உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை

நோய் வராது தடுத்தல்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆதலால் உடம்பின் சுகத்தைப் பேணவேண்டி யது ஒருவனுடைய கடமையாகும். நோய் வரு முன்னர் அதனைத் தடுத்தலே நல்லது. பல நோய்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையினாலேயும் நல்லுணவு கொள்ளாமையினாலும் ஏற்படுகின்றன. ஒழுங்கான வாழ்க்கையும் சுகாதாரமான உணவும் நோயைத் தடுப்பன என்று ஒப்புமுறை (Homeopathy) வைத்தியத்தைக் கண்டுபிடித்த ஹைனமன் (Hahenemann) என்னும் ஜர்மானிய வைத்தியர் சொல்லுகின்றார். சுகாதார வாழ்க்கையினால் உடலானது நோய்க்குக் காரணமானவை களை எதிர்த்து ஒழிப்பதற்கும் முயற்சியினால் இளைப்படை யாமலிருத்தற்கும் தகுதியுள்ளதாகிறது. முதலில் உணவைப்பற்றித் தக்க கவனஞ் செலுத்த வேண்டும். பால், நெய் முதலியவற்றோடுகூடிய மரக்கறி உணவே சுகாதாரமான உணவாகும் புலாலுணவை மிகுதியாக அருந்துதலால் நோய்கள் ஏற்படக்கூடுமேயன்றிப் பல முண்டாகின்றது என்பது தவறு. உடம்பிலுள்ள சத்துக்கள் வெண்கருச்சத்து, கரிநீர்ச்சத்து, கொழுப்பு, நிலக்கனிஉப்புகள், உயிர்ச்சத்து, நீர் என்பனவாம். வெண்கருச்சத்து (Proteid) ஓரளவே உணவில் சேர்க்கப்படவேண்டும். அச்சத்து அதிகமாகச் சேர்த்தால் உணவில் ஜீரணம் (செறிமானம்) தடைப்படும்.

அது பால், ரொட்டி, தானியங்கள், பழவித்துக்கள் என்பவைகளில் அதிகமாக உள்ளது. சுமார் ஒரு பலம் சத்து ஒரு நாளைக்குப்போதுமானது.

கரிநீர்ச்சத்து :- இது சர்க்கரையிலும் ரொட்டியிலும் நெல்முதலிய சிலவகைத் தானியங்களிலும் வித்துக்களிலுமுள்ளது. ரொட்டியில் வெள்ளை ரொட்டி எளிதாக ஜீரணமானாலும் கருப்பு ரொட்டியே மிகவும் வளமான சத்தையுடையது. கருப்பு ரொட்டியே மலச்சிக்கலை நீக்கும். வெள்ளை ரொட்டிக்கு அக்குணமில்லை. கஞ்சிப் பசையில் இச்சத்து அதிகமாகவுள்ளது. நன்றாகத் தீட்டிய அரிசியைப் பார்க்கிலும் தவிடும் முளையும் அதிகமாக நீங்காத அரிசியே உயிர்ச் சத்துமிகுதியாக உடையது. உருளைக்கிழங்கிலும் இச் சத்து உண்டு. மணலிற் பயிரான உருளைக் கிழங்கு சுவையுடையது. பாலொடு நன்றாய்ப் பிசைந்து தயார் செய்த உருளைக்கிழங்கு எளிதாக ஜீரணமாகிவிடும்.

கொளுப்புச் சாமான்கள்:- சூட்டினையடக்கிக் கொண்டிருப்பதால் அவைகள் கோடையைப் பார்க் கிலும் மாரிகாலத்திற்குப் பொருத்தமானவை. உணவிற்குச் சுவை கொடுக்க நெய் ஒலிவ எண்ணெய் முதலியன பயன்படுகின்றன. பசி தாங்குவதற்கும் உடம்பிலுள்ள கொழுப்புச்சாமான் உதவியாயிருக்கும். கொழுப்புச்சாமானை அதிகமாகச் சேர்த்தல் நல்லதல்ல. நெய் முதலியவைகள் சுமார் அரைப்பலத்திற்கு மேல் ஒரு பலம் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குப் போதுமானது.

