ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்

ஆறாம் அத்தியாயம் : இடைவெளி

அப்பொழுது நாட்டிலும் புரட்சிகரமான மாறுதல்களும் சம்பவங்களும் நடந்துகொண்டிருந்தன. வங்காளத்தில் தீ குமுறிக்கொண் டிருந்தது. லார்டு கர்ஸன் தேசீயத்தை விசிறி விடுவதற்காகச் செய்த செய்கைகள் இப் பொழுது சரித்திரம் ஆகிவிட்டன. அவற்றைச் சுருக்கமாக இங்கே குறிப்பிடுவது இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியமாகிறது. அவற்றால் ஸ்ரீ அரவிந்தர் தீவிரமாக மாறுதல் பெற்றார் என்பதால் அல்ல ; ஸ்ரீ அரவிந்தரின் மனப்போக்கிற் கொத்தபடி இந்தச் சம்பவங்கள் வந்து வாய்த்து அதற்குச் சௌகரியம் அளித்தன என்பதால்தான்.

கர்ஸன் பிரபு கல்கத்தாவின் ஸ்தல ஸ்தாபன முறையைச் சின்னபின்னமாக்கினார். பாஞ்சாலத்திலும் பம்பாயிலும் ஜனங்களுக்கு ஏற்காத நிலச் சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வந்தார். நம் நாட்டின் மேற் படிப்பிற்கே உலை வைத்தார். நாட்டு மக்கள் பல துறைகளில் உத்தியோகம் பெறாதபடி ரகசிய உத்தரவுகள்போட்டார். இவையெல்லாவற்றையுங் கூட மக்கள் பொறுத்திருப்பார்கள். இந்தியரே பொய் சொல்லுகிறவர்களென்றும், சத்தியவாதிகள் அல்லவென்றும், இந்திய ஜாதியையே அவர் இகழ்ந்து பேசினார். இதற்கெல்லாம் மேலே வங்காளப் பிரிவு வந்தது. ஹிந்துக்களையும் முகம்மதியர்களையும் பிரித்து நாட்டில் வகுப்பு வாதத்தை வளர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமென்று மக்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். வங்காளப் பிரிவினைத் தினத்தை மக்கள் விரத தினமாகக் கொண்டார்கள். கவி ரவீந்திரர் பூரண ஆவேசத் துடன் அன்று கர்ஜித்தார். பிரிட்டிஷ் சாமான்களைப் பகிஷ்காரம் செய்வதென்று தீவிரமாக முனைந்தார்கள். இதுதான் ஒத்துழையாமைக்கு விதை போட்ட சமயம்.

ஆனால் இந்த ஆக்கிரகம் (இது பிறகு காந்திஜியின் உபதேசத்தால் சத்தியாக்கிரகம் ஆகிறது) இந்திய நவ ஜீவனத்தின் ஓர் அம்சமாக ஆரம்பமாயிற்று என்றாலும், நாளடைவில் தன் முழு உருவத்துடன் கிரியாம்சையில் ஸ்வதேசீயமும் ஸ்வராஜ்ய இச்சையுமாக இந்தியப் புனருத்தாரணத்தின் ஜீவநாடியாகிவிட்டது.

வங்காளப் பிரிவினையின் பொழுது நாம் நம்மையே அறிந்தோம் ஒரு வகையில் என்று சொல்லவேண்டும். நாடு பங்கு போடப்பட்ட கொடுமையைக் கண்டபொழுதுதான் நமது நாடு ஓர் கலையொற்றுமை பூண்ட புண்ய பூமி என்று அறிந்தோம். பாரத ஜாதி பிளவு படுவதை உணர்ந்தோம். அந்த உணர்ச்சியை ஊட்டிய வரையில் பிரிட்டிஷ் சர்க்காரின் உதவி இன்றியமையாததுதான்.

பரோடா ஸம்ஸ்தானக் கலாசாலையின் அறையில் இருந்து கொண்டே ஸ்ரீ அரவிந்தர் வெளியே செவி சாய்த்துக் கேட்டார். நாட் டின் அபயக்குரல் அவருடைய காதுகளில் ஓர் அழைப்புப் போல வந்து தாக்கிற்று. வெகு நாளாகவே அவர் அரசியலில் கொஞ்சம் கலந்து கொண்டே இருந்தார். 1894-ஆம் வருஷத்திலேயே, ‘இந்துப் பிரகாசம்’ என்ற பத்திரிகையில் காங்கிரஸின் மிதவாதப் போக்கைக் கண்டித்து எழுதினார். 1905-ஆம் வருஷத்தின் பிற்பகுதியில் வங்காளத்தின் நிலைமையைத் தாமே நேரில் கண்டறிய அங்கே சென்றார்.

