

கயத்தாற்றில் கட்டபொம்மன்
ம. பொ. சிவஞானம்
பாஞ்சாலங்குறிச்சியின் வீரப் புரட்சியை விளக்கும் வீரபாண்டியக் கட்டபொம்மன் என்ற எமது வெளியீட்டுக்கு, தமிழகம் எதிர்பாராத அளவுக்கு அதிக ஆதரவு தந்துவருகிறது. எனினும், நூல் பெரிதாயிருக்கிற காரணத்தால் விலை அதிகமாக இருப்பதால், சாதாரண ஏழை மக்கள் வாங்கிப் படிப்பதற்காக பாஞ்சைப் புரட்சியைச் சுருக்கமாகக் கூறும் சிறு நூலொன்றை குறைந்த விலையில் வெளியிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தினர். எமக்கும் அது சரியெனத் தோன்றியதால், இச்சிறு நூலை அடக்க விலைக்கு வெளியிட முன் வந்தோம்.
கட்டபொம்மன் மாண்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் அப்பெருமகன் தூக்கில் மாண்ட நாளை, திருநாளாகக் கொண்டாடினர் தமிழ் மக்கள். அந் நாளைக் கொண்டாடுமாறு திரு. ம. பொ. சி. விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் தந்த மதிப்பு மகிழ்ச்சிக்குரியது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தமிழரசுக் கழகத்தார் அக்டோபர் 16ல் வீரபாண்டியன் நாளை விமரிசையாகக் கொண்டாடினர்.
வீரபரண்டியன் தூக்கில் மாண்ட கயத்தாற்றிலும் அவ்வூர் காங்கிரஸ் கமிட்டியார் விழாக் கொண்டாடினர். அச்சமயம் கயத்தாற்றிலுள்ள வீரபாண்டியன் சமாதி முன்பு தேசீயக் கொடியை உயர்த்தி வைத்து ம.பொ.சி. செய்த சொற்பொழிவே இச்சிறு நூல்.
சாத்தூர் மத்திய உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், வீரபாண்டியன் வரலாற்றை வில்லுப் பாட்டில் பாடி வருகின்றனர். அன்பர் ரா. வேங்கடாசலம் இயற்றிய ‘முதல் முழக்கம்’ என்ற நாடகத்தை டி. கே. எஸ். சகோதரர்கள் சென்னையில் நடத்தி வருகின்றனர்.
இவ்வளவுக்கும், அன்பர் ம. பொ. சி அவர்கள் எழுதிய “வீரபாண்டியக் கட்ட பொம்மன்” என்ற எமது முதல் வெளியீடே தூண்டு கோலாகவும் துணையாகவும் இருந்த தென்பது மகிழ்தற்குரியது.
வீரபாண்டியனின் பெருமையையும், அவன் நிகழ்த்திய புரட்சியின் சிறப்பையும் தமது சொற்பொழிவில் விவரித்துள்ளார் ம.பொ.சி. தமது சொற்பொழிவை வெளியிடுவதற்கு அனுமதி தந்த ம.பொ.சி. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
இன்பநிலையம்.