உலோக உப்புக்கள்:- உயிர்க்காலுடன் உடம்பிலுள்ள பொருள்கள் சேருங்காலை உண்டாகும் கலப்புப் பொருள்களின் வேறாகக் கழிக்கப்படுபவைகளே இவைகள். உணவு செமிப்பதற்கு இவ்வுப்புகள் மிகுதியும் பயன்படுகின்றன, சோடாவும் சுண்ணாம்பும் இத்தகைய உப்புக்களே. இவைகள் மரக்கறி பதார்த்தங்கள், பால், கீரை, பழம், இவைகளில் முக்கியமாகவுண்டு. பசலிக்கீரையில் இவைகள் தக்க அளவிலிருப்பதால் சுகாதார முறையில் அது உயர்ந்த மரக்கறி பதார்த்தமாகக் கருதப்படுகிறது. நெல்லிக்காய், வைக்கோல், பேரிக்காய் முதலியவைகளில் சுண்ணாம்போடு இரும்பு சேர்ந்திருக்கிறது. ஆப்பிள்ப் பழத்தில் சோடாவோடு நெருப்புக்கற் சத்தும் சேர்ந்திருக்கிறது. அது நரம்புக்கும் மூளைக்கும் பலம் தருவது. சிறு குழந்தைகளுக்கு மாமிசம், ஒயின் முதலியன வேண்டுவதில்லை. பால், ரொட்டி, வெண்ணெய், மரக்கறி பதார்த் தங்கள் பழம் என்பனவே போதுமானவை.

பாலும் சர்க்கரையும் சேர்ந்த ஓட்டுமாக் கஞ்சி குழந்தைகளின் எலும்பையும் தசையையும் பலப்படுத்துவதால் அவைகளுக்கு நல்ல ஆகாரமாகிறது. மரக்கறி பதார்த்தங்களைச் சமையல் செய்வதில் அவைகளிற் கலந்துள்ள உப்புச் சரக்குகள் கழிந்து போகாதபடி நீராவியில் அவற்றைச் சமைப்பது நல்லது. அவற்றை அளவுக்கு மிஞ்சி வேகவைத்தலும் நல்லதல்ல. உப்பு அதிகஞ்சேர்த்தலும் நல்லதல்ல. காய்கறியிலுள்ள இயற்கையான உப்போடு சுவைக்காகச் சேர்க்கும் உப்பானது குறைவாகவே யிருத்தல் வேண்டும். அளவுக்கு மிஞ்சிய உப்பு இரத்தத் திற்கும் நீர்க்குண்டிக்காய்களுக்கும் (Kidneys) கெடுதல் செய்யும்.

உயிர்ச்சத்து:- (Vitamins) வெடியுப்புச்சாரம் கலந்த உயிர்ச்சத்துக்கள் உணவுப் பொருள்களில் கலந்துள்ளன என்றும் அவை ஜீவாதாரமா யுள்ளவையென்றும் அவற்றைச் சில நாட்களுக்கு முன் மேலைநாட்டு அறிஞர்கள் கண்டனர். பச்சைக் காய்கறியிலும் பழங்களிலும் பாலிலும் வெண்ணெயிலும் பழங்களிலும் முளை தவிடு போக்காத அரிசியிலும் நன்றாகப் புடைக்கப் படாத கோதுமை மாவிலும் அவை உள்ளன. அவை பல வகைப்படும். அவையுள்ள பொருள்களை அதிகமாக அவித்துவிடாமல் உபயோகப் படுத்தவேண்டும்.

தண்ணீர் உடம்பிற்கு அவசியமானாலும் அளவுக்கு மிஞ்சி மிக அதிகமாகத் தண்ணீர் பருகுவதால் இரத்தத்தில் தண்ணீர்க் கலப்புமிக அதிகமாக ஏற்பட்டு அதன் வளம் குறைவுபடும். நாம் உண்ணும் உணவில் உடம்பிற்கு வேண்டிய தண்ணீரில் பாதியளவு கலந்திருக்கின்றது. ஒரு நாள் சுமார் ஒரு படி தண்ணீருக்கு அதிகமாகச் சாப்பிடுதல் நல்லதல்ல. காப்பி, தேயிலை, ஒயின், பீர் முதலியவைகளை அதிகமாகக் குடிக்கின்றவர் கள் உடம்பிற்கு வேண்டியதற்கு அதிகமான தண்ணீரைப் பருகி நெஞ்சப் பைக்கும் நீர்க்குண்டிக் காய்க்கும் வியாதியை விளைவித்துக் கொள்கின்றார்கள். காப்பியும் தேயிலையும் அதிகமாகவும் பலமாகவும் உபயோகப்படுத்தினால் அவைகள் நெஞ்சுப் படபடப்பையும் நரம்பின் பலவீனத்தையும் தூக்க மின்மையாகிய வியாதியையு முண் டாக்கும் புகையிலையும் சுருட்டுகளையும் அதிக மாக உபயோகப்படுத்தினால் பக்கவாதமும் கண் ஒளி மயக்கமும் ஏற்படக்கூடும். குறைந்த அளவில் அவற்றை உபயோகப்படுத்துங்காலை கெடுதித் தன்மைகள் தோன்றினால் அவற்றை அறவே ஒழித்து விடுவது நலம். இருதயத்தில் நோயுள்ளவர்கள் காப்பி தேயிலை முதலியவற்றை ஒழிக்கவேண்டும். தொண்டை, கண், வயிறு இவற்றில் நோயுள்ளவர்கள் புகைச் சுருட்டுப் பிடித்தல் கூடாது. விஸ்கி, பிறாந்தி முதலியவைகள் ஒயினைப் பார்க்கிலும் மிக்க கெடுதியானவை. ஒயின் பீரைப் பார்க்கிலும் கெடுதியானது.

உணவு கொள்வதில் அளவறிந்து மித மிஞ்சவிடாமை சுகத்திற்கு மிக அவசியமாகும். பட்டினியினால் சாகின்றவர்கள் மிகச் சுருக்கம். மிதமிஞ்சிப் புசிப்பதினால் சாகின்றவர்கள் பலர். தேக உழைப்பில்லாதவர்களும் வயதுசென்றவர் களும் அதிகமாகப் புசித்தல் கூடாது. கனமான உணவை இருமுறை சாப்பிடுவதிலும் இலேசான உணவை நான்கு முறை சாப்பிடுதல் நலம். உண்பதை நன்றாய் மென்று சாப்பிடவேண்டும். உண்ணும் போது தண்ணீரை இடையிடையே அதிகமாகப் பருகுதல் கூடாது. ஏனென்றால் உணவைச் செறித்தற்குரிய ரசங்கள் தண்ணீரோடு கலந்து பலமற்றுப் போகின்றன. மிகவும் சூடான உணவையாவது பானத்தையாவது உட்கொள்ளுதல் கூடாது. அவை வயிற்றிற்கும் பல்லிற்கும் கேடு விளைக்கின்றன. குளிர்ந்த பானத்தின் பின்னாவது முன்னாவது மிகச் சூடான உணவை உட்கொண்டால் சோற்று வெறுப்பு என்னும் அன்னத் துவேஷ நோய் உண்டாகும். தூங்கப்போவதற்கு முன் அதிகமான ஆகாரம் உட்கொள்ளுதல் கூடாது. உணவினா லேற்படும் வயிற்றுக்கனம் அமைதியற்ற தூக்கத் தையும் தீயகனவையுந்தரும். தேகமுயற்சி அல்லது மன உழைப்பிற்குப்பின் உடனே உண வருந்துதல் கூடாது. திடீரென மனக்கலக்கம் ஏற்பட்டால் அது நீங்கிச் சற்று நேரங் கழித்து உணவு கொள்ளுதல் வேண்டும். ஏனென்றால் செறிக்கும் ரசம் அந்த நேரங்களில் தாராளமாக வயிற்றுள் பாயாமையால் உண்ணும் உணவு வயிற்றில் கனமாய்க் கிடக்கும். உண்டவுடன் கடினமான முயற்சிகூடாது. உணவின் பின் பகலிற் சிறிது நேரம் தூங்குதல் வயது சென்றவர் களுக்கு ஒத்திருந்தாலும் இளைஞர்களுக்கு அவசியமில்லை. அரைமணி தேரத்திற்கு அதிகமாக நெடுநேரந் தூங்குதல் ஜீரணத்தை மட்டுப் படுத்தும்.

நல்ல உணவுபோல நல்ல காற்றையுட் கொள்வதும் உடல் நலத்திற்கு இன்றியமையாதது. இருக்குமிடம், உணவு கொள்ளுமிடம், தூங்குமிடம், வேலைசெய்யும் இடம் இவைகளிலே நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். வெளியே உலாவி மார்பிற்கும் சுவாசப்பைக்கும் விரிவு கொடுத்தல் வேண்டும். உரத்து வாசிப்பதினாலும் பாடுவதினாலும் இவைகளுக்கு நல்ல முயற்சி யேற்படுகிறது. சுவாசம் செய்கிறது மூக்கு வழியாகவே இருத்தல் நல்லது.

உடற் பயிற்சி தேக உழைப்பில்லாத உட லின் நலத்திற்கு இன்றியமையாதது. நடத்தல், மலையேறுதல், கருவியின்றி உடற்பயிற்சி செய் தல், தோட்டம் பயிரிடுதல், மரமறுத்தல், மூச் சடக்கி விடுதல் (பிராணாயாமம்) முதலியன சாதா ரணமான உடற் பயிற்சி முறைகளாகும். கருவி யோடு உடற்பயிற்சி செய்தல், ஓடுதல், நீந்துதல், படகோட்டுதல், குதிரை யேற்றம், பைசைக் கிள் பந்தயம், முதலியன உடற் பலத்தைப் பொறுத்த பயிற்சிகளாகும். அளவிற்கு மிஞ்சிய தேகப் பயிற்சி சுகத்திற்குக் கேடு பயத்தல் கூடும்.

நீராடல்:- தோலின் துவாரங்கள் அழுக்கு, புழுதி, வியர்வை தோற்கசிவு முதலியவைகளால் அடைபடாதபடி காற்றுக் கொள்வதற்கு உடம்பினைக் கழுவுதலும் முழுகுதலும் அவசியமாகும். அப்படிச் செய்யாவிட்டால் இரத்திலுள்ள கழிவுப் பொருள்கள் கழிக்கப் பெறாது உள் நின்று இரத்த வோட்டத்திற்கு இடர் விளைவிக்கும். கடல் பஞ்சைத் தண்ணீரில் முக்கி உடம்பின்மேல் பிழிந்து நன்றாக அழுக்குத் தேய்த்துக் கழுவுவதினால் தோல் இறுகித் திடீரென்று நேரும் தட்ப வெப்ப மாறுதல்களால் பழுது படாதபடி இருப்பதற்கு அது துணைபுரியும் என்பது வைத் தியர்கள் கருத்து. குழந்தைகளுக்கும் வயோதிகர்களுக்கும் அவ்வாறு செய்தல் தக்கதல்ல வென்பர். குளிர்ந்த நீரில் முழுகுதல் கோடைக் காலத் திற்குத்தான் ஒத்ததாகும். கடலில் முழுகுதல் பொதுவாக நல்லதேயானாலும் சிலர் உடம்பிற்கு அது ஒவ்வாதிருக்கிறது. ஆறு, குளம், முதலியவைகளில் தண்ணீரின் குளிர்ச்சிக்குத் தக்கபடி குறைந்த நேரம் முழுகுதல் வேண்டும். உடலி லிருக்கும் சூட்டிற்குப் பாதியளவு சூடுள்ள குளிர்ந்த தண்ணீரில் ஒரு நிமிஷத்திற்கு அதிகம் முங்குதல் கூடாதென்றும் முக்கால்வாசிச் சூடுள்ள குளிர்ந்த தண்ணீரில் மூன்றல்லது ஐந்து நிமிஷம் முழுகலா மென்றும் அதினுமதிகமாகச் சூடுள்ள தண்ணீரில் பத்து நிமிஷம் முழுகலா மென்றும் குளிக்கும் வெந்நீர் உடம்பிலுள்ள சூட்டைப் பார்க்கிலும் சற்று குறைந்த சூடுள்ளதாய் இருக்கவேண்டுமென்றும் ஜர்மானிய வைத் தியர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். நீரில் முழுகுவதில் சளிப்பிடியாமல் நெஞ்சைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

உடை:- உடையானது சூடு, குளிர், முதலியன தாக்காதபடி உடம்பைப் பாதுகாக்கிறது. உடற் சூடு உடலில தங்கும்படிக்கும் அது செய்கிறது. ஈரமில்லாததாய் இறுக்கமில்லாததாய் போக்கு வரவுகளைத் தடைப்படுத்தாததாய் இருக்கும் உடையே உடம்பிற்கு நல்லது. லேசான உடை கோடை காலத்திற்குத்தான் பொருத்தமாகும். உரோமமும் பட்டும் சூட்டினைப்பாது காப்பவை. சணல் சூட்டினை வெளிச்செலுத்தும் தன்மையது. பஞ்சு நடு நிகர்த்தாய் நலம் சிறந் தது. நெருக்கிக் கட்டும் உடை இரத்த ஓட் டத்திற்கு இடையூறு செய்யும்.

படுக்கையறை உயரமாயும் பெரிதாயு ம் தெற்கே அல்லது கிழக்கே பார்த்ததாய் இருத்தல் நலம். நச்சுக் காற்று பூமியிலிருந்து எழக் கூடிய சதுப்பு நிலங்கள் தவிரப்பிற இடங்களி லுள்ள அறைகளின் பலகணிகள் திறந்து வைக்கப்பட்டிருத்தலே நலம். படுக்கை போதிய அளவு அகலமும் நீளமும் உள்ளதாயிருத்தல் வேண்டும். அது மிகவும் மென்மையாயும் வெப்ப மாயும் இருத்தல் கூடாது.

கக்கூசு விசாலமாயும் காற்று உலாவுவதா யும் நாற்றமில்லாததாயுமிருத்தல் வேண்டும். நரம்புகளை நல்ல நிலமையில் வைத்துக்கொள்வதற்கு அளவான உடற் பயிற்சியும் நல்ல தூக்கமும் காற்று வெளியில் உலாவுதலும் வேலைக்குத் தக்க ஆறுதலும் வேண்டுவனவாகும். சிறு குழந்தைகளுக்குச் சாதாரணமானதாயும் பலங் கொடுப்பதாயுமுள்ள உணவே கொடுக்கவேண்டும். சொகுசான உணவு குறைவாகவே இருத்தல் வேண்டும். அது அவசியமன்று.

நோயாளிகளை ஆதரிக்கும் முறை:- தக்க ஆதரிக்கும் முறையால் நோய் விரைவிற் குணமாவதுடன் கோயாளிக்கும் ஆறுதல் ஏற்படுகிறது. சுகாதாரமான அறை, தகுதியான படுக்கை, தொந்தரவில்லாத ஓய்வு, அன்பான ஆதரவுத்துணை என்னும் இவைகள் நோய் நீக்கத்தை விரைவில் உண்டாக்குவன. அழுக்குத்துணிகளாலும் மல சலக் கழிவினாலும் உண்டாகக்கூடிய நாற்றத்தை அடிக்கடி நீக்குதல் வேண்டும். நோயாளிக்குத் தூய உடைகளைத் தரிப்பிக்க வேண்டும். பலமான வாசனையுள்ள மலர்களை நோயாளி அறையில் வைத்தல் கூடாது. புகையும் விளக்குகளையும் வைத்தல் கூடாது. மின்சார விளக்கு நல்லது. கண்கூசாதபடி அதற்கு ஒளிமறைவு வைத்திருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் நல்லதானாலும் மூளைக்குரிய வியாதிகள் நோயாளிக்கு இருக்குமானால் கதிரவன் கதிர்கள் தாக்காதபடி ஜன்னற் கதவுகளை அடைத்து வைக்கவேண்டும். சுவாசப் பையில் நோயிருந்தால் காற்றுமிகுந்த வெப்பமாயிருத்தல் கூடாது. பச்சை நிறமுள்ள செடி கொடிகளிருக்கலாம். ஆனால் குளிர்மிகுதிப்பட இடமிருத்தல்கூடாது. அவற்றால் நோயாளி இருக்கும் அறையிலுள்ள காற்றின் சூடு உடம்பின் சூட்டிற்கு முக்கால் திட்டம் சூடுள்ளதாயிருக்க வேண்டும். நோயாளி இருக்கும் அறை சுமார் 16 அடி நீளம் 13 அடி அகலம் 10 அடி உயரமுள்ளதாய் இருத்தல் வேண்டும். நோயாளிக்கு அருகாக அங்குமிங்கும் ஓடுதலும் உரத்துப் பேசுதலும் கூடாது. நோயாளியோடு நெடுநேரம் உரையாடுதலும் மனக் குழப்பமுண்டாக்கக்கூடிய பேச்சும் துக்ககரமான செய்திகள் தெரிவித்தலும் தவறாகும். அறையிலுள்ள புழுதியை ஈரத் துணியால் அடிக்கடி துடைத்துவிடுதல் வேண் டும். ஏனெனில் புழுதியானது சுவாசக் கருவிகளுக்கும் காயங்களுக்கும் நஞ்சு போல்வது. படுக்கைக்குரிய கட்டில் இரும்பு அல்லது மரத் தினால் செய்யப்பட்டதாயிருத்தல் வேண்டும். கட்டில் உருண்டு செல்வதிற்குரிய உருளைகளை உடைத்தாயிருத்தல் நலம். கட்டில் மிகவும் உயர் வாயும் மிகவும் தாழ்வாயும் இருத்தல் கூடாது. நோயாளியை உயர்த்துவதற்கும் பரிசோதனை செய்வதற்கும் காயங்களைக் கட்டுவதற்கும் ஒத்த முறையில் கட்டில் அமைந்திருந்தல் வேண்டும். குறுக்காக வில்வைத்து மெத்தையுள்ள கட்டில் நல்லது. மேல் மெத்தை குதிரை மயிரடைத்த தாய் இருப்பது நல்லது. படுக்கை நனையக்கூடிய நிலைமையிலிருந்தால் தண்ணீர் உட் செல்லாத துணியொன்று மெத்தைமேல் விரித்திருக்க வேண்டும். தலையணைகள் இறுக்கமாயிருத்தல் வேண்டும். பாதங்களுக்கும் ஒரு ஆதரவு வைக்கப் பட்டிருத்தல் வேண்டும். காலுக்கு லேசான இறகடைத்த மெத்தை நல்லது. படுக்கையில் விரிக்கும் துணிகள் தோய்த்துஉலர்த்துவதற்குப் பொருத்தமாயிருத்தல் வேண்டும். நோயாளி சாய்ந்து உட்காருவதற்கு ஆதரவாக பல தலையணைகள் அருகிலிருக்க வேண்டும். படுக்கை மிகக் குளிர்ந்திருந்தால் வெந் நீர்க் குப்பிகளால் அதனை வெப்பமாக்கிக் கொள்ளலாம். நோயாளி யின் அறையில் கை கழுவுவதற்கும் துப்புவதற்கும் மலசலங் கழிப்பதற்கும் உரிய பாத்திரங்கள் இருத்தல் வேண்டும். சுத்தமான ஒரு மேசையும் முகம் பார்க்கும் ஒரு கண்ணாடியும் வேலைக் காரரைக் கூவும் மணியும் உடைகள் வைக்கும் அலமாரும், ஒரு கெடியாரமும், வருகிறவர்கள் உட்கார்வதற்குரிய சில நாற்காலிகளும் எளிதில் வாசிப்பதற்குரிய சில புஸ்தகங்களும் வாசிக்கும் மேசையும் மனதை மகிழ்விக்கும் சில மலர்களும் செடிகளும் சூடளக்கும் கருவிகளும் ஆதரவுத் துணையாளொன்றும் இருத்தல் நலம்.

துணை யாள் நோயின் குறிகளைக் கவனிக்கவேண்டும். நோயாளியின் உடற்சூடு, நாடி, மூச்சு என்பவை களை முக்கியமானநேரங்களில் கவனித்துக் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். சூட்டினைக் கணிப்பதற்குக் காலையில் 7-மணி முதல் 9-மணி வரைக்கும். மாலை 5-மணி முதல் 7 மணி வரைக்கும் தக்கநேரமாகும். அளவு கருவியை நாவிற்குக் கீழாதல் கக்கத்திலாதல் இரண்டல்லது ஐந்து நிமிஷம் வரை வைத்திருத்தல் நலம். மலத் துவாரத்தில் அளவு கருவியை வைத்துப் பார்த்தலுமுண்டு. சாதாரணமாக அளவு கருவியில் உள்ள ரசம் காலையில் 98-4 வரை உயர்ந்திருத்தல் இயற்கை. மாலையில் 99 அல் லது 99-5 வரை சில உடம்புகளில் உயர்ந்து காட்டும். அதற்குமேல் 100-வரை உயருமானால் கொஞ்சம் காய்ச்சல் இருப்பதென்று அறிய வேண்டும். 100-க்கு மேல் 103-வரை உயர்தல் மிதமான காய்ச்சலைக் குறிக்கும். 103-க்கு மேல் 106-வரை அதிகக் காய்ச்சலைக் குறிக்கும். 106-க்கு மேல் உயிர்க்கு அபாயகரமான காய்ச்சல் ஏற் படும். சூடு குறைந்து 95-வரைக்கு அளவு கருவி யின் ரசம் தாழ்ந்துவிடுமே யானால் அதுவும் அபாயத்தைக் குறிப்பதே.

நாடி:- ஒரு நிமிடத்திற்கு நாடியின் துடிப்பு இவ்வளவென்பது வயதிற்கும் உடலமைப்பிற்கும் மன நிலைமைக்கும் நாடி பார்க்கும் நேரத்திற்கும் தக்கபடி தீர்மானிக்கப்படும். குழந்தைகளுக்கு ஒரு நிமிஷத்திற்கு 120 தடவை நாடி துடிக்கலாம். பெரிய மனிதர்களுக்கு 70 தரம் துடிப்பிருக்கும். வயோதிகர்களுக்கு 60 வரை குறை தல் கூடும். காய்ச்சலில் துடிப்பு அதிகப்படும். இதன் விரிவை வைத்தியர்களிடம் கேட்டுக் கொள்க.

சாதாரணமாக ஒரு நிமிஷத்திற்கு 16 தடவை மூச்சுவிடுதலுண்டு. நாடித் துடிப்பு நான்கிற்கு ஒரு முறை மூச்சியக்கம் நிகழும்.

குழந்தைகளுக்கு அது அதிகப்படும். சுரத்திலுமப்படியே. மூச்சு விடுங்காலை தொண்டையில் கப அடைப்பு ஏற்பட்டு இரைச்சல் (கீர்பூர் என்ற சப்தம்) உண்டாகுமானாலும் நாசிகள் அதிகமாய் அசைவுற்றாலும் உதடுகள் நீல நிறம் பாய்ந்தாலும் வைத்தியரை உடனே வரவழைத்தல் வேண்டும். நோயாளரின் துணையாட்கள் நோயாளியின் தூக்கத்தையும் பசி, தாகம் முதலியவற்றின் நிலையையும் வாந்தி செய்தல் இரத்தம் வடிதல் முதலியவற்றையும் சிறு நீரின் நிறம் கனம் அளவு முதலியவற்றையும் மலத்தின் இயல்பை யும் வைத்தியர்களுக்குத் தெரிந்து சொல்லக் கூடியவர்களாயிருத்தல் வேண்டும். நோயாளிகள் பல்லினையும் வாயையும் வெந்நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். இருபதில் ஒரு பங்கு வெண் காரம் கலந்த வெந்நீரை உபயோகப்படுத்தலாம். உடம்பினை வெந்நீரில் நனைத்த துணியினால் துடைத்துக் கொள்ளலாம். உடை மாற்றுவதில் பலவந்தமாக நோயாளிகளின் கைகளைச் சட்டை யிற் பொருத்துதல் கூடாது. பலவீனமான நோயாளிகளை மெதுவாகச் சாயும்படி வைத்துக் கொண்டு விரிப்பு முதலியவைகளை மாற்றுதல் வேண்டும். நெஞ்சில் பலவீனமும் நோயும் உள்ளவர்களைப் படுத்தபடியே இரு துணையாட்கள் தூக்கி வைத்துக்கொள்ளும்போது மூன்றாவது துணையாள் மெதுவாக விரிப்புகளை மாற்றுதல் வேண்டும். நோயாளியைத் தூக்கும் போதும் வைக்கும்போதும் மெதுவாக வைத்தல் வேண்டும். மறறொரு கட்டிலுக்கு நோயாளியின் படுக்கையை மாற்றவேண்டுமானால் அக்கட்டிலை நோயாளியிருக்கும் கட்டிலுக்கு அருகாக வைத்து லேசாக நோயாளியை அதில் இழுத்து விடுதல் நலம். நோயாளி உட்காரக்கூடுமானால் ஒரு நாற்காலியில் தூக்கிவைத்துப் பின்னர் மற்றொரு படுக்கையில் எடுத்துவைத்தல் நல்லது.

உடல் அழுத்துவதினால் முதுகிலும் முழங்கைகளிலும் செந்நிறமான புண்கள் உண்டாதல் கூடும். அவற்றை உடனே குணமாக்குவதுடன் அவை உண்டாகாமல் பாதுகாப்பதே நலம்.

நோயாளிக்குப் படுக்கையில் விரிக்குத் துணிகள் (கீழ் விரிக்குந்துணி) மெதுவாயும் சுத்தமாயும் அடிக்கடி இருக்கையை மாற்றுதல் வேண்டும். உரிய மருந்து நீரால் புண்ணுள்ள செந்தோலை நனைத்து எலுமிச்சம் பழச் சாற்றினாலாகிய களிம்பினை அவற்றின்மீது தேய்த்தல் வேண்டும்.

இது புண்களை நாள்தோறும் கழுவி வெண்காரப் பொடி களிம்பினை த் (Boracia aeid ointment ) தேய்த்தல் வேண்டும். நடுவில் துவாரமுள்ள காற்றுத் தலையணையாவது இந்தியா ரப்பரினாற் செய்த வெந்நீர்த் தலையணையாவது தலையிலும் முதுகின் கீழ்ப் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியிலும் படும்படியாகவைத்து உபயோகப் படுத்தலாம். இத் தலையணைகளை உபயோகமில்லாதபோது காற்றையும் நீரையும் காலியாக்கி வைக்க வேண்டும். நோயாளியின் அறையில் மலங் கழித்தல் நேரிடுமாயின் அதற்கு மாற்றாக சுண்ணாம்புப் பச்சை முதலிய மருந்துகளால் சுத்தப்படுத்த வேண்டும். சாம்பிராணிப் புகை யிடுதல் நலம். நோயாளியின் அறையில் துணை யாட்கள் உண்டலாவது நீர் பருகுதலாவது கூடாது. மனிதன் பிழைப்பது உண்பதினால் மாத்திரமல்ல. உண்பதைச் செறிவிப்பதினாலே யென்க. நோயாளி உண்ணும் உணவு கஞ்சி முதலிய நீர் வடிவாயிருத்தல் நலம். ஆரஞ்சு முதலியவற்றின் ரசங்கள் பயன் படுத்தலாம். அன்னப்பால் தெளிவு மிகச்சிறந்தது. பலமான காப்பி, தேயிலைப்பானம் முதலியவற்றை விலக்க வேண்டும். உப்பு, புளி, காரம் முதலியவற்றை அதிகமாகச் சேர்த்தல் கூடாது. அதிகச் சூடும் அதிகக் குளிர்ச்சியுமுள்ள உணவுகள் கூடா. உண்ணும் உணவின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். உண்ணும் நீர் தூயதாகவிருத்தல் வேண்டும். படுக்கையிலிருந்து எழமுடியாத வர்களுக்கு அதற்கேற்ற கோப்பையை (Feeding

cup) உபயோகப்படுத்த வேண்டும். வாயினால் உணவினை உட்கொள்ள முடியாதபோது குடலில் உணவு சேரும்படியாக இக்காலத்தில் ஊசி இறக்குதலுண்டு. நோயாளியின் பொருட்டுச் செய்யவேண்டிய பிற ஏற்பாடுகளை வைத்தியர்களிடம் விசாரித்தறிக.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *