உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை

பொருத்துக்கள்—(Joints)

எலும்புகள் பிணைக்கப்பட்டுள்ள பொருத்துக்கள் நெகிழ்ச்சியான நார்த்தன்மையுடைய மென்தோற்பை ஒன்றில் அடக்கப்பட்டுள்ளன. அப்பையின் உட்பாகம் ஈரமுடைதாயிருக்கிறது. எலும்புகளின் முனைகள் குருத்தெலும்பினால் மூடப்பட்டு மெதுவாக இருக்கின்றன. பொருத்துக் கீல்கள் எளிதாக இயங்குவதற்கு அதன் பகுதிகள் நன்றாகப் பொருந்தியிருப்பதோடு மெதுவாயும் எண்ணெய் இட்டது போலவு மிருக்க வேண்டும். வயது சென்றவர்களுக்கு வாதத்தினால் பொருத்துக்கள் இறுக்கமாவதற்குக் காரணம் எலும்பின் மேற் பகுதிகள் கடினமாகிப் பொருத்துக்கள் எளிதாக இயங்கா திருப்பதேயாகும். எலும்பின் ஓரங்கள் பொருத்துக் களிலே பளபளப்பான வெள்ளை நாரிழைக்கட்டுகளால் ஒன்று சேர்த்து நன்கு கட்டப்பட்டிருக்கின்றன. அக் கட்டுகள் எலும்புகளை இடம் பெயராமல் தடுத்துக் காக்கின்றன.

உடம்பில் பலவகையான பொருத்துக்களுள்ளன. ஒன்றின்மேலொன்று நழுவுதற்கேற்றவாறும் கதவுக்கீல் போலப் பொருந்தி அசைதற் கேற்றவாறும் பந்தும் கிண்ணமும் போல் பொருந்துதற்கேற்றவாறும் சுழியாணி போல் பொருந்துமாறும் பொருத்துக்கள் அமைந் துள்ளன. அத்தகைய பொருத்துக்களெல்லாம் முற்றுத் தன்மையுடையனவே. முற்றுத்தன்மை வாயாத பொருத்துக்களுமுள்ளன. அவைகள் அதிக அசைவிற்கு இடங் கொடுப்பதில்லை. முது கெலும்பின் பகுதிகளுக்கிடையிலுள்ள பொருத்துக்களும் இடுப்பெலும்பின் பொருத்துக்களும் அத் தன்மையன.

கீல் பொருத்துக்களின் பகுதிகள் பெட்டி மூடிபோல அடைக்கவுந் திறக்கவும் கூடும். அதற்குத்தக்க உதாரணம் முழங்கைப் பொருத்தாகும். அதை நீட்டவும் வளைக்கவுமே முடியும். மணிக்கட்டிலும் முழங்காலிலும் கணைக்காலிலு முள்ள பொருத்துக்கள் கீல் போன்றிருந்தாலும் பக்க அசைவிற்குச் சற்று இடங்கொடுக்கின்றன. கீழ்த்தாடை யெலும்பானது தலை யெலும்போடு சேருமிடமானது கீல்போன்றிருந்தாலும் நழுவி இயங்குவதற்கு அது இடங் கொடுப்பதால் தாடையைப் பக்கத்திற்குப் பக்கம் அசைக்கவும் முன்னும் பின்னும் அசைக்கவும் இயலுகின்றது.

கையிலும் பாதத்திலுமுள்ள சிறு எலும்பு களின் பொருத்துக்கள் நழுவு பொருத்துக் கெளெனப்படும். அவ் வெலும்புகளின் ஓரங்கள் மெதுவாய்த் தட்டையாயிருப்பன. அவற்றின் பலமான கட்டுக்கள் மிகக்குறைவான அசைவிற்கே இடந்தருவன. இடுப்பிலும் தோளிலும் குழிப்பந்துப் பொருத்துக்களுள்ளன. அவற்றில் ஒரு எலும்பின் வட்டத்தலை மற்றொரு எலும்பின் கோடியிலுள்ள கிண்ணப் பகுதியுள் பொருந்துகின்றது. அக்தகைய பொருத்தினால் முன்னும் பின்னும் உட்புறமும் வெளிப்புறமும் பொருத்துக்களை அசைக்கவும் வட்டமாகச் சுழற்றவும் வளைக்கவும் இயலும். சுழியாணிப் பொருத்துக்கள் ஓரளவு வளைப்பதற்கு இடம் கொடுப்பன. முதுகின் தண்டின் முடிவோடு தலை பொருந்துமிடம் அத்தகைய பொருத்தாகும் தலையை முற்றிலும் வட்டமாகச் சுழற்ற முடியாது, கையின் உள்ளெலும்பும் புற எலும்பும் பொருந்துமிடமும் அத்தகையதே. அதனால் கையை மேலுங்கீழுமே அசைத்தல் கூடும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *