
கயத்தாற்றில் கட்டபொம்மன்
ம. பொ. சிவஞானம்
தீ மூட்டிய திருநாள் !
தமிழ்ப் பெரு மக்களே !!
வணக்கம்.இன்று நாம் எந்த சமாதியின் முன்பு கூடியிருக்கிறோமோ, அந்த சமாதி உள்ள இடம் வீர பாண்டியக் கட்டபொம்மனின் பொன்னுடல் எரிக்கப்பட்ட புனிதப் பதியாகும். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்தியக் கம்பெனியார், புவியாண்ட வீரபாண்டியனைப் புளியமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்ற இடமும் இதுதான். கொன்றதோடு நின்றார்களா? அவ்வீரனின் உடலுக்குக் கொள்ளி வைத்தும் கொளுத்தினர். கொள்ளி வைக்கப் பிள்ளை இல்லாக் குறையை வெள்ளையர்கள் தீர்த்து வைத்தனர் போலும் !
வீரபாண்டியனைப் போன்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட இன்னொரு வீரமாதை, பிரஞ்சு தேசத்தின் வரலாற்றில் பார்க்கிறோம். ஆர்க் ஜோன் என்ற பெயர் தாங்கிய அந்த வீரமாது பதினைந்தாம் நூற்றாண்டில் வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்தாள். ஆங்கிலேயர், ஆர்க் ஜோனை மக்களறிய பொது இடத்தில் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தினர். “பெண்ணென்றால் பேயும் இரங்கும்” என்பது தமிழகத்துப் பழமொழி. ஆனால், ஏகாதிபத்திய வெறி, கொடுமையில் பேய்க் குணத்தையும் மிஞ்சியது போலும்!
எந்த ஏகாதிபத்திய வெறி, ஆர்க் ஜோனை தீயிலிட்டுப் பொசுக்கியதோ, அதே வெறிதான் வீரபாண்டியன் உடலையும் சாம்பலாக்கியது. ஆனால், ஆங்கிலேயர் ஆர்க் ஜோனைத் தண்டித்ததற்கும் வீர பாண்டியனைத் தண்டித்ததற்கும் ஒரு வேற்றுமை உண்டு. பிரஞ்சு வீராங்கனையை உயிரோடு கொளுத்தினர்; செந்தமிழ் நாட்டு வீரன் உயிரைப் பிரித்த பின்னரே, உடலைக் கொளுத்தினர். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுக்குள், ஆங்கிலேயர்கள் அந்த அளவில் நாகரீக வளர்ச்சி யடைந்தனர் போலும்! அன்று பாஞ்சை மன்னனின் உடலில் மட்டும் தீ மூட்டினார் களில்லை. பாரத மக்கள் எல்லோரது உள்ளத்திலும் தீ மூட்டினர். அந்தத் தீயானது, இந்தியர்களின் அடிமைக் குணங்களைச் சுட்டெரித்து உரிமைப் போருக்கு உணர்ச்சி தந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியார், வீரபாண்டியனின் உடலிலும், இந் திய மக்களின் உள்ளங்களிலும் தீ மூட்டிய நாளையே இன்று திருநாளாகக் கொண்டாடுகிறோம்.
வீரபாண்டியன், 1760 ஜனவரி 3-ந் தேதி மண் ணுலகில் தோன்றினான்.
1790 பிப்ரவரி 2ந்தேதி, பாஞ்சாலங் குறிச்சிக்கு மன்னனானான்.
1799 அக்டோபர் 16ந் தேதி, தனது உடலைப் புளிய மரத்தில் தொங்க விட்டு பொன்னுலகம் புகுந்தான். முப்பத் தொன்பதாம் வயதிலேயே அந்த இளங்காளையின் வாழ்வுக்கு முடிவு கட்டி விட்டனர் கம்பெனி வெள்ளையர்கள்.
ஒன்பதாண்டு அரச வாழ்வில், இரண்டாண்டுகளே அமைதியாக அரசாண்டான். எஞ்சிய ஏழு ஆண்டுகள், வஞ்சக ஆங்கிலேயருடன் சச்சரவும் சண்டையுமாகவே கழிந்தன.
வீரபாண்டியன், செந்தமிழ் நாட்டின் பழங்குடி மகனல்லன். ஆந்திர நாட்டிலிருந்து தமிழகத்தில் அண்டிப் பிழைக்க வந்த ஆதிக் கட்டபொம்மனின் வழித் தோன்றல். ஆதிக் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் இடைப்பட்ட காலம் எழுநூறு ஆண்டுகளாகும். இந்த எழுநூறு ஆண்டுகளில் கட்டபொம்மன் மரபினர் தமிழ்ப் பண்புகளோடு இரண்டறக் கலந்து தமிழ் இனத்தவராகவே மாறிவிட்டனர். ஆகவே, வீரபாண்டியனை நாம் தமிழ் மகனாகவே எண்ணுகிறோம். ஒரு வீரத் தமிழ் மகனின் திருநாளை, அவன் மறைந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதல் துவக்கிவைக்கும் பேறு பெற்றதற்கு நான் பெருமையடைகிறேன்.
காகம் பறவாது கட்டபொம்மன் சீமையின் மேல் !
18-ம் நூற்றாண்டின் இறுதியில், தென்னாடு முழு வதும் ஆற்காடு நவாப்பின் ஆட்சியே நிலைத்திருந்தது. என்றாலும், தென்னாட்டு சிற்றரசர்கள் மீது ஆதிக்கம் செலுத்த நவாபால் முடியவில்லை. பேரரசரான நவாபுக்கு சிற்றரசர்கள் கப்பம் செலுத்த வேண்டுமென்பது அரசியல்மரபு. அந்த மரபுக்கு வீர பாண்டியக் கட்டபொம்மன் மதிப்பு தரவில்லை. நவாபுக்கும் அவனிடம் வற்புறுத்தி வரிவாங்க வல்லமையில்லை. வீரபாண்டியன், தட்டிக் கேட்க ஆளின்றி பாஞ்சைப் பதியில் தனி ஆட்சி புரிந்து வந்தான்.
“காகம் பறவாது கட்டபொம்மன் சீமையிலே” என்பது பாஞ்சை மக்கள் வழங்கிவந்த பழமொழி. காகங் கூட, கட்டபொம்மனின் அனுமதி பெற்றுத்தான் பாஞ்சைப் பதியின் மேல் பறக்க வேண்டும் என்று கற்பனை செய்யும் அளவுக்கு கட்டபொம்மன் அதிகாரம் செலுத்தினான்.
அக்காலத்தில், இந்தியாவில் வாணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் வட்டிக்கடை வைக்கலாயினர். நவாபுக்கும் கடன் கொடுத்து, நண்பர்களாயினர். ஆன முதலில் அதிகம் செலவழித்து மான மிழக்குந் தறுவாயில் இருந்த நவாப். தாம் வாங்கிய கடனுக்காக நாடு முழுவதும் வரி வசூலித்துக் கொள்ளும் உரிமையை வெள்ளை ‘மார்வாடிகளு’க்கு வழங்கினார். ஆம்; நாட்டையே அடகு வைத்து விட்டார் நவாப்! நாளடைவில், தென்னாட்டின் அரசுரிமையும் ஆங்கிலேயர் வசமாயிற்று.
“வானம் பொழியுது ; பூமி விளையுது; மன்னவன்
காணிக்கு கிஸ்தி ஏது?”
கண்ணாடியும் சீப்பும் விற்கவந்த வெள்ளையர்களுக்கு மண்ணாசை வெறி தலைக்கேறியது. தென்னாட்டிலுள்ள பாளையக்காரர்கள் எல்லோரும் தாங்கள் இருக்கும் திக்கு நோக்கி வந்து திறை செலுத்த வேண்டு மென்று ஆணையிட்டனர். மானம் என்ற சொல்லின் பொருளறியாத மன்னர் பலர், வெள்ளை யர்களின் ஆணைப்படி வரி செலுத்தினர். ஆனால், மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போன்று மான உணர்வுடைய வீரபாண்டியன், தான் உயிர் நீக்க நேரினும் வரி செலுத்த முடியாதென்று கூறிவிட்டான். வானம் பொழியுது, பூமி விளையுது; மன்னவன் காணிக்கு கிஸ்தி ஏது என்று வெள்ளையருக்குக் கேள்வி விடுத்தான். “தான மென்னிலோ, தருவேன்; வரி எனில் தாரேன்” என்று வல்லமை பேசினான். நாடாளும் மன்னன் நாடோடிகளுக்கு வரிசெலுத்துவதை எந்த நாட்டின் வரலாற்றிலும் கண்டது மில்லை; கேட்டது மில்லை. அதிலும், இந்தியாவில் தோன்றிய சாம்ராஜ்யங்கள் எதற்கும் கட்டுப்படாக. தமிழகமா, கடலோடி வெள்ளையர்களுக்குக் கப்பம் செலுத்துவது! ஆனால், அதிகார வெறி பிடித்த ஆங்கிலேயர் அரசு நெறி மறந்தனர். அதிகாரிகளை அனுப்பி வீரபாண்டியனை அதட்டிக் கேட்டனர்; கடிதங்கள் மூலமும் கட்டளைகள் அனுப்பினர். எல்லாவற்றிற்கும் வீரபாண்டியன் அளித்த ஒரே பதில், “இல்லை” என்பதுதான். 1792 முதல் 1799 செப்டம்பர் வரை வீரபாண்டியனிடம் வரி வசூலிக்க வெள்ளையர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
மூண்டது போர்!
இறுதியாக, 1799 செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கிழக்கிந்தியக் கம்பெனியாரின் படைகள் ஒருநாள் நள்ளிரவில் பாஞ்சாலங் குறிச்சியை முற்றுகையிட்டு கோட்டையைத் தாக்கின. ஆங்கிலேயரின் படையெடுப்பைக் கண்டு வீர பாண்டியன் அஞ்சவில்லை. வெள்ளையரின் படைகளை எதிர்த்து பாஞ்சைப் பதியானின் படைகள் வீரப் போர் புரிந்தன.. வீரபாண்டியன் படையினருக்கும் வெள்ளைப் படை யினருக்கும் ஒரு வித்தியாச மிருந்தது. பாஞ்சைப் பதியானின் படையினர், சுதந்திரத்திற்காகப் போரிட்டனர். பரதேச வெள்ளையரின் படையினர், ‘சோற்றுக்காகப்’ போரிட்டனர். ஆகவே, சுதந் திரப் படையை எதிர்த்து சோற்றுப் படை எளிதில் வெற்றி காண முடியவில்லை. முதல் நாள் போரிலேயே கம்பெனிப் படையினர் களைத்து விட்டனர். காலின்ஸ் என்ற ஆங்கிலத் தளபதி வெள்ளைத் தேவனின் ஈட்டிக்கு இரையானான். தோள் பலமும் துப்பாக்கி பலமும் பயனற்றுப் போகவே, வெள்ளைப் படையினர், தங்களிடமிருந்த பேய் வாய்ப் பீரங்கிகளைக் கொண்டு பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டை மீது குண்டுமாரி பொழிந்தனர். பகைவனின் படைபலமறிந்த வீரபாண்டியன் வெள்ளையர் அறியாவண்ணம் நள்ளிரவில் கோட்டையிலிருந்து வெளியேறி விட்டான்; ஆங்கிலேயர் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதுடன் வீரபாண்டியனின் குடும்பம் முழுவதையும் கைது செய்து சிறைவைத்தனர்.
