
உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை
The Skeleton :- எலும்புச்சட்டம்.
உடம்பில் ஏறக்குறைய 266 தனி எலும்புகளிருக்கின்றன. ஒவ்வொன்றின் பெயரும் இயல்பும் மேலை நாட்டு உடலமைப்பு நூலில் விவரமாய்க் கூறப்பட்டிருக்கிறது. கபாலம் என்னும் தலையோடு முதுகின் தண்டின்மேல் தங்கியிருக்கிறது. அதன் முன்பகுதியில் கண் கூடுகளும் மூக்குத்துவாரத்திற்கு அடிப்படையான எலும்பும் மேல்தாடை கீழ்த்தாடை எலும்புகளுமுள்ளன. கீழ்த்தாடை எலும்பு மாத்திரமே அசை யுந்தன்மையுடையது. அது காதிற்கு முன் பக்கத்தில் தலையோட்டோடு இணைக்கப்பட்டிருக்கிறது. காதிலுள்ள காதுப்பறையென்னும் காதின் உள் சவ்வோடு தொடர்புடைய துவாரமொன்று கபாலத்தினிருபுறமும் காதிற்கருகாகவுள்ளது. கபால எலும்புகளுக்குக் கீழாகவுள்ள விசாலமான அறையில் மூளை இருக்கிறது. கபாலத் தினடியில் பெருந்துளை (Foramen Magnum) என்னும் பெரிய வட்டவடிவமான துவாரமிருக்கிறது. அது முதுகுக் கால்வாயோடு தொடர்புடை யது. மூளை அடியும் முதுகுக்கால்வாய் வழியாகக் கீழே செல்கின்ற முதுகின் தண்டும் ஒரே தொடர்புடையன. பெருந்துளை யென்னும் துவாரத்தின் இருபுறமும் மெதுவான எலும்பு முடிச் சொன்று இருக்கிறது. அம்முடிச்சுகளிரண்டும் முதுகெலும்பின் உச்சியிலுள்ள மெதுவான தட்டைக்குழிகளிற் பொருந்தி நிற்கின்றன.முது கெலும்போடு தலை பிணைக்கப்பட்டிருப்பது எவ்வாறெனில் மேலும் கீழும் பக்கத்துக்குப் பக்கமும் தலை அசையும் படியான நிலைமையிலென்க. தோளின் மேலாகப் பின்பக்கம் பார்க்கும்படி தலையைப் பாதிச் சுற்றளவு திருப்புவதற்கும் அப் பொருத்து இசைவாயிருக்கின்றது. தலையோட்டின் அடிப்பக்கத்தில் வேறு சில துவாரங்களுமுள்ளன. அவற்றின் வழியாக இரத்தக்குழாய்களும் நரம்புகளும் மூளைக்குப் போவ தும் வருவதும் செய்யக்கூடிய நிலைமையில் அமைந்துள்ளன.
முதுகெலும்பு முப்பத்து மூன்று எலும்பு முடிச்சுக்கள் அல்லது கணுக்களாலாயது. கழுத் துப்பக்கத்தில் ஏழு எலும்புத் துண்டுகள் ஒன்றின் மேலொன்றாக இருக்கின்றன. அடுத்த பன்னிரண்டு கணுக்களும் விலா எலும்புகளோடு சேர்க்கப்பட்டு மார்புக்குப் பின்பக்கமாய் அமைந்திருக்கின்றன. அடுத்த ஐந்து கணுக்களும் வயிற்றுக்குப் பின்பக்கமாய் அமைந்துள்ளன. அதற்குக் கீழாக ஐந்து கணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு வளைவான அகன்ற உறுதி எலும்பாக அமைந் திருக்கின்றது. அது கோண வடிவமாயுள்ளது. அது தசை இழைகளால் இடுப் பெலும்போடு இருபுறமும் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. நீர்ப்பைக்குக் கீழுள்ள எலும்புக் கூட்டிற்குப் பின் பகுதியாக அது அமைந்துள்ளது. கடைசியாகவுள்ள நாலு சிறு துண்டுகள் வாலெலும்பு போன்று முதுகெலும்பின் முடிவாயுள்ளன. ஒவ்வொரு முதுகெலும்பு முடிச்சும் வட்டவடிவமான. எலும்புத்துண்டும் அதன் பின்புறம் நின்று கிளைக்கிற வளையெலும்பும் சேர்ந்துள்ளது. பலகணுக்களும் ஒன்று சேர்ந்து முதுகுநரம்பு செல்கின்ற கால்வாயாக வடிவெடுத்துள்ளது. எலும்புக் கணுக்களின் உடற்பாகங்கள் ஒன்று சேர்ந் திருத்தலோடு வளைவுகளினின்று நீண்டு கிடக்கிற எலும்புக்கால்களும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. சணல் தன்மையுடைய இழைக்கட்டுக் களால் முதுகின் தண்டின் எலும்புக்கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன. முடிச்சுகளின் உடற்பகுதியைத் தொய்வுள்ள குருத்தெலும்புத் துண்டுகள் அல்லது சவ்வுக்கள் இணைக்கின்றன. அவைகள் தொய்வுடைமையால் முதுகெலும்பு பெயர்ச்சி யில்லாமல் வளைக்கப்படவும் நீட்டப்படவும் இடங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
விலாவின் இருபுறமும் பன்னிரண்டு எலும்புக ளுள்ளன. அவைகள் நெஞ்சிற்குநேராகக் கழு த்துவரை செல்வதாய் மார்பின் நடுவிலுள்ளதாய் இருக்கும் நெஞ்செலும்புடன் குருத்தெலும்புத் துண்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டெலும்புகள் நெஞ்செலும்பிற் சேராதுள்ளன. நெஞ்செலும்பின் உச்சியில் நின்று இருபக்கமும் காரை எலும்பானது வளைந்து சென்று முதுகெலும்பின் இருபுறமும் மார்பின் பின்புறமுமுள்ள தட்டை எலும்போடு சேர்கின்றது.. காரை எலும்பும் தட்டை எலும்பும் சேர்ந்து தோள்ப்பட்டை எனப்படும். தோள்ப் பட்டையோடு கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
கையின் மேற்பகுதியில் நீண்ட பலமான புய எலும்பொன்று உள்ளது. இவ்வெலும் பின் வட்டவடிவான உச்சிப்பகுதி தோள்ப் பட்டையிலுள்ள மெல்லிய குழியில் பொருந்தி இருக்கின்றது. அப்பொருத்து ஒரு கிண்ணமும் அதில் பொருந்திய பந்தும் போலுள்ளது. அதனால் கையானது முன்னும் பின்னும் உட்புறமும் வெளிப்புறமும் வட்டமாகவும் அசைந்து சுற்றுந் தன்மையுடையதாய் இருக்கிறது. புய எலும்பின் கீழத்தம் அகன்றதாய் முன் கையின் இரண்டெலும்போடு சேர்ந்து முழங்கை ஆகிறது. முழங்கையானது கதவுக்கீல் போலமைந்திருக்கின்றது. அது கையை வளைக்கவும் நீட்ட வும் இடங்கொடுக்கிறது. முன் கை எலும்புகளில் ஒன்று நீண்டதும் மற்றொன்று குறுகியதுமா யுள்ளது. மணிக்கட்டில் குறுகிய எலும்பானது சில சிறு எலும்புகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது. உள்ளங்கையில் நின்று ஐந்து மெல்லிய எலும்புகள் விரல்களை நோக்கி நீண்டுள்ளன. மணிக்கட்டிலுள்ள எலும்புகள் ஒன்றோ டொன்று பொருத்தப்பட்டிருப்பதால் கையை வளைக்கவும் நீட்டவும் ஒரு பக்கத்திலிருந்து மற் றொரு பக்கம் அசைக்கவும் இயலும். ஒவ்வொரு விரலிலும் மூன்று விரலெலும்பு களுள்ளன. பெருவிரலில் இரண்டேயுள்ளன. அவற்றை இணைக்கும் பொருத்துக்கள் விரல்களை நீட்டவும் அசைக்கவும் இடந்தருகின்றன. முன் கை உள் எலும்பு புற எலும்பைச் சுற்றி அசையும்படியாக முழங்கைப் பாகத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் உள்ளங்கையையோ புறங்கையையோ மேலே உயர்த்துதல் கூடும். இடுப்பெலும்பு களிரண்டும் ஒரு ஒடுங்கிய பாலத்தினால் இணைக் கப்பட்டிருக்கின்றது. அவைகளுக்கிடையே முதுகெலும்பின் பிற்பகுதி பொருந்தியிருக்கின்றது. அதுவும் இடுப்பெலும்புகளும் சேர்ந்து அரைவட்ட மெனப்படும். அதிலே கீழுள்ள அவயவங்கள் இணைக்கப் பட்டிருக்கின்றன. அரைவட்டமானது முதுகெலும்பின் பின் பகுதியில் உறுதியாக நிலையிடப்பட்டிருக்கிறது. இதனால் கைகளைத் தாராளமாக அசைப்பது போலக் கால்களைத் தாராளமாகச் சுழற்ற முடியவில்லை. கால்கள் அரைவட்டத்திற்கு ஆதாரமாக நிற்பன.
அரைவட்டம் முதுகின் தண்டிற்கும் அது தலைக்கும் ஆதாரமாகவுள்ளன. அரைவட்டம் வயிற்றிலுள்ள கருவியின் கனத்தையும் தாங்குகின்றது
காலில் தொடை எலும்பானது இடுப் பெலும்பிலுள்ள குழியில் ஒரு பந்து போல் பொருந்தியிருக்கின்றது. அதனால் காலானது வளைக்கவும் நீட்டவும் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அசைக்கவும் வட்டமாகச் சுழற்றவும் வாய்ப்பான நிலையிலிருக்கிறது. தொடையெலும்பின் கீழ் அத்தம் அகன்று முழங்காலில் கெண்டைக்காலின் முன்னெலும்போடு இணைக்கப்பட்டிருக்கிறது. முட்டானது கீல்போல அமைந்திருக்கிறது. கீழ்க்காலின் முன்னெலும்பின் மேல்ப்பாகமுடிவில் வளை வெலும்பொன்று சேர்ந்திருக்கிறது. அதுவும் கணைக்கா லெலும்பின் கீழ் முனைகளும் பாதத்தின் எலும்பு களோடு கீல்போலப் பொருந்தியிருக்கின்றன. பாதத்தில் குதிங்காலெலும்பும் வேறு சில சிறு எலும்புகளுமுள்ளன. கைவிரல்களிற் போலக் கால் விரல்களிலும் பெருவிரல்களில் இரண்டெ லும்பும் மற்ற விரல்களில் மூன்றெலும்பு முள்ளன பாத எலும்புகள் உள்ளங்காலுக்கு மேல் ஓர் பிறைவடிவாக அமைந்துள்ளன. அவ் வெலும்புகளின் ஓரங்களுக்கிடையிலுள்ள குருத் தெலும்பு அவற்றின் வளைவுக்கு எழுச்சி கொடுப் பதால் எளிதாக நடத்தல் நிகழ்கின்றது. அது வளைவாக இல்லாமற் தட்டையாக இருந்தால் எஃகினாற்செய்த வில்லொன்று (Steel spring) வைத்துக்கொள்ள வேண்டும். அஃதில்லாவிட் டால் நடப்பது கடினமாயிருக்கும்.