பிரிட்டிஷ் சாமான்களைப் பகிஷ்கரிப்ப தென்ற தீர்மானம் 1905-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி நிறைவேறிற்று. அக்டோபர் 16-ஆம் தேதி வங்காளப் பிரிவினைச் சட்டம் நிறைவேறிற்று. இடையே, ‘வந்தே மாதரம்’ என்று கோஷிக்கக் கூடாதென்றும், மாணவர்கள் அரசியலில் கலந்து கொள்ளக் கூடாதென்றும் உத்தரவுகள் பிறந்தன. பல பொதுக்கூட்டங்களைப் போலீஸார் பலாத்காரமாகக் கலைத்தார்கள். இவையெல்லாம் வங்காளத்தில் நடந்தன. 1905-ஆம் வருஷம் டிஸம்பரில் காசியில் கூடின காங்கிரஸ், இவற்றைக் கண்டித்துப் பகிஷ்கார இயக்கமும் சரியென்று ஆதரித்தது. வங்காளத்தில் பகிஷ்கார இயக்கம் வலுத்தது. சர்க்கார் அடக்குமுறையைத் தீவிரமாக மேற்கொண்டார்கள். 1906-ஆம் வருஷம் மார்ச் மாதம் பாரிஸாலில் கூடின வங்காள மாகாண மகாநாட்டை ஜில்லா மாஜிஸ்ட்ரேட் கலைத்தார். பிரதிநிதிகளையும் சாரணர்களையும் போலீஸார் தாக்கித் தடியடிப் பிரயோகம் செய்தார்கள். அப்பொழுது வங்காளத்தின் திலகமாக விளங்கிய பாபு ஸுரேந்திரநாத பானர்ஜியை மாஜிஸ்ட்ரேட் அவமதித்து ரூ.200 அபராதம் விதித்தார். பாரிஸால் மகாநாடு கலைந்த போது, அரவிந்தர் அங்கே இருந்தார். அங்கே நடந்த சம்பவங்கள் தான் அவர் ஒரே அடியாக வங்காளத்திற்கு வந்துவிடுவது என்று செய்த தீர்மானத்திற்குக் காரணம். 1906-ஆம் வருஷம் ஜூலை மாதம் கல்கத்தாவிற்குப் போய் அங்கே வசிக்க ஆரம்பித்து விட்டார்.

இது ஸ்ரீ அரவிந்தர் ஒளியைத் தேடிச் சென்ற பாதையில் ஒரு முகனை. முன் பிர யோகம் செய்த ஓர் உவமையை இன்னும் கொஞ்சம் விஸ்தரிப்போம். அரவிந்தரின் மனம் ஒரு வளரும் செடி போன்றது. உயர அடர்ந்த காடு. செடி ஒளியைத் தேடி உயருகிறது. பெரிய மரங்களின் இலை இடுக்குகள் வழியாகத் தோன்றும் ஒளியை நோக்கி நேராகவும் கோணியும் வளர்கிறது. 1906-ஆம் வருஷத்தில் செடியின் போக்குக்கு ஒரு பெரிய இடைவெளி வெளிச்சம் தோன்றிற்று. அதுதான் தாம் உயர வேண்டிய ஒளிப் பாதையென்று ஸ்ரீ அரவிந்தர் அரசியலில் தீவிரமாக இறங்கினார். ஆனால் அது அவர் செல்லவேண்டிய பாதை அன்று. காற்றில் விலகிய இலைகள் மறுபடியும் வழியை மறித்து மூடிக்கொண்டு விட்டன.

1908-ஆம் வருஷத்தில்தான் ஸ்ரீ அரவிந்தர் தம் ஞான வழியைக் கண்டுபிடிக்கிறார். அதுவரையில் முற்போக்கில் சிறு தடுமாட்டங்கள் – அயர்வால் அல்ல – அவசரத்தால்; பாதையின் முடிவென்னவோ அவருக்குத் தெரியும். பாதையின் கோடியில் தாம் அடையப்போகும் சத்திரம் அவருக்குத் தெரியும். பிரிவுப் பாதைகளில்தான் சிறிது தயங்குகிறார். ஆனால் அந்தக் கட்டிடம் அவர் கண் முன் இருக்கிறது. அதுதான் அவர் லட்சியம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !