
உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை
உடலின் பொது அமைப்பு
நம்முடைய உடல் முழுவதிலுமுள்ள கருவி களுக்கு ஆதாரமான அடிப்படையாக எலும்புகள் அமைந்திருக்கின்றன. அவ்வெலும்புகள் நார்த் தன்மையுடைய வெண்ணிறமான தசைக்கட்டுக் களால் பொருத்துக்களில் இணைத்துப் பலமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அப்பொருத்துக்கள் இருப்பதினாலே எலும்புகள் ஒன்றின்மே லொன்று இயங்கக்கூடிய நிலையிலிருக்கின்றன.
தசைத்திரள்கள் (muscles) எலும்போடு பிணைக்கப் பட்டிருக்கின்றன. அவைகள் சுருங்குவதனால் எலும்புகள் அசைந்தியங்குகின்றன. இடுப்பிற்கு மேல் கழுத்து வரையுள்ள உடம்பில் மேற்பொந்து ஒன்றும் கீழ்ப்பொந்து ஒன்றும் இருக்கிறது. இரண்டையும் நெஞ்சின் குறுக்காகவுள்ள நீண்ட தசைத்திரள் ஒன்று (diaphragm) பிரிக்கின்றது. மேற்பாகம் மார் பென்றும் கீழ்ப்பாகம் வயிறென்றும் உலகவழக்கில் குறிக்கப்படும். மார்பின் நடுவில் இடப்பக்கத்தில் இருதயமென்னும் நெஞ்சப்பை ( heart ) அமைந் திருக்கின்றது. சுவாசப்பை (lungs) இரண்டும் இருதயத்திற்கு இடப்பக்கமும் வலப் பக்கமுமாக அமைந்திருக்கின்றன. வயிற்றின் மேல்பாகத்தில் வலது பக்கத்தில் நுரையீரல் (liver) அமைந்திருக்கின்றது. இடது பக்கத்தில் மேல் வயிறு அமைந்திருக்கின்றது.
இவ் விரண்டிற்கும் கீழே சுருண்டிருக்கும் குடர் உள்ளது. வாயில் நின்று இரைக்குழலானது மேல் வயிற்றுக்குள் செல்லுகிறது, அதினின்று அது குடர்க்குள் போகின்றது. உணவானது இக் கருவிகளில் சீரணமாகின்றது. மேல்வயிற்றிற்கு இடப்பாகம் மண் ஈரல் ( Spleen ) என்னும் சிறு கருவி இருக்கின்றது. குடலுக்குக் கீழே நீர்ப்பை இருக்கின்றது. குடலுக்குப் பின்னே நீர்க்குண்டிக் காய்கள் இருக்கின்றன. அவைகள் இரத்தத்தினின்று கழிவு நீரைப்பிரித்து விடவே அது நீர்ப்பைக்குள் சென்று புறத்தே சிறு நீராகக்கழிகின்றது. வாயின் பின்புறத்திலிருந்து தொண்டை வழியாகச் சுவாசப்பைக்கு ஒரு குழல் செல்கிறது. அதற்குக் காற்றுக்குழல் (Windpipe) என்று பெயர். அதற்குப்பின்னேதான் இரைக் குழல் (Gullet) செல்கின்றது. காற்றுக் குழலின் மேற்பகுதி குரல் வளை (Larynx) யெனப்படும். உள்ளே செல்லும் காற்றானது சுவாசப்பைக்குக் காற்றுக்குழல் வழியாகச் சென்று மீள்கின்றது.
இரத்தக் குழாய்களைக் கவனிப்போமானால் இருவகைக் குழாய்களிருக்கின்றன. ஒரு வகைக் குழாய்கள் நெஞ்சுப் பையில் நின்று உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தைக் கொண்டு போகின்றது. இன்னொரு வகைக்குழாய்கள் உடம்பின் ஒவ்வொரு பகுதியினின்றும் இரத்தத்தை இருதயத்திற்குக் கொண்டுபோகின்றன. இருவகைக் குழல்களுக்கும் சம்பந்தம் நெஞ்சப் பையிலே ஏற்படுகின்றது, இருதயமானது ஒரு வகைக் குழாய்களினின்று மற்றொரு வகைக் குழாய்க்கு இரத்தத்தை உறிஞ்சிச் செலுத்து கின்றது. அதனால் இரத்தமானது உடம்பு முழுவதும் சுற்றிச்சுற்றிச் செல்கின்றது.உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கு முள்ள உணவு இரத்தத்திலே கலந்திருக்கின்றது.
நரம்புத் தொகுதிக்குப் பிரதானமான நிலை மூளையும் முதுகெலும்புமாம். அவற்றினின்று நரம்புகள் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்கின்றன. மூளையானது தலையில் ஒரு எலும்புப் பெட்டிக்குள் அமைந்திருக்கின்றது. அதற்கு மேலுள்ள எலும்புப்பரப்பு கபாலமெனப்படும். கபாலத்தின் பின் பகுதியிலிருந்து முதுகிற் செல்கின்ற ஒரு கால்வாயிலே முதுகு நரம்பு அமைந்திருக்கின்றது. ஐம்பொறிகளாகிய கண், காது மூக்கு, நாக்கு, தோல், என்பவை பொறி நரம்புகள் வழியாக மூளைக்குச் செய்திதெரிவிக்கின்றன. அப்படித் தெரிவிப்பதால் ஒளி,ஒலி,வாசனை, சுவை, ஊறு என்னும் பொறியுணர்ச்சிகள் எழுகின்றன. அவைகளால் விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் முதலிய மன உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அவைகளுக் கேற்றவாறு உடம்பின் இயக்கம் ஏற்படுவதற்குத் தலையிலிருந்து கருவிகளுக்கும் தசைகளுக்கும் இயக்க நரம்புகள் செய்திதெரிவிக்கின்றன. அவற்றால் உடம்பின் செயல்கள் நிகழ்வதும் நிற்பதும் ஆதலறிக.



