பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
நாரா. நாச்சியப்பன்

சக்தி பெற்ற சிட்டுக் குருவி

ஒரு புல்வெளி.

பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

அந்த வழியாக ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்றது.

சிறிது நேரம் பசுவின் முதுகில் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லலாம் என்று சிட்டுக் குருவி நினைத்தது.

உடனே கீழே இறங்கிப் பசுவின் முதுகில் குந்தியது.

முதுகில் ஏதோ குத்துவது போல் உணர்ந்த பசு வாலைத் தூக்கி அடித்தது.

நல்ல அடி!

சிட்டுக் குருவி சுருண்டு விழுந்தது.

“ஐயோ அப்பா” என்று அலறியது.

பசு திரும்பிப் பார்த்தது.

“நீயா, பாவம் பார்க்காமல் அடித்து விட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே நாக்கால் தடவிக் கொடுத்தது.

சிட்டுக் குருவியின் மேல் அதன் நாக்குப் பட்டதும், நாக்கில் இருந்த எச்சில் அதன்மேல் ஒட்டிக் கொண்டது. அதனால் அதன் சிறகுகள் நனைந்து ஒட்டிக் கொண்டன.

சிறகுகள் ஒட்டிக் கொண்டதால் சிட்டுக் குருவியால் பறக்க முடியவில்லை.

சிட்டுக் குருவியைக் கெளவுவதற்கு அந்த வழியாகச் சென்ற ஒரு பூனை பாய்ந்து வந்தது.

பூனையைப் பார்த்தவுடனே சிட்டுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ! விருட்டென்று பாய்ந்து பறந்தது. ஒட்டியிருந்த சிறகுகள் விரிந்து கொண்டன. சிட்டுக் குருவி தப்பிப் பிழைத்தது.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *