ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்

மூன்றாம் அத்தியாயம் : விளையும் பயிர்

ஸ்ரீ அரவிந்தருடைய தந்தையார், டாக்டர் கிருஷ்ண தனகோஷ், இந்திய வைத்திய இலாகாப் பட்டம் பெற்ற ஆங்கில வைத்திய நிபுணர்; நவ நாகரிக மோகம் கொண்டவர்; ஆங்கில நடையுடை பாவனைகளில் அபாரமான பற்றுக் கொண்டவர்.

ஆகையால் அவர் அரவிந்தருக்கு ஏழாவது வயது நடந்து கொண்டிருக்கும் பொழுதே படிப்பிற்காக அவரைச் சீமைக்கு அனுப்பி விட்டார். அரவிந்தருடைய இரண்டு தமையன்மார்களும் கூடச் சென்றார்கள்.

அங்கே, மாஞ்செஸ்டர் என்னும் நகரத்தில் அரவிந்தர் ஓர் இங்கிலீஷ்க் குடும்பத்தில் வளர்ந்தார் என்றால், அவருடைய தகப்பனார் எவ்விதமாகக் குழந்தை முன் வரவேண்டும் என்று எண்ணினார் என்பது விளங்குகிறது.

அதற்கு முன் அவருடைய வாழ்க்கையிலும் அந்த விதமாக 1885-ஆம் வருஷம் வரையில், அதாவது அவருடைய பதினான்காவது வயது வரையில், ஆங்கில குடும்பத்தின் பழக்க வழக்கங்களின் நடுவில், ஆங்கில உடை உடுத்து, ஆங்கில உணவு உண்டு, ஆங்கிலம் பேசி, ஆங்கிலக் கல்வி பெற்று வந்தார் அரவிந்தர். இன்னும் ஒரு விசேஷம்: அந்தக் குடும்பத்துத் தலைவர் ஒரு கிறிஸ்துவப் பாதிரி !

1885-ஆம் வருஷம் லண்டனுக்குச் சென்று, அங்கே ஸெயின்ட் பால்ஸ் கலாசாலையில் மாணாக்கனாகச் சேர்ந்தார். பிறகு 1890-ஆம் வருஷம் கேம்பிரிட்ஜில் கிங்க்ஸ் காலேஜில் சேர்ந்தார். அங்கே இரண்டு வருஷங்கள் இருந்தார். 1890-ஆம் வருஷத்திலேயே இந்திய சிவில் சர்விஸ் பரிட்சையில் தேறினார். ஆனால் இரண்டு வருஷப் படிப்பின் இறுதியில் அதற்குத் தேவையான குதிரையேற்றப் பரீட்சைக்குப் போகாமல் நின்றுவிட்டார். ஆகையால் ஐ. ஸி. எஸ் வேலைக்குத் தகுதியுடையவர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப் படவில்லை. இது நடந்தது 1893- ஆம் வருஷம். அப்பொழுது ஸ்ரீ அரவிந்தருக்கு வயது இருபது.

ஸ்ரீ அரவிந்தருடைய பிற்காலத்து வாழ்க்கையின் போக்கைப் பார்த்தால் அவருடைய இருபதாவது வயதில், வேண்டுமென்றே அவர் ஐ. ஸி. எஸ்-ஸில் சேராமல் நின்றுவிட்டது ஒரு தெய்வாதீனமான நிகழ்ச்சி போலத் தெரிகிறது.

பரீட்சையில் தேறியும் கூட அவர் ஏதோவொரு காரணத்தால் குதிரைச் சவாரிப் பரீட்சைக்குப் போகாமல் நின்றுவிட்டது அவருடைய மனப்பான்மை அப்பொழுதே எப்படியிருந்தது என்பதைத் தெளிவாக எடுத் துக் காட்டுகிறது. “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பதற்கு இது ஓர் அத்தாட்சி என்பதற்கு என்ன சந்தேகம்? பிறந்த தாய் நாட்டின் வாசனையே ஏழாவது வயதிலிருந்து கிடையாது; யாவும் ஆங்கில மயமாக வளர்ந்த இருபது வயது வாலிபனின் உள்ளத்தில், அப்பொழுதே, அப்பேர்ப்பட்ட சூழலில், விரக்தி ஏற்படக் காரணம் என்ன ? பதவி,பொருள், அதிகாரம் – இவை மண்டின அந்த ஐ.ஸி.எஸ் மோகினியின் அழைப்பை அவர் நிராகரித்தது எதனால்?

அந்த அழைப்பு அவர் காதில் ஏறவில்லை ; அவருடைய அரவிந்த உள்ளம் மலருவதற்குக் காரணமாகப் போகும் ஒளி, வேறொரு தேஜோமயமான சூரியப் பிரகாசமாக இருக்கும் பொழுது, ஐ. ஸி. எஸ்-ஸின் சேர்க்கையாகிய சந்திரவொளி எப்படி அதை அலரச் செய்ய முடியும்? அவருடைய மனத்தில் கிழக்கு வெளுத்து அந்த ஒளி உதயமாகும் முன்பே, அவருக்கு அது அறிமுகமாகி விட் டது. அவருடைய ஸித்த வாழ்விற்கு இருபதாவது வயதிலேயே அஸ்திவாரம் போட்டாகி விட்டதென்று சொல்லிவிடலாம்.

ஒரு வேளை அப்பொழுது அவர் மனத்தில் அது அவ்வளவு விளக்கமாகத் தென்படாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அவருடைய உள்ளச் செடி, தான் வளர்ந்த அந்த மோக மரங்களடர்ந்த தோட்டத்தில், உயர்ந்து வளர்ந்து, வளைந்து, பெரிய மரங்களின் இலைகளுடைய இடைவெளிகளில் வந்த சூரிய வெளிச்சத்தைத் தேடி ஓங்க ஆரம்பித்துவிட்டது. சூரிய வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சம் அதன்மேலே விழுந்த இடத்தில் அந்த வளர்ச்சி நன்றாக இருந்தது நமக்கும் தென்படுகிறது.

இந்த ஒளி வேட்கையின் போக்கை- இந்த ஹிருதய யாத்திரையின் மார்க்கத்தை – பின்வரும் பக்கங்களில் பின்பற்ற முயற்சி செய்வோம்.

மிதமிஞ்சிய சேற்றைக் கூடப் பிளந்து கொண்டு தாமரை (அரவிந்தம்) தலையெடுத்து, நீர் மட்டத்தில் மொட்டாக நிற்பதை இந்த நிலைமையில் காணுகிறோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !