
உடல் நூல்
கா. சுப்பிரமணிய பிள்ளை
சேர்ப்பு இழை. (Connective Tissue)
உடம்பின் மெல்லிய பாகங்களும் தசைகளும் பிற கருவிகளும் மெல்லிய சேர்ப்பிழைப் பின்னல்களால் ஒன்று சேர்த்துக் கட்டப்பட் டிருக்கின்றன. சேர்ப்பிழையானது சிலம்பி வலையினும் மிகநுண்ணிய இழைகளாலாய வலைகளா லாக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வெள்ளை யாயும் இறுக்கமாயுமுள்ளன. மற்றவை மஞ்சள் நிறமாயும் தொய்வாயுமுள்ளன. சேர்ப்பிழை வலைகளின் இடைத்துவாரங்களில் பொருந்தியுள்ள அணுக்கூடுகள் ஊன் இழைகளுக்கு ஊற்றாகவுள்ளன. அந்தக் கூடுகளில் இரத்தத்தினால் கொண்டுவரப்படுகிற உணவு அதிகமான போது, கொழுப்பாக மாறுகிறது. தோலையும் தசையையும் ஒன்று சேர்க்கிற சேர்ப்பிழ யானது கொழுப்பு நிறைந்ததாக இருப்பதால் சதையின் மேற்புறத்திலுள்ள மேடு பள்ளங்களைச் சமப்படுத்தி உடம்பின் வடிவத்திற்கு வளைவும் வனப்புங்கொடுத்துத் தசை மெத்தை போலப் பொருந்தியிருக்கின்றது. அதிலுள்ள நிணமானது உடம்பிலுள்ள சூட்டை வெளிப்போகாமற் தடுக்கும். ஆடைபோலிருப்பதுடன் அது அவசியமான போது பயன் படுத்தக்கூடிய உணவுக் களஞ்சியமாயுமிருக்கிறது. எலும்புகளை ஒன்று சேர்த்துக் கட்டும் இழைக்கட்டுகளும் எலும்புகளையும் தசையையும் இணைக்கும் தசை நார்களும் வெள்ளிய இறுக்கமான திறமான கட்டுகளாக அமைந்துள்ளன.
எலும்பு:- எலும்பானது நிலத்தாதுப் பொருள்களடங்கிப் பலமும் உறுதியும் இறுக்க மும் உடைய சேர்ப் பிழைச்சத்துக்களாலாயது. நீண்ட எலும்பின் தண்டுகள் புடையுள்ள தாயிருப்பன. அப்புடையில் சத்து நிறைந்துள்ளது. தண்டிலுள்ள துவாரங்கள் வழியாக இரத்தக் குழல்கள் எலும்பினுட்சென்று ஊன்சத்திற்கு உதிரத்தைக் கொடுக்கின்றது. எலும்பின் மேற்புறம் கடினமும் இறுக்கமு முள்ள பகுதியையுடையதாயும் உட்புறம் கடல் நுரை போன்ற பகுதியையுடைய தாயுமிருக்கின் றது. நீண்ட எலும்புகளின் அத்தங்களிரண்டி லும் கடல்நுரைத் தன்மையுடைய எலும்பே யுள்ளது. அதன் சிலும்புகள் அழுத்தத்தைத் தாங்கக் கூடியதாயும் இழுப்பினை எதிர்க்கக்கூடிய தாயும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு துண்டு எலும்பைத் தீயிலெரித்தால் நிலத்தாது எலுப்பிலேயிருக்க ஊன் சத்து அழிந்துபோம். எலும்பின் வடிவம் மாறுவதில்லை.
