

சைவத்தின் சமரசம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
அணிந்துரை
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – அப்பர்
உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு.
எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின் விளையாட் டல்லால் – மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன, வாரிதியின் நதித்திரள் போல் வயங்கிற் றம்மா எனவரூஉந் தாயுமானார் திருவாக்கின்படி சமரச உணர்வு பெற்று வாழ்வது; மற்றொருவிதம் சமரசத்துக்கு மாறுபட்டு வாழ்வது; இவ்விரண்டையும் உலகில் காண்கிறோம். பின்னையதன் வளர்ச்சியே முன்னையதன் முடிவு என்பது எனது கொள்கை, கேணி, குளம், ஏரி, ஆறு, கடல் என்பன பெயரளவில் வேறுபட்டு நிற்பினும், அவைகளின் பொருளடக்கம் புனல் என்பதொன்றேயன்றோ?
சைவம், பல சமயங்களாகவும் முடிவில் தனித்த ஒரு பெருஞ் சமயமாகவும் நிற்றலால், அதன்கண் சமரசமுடைமை அறிஞர்க்குப் புலனாகாமற் போகாது, சமரச ஞானியாகிய தாயுமான சுவாமிகள், ஆகார புவனத்தில், பல சமயங்களைக் குறிப்பிட்டு இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி என்று வைதிக சைவத்தைப் போற்றியிருத்தல் காண்க. இச்சமரச உண்மை தெரிப்பது இந்நூல்.
இச்சிறு நூல் வெளிவருதற்குக் காரணராயிருந்தவர் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையினர். இவர்தஞ் சபையின் நாற்பத்தோராம் ஆண்டு நிறைவிழாவிற்குத் தலைமை வகிக்குமாறு சிறியேனைக் கேட்டனர்; கேட்டபோது எனது முன்னுரையை எழுதிக் கொணருமாறும் விரும்பினர். அவர் விருப்பத்துக்கிணங்கி – இந்நூலுள்ளுறையாம் இக்கட்டுரையை எழுதிச் சென்றேன்.
இரத்தாட்சி ஆண்டு மார்கழித் திங்கள் 13,14ஆம் நாட்களில் (1924ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27, 28ஆம் நாட்களில்) நடைபெற்ற ஆண்டு விழாப் பேரவையில், முதல் நாள் தொடக்கத்தில், முன்னுரையாக இக்கட்டுரையையொட்டிச் சுமார் இரண்டு மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினேன்.
அச் சொற்பொழிவைச் செவிமடுத்த சபையினரும், வேறு சில அன்பரும் அது நூல் வடிவாக வெளிவரல் வேண்டுமென்னும் விருப்பத்தை அடியேற்குத் தெரிவித்தனர். சைவ உலகிற்குப் பயன்படுமாறு இக்கட்டுரைக்குச் சைவத்தின் சமரசம் என்னும் பெயர் நல்கி, இந்நூல் வடிவாக இதை அச்சிடலானேன்.
இதற்குக் காரணராக உள்ள தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையினர்க்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்நூலின் உள்ளுறை, ஒரு சபையின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசிய முன்னுரையாகலான், பெரிதும் பேசு முறைபற்றி, இயன்றவரை குறியீடுகளை நீக்கி, எளிய நடையில் இதை எழுதியிருக்கிறேன்.
கல்வி, அறிவு, ஆராய்ச்சியில் குறைபாடுடைய எளியேன் எழுத்தில், கருத்தில் பிறவற்றில் பிழைகள் நிகழ்ந்திருக்கலாம். அப் பிழைகளைப் பொறுத்தருளுமாறு அன்பர்களை வேண்டுகிறேன்.
சைவ உலகம் இச்சிறு நூலை ஆதரிப்பதாக.
குற்றநீ குணங்கள் நீ கோதில் ஆலவாயிலாய்
– ஞானசம்பந்தர்.
திருவாரூர் – வி. கலியாணசுந்தரன்.



