
உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை
சுவாச நிகழ்ச்சி
மூச்சுக் கருவிகளென்பன (Lungs) நெஞ்சிற்குமேல் மார்பகத்திலுள்ள இரண்டு தொய்வுள்ள பைகளாகும். அப்பைகள் கடற் பஞ்சு போன்ற அமைப்புள்ளன. அவற்றிலுள்ள துவாரங்கள் காற்று நிறைந்திருப்பன. மற்றப் பகுதி தொய்வுள்ள சேர்ப்பிழைகளாலும் மயி ரிழைகளாலும் நிறைந்துள்ளது. நெஞ்சத்தின் வலது கீழறையில் நின்று சுவாசப்பைக்குச் செல்லும் கருப்பு இரத்தமானது அங்குள்ள மயிரிழைக் குழல்களுக்குள் பாயும். அவற்றிற்கும் காற்றுத் துவாரங்களுக்குமிடையே ஈரமான மெல்லிய தாள் மட்டுமே யிருப்பதால் அவற்றிலுள்ள இரத்தமானது காற்றிலிருந்து உயிர்க் காலினை (Oxygen) வாங்கிக் கொள்ளவும் காற்றிற்குத் தன்கணுள்ள கரிப்புளிப்பை (Carbonic acid)க் கொடுத்து விடவும் இயலும். இரத்தமானது உயிர்க்காலோடு சேர்ந்த காலை தூய செந்நிறத்தையடைகிறது. சுவாசப் பையில் இருக்கின்ற சுத்த இரத்தமானது நெஞ்சப் பையின் இடப்பக் கத்து மேல் அறையில் சென்று அங்கிருந்து பெருநாடி வழியாகப் பிறகருவிகளுக்கெல்லாம் செல்கின்றது. பிறகருவிகளிலுள்ள சிற்றணுக் கூடுகள் உயிர்க்காலினை இரத்தத்தினின்று வாங்கிக்கொண்டு தம்மிடத்திலுள்ள கரிப்புளிப்பை ரத்தத்திற் சேர்த்துவிடுகிறது.
உயிர்க்கால் இழந்த இரத்தமானது கருநீல நிறமடைந்து ஓடைகள் வழியாகச் சென்று நெஞ்சப் பையின் வலது அறைக்குள் பாய்ந்து அவற்றினின்று சுவாசப்பைக்குச் சென்று அங்கே உயிர்க்கால் பெற்றுத், தூய செந்நிறமடைகிறது. இரத்தத்திலுள்ள கரிப்புளிப்புக் காற்றானது இரத்தக் குழாய்களில் அமுக்குண்டு சுவாசப்பையிலுள்ள காற்றில் தாராளமாகக் கலக்கின்றது. காற்றிலுள்ள உயிர்க்காலானது இரத்தத்திற்குள் பாய்கின்றது. இரத்தத்திலுள்ள செந்நிறச்சத்து உயிர்க்காலோடு நன்கு கலந்துவிடுவதால் இரத்தத்துடன் உயிர்க்கால் உடம்பெங்கும் செல்வதற்குப் பொருத்தமேற்படுகிறது. போதுமான உயிர்க்கால் இரத்தத்திற் கலப்பதற்குச் சுவாசப் பையிலுள்ள காற்று புதுப்பிக்கப்பட வேண்டும். அது மூச்சு இழுப்பதாலும் விடுவதாலும் ஏற் படுகிறது. சுவாசப்பையுள் எப்போதும் சுமார் ஐந்தாழாக்கு நிறையுள்ள காற்று இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு தரம் மூச்சிழுக்கும் போதும் சுமார் அரையாழக்குக்காற்று உட்புகுந்து வெளிச்செல்கிறது. வெளிச்செல்லுங் காற்றில் வெளியேயுள்ள காற்றைப் பார்க்கிலும் நூற்றிலைந்து பங்கு உயிர்க்கால் குறையாயும் நூற்றில் நாலுபங்கு கரிப்புளிப்புக்கால் (Carbonic acid gas) அதிகமாயும் இருக்கிறது.
தொண்டையிலிருந்து சுவாசப்பைக்குக் காற்றுக் குழாயொன்று செல்கிறது. அது குருத்தெலும்புச் சுருள்களாலாகியது. அதன் மேல் முடிவில் குரல்வளையுள்ளது. காற்றுக் குழாய் இரைக்குழலுக்கு முன் பக்கத்திலுள்ளது. அது கழுத்துக்குக் கீழே சென்று இரு பிரிவாய்ப் பிரிந்து ஒன்று வலது சுவாசப்பைக்கும் மற்றொன்று இடது சுவாசப்பைக்கும் செல்கின்றது. அங்ஙனம் செல்லும் ஒவ்வொரு கிளையும் பலபல சிறு சிறு கிளைகளாகப் பிரிந்து கடைசியாக வெறுங் கண்ணிற்குப் புலப்படாத காற்றுத்துளைகளில் முடிகின்றன. சுவாசப்பையின் பல பாகங்களும் தொய்வுள்ள பல சேர்ப்பிழைகளாலும் தொகுதியான உதிரக்கலன்களாலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. காற்றுக் குழாயினுள்ளும் அதன் கிளை களினுள்ளும் கோழைத்தாளென்னும் ஈரப் போர்வை பொதிந்து கிடக்கிறது. அதிலுள்ள சிற்றணுக்கூடுகளில் நுண்ணிய உரோமம் போன்ற சத்துரும்புகள் நீண்டு கொண்டிருக்கும். அவை மேலுங் கீழும் அசைந்து கொண்டிருப்ப தால் அவை காற்றிற் கலந்துள்ள புழுதியைத் தொண்டைக்கு ஓட்டிவிடுகின்றன. ஆதலால் காற்றுக் குழல்களில் காற்று சுத்தமாக வைக்கப் பட்டிருக்கிறது. காற்றுக் குழல்களின் பக்கச் சுவர்களில் பல நீர்க் கோளங்கள் (Glands) இருக்கின்றன. அவற்றில் உமிழ்நீர் போன்ற ஓர்வகை நீர் தோன்றிக் காற்றுக் குழல்களை நனைத்துக் கொண்டிருக்கிறது.
சுவாசப்பையும் நெஞ்சப்பையும் மார்பாகிய பேரறையில் கிடப்பன. மார்பென்பது விலா வெலும்பு முதுகின்தண்டு, நெஞ்சு நடு வெலுப்பு என்பவற்றாலாகிய ஒரு எலும்புக் கூடு. விலாவெலும்பிற்கிடையிலேயுள்ள வெளி தசைத்திரையால் மூடப்பட்டிருக்கிறது.மார்பின் உட்பக்கம் முழுவதும் பக்கப்போர்வை (Pleura) யென்னும் மெல்லிய தாளால் பொதியப் பட்டிருக்கிறது. அது சுவாசப் பைகளையும் பொதிந்து கொண்டிருக்கிறது. சுவாசப்பைகள், இரத்தக் குழாய்களும் காற்றுக் குழாய்களும் அவற்றுட் புகுகின்ற இடத்தில் சேர்ப்பிழையினால் முதுகின் தண்டோடு இணைத்துக் கட்டப்பட்டிருக்கின் றன. அவற்றின் மற்றப் பகுதி மார்பறையி னுள் தொங்குகின்றன. பக்கப் போர்வையின் மேற்பரப்பானது (Surface) ஒருவகை நீரினால் நனைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சுவாசப்பைகள் மார்பறையின் உட்சுவர்களில்உராய்ந்து விடாமல் நழுவுந் தன்மையிலிருக்கின்றன. நோயுற்ற காலத்தில் பக்கப்போர்வை வீங்கிப்புண்ணாதலுங் கூடும். அப்போது சுவாசப்பைகள் எளிதாக இயங்கமுடியா. மார்பறையானது நெஞ்சப்பையினாலும் அதனை முதுகெலும்போடவும் நெஞ்செலும் போடவும் இணைக்கும் இழைக்கட்டினாலும் வலதறையாகவும் இடதறையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு சுவாசப்பை காற்று நிறையப்பெற்று முற்றிலும் பொருந்தியிருக்கிறது. மார்பறையின் அடிப்பாகத்தில் மார்பை வயிற்றினின்று பிரிக்குந் தசைச்சுவர் வில் வடிவாக இருக்கிறது. மார்பெலும்பின் மேற்புறத்தில் பல தசைத்திரள்களுள்ளன. அவற்றுட்சில தலையோடும் தோள் களோடும் தொடர்புடையன. மற்றவை இடுப் பெலும்போடு தொடர்புடையன.
இதுவரை உடம்பின் பொது அமைப்பும் எலும்புச்சட்ட அமைப்பு, பொருத்து, தசை, சேர்ப்பிழை முதலியவற்றினமைப்பும், குருதியி னியல்பும், நெஞ்சப்பை, சுவாசப்பைகளின் அமைப்பும் கூறப்பட்டன. இது இந்நூலின் முதற்பாகம். இனி வெளியிடப்பெறும் இரண்டாம் பாகத்தில் உடம்பிலுள்ள பிற கருவிகளினமைப்பும் தோல், நரம்பு, பொறிகள் என்பவற்றினியல்பும் விளக்கப்படும்.



