
சைவத்தின் சமரசம்
திரு. வி. கலியாணசுந்தரனார்
இறுவாய்
தொகுப்புரை
சகோதரிகளே! சகோதரர்களே! இதுகாறுஞ் சமயத்தின் இயல்பு இஃது என்பதும், உலகிற்குச் சமயம் இன்றியமையாதது என்பதும், எல்லாச் சமயங்களும் ஒரு கடவுளையே பல பெயரால் பலவழியில் போற்றுகின்றன என்பதும், சமரச சமயமொன்றே கடவுள் நெறி என்பதும், சமயங்கள் பலவாய்க் கிடப்பினும் அவைகள் யாவும் சமரசத்தையே குறிக்கொண்டு நிற்கின்றன என்பதும், தொன்மை வாய்ந்த தமிழ்மக்கள் கண்ட முருகு – கந்தழி எச்சமயத்துக்கும் உரிய பொருள் என்பதும், அப்பொருளே சிவமாக இன்றுகாறும் போற்றப்பட்டு வருகிறது என்பதும், அச் சிவ சம்பந்தமுடைய சைவம் சமயகுரவர் சந்தான குரவர் முதலியோரால் ஓம்பப்பட்டது என்பதும், அச்சைவம் எச்சமயத்தோடும் பிணக்கின்றியும் எச்சமயக்கொள்கையையும் நீதியினால் தன்னகத்தே தாங்கியும் நிற்குஞ் சமரச சமயம் என்பதும், அது முனைப்பற்ற இடத்தில் பொலியும் அன்புச் சமயம் என்பதும், அந்நிலையை எப்பெயரிட்டும் அழைக்கலாம் என்பதும், சைவத்தின் தத்துவம் – வழிபாடு முப்பொருளுண்மை- அத்துவித நிலை – முதலியன சமரச நோக்குடையன என்பதும், உலகு உயிர் கடவுள் மூன்றும் அநாதி நித்தியம் என்பதும், அவை பொருளால் வேறுபட்டும் கலப்பால் ஒன்றுபட்டும் நிற்பன என்பதும், சைவசித்தாந்தக் கடவுள் பிறப்பிறப்பில்லாதது என்பதும், அது நான்காவது பொருள் என்பதும், துவித வழி அத்துவிதத்தை அறிவுறுத்தலே வேதாந்த நெறி என்பதும், அவ் வழியே மெய்கண்டார் போதித்த வழி என்பதும், வேதாந்தமே சித்தாந்தம் இஃதே அஃது என்பதும், அது பொய் இது பொய் என்று உலகைத் துறந்து ஓடுவது வேதாந்தம் அன்று என்பதும், தன்னல மறுப்பதே உலகைத் துறப்பது என்பதும், எல்லாம் ஆண்டவன் என்று உயிர்களை வழிபடுதலே செய்கை வேதாந்தம் என்பதும், வேதாந்த சித்தாந்த ஒற்றுமை யுணர்ந்து வழிபாட்டில் கருத்தைச் செலுத்தி நாட்டுக்கு நலஞ்செய்ய வேண்டும் என்பதும், சமரச இயல்புகள் இன்னின்ன முறையில் சைவத்திலிருக்கின்றன என்பதும், பிறப்பை யொட்டி உயர்வு தாழ்வு பாராட்டாமை – கைம்மாறற்ற பணி – பிறர்குற்றம் பொறுத்தல் – பாவமன்னிப்பு முதலியன சித்தாந்த சைவ சமயத்தில் சிறப்பாக விளங்குகின்றன என்பதும், அருள் – கருணை – இரக்கம் – தயை உள்ள இடங்களிலெல்லாம் சைவம் மிளிரும் என்பதும், 1சைவம் ஒரு சமயம் அன்று என்பதும், உலகில் அது பல அறிஞர்வழி ஓங்கி வருகிறது என்பதும், சைவ சமய ஆக்கங்கருதி முன்னணி வேலைகளாக இன்னின்ன பணிகள் செய்யவேண்டும் என்பதும், இவைகளை யொட்டிப் பிறவுஞ் சொல்லப்பட்டன.
இச் சொற்பொழிவை இவ்வளவு நேரம் பொறுமையோடு செவிமடுக்கத் திருவுளங்கொண்ட உங்கள் பெருந்தகைமைக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். உங்கள் அரிய காலத்தை என் வெற்றுரைகளை இன்னுங் கேட்கும் வழியில் செலவழிக்க விரும்புகிறேனில்லை. எனது சிறுமை உரைகளில் பிழைகள் நிகழ்த்திருக்குமேல் அவைகளைப் பொறுத்தருளுமாறு மீண்டு மொருமுறை வேண்டுகிறேன்.
சொற்பொழிவின் சாரம்
அன்பர்களே! இதுகாறுங் கூறிவந்ததன் முடிவு என்ன? சைவம் அருணெறி என்பதன்றோ? அருளாளர்களே! உலகை உற்று நோக்குங்கள்; உலகில் எந்நெறி பெருகியிருக்கிறது? அருணெறியா? மருணெறியா? உன்னுங்கள். கொலைச்சாலை களின் பெருக்கை என்னென்று கூறுவது? கொலைக் கருவிச் சாலைகளின் பெருக்கை என் கூறுவது? அந்தோ! உள்ளம் நடுக்குறுகிறது! இக்கொலைப் பெருக்கிற்குக் காரணர் யாவர்? ஜீவகாருண்யத்தையே மூல தர்மமாகக் கொண்டுள்ள சைவர் களாகிய நீங்களல்லவா? சைவர்களே! உங்கள் சமயம் யாது? நீரில் மூழ்குவதா? துணி தோய்ப்பதா? நீறிடுவதா? அனுட்டானஞ் செய்வதா? கோயில் வலம் வருவதா? அன்று; அன்று. இவை யாவும் புறவொழுக்கங்களாகும். ஜீவகாருண்ய நெறியே உங்கள் உள்நெறி. அஃதில்லையேல் குளித்தலும் பூசலும் பிறவும் என்னாம்? நீங்கள் உங்கள் அருட்டொண்டை ஆற்றியிருப்பின், உலகில் உயிர்க்கொலை நிகழுமோ? புலைப் புசிப்பு நிகழுமோ? உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் மடங்களையுந் தீண்டுமளவு பரவியிருப்பதைக் கவனிக்கின்றீர்களா? சைவ உலகின் கவலை யீனம் என்னே என்னே! இனி அருளுலகம் மறையுமோ என்னும் அச்சமும் உண்டாகிறது. உங்கள் ஒற்றுமையின்மை – உழைப் பின்மை – சித்தாந்த ஞானத்தை உலகுக்கறிவுறுத்த முன்வராத தன்னலம் – உலகைத் துன்புறுத்துகின்றன. நஞ்சமயம் தமிழர்க்கே உரித்து. அது தமிழ்நாட்டளவிலேயே கட்டுப்பட்டுக் கிடத்தல் வேண்டும் என்னுங் குறுகிய நோக்கை உதறித் தள்ளுங்கள்; நானா பக்கங்களிலும் அருணெறியோம்ப முயலுங்கள். பரந்த நோக்குடைய ஒரு கொள்கையை – மன்பதைக்குரிய ஒரு சமயத்தைப் – பிறர்க்குப் பயன்படுத்தாது, அதைச் சிறைப்படுத்து வதுஞ் சிறுமைப்படுத்துவதும் அறமாமோ? எத்துணையோ உயிர்கள் அருளுணர்வு பெறுவதை மறிப்பது மறச்செயலன்றோ? அதனினும் வன்கண் – கொடுமை – கொலை – வேறொன் றுண்டோ, தானத்திற் சிறந்தது எது? ஞானதானமன்றோ? அதையா தடுப்பது? ஆண்டவன் அருளமுதைப் பருகச் சேர வாருஞ் செகத்தீரே என்று உங்கள் ஆன்றோர் உலகை நோக்கிக் கூவி அழைத்திருப்பதைக் கருதுங்கள். எச்சமயத்தவரும் வந்திறைஞ்சா நிற்குஞ் சிற்சபேசனை – ஆனந்தத் தாண்டவனை – வழிபடும் நீங்களா உங்கள் சமய உண்மையை மறைப்பது? அக் கரவை யொழித்து அன்பே சிவமென் றெழுங்கள்; அருளே சக்தியென்றெழுங்கள். நீங்கள் உலகொளியாவீர்கள்.
பெரியோர்க்கு
பெரியோர்களே! உங்களுக்கு என்ன இல்லை? அறிவு நூல்களில்லையா? அன்பு நூல்களில்லையா? அருணூல் களில்லையா? எல்லாம் உண்டு. வேண்டற்பாலது எழுச்சியே. நெருப்பிடை நின்ற ஞானசம்பந்தரை நினையுங்கள்; நீற்றறையில் கிடந்து கடலில் மிதந்த நாவரையரை நினையுங்கள்; ஆண்டவனைத் தூதுகொண்ட ஆண்டகையை நினையுங்கள்; நினைந்து நினைந்து ஊக்கங் கொள்ளுங்கள். நீலகண்டர் உறுதி, இயற்பகைகையின் ஈகை, மெய்ப்பொருள் பொறுமை, கண்ணப்பர், கனிவு, மங்கையர் கரசியார் வீரம் – இவைகள் எங்கே போய்விட்டன? பிறர்க் குழைக்க நீங்கள் புறப்பட்டால் இம் மாண்புகளெல்லாம் உங்களிடத்தில் பொங்கியெழுமென்பது திண்ணம். மெய்கண்ட சாத்திரமென்னும் ஞானவாளிருக்கும் போது உங்களுக்கென்ன அச்சம்?
சிவநேயர்களுக்கு
சிவநேயர்களே! எவரையுஞ் சிவமாக வழிபடுங்கள்; எச் சமயத்தையுஞ் சிவசமயமாகக் கொள்ளுங்கள்; எக் கடவுளரையுஞ் சிவமாகத் தொழுங்கள். உலகிலுள்ள ஆடு மாடுகள் அம்மா அம்மா என்று கதறிக் கதறி உங்களை அழைக்கின்றன. அருளுலகம் உங்களை அழைக்கிறது. செவி சாயுங்கள். அன்புளங்கொண்டு எழுங்கள்; அருள் முகங்கொண்டு எழுங்கள்; தொண்டாற்றப் புறப்படுங்கள். வித்தகம் பேசவேண்டா; பணிசெய்யப் புறப் படுங்கள்; உங்கள் அருணெறி உலகெலாம் பரவப்போதுண்மை. மேல்நாடுங் கீழ்நாடும் ஒன்றுபட்டு ஈனப்போகும் உலகு உங்கள் அருணெறியையே தழுவும். அந்நெறியே அவ்வுலகிற்குரிய நெறியாகும். ஆதலால் அந்நெறி வளர்க்க எழுங்கள்; எழுங்கள். வடமொழி தென்மொழிச் சண்டை வேண்டா; ஆரியர் தமிழர் சண்டை வேண்டா. எவ்வுயிரையுஞ் சிவமாகக் கொண் டெழுங்கள். எல்லா நலன்களும் உண்டாகும்.
எல்லாம் சிவமயம்
ஆண்டவனே! எல்லாவற்றையும் ஆக்கும் அயனே! அளிக்கும் அரியே! அழிக்கும் அரனே! நின்னைச் சிவமெனும் மங்களப் பெயரால் நாங்கள் வழிபடுகிறோம். எல்லாஞ் சிவமய மென்பதை நாங்கள் உணரல் வேண்டும்; எங்கணுஞ் சிவநெறி யாம் அருணெறி பரவல் வேண்டும்; எங்கணும் அருளறம் – எங்கணும் அருளரசு – எங்கணும் அருட்டொண்டு – பெருகல் வேண்டும். அருள் செய்க; அருள் செய்க. முன்னைப் பழமைக்கும் பழமையாயிருக்கின்ற முதல்வன் நீ! பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நிற்கும் பெரியோன், நீ பிள்ளைப் புதுமைக்கும் புதுமையாய் நிற்கும் பெரியோன், நீ! புதுமுறையில் அருணெறி வளர்க்க முயல்கிறோம். அருள்செய்க. சாந்தம் சிவம் அத்வைதம்.
காலமொடு தேசவர்த்த மான மாதிகலைந்து
நின்ற நிலைவாழி! கருணை வாழி!
மாலறவுஞ் சைவமுதன் மதங்க ளாகிமதாதீத
மானவருண் மரபு வாழி!
சாலமிகு மெளியேனிவ் வழக்குப்
பேசத் தயவுவைத்து வளர்த்த அருட் டன்மை வாழி!
ஆலடியிற் பரமகுரு வாழி வாழி!
அகண்டிதா காரஅரு ளடியார் வாழி!
– தாயுமானார்
முற்றும்.
★ ★ ★