ஆனால் அது வெள்ளையாயும் எளிதில் உடையும் தன்மை யுடையதாயும் ஆகிவிடும். சிலவாரங்கள் புளி நீரில் போட்டு வைக்கப்பட்ட எலும்பில் நிலத்தாது கழன்றுவிட ஊன்சத்து மாத்திரம் தங்கியிருக்கும். அப்போதும் எலும்பின் வடிவம் மாறுவதில்லை. ஆனால் அது மெதுவாயும் வளையத் தக்கதாயுமிருக்கும் எலும்பின் கனத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கனிச்சத்தாலேற் படுவன. ஒரு பங்கு ஊன்சத்தாலேற்படுவன. இறுக்கமான எலும்பின் ஒரு மெல்லிய துண்டை வெட்டிப் பூதக்கண்ணாடி வழியாகப் பார்த்தால் நடுவிலுள்ளதொரு நுண்ணிய குழாயைச் சுற்றி வளையங்களாக அடுக்கிய அடுக்குகள் தோன்றும். அவ்வடுக்குகளிலுள்ள கிளைகளுக்கு நடுவே சிறு கூடுகள் காணப்படும். கூடுகளடங்கிய பகுதிகளுக்கும் நுண்ணிய குழாய்க்கும் சம்பந்தமுண்டு. குழாய்களில் ஊன் சத்தும் உதிரக்குழல்களுமுள்ளன. உதிரத்தினின்று வேண்டிய உணவு கூடுகளுக்குச் செல்லுகின்றது.
எலும்புகளின் அத்தங்கள் பொருத்து களோடு சேருமிடத்தினால் அவை குருத்தினால் (Curtilage) பொதியப்பட்டுள்ளன. குருத்து, கண்ணாடி போன்றதாயும் தொய்வுள்ளதாயு மிருக்கின்றது. அதில் முட்டைபோன்ற அணுக் கூட்டுத் தொகுதிகள் இடையிடையே பரவிக் கிடப்பன. நெஞ்செலும்போடு சேரும் விலா எலும்பின் முனைகளும் காதின் வெளிப்பகுதியும் கழுத்திலுள்ள குரல்வளையுங் குருத்தினாலாயவை. குருத்தில் உதிரக்குழல்களிருப்பதில்லை. சில இடங்களில் குருத்து, நார்த்தன்மையுடையதா யிருக்கும்
தசைத்திரளென்பது (muscle) சேர்ப்பிழையால் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்ட ஊன் சிலும்புக்கட்டுகளாலாகியது. அச் சிலும்புகள் ஒரு அங்குல நீளமிருந்தாலும் அவைகளின் அகலம் பூதக்கண்ணாடியிற் பார்க்கக்கூடிய அதி நுட்பமானவை ஒவ்வொரு சிலும்பிலும் ஒன்று விட்டொன்று வெள்ளையும் கருப்புமாயுள்ள வரி களால் குறுக்கிடப்பெற்ற முதற்சத்தின் திரள் இருக்கின்றது. இது பற்றித் தசையானது வரை பாய்ந்துள்ளதென்று கூறப்படும். சிலும்பிலுள்ள முதற் சத்து கண்ணாடி போன்ற மெல்லிய சவ்வினுள்ளடங்கி யிருக்கின்றது. ஒவ்வொரு தசைத் திரளுக்கு ஒவ்வொரு நரம்பு ஓடுகின்றது. ஒவ்வொரு சிலும்பிற்கும் நரம்பின் ஒவ்வொரு கிளை செல்கின்றது. மூளையின் கட்டளைப்படி நரம்பானது தந்திக்கம்பி போலசைந்து தசையை அசைவிக்கின்றது. பொறிகளாகிய அறி கருவிகள் தங்களுக்குரிய நரம்புகள் வழியாக மூளைக்குச் செய்திகளனுப்புகின்றன. மூளையானது செய்திகளைப் பெற்றுக்கொண்டு தசைநரம்புகள் மூலமாய்த் தசைகளை அசையும்படி ஏவுகின்றது. மின்சாரத்தின் தாக்கினாலும் ஊசியினாற் குத்துவதினாலும் தசைகளைச் சுருங்கும்படி செய்யலாம். இவற்றால் நரம்பானது அசைவுற்றாலும் சுருங்குவதில்லை. தசை சுருங்குவதால் சூடு பிறக்கும். உடம்பின் சூட்டிற்கு அது ஒரு முக்கிய காரணம்.
இரத்தம்:- இனி உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் உணவையும் உயிர்க்காற்றையும் கொடுப்பதற்கும் அதிலுள்ள கழிவுப் பொருள் களை யெடுப்பதற்கும் பயன்படுகிற உதிரத்தைப் பற்றி ஆராய்வோம். இரத்தத்தில் மிக நுண்ணிய வட்ட வடிவமான அணுக்கூடுகள் நூறாயிரக் கணக்காக இருக்கின்றன. அவைகள் எவ்வளவு நுட்பமாய் இருக்கின்றனவென்றால் குண்டூசியின் தலையைப் பார்க்கிலுஞ் சிறிய இரத்தத்துளியில் ஐம்பது லட்சம் கூடுகளிருக்கின்றன. அவைகளே இரத்தத்திற்குச் செந்நிறத்தைக் கொடுப்பன. செந்நிறத்திற்குக் காரணம், அவற்றிலுள்ள கருச்சத்தாகும். அச்சத்து உயிர்க்காற்றினைத் தன்னகத்துக் கொள்ளும் ஆற்றலுடையது. இரத்தத்திலுள்ள சிறு கூடுகள் சுவாசப் பை வழியாகச் செல்லுங்காலத்தில் அங்குள்ள காற்றிலுள்ள உயிர்க்காலினை ஏற்றுக் கொள்கின்றன. அவைகள் கருவிகளிலும் ஊனிழைகளிலு முள்ள மயிரிழைக்குழல்கள் (Capillaries) வழியாகச் செல்லும்போது உயிர்க்காலினை அவற்றில் விட்டு விடுகின்றன. அதனாலே இரத்தத்திலுள்ள செந்நிறக்கூடுகள் கருவிகளுக்கெல்லாம் உயிர்க்காலினைக் கொண்டு கொடுக்குந்தன்மையன. இரத்தத்திலுள்ள கருச்சத்து உயிர்க்காலினையுட் கொண்டபோது ஒருவிதச் செந்நிற மாயும் அதனை விட்டுவிட்ட போது கருநீலங்கலந்ததாயு மிருக்கும். இரத்தக் கருச்சத்தில் சிறிது இரும்பும் கரி, உயிர்க்கால் வெடியுப்புக்கால், நீர்க்கால், கந்தகம், என்னும் இவைகளுமுள்ளன. இரும்பானது உயிர்க்காலை எடுத்துச் செல்வதற்குத் துணை புரிகின்றது.
இரத்தத்திலுள்ள செங்கூடுகள் (red corpuscles) தட்டையாயும் வட்டமாயும் பாதி வளைவுள்ளதாயுமிருப்பன. ஓங்களைப் பார்க்கிலும் மத்தியில் மெல்லியதாயிருக்கும். அவற்றில் நடுப் புள்ளி (Nucleus) யொன்றுங்கிடையாது இந்தச் செங்கூடுகள் நிலையான வாழ்க்கையுடையனவல்ல. உடம்பில் அடக்கடி அழிவுபட, எலும்பின் சத்திலுண்டாகின்ற புதுக்கூடுகள் அவற்றிற்குப் பதிலாக நிலை பெறுவன. இவைகள் ஒரு வகையான நீரில் மிதக்கின்றன. இந்த இரத்தத்தில் வெண்கூடுகளுமுள்ளன.
அவை ஐந்நூறு செங்கூடுகட்கு ஒன்றாக இரத்தத்திற் கலந்திருக்கும். வெண்கூடு ஒவ்வொன்றும் முதற் சத்தின் பிண்டமாக அமைந்துள்ளது. அதில் நடுப்புள்ளியுண்டு. வெண்கூடுகள் தங்கள் வடி வத்தை ஒடுக்கி மயிரிழைக் குழல்கள் வழியாக ஊனுக்குட் செல்லுகின்றன. வெளியிலுள்ள அழுக்காவது தாவர நுட்பங்களாவது உடம்பிற்புகுந்தால் வெண்கூடுகள் அவற்றை உட் கொண்டு நிணநீர்க் கோளங்களுக்குக் கொண்டு போய் அவற்றை அழிவுபடும்படி செய்கின்றன. அழுக்கை நீக்க முயல்வதில் வெண்கூடுகள் அழிந்தாலும் கோளங்களில் அவை தோன்றிப் பெருகிக்கொண்டிருக்கும்.
