என் கடன் பணிசெய்துகிடப்பதே  திரு. வி. கலியாணசுந்தரனார்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார்

அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும்.

அறிவு – வினை – அன்பு, இவை முறையே வடமொழியில் ஞானம் – கருமம் – பக்தி எனப்படும். பொதுப்படக் கருமம் என்று கூறும்போது நிஷ்காமிய கருமம் என்று கொள்ளல் வேண்டும். நிஷ்காமிய கருமமாவது பயன் கருதாது புரியும் வினை. பயன் கருதா வினையில் தூய அறிவு அலர்ந்து, உண்மை அன்பு சொரியும்.

ஞானத்துக்கும் பக்திக்கும் ஊற்றாயுள்ள கரும யோகத்தைத் தமிழ்நாட்டுச் சத்தியாக்கிரகிபாகிய அப்பர் சுவாமிகள் ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று ஒரு பாவின் ஓர் அடியில் அமைத்து ஓதியிருக்கிறார். அப்பர் மனமொழி மெய்களால் இடையறாது பணிசெய்து, பணியின் திறத்தை யுணர்ந்தவர். அவர் மனத்தால் ஆண்டவனை நினைந்து, வாயால் அவன் புகழைப் பாடி, கையால் உழவாரத் தொண்டைச் செய்து, நிஷ்காமிய கருமயோகியாய், ஞானத்தையும் பக்தியையும் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்த வரலாற்றைப் பெரிய புராணத்திற் பார்க்க.

அப்பெரியார் அருளிச்செய்த தமிழ் மறையில் ஞானமும் கருமமும் பக்தியும் ததும்பி வழிதலைக் காணலாம். அவரது அநுபவம் அல்லது அடைவு, ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னுந் திருவாக்காகப் பரிணமித்தது என்று கூறலாம்.

‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னுந் திருவாக்கில் எனக்கு அளவிலாப் பற்றுண்டு. இளமையில் இதைப் பற்றிச் சொற்பொழிவுகள் சில நிகழ்த்தினேன். இத்திருவாக்கைப் பற்றி ஒரு கட்டுரை வரைதல் வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். அடியேன் சென்னை ஆயிரம் விளக்கு வெஸ்லியன் முதல்தர மூலாதாரப் பாடசாலை’யில் போதகா சிரியனா யமர்ந்தபோதும், பின்னைச் சென்னை இராயப் பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியனாய்த் தொண்டாற்றியபோதும் ‘இக்கட்டுரை எழுதல் வேண்டும்’ என்னும் எண்ணம் என்னைவிட்டு அகலாமற் கிடந்தது.

ஆனால், ‘தேசபக்தன்’ பத்திரிகை ஆசிரியனாய்ப் பணிசெய்த போதே இக்கட்டுரை எழுதல் நேர்ந்தது. ‘தேசபக்தன்’ ஆசிரிய பீடத்தில் அமர்தற்கு முன்னர், இஃது எழுதப்பட்டிருப்பின், இதன் உரைநடையும், உள்ளுறையும், முறை வைப்பும் வேறுபட் டிருக்கும்.

இக்கட்டுரை 1919-ம் ஆண்டில் ‘தேசபக்தன்’ இரண்டாம் வருட அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. இதைப் பெயர்த்து இச்சிறு நூல் வடிவாக 1921-ம் ஆண்டில் அச்சிட்ட போது, பல பொருளைக் கூட்டியும் புதுக்கியும் மாற்றியும் ஒழுங்கு செய்தேன். ஏறக்குறைய ஒரு பாதி புதிய பொருள் சேர்க்கப்பட்டது. பின்னே ஐந்தாம் பதிப்பில் சில கூட்டப்பட்டன.

பத்திரிகை ஆசிரியனாகி, அரசியல் துறையில் இறங்கிய நாள் தொட்டுத் தமிழ்ப்புலவர் உலகில் யான் வாழ்வதாகக் கருதுவதில்லை; ஆனால் தமிழுலகில் வாழ்வதாகக் கருதுவதுண்டு. போதகாசிரியனா யிருந்தபோது தமிழ்த்தாயின் கேசமும், மேகலையும், சிலம்பும் என் கண்களுக்குப் புலனாயின. பொழுது தமிழ்த்தாயின் அலமரலும் விம்மலும் அழுகையும் புலனாகின்றன. தமிழ்ப் புலவர்களுக்கு இவை புலப்படுகின் றனவோ என்னவோ தெரியவில்லை. ஆனால் தமிழகத்துக்கு இவை புலப்படா தொழியவில்லை.

என்னைத் தொண்டிற்குப் பண்படுத்தி விடுத்த எனது தமிழ் அன்னை – என்னைஈன்ற அன்னையினுஞ் சிறந்த அம்மை – அலமந்து விம்மி விம்மி அழுது அழுது ஆவிசோரும் வேளையில், அவள் துயர் தீர்க்க முயலாது, அவளைச் செயற்கை அணிகளால் அழகு செய்ய எனக்கு மனமெழவில்லை.

அதுபற்றித் ‘தேச பக்த’னிலும் ‘நவசக்தி’ யிலும் என்னாலியன்ற அளவு முறையே தொண்டு செய்தேன்; வேறு துறைகளிலும் தொண்டுசெய்து வருகிறேன். என் தாய்நாடு உரிமை பெற்றலன்றி, என் தமிழ்த் தாய் அரசு போற்றுங் கழகமேறி அரியாசனம் வீற்றிருக்கமாட்டாள் என்றும், சிறப்பாக அரசியல் துறை நண்ணிப் பணிசெய்தால் தமிழ்த் தாய்க்கு நலம் விளையும் என்றும் எண்ணி, அத் துறையில் இறங்கித் தொண்டு செய்யலானேன். இந்நூலிலும் தேசப்பணியையே பெரிதும் வலியுறுத்திப் போற்றியிருக்கிறேன்.

‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னும் நன்மொழியில் போந்துள்ள ஒவ்வொரு சொல்லும் விரிவுரைக் குரியது. இந்நூல், என்-கடன்- பணி-செய்துகிடப்பதே என்னும் நான்கு அதிகரணங்களைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. என் – என்பதில், உயிர் உண்மை, அதன் முன்னிலை பின்னிலை, நாத்திகக் கொள்கை மறுப்பு, மேல்நாட்டு நிலை, கடமைத் தோற்றம் முதலியனவும்; கடன் – என்பதில், நான்குவித வாழ்க்கை, கடமையினின்றும் பணி அரும்புதல் முதலியனவும்; பணி- என்பதில், இறைவன் பணி, சராசரப் பணி, எல்லாம் பணி மயம் என்பது, உயிர்கள் பணி விளக்கம், மனிதன் பணிநிலை, நிஷ்காமியப் பணிபின் பெருமை, காமியப்பணியின் சிறுமை, ஆலயப்பணிச் சிறப்பு, அதன் உண்மை, அதன் பயன், அதன் தற்கால நிலை, அதன் நோக்கம், அன்பு நிலை, உருவ வழிபாடு அதைக் கொள்ளல் – தள்ளல், வேண்டும் பணி, தேசப்பணி இந்தியாவின் தற்கால நிலை, நாட்டுக்கல்வி, சுயராஜ்யம், தேசப்பணி கடவுள் பணியே என்பது, எல்லாப் பணிகளுக்கு அடிப்படை தேசப்பணி யென்பது, தேசபக்தி, சாதிபேதம், இந்தியா ஒருபெருந் தேவாலயம் என்பது, உலக சகோதரத் துவம், இந்தியாவின் அறம், பழைய அரசியல், அருளாட்சி, ஒழுக்கம், பணிக்கு ஒழுக்கம் இன்றியாததென்பது, பணி செய்வோர் இயல், காலத்துக்கேற்ற பணி முதலியனவும்; செய்து கிடப்பதே – என்பதில், சகுண வழிபாடு, ஐந்தொழில், வீட்டின் பத்தினும் பணி சிறப்புடையதென்பது, காமியப்பணி நிட்காமியப்பணி இயல், கரும யோகத்தை விவேகாநந்தர் திலகர் போற்றியது, காந்தியடிகள் பொறுமை, வேண்டுகோள் முதலியனவும் அடங்கி யிருக்கின்றன.

இந்நூலில் எங்கணும் பணியின் மணமே கமழ்ந்து கொண்டிருக்கும். தேசப்பணியின் பற்றை வளர்க்க வேண்டு மென்னும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டது. பணியில் விருப்புடையார்க்கு இந்நூல் பெருந்துணை செய்யும்.

பணியில் விருப்பின்றி உறங்குவோரையும் இந்நூல் தட்டி எழுப்பும். இந்நூல் கருமயோகிகள் தொகையைத் தமிழ்நாட்டில் பெருக்கும் என்னும் நம்பிக்கை எனக்குண்டு.

தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சத்தியாக்கிரகியின் மெய்ம் மொழியைப்பற்றி விரித்துக்கூறும் ‘இந்நூலைத் தமிழமக்கள் ஆதரிப்பார்களாக’ என்று 1921ஆம் ஆண்டில் வேண்டுதல் செய்தேன். இன்று ஏழாம் பதிப்பு வெளிவருகிறது.

இதனால் இந் நூல் தமிழ்நாட்டுக்குப் பயன்பட்டு வருகிறது என்று கூறும் அளவில் நிற்கிறேன்.

ஏழாம் பதிப்பு வெளிவரும் இவ்வேளையில் என் கண்கள் படலத்தால் மூடப்பட்டன.

எனது நிலை யுணர்ந்து, எவ்விதக் கைம்மாறுங் கருதாது, அன்புளங்கொண்டு அச்சுப்பிழை திருத்தி உதவிய வித்துவான் அன்பு கணபதிக்கு எனது வாழ்த்து உரியதாக.

திருவாரூர்வி.கலியாணசுந்தரன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *