சைவசித்தாந்த உண்மை வரலாறு
கா. சுப்பிரமணிய பிள்ளை

குறிப்பு

சைவ சித்தாந்த நன்மக்கள் யாவரும் தமது சமய நூல்களைக் குறிக்கொண்டு பாதுகாத்தலைத் தமது பெருங் கடனாக எண்ணக்கடவர். நூல் பாதுகாப்பு ஒன்றினாலே ஆரியர் தமிழரின் மேம்பட்டனர். நூல் பாதுகாவாமை யினாலேயே தமிழர் தம் பெருமையை இழந்தனர். தமது சமய நெறி இன்னதென உணர்ந்து அதன்வழி ஒழுகுவதைக் கடைப்பிடித்தலினாலே ஏனையோர் உயர்ந்தனர். அங்ஙனம் செய்யாமையினாலே சைவர் அஃகி ஒழிந்தனர். அம்மட்டோ! நமக்குப் பெரு வாழ்வும் பெரு நிதியுமாகிய திருக்கோயில், திருமடம் முதலிய சைவ சமய நிலையங்களைப் புறச்சமயத்தார் பறிகொள்ள விடுத்து வாளாவிருக்க நேர்ந்தது. சைவ சித்தாந்த நூல்களை இனியாவது நாம் கைநழுவ விடாது போற்றிப் புரப்போமாக. சைவ சித்தாந்தத்தின் சார்பாய நூல்களனைத்தையும் தமிழிலே அச்சிடுவித்துப் பயன் கொள்ளுதலும் நமது கடமையே. ஆங்கிலத்திலே Science என்கிற பூத நுண்ணூல், புல நுண்ணூல்கள் போல் நுண்ணூல்கள் யாவும் சைவ சித்தாந்தத்திற்குச் சார்பாக இருப்பின் அவற்றையும் நாம் கொள்ளவேண்டும். வடமொழி தென்மொழிகளி லுள்ள சரியை கிரியா யோக நூல்கள் யாவும் சைவசித்தாந்த சார்பினவாதலால் அவற்றையும் தமிழிலே யாரு மறிய அச்சிடல் வேண்டும். எளிதாக யாவர்க்கும் விளங்கும் வண்ணம் சித்தாந்தக் கொள்கையினைப் பரப்புதற்குச் சிறு நூல்கள் வெளிவரல் வேண்டும். திருவாசகம், சிவ ஞான போதம் என்னும் இரண்டு நூல்களையும் சொற் பொருளாதல் விளங்கும்படி அச்சிடுவித்து யாவர்க்கும் குறைந்த விலைக்குக் கொடுக்க வேண்டும்.

கிறித்தவர்கள் யாவரும் சைவ சித்தாந்த வுண்மைகளைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் உணரும் வண்ணம் போதகர்கள் நியமித்து அவற்றைக் கற்பிக்கவேண்டும்.

சைவமாணவர் தங்கள் நூலைக் கற்றுப் பாதுகாத்துப் பிறர்க்கு ஈதல் போன்று சைவர் ஒவ்வொருவரும் சைவ நூல்களைக் கற்றுப் பாதுகாத்துப் பிறர்க்குப் பயன்படச் சொல்லல் வேண்டும். இன்றேல் சைவரென்னும் பெயர்க்குப் புறம் பேயாவர். குடதிசைக் கிறித்தவக் குருக்களாகிய Dr G. U. Pope, Dr. Gowdie முதலியவர்கள் திருவாசகம், சிவஞான போதம் முதலிய நூல்களைக் கற்றுச் சீராட்டிப் பாராட்டி நிற்கவும், நம்மவர்கள் தங்கள் பெருநிதியிழந்து புறச்சமயிகள் முன் திகைத்து நிற்பது எத்துணை யிரங்கத் தக்கதாகின்றது. இந்நாட்டிலே பொருளாளரும், துறவிகளும் சைவசித்தாந்தம் இன்னதென்றுணராது கொன்னே லாழ்நாட் கழிக்காநிற்ப, சுமார்த்தரும் வைணவரும் தமது மொழியினையும் தமது சமய நூலினையும் அரசாங்கத்தாரும் சர்வகலாசங்கத்தாரும் மதித்துப் பேருதவி செய்யும் வண்ணம் முயன்று வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அம் மட்டோ! நமது சமய வளர்ச்சிக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் கோயில்களிலும் மடாலயங்களிலும் வைத்த பெருநிதிக் குவியல்களெல்லாம் தஞ்சமய வளர்ச்சிக்கும் தம் மேம்பாட்டிற்குமே உரிமையாக்கிக் கொண்டார்கள். சர்வகலா சங்கத்தார் வடமொழி வேதாந்தநூல் வல்லார்க்குச் சிரோன்மணிப் பட்டம் கொடுப்பதாக ஏற்படுத்தி இருப்பது போல் சித்தாந்தப் புலமைப் பட்டங்கள் அமைக்க வேண்டுமென்று நாம் அறிவிக்க வேண்டும்.

ஆதலால் சைவ சித்தாந்திகள் தமது அரிய நூல்களையும் சமயத்திற்கு உயிராகிய நிலையங்களையுங் காக்கத் தளராது பாதுகாக்க முயல்வதுடன் தமது ஒப்பற்ற சமயம் எங்கும் பரவுதற்குரிய முயற்சிகள் யாவும் செய்து வெற்றி பெறும் வண்ணம் விடாமுயற்சியையும் தளராத ஊக்கத்தையும் நிலைத்த பேரான்மையும் சிவபெருமான் பெருங் கருணையால் ஈந்தருளும் வண்ணம் திருவருளைப் போற்றுவோமாக.

சைவசித்தாந்த உண்மை வரலாறு முற்றிற்று.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *