால், ஸ்ரீ அரவிந்தர் உள்வாங்கிய முதல் மூச்சிலும், உட் கொண்ட முதல் ஆகாரத்திலும் அதன் உணர்வு உள்ளே சென்றிருக்க வேண்டும்.

இந்தப் ‘புதுப் பிறவி’ வங்காளத்தில் முதலில் முளை கண்டதன் காரணம், வங்காளம் ஆங்கில நாகரிகத்தின் அலைப்பெருக்கில் முதலில் ஈடுபட்டதுதான். அதற்குப் பல சரித்திர சம்பந்தமான காரணங்கள் இருக் கின்றன. அவற்றை இங்கு விஸ்தரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை. ஆங்கில சம்பந்தம், முதல் முதலில் வங்காளத்திற்குத்தான் அதிகமாக ஏற்பட்டது. இந்தியாவின் மற்றப் பாகங்களுக்குப் பிறகுதான் அது விஸ்தார மாகப் பரவிற்று.

ஆங்கில நாகரிகத்தின் சேர்க்கை இந்திய சமூக வாழ்க்கையை இரு வகைகளில் பாதித்தது. அரசாட்சி செலுத்தினவர்களான ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளை இந்தியர் பின்பற்றியதால் ஏற்பட்ட மாறுதல்கள் ஓர் அம்சம்; ஆங்கிலக் கல்வியின் தூண்டுதலால் ஏற்பட்ட கலையுணர்ச்சி, சரித்திர உணர்ச்சி, தேசீய உணர்ச்சி – இவை மற்றோர் அம்சம். இம்மாறுதல்கள் இந்திய நாகரிகத்தை ஒரு விதத்தில் குலைத்தன ; மற்றொரு விதத்தில் அதன் உயரிய அம்சங்களுக்குப் புத்துயிர் அளித்தன. மன்மதன் சிவபிரானுடைய கண்நெருப்பால் எரிந்தபோது ஏற்பட்ட ஸம்ஹாரத்திலிருந்து மன்மதனுக்குத் தூய தான புனர்ஜன்மம் ஏற்பட்டது போல, இந்த ஸம்ஹாரத்திலிருந்து ஒரு சிருஷ்டி ஏற்பட்டது. பழைய மல்லிகைக் கொடியை லேசாகக் கிளறி, கொஞ்சமாக அடியில் அனல் இட்டால் மறுபடியும் நன்றாகத் தளிர்த்துப் பூக்கும் என்பார்களே, அதுபோல இந்த ஆங்கில சம்பந்தம் இந்திய மறு மலர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது.

இவ்விரு மாறுதல்களின் பலனாகத் தோன்றிய புது சமூகத்தில் ஒரு புரட்சி மனப் பான்மையும் உண்டாயிற்று. ஆனால் இந்த மாறுதல்களும் புரட்சியும் மேலெழுந்த அலைகளைப் போன்று ஒரு சிறு பான்மையான சமூகப் பகுதியில்தான் ஏற்பட்டன என்பதைக் குறிப்பிடவேண்டியது அவசியம். நாட்டின் பெருவாரியான மக்கள் வாழும் லக்ஷக் கணக்கான கிராமங்கள் அடிநீர் போல அப்படியே கிடந்தன.

ஆங்கில நாகரிகம், ஆங்கில அரசாட்சியைப் போலவே, சமூகத்தின் மீது கண்காணாத பல பலத்த தளைகளை இட்டுவிட்டது என்பதைப் புத்துணர்வு பெற்ற பல புத்திமான்கள் உடனே கண்டார்கள். ஆங்கில அரசாட்சியின் கீழ் நாம் அனுபவிக்கும் அடிமைத்தனத்தைக் காட்டிலும் ஆங்கில நாகரிகத்தின் கீழ் நாம் அடிமைப்பட்டுப் போய்விட்ட கொடுமையைக் கண்டு சில தீர புருஷர்கள் மனக் கொதிப்புக் கொண்டார்கள். அரசியலிற் போல, ஏனைத் துறைகளிலும் அதை எதிர்த்துப் போராட முன்வந்தார்கள். அந்த மோகன அஸ்திரம் போன்ற மேல் நாட்டு மயக்கம் மாறுவதற்கு ஒரு மாற்றாக நமது நாகரிகத்தின் நித்திய அம்சங்களை ஆராய்ந்து புத்துயிர் ஏற்றிப் பரவச் செய்ய வேண்டுமென்று மும்மரித்து வேலை செய்தார்கள். நமது நாகரிகத்தின் அழுகிப்போன சில பாகங்களை அவர்கள் நீக்க வேண்டுமென்று பகிரங்கமாகச் சொல்லவும் தயங்கவில்லை. முதலில், முகம்மதிய ஆதிக்கத்தின் கீழும், பிறகு பலத்து வந்த ஆங்கில ஆதிக்கத்தின் கீழும் இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள் ஆரிய சமாஜம் சிதைவு கொள்வதற்குப் பெரிய காரணமாக ஏற்பட்டதைக் கண்டு ஒரு சிலர் மதப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்; சிலர் சமூக சீர்திருத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள்; சிலர் கல்வி வளர்ச்சியில் ஈடுபட்டார்கள்; மற்றும் சிலர், கலை உற்பத்தியில் ஈடுபட்டார்கள்; இந்தக் காரியங்களெல்லாம் எளிதில் ஈடேறுவதற்குச் சாதனமாக வேண்டிய அரசியல் சுதந்திரத் திற்குப் பாடுபட மற்றும் பலர் தீவிரமாக முனைந்தார்கள்.

இப்படியாக, பாரத சக்தி, நவஜீவன் இயக்கத்தில், பல முகங்கள் கொண்டு வீரா வேசத்துடன் எழுந்து நின்றாள்.

அரசியல், மதம், சமூகம், கலை, கல்வி, பொருளாதாரம் முதலிய ஜீவாதாரமான துறைகளில் தேசீயத்தை ஸ்தாபித்து, பாரத சக்தியை மறுபடியும் இந்நாட்டில் கொலு வீற்றிருக்கச் செய்யவேண்டுமென்று அவளுடைய தவப் புதல்வர்கள் பலர், கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பினார்கள். அந்தப் புனிதமான பெயர்களை ஒரு தரம் சொன்னாலே போதும். எந்த நாட்டில், எந்தத் தருணத்தில், ஒரே காலத்தில், இவ்வளவு முன்னணியில் நிற்கும் தீரர்கள் தோன்றியிருக்கிறார்கள்?

அரசியலில், தாதாபாய் நௌரோஜி, ஸுரேந்திரநாத் பானர்ஜி, விபின சந்திர பாலர், திலகர் ; மத விஷயத்தில் ராம மோகன ராய், கேசவ சந்திர ஸேனர், தயானந்த ஸரஸ்வதி ; சமூக விஷயத்தில் தேவேந்திர நாத டாகுர் முதலியவர்கள்; கலையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திர நாதர் முதலியவர்கள்; கல்வித் துறையில் ஈசுவர சந்திரர் முதலியவர்கள்; ஆரிய சமாஜம் பிரம்ம சமாஜம் என்ற இரண்டு ஹிந்து மத முற்போக்கு ஸ்தாபனங்கள் தீவிரமாக மதப் பிரசாரத்தில் வேலை செய்தன. அவைகளுக்கு மேற்போய், சிம்ஹநாதம் போலக் கிளம்பின வேதாந்த கர்ஜனை, ஸ்ரீ ராமகிருஷ்ண முனியின் சிஷ்யர் சுவாமி விவேகானந்தர் மூலம் கிளம்பிற்று.

நெருப்பை மூட்டுவதற்கு, வங்காளம் தீக்குச்சி போல இருந்ததேயொழிய; மூண்ட தீ மறு நிமிஷத்தில் நாடு முழுவதும் பரவிவிட்டது. காற்றுப் பட்ட இடத்திலெல்லாம், காட்டுத் தீப் போலத் தேசீயம் பரவிற்று. எங்கும் கலைஞர்களும், கர்ம வீரர்களும் வீரபத்திரனுடைய ஜடையிலிருந்து சிவகணங்கள் தோன்றினது போலத் தோன்றினார்கள். புதிய கவிகள், புதிய ஓவியர்கள், புதிய இலக்கிய விமர்சகர் கள் – பாரதி, வங்காள ஓவியக்காரர்கள், ஆனந்த குமாரஸ்வாமி, வ.வே.சு. ஐயர் எல்லோரும், இந்த மகா முன்னேற்றத்தின் உற்பத்திகள்.

இந்தப் புரட்சி உருவடைந்தது 1908-ஆம் வருஷம் என்று நிதானமாகக் கொள்ளலாம். 1857- ஆம் வருஷம் கலகம் நடந்தது. சரியாக அதுமுதல் அரை நூற்றாண்டு காலத்திற்குள், இவ்வளவு மகத்தான ஆரம்ப அதிர்ச்சிகள் உண்டாயின. இந்தப் புது யுகப் பிறப்பின் பிரளய காலத்தின் நடுவில், 1872-ஆம் வருஷத்தில், ஸ்ரீ அரவிந்தர் பிறந்தார். ஆனால் அதன் நடுவில் அவர் வளரவில்லை. அந்தச் சூழ்விலிருந்து ஒரு பூவைப் போல அவரைப் பறித்து எடுத்துச் சீமைக்கு அனுப்பிவிட்டார் அவர் தந்தையார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !