ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்

நான்காம் அத்தியாயம் : உரம்

1893-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் ஸ்ரீ அரவிந்தர் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டு இந்தியா திரும்பினார்.

திரும்பும் பொழுதே, பரோடா ஸம்ஸ்தானத்தில் ஓர் உத்தியோகத்துடனேயே திரும் பினார். அப்பொழுது பரோடா மகாராஜா இங்கிலாந்தில் இருந்தார். அரவிந்தரின் கல்வி அறிவையும் நற்குணத்தையும் கண்டு மகாராஜா, அவரிடம் ஈடுபட்டு, தம் ஸம்ஸ்தானத்தில் அவருக்கு வேலை கொடுத்தார். தேசீயத்தில் மிகவும் சிரத்தை கொண்ட மகாராஜா, ஸ்ரீ அரவிந்தரின் மகிமையைக் கண்டுபிடித்து, அவர் இந்தியாவுக்குத் திரும்பி வருவதற்குக் காரணமானார் என்பதே அவருக்கு அழியாப் புகழைக் கொடுக்கும்.

ஐ.ஸி.எஸ் பதவி கிடைத்திருந்தாலும், அரவிந்தர் இந்தியாவுக்குத் திரும்பித்தான் வந்திருப்பார். அப்படி அவர் திரும்பிவந்தால் என்ன பயன் ? அவர் வராமலேயே இருக்கலாம். அவர் பரோடா மஹாராஜாவினிடம் வேலை ஒப்புக்கொண்டு இந்தியா திரும்பினது அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சம்பவம் – மூல சம்பவம். இதுமுதல்தான், அரவிந்தருடைய வாழ்க்கை, மலர் போல விரிவடைய ஆரம்பிக்கிறது. இது முதல்தான், அரவிந்தர் தம் வாழ்க்கையின் லட்சியத்தை உணர்ந்து அதன் பூர்த்திக்காக அஸ்திவாரம் போட ஆரம்பிக்கிறார்.

இருபதாவது வயதிற்குள், அரவிந்தர் மேனாட்டு நாகரிகத்தின் சாராம்சம் முழுவதையும் கிரகித்துவிட்டார். ஐரோப்பியக் கலைஞானத்தை பூர்ணமாகக் கரைத்துக் குடித்துவிட்டார். கிரீக், லத்தீன் பாஷைகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று மேல்நாட்டு விஞ்ஞான சாஸ்திரங்களுக்கு மூலாதாரமாக இருக்கும் கிரந்தங்களை அந்தப் பாஷைகளிலேயே படித்தறிந்தார். இவற்றைத் தவிரப் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் பாஷைகளையும் செவ்வனே அறிந்தார். ஆங்கிலத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை.

ஆனால் தாய் நாடான இந்தியாவின் கலை ஞானத்தில் அவருக்கு அதுவரையில் பரிசயமே கிடையாது. வேண்டுமென்றே அவருடைய தகப்பனார் அந்தச் சம்பந்தமே அவருக்கு இல்லாமற் செய்திருந்தார். ஆனால் மேதையின் போக்கில் சிறு மனிதனின் பிரயத்தனம் வீணாகிவிட்டது. சொல்லப்போனால் அரவிந்தரின் தகப்பனார் செய்த முயற்சி ஒரு விதத்தில் நல்லதாகவே முடிந்தது. அரவிந்தருக்கு இந்தியக் கலைஞான ஊற்றில் இறங்க வேண்டும் என்று இருந்த ஆவல் அதிகமாயிற்று அந்தத் தடையால். எவ்வளவு நாள் தான், கன்றையும் தாயையும் பிரித்து வைத்திருக்க முடியும்?

1893-ஆம் வருஷம் முதல், 1906-ஆம் வருஷம் வரையில், பதின்மூன்று வருஷ காலம், பரோடாவில் அரவிந்தர் இந்தியக் கலை ஞானத்தைக் கசடறக் கற்றுணர்ந்தார். வட மொழியைப் பயின்று, வேத வேதாந்தங்களை ஆழ்ந்து படித்தார்; யோசித்தார்; எழுதினார்.

அந்தப் பதின்மூன்று வருஷ காலமும் பரோடா ஸம்ஸ்தான ரெவினியூ இலாகாவிலும், கல்வி இலாகாவிலும் வெளிப்பார்வைக்கு வேலையாயிருந்து உழைத்தாரே யொழிய, உண்மையில் விடாமுயற்சியுடனும் தீவிர புத்தியுடனும் தம் அறிவை வளர்த்துக் கொண்டே இருந்தார். இடைவிடாமல் எழுதினார். பின்னால், புதுச்சேரிக்கு வந்த பிறகு பிரசுரமான கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள் – எல்லாம் அப்பொழுது எழுதினவை. அவை எல்லாவற்றிலும் அவருடைய விரிந்த படிப்பு, ஆழ்ந்த ஞானம், நுண்ணிய அறிவு, உணர்ச்சிப் பெருக்கு

இவை ஒவ்வொரு வாக்கியத்திலும் தலையெடுத்து நிற்கின்றன. நடையில் வலுவும் வேகமும், கருத்தில் சக்தியும் புதுமையும், சேர்ந்தே தென்படுகின்றன. இந்தப் பேரவாப் பருவத்தின் இறுதியில் ஒரு ஆவேசக் கவியாக வெளிப்பட்டார் அவ ருடைய ஆத்ம வளர்ச்சியின் விளைவாக.

ஆனால் அவருடைய அறிவுத் தாகம் அடங்கினபாடில்லை. கற்றறிந்தது ஒன்றும் உபயோகமில்லை ; மேலும் இன்னும் ஏதோ இருக்கிறது. கற்றதிற்கும் மேற்போன ஒரு கலை இருக்கிறது; கண்டதிற்கும் மேற்போன ஒரு காட்சி இருக்கிறது; அடைந்ததற்கும் மேற் போன ஓர் ஆனந்தம் இருக்கிறது என்று ஊகிக்க ஆரம்பித்தார். கவி முதிர்ந்து கர்ம யோகியாவதற்கு ஆரம்பித்தார் – காய் முதிர்ந்து கனியாவது போல.

மேற்சொன்ன கலையும் காட்சியும் ஆனந்தமும் இங்கே பெறக்கூடியவை – நிச்சயம், இந்த உலகத்தில், இந்த உடலில் அனுபவிக்கக் கூடியவை என்று மேதையின் முற்போக் கில் நிச்சய ஞானம் பெற்றார். அதற்கு ஒரு ஸாதனைதான் தேவை; அதுவும் இதுவரையில் செய்யப்பட்ட எல்லா ஸாதனைகளுக்கும் மேற் போனதும் அவற்றின் சேர்க்கையானதுமான நூதன ஸாதனமாக இருக்க வேண்டும் என்று கண்டார்.

“அதைக் கண்டுபிடிக்கிறேன்!” என்று 1906-ஆம் வருஷத்தின் இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் கங்கணம் கட்டிக்கொண்டார். பதின்மூன்று வருஷ காலம் செய்த தவத்தின் இறுதியில் ஒரு புது வழி அவர் முன்பு தோன் றிற்று. அப்பொழுது அவருக்கு வயது முப்பத்து மூன்று.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !