
ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
எட்டாம் அத்தியாயம் : மாணவர்கள் பரீட்சை
அரசியலில் கலந்துகொள்ளக் கூடாது என்று 1905-ல் வங்காள சர்க்கார் தடை உத்தரவுகள் போட்டார்கள். அதனால் மாணவர்கள் பின்னும் கொஞ்சம் தீவிரமாக அரசியலில் கலந்து கொண்டார்கள். பலர் கல்கத்தா சர்வ கலாசாலையுடன் பிணைக்கப்பட்ட பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இவர்களுக்கு மேல் படிப்புக் கொடுப்பதற்காக தலைவர்கள் ஒன்று சேர்ந்து நவம்பர் மாதத்தில் தேசீயக் கல்வித் திட்டம் ஒன்று போட்டார்கள். ஸ்வதேசீயத்தின் ஓர் அம்சமான தேசீயக் கல்விக்கு ஆரம்பம் இந்த மாதிரி ஏற்பட்டது.
ஐம்பது வருஷங்களாக அதற்குமுன் சர்க்கார் அளித்துவந்த கல்வித் திட்டத்தில் மக்களுக்கு ஒருவிதமான சாதகமும் ஏற்பட வில்லை. அந்நிய அரசாங்கத்தார் தங்கள் சௌகரியத்திற்கு ஏற்றவாறும் தங்கள் அரசாட்சி நிலை நிற்கும் பாதையிலும் அக்கல்வியைப் புகட்டினார்கள். ஆங்கில பாஷையின் மூலம் மேற்படிப்பு முழுவதும் கற்க வேண்டிய அவசியத்தால் ஆங்கிலத்திற்கு நாட்டில் பலத்த ஊன்றுதல் ஏற்பட்டுவிட்டது. அதில் இலக்கியமேதான் அதிகமாக இருந்தது; பொருளாதாரம், கைத்தொழில் முறைகளுக்கு அதில் இடமே இல்லை. இப்படிப்பட்ட மூலாதாரமான குறைகளை நீக்கத்தான் தேசீயக் கல்வித் திட்டத்தைத் தலைவர்கள் போட்டார்கள்.
நாட்டின் இயல்பிற்கு ஏற்றவாறு நாட்டு உணர்ச்சியையும் நாட்டின் நாகரிக தத்துவத்தையும் புகட்டும் கல்விதான் மக்களைத் தேசீய வாழ்க்கையில் பூர்ணமாகப் பங்கெடுத்துக் கொள்ள லாயக்குள்ளவர்களாகச் செய்யும். கல்கத்தாவில் ஒரு தேசீயக் கல்லூரி ஆரம்ப மாயிற்று. ஸ்ரீ அரவிந்தர் அதன் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் கொஞ்ச காலத்திற்குள் அந்தக் கல்லூரியை ஸ்தாபித்தவர்கள் அதன் நோக்கத்தை மறந்து, அதைச் சர்க்கார் அங்கீகரிப்பின் கீழ் விட்டு, உயர்ந்த லட்சியங்களின் அபிவிருத்திக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள். ஸ்ரீ அரவிந்தர் மகத்தான ஆர்வத்துடன் கல்வியையே திருத்தி அமைத்து விடலாம் என்று தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார்; ஆனால் அவர் எண்ணங்கள் ஈடேற வில்லை; அவர் வாக்குச் செல்லவில்லை. ஆகையால் அவர் இஷ்டப்படி ஒன்றும் செய்ய முடி யாமல் போயிற்று.
ஆனால் தம் கருத்துக்களை வெளியிட அவருக்கு வேறொரு சாதனம் ஏற்பட்டது. விபின சந்திர பாலர் ஆரம்பித்த வந்தே மாதரம் என்ற பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார்; கொஞ்ச நாளில் அதன் ஆசிரியர் பொறுப்பு முழுதும் அவர் கைக்கு வந்துவிட்டது. அந்தத் தினசரியை நடத்துவதற்கு ஒரு கூட்டுக் கம்பெனி ஆரம்பமாயிற்று. அதில் அரவிந்தர் ஒரு டைரக்டர் ஆனார். வந்தே மாதரம் மிகவும் பிரபலமாயிற்று. ஸ்ரீ அரவிந்தர் அதன் பக்கங்களில் ஆண்மையும் தைரியமும் பலமும் ஊட்டும் கட்டுரைகளை எழுதி எழுதி மக்களைத் தட்டி எழுப்பினார்.
வந்தே மாதரத்தின் மூலகமாகத்தான் ஸ்ரீ அரவிந்தர் முதல் முதலாகப்பிரக்கியாதி பெற்றார். விபின சந்திரபாலர் சிறைப்பட்டவுடன் வங்காள தேசீய வாதிகளின் தலைவரானார் ஸ்ரீ அரவிந்தர். அந்தக் கட்சியின் தலைவராகச் சூரத்துக் காங்கிரஸிற்கு 1907-ஆம் வருஷத்தில் வந்தார். அங்கே நடந்த சம்பவங்கள் இப்பொழுது சரித்திரம் ஆகிவிட்டன. அங்கே நடந்த பிளவு இந்திய தேசீய இயக்கத்தின் சரித்திரத்தில் ஒரு திரும்பு முனை. அங்கே தீவிரவாதிகள், திலகரின் தலைமையில் காங்கிரஸில் முதன் முதலாக ஒரு கட்சி பலத்துடன் வெளிவந்தார்கள். ஸ்ரீஅரவிந்தர் திலகருக்கு வலது கையாக இருந்தார். அந்தக் காங்கிரஸ் முடிந்ததும் அரவிந்தர் பம்பாய், மத்திய மாகாணங்களில் தாம் கண்ட தேசீய தத்துவத்தைப் பற்றிப் பிரசங்கங்கள் செய்து சுற்றுப் பிரயாணம் செய்தார். வருஷக் கடைசியில் கல்கத்தா திரும்பினார்.
1908-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் முஸபர் பூர் நகரத்தில் நடந்த ஒரு வெடி குண்டு விபத்தில் இரண்டு ஐரோப்பிய ஸ்திரீகள் இறந்து போனார்கள். மே மாதம், இரண்டாம் தேதி காலையில், அரவிந்தர் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுதே போலீஸார் அவர் வீட்டிற்கு வந்து அவரைக் கைது செய்து, கல்கத்தா மத்திய போலீஸ் ஆபீஸுக்குக் கொண்டு போனார்கள்.
மேமீ 18-ஆம் தேதி விசாரணை ஆரம்பமாயிற்று. பிராஸிக்யூஷன் தரப்பில் கார்ட்டன் துரை வழக்கை நடத்தினார். அக்டோபர் 23-ஆம் தேதி விசாரணை செஷன்ஸுக்கு மாற்றப்பட்டது. விசாரணை செய்த நீதிபதி, இங்கிலாந்தில் ஸ்ரீ அரவிந்தருடன் ஐ. ஸி. எஸ். ஸில் கூடப் படித்தவர். நார்ட்டன் துரை 16 நாட்கள் வாதம் செய்தார். அரவிந்தர் சார்பாக, சித்தரஞ்சன தாஸ் 8 நாட்கள் பேசினார். கடைசியாக அவர் குற்றவாளியல்ல என்று தீர்ப்புச் சொல்லப்பட்டது. கைதியான ஒரு வருஷத்திற்குப் பிறகு அரவிந்தர் விடுதலை அடைந்தார்.
ஸி. ஆர். தாஸ் தமது வாதத்தில் ஓர் இடத்தில் பின்வருமாறு பேசினார்; இந்தப் பாகம் இப்பொழுது மிகவும் பிரக்கியாதி அடைந்துவிட்டது:
“இந்த விவாதம் முடிந்து வெகு நாட்கள் ஆன பிறகும், இந்தக் குமுறலும் கொந்தளிப் பும் அடங்கின பிற்பாடு, இவரே காலமான பிறகு, – ஸ்ரீ அரவிந்தரை மக்கள் தேச பக்தியின் கவி என்று போற்றுவார்கள்; தேசீயத்தின் ரிஷி என்று புகழ்வார்கள்; மனித சமூகத்தின் பந்து என்று வாழ்த்துவார்கள். இவர் பெயர் இந்தியாவில் மட்டுமின்றி, கடல் கடந்து தூர தேசங்களிலும் எதிரொலிக்கும்.”
1909-ஆம் வருஷம் மே மாதம் 9-ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தர் விடுதலை அடைந்தார்.
அவர் சிறையிலிருந்த ஒரு வருஷ காலத் திற்குள் அவர் மனம் பெரிய மாறுதல் அடைந்தது.
இந்த இடத்திலிருந்து அவருடைய வாழ்க்கையில் மற்றொரு பகுதி ஆரம்பமாகிறது.
அந்த மன மாற்றத்தின் முழுப் பிறப்பு வளர்ப்பையும், ஸ்ரீ அரவிந்தர் தமது பிரசித்தி பெற்ற உத்தர பாராப் பிரசங்கத்தில் அருள் வாக்குடன் வெளியிட்டார். அதை அடுத்த அத்தியாயமாகக் காணலாம்.
ஸ்ரீ அரவிந்தருக்கு அப்பொழுது வயது முப்பத்து மூன்று.



