பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
நாரா. நாச்சியப்பன்

பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்

ஆழ்வார்ப்பேட்டையில் பேருந்து நிற்கும் இடத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அந்த மரக்கிளை ஒன்றில் கூடுகட்டிக் கொண்டு இரண்டு சிட்டுக் குருவிகள் இருந்தன. அந்தச் சிட்டுக் குருவிகளுக்கு இரண்டு சின்னச் சிட்டுக்கள் இருந்தன. அந்தச் சின்னச் சிட்டுகள் இரண்டும் அடித்த கொட்டத்திற்கு அளவே இல்லை.

ஒரு சிட்டுக்குஞ்சு ஒரு கிளையில் போய் ஒளிந்து கொள்ளும். இன்னொன்று அதைத் தேடிக்கொண்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிவரும். அது சோர்ந்து போய் ஒரு கிளையில் உட்கார வரும். அப்பொழுது பார்த்து முதல் குஞ்சு விருட்டென்று பறக்கும். உடனே அதை விரட் டிக்கொண்டு இரண்டாவது குஞ்சு புறப்படும்.

இரண்டும் சேர்ந்து கத்திக் கொண்டு பறந்தோடுவதைப் பார்த்தால் எதையோ விரட்டிப்பிடிக்கப் போவதைப்போல்இருக்கும்.

அந்த மரத்தில் இருக்கும் எல்லாப் பறவைகளுக்கும் அந்த இரண்டு சிட்டுக் குஞ்சுகளும் செல்லச் சிட்டுக்கள். அவை விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மற்ற பறவைகளுக்குப் பொழுது போய்விடும்.

இந்தச் சிட்டுக்களின் அம்மாச் சிட்டுக்கு ஒரே ஒரு ஆசை. இந்த இரண்டு சிட்டுகளையும் எங்காவது ஒரு நல்ல பள்ளிக் கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்து விட வேண்டும் என்பதுதான் அதன் ஆசை.

நான்கு எழுத்துப் படித்துவிட்டால் அவை பேசும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்படி ஒரு ஆசையை அந்த அம்மாச் சிட்டு மனத்தினுள் வளர்த்துக் கொண்டு இருந்தது. அம்மாவின் ஆசை தெரியாமல் அந்தச் சின்ன சிட்டுக்கள் இரண்டும் விளையாட்டி லேயே ஈடுபட்டிருந்தன,

ஒரு நாள் அந்த அம்மாச் சிட்டு ஆழ்வார் பேட்டையில் இருந்த ஆங்கிலப் பள்ளிக் கூடத்தின் பக்கமாகப் பறந்து சென்றது. வெள்ளை வெளேரென்று அழகாக இருந்த அந்தப் பள்ளி, கூடத்தின் எதிரில் ஆசிரியை ஒருத்தி மயில் போல் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே நூறு குழந்தைகள் அழகாகச் சீருடை யணிந்து கொண்டு சிட்டுக் குருவிகளைப் போல் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சின்னக் குழந்தைகள் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் தலைக்குமேல் தூக்கியும், எதிரில் நீட்டியும், பக்கத்தில் விரித்தும், குனிந்தும், நிமிர்ந்தும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

வரிசை வரிசையாக அவர்கள் நின்றதும், ஒரேமாதிரியாகக் கைகால்களை அசைத்ததும், ஒரே வரிசையாகத் தொடர்வண்டி போல் ஓடியதும், பூக்கோலம் இட்டதுபோல் வட்டமாகவும், வளைந்தும் நின்றதும் மரத்தின் மேல் இருந்து பார்க்கும் பொழுது அழகழகாய் இருந்தது.

இத்தப் பள்ளிக் கூடத்தில் எப்படியாவது தன் சிட்டுக் குஞ்சுகளைச் சேர்த்து விட வேண்டும் என்று அம்மாச் சிட்டுக்கு ஆசையாக இருந்தது.

நாள்தோறும் அந்த அம்மாச் சிட்டு இரைதேடப் பள்ளிக் கூடத்தின் வழியாகப் பறந்து போகும் போதெல்லாம் இந்த ஆசை உண்டாகும்.

பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதென்றால், முதலில் பணம் கட்ட வேண்டும்; நன்கொடை கொடுக்க வேண்டும்; சீருடை தைக்க வேண்டும்; இதற்கெல்லாம் பணம் வேண்டுமே அந்தச் சிட்டு எங்கே போகும்?

ஒரு நாள் மாலை நேரம். தென்றல் சிலு சிலு வென்று வீசிக்கொண்டிருந்தது. கதிரவன் செம்மஞ்சள் நிறத்தோடு மேற்குத் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்தப் பள்ளிக்கூடத்துத் தலைமையாசிரியை எதிரில் உள்ள புல்வெளியில் நடந்து கொண்டிருந்தாள்.

அம்மாச் சிட்டு அந்த வழியாகப் பறந்து வந்தது. தலைமை ஆசிரியையைப் பார்த்தவுடன், மெல்லக் கீழே இறங்கியது. அவள் நடந்து வரும்போது எதிரில் புல்வெளியில் வந்து நின்று கொண்டது.

‘அம்மா அம்மா’ என்று கூப்பிட்டது சிட்டு.

தலைமையாசிரியை திரும்பிப் பார்த்தாள்.

யாரும் காணப்படவில்லை.

மறுபடியும் சிட்டு ’அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டது.

தலைமையாசிரியை எதிரில் பார்த்தாள்.

”அம்மா அம்மா, நான் தான் சிட்டுக் குருவி” என்று கூறிப் படபட வென்று இறக்கையை அடித்துக் கொண்டது அம்மாச் சிட்டு.

தலைமை யாசிரியை குனிந்து சிட்டைப் பார்த்தாள். ”அம்மா வணக்கம்” என்று கூறிக் கொண்டே சிட்டுக் குருவி அவள் காலில் வந்து விழுந்தது.

இந்தச் சிட்டு எதற்கு நம்மை வணங்குகிறது? என்று நினைத்தாள் தலைமை ஆசிரியை.

”ஏ, சிட்டுக்குருவி, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள் தலைமை ஆசிரியை.

”அம்மா, நீங்கள் என்மீது கருணை வைக்க வேண்டும். என் குஞ்சுகள் இரண்டை யும் தங்கள் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து தாங்கள் இதை மறுக்கக் கூடாது” என்று அம்மாச்சிட்டு கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

தலைமை ஆசிரியைக்கு, அந்தச் சிட்டு மீது இரக்கம் ஏற்பட்டது. அதனால், அந்தச் சிட்டு, கேட்டுக் கொண்டபடி அதன் குஞ்சுகளைத் தன் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டாள்.

பள்ளிக்கூடச் சம்பளமும், நன்கொடையும் கேட்கவில்லை.

“நாளைக் காலை ஒன்பது மணிக்கு உன் குஞ்சுகள் இ ர ண்டையும் கூட்டிக் கொண்டுவா. மழலையர் வகுப்பில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறேன். ஒழுங்காகப் பாடம் படித்தால் தொடர்ந்து படிக்கலாம். இல்லா விட்டால், பள்ளியிலிருந்து நீக்கி விடுவேன். எச்சரிக்கை” என்று கடுமையாகச் சொல்லி அனுப்பினாள்.

அம்மாச்சிட்டுக்கு, ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தமாகச் சிறகடித்துப் பறந்து கொண்டே அரசமரத்தை நோக்கிச் சென்றது.

அங்கே, சின்னச்சிட்டுகள் இரண்டும், வழக்கம் போலப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன.

அம்மாவைக் கண்டதும், ஆசையோடு வந்து அருகில் உட்கார்ந்து கொண்டன.

”அம்மா, தின்ன என்னம்மா கொண்டு வந்தாய்?” என்று ஆவலாகக் கேட்டன.

“இப்பொழுது, தீனி ஒன்றும் சொண்டு வரவில்லை. ஆனால் உங்களுக்குச் சீனி போல் இனிப்பான செய்தி ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்” என்று அம்மாச் சிட்டு கூறியது.!

“என்ன என்ன?’ என்று இரண்டு சிட்டுகளும் குதித்துக் கொண்டு கேட்டன.

“உங்களை நாளைக்குப் பள்ளிக் கூடத் தில் சேர்த்து விடப் போகிறேன். தலைமை ஆசிரியை உங்களைச் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டு விட்டார்கள்” என்று அம்மா கூறியது.

இந்தச் செய்தியைக் கேட்டதும், இரண்டு சிட்டுக்களும் குதித்துக் குதித்துப் பறந்தன.

“நாங்கள் படிக்கப் போகிறோம்” என்று கத்திக் கொண்டே அரசமரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அந்த மரத்தில் குடியிருந்த பறவைகளுக் கெல்லாம் இது புதிய செய்தியாய் இருந்தது.

படித்தால் பெரிய நிலைக்கு வரலாம். இன்பமாக வாழலாம். அறிஞர்கள் பாராட்டுவார்கள். இப்படிப்பட்ட வாய்ப்பு அந்தச் சிட்டுக் குஞ்சுகளுக்குக் கிடைத்ததைக் கண்டு அரசமரத்துப் பறவைகளெல்லாம் வாழ்த்துக் கூறின.

அம்மாச்சிட்டு, கவுடியா மடத்தின் எதிரில் இருந்த ஒரு தையற் கடைக்குப் பறந்து சென்றது.

தையல் பொறியின் மேல் போய் உட்கார்ந்து கொண்டு அந்தத் தையற்கலைஞரைப் பார்த்து,

“அண்ணே அண்ணே! தையற்கார அண்ணே, என் சிட்டுக் குஞ்சுகள் இரண்டும் நாளைக்குப் பள்ளிக் கூடத்திற்குப் போகின் றன. இரண்டு குஞ்சுகளுக்கும், இரண்டு சீருடைகள் தைத்துக் கொடுங்கள் அண்ணே” என்று கேட்டது.

தையற்காரரும் அதற்கு உடனே இரண்டு சீருடைகள் தைத்துக் கொடுத்தார். மறுநாள் காலைஇரண்டுசிட்டுக் குருவிகளும் அழகான அந்தச் சீருடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டன.

ஒருடையோடு அவை தத்தித் தத்தி நடந்து சென்ற காட்சி அழகைக் கண்டு அரச மரத்துப் பறவைகளெல்லாம் மகிழ்ச்சி கொண்டன.

எல்லாப் பறவைகளின் வாழ்த்துக்களோடு அவை பள்ளிக் கூடத்திற்குப்போய்ச் சேர்ந்தன.

மழலையர் வகுப்பில் அவற்றை உட்கார வைத்து விட்டு, அம்மாச் சிட்டு அரசமரத்திற்குத் திரும்பியது. பிறகு இரை தேடச் சென்று தன் குஞ்சுகளுக்குப் பள்ளிக் கூடத்தில் பகல் உணவு கொண்டு போய்க் கொடுத்தது.

மாலை நான்கு மணிக்கு மீண்டும் சென்று கூட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தது

வகுப்பில் இருந்த பிள்ளைகளுக்கு இந்த சிட்டுக்குருவிகள் படிக்க வந்ததிலிருந்தே ஒரே கொண்டாட்டம். ஆசிரியை, வராதநேரங்களில் இந்தக் குருவிகளோடு எல்லாக் குழந்தைகளும் விளையாடின.

வர, வரப் பிள்ளைகளின் கவனம் பாடத்தில் செல்லாமல், சிட்டுக் குருவிகளோடு விளையாடுவதிலேயே காலம் சென்றது. இதனால் அந்த மாதத் தேர்வில் எல்லாப் பிள்ளைகளுக்கும் மதிப்பெண் குறைந்து விட்டது.

தலைமை ஆசிரியை வகுப்பறைக்கு வந்து அந்த வகுப்பு ஆசிரியையைக் கோபித்துக் கொண்டாள்.

அந்த வகுப்பு ஆசிரியை, “குழந்தை களின் மதிப்பெண் குறைந்ததற்குக் காரணம், இந்தச் சிட்டுக் குருவிகள் தான்!” என்று கூறினாள்.

அதனால், தலைமை ஆசிரியை, அம்மாச் சிட்டைக் கூப்பிட்டுக் கண்டித்தாள். ”அடுத்த மாதமும் இதே மாதிரி மதிப்பெண் குறைந் தால், இரண்டு சிட்டுக் குஞ்சுகளையும் பள்ளிக் கூடத்தை விட்டு நிறுத்தி விடுவேன்’ என்று திட்டமாகச் சொல்லி விட்டாள்.

அன்று மாலை, பள்ளி விட்டுத் திரும்பிய சிட்டுக் குஞ்சுகளுக்கு நல்ல திட்டுக் கிடைத்தது. அம்மாச் சிட்டு மிகச் சினத்தோடு பேசியது. ‘இனிமேல் விளையாட்டைக் குறைத் துக் கொள்கிறோம்” என்று அந்தச் சிட்டுக் குஞ்சுகள் உறுதியளித்தன.

ஒருவாரம் கழித்து ஒரு நாள் தலைமை யாசிரியை எங்கோ பேருந்தில் போய்வந்தாள். பேருந்தை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றாள். அப்போது, ஒரு முரடன் மிக விரைவாக எதிரில் நடந்து வந்தான். திடுதிப் பென்று, தலைமை ஆசிரியையின் கைப் பையைப் பறித்துக் கொண்டு ஓடினான்.

”திருடன் திருடன்” என்று தலைமை யாசிரியை கத்தினாள்.

உடனே கூட்டம் கூடியது. தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் அந்தத் திரு டனை விரட்டிக் கொண்டு ஓடினார்கள்.

ஒருவன் திருடனை நெருங்கிப் பிடிக்கப் போனான். அப்போது அந்தத் திருடன் ஒரு கத்தியை எடுத்து நீட்டவே, அவன் பயந்து நின்று விட்டான். திருடன் ஒடிக் கொண்டிருந்தான். ஒடியவர்கள் செய்வதறியாமல் நின்று விட்டனர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன அந்த இளஞ் சிட்டுக்கள். விருட்டென்று பாய்ந்தன. இரண்டும் பறந்து சென்று திருடனின் முகத்தில் மாறி மாறிக் கொத்தின. அவன் அவற்றின் திடீர்த் தாக்குதலை எதிர்க்க முடியாது கீழே விழுந்தான். அவன் கையில் இருந்த கத்தி நழுவிப் போய்த் தொலைவில் விழுந்தது.

தயங்கி நின்ற கூட்டத்தினர் ஓடிவந்து திருடனைப் பிடித்துக் கொண்டனர். அவனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டனர்.

தலைமை யாசிரியையின் பணப்பை மீட்கப் பட்டது. அவரிடம் திருப்பிக் கொடுக்கப் பட்டது. தலைமை ஆசிரியை அந்த இளஞ்சிட்டுகள் இரண்டையும் நன்றியோடு நினைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.

பள்ளியில் மற்ற ஆசிரியைகளிடமும் அந்தச் சிட்டுக்கள் செய்த உதவியை எடுத்துக் கூறினாள். அன்று முதல் எல்லாரும் அந்தச் சிட்டுக்களை அன்போடு நடத்தினார்கள்.

ஒரு நாள் பள்ளிச் சிறுமி ஒருத்தி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். யாரோ சிலர் ஒரு உந்தில் வந்து இறங்கினார்கள். அந்தச் சிறுமியை வழிமறித்துத் தூக்கி உந்திற்குள் போட்டார்கள்.

அவள் கதறிக் கதறி அழுதாள்; உந்து புறப்பட்டு விட்டது.

அரச மரத்தில் விளையாடிக் கொண் டிருந்த சிட்டுக்கள் இதைப் பார்த்தன.

உடனே, விருட்டென்று பறந்தன. அந்த உந்து ஒட்டுபவனை மாறி மாறி முகத்தில் கொத்தின. அவன் பயந்து உந்தை நிறுத்தி விட்டான். உள்ளே சிறுமி கதறிக் கதறி அழுது கொண்டிருந்தாள்.

அவளை அடித்து அவள் அணிந்திருந்த சங்கிலி, தோடு, மோதிரம், ஆகியவற்றை இரண்டுபேர் கழற்றிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு சிட்டுக்களும் அவர்கள் முகத்தைக் கொத்தின. படபடவென்று சிறகடித்து அவர்கள் கண்ணில் தூசி பறக்கச் செய்தன. அவர்கள் சிட்டுக்களின் தாக்குதலால் , திணறிக் கொண்டிருக்கும் பொழுது, சிறுமி உந்திலிருந்து இறங்கி ஓடிவிட்டாள்.

அதற்குள், சிறுமியின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் உந்தில் வந்த அந்தத் திருடர்களை அடித்து உதைத்து அனுப்பினார்கள்.

மறுநாள், பள்ளியில் அந்தச் சிறுமி நடந்த தைக் கூற எல்லாப் பிள்ளைகளும் சிட்டுக்களைப் பாராட்டினர்.

சிட்டுக்களும் இது போல் எல்லாருக்கும் நல்ல உதவிகளை அவ்வப்போது செய்து வந்தன.

பள்ளியில் விளையாடுவதையும், குறும்பு செய்வதையும் விட்டு விட்டன.

அந்த மாதத் தேர்வில் எல்லாக் குழந்தைகளும் நிறைய மதிப்பெண் வாங்கினார்கள்.

சிட்டுக் குருவிகளும் நனறாகத் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண் வாங்கின.

ஒவ்வொரு மாதமும் அவை மதிப்பெண் அறிக்கை கொண்டுவரும்போது மரத்தில் உள்ள எல்லாப் பறவைகளுக்கும் காட்டி அம்மாச் சிட்டு மகிழ்ச்சி கொள்ளும்.

”என் குஞ்சுகளைப் பெரிய மருத்துவர் ஆக்கப் போகிறேன்’ என்று அது அடிக்கடி சொல்லும்.

சிட்டுக்களும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் நல்ல கண்மணிளாக விளங்கின.

அந்தச் சிட்டுக்களைப் போல் சுறுசுறுப்பாகவும் பகைவருக்கு அஞ்சாத வீரமுள்ளவர்களாகவும் பாடத்தை ஒழுங்காகப் படிக்கும் பாப்பாக்களாகவும் நாம் இருப்போம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *