
பதஞ்சலி யோக ஸூத்ரம்
சி. சுப்பிரமணிய பாரதி
ஓம் சக்தி
முதலாவது ஸமாதி பாதம்
ஸூத்ரம் 1. இனி யோகம் சொல்லப்படும்.
ஸூ. 2. யோகம் என்பது சித்த வ்ருத்திகளை அடக்குதல்.
வ்யாக்யாநம்: சித்த வ்ருத்திகள் என்பன சித்தத்தின் இயக்கங்கள். மனம்,புத்தி,சித்தம், அஹங்காரம் என்ற நான்கினையும் சேர்த்து மனிதனுக்குள்ளே அந்தக்கரணம் (உட்கருவி) என்று சொல்லுதல் வேதாந்த சாஸ்த்ர முறை. அவையனைத்தையும் ஒன்றாக்கிச் சித்தம் என்று சொல்வது யோக சாஸ்த்ர வழக்கு. பார்வை யென்னும் தொழிலுக்கு, வெளிக் கருவி கண்ணென்றால், உட்கருவி சித்தம். கேள்விக்குப் புறக் கருவி செவி; உட்கருவி சித்தம். இப்படியே அனைத்திற்குங் கொள்க. எனவே, எனது சித்தத்தைத் தவிர எனக்கு உலகம் வேறு இல்லை, நான் ஒரு யானையைப் பார்க்கும்போது, புறத்தே நிற்கும் யானையை நான் பார்க்கவில்லை. அது காரணமாக என் சித்தத்துள் விழும் யானைச் சித்திரத்தையே நான் அறிவேன், எனக்கு உலகம் எனது சித்தமேயாதலால் என் சித்தம் எனக்கு வசப்படும்போது உலகம் எனக்கு வசமாய்விடும்.
ஸூ. 3. அப்போது காண்பவன் தன் வடிவத்தில் நிற்கிறான்.
வ்யா: காண்பவன் ஆத்மா. சித்தச் செயல்களை அடக்கிய போது, ஆத்மா தன் நிஜரூபத்தில் இருப் பான் என்பது ஸூத்ரத்தின் பொருள்.
ஸூ.4. மற்றப் பொழுது வருத்திகளின் வடிவை ஏற்பான்.
வ்யா : ‘மற்றப் பொழுது’ என்றால் சித்த வ்ருத்திகளை அடக்காதபோது. ஒருவன் முதலையைப் பற்றி எண்ணுகையில், அவனுடைய ஆத்மா முதலை வடிவம் பெற்று நிற்கும். “நீ எண்ணுகிறபடியே ஆகிறாய்” “யத் பாவயஸி தத் பவஸி” என்றும், “மனம் போல் வாழ்வு” என்றும் முன்னோர் சொல்லியிருப்பது எதிர் காலத்தை மாத்திரம் சுட்டுவதன்று. நிகழ் காலத்திலும் உண்மை. எப்போது உன் மனம் எதை நினைக்கிறதோ, அப்போது நீ அதுவாகிறாய்.
ஸூ. 5. சித்த வ்ருத்திகள் ஐந்து வகைப்படும். அவற்றுள் சில துன்பமுடையன. சில துன்பமில்லாதன.
வ்யா : அவ் வைந்து வகைகள் எவை யென்பது கீழே கூறப்படும்.
ஸூ. 6. அவை:-ப்ரமாணம்; விபர்யயம் ; விகற்பம் ; நித்திரை ; ஸ்மரணை என்பன.
வ்யா: ப்ரமாணம் என்பதற்குத் தமிழில் அளவை என்று பெயர். விபர்யம் என்பது விபரீத ஞானம்.
ஸூ. 7. ப்ரத்யக்ஷம், அனுமானம், ஆகமம் என்பவை ப்ரமாணங்களாம்.
வ்யா: ஐம்புலன்களால் நேரே அறிதல் ப்ரத்யக்ஷ ப்ரமாணம் அல்லது காட்சியளவை எனப்படும். ஊஹத்தால் அறிவது அனுமானம். அனுபவத்தில் உண்மையென்று காட்டத் தக்கனவாகிய மேலோர் வாய்ச் சொல் ஆகமம் எனப்படும்.
ஸூ. 8 . விபாயயம் என்பது பொய்யறிவு; ஒரு பொருளின் மெய்யான வடிவத்தில் நிலை பெறாதது.
வ்யா : சிப்பியை வெள்ளியாகக் காண்பது போன்ற உணர்வு விபர்யயம் எனப்படும். ஸந்தேஹமும் இதனுள் அடங்கும். தூணோ மனிதனோ என் றாற்போல் என்பர்.
ஸூ. 9 . விகற்பம் என்பது பொருளில்லாமல் ஒலியை மாத்திரம் தழுவி நிகழும் உணர்வு.
வ்யா : இந்த ஸூத்ரத்துக்கு போஜ தேவர் தமது ராஜ மார்த்தண்டம் என்னும் உரையில் வ்யாக் யாநம் எழுதுமிடத்தே, பின் வருமாறு சொல்லு கிறார்:-
‘மனிதனுக்கு அறிவே ஸ்வரூபம் என்ற வசனத்தை (விகற்ப ஞானத்துக்கு) த்ருஷ்டாந்தமாகக் காட்டலாம். “மனிதனுக்குக் கம்பளம் உடை” என்பது போல அவ் வாக்கியத்தில் வேற்றுமை யுணர்ச்சி தோன்றும்படி இருக்கிறது. ஆனால் உண்மையில், புருஷனுடைய ”ரூபம்’ அறிவன்று, ‘புருஷன் தானே அறிவு.’
முயற் கொம்பு; ஆகாயத் தாமரை என்றாற் போலச் சொல்லளவில் நின்று பொருளற்ற உணர்வுகள் விகற்பங்களெனப் படும்.
ஸூ. 10 . அபாவம் (இன்மை) என்ற உணர்வைச் சார்ந்த வ்ருத்தியே நித்திரையாம்.
வ்யா : அபாவம் என்பது பௌதிக லோகத்தை விட்ட நிலை. ஒன்றுமில்லாத சூன்யத்தை அபாவம் என்பாருமுளர். நித்திரையில் சித்தம் ஒரு பொருளை யுஞ் சாராமல் நிற்கிறது என்பது பொருள்.
ஸூ. 11 . அனுபவித்த விஷயத்தை நழுவி விடா திருத்தல் நினைப்பு.
வ்யா : போஜ தேவர் தமது வ்யாக்யாநத்தில் சொல்லுகிறார் :- ‘ப்ரமாணம், விபர்யயம், விகற்பம்’ இம் மூன்றும் விழிப்பிற்குரிய நிலைகள். இவை அனுபவத்தால் கனவிலும் புலப்படுகின்றன. உறக்கம் உணரப் படாத விஷயத்தைப் பற்றியது. ப்ரமாணம், விபாயயம், விகற்பம், நித்திரை என்ற நான்கையும் நிமித்தங்களாக உடையது நினைப்பு.’
இனி, சித்த வ்ருத்திகளை அடக்கியாளும் நெறி சொல்லுகிறார்.
ஸூ. 12 . பழக்கத்தாலும் பற்றில்லாமையாலும் அவற்றை அடக்கலாம்.
வ்யா : பழக்கத்துக்கு முதனூலில் “அப்யாஸம்” என்ற சொல்லும், பற்றின்மைக்கு “வைராக்யம் ” என்ற சொல்லும் வழங்கப் படுகின்றன. இவற்றின் இலக்கணம் கீழே சொல்லப் படுகிறது.
ஸூ. 13 . அவற்றுள், ஒரே நிலையில் நிற்க முயலுதல் பழக்கம் எனப்படும்.
ஸூ. 14 . அம் முயற்சியை நெடுங்காலம் இடை யின்றி ஆதரித்தால் அது திடம் பெறும்.
ஸூ. 15 . பார்த்தனவும் கேட்டனவும் ஆகிய விஷயங்களில் ஆவலற்றோன் அவற்றின் மீது பெறும் வசீகரணத் தன்மைக்கு வைராக்கியம் (பற்றின்மை) என்று பெயர்.
வ்யா : வைராக்யம் என்ற சொல்லுக்கு விருப்ப மில்லாமை என்பது பொருள். உலகத்துப் பொருள்களினிடத்தே நாம் ஆவலைத் துறந்து விட்டால், அவை நமக்கு வசப்படுகின்றன. ஆவல் உள்ளவரை அவற்றுக்கு நாம் வசப்பட்டிருக்கிறோம். “வசீகரணம் என்றால் வசப்படுத்துதல்.
ஸூ. 16 . அப்பால், புருஷனை அறிவதால் குணங் களினிடத்திலும் பற்றின்மை உண்டாகிறது.
வ்யா : குணங்களாவன: ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பவை. இவையே ஜகத்தின் மூலங்கள். இவற்றிலே பற்று விடுவது தான் வைராக்யத்தின் சிகரம். வெளிப் பொருள்களிலே பற்று நீங்கிய போது, பரமாத்ம ஞானம் கிடைக்கிறது. அதினின்றும் குணப் பற்றுதல் விடுகிறது.
இனி ஸமாதி லக்ஷணம் சொல்லுகிறார்.
ஸூ. 17 . விதர்க்கம், விசாரம், ஆனந்தம், அஸ்மிதை என்ற நிகழ்ச்சிகளுடையது “ ஸம்ப்ரக்ஞாதம் ” என்ற ஸமாதி.
வ்யா : விதர்க்கம் என்பது பொது ஆராய்ச்சி; விசாரம் ஸூக்ஷ்ம வஸ்துக்களைப் பற்றிய ஆராய்ச்சி. அஸ்மிதை என்பது வெறுமே “நான் இருக்கிறேன்” என்ற உணர்ச்சி மாத்திரம் மிஞ்சி நிற்கும் நிலைமை.
ஸமாதியே யோகியின் லக்ஷ்யம். சித்தத்தை அசைவின்றி ஒரே பொருளில் நிறுத்தி விடுதல் ஸமாதி எனப்படும். இந்த ஸமாதி இரண்டு வகைப்படும்:- ஸம்ப்ரக்ஞாதம், அஸம்ப்ரக்ஞாதம் என. ‘ஸம்ப்ரக் ஞாதம்’ உணர்வுட்பட்டது; ‘அஸம்ப்ரக்ஞாதம்’ உணர்வைக் கடந்தது.
ஒரு பதார்த்தத்தை மற்றெல்லாப் பொருள்களி னின்றும் பிரித்து, மீட்டுமீட்டும் அதிலேயே தியானம் செலுத்துவது விதர்க்க ஸமாதியின் லக்ஷணம்.
தியானம் செலுத்துவதற்குரிய விஷயங்கள் இரண்டு வகைப்படும். பிரகிருதியின் தத்துவங்கள் ஒரு வகை, மற்றொன்று புருஷன் (ஆத்மா). பிரக்ருதியின் தத்துவங்களெல்லாம் ஜடம் – உணர்வற் றன. புருஷன் (ஆத்மா) சேதனன் – அறிவுடைய வன். இவ்விடத்தில், ஸ்வாமி விவேகாநந்தர் பின்வருமாறு எழுதுகிறார்:-
‘யோக சாஸ்த்ரத்தில் இந்த அம்சம் ஸாங்க்ய சாஸ்த்ரத்தை ஆகாரமாகவுடையது. அஹங்காரம், புத்தி, மனம் இவற்றுக் கெல்லாம் சித்தமே ஆதாரம். சித்த வஸ்துவிலிருந்தே இவையெல்லாம் பிறக்கின்றன. ப்ரக்ருதியின் சக்திகள் சித்தத்தினுள்ளே புகும் போது, அவை எண்ணங்களாக மாறுகின்றன. கிருதி (இயற்கை) ஜடப்பொருள்களாகவும் ஜடசலனங்களாகவும் காணப்படுகிறது. பொருள் வேறு சலனம் வேறாகப் பிரிவுபட்டுத் தெரியாமல் கலந்து நிற்கும் பூர்வ நிலைக்கு அவ்யக்தம் (வ்யக்த மாகாதது) என்று பெயர். படைப்புக்கு முன்பு, ஜகத்தெல்லாம் அவ்யக்த நிலையிலிருந்தது. இந்த ஜகத்தைக் கடந்து நிற்பது புருஷன்; இதுவே சைதந்யத்தின் ஸாரம்.
‘பதார்த்தங்களின் மீது தியானம் செலுத்துவதனால் யோகஸித்திகள் பிறக்கின்றன. அறிவே சக்தி. அறிவே சித்தி. ஒரு பொருளை நாம் முழுதும் அறிந்து விடுவோமாயின் அது நமக்கு வசப்பட்டுப் போம். பஞ்ச பூதங்களைப் பற்றி தியானம் செய்யும் போது, அவற்றின் மீது அதிகாரம் ஏற்படுகிறது.
வெளிப்படையான ஸ்தூல பூதங்களை தியானத்துக்குரிய பதார்த்தங்களாக வைத்துக்கொண்டு செய்யப்படும் ஸமாதிக்கு ஸவிதர்க்க ஸமாதி என்று பெயர். தர்க்கம் என்பதற்கு சங்கித்தல் என்பது பொருள். சங்கை செய்து ஆராய்ந்து பார்க்குமிடத்தே, பூதங் கள் தம்மிடத்திலுள்ள உண்மைகளை யெல்லாம் யோகிக்குத் தெளிவாகக் காட்டுகின்றன, அவன் வசத்திலே ஒப்புவித்து விடுகின்றன. இதே தியானத்தில் பூதங்களைக் கால தேசங்களினின்றும் பிரித்து அவற் றின் சுயவடிவில் தியானிக்கும் போது அது நிர்விதர்க்க ஸமாதி யெனப்படும். அப்பால் தியானம் மேற்கூறப் பட்ட நிலையைக் கடந்து தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸூக்ஷ்ம அணுக்களை விஷயமாகக் கொண்டு நிகழுமிடத்தே அதற்கு ஸவிசார ஸமாதி என்று பெயர். இதுவும் கால தேசங் கடந்தால் நிர் விசார ஸமாதியாகும்.
இனி, அடுத்த படி: ஸூக்ஷ்மம், ஸ்தூலம் என்ற இருவகையான பூதங்களையும் விட்டுச் சித்தத்தையே விஷயமாகக் கொண்டு தியானம் செய்யும்போது, ஸானந்த ஆனந்த ஸஹிதமான ஸமாதி ஏற்படுகிறது. சித்தத்தின் குணங்களைக் கூடப் பிரித்துத் தள்ளி விட்டு, அதன் சுத்த வடிவத்தில் தியானம் செலுத்தி, மற்றெல்லா வ்ருத்திகளும் மடிந்து, ஸத்வ குண ஸம்பந்தமான அஹங்காரம் மட்டிலும் மிஞ்சி நிற்கும்போது,அஃது அஸ்மித ஸமாதி யெனப்படும்.
இந் நிலை அடைந்தவர்களை முன்னோர் “விதேஹகர்” என்று கூறுவர். அதாவது, ஸ்தூல தேஹத்துடன் தம்மைச் சேர்த்துக் கொள்ளாதவர். ஆனால், இவர்களும் தம்மை ஸூக்ஷ்ம தேகத்துடன் சேர்த்துப் பாவனை செய்து கொள்வர். இந்த நிலையில் இயற்கையுடன் கலந்து நிற்போர் “ப்ரக்ருதிலயர்” என்று கூறப்படுவர். பிரகிருதியைக் கடந்து செல்வோர் முக்தி யடைகிறார்கள்.
ஸூ. 18 . எல்லாவகைச் சித்த வ்ருத்திகளையும் அழித்துப் பழகுவதனால் மற்றொரு ஸமாதி உண்டாகிறது. இதில், ஸம்ஸ்காரங்கள் மாத்திரமே மிஞ்சி நிற்கின்றன.
வ்யா : இதுவே உணர்வைக் கடந்து நிற்ப தாகிய ‘அஸம்ப்ரக்ஞாத ஸமாதி’. இதிலிருந்து தான் முக்தி விளைகிறது. மேலே கூறப்பட்ட ஸம் ப்ரக்ஞாத ஸமாதி முக்திக்கு வழி காட்டுவதன்று; அதிலிருந்து சித்திகள் ஜனிக்கும். ஒருவன் எல்லா சித்திகளும் பெற்ற பிறகு கூட, மறுபடி நழுவி வீழ்ச்சி பெறக் கூடுமென்று பெரியோர் சொல்லுகிறார்கள். ஆத்மா (புருஷன்) ப்ரக்ருதியைக் கடந்து செல்லவேண்டும். இந்த நிலை பெறுதல் மிகவும் துர்லபம். இதனைப் பெறும் உபாயம் பின் வருமாறு: சித்தத்தை விஷயமாக நிறுத்திக் கொள். ஏதேனும் எண்ணம் உள்ளே புகும்போது அதை உடனே வெட்டிவிடு. சித்தத்தில் யாதொரு எண்ணமும் நிகழாமல் அதைப் பாழாக்கிவிடு. ‘இது செய்யும் திறமை ஒருவனுக்கு வருமாயின் உடனே முக்தி உண்டாய்விடும்’ என்று விவேகாநந்தர் சொல்லுகிறார்.
இந்த ஸமாதியில் ஸம்ஸ்காரங்கள் மிஞ்சி நிற்கும் என்று பதஞ்ஜலி முனிவர் சொல்லுகிறார். ஆனால் இந்த ஸமாதி முதிர்ச்சி பெறும்போது, ஸம்ஸ்காரங்கள் தாமாகவே நசித்து விடும் என்று விவேகாநந்தர் கருதுகிறார். அது பற்றியே, விவேகாநந்தர் இதனை முக்தியில் உடனே கொண்டு சேர்க்கும் படியென் று பேசியிருக்கிறார்.
‘ஸம்ஸ்காரங்கள் என்பன, சித்த வ்ருத்திகளின் விதைகள். நம்முடைய சித்தத்தில் தோன்றி மறையும் எண்ணங்கள் அப்படியே அழிந்து போகவில்லை. தம் தம் விதைகளை மிச்சம் வைத்து விட்டுப் போகின் றன. இந்த விதைகளையும் அழித்தாலன்றிப், பரிபூர்ண விடுதலை தோன்றாது. கெட்ட விதைகளை மாத்திரமே யன்றி நல்ல விதைகளையும் அழித்து விடவேண்டும்; அப்போது, ஆத்மா தனது ஸ்வரூபத்தை அறிவான். தான் நித்ய ஒளி யுடையவன் என்றும், எல்லாம் அறிபவன் என்றும், ஸர்வ சக்தி யுடையவனென் றும் தெரிந்து கொள்வான். தன்னைத் தானே தளைகளால் கட்டி யிருந்த தெல்லாம் ஒருவித மாயத்தோற் றமேயல்லாமல், யதார்த்தத்தில் தனக்கு எக்காலத்திலும் எவ்விதமான தளையேனும் துன்பமேனும் இருந்ததில்லை யென்று தெரிந்து கொள்வான். அப்போது அவன் கட்டளை யிட்ட செய்கைகளெல்லாம் நிறைவே றும். அவன் விரும்புவதில்லை; ப்ரார்த்தனை செய்வ தில்லை. அவனுக்கு நிகழும் ஸங்கல்பங்கள் தாமே நிறைவேறும்’ என்கிறார்.
ஸூ. 19 . விதேஹ யோகிகளுக்கும் ப்ரக்ருதி லயர்களுக்கும் இந்த யோகம் உலகத் தோற்றத்தை விளைவிக்கும்.
வ்யா : உடம்பிலே நாம் கட்டுப் பட்டிருக்கிறோம் என்ற அற்ப சிந்தையைக் கடந்தவர்கள் விதேஹ யோகிகள். இயற்கையுடன் ஒன்று பட்டவர்கள் ப்ரக்ருதிலயர்.
இவ்விருவரும் ஸமாதியாகிய சலன மற்ற நிலையில் உணர்வற்ற பதவியடைந்த ஸமயத்திலும் அவர்களுக்கு உலகத் தோற்றம் தென்படாதிராது; தென்படத் தான் செய்யும். இந்திர ஜாலம் கண் டிருப்போன் தன்னை அதில் உடம்படுத்தாதவாறு போல, அவர்கள் தம்மை உலகத்தின் மாறுபடு தோற்றங்களுடன் உடம்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
ஸூ. 20 . (சுத்த மோனம் வேண்டுகிற) மற்றவர்களுக்கு, அந்த யோகம் சிரத்தை, வீர்யம், ஸ்ம்ருதி (நினை ப்பு), ஸமாதி, உணர்வு இவற்றின் வழியே பிறக்கிறது.
வ்யா : ஸ்ம்ருதி என்பது சித்தத்தை தியானத்தினின்றும் நழுவவிடா திருத்தல். “உணர்வென் றது மெய்யறிவு. ஸமாதி யென்பது ஸம்பூர்ண அமைதி. சிரத்தை யென்பது விடாத நம்பிக்கை. அதினின்றும் ஊக்கமுண்டாகிறது. ஊக்கத்திலிருந்து நழுவுதலற்ற சிந்தை பிறக்கிறது. அதிலிருந்து சித்தத் தெளிவு பிறக்கிறது. அது மெய்யறிவைத் தருகிறது. இவற்றை ஸாதிப்போர் உலகத் தோற்றத்தைக் கடந்து மஹா மோன நிலை பெற வல்லோ ராவர்.
ஸூ. 21 . தீவ்ர வேக முடையவர்களுக்கு ஸமாதி மிகவும் விரைவாகக் கை கூடுகிறது.
மதுரை நாராயணய்யர் மொழி பெயர்ப்பில் இந்த ஸூத்ரத்துக்குப் பின் குறிப்புச் சேர்க்கப் பட்டிருக்கிறது:-‘யோகிகள் ஒன்பது விதப் படிகளில் உள்ளவர்கள். உபாயங்கள், வைராக்கியங்கள் தாரதம்யங்களினால் அப்படிகள் ஏற்படுகின்றன. உபா யம் மூன்று விதம் :- ம்ருது, மத்யமம், அதிமாத்ரை. வைராக்கியமும் மூன்று விதம். அதிமாத்ரையான உபாயம், அதிமாத்ரையான வைரா ராக்கியம் இவை யிரண்டும் கூடிய யோகிக்கு, இந்த ஸூத்ரத்தில் சொல்லிய ப்ரகாரம், ஸமாதி ஸமீபத்திலுள்ளது.’
ஸூ. 22 . அதிலும், மெதுவாகவேனும், மத்ய வேகமாகவேனும், அதி தீவ்ர வேகமாகவேனும் செல் வதற்குத் தக்கபடி (பயன்களிலும்) பேதங்களுண்டாகின்றன.
இதன் பொருள் அடுத்த ஸூத்ரத்தின் கீழே காட்டப்பட்டது.
ஸூ. 23 . அன்றிக் கடவுளை வழிபடுதலாலும்
வழிபடுதலாவது பரிபூர்ண பக்தி செலுத்துதல். இதே அந்த ஸமாதி எய்துவதற்குச் சிறந்த வழி. பக்தியே பரம ஸாதனம். “அகண்ட ஜகத்து” க்கும் ஆத்மா தெய்வம் என்று வேதம் சொல்லுகிறது.
அகண்ட ஜகத்து ரூபமே பரப்ரஹ்மம்
‘அண்ட பஹிரண்டமுமடங்க வொரு நிறை வாகி யானந்தமான பரமே’ என்று தாயுமானவர் சொல்லுகிறார்.
இந்த உலகம் உடம்பு; ஈசன் இதனுயிர்.
இந்த உலகமே தெய்வம்.
இந்த உலகம் எல்லை யில்லாதது.
திக்கும், காலமும் எல்லையில்லாதன. வஸ்து அநந்தம். ஸ்தூலம், ஸூக்ஷ்மம் என்பன வஸ்து பேதங்களல்ல, ரூப பேதங்கள்.
புராதன யோகிகள் ஈசனைப் புருஷாகாரமாக வணங்கி வந்தனர். ஸர்வத்திலும் ஈசனைப் பூஜித்தல் வேதாந்த யோகம்.
“ஈசனை வணங்கி வழி படுவதனாலும்” அந்த அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என்ற கைவல்ய நிலை கிடைக்கும் என்று மூலம் சொல்லுகிறது.
ஈசன் என்பது எவ்விதப் பொருள்? சொல்லத் தகாதது. வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதது.
எங்ஙனம் உபாஸனை செய்யத் தக்கது? அதன் குணங்களால்.
அதன் குணங்களில் முக்யமானவை எவை? எல்லையில்லாமை ; ஸர்வ ரூபியாதல் ; ரூபமில்லாமை ; காலமில்லாமை ; காலமாதல், முதலியன.
“ஸர்வ சக்தி” என்பது ஈச்வர சக்தியின் “ஸித் தாந்த” நாமம். (அதாவது) ‘சக்தி’ என்பது கடவுளுக்கு ஸரியான [“ஸயன்டிபிக்” ஆன] நாமம்.
பக்தியினால் அஸம்ப்ரக்ஞாத ஸமாதி ஸித்தியாகு மென்று மூலம் சொல்லுகிறது.
பூர்வீக பக்திமான்கள் பெரும்பாலும் சிலைகளுக்கே பக்தி செலுத்தி வந்தனர்.
எந்த ரூபமாக பகவானை உபாஸனை செய்கிறோமோ அவன் அந்த ரூபமாக நமக்குக் கருணை செய்கிறான் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனிலும், உபாஸனையில் ரூபம் ப்ரதானமன்று, பக்தியின் உறுதி ப்ரதானம்.
இந்த உலகத்தைக் காப்பது தெய்வம்.
இந்த உலகம் இருக்கிறது.
எனவே, இஃதொரு சக்தியால் காக்கப்படுகிறது. இவ்வுலகம் அசைகிறது.
ஆதலால், ஒரு சக்தி இதை அசைக்கிறது.
அந்த சக்திக்குக் கடவுளென்று பெயர் சொல்லுகிறோம்.
அதனை வழிபடுதலாவது நம்புதல், எப்போதும் நம்பியிருத்தல்.
எப்போதும், எப்போதும், எப்போதிலும், எதிலும், எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.
அந்த பக்தியால் பெரிய விடுதலை அடையப்படும். அப்போது மனதின் வஞ்சனைகளெல்லாம் தீர்ந்து போய்விடும். நமக்குத் தீங்கு நேரக்கூடுமென்று கற்பனை –
செய்கிற, அல்லது ஸூசனை செய்கிற, அல்லது சொல்கிற, பொருள் நமக்கு வெளியே நிற்பதாயினும் நம் உள்ளே நிற்பதாயினும் அதன் பெயரே மாயை.
அதை எரித்துத் தீரவேண்டும்.
பிதாவாகிய ஸூர்யன் அவனுடைய மக்களாகிய ஜீவர்களுக்கு இந்த லோகத்தில் மாயையைச் சுடுவதையே தொழிலாக வைத்துக் கொடுத்திருக்கிறான்.
பரமசிவன் த்ரிபுரத்தை எரித்தான்.
இன்னுமொரு த்ரிபுரம் தோன்றிற்று. அதை மறுபடி எரித்தான்.
வேறொரு த்ரிபுரம் ஜனித்தது.
பரமசிவன் அதைச் சுட்டான்.
மற்றொரு த்ரிபுரம் உண்டாயிற்று.
அப்படியே இன்று வரையும் நடந்துகொண்டு வருகிறது.
மாயையாவது யாதெனில்:
ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக்கொள்ளும் தீமை.
இது பூர்வத்தில் சங்கராசார்யர் சொன்ன லக்ஷ ணத்துக்கு பேதப்பட்டது. மாயையைத் தவிர ஜகத்தேயில்லை யென்று சங்கராசார்யர் சொன்னார். ஸர்வ மங்களாகாரமான ஜகத்தில் ஜீவன் கற்பனையால் செய்து கொள்ளும் தீமையே மாயையென்று நாம் சொல்லுகிறோம்.
இந்த மாயை என்ற ராக்ஷஸியின் வயிற்றில் கவலை, துன்பம், பயம், கஷ்டம், நோய், மரணம் முதலிய அஸுர ஜாதிகள் தோன்றி ஜீவகுலம் என்கிற பயிரை அழிக்கின்றன.
இந்த மாயை ஸர்வ ஜீவகோடிகளுக்கும் பொது. இந்த மாயையைத் தொலைப்பதற்கு பக்தியே உபாயம்.
மதுரை நாராயணய்யர் எழுதிய யோகஸூத்ர உரையில் பின்வருமாறு சொல்லப்படுகிறது:- வேறு வ்யாபாரமின்றி பக்தியினால் மாத்திரம் இச் சமாதி லாபம் ஸித்திக்கும். பக்தி என்பது மனம், மொழி, மெய்களால் நிகழ்வது. பக்தியினால் மாத்திரம் என்பதற்கு, பகவத்கீதை 9 -ஆம் அத்யாயம், 12 -ஆம் சுலோகம் பார்க்க.
ஷை பகவத்கீதை -9 – 12, பின்வருமாறு:-
அநந்யா: சிந்தயந்தோ மாம் யே ஜநா; பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்.
अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ||
இதன் பொருள் யாதெனில்:-
”மாறுதலின்றி யெனை மனத்திடைக் கொண்டு
போற்றுவார் யாரே, அம் மக்கள்
தீரா யோகத் திருப்பார்; அவர் தம்
நன்மையும் யோகமும் நானே வஹிப்பேன்”
என்று பகவான் சொல்லுகிறார்.
இனிப் பின்வரும் குறிப்புக்கள் ஸ்வாமி விவேகாநந்தரின் இங்கிலீஷ் டீகையை ஆதாரமாக உடையன:-
பல அம்சங்களில் யோக சாஸ்த்ரமும் ஸாங்கியமும் அபிப்பிராயக் கலப்புடையனவாக இருப்பினும், ஈசன் ஒருவன் உளனா என்ற விஷயத்தில் அவ்விரண்டு சாஸ்த்ரங்களும் தம்முள்ளே முரண்படுகின்றன. ஸாங்க்ய சாஸ்த்ரப்படி ஈசனென்ற வஸ்துவேயில்லை. ஸாங்க்யர்களுடைய வாதம் பின்வருமாறு:-
இந்த ஜகத்துக்கு ஈசனொருவனிருப்பது ஸாத்ய மில்லை.ஏனென்றால், ஈசனொருவன் இருந்தால் அவன் ஓர் ஆத்மாவாக இருக்க வேண்டும். ஆத்மாவானால் அது கட்டுப் பட்டேனும் விடுதலை பெற்றேனும் இரண்டிலொன்றாக இருத்தல் வேண்டும்.
கட்டுப் பட்டதாயின் அதற்குப் படைத்தல் முதலிய திறமைகள் இரா. ஜகத்திலே கட்டுண்ட அடிமையால், அதனை ஆக்கவும் ஆளவும் அழிக்கவும் இயலுமோ?
அங்ஙனமின்றி, ஈசன் விடுதலை பெற்ற ஆத்மாவாக இருக்கக் கூடுமெனில் அதுவும் ஸாத்யமில்லை ஏன்? விடுதலை பெற்ற ஆத்மா எதையுமே விரும்பாது. அதனுள்ளத்தில் ஸங்கற்பங்கள் எழமாட்டா. ஆகவே, அவ்வித ஆத்மாவுக்கும் சிருஷ்டி முதலிய தொழில்களுக்கும் ஸம்பந்தம் ஸாத்யமில்லை.
மேலும், ஸாங்க்ய சாஸ்த்ரத்தின் கொள்கைப் படி; ஈசனொருவன் இருக்க வேண்டிய அவசியமே யில்லை. பிரக்ருதியே போதும், ப்ரக்ருதியின் சக்திகளாலேயே சிருஷ்டி முதலிய தொழில்கள் நடை பெறுகின்றன. ‘வீணாக ஒரு கடவுளெதற்கு?’ என்கிறார்கள்.
ஆனால், பரிபூர்ண ஸித்தி பெறப் போகுந் தருணத்தில் முழுத் துறவில்லாமையால் பின்னடைந்து போய் பிரகிருதியிலே லயித்திருந்து அப் பிரகிருதிக்குத் தலைவர்களாக வெளிப்படும் ஜீவர்கள் பலரிருப்பதாக ஸாங்க்ய சாஸ்த்ரம் சொல்லுகிறது. நாம் அனைவரும் அவ்விதமான தேவர்கள் ஆகலாமென்றும் வேதங்களிலே சொல்லப்பட்ட ஈசன் இந்த இனத்தைச் சேர்ந்தவனே யென்றும் ஸாங்க்யர்கள் சொல்லு கிறார்கள்.
இந்த ப்ரக்ருதிலயர்களுக்கு மேலே ஒருவன் நித்யனாகவும் ஆநந்தமயனாகவும் இருந்து சிருஷ்டி முதலிய தொழில்கள் செய்வதாக ஸாங்க்யர்கள் அங்கீகாரம் செய்வதில்லை.
இனி, யோக சாஸ்த்ரத்திலோ எனில்:-
ஈசனிருப்பதாகவே ஸித்தாந்தம். மற்ற எல்லா ஆத்மாக்களினின்றும் பிரிந்த இயல்பு உடையவனாகிய ஒரு தனி ஆத்மா, எப்போதும் நித்யனாகவும் முக்தனாகவும் ஸர்வக்ஞனாகவும் இருந்து, இவ்வுலகத்தின் தலைமை செலுத்துவதாக யோக சாஸ்த்ரம் சொல்லுகிறது.
இந்த ஈசன் படைத்தவன்; சிவன், விஷ்ணு, யேஹோவோ அல்லது அல்லா. ‘படைத்தோன் காப்பா’னென்று சொல்லி வாழ்க்கையின் எல்லாவிதமான பொறுப்புக்களையும் அவனுடைய திருவடிக்கு ஸமர்ப் பணஞ் செய்து கர்மபந்தமின்றி விடுதலை பெறுவதே கைவல்ய முக்தி. இந்த ஈசனுடைய பக்தியை விட்ட போது நரகம்; இதைக் கைக்கொண்ட போது முக்தி.
‘இவனே ஸர்வமும்’ என்பது வேதாந்த ஸமரஸக் கொள்கை.
ஸூ. 24 . கவலைகளாலும், செய்கைப் பயன் களாலும், விருப்பங்களாலும் தீண்டப் படாத தொரு விசேஷ புருஷன் ஈசுவரன்.
ஸர்வ புருஷன் என்று கூறுவதே பொருந்தும். ஈசனை வேறு உயிர்களினின்றும் தனி உயிராகப் பிரிக்கும் போது, ஈசனுடைய உண்மையே வாதத்துக் கிடமாகிறது. ‘ஸர்வம் இதம் ப்ரஹ்ம’ – தோன்றுகின்ற இவ் வுலகனைத்தும் கடவுள் – என்போமாயின், நாஸ்திகர் கூட நமது ஸ்தானத்தை அசைக்க முடியாது. நாஸ்திகன் ப்ரக்ருதி யென்பதும், சைவன் சிவனென்பதும், மஹமதியன் அல்லா என்பதும் – ஒரே பதார்த்தம்; ‘ஜகத்தின் காரணப் பொருள்.’
அதனை நாஸ்திகர் ஜடமென்று வாதிடுகிறார்கள். ஆனால், அதற்குள்ளே சக்தியும் ஜீவனும் அமைந்திருக்கின்றன என்பதை நாஸ்திகர் மறுக்க வழியில்லை.
ப்ரக்குதி ஐடமென்று நாஸ்திகன் கூறலாம். ஆனால் நான் ஜடமில்லை. அந்த நாஸ்திகனும் ஜடமில்லை. எங்களுக்குள் விளங்கும் சைதந்யத்தை ஜடத்தின் குணபேத மென்று நாஸ்திகன் சொல்லிய போதிலும், அது சைதந்யமே யில்லை யென்றாவது ஜடத்தின் இதர இனங்களுக்கும் இந்தச் சைதந்ய சக்திக்கும் அபாரமான பேதமில்லை யென்றாவது நாஸ்திகன் சொல்ல முடியாது.
அது எப்படியானாலும், ஜடம் சித் இரண்டும் சேர்ந்தது வஸ்து. இதை நாஸ்திகன் மறுக்க முடியாது.
அந்த வஸ்துவையே வேதம் ‘தெய்வம்’ அல்லது ‘கடவுள்’ என்கிறது. எனவே இந்தக் கடவுள் இல்லை யென்று சொல்ல நாஸ்திகனால் ஸாத்யப்படாது.
ஆனால், பதஞ்சலி சொல்லுகிற ஈசுவரனை ஸாங்க்யர்கள் மறுப்பது மட்டுமேயன்றி வேதாந்த சாஸ்த்ரமும் மறுக்கத் தான் செய்கிறது. இதைப் பற்றி மற்றொரு (செய்யுட்) ப்ரபந்தத்தில் நான் எழுதியிருக்கும் பாட்டொன்றை இங்கு எடுத்துக் காட்டுகிறேன்:
“சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே சொல்லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க,
நல்ல தொரு மகன் சொல்வான்:- “தூணிலுள் நாராயணன் துரும்பிலுள்ளா“னென்றான்.(ளான்,
வல்லமை சேர் கடவுளிலா அணுவொன்றில்லை,
மஹா சக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை, அல்லலில்லை, அல்லலில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்லலுண்டோ?”
எல்லாம் பரமாத்மாவே என்பதை விட்டுப் பதஞ்சலி, ‘மற்ற உயிர்களினின்றும் பிரிந்த தனிப் புருஷனே ஈசுவர னென்று கூறியிருத்தல்’ அனுபவத்துக்கும் யுக்திக்கும் பொருந்தாது.
ஸூ. 25 . எல்லாவற்றையும் அறியும் அறிவின் வேர் (ஈசனிடம்) நிரதிசயமானது.
இந்த ஸூத்ரத்தில் ‘நிரதிசயம்’ என்ற பதம் ‘தனக்கு மேல் பிறிதொன்றில்லாது’ என்று பொருள்படுவது, ‘மற்ற ஆத்மாக்களிடம் வித்து வடிவமாகக் காணப்படும் ஸர்வக்ஞத் தன்மை அவனிடம் எல்லையற்றதாக விளங்குகிறது’ என்று விவேகாநந்தர் இந்த ஸூத்ரத்துக்குப் பொருள் சொல்லுகிறார். ‘அவரிடத்தில் (ஈசுவரனிடத்தில்) எல்லாவற்றையும் அறியும் சக்தியானது உயர்வற உயர்வு பெற்றது’ என்று மதுரை நாராயணய்யர் அர்த்த மெழுதியிருக்கிறார்.
பின்வரும் விநோதமான குறிப்புக்கள் மதுரை நாராயணய்யர் வ்யாக்யானத்தில் காணப்படுகின்றன:-
‘அவருடைய ஸ்ருஷ்டியினால் அவருக்கு யாதொரு ப்ரயோஜனமுமில்லை. ப்ராணிகளின் ப்ரயோஜனம் உண்டாகின்றது. ப்ராணிகளுக்கு ஞான தர்மங்களை உபதேசிப்பதனால் கல்பம், ப்ரளயம், மஹா ப்ரளயம் இவைகளில் ஏற்படும் ஜனனமரணங்களினின்று ப்ராணிகள் கரையேறும்படி செய்வது தான் ஈசுவரன் அடையும் ப்ரயோஜனம்.
இவ்விதமே, பஞ்சசிகாசார்யர் அடியில் வருமாறு சொல்லியிருக்கிறார்: ‘ஆதிவித்வான் (கபிலர்) சுத்த ஸாத் விக சித்தத்தை நிர்மித்து, அதன் மூலமாகக் கருணையால் ஜிஞ்ஞாஸு (அறிவை விரும்புவோன்) ஆகிய ஆஸுரி என்பாருக்கு ஸாங்க்ய சாஸ்த்ரத்தை உபதேசித்தார்.’ கபிலர் மஹா விஷ்ணுவின் அவதார மாகையால், ஈசுவரன் ப்ராக்ருத சரீரமில்லாதவராகையால், சுத்த சித்தத்தை நிர்மித்துக் கொண்டாரென்று சொல்லியிருக்கிறது.
அடியிற் கண்ட முக்கியமான அம்சங்களும் ஷை நாராயணய்யர் வ்யாக்யானத்தினின்றும் எடுத்தெழுதப்படுகின்றன:-
‘இவ்விதமே, வாயு புராணம்:—”எல்லாவற்றையும் அறியுந் தன்மை; என்றுந் திருப்தியுடனிருத்தல்; அநாதியான ஞானம், ஸ்வதந்த்ரம், குறைவில்லாத சக்தி, அநந்த சக்தி இவ்வாறும் ஈச்வர அங்கங்கள் என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். ஞானம், வைராக்யம், ஐசுவர்யம், தபஸ், ஸத்யம், க்ஷமை, தைர்யம், ஜகத்தை ஸ்ருஷ்டி செய்யும் சக்தி, ஆத்ம ஸ்வரூப ஞானம், எல்லாவற்றுக்கும் அதிஷ்டானமாக இருத்தல் என்ற பத்து குணங்கள் எப்பொழுதும் அழிவில்லாமல் ஈச்வரனிடம் இருக்கின்றன.” இத் தன்மையான குணங்களை உடையவரானால் துக்கம் நிறைந்த இந்த லோகத்தை ஈச்வரன் ஸ்ருஷ்டித் திருக்கமாட்டாரென்ற ஆக்ஷேபத்துக்கு ஸமாதானம்:—பரம ச்ரேயஸ்கரமான கைவல்யத்தை ப்ராணிகள் அடையும் பொருட்டு, ஸுக துக்கங்களை ஏற்படுத்தி அவைகளின் அனுபவங்களினால் ப்ராணிகள் மனம் சுத்தியாகி, ஞானம் உண்டாகி, ப்ரக்ருதி புருஷ விவேகம் உண்டாகிறது. அதனால் கைவல்யம் ஸித்தியாகிறது. இது ஈச்வரனுடைய பரம காருண்யத்தைக் காட்டுகிறது…….முதல் குரு…….யோகிகளின் குருபரம்பரையில் ஈச்வரன், ஹிரண்ய கர்ப்பன்.’
மேலே, விவேகா நந்தரின் கருத்தைச் சொல்லுகிறேன்:-
‘வான வெளியிலே வரம்புள்ள ஓர் ப்ரதே சத்தை (இடப் பரப்பை) நீ சிந்திப்பாயானால், அதற்கப்பாலும் வெளியுண்டென்ற சிந்தனை உனக்குண் டாகிறது. இப்படிப் போகப் போக நீ எத்தனை பெரிய வட்டம் போட்டாலும் அதற்கப்பால் எல்லையற்ற திசைவெளியிருக்கிறது. காலத்தைப் பற்றி நினைக்கும் போதும் இப்படியே தான் நடக்கிறது. ஒரு க்ஷணப் பொழுதைப் பற்றி எண்ணும் பொழுதே, காலம் நித்யமானது என்ற எண்ணம் உடன் தோன்றுகிறது. அறிவு விஷயத்திலும் இங்ஙனமே தான். மனிதனிடத்தே அறிவு ஒரு வித்தாக இருக்கிறது. ஆனால் அதிலிருந்து எல்லையற்ற அறி வொன்றிருப்பதாக ஊஹிக்கப் படுகிறது.
இந்த ‘எல்லையற்ற அறிவை’யே யோகிகள் ஈசனென்கிறார்கள். இவ்விஷயத்தைப் பற்றி மேலே (முதற்பாதம்) முப்பத் தெட்டாம் ஸூத்ர உரையில் விரிவாகப் பேசுவோம். அங்கு காண்க.
ஸூ. 26 . அவன் காலத்தால் வரை யறுக்கப் படாதவ னாதலால், அதிபூர்வமான குருக்களுக்குங்கூட அவனே குரு.
வ்யா : ஈசனே புராதன குரு என்கிறார். ஸர்வ ஞானத்துக்கும் உத்பத்தி ஸ்தானம் பகவானே யென்பது கருத்து.
ஸூ. 27 . அவனுடைய வாசகம் ப்ரணவம்.
‘ஓம்’ என்பது ப்ரணவ மந்த்ரம், ப்ரணவமே பகவானுடைய முக்ய நாமம், ஓம் என்பது மூல மந்த்ரம். இந்த மந்த்ரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்லுகின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருளைத் தருவது. ஓம் என்ற பதம் ‘ஆம்’ என்று ஸம்மதியைக் குறிப்பது. மஹா கணபதியே இந்த மந்த்ரத்தின் அதிஷ்டான தேவதை. சிருஷ்டி அடையாளம்.
ஸூ. 28 . அதன் பொருளை பாவனை செய்வதே அதனை ஜபித்தல்.
எல்லையற்ற அறிவுக் கடலென்ற பொருளை தியானம் செய்ய வேண்டும். அதுவே ஜபம். பொருளை பாவனை செய்யாமல் வெறுமே சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் அதிகப் பயன் தர மாட்டாது என்பது பதஞ்சலி மஹர்ஷியின் மதம்.
ஸர்வ வ்யாபியான பரமாத்மாவை மனதால் தியானஞ் செய்வது மிகவும் சிரமம். வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரம் பொருளை நாம் எங்ஙனம் தியானம் செய்வோம்?
எல்லையற்ற மங்கள் மயமான ஞானக் கடல், எங்கும் நிறைந்த பராசக்தி, எல்லாப் பொருள்களிலும் தொழில் புரியும் சுடர்ப் பொருள், யாது மாவது, பரம சக்தி, அகண்ட சைதந்யம், அகண்ட ஸௌந்தர் மோனம், என்று பல யம், பரம ஜ்யோதி, மஹா விதமாக மனம் சொற்களை வழங்குகிறது. எனிலும், அப் பொருளைப் பற்றிக் கொள்ளுதல் மனத்துக்கு வழக்கப்படவில்லை. ஸர்வ சக்தியாகிய பரமாத்மா என்ற வஸ்துவை அர்த்த மயமாக தியானம் செய்தா லன்றி வெறுமே நாமஸ்மரணம் அதிகப் பயன் படாது. என்று பதஞ்சலியார் சொல்வது ஒருவாறு மெய்யே யென்று கருதுவதற்குப் பல காரணங்கள் காட்டலாம்.
ஆனால் ஈசனுடைய நாமஸ்மரணத்தைக் காட்டி லும் ஷை ஞானம் உண்டாவதற்கே வேறு வழியிருப்ப தாகத் தோன்றவில்லை. பகவந் நாமஸ்மரணமே தாரகம் என்ற பக்தர்களுடைய கொள்கையையே நான் உண்மையாகக் கருதுகிறேன்.
நாம் நம்புகிறோம்.
‘நீ என்னைக் கொலை செய்தாலும், தெய்வமே, நான் உன்னைப் பின்னும் நம்புவேன்’ என்ற வாக்யத்தை நாம் கடைப்பிடித் திருக்கிறோம்.
எல்லாத் துன்பங்களுக்கும், எல்லாச் சிதைவுகளுக்கும், எல்லா பயங்களுக்கும் கடவுளின் ஸம் ரக்ஷணை நிவாரணம்; வேறுவித ஸம்ரக்ஷணை உலகத்திலில்லை. ‘அவனன்றி யோரணுவு மசையாது, சிவனன்றி வேறு புகலில்லை. தேடித் தேடிப் பார்த்தாலும் தெய்வ மன்றித் துணையில்லை. அந்தத் தெய்வம் நம் அறிவுக் கெட்ட வில்லை.
என்ன செய்வோம்?
பின்னும் கடவுளை நம்பத் தான் செய்வோம். ‘நம்புவதே வழியென்ற மறை தன்னை நாம் இன்று நம்பி விட்டோம்.’
என்றைக்கும், ஒரு நாளில்லாவிட்டால் ஒருநாள், இந்தப் பரம் பொருள் மனிதனுடைய அறிவுக்குள்ளே அடைபடத்தான் செய்யும்.
‘அஸாத்யத்தை மனிதன் ஸாத்ய மென்று கருதிப்பின்னும் பாடு பட வேண்டும். இல்லாவிட்டால் அவன் உண்மையின் தேட்டத்தைக் கைவிட நேரும், என்றொரு ஐரோப்பிய மஹாகவி சொல்லுகிறார்.
கடவுள் அறிவுக்கும் வாக்குக்கும் எட்டாத தென்றா சொன்னேன்? அது தவறான வார்த்தை. பூர்வ பக்ஷங்களை அனுசரித்துச் சொல்லிய வார்த்தை. ‘ஸர்வம் பரமாத்மா’ என்பதே ஸித்தாந்தம்.
எனவே, நீ தியானம் செய்யத் தொடங்குங் காலத்தில், முன்னே ஒரு விளக்கிருந்தால் அது தான் தெய்வம். பல்லியிருந்தால் அதுவே தியானத்துக் குரியது. சுவர் நின்றால் அதுவே கடவுள், எதுவும் தியானத்துக் குரிய பதார்த்தம்.
அங்கு அர்த்த பாவனை, ‘ஸர்வ ரூபியான ஸர்வ மான பொருளை அதன் ஒரு பகுதியில் தியானிக்கிறேன்’ என்று செய்யத் தகும்.
செப்புவதெல்லாம் ஜபம், நான் சிந்திப்பதெல்லாம் நின் ஒப்பில் தியாக மென ஓர்ந்தேன் பராபரமே என்று தாயுமானவர் சொல்லுகிறார்.
எல்லாம் கடவு ளர் தலாலே, மனதில் தோன்றும் நிகழ்ச்சிகளெல்லாம் ஈசனுடைய தியானங்களாகக் கரு த் தக்கன வென்பது இக் கண்ணியின் பொருள்.
மேலும், கண் முன்னே நிற்கின்ற பொருள்களனைத்துமே தெய்வம் என்பது மெய்யாயின், நம்மைச் சூழ்ந்த அசேதன வஸ்துக்களைக் காட்டிலும் சேதன வஸ்துக்களிடம் நாம் அதிக தெய்விக புத்தி செலுத்த வேண்டு மென்பது எளிதாக ஊஹித்துக் கொள்ளத் தக்க விஷயமாம். இவற்றுள்ளும் மற்ற உயிர்களைக் காட்டிலும் மனித உயிர்களிடம் தேவதா பக்தி செலுத்தல் நமக் கெளிது. அது முக்கியமாகச் செய்யத் தக்கது. அருகே யுள்ள பந்து மித்திரரிடம் பரமாத்ம தர்சனம் செய்தல் ஸாத்ய மாயின், பிறகு அவர்களை ஸ்மரிக்கும் பொழு தெல்லாம் சிவ ஸ்மரணம் செய்கிற பயனுண்டாகிறது.
மேலும், ஜபம் மூன்று விதமானது:-
(1) சிவ, சிவ, சிவ, அல்லது ராம, ராம, ராம என இங்ஙனம் ஏதேனு மொரு மந்திரத்தை வாயினால் உரக்க உச்சரிப்பது.
(2) அடி நா அசையும்படி, ஆனால் வெளியே பிறருக்கு ஓசை கேட்காதபடி, ஜபம் செய்வது.
(3) மனதுக்குள்ளே சொல்லிக் கொள்வது.
இம் மூன்றுக்குள் மனதுக்குள்ளே சொல்லிக் கொள்ளுதல் விசேஷமானது.
இந்த ஜபத்தினால் சில ஸமயங்களில் தீங்கு நேரிடும். பொருளைக் கருகாமல் வெறுமே பதத்தை ஓயாமல் சொல்லும்படி புத்தியை வற்புறுத்துவதினின்றும்,புத்தி ப்ரமங் கொண்டு போகக் கூடும். ஆதலால் — ‘சிவ, சிவ’ என்று உச்சரிப்போர் ஸர்வ மங்களத்தின் பெயரை உச்சரிக்கிறோம் என்ற பொரு ளறிந்து கொண்டு செய்தல் நன்று. இங்ஙனமே ‘சக்தி’ என்னும் பதம் திறமையைக் குறிக்கும். பிற மந்த்ரங்களையும் இங்ஙனமே கொள்ளுக. அர்த்த ஜபம் விசேஷமானது.
எனிலும், நாம ஸ்மரணத்தைக் காட்டிலும் பகவானுடைய கல்யாண குணங்களை நாம் ஒழுகிக் காட்டுதலே மேலான பூஜை யென்பதில் ஸந்தேஹ மில்லை. ‘அறிவு ஸமபாவனை ஸந்தோஷமென்ற மலர்களால் அந்தத் தேவாம் பிரிவரிய ஆத்தும தத்துவத்தை யர்ச் சிப்பதே பெரிய பூஜை’ என்று பெரியோரும் கூறினர்.
மேலும், ஈசன் நான்,
“தத்வமஸி” என்று வேதம் சொல்லுகிறது.
இவ்விஷயமாக நான் மற்றொரு நூலில் பாடியிருக்கும் விருத்த மொன்றை இங் கெடுத்துக் காட்டுகிறேன்:-
பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்
பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்,
சாமி நீ, சாமி நீ, கடவு ணீயே.
தத்வ மஸி, தத்வ மஸி, நீயே தெய்வம்.
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை,
சாமி நீ, யம் மாயை தன்னை நீக்கி
ஸதா காலம், “சிவோஹ” மென்று ஸாதிப்பாயே.
ஸூ. 29 . இந்த ஜபத்திலிருந்து தனி யறிவின் உணர்வுண்டாகும், இடையூறுகள் நீங்கும்.
தனியறிவு என்பது ஆத்மா. யோக ஸித்திக்கு நேரும் இடையூறுகள் எவை என்பது கீழே 30 -ஆம் ஸூத்ரத்தில் கூறப்படும்.
இனி அர்த்தத்திலே சிந்தையை ஆழச் செலுத்தி ஜபம் பண்ணுவதால் முக்தி கூடப் பலிதமாகிற போது, இஹலோகத்தில் அறிவு, கீர்த்தி, வீர்யம் முதலிய பெருமைகள் வேண்டுவோருக்கு ஜபம் எவ்வளவு தூரம் அனுகூலம் என்பது சொல்ல வேண்டுவதில்லை.