நீர்க் கோளங்கள்:- (Glands) என்பவை புளியங்கொட்டை அளவாய் அரைச்சந்து, கைச்சந்து, கழுத்து, சுவாசப்பை மூலம், குடற் போர்வை என்பவற்றிலிருக்குங் கருவிகளாகும். இரத்தத்திலுள்ள நீரில் ஒரு பகுதி மயிரிழைக் குழல்கள் வழியாக ஊன் தாதுக்களில் ஊறி ஊன் நீராகின்றது. ஊன் தாதுக்களிலுள்ள அணுக் கூடுகளுக்கு அது உணவளிக்கின்றது. கருவி களின் அணுக்கூடுகளை ஒன்றாய்ச் சேர்க்கின்ற சேர்ப்பிழைகளில் உள்ள நுண்ணிய இடங்களில் நிண நீர்க்கலங்களென்னும் சிறு பாத்திரங்களி ருக்கின்றன. ஊன் நீரின் ஒரு பகுதி அவற்றுட் பாய்கின்றது. சிறிய நிண நீர்க்கலன்கள் கூடிப் பெரிய கலன்களாகின்றன.
அவைகள் நீர்க் கோளங்கள் வழியாகச் சென்று மறுபடி ஒன்று சேர்ந்து கழுத்தின் அடியிலுள்ள உதிர நாளத்தில் நிண நீரைச் சேர்ப்பிக்கின்றன.
இரத்த ஓட்டத்தைப் பற்றி ஆராயுங்கால் மனிதனுடைய உடம்பானது நீர் நிறைந்த ஓர் கடல் பஞ்சிற்கு ஒப்பிடலாம். கடல் பஞ்சின் துளையில்லாத பகுதி உடம்பின் ஊன்தாது கட்கும் துளைப்பகுதி உதிரக்கலன்களும் நீர்க்கலன் களும் உள்ள உடற்பகுதிக்கும் ஒப்பிடலாம். தக்க தொருபையில் வைக்கப்பட்ட கடற்பஞ்சில் உள்ள நீரானது சிந்துவதுமில்லை. வற்றுவதுமில்லை. அதுபோல உடம்பு முழுவதையும் மூடும் தோற் பையானது உடம்பின் பல பகுதிகளையும் அவ்வ வற்றிற்குரிய இடங்களிலமைத்து உடம்பி லுள்ள நீர்கள் வற்றிவிடாதபடிக்கும் கீழ்ப் பாகங்களில் தங்கி விடாதபடிக்கும் தடுத்துக் காக்கின்றது. கடற் பஞ்சிலுள்ள நீரானது அசைவற்றிருக்கின்றது. உடம்பிலோ உதிர மானது ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம் இருதயமே.
இருதயம் அல்லது நெஞ்சப்பை யென்பது குவிந்து கீழ் நோக்கிய கமலம்போலிருக்கும். இருதயத்தின் மேற்பகுதி அகலமாக இருக்கும், கீழ்ப்பகுதி முனையாக இருக்கும். நெஞ்சக் கமலத்தின் முன் பக்கத்தில் அதன் இடது பக்க மிருந்து வலது பக்கம் போகின்ற கொழுப்பு நிறைந்த ஒரு தட்டையான வரை காணப்படும். அதன் பின்புறம் மத்திக்குமேல் ஒரு தட்டை வரை காணப்படும். அவ் வரைகள் வலப்பக்கம் இடப்பக்கம் என்று இரண்டு பகுதி நெஞ்சத்தில் உண்டென்பதைக் குறிக்கும். கமலத்தின் மேல் பாகத்தில் பிறிதொரு கொழுப்பு வரை கமலத்தைச்சுற்றிச் செல்வதாகக் காணப்படும். இதய மானது மேலறை கீழறை என்றிரண்டு பிரி வுடையதென்பதை அது குறிக்கும். இதயத்துள் வலப் பக்கத்துள் இரண்டறைகளும் இடப்பக் கத்துள் இரண்டறைகளுமுள்ளன. மேலறைகள் காதுபோன்றிருப்பன; கீழறைகள் புடை போன் றிருப்பன. இதயத்துள் வலப்பக்கமும் இடப் பக்கமும் முற்றிலும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு பக்கத்திலும் மேலறைக்கும் கீழறைக்கும் நடுவேயுள்ள பி ரிப்பில் ஒரு துவாரமுண்டு. அதன் ஓரத்தில் உள்ள மெல்லிய மடிப்புக்கள் ஒன்று சேரும்போது அவை முற்றிலும் பிரிந் தனவாகும்.
இடப் பக்கத்துக் கீழறை கனத்த தசையுள்ளதாயும் வலப் பக்கம் கீழறை மெல்லிய தசையுள்ளதாயுமிருக்கும். அதற்குக் காரணம் இடப்பக்கம் கீழறையிலிருந்து இரத்தமானது உடம்பு முழுவதும் செல்கின்றது. வலப்பக்கம் கீழறையிலிருந்து மூச்சுப்பைக்கு மாத்திரமே இரத்தம் செல்கின்றது. நெஞ்சக் கமலத்தின் புடைகளின் மேற்பகுதியிலிருந்து தொய்வுள்ள இரண்டு வெள்ளைக் குழாய்கள் செல்வதைப் பார்க்கலாம். வலது புடையிலிருந்து செல்லும் குழாய் மூச்சுப்பைக்குச் செல்லும் இரத்த நாடி யாகும். இடது புடையிலிருந்து செல்லுங்குழாயானது எஞ்சிய உடம்பின் பகுதியாவற்றிற்கும் உதிரத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது. அதைப் பெருநாடி யென்னலாம். நெஞ்சத்திலிருந்து உடம்பின் மற்றப் பகுதிகளுக்கு இரத்தத்தைக் கொண்டு போகும் குழல்களை நாடி (Arteries) யெனவும் மற்றப் பகுதியிலிருந்து இரத்தத்தை நெஞ்சத்திற்குக் கொண்டுபோகும் குழல்களை ஓடையெனவுங் (Veins) கூறலாம். நெஞ்சத்தின் வலக்காதறைக்குள் மேலிருந்து ஒரு ஓடையும் கீழிருந்து ஒரு ஓடையும் உட்செல்லுகின்றன. இடக்காதறைக்குள் சுவாசப் பையிலிருந்து நான்கு ஓடைகள் உட்செல்லுகின்றன வலது புடையினின்று சுவாசப்பைக்குச் செல்லும் இரத்த நாடியில் பாதிமதி போன்ற மூன்று மடிப்புக்களுள்ளன.
அவை நாடியிற் செல்லும் உதிரம் வலது புடைக்குள் மீளாமல் தடுக்கின் றன. அவ்வாறே வலது பக்கம் மேலறைக்கும் கீழறைக்கும் நடுவேயுள்ள துவாரத்தில் மூன்று கதுப்புக்களுள்ளன. அவை பக்க நாண்களால் பிணிக்கப்பட்டுள்ளன. அக் கதுப்புக்கள் மேலறையிலிருந்து கீழறைக்கு இரத்தம் செல்வதற்கு இடங் கொடுக்குமேயன்றிக் கீழறையிலிருந்து மேலறைக்கு செல்வதற்கு இடங்கொடாது. இடது புடையிலிருந்து செல்லும் பெரு நாடி (Aorta) யிலும் மூன்று கதுப்புக்களுள்ளன. அவ்வாறே இடது பக்கம் மேலறைக்கும் கீழறைக்கும் நடுவிலுள்ள துவாரத்தில் இரண்டு கதுப்புக்களுள்ளன. அவையும் அடைப்பாகப் பயன் படுபவனவே. நெஞ்சத்தின் வலது அறைக்குத் தலை, புயங்கள் முதலிய மேற்பாகத்திலிருந்து இரத்தத்தைக் கொணர்கின்றன. மேலோடை வழியாகவும் வயிறு கால்கள் முதலியவற்றிலிருந்து இரத்தத்தைக் கொணர்கின்ற கீழோடை வழியாகவும் வருகின்ற இரத்தமானது நிறைந்தவுடன் வலது மேலறையானது சுருங்கி வலது கீழறைக்குள் இரத்தத்தைச் செலுத்துகின்றது. பின்னர் வலது கீழறை சுருங்கி இரத்தத்தைச் சுவாசப்பை நாடிக்குள் செலுத்துகின்றது. அங்ஙனம் செலுத்துங்கால் வலது மேலறை அடைபட்டிருக்கும். வலது கீழறையிலிருந்து இரத்தம் நாடிக்குட்சென்றவுடன் வலது கீழறை விரிந்துவிடும். ஆனால் நாடியுட்சென்ற இரத்தமானது வலது கீழறைக் குள் வராதபடி மடிப்புக்கள் தடுத்துக் கொள்ளும். வலது மேலறையிலிருந்து மறுபடியும் இரத்தம் அதற்குள் பாயும். வலது பக்கத்தில் நிகழ்கின்றவாறே இடது பக்கத்திலும் அதே காலத்தில் சுவாசப்பைகளிலிருந்துவருகிற இரத்தம் இடது மேலறைக்குள் சென்று நிறைய, அது இடது கீழறைக்குள் பாய இடது கீழறையிலிருந்து இரத்தமானது பெருநாடிக்குட் செல்லும்.
மேலறை இரண்டும் ஒரே காலத்தில் நிறைந்து சுருங்கும். அவ்வாறே கீழறைகளும். இவை நிகழுங்காலுண்டாகும் துடிப்பே நெஞ்சத்துடிப் பெனப்படும். அது ஒரு நிமிஷத்தில் 70 தரம் நிகழும். நெஞ்சத்தின் இடப்பக்கத்தினின்று வெளிச்செல்லும் பெருநாடியானது மேலுங் கீழும் பல பிரிவுகளாகப் பிரிந்துசென்று மயிரிழையிலும் மிகச்சிறிய உதிரக்கலன்களின் தொகுதியில் முடிகின்றது.
அவ்வுதிரக்கலன்கள் மயிரிழைக்கலன்கள் (Capillaries) எனப்படும். அவற்றிலுள்ள இரத்தத்திலிருந்துஊனிலுள்ள சிற்றணுக் கூடுகளுக்கு உணவும் உயிர்க்காலும் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு இரத்த நாடியைக் கிள்ளினால் நெஞ்சத் துடிப்புத் தோறும் இரத்தம் வெளியே பாய்ந்து செல்லும். பக்கத்திலுள்ள நாடியில் நெஞ்சின் துடிப்பை யுணரலாம். நாடிகள் தொய்வுள்ள தசைகளாலாக்கப்பட்டிருப்பதால் எந்தக் கருவிக்கு அதிகமாக இரத்தம் இரத்தம் செல்லவேண்டுமோ அந்தக் கருவிக்கு இரத்தத்தைச் செலுத்துவதற்காக விரியவும் பிற கருவிகளுக்கு இரத்தச் செலவைக் குறைப்பதற்காகச் சுருங்கவும் ஏற்றவைகளாயிருக் கின்றன.
உடம்பின் பிற பகுதிகளிலிருந்து இரத்தத்தைக் கொண்டு செல்லும் ஓடைகளில் இரத்த வோட்டமானது தசைகளின் இயக்கத்தினாலே நிகழ்கின்றது. முக்கியமாக சுவாசத்திற்குக் காரணமான தசைத்திரளின் இயக்கத்தால் ஓடைகளில் இரத்த ஓட்டம் செவ்விதில் நிகழ்வதால் சுவாச முயற்சியும் அதற்குக் காரணமான உடற் பயிற்சியும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வன.