வீர பாண்டியன் போரிட்டது பாஞ்சாலங்குறிச்சியின் சுதந்திரத்திற்காக மட்டுமன்று; பாரத நாடு முழுவதும் விடுதலை பெறவாகும். ஆனால், மானத்தை விட மாளிகை வாழ்வே பெரிதென்றெண்ணிய தென்னாட்டுக் குறுநில மன்னர் பலர் வீரபாண்டியனுக்கு விரோதமாக இருந்தனர். பாஞ்சைமன்னன் கோட்டையை இழந்த பின்னரும் கொள்கையை விட்டானில்லை. இரவோடு இரவாக, ஊர் ஊராகச் சுற்றி தென்பாண்டி நாட்டு பாளையக்காரர்களை எகாதிபத்திய எதிர்ப்பு முகாமில் ஒன்று திரட்ட முயன்றான். புதுக்கோட்டை அரசன் வீரபாண்டியனுக்கு உதவி புரிவது போன்று பாவனை செய்து அவ்வீரனை வெள்ளையரிடம் பிடித்துக் கொடுத்தான். எட்டயாபுரத்தரசரும், புதுக்கோட்டை தொண்டைமானின் துரோகச் செயலில் பூரணமாக பங்கு கொண்டார். புதுக் கோட்டையில் சிறைபிடித்த வீரபாண்டியனை, கயத்தாறு கொண்டுவந்து கொன்றனர். வீரபாண்டியன் தூக்கில் மாண்ட பின்னர் அவனோடு கூடப்பிறந்த தம்பியரும் குடிமக்களும் செய்த புரட்சியை ‘வீர பாண்டியக் கட்ட பொம்மன்’ என்ற எனது நூலில் விரிவாகக் காணலாம்.
செஞ்சி வேந்தனின் வழித்தோன்றல்.
வந்தவருக்கெல்லாம் அடிமைப்பட்டு வாழ்வது செந்தமிழ் நாட்டாரின் வழக்கமன்று. இதற்கு செஞ்சிவேந்தனின் வரலாறே சிறந்த சான்று.
தேசிங்கு என்பவன், தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள செஞ்சிப்பதியாண்ட சிற்றரசனாவான். அவன் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் இந்திய நாட்டில் பரவிக் கிடந்தது. தென்னாடாண்ட நவாப் என்பான், பேரரசன் என்ற பெருமையிலே கப்பம் செலுத்திக் கைகட்டி வாழுமாறு செஞ்சி வேந்தனுக் குக் கட்டளை அனுப்பினான். மானத்தை இழந்து மண்ணாள விரும்பாத செஞ்சி வேந்தன் வரிசெலுத்த மறுத்து வாளேந்திப் போர் புரிந்தான். என்றாலும், பணபலமும் படைபலமும் படைத்திருந்த நவாபின் பேரரசு வேந்தன் தேசிங்கை வெற்றி கண்டுவிட் டது. ஆனால், தேசிங்கு கடைசிவரை போரிட்டே மாண்டான். தேசிங்கு காட்டிய அதே தன்மானப் பாதையில்தான் வீரபாண்டியனும் சென்றான். வேந்தன் தேசிங்கு எதிர்த்தது, இஸ்லாமியப் பேரரசை. வீரபாண்டியக் கட்டபொம்மன் எதிர்த்தது, இங்கிலீஷ் பேரரசை. அந்த இரண்டு பேரரசுகளின் எண்ணமெல்லாம் தமிழகத்தை அடிமைப் படுத்துவதேயாகும். அந்தப் பேரரசுகளை எதிர்த்த இரு பெரும் தமிழ் வீரர்களின் லட்சியம் எல்லாம் தமிழகத்தின் சுதந்திரத்தைக் காப்பதாகும்.
வீரன் தேசிங்கு, அரியாசனத்திலிருந்து அர சாண்ட செஞ்சிக் கோட்டையை பிரிட்டிஷார் அழியாமல் காத்து வந்தனர். செஞ்சி வேந்தனின் சுதந்திர வேட்கைக்கு இன்றளவும் சான்றாக விளங்குகின்றது அக்கோட்டை. ஆனால், கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டியனின் அரண்மனையை அழித்ததோடு அவன் அரசாண்ட நகரத்தையே பாலைவனமாக்கி விட்டனர்.
எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக் கழுதை மேய்ப்பாழ் ஆயினும் ஆகும்
என்ற ‘வெற்றி வேற்கை’க் கருத்துக்குச் சான்றாக பாழடைந்த பாலைவனமாகக் கிடக்கும் பாஞ்சைப் பதியைப் பார்க்கும் போது, என்னையறியாமலே என் கண்கள் நீரைச்சொட்டின.
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து நெற்பொலி நெடுநகர்…….
ஆகும். காலம்தான் நாம் களிப்படையும் காலம்.. ஆட்சியாளர் மனம் வைத்தால் இது ஆகாத காரிய மன்று.
செஞ்சிக் கோட்டையைக் காத்துவந்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியை மட்டும் அழிக்கக் காரணமென்ன? செஞ்சிப்பதியான் இங்கிலீஷாரின் எதிரியல்ல; இஸ்லாம் சாம்ராஜ்யத்தின் எதிரி. ஆகவே, அவனது கோட்டையைப் பார்க்கும் ஒரு தமிழனுக்கு இஸ்லாம் மதத்தவர் மீது கோபம் உண்டாகும்; அதனால் இந்து முஸ்லிம் பகை வளரும்; இங்கிலீஷ் ஆட்சி என்றென்றும் இருந்து வரத் துணைபுரியும். பாஞ்சைப் பதியானோ, இங்கிலீஷ் சாம்ராஜ்யத்தின் எதிரி. அவனது அரண்மனையை விட்டு வைத்தால், அது, அந்தப் பெரு வீரனின் தேச பக்தியை-புளிய மரத்தில் தொங்கிய புனித தியாகத்தை – நினைவூட்டி, ஏகாதிபத்திய எதிர்ப்புக்குத் துணை செய்யும். ஆகவே, அதை அழித்து விட்டனர்.
செஞ்சி வேந்தன் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எதிர்த்தாலும் அவன் இஸ்லாத்தைப் பின் பற்றும் முஸ்லீம்களின் எதிரியன்று. மகமத் தாவூத்கான் என்ற இளைஞன் அவனது தளபதியாக போரில் ஈடுபட்டு இறந்த தொன்றே இதற்குச் சான்றாகும். அதே போன்று, வீரபாண்டியன் ஆங்கிலேயரின் சாம்ராஜ்ய வெறியை எதிர்த்தாலும், அவன் ஆங்கில சாதிக்கு எதிரியாக இருக்கவில்லை. காப்டன் டேவிட்சன் என்ற வெள்ளையர் ஒருவரை தனது ஆலோசகராகப் பெற்றிருந்தான் வீரபாண்டியன். தீமையை எதிர்த்துப் போரிடும் சமயத்திலும் அத் தீமைக்கு இறையான சாதியாரைப் பகைக்காததே தமிழர் பண்பு.
வீர பாண்டியனை வெற்றி கண்டது ஆங்கிலேயர்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களது வெற்றிக்குத் துணையிருந்தது இரு தமிழ் வேந்தர்கள் என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பறம்பு மலையாண்ட பாரி வேந்தனுக்கு நேர்ந்த கதியே பாஞ்சை வேந்தனுக்கும் நேர்ந்தது. எட்டயாபுரத் தரசனும், புதுக் கோட்டை வேந்தனும் காட்டிக் கொடாதிருந்தால் வெள்ளைப் படைகள் வீர பாண்டியனை வீழ்த்தி யிருக்க முடியாது. அன்பனென்று நம்பி அடைக் கலம் புகுந்தவனை, அயர்ந்துறங்கும் நேரத்தில் ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுத்த ‘பெருமை’ புதுக் கோட்டை மன்னன் விஜய ரகுநாதத் தொண்டமானின் தனி உரிமை. பாரி வேந்தனின் வீழ்ச்சியால் தமிழகம் அன்னியருக்கு அடிமைப்பட வில்லை. ஆனால், வீர பாண்டியனின் வீழ்ச்சியால் தமிழகம், அன்னியருக்கு அடிமைப் பட்டது. அதன் விளைவாக, தமிழ் மக்கள் ஒன்றரை நூற்றாண்டுகள் அல்லல் பட்டனர்.
ஆயுதப் போரும் அறப் போரும்
வீர பாண்டியன் நடத்தியது அறப்போரன்று, ஆயுதப் போர்; அவன் கருத்தில் அறமிருந்தது.. ஆனால், அவனது கையில் ஆயுத மிருந்தது. பிற் காலத்தில், காந்தியடிகள் துவக்கிய அறப் போரில் கலந்த சீரிய நெறிகள் அனைத்தும் வீர பாண்டியன் நடத்திய ஆயுதப் போரிலும் கலந்திருந்தது. வீர பாண்டியன், ஆங்கிலேயருக்கு வரி செலுத்த வேண் டாமென்று தென்னாட்டு மன்னர்களை வேண்டி னான். அதே வரி கொடாமை இயக்கத்தைத்தான் மக்களுக்குப் போதித்தார் காந்தியடிகள். பாண்டியனின் வரி கொடா இயக்கம் ஆயுத பலத்தால் நடத்தப்பட்டது. காந்தியடிகளது வரிகொடா இயக்கமோ அஹிம்சை பலத்தால் பெற்றது.
வீர பாண்டியன் சாதாரண குடி மகனன்று; நாடாண்ட கோவேந்தன ஆகவே, அவன் ஆயுதம் கொண்டு அன்னியரை எதிர்த்தது. பிழையன்று; பெருமைபடக் கூடியதே. ஆனால், காந்தியடிகளோ சாதாரணக் குடிமகனாவார். ஆகவே, அவர் ஆயுத மேந்த உரிமையற்ற மக்களுக்கு அற வழியைப் போதித்தார். மேலும், ஆயுதத்தின் வெற்றி அதன் அளவைப் பொறுத்ததே ஒழிய, ஆயுதம் தாங்குவோரின் அறத்தைப் பொறுத்ததன்று. வீர பாண்டியன் வீழ்ச்சியுறக் காரண மென்ன? ஆற்றல் குறைவா? ஆள் பஞ்சமா ? இல்லை; இல்லை. ஆயுதக் குறைவே யாகும். வீர பாண்டியனிடம் வாளும், வேலும், கோலும் தவிர வேறில்லை. ஆங்கிலப் படைகளிடமோ, பீரங்கி துப்பாக்கி போன்ற நவீன போர்க் கருவிகள் நிறைய இருந்தன. ஆம்; ஆயுத பலத்தில் வீர பாண்டியனை மிஞ்சி விட்டனர் வெள்ளைக் கூட்டத்தார். ஆகவே, வீர பாண்டியன் வீழ்ச்சியுற்றான்; வெள்ளையர்கள் வெற்றி பெற்றனர். தெற்கே பாஞ்சைப் பதியில் கிடைத்த இதே பாடத்தைத்தான் வடக்கே சிப்பாய் புரட்சியும் நமக்குப் போதித்தது. காந்தியடிகள் இந்த இரு புரட்சியின் நுட்பங்களையும் நன்குணர்ந்தவர். எவ்வளவுதான் முயன்றாலும், அடிமைப்பட்ட இந்திய மக்கள் ஆங்கிலேயருக்குச் சமமாக ஆயுத பலம் பெறுவது முடியாத காரியம். இதையறிந்தே அண்ணல் காந்தி அறப்போர் தொடுத்தார். அந்த அறப் போருக்கு ஒத்திகை போன்றது, பாஞ்சையில் நடந்த ஆயுதப் போர். ஆகவே, லட்சியத்தைப் பொறுத்த வரையில், காந்தீய நெறியாளரும் கட்ட பொம்மனைப் போற்றுவதில் பிழையில்லை.
பாஞ்சைப் புரட்சிக்கு ஈடான புரட்சியை நாம் பார்த்ததில்லை. ஏன்? ஏடுகளில் கூடப் படித்ததில்லை. பாண்டவருக்கும் கௌரவருக்கும் நடைபெற்ற குரு க்ஷேத்திர யுத்தத்தோடு ஒப்பிடலா மென்றால், அது அண்ணன் தம்பிகளுக்குள் நடந்த அவமானச் சண்டை; பாஞ்சைப் புரட்சியோ, அன்னியரை எதிர்த்து நடத்திய அரசுரிமைப் போராகும்.
பிரஞ்சு வீரன் நெப்போலியன் நடத்திய ‘வாட்டர்லூ ‘ யுத்தத்தோடு ஒப்பிடலா மென்றால், அது ஏகாதிபத்திய வெறியால் நிகழ்த்திய போர்; வீர பாண்டியன் நடத்தியதோ, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்.
பாஞ்சைப் புரட்சிக்குப் பின்னால் நடந்த சிப்பாய் புரட்சியோடு ஒப்பிடலாம் என்றால், அது பத்தே மாதங்களில் முடிந்து விட்டது; பாஞ்சைப் புரட்சியோ பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. மேலும், சிப்பாய் புரட்சிக்கான அடிப்படைக் காரணம் அரசியலா ? மதமா ? என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமா யிருக்கிறது.
ஆம், கட்டபொம்மன் சகோதரர்கள் நிகழ்த்திய போர் ஈடு இணையற்றது. அது, ஆயுத பலத்தின் இறுதிப் போர், அறப்புரட்சியின் துவக்கப் போர். பாஞ்சாலங்குறிச்சி வேந்தன் தனித்து நின்று போராடவில்லை. நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, சிவகங்கை ஆகிய பாளையங்களின் தலைவர்கள் பலர் பக்கத்துணை யிருந்தனர். வீரபாண்டியன் ஊராண்ட வேந்தன்; அவனுக்கு உதவி புரிந்தவர்களிலும் நாடாண்ட மன்னர்கள் பலருண்டு. ஆயினும், பாஞ்சைப் போர், பாண்டி நாட்டு மன்னர்களுக்கும் பரதேசி வெள்ளையர்களுக்குமாக நடந்த போர்மட்டுமன்று. கோவேந்தர்களோடு, அவர்களது குடி மக்களும் புரட்சியில் பூரணமாக பங்கு கொண்டனர் என்பதை ‘வீரபாண்டியன் வரலாறு’ வெளிப் படுத்தும்.
பாஞ்சைப் புரட்சியில் ஆங்கிலேயர் செய்த கொடுமை கொஞ்சமன்று; பாஞ்சாலப் படுகொலையையும் மிஞ்சியதாகும். ஆங்கில நாடோடிக் கூட்டத்தார் கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டுக் கொன்றதோடு நிற்கவில்லை. வீரபாண்டியனுக்கு அரசு நெறி உணர்த்தும் அமைச்சராய், ஆபத்துக் குதவும் நண்பராய், குடும்பத்தின் ஏகத்துணைவராய் இருந்த தானாபதிப் பிள்ளையையும் நாகலாபுரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றனர். உயிர் நீத்த பின்னர், பிள்ளையின் தலையை வெட்டி, வேல்முனையில் குத்தி, பாஞ்சாலங்குறிச்சி வீதிகளிலே பவனி கொண்டு சென்றனர். ஏன் தெரியுமா? பாஞ்சைப்பதி மக்களை பயமுறுத்துவதற்காக. ஆங்கிலேயரின் வெறி அதோடு நிற்கவில்லை. வீரபாண்டியனின் தளபதியாகிய வெள்ளைத் தேவனையும் சுட்டுக் கொன்றனர்.
நாகலாபுரம் பாளையக்காரரான சௌந்தர பாண்டியனின் ஆவியைக் குடித்து ஆனந்தக் கூத் தாடினர். சிவகங்கை பாளையத்தை ஆண்ட மருது சகோதரர்களை, அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்த ஊரிலேயே தூக்கிலிட்டுக் கொன்றனர். இந்தக் கொடுமைகளை யெல்லாம் மிஞ்சிய கொடுமை, பாஞ்சாலங்குறிச்சி நகரை அழித்த நாச வரலாறாகும். கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்திருந்த ஆயிரக்கணக் கான மக்களை, பீரங்கிகளால் ஈவிரக்க மின்றி சுட்டுக் கொன்றனர். கையிழந்தார் சிலர்; காலிழந்தார் பலர்; மற்றும் சிலர், அங்கஹீன மடைந்தனர்; இன்னும் பல ஆயிரக்கணக்கானவர் ஆவியையே இழந்தனர். இந்த ஈவிரக்கமற்ற படுகொலைக்கு, இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது. கொன்று குவிக்கப்பட்ட மக்களின் ரத்தம் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைச் சுவர்களை செந்நிற மாக்கி விட்டது! இறுதியாக, அண்ணனுக்குப் பிறகு பாஞ்சைப் பதியை ஆளும் உரிமை படைத்த ஊமைத் துரையை 1801ம் ஆண்டு ஜூன் மாதம் 10ந் தேதி துடி துடிக்கத் தூக்கிலிட்டுக் கொன்றனர். பாஞ்சைப் புரட்சி அதோடு முற்றும் பெற்றது.
நாடாண்ட மன்னனென்பதற்காக நாம் வீர பாண்டியனுக்கு விழாக் கொண்டாடவில்லை. மாற்றானிடம் போரிட்டு மாண்ட ஒரு மறத் தமிழன் என் பதற்காகவே விழா கொண்டாடுகிறோம். மன்னர்களுக்கு விழாக் கொண்டாடும் காலம் மறைந்து விட்டது; இது மக்களுக்கு விழாக் கொண்டும் காலம், வீரபாண்டியன் மக்கள் தலைவன் என்பதை மறுப்பார் யார் ?
எல்லோரும் தமிழர்
வீர பாண்டியனைச் சுற்றியிருந்த அத்தனை பெரு மக்களும் தமிழர். வீர பாண்டியனுக்கு அமைச்சராயிருந்து ஆலோசனை கூறி வந்தவர் தானாபதிப் பிள்ளை. தளபதியாக இருந்து தளராது போர் புரிந்தவன் வெள்ளைத் தேவன், மருது சகோதரர்கள், நாகலாபுரம் சௌந்தரபாண்டியன் ஆகிய நட்பரசர்களும் தமிழர்! தமிழர்!! எவ்வகையில் பார்த்தாலும் பாஞ்சைப் புரட்சி தமிழகத்தின் உரிமைக்காக, தமிழரால் நடத்தப்பட்ட ஒரு தனிப் புரட்சியாகும்.
பழிதீர்த்த படலம்
கயத்தாறு மக்களே! இன்று பாஞ்சை வேந்தனுக்கு வெறுந் திருநாளன்று; வெற்றித் திருநாள். எந்த லட்சியத்திற்காக, அவன் அரசிழந்து ஆவி துறந்தானோ, அந்த லட்சியம் வெற்றி பெற்ற நாளையே கொண்டாடுகிறோம். வீர பாண்டியனைக் கொன்றுவிட்டால், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்தியாவை ஆண்டு வரலாம் என எண்ணினர் ஆங்கிலேயர். அவர்களது எண்ணத்தில் மண்ணிறைந்து விட்டோம் என்ற இறுமாப்போடு வீரபாண்டியனுக்குத் திருநாள் கொண்டாடுகிறோம். பொம்மனுக்குப் பிறகு, ஊமத்துரை; அவருக்குப் பிறகு கப்பலோட்டிய தமிழன்; அவருக்குப் பிறகு திருப்பூர் குமரன் என வாழையடி வாழை யாக வீரர்கள் பலர், கட்டபொம்மன் மூட்டிய தேசீய வேள்வியைத் தங்கள் செந்நீர் விட்டு வளர்த்தனர். அதன் விளைவுதான் இந்தியா பெற்ற சுதந்திரம்.
வீர பாண்டியனின் விழுமிய தியாகத்தை ஆளுவோர் மறைத்தனர்; அரசியல் கட்சிகளும் மறந் தன. ஆனால், கிராமப் புறத்து ஏழை மக்கள் அவ் வீரனைத் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றி வருகின்றனர். ஏழைக் கூத்தாடிகள், பட்டி தொட்டிகள் தோறும் வீரபாண்டியன் புகழைப் பரப்பி வந்தனர். பணம் படைத்த சீமான்கள் பலருண்டு தமிழ் நாட்டில். ஆனால், அவர்களெல்லாம், வீரபாண்டியன் பெயரால் ஒரு மண்டபம் எழுப்ப மனம் படைத்தார்களில்லை. பணமில்லாத ஏழை மக்களுக்கோ மனமிருந்தது. ஆளுக்கொரு கல் போட்டு ஏழை மக்கள் எழுப்பிய சமாதிச் சின்னத்தை இதோ நம் கண்முன்னால் காண்கிறோம். ‘மனமுண் டானால் மார்க்கமுண்டு’ என்ற பழமொழியை மெய்யாக்கிய கயத்தாறு மக்களைக் கைகூப்பி வணங்குகின்றேன். தெருக்கூத்தாளர்களின் சேவையும், ஏழை மக்கள் எழுப்பிய சமாதியும் இல்லையானால், பாஞ்சைப் புரட்சியின் வரலாறு ஏடுகளில் ஏறி யிருக்க முடியாது. ஆனால், இதுமட்டும் போதாது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வீரபாண்டியனுக்கு நினைவுச் சின்னம் வைத்தாக வேண்டும். வீரபாண்டியனைத் தூக்கிலிடச் செய்தவன் யார்? இந்தியாவை அடிமைப் படுத்திய ‘லார்டு கிளைவி’ன் மகனான எட்வர்ட் கிளைவ் ஆவான். அவனது நிழல் உருவம் சென்னை அரசாங்க விருந்து மாளிகையில் வீற்விருக்கக் காண்கிறோம். அக் கொடுங்கோலனின் படத்தை அகற்றி அது இருந்த இடத்தில் வீரபாண் டியனின் உருவப் படத்தை வைக்க வேண்டும்.
பாலைவனமாகி விட்ட பாஞ்சாலங் குறிச்சியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பாஞ்சாலங் குறிச்சி வேந்தனின் வரலாற்றை மறைக்க, ஆங்கிலேயர் செய்த அடக்குமுறைகள் கொஞ்சமன்று. தேசப்படத்திலிருந்து ‘பாஞ்சலங் குறிச்சி’ என்ற பெயரையே எடுத்துவிட்டனர். பாஞ்சாலங் குறிச்சியிலிருந்து, ஒருபிடி மண்ணையும் எடுக்கக் கூடாதென்று, மக்களைப் பயமுறுத்தினர், பயனற்றுக் கிடக்கும் அப்பாலைவனத்தில் குடியேறவும் கூடாதென மக்களைக் கொடுமைப் படுத்தினர். ஆங்கிலேயரின் அடக்குமுறைக் கொடுமைகள் அனைத்தும், பாஞ்சைப் புரட்சியை மக்கள் நெஞ்சில் நிலைநிறுத்தி விட்டன.
கவியரசர் பாரதியார், திலகரின் தீவிரத்தைப் பாடினார்; லஜபதியின் தியாகத்தைப் போற்றினார்; அண்ணல் காந்தியின் அஹிம்சையைப் புகழ்ந்தார். ஆனால், பாஞ்சைப் பதியில் நிகழ்ந்த நெஞ்சையள்ளும் புரட்சியைப்பாட மறந்ததேன்?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இதற்கு பதில் தேடும் சிந்தனையோடு பாரதியாரின் கவிதைத் தொகுதியைப் புரட்டினேன். “மறவன் பாட்டு” என் மனதிற்கு ஆறுதல் அளித்தது. வீரபாண்டியன் தியாகத்தை பாரதியார் வெளிப்படையாகப் போற்ற வில்லை. என்றாலும், அவ்வீரனைப் பெற்றெடுத்த தோக்கலவார் சாதியினரின் துன்பத்தை ‘மறவன் பாட்டி’ல் வருணிக்கிறார். அந்தப் பாட்டைப் பாடினாலும், பாடக் கேட்டாலும் நம் உள்ளம் உருகும்; உயிர் துடிக்கும். “விண்முட்டிச் சென்ற புகழ் போச்சே, மேதினியில் கெட்ட பெய ராச்சே!” என்ற வரிகள் தோக்கலவார் சாதியின எண்ணத்தை எதிரொலி செய்வதாகும். “சொல்லக் கொதிக்குதடாநெஞ்சம்” என்று அவரே ஆவேசம் கொள்கிறார் என்றால், தோக்கலவார் சாதியின் துன்பத்தை என்னென்றுரைப்பேன்! வாள் வலிவும், தோள்வலிவும் பெற்ற மக்கள் மண்வெட்டிக் கூலிபெறும் நிலையை மனம் நொந்து கூறுகிறார் பாரதியார். தோக்கலவார் சாதியினர், ஆங்கில ஆட்சியில் குற்ற பரம்பரைச் சட்டத்தால் கொடுமைப் படுத்தப் பட்டனர். சுதந்திர இந்தியாவில் அந்தச் சட்டம் சற்றுத் தளர்த்தப்பட்டிருக்கிறது. என் றாலும், தோக்கலவார் சாதியினரின் துன்பங்கள் முற்றும் தீரவில்லை. பாஞ்சைப் புரட்சிக்குப் பிறகு தோக்கலவார் சாதியினர், கண்ட கண்ட இடங்களி லெல்லாம் அதிகாரிகளால் அடித்து வெருட்டப்பட்டனர். பாஞ்சைப் பதியில் சேர்ந்து வாழ்ந்த தோக் கலவார்கள் அடக்குமுறைக் கொடுமையால் மூலைக் கொருவராக சிதறுண்டு வருந்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சியினர் தோக்கலவார் மரபினரின் துன்பத்தைப் போக்க முன்வர வேண்டும்.
நமது தோக்கலவார் சாதியினர் மாற்றாரை மனம் கலங்கவைக்கும் தோற்றமுடையவர்கள். அவர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
வீரபாண்டியனின் பேரக் குடும்பத்தார் செக்காரக்குடி என்னும் ஊரில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பாஞ்சாலங் குறிச்சியில் குடியேற்றி, அங்கு அவர்கள் வாழ்வாங்கு வாழ வழி செய்ய வேண்டும். கூர்ஜரத்தில் நடந்த வரி கொடா இயக்கத்தின் போது, ஜமீனை இழந்த ஒரு சேட் ஜீக்கு, பம்பாய் காங்கிரஸ் அரசாங்கத்தார் மீண்டும் அந்த ஜமீனை மீட்டுத் தந்தனர். மூன்றாவது கைக்கு மாறிவிட்ட ஜமீனை விலைக்கு வாங்கி, பரதேசியாகி விட்ட ‘சேட்’ அவர்களை மீண்டும் பண்ணை எஜமானனாக்க பம்பாய் அரசாங்கத்தால் முடிந்திருக்கிற தென்றால், வீரபாண்டியன் குடும்பத்தவரை பாஞ்சைப்பதியில் குடியேற்றுவது முடியாத காரியமா ?
ஊமைத்துரை நடத்திய உரிமைப் போர்!
ஊமைத்துரை யென்பான், வீர பாண்டியனின் உடன் பிறந்த தம்பியாவான். அண்ணனைத் தூக்கி லிடுங்கால், அவ் வீரன் பாளையங் கோட்டை சிறையில் அடைபட்டுக் கிடந்தான். வீர பாண்டியன் கொலையுண்ட பிறகு, ஊமைத்துரை நிகழ்த்திய சீரிய புரட்சி செப்புந் தரமன்று.
பாளையங் கோட்டை சிறையைத் தகர்த்து வெளியேறி தென் பாண்டி நாட்டில் புரட்சித் தீயை மூட்டினான். அவன் நிகழ்த்திய அற்புதப் புரட்சி பொன்னேடுகளில் பொறிக்கத் தக்கதாகும்.
வெள்ளையர்கள் இடித்துத் தகர்த்த பாஞ்சைக் கோட்டையை எட்டே நாட்களில் கட்டி முடித்தான். அக் கோட்டையை ஐயாயிரம் படை வீரர்கள் தங்கியிருக்கும் பாசறையாக்கி, தனது உரிமைத் திரு நாடாகிய பாஞ்சாலங் குறிச்சி மட்டு மல்லாமல், ஆங் கிலேயர் வசமிருந்த தென்னாட்டுப் பாளையங்கள் பல வற்றையும் போரிட்டுக் கைப்பற்றினான்.
சர்வ சக்தி வாய்ந்த வெள்ளையரின் பீரங்கிப் படைகளை இரு முறை வெற்றி கண்டபின் மூன் றாம் முறைப் போரில் கம்பெனி வெள்ளையர்களின் கைதியானான். ஆங்கிலேயர்கள் அவ்வீரனை பாஞ் சாலங் குறிச்சியில் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
வீரபாண்டியனை விட, ஊமைத் துரையே ஆங்கிலேயரை எதிர்த்து அதிக நாட்கள் போராடினான். ஊமைத்துரை என்றாலே, வெள்ளையர்கள் கனவிலும் நடுங்குவர். பாஞ்சாலங் குறிச்சிக்கு, ஊமையன் சீமை எனப் பெயர் வழங்கி வருவதொன்றே அவனது புகழை விளக்கப் போதுமானது. அந்தப் பெரு வீரனின் பேரப்பிள்ளைகள் இன்றும் செக்காரக்குடி என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர்.
வரலாற்றில் முதலேடு
வீரபாண்டியன் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டது, இந்தியாவில் சட்டரீதியான ஆங்கில சாம்ராஜ்யம் அமைந்த பின்பன்று; அப்படி அமைப்பதற்காக ஆரம்ப முயற்சி நடைபெற்ற போதாகும். பிரிட்டிஷ் பேரரசின் தலைவராக மூன்றாம் ஜார்ஜ் முடி புனைந்தாண்ட காலத்தில்தான் பாஞ்சைப் புரட்சி நடைபெற்றது.
வடக்கே நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்—காங்கிரஸ் தோன்றுவதற்கு நூறாண்டுகளுக்கு முன்னர்- தமிழர், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரைத் துவக்கி வைத்தனர். வீரபாண்டியனை வீதி ஓரத்திலிருந்த புளியமரத்தில் தூக்கிலிடக் காரணமென்ன? ஆங்கில ஆட்சி இந்திய தேச பக்தர்களுக்கென தூக்கு மேடையைக் கட்டி முடிக்கு முன்பே புரட்சியைத் துவக்கி விட்ட தாகும். இந்திய சுதந்திரப் போரின் வரலாற்றை வாய்மையுள்ள ஒருவர் எழுதுவாரானால், அதன் முதல் ஏடாக அமையும் பெருமை வாய்ந்தது பாஞ்சைப் புரட்சி. பிற்காலத்தில் உலகில் நடைபெற்ற மக்கள் புரட்சிகள் அத்தனைக்கும் வித்திட்டது பிரெஞ்சுக் குடியரசுப் புரட்சி யென்பர் வரலாற்றுப் பேராசிரியர். அது போலவே, இந்தியாவில் பின்னால் தோன்றிய உரிமைக் கிளர்ச்சிகள் அத்தனைக்கும் வித்து போன்றது வீரபாண்டியன் துவக்கி வைத்த புரட்சி. அதுமட்டுமன்று; பாஞ்சைப் புரட்சியும் பிரஞ்சுக் குடிஅரசுப் புரட்சியும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும், ஒரே காலத் தில் நடைபெற்ற ஒப்பற்ற புரட்சிகளாகும்.
‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோல்வியில் முடிந்த செந்தமிழ் நாட்டின் சுதந் திரப் புரட்சி, மீண்டும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெற்றிக் கிரணங்களுடன் வெளிப்பட லாயிற்று. கட்டபொம்மன் சகோதரர்கள் பலியான பின் ஒரு நூற்றாண்டு வரை தமிழகம் அடிமை வாழ்வில் அமைதியாகக் காலங் கடத்தியது. அந்த அமைதியைக் குலைத்து சுதந்திரப் போரின் மறு கட்டத்தை ஆரம்பித்து வைத்த பெருமை வ.உ. சிதம்பனாரைச் சாரும்.
ஒப்பற்ற ராஜதந்திரி
வீர பாண்டியன் செந்தில் முருகனை சிந்தையில் வைத்துப் போற்றிய சிவ நெறியாளன். பாஞ்சாலங் குறிச்சியிலிருந்து சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள திருச்செந்தூர் வரை மணிமண்டபங்கள் கட்டி வைத்தான் அம்மன்னன். திருச்செந்தூரில் முருகப் பெருமானுக்கு உச்சிப் பூசை முடிந்த செய்தியை, மண்டபங்களில் கட்டியுள்ள மணிகள் தமது ஒலியின் மூலம் பாஞ்சை அரண்மனைக்கு அறிவித்த பின்னர்தான் வீரபாண்டியன் உணவு கொள்வது வழக்கமாம். பக்திக்குப் பயன்படுமாறு கட்டி வைத்த அந்த மணிமண்டபங்களையே, பகைவனை எதிர்ப்பதற்கும் பயன்படுத்தினான் வீரபாண்டியன்.
நள்ளிரவில் கள்ளர்களைப் போன்று வெள்ளையர் படை யெடுத்தபோது வீர பாண்டியனின் சேனா வீரர்கள் பாஞ்சையிலிருந்து செந்தூர்வரை நாற்றி சையிலும் சிதறிக் கிடந்தனர். வீர பாண்டியன் ஆணையின் மூலம் மணிமண்டபங்கள் எழுப்பிய ஓசை கிடந்த சேனா வீரர்கள் பாஞ்சைக்கு ஓடிவந்து பகைவரை எதிர்த்துப் போர் புரிந்தனர்.
பக்தி என்ற சாக்கிலே, பகைவரை எதிர்க்கப் படை திரட்ட வீர பாண்டியன் கட்டி வைத்த மணிமண்டபங்கள், அவனது ராஜ தந்திரத்துக்குச் சிறந்த சான்றாகும்.
அவனன்றே தியாகி!
கயத்தாறு மக்களே ! ஆதிவீரன் கட்ட பொம்ம னின் தியாகம்தான், ஆகஸ்டு 15- ல் நாம் சுதந்திரம் பெற்றதற்கு அடிப்படைக் காரணம். அந்த நன்றியை மறப்போமா? தியாகி, தியாகி யென யாரெல் லாமோ போற்றப்படுகின் றனர்; மான்யங்கள் ஈந்தும் மதிப்பளிக்கின் றனர் அரசாங்கத்தார். வீர பாண்டியன் தியாகத்திற்கு விலைமதிப்புண்டா? தமிழகத்தின் சுதந்திரத்திற்காக, அந்த வீரன் அரசைத் துறந்தான்; கடுமையாகப் போரிட்ட பின் தனது ஆவியையே துறந்தான். அவனன்றோ தியாகி. ஆங்கிலேயர் அவனைக் கேட்ட தெல்லாம் கப்பப் பணமின்றி வேறியில்லையே? அதுவும் அன்றாடக் கட்டளையல்ல;
ஆண்டுக் கொருமுறை செலுத்துவதுதான். கப்பப் பணத்தின் கணக்கைக் கூட நிச்சயிக்கவில்லை; வீர பாண்டியனின் கருந்துக் கிசைந்த அளவுக்குக் கொடுத்தால் போதுமென்றனர். அன்று அந்த மாவீரன் கப்பம் செலுத்தி கம்பெனித் துரைகளோடு கைகுலுக்கி வாழ்ந்திருப்பின், பாஞ்சைப் பதியானின் பரம்பரையார் இன்றளவும் பாராளும் உரிமை பெற்றிருப்பார் அந்தோ! அந்தப் பெரு வீரன் தன்னை மட்டுமா தியாகம் செய்தான்? தன் பிற்கால சந்ததியாரின் அரச வாழ்வையு மன்றே தியாகம் செய்து விட்டான்.
நூற்றைம்பது ஆண்டுகள் மறந்து விட்ட பிறகு இன்று தான் அந்த வீரனுக்கு விழா நடத்துகிறோம்! “நன்றி மறப்பது நன்றன்று” என்று கூறிய வள் ளுவன் நாட்டிலா இந்த அநீதி? என் அருமைத் தமிழ் மக்களே! உரிமை பெற்ற இந்தியாவில் தமிழரசு அமைக்கும் பெருமை பெற்றோ மில்லை.
இதற்குக் காரணமென்ன? நம்மிடம் இனமான மில்லை; நாட்டுக்காக உயிர் துறந்த தியாகிகளிடம் நன்றி காட்டும் பண்பில்லை. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண் டாம் உய்வில்லை, செய்ந் நன்றி கொன்றமகற்கு” என்பது நன்றி மறக்கும் மக்களுக்கு வள்ளுவரிட்ட சாபம்.
தமிழகம், அந்த சாபத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், வீரத் தியாதி கட்டபொம்மனுக்கு நன்றி செலுத்துங்கள் ஊருக்கொரு வீதி அவனது பெயரால் விளக்கட்டும்! வீடுகள் தோறும் வீர பாண்டியனின் திருவுருவப் படம் விளங்கட்டும்.
முற்றும்.
★ ★ ★