ஸூ. 30 . நோய், உள்ளச் சோர்வு, ஸந்தேஹம், அஜாக்ரதை, சோம்பர், இந்திரிய விஷயங்களில் பற்றுடைமை, பிழையுடைய காட்சி, யோகபூமி யொன்றை எட்டுதற்குத் திறமில்லாமை,எட்டிய பூமியினின்றும் நழுவுதல்—இவை யோகிக்கு நேரிடும் இடையூறுகளாம்.
நோயில்லாமை யோக ஸாதனத்துக்கு மிகவும் முக்கியமாகும். நோயாளிக்கு யோகஸாதனம் கை கூடாது. நோய் மனத்தின் கற்பனையால் உண்டாகிறது. பொறாமை, லோபம், அஸூயை, கோபம், களவு முதலிய துர்க்குணங்களால் உண்டாகும் பயமே நோய்க்கு ப்ரதான காரணம், எல்லா ஜீவராசிகளும் பரமாத்ம ஸ்வரூப மென்ற ஞான முண்டாய், அதினின்றும் ஸமபாவனை ஏற்பட்டால், பிறகு ஒருவனுக்கு பயம் செத்துப்போகும். பயம் செத்தாலொழிய நோய் சாகாது. நோய் ஸம்பந்தமான பயங்களை உடனே அழித்துக்கொள்ள முயலுதல் அப்யாஸியின் முதற்கடமை.
உள்ளச் சோர்வினால் சிரத்தைக் குறைவு நேரும். ஸாதனத்துக்கு வேண்டிய ஊக்க மில்லாமல் போய் விடும். இஃதொரு தடை.
மேலும், ஸாதனத்தினின்றும் ஒரு சில ஸாமான்ய ஸித்திகளேனும் தோன்றும் வரை, அடிக்கடி ஸம்சயங்கள் ஜனித்துக் கொண்டேயிருக்கும். இந்த ஸம்சயம் ஒரு தடை. ஊக்கத்தாலும், ஸத்யத்தாலும் ஐயத்தை வெல்லவேண்டும்.
யோக சாஸ்த்ரத்தில் ‘பூமி’ என்றால் ‘அனுபவநிலை’ என்றர்த்தம். ஸாதனத்திலே எய்தும் படிப் படியான சித்த நிலைகளுக்கு “பூமி” களென்று பெயர்.
ஒருவன் எட்டிய பூமியினின்றும் நழுவி விடாமல் இருப்பதற்கு ஒரே உபாயந் தான் உண்டு. அதாவது, இன்னும் மேலே ஏறிச் செல்ல முயலுதல். எதிலும் மேன்மேலே ஏறாதவன் தான் நிற்கும் நிலையைப் பாதுகாக்க முடியாது. ஏற முயற்சி செய்து கொண்டே போக வேண்டும். இல்லாவிட்டால், ப்ரகிதி உன்னை இறக்கிக்கொண்டே போகும்.
ஸூ. 31 . ஸமாதியிலிருந்து நழுவுதல் நேர்ந்தால், அதனுடனே, துக்கம், மனநோவு, மெய்ந்நடுக்கம், பெரு மூச்செறிதல் என்பவை தோன்றுகின்றன.
ஸூ. 32 . அவற்றை அகற்றுவதற்கு ஒரே தத்துவத்தை அப்யஸிப்பதே உபாயம்.
வ்யா : ‘ஒரே தத்வம்’ என்பதற்கு ‘ஈசுவரன்’ என்று சிலர் பொருளுரைக்கிறார்கள். ‘யாதாயினு மொரு தத்வம்’ என்று விஞ்ஞானபிக்ஷ அர்த்தம் சொல்லுகிறார். யாதாயினுமொரு தத்வத்தை எடுத்துக்கொண்டு அதையே தியானம் செய்து பழக்கப் படுத்தினால், மேற்கூறப்பட்ட இடையூறுகள் நீங்கி விடும்.
இது பொதுப்படையான வார்த்தை. இன்னின்ன தத்துவங்கள் அப்யாஸத்துக் குரியன என்பதைக் கீழே முறையாக விரித்துச் சொல்லுகிறார். இவற்றுள் ஒருவருக்கு வேண்டத்தக்கது பிறருக்கு வேண்டத்தகாத தாகலாம். ஆதலால், அவரவர் தத்தமக் கிணங்கிய அப்யாஸத்தைக் கைப்பற்றிக் கொள்ளுதல் பொருந்தும். அதினின்றும் உள்ளத்தில் அமைதி பிறக்கக் காணலாம்.
ஸு. 33 . சுகம் துக்கம் புண்ணியம் பாவம் இவை யுள்ள விஷயங்களில் முறையே நட்பு, கருணை, மகிழ்ச்சி, உபேக்ஷை என்பவற்றைச் செலுத்துவதால் சித்தத்திலே அமைதி யுண்டாகும்.
வ்யா : சுகமாக வாழ்வோனைக் கண்டு நீ பொறாமைப் படாமல் அவனிடம் நட்புச் செலுத்த வேண்டும். துக்கப் படுவோரிடம் கருணை செலுத்தவேண்டும். புண்ணியச் செயல்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டும். பாவச் செயல்களைக் கண்டால் அவற்றில் சினமடையாமல் புறக்கணிப்பு அடைதல் வேண்டும்.
ஸூ. 34 . விதிப்படி மூச்சை வெளியே விடுவதனாலும், உள்ளே அடக்குவதனாலும் (சித்தம்) அமைதி பெறும்.
இங்ஙனம் சித்த சாந்திக்காக மூச்சை ஆளும் முறைமை ‘ப்ராணாயாமம்’ என்று சொல்லப்படும். மூச்சை உள்ளே இழுத்தல் பூரகமென்றும், கட்டி வைத்தல் கும்பகமென்றும், வெளியே விடுதல் ரேசக மென்றும் கூறப்படும். ப்ராணாயாமத்தின் பல வகைகளையும், அவற்றுக்குரிய விதிகளையும் ஹடயோக நூல்களிலே கண்டு கொள்ளுக. மனதை யாதொரு சிரமமில்லாமல் மூச்சுப் போக்குவரவிலே செலுத்தி மூச்சை இயற்கைப்படி நடைபெறவிடுதல் ப்ராணாயா மங்களில் சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.
‘ப்ராணன்’ என்ற பதம் மூலத்திலுள்ளது. அதற்கு ‘மூச்சு’ என்பது சரியான மொழி பெயர்ப்பன்று. மூச்சுக் காதாரமான ஜீவசக்திக்கு ப்ராணன் என்று பெயர்.
மனதை எங்கே நிறுத்துகிறோமோ அந்த இடத்தில் உயிர் நிற்கிறது. உயிர் நிற்குமிடத்தில் மூச்சு நிற்கும்.
ஸூ. 35 . (குறிப்பிட்டதொரு) பொருளையுடைய தாகிய (மனச்) செய்கை தோன்றுமிடத்தே, மனம் கட்டுப்படும்.
வ்யா : “விஷயவதீ வா ப்ரவ்ருத்தி ருத்பந்நா மனஸஸ் ஸ்திதி நிபந்தநீ” என்பது மூலம்.
தெளிவாக, இதன் பொருள்: ‘யாதேனு மொரு பயனுடையதாகிய தொழில் செய்யப் புகுமிடத்தே மனம் கட்டப்பட்டு நிற்கும்’ என்பதுதான். எனிலும் ஸுலபமான வெளிப்படையான பொருளைத் திரஸ்காரம் செய்துவிட்டு, வலிந்து பிற பொருள் கொள்ளுதலே பண்டிதத் தன்மைக்கு லக்ஷணமென்னும் கருத்துடைய புராதன வ்யாக்யாநகாரர், வேறு பல இடங்களில் செய்திருக்குமாறே, இந்த ஸூத்ரத்துக்கும் வலிந்து பிறபொருள் காட்டி இருக்கின்றனர்.
அவர்கள் சொல்லிய பொருளைச் சோதனை பண்ணி, யுக்திக்குப் பொருந்துமா என்று பார்த்த பிறகே கொள்ளுதல் வழக்கமாகவுடைய ஸ்வாமி விவேகாநந்தர் இவ் விடத்தே கவனக் குறைவால் பூர்விக டீகைகளையே பரிசோதனை யின்றிக் கைக்கொண்டு பின்வருமாறு பொருள் சொல்லுகிறார்:-
‘அப்யாஸத்திலிருந்து இந்திரியங்களுக்குப் புலப்படக் கூடிய புதுமைகளைக் காணுமிடத்தே, மனம் அந்த அப்யாஸத்தில் நிலைபெற்றுவிடும்’ என்று விவேகாநந்தர் வ்யாக்யானம் பண்ணுகிறார். அப்பால் பின் வரும் குறிப்புக்கள் அவரால் சேர்க்கப்படுகின்றன. ‘மனத்தை அடிக்கடி மூக்கின் நுனியிலே நிற்கும்படி செய்தால் சில தினங்களுக்கப்பால் அற்புதமான ஸுகந்தங்கள் புலப்படுமென்று யோகிகள் சொல்லுகிறார்கள். நாக்கின் அடியில் நிறுத்தினால் விநோதமான ஒலிகள் செவியுறும். நாக்கின் நுனியிலே நிறுத்தினால் நல்ல ருசிகளின் உணர்ச்சி உண்டாகும். இவ் வாறு எத்தனையோ சோதனைகள் சொல்லப்படுகின் றன. அப்யாஸத்தில் ஸம்சயம் ஏற்படுவதால் மேற் செல்ல மாட்டாதவர்களுக்கு இந்த அனுபவங்கள் தோன்றினால் ஸம்சயங்கள் நீங்கி மேல் அபிவிருத்தி செய்ய இடமுண்டாகு மென்பது யோகிகளின் கருத்தாம்.
ஸூ. 36 . அல்லது, சோகமில்லாத ஜோதிமயமான மனநிலை (இதனாலும் சித்த ஸமாதானம் ஏற் படும்.)
வ்யா : ஸ்வாமி விவேகாநந்தர் எழுதுகிறார்:-
‘ஹ்ருதய ஸ்தலத்தில் ஒரு தாமரை யிருப்பதாக, நினைத்துக்கொள். அதன் இதழ்களெல்லாம் கவிழ்ந்து தலைகீழாக இருப்பதாக பாவனை செய்துகொள். அந்த ஸமயத்தில் மூச்சை உள்ளே வாங்கு. பிறகு, மூச்சை வெளியே விடும்போது, அத்தாமரை மலர் மல்லாந்து – மேல் நோக்கி – விழுந்து, அதன் இதழ்கள் மலர்ந்து நிற்பதாக பாவனை செய். அதனிடையே தேஜோமயமான ஒரு வஸ்து விளங்குவதாக எண்ணு. அந்த ஒளிப்பொருளை தியானம் செய் என்கிறார்.
இந்த இடத்தில் மதுரை நாராயணய்யர் பின்வரும் விஷயங்கள் சொல்லுகிறார்:-
‘ஹ்ருதய புண்டரீகத்தில் ஒரு சக்கரமுளது; அது எட்டு தளங்களுடையது; அது அதோமுகமாக இருக்கிறது. ப்ராணயாமத்தால் ஊர்த்வமுகமாகத் திருப்பி அதில் மனத்தை நிறுத்தவேண்டும். அதன் மத்தியில் ஸூர்ய மண்டலமாகிய ஜாக்ரதாவஸ்தையின் இருப்பிடமும் அகாரம் என்ற அக்ஷரமும், அதன் மேல் சந்த்ர மண்டலமாகிய ஸ்வப்நாவஸ்தையின் இருப்பிடமும் உகாரம் என்ற அக்ஷரமும், அதற்கும்மேல் அக்நி மண்டலமாகிய ஸுஷுப்தி அவஸ்தையின் இருப்பிடமும் மகாரம் என்ற அக்ஷரமும், அதற்கும் மேல் பர வ்யோம ஸ்வரூபம்- துரீயா வஸ்தை -ப்ரஹ்மநாதம் என்று சொல்லப்படும் அர்த்த மாத்திரையும் இருக்கின்றன. அந்தத் தாமரையின் கர்ணிகையில் ஊர்த்வ முகமான ப்ரஹ்ம நாடி இருக்கிறது. அது ஸூர்யாதி மண்டலங்களின் மத்தியில் ப்ரவேசிக்கிறது. அதற்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது ஸுஷும்நா நாடி. அது வெளியிலுள்ள ஸூர்ய மண்டலங்களைத் தாண்டிப் போகிறது. அது தான் மனத்தின் ஸரியான ஸ்தானம். அதில் தாரணை தியானம் செய்தால் “சித்த ஸம்வித்” உண்டாகிறது. வஸ்துக்களின் உண்மையான (Thought-forms) நிலையின் ஸாக்ஷாத்காரம் பெறுகிறான். அந்த ஸ்தானத்தில் மனம் நிற்பதினால், ஸூர்யன், சந்திரன், க்ரஹங்கள், ரத்தங்கள் இவற்றின் தேஜோ ரூபங்கள் நானாவிதமாகத் தோன்றுகின்றன; அதாவது, மனம் அந்த ரூபங்களாகிறது. ஸுஷும்நா நாடியை ஆச்ரயித் திருக்கின்றமையால் இந்த மநஸ், ரஜஸ் தமஸ் இரண்டும் குறைந்தும் ஸத்வம் மேலிட்டும் இருக்கிறது. அதனால் அந்த நிலை ‘ஜ்யோதிஷ்மதீ’ (ஜோதியுடையது) என்று ஸூத்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயினும், மேற்கூறிய இரண்டு ஸூத்ரங்களின் (35, 36) தெளிவான பொருள் மீட்டுமொரு முறை இங்கு சுருக்கமாகக் காட்டத்தக்கது.
ஒரு பொருளை யுடைய தொழில் நிகழுமிடத்தே மனம் ஒரு நிலைப்படு மென்பது 35 -ஆம் ஸூத்ரக் கருத்து.
துன்பம் யாதுமன்றி ஒளியுடைய மனநிலை. (காதல், அன்பு, ஒளஷதம் முதலியவற்றால்) பெறு மிடத்தே, சித்த ஸமாதானம் பிறக்கு மென்பது 36 -ஆம் ஸூத்ரக் கருத்து.
ஸூ. 37 . அல்லது விருப்பப்பொருள் நீங்கிய சித்தத்தினால் மனம் ஒரு நிலைப்படும்.
வ்யா : ‘வீத ராக விஷயம் வா சித்தம்’ என்பது மூலம், இதன் பொருளை நன்கு தெளிவிக்கும் பொருட் டாக 35- ஆம் ஸூத்ரத்தி லிருந்து மற்றொரு முறை திருப்பிச் சொல்ல வேண்டும்.
விஷய வதீ வா ப்ரவ்ருத்தி ருத்பந்நா
மனஸஸ் ஸ்திதி நிபந்தநீ (35)
(அதாவது) விஷய முடைய தொழில் மனதின் நிலையைக் கட்டும்.
விசோகா வா ஜ்யோதிஷ்மதீ. (36)
சோக மற்ற ஒளியுடைய ப்ரவ்ருத்தியும் (அங்ஙனமே மனதைக் கட்டும்).
வீத ராக விஷயம் வா சித்தம் (37)
விருப்பப் பொருள் நீங்கிய சித்தமும் (அங்ஙனமே மனதைக் கட்டும்).
வா என்னும் இனப் பொருள் குறிக்கும் சொல் மூன்று ஸூத்ரங்களிலும் இருத்தல் காண்க. (‘வா’- அல்லது).
இங்கு பண்டைக் காலத்து வ்யாக்யாந கர்த்தாக் களை அனுஸரித்து ஸ்வாமி விவேகாநந்தர்:-
‘அல்லது, விருப்பம் நீங்கிய ஒரு சித்தத்தைப் பற்றி தியானம் செய்யலாம்’ என்று பொரு ளுரைத்துப் பின் வருமாறு விளக்க மெழுதுகிறார்:-
‘யாரேனும் ஒரு ஞானியுடைய சித்தத்தைப் பற்றிச் சிந்தனை செய். அச் சித்தம் எல்லா விருப்பங் களும் நீங்கி யிருப்பதை யெண்ணு. அத்தகைய சித்தத்தைப் பற்றி தியானம் செய்வதால் உன் உள்ளத்திலே அமைதி யுண்டாகும்.’
இங்ஙனமே மதுரை நாராயணய்யர் உரையில்:- ‘அல்லது, ஆசை விட்ட மஹா புருஷர்களை மனம் விஷயீகரித்தலினால் (அது ஸ்தைர்யம் பெறும்)’ என்று பொருள் கூறி விட்டுப் பின் வரும் குறிப்பு எழுதியிருக் கிறார்:-
‘ஆசை விட்டவர்களான வ்யாஸர் முதலிய மஹர் ஷிகளின் குணங்களை தியானித்தல் வேண்டும். அவர்களின் மன நிலையை தியானித்தலால், அந்த நிலையை அப்யாஸம் செய்கிற யோகி பெறுகிறான்.’
‘உன் சித்தத்தில் விருப்பம் நீங்கினால் ஸமாதானம் ஏற்படும்’ என்று நாம் பொருள் சொல்லுகிறோம். ‘விருப்பமற்ற மற்றொரு சித்தத்தின் த்யாநத்தால் சாந்தி விளையும்’ என்று முந்திய வ்யாக்யாநகாரர் வலிந்து பொருள் கொண்டனர். இது தான் பேதம்.
ஸூ. 38 . அல்லது, கனவிலும் உறக்கத்திலும் உண்டாகிய ஞானத்தை தியானம் செய்தல்.
இதனாலும் சித்த சாந்தி உண்டாகு மென்கிறார். கனவிலே தன்னை அறிதல் ஸாதனத்தால் எளிதாகச் செய்து கொள்ளலாம். நனவிலே எண்ணியது தான் கனவாக மீண்டும் வருகிறது. ஸ்வப்நத்தில் நாம் இதர லோகங்களுடன் ஸம்பந்தப் படுவதாகவும் இவ்வுலகத்தில் தோன்ற இடமில்லாத அற்புத ஞானம் இதர லோகங்களினின்றும் நமக்குக் கனவிலே எய்தக் கூடு மென்றும் சிலர் சொல்லுகிறார்கள். ஸ்வப்நத்தில் நாம் இதர லோகங்களுடனே ஸம்பந்தப் படுகிறோ மென் பது மெய்தான்.
ஸங்கீதத்தில் ஸ்வர ஸ்தானங்கள் -ஸ்,ரி,க,ம,ப,த,நி – என ஏழு இருக்கின்றன. ஆனால் நாம் எந்த ஒலியையும் ‘ஸ’ (ஷட்ஜம்) என்று வைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற-ரி,க,ம,ப,த,நி – பாடலாம்.
நாம் பாடும்போதே, கீழே சில ஸ்வரங்கள் எட்டாது போனால் சுருதியை மாற்றிக் கொள்ளுகிறோம். அதாவது – த்ருஷ்டாந்தமாக- முன்பு ‘க’ (காந்தா ரம்) அல்லது ”ம” (மத்யமம்) சொன்ன இடத்தை இப்போது “ஸ” (ஷட்ஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்கு மேல் அவ்வோசைக்குத் தக்கபடி ரி,க,ம, ப,த,நி,ஏற்றிக்கொண்டு போகிறோம்.எப்படி நாம் சொன்னபோதிலும் ஸாதாரண மனிதனுடைய தொண்டை யளவு இரண்டரை ஸ்தாயிதான். ஒரு ஸ, ரி, க, ம, ப, த, நி – ஒரு ஸ்தாயி, அதற்கு மேலே ஸ,ரி,க,ம,ப,த,நி மேல் ஸ்தாயி. எடுப்புக் கீழே யுள்ளது கீழ்ஸ்தாயி.
இங்ஙனம் ஸாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். சிலருக்கு மூன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிகமாகவும் எட்டக்கூடு மென்று சொல்லுகிறார்கள். இருந்தாலும் மூன்றரை ஸ்தாயிக்கு மேலே மனிதத் தொண்டை பேசுதல் ஸாத்யமில்லை.
ஆனால், ஒலியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக் கின்றன. கிளிக்குஞ்சு கத்துவதை ஷட்ஜமாக வைத் துக் கொள்வோம். சந்த்ர மண்டலம் இடிந்து பூமி மேல் விழுந்தால் அதிலுண்டாகும் ஒலியை ஷை கிளிக் குஞ்சின் ஒலியினின்றும் எத்தனை ஸ்தாயி மேலாகக் கணக்கிடலாம்? ஊழிக் காற்று அடிப்பதாக வைத்துக் கொள்வோம். நமது ஸூர்ய கோளமும் அதனைச் சூழ்ந்த க்ரஹ குடும்பமும் தம்முள்ளே மோதி இடிபட்டுச் சிதறிப் பொடியாவதாக பாவனை செய்வோம். அதில் தோன்றும் ஒலி ஷை கிளிக்குஞ்சு ஸ்தாயிக்கு மேலே எவ்வளவு தூரம் போகும்? இங்ஙனம் ஒலி யுலகத்து ஸ்தாயிகள் அநந்தமாயினும் மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிகள் மாத்திரமே எட்டுவது போல, அவனுடைய செவிப்புலனுக்கும் ஏழு ஸ்தாயிகள் தான் அகப்படு மென்று ஜகதீச சந்த்ர வஸு கணக்குச் சொல்லியதாக ஞாபகமிருக்கிறது.
அதாவது,- எங்ஙனம் கூறுவேன் ?- அநந்த மான – எண்ணத் தொலையாத, எண்ண எண்ண எண்ண எண்ண எண்ண எண்ணத் தொலையாத – ஒலிக் கடலில் ஏழு ஸ்தாயி நமது செவிக்கெட்டு மென்றால் நமது செவிப்புலனுடைய சிறுமையை நான் எங்ஙனம் வகுத் துக் காட்டுவேன்?
இது போல அநந்தமான – எல்லை யில்லாத எல்லையே யில்லாத – ஜ்யோதிக் கடலில் நம்முடைய விழிக்கும் சுமார் ஏழு “ஸ்தாயி” ஒளி தான் தென் படு மென்றும் அதற்கும் மேலும் கீழும் நாம் முழுக் குருடென்றும் ஜகதீச சந்த்ர வஸு சொல்லி யிருக் கிறார். ஸ்தாயிக் கணக்கு ஸரியாக ஞாபகமில்லை, எனக்கிப்போது. ஏழுக்கு மேலே போகாது; நிச்சயந் தான் எனக்கு.
ஒளிக்கடலோ பெரிதினும் பெரிது,- எழுத்தில் எங்ஙனம் காட்டுவோம்?- அகண்டம்.
ஒளியோ எல்லையற்றது.
நாமோ துளி தவிர முழுக் குருடு!
மனிதன் இருளாகக் கருதுவதை ஆந்தை ஒளியாகக் கருதுகிறது. ஒளி விஷயத்தில் ஆந்தை நம்மைக் காட்டிலும் கீழ் “ஸ்தாயி” பழகியிருக்கிறது. ஆனால், நம்முடைய “ஸ்தாயி” ஆந்தைக்கெட்டாது.
பகலில் நாம் ஸாதாரண ஒளியாகக் கருதும் வெயிலொளி ஆந்தைக்குக் கண் கூச்சத்தை விளைவிக்கிறது. நமக்கே சூர்யனை நேரே பார்த்தால் – நல்ல பயிற்சி யுடையோர் தவிர, ஸாதாரண மனிதருக்கெல்லாம் – கண் கூசுகிறது, பார்க்க முடியாது; பெரும்பாலுங் குருடு தான்.
ஆனால் பருந்து ஸூர்யனைக் கூசாமல் பார்க்கும். எனவே,ஒளி விஷயத்தில் நம்மைக் காட்டிலும் பருந்துக்கு மேல் “ஸ்தாயி” எட்டுகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு நாள் காலையில் பத்மாஸனத்தில் வீற்றிருந்து உதய ஸூர்யனை நோக்கத் தொடங்கியவர் அரை விநாடி கூட அந்த ஸூர்யனை விட்டுக் கண்ணை அப்புறப் படுத்தாமல், நடுப்பகலில் முகத்தை ஸூர்யனுக்கு நேரே தாமரை போல் காட்டியும், அங்ஙனமே நேரமாக நேரமாக முதுகை மல்லாந்து வளைத்துக் கொண்டே, ஸூர்யனை விட்டு விழிகளை விலக்காதபடி மாலை நேரத்தில் அந்த ஸூர்யன் முன்னே (தன் முகத்தை முதுகுப் புறத்தி னின்றும் காதலன் முத்த மிடுவதற்கு நின்றபடி மல்லாந்து வளைந்து முகங் காட்டுங் காதலி போலே) காட்டியும், இங்ஙனம் – ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் – ஒரு நாள் முழுதும் யோகப் பயிற்சி செய்தாரென்று சொல்லப்படுகிறது.
எனவே, ஸாதாரண மனிதரைக் காட்டிலும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவருக்கு ஒளி விஷயத்தில் அதிக ஸ்தாயிகள் எட்டின.
இங்ஙனம்,கோடி ஸூர்ய ப்ரகாசமுண்டானால்? அநந்த கோடானு கோடி ஸூர்யன்கள் ஜகத்திலிருக்கின்றன. அவை ஒளி வீசத் தான் செய்கின்றன. ஆனால் நம்முடைய விழிப்புலன் சிறிது. நாம் மிகச் சிறிய எல்லைதான் பார்க்கிறோம்.
இங்ஙனம் ஜகத்தில் தத்துவங்களெல்லாம் அந்தமாகவே யிருக்கின்றன. விரிக்கிற் பெருகும்.
இங்ஙனமே, நம்முடைய சைதன்யமும் அருந்த விஸ்தார முடையது.
பரமாத்ம சைதந்யத்தின் மஹிமையையே பூர்வ யோகிகள் அருந்த கோடானு கோடானு கோடானு கோடி ஸூர்ய ஜ்யோதியாக வர்ணித் திருக்கிறார்கள், உபமித்திருக்கிறார்கள்.
எல்லாம் – என்பது ஸர்வத்தின் பெயர்.
எல் என்பது, தமிழில், ஸூர்யனுக்குப் பெயர்.
ஸர்வமென்ற மனக் கொள்கைக்கு ப்ரதிநிதியாக நம்முடைய முன்னோர் ஸூர்யனை ஆராதனை செய்தது. யுக்தமே யாகும்.
‘ஸர்வ மென்ற மனக் கொள்கை வேறு; ஸர்வ மென்ற ஞான லோகம் வேறு; ஸர்வ மென்ற பஹிர் லோகம் வேறு; இதற்குள்ளேயே ஸர்வம் திசைமய லோகம் வேறு; ஸர்வம் தேஜோ மயமான லோகம் வேறு; கால மயமான ஜகத் வேறு’ எனப் பலவாக அநந்த லோகங்கள் தோன்று மாயினும், ஸர்வம் ஒன்று. அதன் பெயர் கடவுள்.
மண்ணும் அதுவே; வானும் அஃதே.அது அநந்த லோகங்களை அநந்த வஸ்துக்களாலே பெருக் கிய அநந்தாநந்த வஸ்து.
எனவே ஒரு கல்லிலுந் தொழலாம்; பதுமையிலுந் தொழலாம்; அந்த ஸர்வமாகிய கடவுளைப் பெண்ணிலுந் தொழலாம்; ஆணிலுந் தொழலாம்.
ஸர்வமும் அஃதே யெனில், ஸர்வ பதார்த்தங் களும் அதன் ப்ரதிநிதிகளாகக் கருதி வணங்குதற் குரியன அல்லவோ?
மேலே நாம் விளக்கியபடி உணர்வு – அறிவு, சைதந்யம் – அநந்தமாக இருக்கவும், நமக்கு அதில் இரண்டு மூன்று “ஸ்தாயிகள்” மாத்திரமே ஸாதாரண நிலையில் எட்டுகின்றன. மிஞ்சிப் போனால், சிலருக்கு எட்டு ஸ்தாயி ஒன்பது ஸ்தாயிகள் எட்டு கின்றன. அவர்களை மஹாத்மாக்களென்றும், அவதார புருஷர்களென்றுங் கொண்டாடுகிறோம். இது நிற்க.
சைதந்யமாகிய எல்லை யற்ற கடலில் நமக்குத் தென்படும் ஒரிரண்டு ஸ்தாயிகளிலுங் கூட நாம் ஆரோஹண அவரோஹண கிரமங்களிலும், ஸ்வரக்கோவைகளிலும், ராக வேற்றுமைகளிலும் எண்ணி றந்த விசித்திர விசித்திரமான அனுபவங்கள் பெறுதல் ஸாத்யமே யாகும். அது தான் இந்த ஜகத்தில் மஹத் தான ஆச்சர்யம்.
நம்முடைய வரையறுக்கப் பட்ட புலனுணர்வுக்குள்ளே அனந்தங்கள் பல இருக்கின்றன. ஸ்வரங்கள் ஏழு தானே? அப்படி இருந்தும், அவற்றின் கலப்புக்களால் இந்த பூமண்டலத்தின் மீது இதுவரை ஏற்பட்டனவும் இப்போது ஏற்பட்டு வருவனவும் இனி ஏற்படப் போவனவு மாகிய ராக பேதங்களே எண்ணில்லா தன. ஜ்யோதி விஷயத்திலும் அப்படியே. நமக்குப் புலனாகக் கூடிய ஜ்யோதி ஸ்தாயிகள் சிலவே யாயினும், இவற்றுள் காணும் வர்ண பேதங்கள் அநந்த மாகும்.
இங்ஙனமே, நம்முடைய ஸாதாரண ஜாக்ர புத்திக்கு – அதாவது, ஸாதாரண மனிதனுடைய ஸாதாரண ஜாக்ர புத்திக்கு – இடமாகிய சைதன்ய ஸ்தாயிகள் சிலவே யாயினும், இதற்குள்ளே அநந்தமான ஸம்பவங்கள் நிகழ்ந்து வருதல் வெளிப்படை. இதனுள் அநந்தமான இன்ப வாயில்கள் இருக்கின்றன.
அப்படி யிருந்தும், மனிதர் இந்த எல்லைக்குள் தீரத்துடன் ஸஞ்சரிக்கவில்லை. ஸாதாரண ஜாக்ர லோகத்திலும், எவனும் வானத்தில் பருந்து சுற்றுவது போலே சுற்றுவதைக் காண்பது மிகவும் துர்லப மாகும். இங்கு மானுடர், எலி யொன்று பொறிக் குள்ளே அகப்பட்டுத் தவிப்பது போலே, ஒரு சில வளையங்களுக்கு உட்பட்டுத் தவிக்கிறார்கள்.
பளீரென்று தீப்பெட்டியினின்றும் ஸூர்யனைப் போய்க் கவ்வக் கூடிய திறமை மனுஷ்ய ஸாதாரண ஜாக்ர புத்திக்கு உண்டு என்பது வெளிப்படை. சித்த யந்திரத்தை வெகு வேகமாகச் சுழற்றிக் கொண்டு போய் அநந்தமான காட்சிகள் காணுந் திறமை ஸாதாரண மனிதனுக்கு ஜாக்ர உணர்வில் உண்டு. ஆனால், அத் திறமையை அவன் நேரே உபயோகப் படுத்துவதில்லை. இது நிற்க. நமக்கு ஸாதாரண ஜாக்ர நிலையில் தோன்றும் இரண்டொரு சைதன்ய ஸ்தாயிகளைத் தவிர இவற்றின் கீழும் மேலும் எண்ணற்ற சைதன்ய ஸ்தாயிகள் உண்டென்று மேலே சொன்னோம். இதை ஒட்டிச் சில தத்துவ சாஸ்திரிகள் இந்த இரண்டொரு சைதன்ய ஸ்தாயிகளுக்குக் கீழே இருப்பவற்றுக் கெல்லாம் ஒரு பெயர் கொடுத் துக் ‘கீழ்ச் சைதன்யம்’ (Sub-conscious) என்றும், ஸாமான்ய மனிதனுடைய ஜாக்ராவஸ்தையிலுள்ள விஸ்தாரத்தை ‘ஸாதாரண சைதந்ய’ விஸ்தாரத்தை ஸாதாரண சைதன்ய மென்றும், இந்த எல்லைக்கு மேலே யுள்ள அனந்த ஸ்தாயிகளுக்கும் ஒரு பெயர் கொடுத்து அதை மேற் சைதன்யம்’ (Super-conscious) என்றும் சொல்லு கிறார்கள்.
‘உழக்குக்குள்ளே கிழக்கேது, மேற்கேது? எல்லாம் ஒன்றாய், ஒரே அனந்த மண்டலமான பொருளில் மேலேது, தாழ்வேது? ஸர்வமும் சைதன்ய மாகையிலே, சைதன்யப் பெருங் கடலுக் கிடையே ஒரு சில துளிகளைப் பற்றிக் கொண்டு நாம் மற்றப் பகுதியை அதற்கு மேலென்றும் கீழென்றும் வகுக்க இடமுண்டோ?’ எனில், உண்டு.
எங்ஙன மெனிலோ, அநந்த மாகிய ஜ்யோதி வெள்ளத்தில் நமக்குத் தென்படும் அளவையே ப்ரமாணமாக வைத்துக் கொண்டு, அதற்கு மேலும் கீழுமுள்ள பகுதிகளுக்கு ஒரே மொத்தமாக ஒளி மிகையென்றும், இருளென்றும் பெயர்கள் கொடுத்துப் பகுத்திருப்பது போலே, என்க.
இங்ஙனம் கீழ்ச்சைதன்ய மென்று பொதுப்படையாகக் கூறப் பட்ட அநந்த புவனக் கோவையில், கனவும் ஒரு படியாகச் சில நவீன தத்துவ சாஸ்திரிகளாலே கருதப் படுகிறது. ‘மேற் சைதன்ய’ வரிசையில் யோகானுபூதி முதலியவை சேர்க்கப்படுகின்றன. எனவே, ஸாதாரணமாக நனவில் தோன்றக் கூடாத சில அனுபவங்கள் கனவிலே தோன்றுதல் அஸாத்ய மில்லை யெனினும், ஸாதாரணமாகக் கனவு நனவிலே கண்டதைத் தான் குழப்பிக் குழப்பிச் சித்திரித்துக் காட்டுகிறது.
எனிலும், யோக ஸித்தியிலே சில படிகள் ஏறினவர்களுக்குக் ‘கீழ்ச் சைதன்ய’ லோகத்தில் சில புதிய வெடிப்புக்கள் திறந்து, பூமண்டலத்தின் மத்ய பாகத்தில் மறைந்து கிடைக்கும் அக்நி சில மலைத் திறப்புக்களில் வெளியேறி வருவது போலே, சில அற்புதமான அனுபவங்கள் ஏற்படுதல் ஸாத்யந் தான் என்றும், அவை ஒருவேளை மேல் லோகங்களினின் றும் (கங்கா ப்ரவாஹம் வானத்தினின்றும் பாதாளத்துக் கிறங்கியது போல்) ஸாதாரண ஜாக்ர உணர்வாகிய புவனத்தைக் கடந்து, (சில ஸமயங்களில் ஸாதாரண ஜாக்ர புத்திக்குத் தெரியாமலே) ‘பாதாள சைதன்ய’ மண்டலத்தில் இறங்கிக் கனவில் தோன்றக்கூடு மென்றும் மேலே பதஞ்சலி முனிவர் கூறியுள்ள ஸூத்ரத்தினின்றும் ஊஹிக்க இடமுண்டாகிறது.
கனவில் தேவதா ரூபங்கள், அற்புதமான இயற்கைக் காட்சிகள் (அதாவது ஸாதாரணமாக விழிப்பில் காணக் கூடிய பரமாச்சர்யமான இயற்கைக் காட்சி களினின்றும் வேறு பட்டன) முதலிய வியப்புக்கள் யோகப் படிகளின் மீது மிகவும் சிரமத்துடன் ஏறிச் செல்லும் ஸாதகனுக்குத் தென்படுமாயின் அவற்றை அவன் நனவிலும் சிந்தை செய்வதால் சித்த சாந்தி விளையு மென்பது பதஞ்சலியின் கருத்து. மேலும், அவ்விதமான தேவ ரூபங்கள் ஒரு வேளை நனவிலே கண்ட காட்சிகளின் ப்ரதி பிம்பங்களாகவே யிருக்குமென்று வைத்துக் கொள்ளினும், நனவுக் காட்சிகளைக் காட்டிலுங் கூடச் சில ஸ்மயங்களில் அவற்றின் கனவு ப்ரதி – சித்திரங்கள் அதிகத் தெளி வுடையனவாக இருப்பதால் அவற்றை நனவில் மீண்டும் சிந்திப்பது சித்த ஸமாதானத்துக்கு வழியாகக் கூடும்.
ஸூ. 39 . அல்லது, அவரவர் இஷ்டப்படி தியா னம் புரிதலால்.
வ்யா : எந்தப் பொருள் உனக்குப் பிரியமோ அது யாதாயினும் அதை தியானம் செய்வதால் சாந்தி பிறக்கு மென்பது கருத்து.
ஸூ. 40 . இவனுக்குப் பரமாணு முதல் பரம மஹத்வம் வரை எல்லாம் வசமாகும்.
வ்யா : இங்ஙனம் சித்த அமைதி ஏற்படுத்திக் கொண்ட யோகிக்கு பரமாணு (மிகச் சிறிது) முதல் பரம மஹத்வம் (மிக்க பெருமை) வரை ஜகத் தெல்லாம் வசமாய் விடும்.
ஸூ. 41 . வ்ருத்திகள் அழி வெய்தும் போது, கொள்வோன் கொள்ளுதல் கொள்ளப்படும் பொருள் மூன்றிலும் பளிங்கு போல் ஓர் நிலையும் ஒரு தன்மையு மான ஸமாபத்தி ஏற்படும்.
வ்யா : அதாவது, அஹங்கார ஸம்பந்தமான சித்த வருத்திகள் நீங்கி, மேல் ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட வழிகளால் சித்த சாந்தி யெய்திய யோகிக்கு, விஷய வஸ்துக்களுடன் எக்காலத்தும் முரண்பாடு தோன்றாது. வர்ணமுடைய பொருள்களுக்கு அருகேயுள்ள பளிங்கு போலே அவனுடைய சித்தம் எதிரே கண்ட விஷயத்துடன் ஸம நிலை எய்தி விடுகிறது. இந்த ‘ஸூத்ரத்தில் கொள்வோன்’ என்பது ஆத்மா, ‘கொள்ளுதல்’ அறிதல், ‘கொள்ளப்படும் பொருள்’ எதிரே அறியத் தக்கபடி நிற்கும் விஷயம்.
‘ஸமாபத்தி’ என்பது பொருத்தம், லயப்படுதல்; இஃதே ஸமாதி என்றும் சொல்லப்படும்.
ஸூ. 42 . அதில் சொல், பொருள், உணர்வு மூன்றுங் கலந்து நிற்கும்போது, அஃது ஸவிதர்க்க ஸமாதி எனப்படும்.
தியானத்துக்கு விஷயமாக எடுத்துக் கொள்ளப் படும் பதார்த்தத்தைப் பற்றிய சொல், பொருள், உணர்வு மூன்றுங் கலந்து நிகழும் உள்ளக் காட்சியை ஸவிதர்க்க சமாதி என்றார்.
தியானத்துக்கு ஒரு மனுஷ்யனையே பதார்த்தமாக எடுத்துக் கொள்ளுவோ மெனில், அவனைப் பற்றிய பதம், அர்த்தம், ஞானம் இவற்றுடன் கலந்த தியானம் ஸவிதர்க்கமாம்; அதாவது, பலவித தர்க்கத் துடன் கூடியது.
ஸூ. 43 . நினைவு பரிசுத்தமடைவதனாலும், அல்லது ஸ்வரூப சூன்யத்தாலும் அர்த்தம் மாத்திரம் விளங்குவது நிர்விதர்க்க ஸமாதி.
நினைவு பரிசுத்தமடைதலாவது தியான பதார்த்தத்தின் ஸம்பந்தமான இதர ஸம்ஸ்காரங்களின் ஞாபகம் ஏற்படாதிருப்பது. ஸ்வரூப சூன்யமாவது தியானம் செய்வோன் தன் அஹங்கார வடிவத்தை மறத்தல். கேவலம் தியான பதார்த்தத்தைப் பற்றிய வேறு சிந்தனைகள் ஒன்றுமே யில்லாமல் அதன் உள்ளுறை பொருள் மாத்திரமாக உனது சித்தம் பரிணமித்து (அதன் செயல்களைக் கூடக் கருதாமல் அதன் உட் பொருள் நீ யாகி) நிற்கும் ஸமாதி நிர்விதர்க்க மெனப் படுகிறது.(அதாவது, தர்க்க மில்லாதது). இவை யிரண்டும் ஸ்தூல விஷயங்களைப் பற்றி நிகழ்வன.
ஸூ. 44 . இதுபோலவே, ஸூக்ஷ்ம விஷயங்களைப் பற்றி இயலும் ஸவிசார நிர்விசார ஸமாதிகள் சொல்லப்படுகின்றன.
ஸ்தூலமான விஷயங்களைப் பற்றி மேற் கூறப் பட்ட ஸவிதர்க்க நிர்விதர்க்க ஸமாதிகளின் பிரிவு முறைப்படியே, ஸூக்ஷ்ம விஷயங்களைப் பற்றி இரு வகையாக நிகழ்வன ஸவிசார ஸமாதி என்றும் நிர் விசார ஸமாதி என்றும் பெயர் பெறும், ஸ்தூல விஷயங்களாவன பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட பொருள்கள். ஸூக்ஷ்ம விஷயங்களாவன : இந்திரியங்கள், மனம், அஹங்காரம், சித்தம், ப்ரதானம் (அதாவது ஸத்வ ரஜஸ் தமோ குணங்களின் மூல ஸ்தானமாகிய ப்ரக்ருதியின் ஆதி நிலை) – இவையே ஸூக்ஷ்ம விஷயங்களாம்.
ஸூ. 45 . ஸூக்ஷ்ம விஷயத் தன்மை மூல ப்ரக்ருதி வரை யுரைத்தாம்.
‘மூல ப்ரக்ருதி’ என்று நாம் மேலே மொழி பெயர்த்திருக்கும் வஸ்துவுக்குப் பதஞ்சலி மஹர்ஷி ‘அலிங்கம்’ என்று பெயர் சொல்லுகிறார். ‘அலிங்கம்’ என்றால் ‘குறியில்லாதது’ என்பது பொருள். அதனை ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலை யென்பர். இதுவே ‘அவ்யக்தம்’ என்றும் சொல்லப்படும். ஆத்மா ஸூக்ஷ்மத்துக்கும் அதீதமான வஸ்து.
ஸூ. 46 . இவையே வித்துடைய ஸமாதிகள்.
மேலே கூறப்பட்ட ஸவிதர்க்க நிர்விதர்க்க ஸவிசார நிர்விசார ஸமாதிகளே வித்துடைய ஸமாதிக ளென்றும் சொல்லப்படும். அதாவது, இவை கர்மத் தொடர்பை நீக்குவதில்லை. இவற்றால் புதிய கர்ம விதைகள் (ஸம்ஸ்காரங்கள்) ஏற்படுகின்றன.
ஸூ. 47 . நிர்விசார ஸமாதியில் தொடர்ச்சி பெறுவதனால் அத்யாத்ம ப்ரஸாதம் ஏற்படுகிறது.
அத்யாத்ம ப்ரஸாதம் என்பது ஆத்ம சாந்தி.
ஸூ. 48 . அங்கு அறிவு ‘ரிதம்பரா‘ எனப்படும்.
‘ரிதம்பரா’ என்றால் ‘உண்மையைச் சுமப்பது’ என்றர்த்தம். அந்த உணர்ச்சியில் எப்போதும் பரி பூர்ண ஸத்யமே நிற்கும்.
ஸூ. 49 . இது கேள்வியாலும் அனுமானத்தாலும் கிடைக்கும் அறிவினின்றும் வேறுபட்டதாம், விசேஷப் பொருளுடையதாகையால்.
பிறர் சொற்களைக் கேட்பதினின்றேனும் – வேதாகமங்களினின்றேனும் கிடைக்கும் உணர்வைக் காட்டிலும், இந்த நிர்விசார ஸமாதி நம் அனுபவத்துக்கு வரும்போது, நமக்கு உயர்ந்த விதமான ஞான மொன்று பிறக்கிற தென்று விவேகாநந்தர் சொல்லுகிறார்.
தியானம் செய்யப்படும் ஸூக்ஷ்மப் பொருளை, வெறுமே அதன் செய்கைகளால் கணிப்பதைக் காட் டிலும், அதன் சுத்த ஸ்வரூபத்தில் தியானம் செய்யும் திறமை பெறுவதால் எய்தும் உணர்வு – உள்ளத்தின் நிலை விசேஷமான இயல்புடையது. எதைப் பற்றியும் நமது மனச் சலனத்துடன் நிகழும் ஆராய்ச்சி வடிவமான ஸமாதியைக் காட்டிலும், யதார்த்த ரூபமான தியானமே அறிவில் சுத்தமான தெளிவையும் இன்பத்தையும் விளைவிக்கும். தியான விஷயங்களை நம்முடைய மனம் ஆராய்ச்சி செய்யுமிடத்தே, அஹங்காரத் தொடர்களைக் கிளப்பிக் குழப்ப முண்டாக்கும். வெறுமே அவற்றுடன் சுத்த ரூபத்தில் கலந்து விடுங் கால் நம்முடைய அஹங்காரம் மடிந்து போகும். எந்த வஸ்துவின் ரூபமும் நம்முடைய அறிவுக் கெய்தி விடும். எனவே, அப்படிப்பட்ட தியானத்தால் நமக் கெவ்விதமான சலிப்புக்களும் நிகழமாட்டா. உண்மை மயமான உணர்வு பிறக்கும்.
நிர்விசார ஸமாதி விஷயமாக, மதுரை நாராயணய்யர் உரையில் காணப்படும் பின்வரும் வசனங்கள் இங்கு குறிப்பிடத் தக்கன :
‘ஸாதாரணமாக ஏனையோருக்கு ஞானம் ஒன்றன் பின் ஒன்றாய் க்ரமமாக உண்டாகிறது. இந் நிலைமை யடைந்தானுக்கு அப்படி யின்றி ஏக காலத்தில் எல்லா விஷயங்களின் ஞானம் உண்டாகிறது. இந் நிலையில் உள்ளவன் பிறர் யாராலும் பரிதபிக்கக் கூடாதவனாக அத்தன்மையான உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து, பர்வதத்தின் மேலுச்சியிலுள்ளவன் போல, ஜனங்களைக் கருணையுடன் பார்க்கிறான். இவ்விதம் மஹா பாரதத்தில் சாந்தி பர்வத்தில் சொல்லப் பட்டுள்ளது.’
ஸூ. 50 . அதனால் உண்டாகும் ஸம்ஸ்காரம் மற்ற ஸம்ஸ்காரங்களைத் தடை செய்யும்.
ஸம்ஸ்காரங்களாவன கர்மங்களாலே சித்தத்தில் மிஞ்சி நிற்கும் கர்ம விதைகள். இந்த ஸம்ஸ்கார விதைகள் நம்முடைய சித்த லோகத்தைக் கெடுக்கின்றன. புராதன கர்மங்களால் நாம் எத்தனை தூரம் கட்டுப் படுகிறோமென்பதை ஸாதாரண மனிதன் அறிய மாட்டான்.
ஒரு செய்கை நம்முடைய சித்தத்தில் ஒரு முத்திரை போடுகிறது. அந்த முத்திரை ஞாபக மெனப்படுவது மட்டுமன்று. கீழ்ச் சைதன்ய மண்டலம் வரையடிப்பது. உனது சைதன்ய ஜகத்தில் ஜாக்ரத் பூமியை மட்டுமேயன்றி அஜாக்ரத்தான சைதன்ய பாதாளங்களிலும் போய் அடிப்பது.
ஒரு முறை ஒரு சித்தச் செய்கை நிகழ்ந்தால் அது மீள மீள நிகழும். ஒரு முறை செய்த தொழிலை மீட்டு மீட்டும் செய்தல் இன்றியமையாததாக நேரும்.
“ Qui a bu, boria” என்பது ப்ரென்ச் பழ மொழி. அதன் பொருள்:-“(இதற்கு முன்னே) குடித்தவன் (இனியுங்) குடிப்பான்.”
ஒரு முறை பொடியை மூக்கிலே செலுத்தினால், முதல்தரம் செலுத்தும் போது நரகம் போலிருக்கும், அப்பால் எங்கு பொடியைக் கண்டாலும் மூக்கூறும், ஒரு முறை பேனாக்கத்தி திருடினவன் கையில் பின்பு பேனாக் கத்தியைக் கண்டபோதெல்லாம் ஊறுத லெடுக்கும்.
ஒரு முறை ஒருவரை மிருகத்தனமாக தூஷணை செய்தோம், அல்லது அடித்தோம் – அல்லது வேறு வகைகளில் ஒருவருக்குத் தீங்கு விளைவித்தோமானால், பிறகு அவர்களைக் காணும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம் மனம் அசாந்தியடையும். தீய கர்ம ஸம்ஸ்காரங்கள் மீண்டும் அதிகத் தீச் செயல்களாய், மீண்டும் அதிகத் தீய ஸம்ஸ்காரங்களாய், அவற்றினின்றும் புதிய பல தீய செயல்களாய், இங்ஙனம் தீராத சங்கிலியாக நடைபெறும். நல்ல கர்மங்களும் அங்ஙனமே. இவற்றுள் நல்ல கர்ம ஸம்ஸ்காரங்கள் தீய கர்ம ஸம்ஸ்காரங்களைப் பெரும்பாலும் குறுக்கவும், நசுக்கவும், வற்றடிக்கவும், சுண்டுவிக்கவும், பாழாக்கவும் வல்லன. ஆனாலும் பரிபூர்ணமாக அழித்துவிடமாட்டா. ஏனெனில், சித்த லோகத்தில் ஸாதாரண ஜீவனுக்கு – அதாவது யோகஸாதனத்தாலே கைவல்ய பதவி பெறாத ஜீவனுக்கு- நல்ல ஸம்ஸ்காரங்களைக் காட்டிலும் தீய ஸம்ஸ்காரங்கள் அதிக வேகத்துடனும் ஸம்ருத்தியுடனும் பயிராவதாகச் சொல்ல இடமில்லை யெனினும், இரண்டும் ஸம பலத்துடனே வளர்கின்றன. தீயதை நல்லது அழிப்பது போலவே, சில ஸமயங்களில் நல்லதைத் தீயது கெடுக்கிறது. ஆகவே, இந்த ஸம்ஸ்கார யுத்தத்தால் ஜீவன் தனது சித்தம் நரக நிலையிலிருப்பது கண்டு அதையும் அதன் புறக்கோலமாகிய சரீரத்தையும், உதறி எறிந்து விடுகிறது. இங்ஙனம் எறிதலே மரணம் என்று சொல்லப்படும்.
ஸர்வ ஜீவராசிகளும் மரணமடைகின்றன. இதன் காரணம் யாது? ஜீவலோக முழுவதிலுமே நல்ல ஸம்ஸ்காரங்களைக் காட்டிலும் (அதாவது, ஜீவஸம் ரக்ஷணைக் குரிய ஸம்ஸ்காரங்களைக் காட்டிலும்] தீய ஸம்ஸ்காரங்களே அதிக வேகத்துடன் வளர்கின்றன வென்று புலப்படுகிறது.
அங்ஙனமன்று. ஏனெனில், உயிர்கள் மேன் மேலும் புதியன புதியனவாகத் தோன்றி வருதலால்.
எனவே, ஜீவலோகப் பொதுமையில் நல்ல ஸம்ஸ் காரங்களே வெற்றி பெற்று வருகின்றன. மரணம் வெல்லவில்லை. உயிரே வெற்றி யடைந்து கொண்டு வருகிறது. இன்று வரை பூமியின் மீது செத்த ஜீவன்களின் தொகை அதிகமா? மிஞ்சிய உயிர்களின் தொகை அதிகமா? மிஞ்சியவற்றின் தொகை அதிகம், ஸந்தேஹ மென்ன இதிலே? வெளிப்படை.
உயிர் தான் துவரை வெற்றி யடைந்து வருகின்றது.
நல்ல ஸம்ஸ்காரங்களே ஜயம் பெற்று வருகின்றன. இதனை இன்னும் சாஸ்திர ரூபத்தில் விவகரிப்போம். உயிரை மரணத்தால் அழிக்க முடியாது. உயிர் மழையை மரணத்தீ வற்றடித்தல் ஸாத்திய மில்லை.
உயிருக்கும் சாவுக்கும் சண்டை நடக்கிறது.
ஜீவன் ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஜீவன் ஸஹஸ்ர கோடிகளாக விளங்குகிறா னெனிலும் ஜீவலோகம் ஒன்றே.
உயிர்த்தலுக்கு அனுகூலமான குணங்கள் பொ றுமை, அன்பு, துணிவு முதலியன. சாவுக்கு அனுகூலமான குணங்கள் பொறாமை, பகைமை, பயம் முதலியன உயிர்க் கதவுகளான குணங்களே தேவர்கள்.
சாத்விகக் கதவுகளான குணங்கள் அஸுரர்.
தேவாஸுர யுத்தம் முடிவின்றி நடைபெற்று வருகிறது, ஜகத்தாகிய நாடக சாலையில்; பரமாத்மா ஆகிய ராஜாதிராஜன் ஸாக்ஷியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இது நிற்க.
ஸம்ஸ்கார விதைகளை அப்போதைப்போது புதுப்பித்தலே நன்று. பழைய கர்ம விதைகளால் நமக்குப்பயனில்லை.
நாம் ஒரேயடியாக எவ்விதமான கர்மபந்த விதைகளுமில்லாமல் பரமமுத்தி நிலை பெற முயல வேண்டும்.
படிப்படிமாக முக்தி யடையவேண்டி முயற்சி பண்ணுகிறவன் ஒருபோதும் முக்தி பெறமாட்டான். படீரென்று கர்மச் சங்கிலியை ஒரே தட்டையாக அறுத்தொழித்து விடவேண்டும்.
முற்றும்.
★ ★ ★



