
ஸ்ரீ அரவிந்த யோகி
கு. ப. ராஜகோபாலன்
முதல் அத்தியாயம் : சிறு வரலாறு
1905-ஆம் வருஷத்தில் வங்காளப் பிரிவினைக் குப்பின் உண்டான கிளர்ச்சி காலத்தில், நாடெங்கும் பாபு அரவிந்தகோஷ் என்று பிரக் கியாதி அடைந்தவர், சுமார் முப்பத்து மூன்று வருஷங்களுக்குப் பிறகு, இன்று உலகப் பிரசித்தி பெற்ற அரவிந்த யோகியாக இருக்கிறார். அன்று அவருக்கு வயது முப்பத்து மூன்று; இன்று அறுபத்து ஆறு. உத்தர யோகி என் றும் அவருக்கு ஒரு பெயர் உண்டு. அதற்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. தென்னாட்டில் இருந்த ஸித்த புருஷர் ஒருவர், ஸ்ரீ அரவிந்தரின் வருகையை முன் கூட்டியே வடநாட்டி லிருந்து (உத்தர திக்கிலிருந்து) ஒரு யோகி இங்கு வருவார் என்று சொன்னாராம். ஆனால் இன்று அந்தப் பெயருக்கு ஓர் ஆழ்ந்த பொருளும் கூறலாம்.
ஸ்ரீ அரவிந்தர் இன்று ஒரு நிகரற்ற ஒளி உருவமாக விளங்குகிறார். சமீபத்தில் காந்திஜி சொன்னது போல, ஜனங்கள் உலகத்தில் எங்கெங்கிருந்தோ, அந்த ஸாதனையின் சக்தியால் இழுக்கப்பட்டவர்களாய்ப் புதுவையில் இருக்கும் அவருடைய ஆசிரமத்தைத் தேடி வருகிறார்கள் – ஒளியைத் தேடிவரும் உயிர்கள் போல. அவருடைய மகா மௌனத்தின் அழைப்பு எட்டுத் திக்குகளிலும் எதிரொலி செய்கின்றது. அவருடைய ஸாமீப்பியத்தின் பலனை அடைய மக்கள் திரள் திரளாகச் சென்று அவரைச் சரண்புகுந்து ஆத்ம சாந்தி பெறுகிறார்கள். அவர் நடத்தி வந்த ஆர்யா என்ற பத்திரிகை நின்று போன காலம் முதலே, இந்த மகா மௌனம் ஆரம்பித்து விட்டதாகச் சொல்லலாம்; நாளுக்கு நாள் அது அதிகமாகி, பதினாறு வருஷங்களுக்குப் பிறகு இன்று, அவர் சம்பந்தப் பட்ட மட்டில் ஒரு விதமான ஸர்வ ஸங்க பரித்தியாகமாகவே மாறிவிட்டது எனலாம்.
புதுவை ஒரு புது தரிசனம் பிறந்து வளரும் பொன்னகரமாக மாறிவிட்டது. தென்னாடே புண்ணிய பூமியிலும் ஒரு புனிதப் பகுதி யல்லவா? அத்வைதத்தைச் சித்தாந்தம் செய்த ஆதி சங்கராசார்யர் நடமாடிய நாடு இது; ஆழ்வார்கள், ஸித்தர்கள், தேவாரத் திருவாசக முனிவர்கள் முதலிய மூர்த்திகள் பிறந்து அறிவு பெற்ற இடம்; ஒப்பற்ற ராஜ யோகியாகிய ஸதாசிவேந்திரர் உலவிய உன்னத மண் இது. இந்த ஞான வீரர்களின் வாயால் பாடல் பெற்ற பொன்னாடு அல்லவா இது?
ஆரிய பூமியே ஞான விருத்தர்கள் தோன்றின விசேஷ ஸ்தலம். வேத காலத் தில் மகரிஷிகள் மரத்தடிகளில் உட்கார்ந்து கொண்டு மகா மந்திரங்களை மொழிந்தார்கள். பின் வந்த புனித புருஷர்கள் உபநிஷத்துகளை உற்பத்தி செய்து ஈசுவரனைக் கண்டார்கள்.
அவர்கள் ராஜபாட்டையான வேதாந்தத்தை ஆறு தரிசனங்களின் சேர்க்கையாகக் கண்டு ஸ்தாபனம் செய்தார்கள்.
வேத மூலமான (வைதிக மார்க்கம்) அவைகளின் ஆதாரத்தில், யோக தரிசனத்தின் ஒரு பரிணாமமாக (வளர்ச்சியாக) இன்று, ஸ்ரீ அரவிந்த யோகி ஒரு புது ஸாதனையைக் கண்டுபிடித்துப் புகட்டுகிறார். மேல் நாட்டு விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவுகளையும் வேதாந்தத்தின் உட்கருத்தையும் சேர்த்து ஒன்றாகச் சமைத்தது போன்றது இந்தப் புது வழி. மேல் நாட்டுப் பௌதிக பரிணாம வாதத்தின் ஸாரத்தை நமது ஆத்மைக்கியக் கொள்கை யுடன் பிணைத்து अमृत इह भवति என்ற தத்துவத்தைச் சாத்தியமென்று ஸ்ரீ அரவிந்தர் காட்டுகிறார்.
இந்தத் தரிசனத்தின் அம்சங்களை ஒன்று கூட்டி, சுருக்கமாகக் கடைசியில் சொல்லலாமென்று எண்ணுகிறேன். ஆனால் அரவிந்த யோகத்தை அதே தெளிவுடனும் நிறைவுடனும் எடுத்து விளக்க வேண்டுமானால், எழுதுகிறவனும் ஒரு ஸாதகனாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். அவரிடம் நேரிடையான உபதேசம் பெற்றிருக்க வேண்டும்; அதாவது, நேரிடை உபதேசக்கிரமம் என்று கிடையாதாகையால், அவருடைய அருகிலிருந்து ஏற்படும் ஒரு முதிர்வு -பக்குவம் – இருக்கிறவன்தான் அதைப்பற்றித் தேர்ச்சியுடன் எழுத முடியும். அவன்தான் பூர்ண யோகத் தைப்பற்றி எழுதக்கூடிய உண்மையான அதிகாரி.
கீழ் சமுத்திரக் கரையில் மௌனமாக உதயமாகியிருக்கிற ஒளியை ஒரு ஜன்னலின் மூலம் கிரகிப்பது போல, நான் என் உள்ளத்தில் கிரகித்து நிர்ணயிக்க முயலுகிறேன். அந்த யோகத்தின் மூலாதாரக் கொள்கையின்படி, மனிதனின் மனதே, இப்பொழுது இருக்கிற தசையில், தத்துவத்தை முழு உருவுடன் அறியும் தகுதியற்றது. ஆகையால் நான் ஏன் பயப்பட வேண்டும்?
முக்கியமாக இது, ஸ்ரீ அரவிந்தருடைய வாழ்க்கையைப் பற்றிய சிறு வரலாறாக இருக்க வேண்டுமென்பது என் முயற்சி; ஆனால் அவருடைய வாழ்க்கையையும் லட்சியத்தையும் லகுவாகப் பிரித்தெடுத்து விட முடியாது; அவருடைய வாழ்க்கை அவருடைய லட்சியத்தின் ஸாரம், அவருடைய லட்சியத்தின் வியாக்கி யானம். அவருடைய லட்சியம், அவருடைய வாழ்க்கையின் மூலம். சொல்லும் பொருளும் போல, அவை இரண்டும் ஒன்றுபட்டவை. ஒன்று மற்றொன்றின் உதவியின்றி விளங்காது. ஆகையால், ஒரு முறையில், நான் அவருடைய வாழ்க்கையைப் பற்றி ஒருவாறு எழுதி முடித்து விட்டேனானால், அவருடைய கொள்கையைப் பற்றிக் கூட எழுதினவனாகி விடுவேன். அவருடைய கொள்கை அவருடைய வாழ்க்கையுடன் சேர்ந்தாற் போலவே இடைவிடாமல் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
“உத்தர பாரப் பிரசங்கம்” என்று இப்பொழுது பிரசித்தி அடைந்து விட்ட “கர்ம யோக சாஸ்திர சங்கிரகத்” தில் அவர் குறிப்பிடும் விசுவரூப தரிசன காலம், அரவிந்தயோகியின் வாழ்க்கையில் ஒரு ‘திரும்பு கால்’ என்று சொல்லலாம். அந்த இடம் ஒரு பீட பூமி. அதிலிருந்து பார்த்தால் அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியான மலைச் சாரலும் பிற்பகுதியான சுத்த சமவெளியும் நன்றாகத் தெரியும்.
உத்தர பாரம் என்ற வார்த்தையிலேயே ஒரு விசேஷ அர்த்தம் இருக்கிறது. உத்தர பாரம் என்ற வடமொழிப் பதத்தை மறுகரை அல்லது வடகரை என்று கொண்டால், ஸ்ரீ அரவிந்தர் அப்பொழுது கரையேறின சமயம், அல்லது அக் கரை கண்ட சமயம்.
அதற்குமுன் அவருடைய வாழ்க்கையிலும் லட்சியத்திலும் தயக்கம், ஏக்கம், தாமதம் – இவையெல்லாம் – கொஞ்சம் அவ நம்பிக்கை கூட – இருந்தனவென்று சொல்லலாம். அதற்குப் பிறகு எல்லாம் ஒரே ஒளி ; எல்லாம் ஒரே விளக்கம் – நம்பிக்கை, தைரியம்; உள்ளப் பூரிப்பு, சக்தி ஸான்னித்தியம்.
அது நிகழ்ந்தது 1908-ஆம் வருஷத்தின் நடுவில். அவருக்கு அப்பொழுது வயது முப்பத் தாறு. மகான்கள் மகத்தான காரியங்களைச் சாதித்த வயது அதுதானே?



