உடல் நூல் 
கா. சுப்பிரமணிய பிள்ளை

உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை

முன்னுரை

நாம் இவ்வுலகில் நன்கு வாழ்வதற்கு நம்முடைய உடம்பானது நோயற்ற சுகநிலையிலிருக்க வேண்டியது அவசியம். நமக்கு எப்படி பசி, தாகம், நோய் முதலியன உண்டாகின்றன? நமக்கு எதனால் சுத்தமான காற்று, நீர், உணவு முதலியன இன்றியமையா தனவாயிருக்கின்றன? பொருள்களையறிந்து அநுபவிப்பதற்கு ஐம் பொறிகளும் பிற உடற் கருவிகளும் எப்படிப் பயன்படுகின்றன? என்னும் இவைபோன்ற கேள்விகளுக்குத் தக்க விடையளிக்க வேண்டுமானால் நமது உடம்பின் இயற்கை யமைப்பையும் உடம்பிலுள்ள தாதுக்கள், கருவிகள் என்பவற்றின் தன்மையையும் தொழிலையும் கூறும் நூலினை நாம் கற்றுத் தெரிதல் வேண்டும். உடலின் பல பகுதிகளின் அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் (Anatomy) உடற்கூற்று நூலெனப் படும். அவற்றின் செயலைப்பற்றிக் கூறும் நூல் (Physiology) உடற்செயல் நூலெனப்படும். இரண்டும் உடல் நூலென்பதிலடங்கும்.

நம்முடைய உடலானது எலும்பு, தசை, நரம்பு முதலிய தாதுக்களாலாயது. எலும்புகளும் ஒன்றையொன்று சேர்க்கும் கூட்டுத்தசை களும் உடம்பின் பல பகுதிகளுக்கும் ஆதாரமாய் உடம்பின் அடிச் சட்டம் போன்றுள்ளன. நெஞ்சப்பை, மூச்சுப்பை, மூளை, ஈரல், சிறு நீர்க் காய் முதலிய உடற்கருவிகளின் அமைப்புக்குப் பிறதாதுக்கள் பயன்படுவன. ஒவ்வொரு கருவிக் கும் தனித்தனி தொழிலுண்டு.

ஒரு நீர்த்துளியைப் பூதக்கண்ணாடி வழியாய்ப் பார்க்கும் பொழுது அதில் காணப்படும் மிகச் சிறிய உயிர்களின் உடலொன்றினை நுணுகி நோக்கின் அது குழைவான கண்ணாடி போன்ற சத்தின் நுண்ணிய பிண்டமாகக் காணப்படும். அதனை அறிவியல் நூலார் முதற் சத்தென்பர். (Proto-Plasm ) இம் முதற் சத்தானது மிக நுட்பமான உணவுத் துகள்களையுடையது. அதன் ஒரு பகுதியில் வித்துப் போன்ற ஓரிடம் காணப்படும். அதுவே அதன் உயிர்ப்பகுதி. வித்தோடு கூடிய முதற் சத்தினை உயிர்க் கருவென்னலாம். அது ஒரு சிற்றறை போன்றிருத்தலால் அதனை உயிர்வாழ் சிற்றறை (Living cell) யெனவும் சிற்றணுக் கூடெனவும் நூலோர் கூறுவர். நீர்த்துளியிலுள்ள சிறு புழுக்கூடு எவ்வளவு நுண்ணியதா யிருக்கிற தென்றால் அதனை நானூறு ஐந்நூறு மடங்கு பூதக்கண்ணாடியால் பெரிதாக்கினாலொழிய அது நமது கண்ணால் பார்க்கமுடியாதபடி அவ்வளவு நுண்ணியது. அதாவது குண்டூசியின் அளவை வண்டிச்சக்கரம் அளவிற்குப் பெரிதாக்கினாற் போலாகும். நீர்த்துளியிலுள்ள புழுக்கள் பல வற்றின் உடம்புகள் ஒரு சிற்றறையேயுடையன. அவ்வுயிர்களின் உடம்பு அடிக்கடி மாறுவதால் அவற்றைத் திரிபுயிர் (Amoeba) என்பர்.

ஒரு திரிபுயிரின் வாழ்க்கையைப் பூதக்கண்ணாடி மூலமாக நன்கு பார்த்தறியலாம். திரிபுயிரானது எப்போதும் இங்குமங்கும் அசைந்துகொண்டிருக்கும். தன் உடற் பிண்டத்தினின்று சிறு சிறு கால்களை நீட்டிக்கொண்டு அங்குமிங்கும் அசைந்து கொண்டிருக்கும், ஏதாவது ஒரு உண வுத்துகள் கிடைத்தால் அதன் உடற்பிண்டம் அதனைச் சுற்றி வளைந்து கொள்ளும். உணவு அதன் எந்தப்பக்கத்தின் வழியாகவும் உட்கொள்ளப்படும். அதற்கு வாய் என்பதில்லை. அதனுட்பட்ட உணவுத்துகள் விரைவிற் காணாமற் போய்விடும். அது கரைந்து போம் அல்லது செறிந்து அதன் உடற்சத்திற் கலந்துவிடும் செறிக்க முடியாத நச்சுப் பதார்த்தங்களை முதற் பிண்டமானது வளைவதில்லை. அவற்றைக் கண்டவுடன் சுருங்கி விலகிவிடும். திரிபுயிரின் உடத் பகுதியில் ஒரு தெளிவான நீர் நிறைந்த வட்ட மொன்று காணப்படும். அவ்வட்டம் படிப்பயாக வளர்ந்து திடீரென்று சுருங்கி மறைந்த விடும். அதற்குக் காரணம் திரிபுயிரான தனக்கு வேண்டிய தண்ணீரைத் தன்னுள் இழுத்துத் தண்ணீரிலுள்ள உயிர்க்காற்றையும் உப்புச்சரக்குகளையும் கவர்ந்து கொண்டு சுருங்கும் போது தண்ணீரோடு தன் உடற்கழிவுகளை வெளியே தள்ளி விடுதலேயாகும். திரிபுயிரானது இப்படியே ஓரளவிற்கு வளர்ந்தபின் இரண்டாய்ப் பிரிகின்றது. பிரிந்த இரண்டு உயிர்களும் இவ்வாறே வளர்ந்து பிரிந்து பெருகுகின்றன. அழுக்கு நீர்க்குட்டத்திலுள்ள ஒரு திரிபுப்புழு ஒன்றிரண்டு நாளில் நூறாயிரம் புழுக்களாகப் பல்கி விடுகின்றன.

எல்லா உயிரினுடம்புகளும் மிகநுண்ணிய சிற்றறை அல்லது அணுக்கூடுகளால் (Cells) ஆக்கப்பட்டுள்ளன. அவையொவ்வொன்றும் ஒரு வித்துடன் கூடிய முதற்பிண்டமாக இருக்கின்றது. வித்துச்சத்தே கூட்டின் முக்கிய பகுதியாகும். அதை எடுத்துவிட்டால் கூடானது வளர்ச்சியும் பெருக்கமும் அடைவதில்லை. மனிதனுடைய உடம்பு இத்தகைய அளவிறந்த அணுக்கூடுகளால் ஆக்கப்பட்டுள்ளது. இவைகளே பல்வகைத் தாதுக்களாகவும் அவற்றாலாகிய உடற்கருவிகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவியிலும் உள்ள அணுக்கூடுகள் அமைப்பிலும் இயற்கையிலும் வேறுபடுவன. அவ்வேற்றுமை காரணமாகவே அவ்வவற்றிற் குரிய செயல்களும் வேறாகின்றன.சிலவகைச் சிறுகூடுகள் எலும்பாக உருவெடுத்து உடலைத் தாங்குகின்றன. வேறு பல அணுக்கூட்டின் தொகுதிகள் தசையாய்ப் பரிணமித்து உடம்பை அசைத்தற்கு உதவுகின்றன. மற்றும் பல சிறு கூட்டின் தொகுதிகள் நரம்பாகவும் அறிகருவிகளாகவும் உணர்கருவிகளாயும் வடிவெடுத்து உடலியங்கும் முறையை ஒழுங்குபடுத்துகின்றன. இன்னும் பலகூடுகள் உணவுக் கால்வாயாகச் செறிந்து நாம் உண்பதற்கும் பருகுவதற்கும் துணைசெய்கின்றன. அவ்வாறே சிற்றணுக்கூட்டின் தொகுதிகள் பல உதரக்குடல்களின் தொகுப்பாக ஒழுங்குபட்டு நிற்ப அவற்றிலுள்ள உதிரமானது செறித்த உணவை உடம்பின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு போகின்றன. உடம்பிலுள்ள இத்தகைய சிறு கூடுகள் யாவற்றிற்கும் காற்றிலுள்ள உயிர்க்காலானது அவசியமாய் இருப்பதால் சில கூடுகள் சுவாசப்பைகளா கப் பரிணமித்து மூக்கின் வழியே உள்ளே போகும் காற்றிலுள்ள உயிர்க்காலைப் பிரித்து இரத்தத்தில் செலுத்துகின்றன. இரத்தமானது அதனை உடம்பிலுள்ள எல்லாக் கூடுகளுக்கும் கொண்டு போகின்றது. எல்லாக் கூடுகளும் அதனை ஏற்றுக்கொண்டு தத்தம் கழிவுப் பொருள்களை இரத்தத்தில் தள்ளுகின்றன. இரத்தத்திலுள்ள கழிவுகளைச் சுவாசக் கருவிகளும் நீர்ப் பிரிப்புக்கருவிகளும் இரத்தத்தினின்று வேறாகப் பிரித்து முறையே வெளிச்செல்லும் மூச்சுவாயி லாகவும் சிறு நீர் வாயிலாகவும் உடலுக்கு வெளியே தள்ளி விடுகின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *