என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார்

5. செய்து கிடப்பதே

பணிசெய்து கிடத்தலே உயிர்களின் நோக்கமாதலால் ‘செய்து கிடப்பதே’ என்று அப்பர் கூறினர். ஏகாரத்தை அசையாக் கொள்வோரும் உளர். எனக்கு அங்ஙனங் கொண்டு பொருளுரைக்க விருப்பமில்லை. சராசரங்களை அளிக்குங் கடவுள், என்றும் பணி செய்த வண்ணம் இருத்தலான், அவர்தம் படைப்புக்கு உட் பட்ட உயிர்களும், பணி செய்தவண்ணம் இருத்தல் வேண்டும். கடவுள் கைம்மாறு கருதாது பணி செய்வ தைப்போல, மக்களுங் கைம்மாறு கருதாது கால நிலைக் கேற்ற பணி செய்தல் வேண்டும். வீட்டின்பத்தைப் பார்க்கிலும் பணிசெய்தலில் எனக்கு விருப்பம் அதிகம். கடவுள் குணத்தை ஒருவன் அடைய வேண்டுமானால், அவன் நிஷ்காமியப் பணி செய்தல் ஒழுங்கு. கை கால் கண் மூக்கு இல்லாத ஒரு நிர்க்குணத்தை நினைத்துச் செய்கையற்றிருக்க விழைவதினும், ஓயாது ஐந்தொழில் செய்யுஞ் சகுண மூர்த்தியை நினைந்து நினைந்து, அவரைப் போலக் கைம்மாறு கருதாது பணிசெய்ய விழைதல் ஒப்புரவை வளர்ப்பதாகும். பணி செய்வோர்க்குச் சகுணமூர்த்தி பெருந்துணை செய்வாராதலால், ஈண்டு அம்மூர்த்தியைக் குறிப்பிடலானேன். நிர்க்குண வாழ்வைப் பெறுவோர் பெறுக.

சில நாள் பணி செய்து, பின்னை என்றும் வீட்டின்பத் தில் செய்கையற்றுக் கிடப்பதினும், என்றும் பணிசெய்து கிடப்பது சிறப்புடைத்தாதலாலும், அப்பணியால் மற்ற வர்க்கு நலம் விளைவதாலும் ‘பணிசெய்து கிடப்பதே என்று அப்பர் அருளினர். ‘வித்தகம் பேச வேண்டாம் பணிசெய்ய வாருமென்றார்’ என்னும் பெரிய புராண வாக்கும் ஈண்டு நினைவிற்கு வருகிறது.

பயன் கருதல் கருதாமை

பணி செய்து கிடத்தலே மக்கள் கடமை யெனில் ஆன்மாக்களின் அறியாமை நீங்கி, மாயை ஒழிந்து, கரு மங்கெட்டு, அவை ஆண்டவன்போல் ஆவது எக்காலம் என்று சிலர் வினவலாம். நாம் தொண்டு செய்து ஆண்ட வன்போ லாதல்வேண்டு மென்று நினைத்துச் செய்யும் பணியும் பயன் கருதும் (காமியம்) ஒன்றாதலால், அந் நினைவு கொண்டும் பணி செய்தலாகாது.

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.

எனவரூஉந் திருமூலர் திருவாக்கு ஈண்டுக் கருதற்பாலது. காமியப்பணி செய்வோரது கருமங் கெடாதிருத்த லால் அவர் அடிக்கடி மாயா உடலைத் தாங்குவர். காமியப் பணியாளரின் எண்ணங்கள் யாவும் தந்நலங் கருதி எழு கின்றமையால், அவை மீண்டும் மீண்டும் மாயா உடலா கப் போந்து உயிரைப் பற்றியே செல்லும். நிட்காமியப் பணியாளரின் எண்ணங்கள் தந்நலங் கருதாதனவாதலால், அவற்றால் முன்னை ஊழின் முடிப்பு அவிழ்ந்து கெடு கிறது; பின்னைவினை ஈண்டி உடலாக வருதற்கு இடமில் லாமற் போகிறது. ஆதலால், நிட்காமியப் பணி செய் வோர் தாங்கும் உடல்கள் வினைக்கீடாக உண்டாகும் மாயா உடலங்களாகா.அவர் தாங்குவன அருள் உடலங் களாகும்; பார்வைக்கு இரண்டும் ஒன்றாகத் தோன்றும்.

ஆனால் பொருளில் வேற்றுமை யுண்டு. சிறை மதில் களுக்குள் குற்றவாளிகள் இருக்கின்றார்கள். அவர்களைப் பார்க்க மன்னர் முதலியோருஞ் செல்கின்றனர்.

பின்னவர் சிறை மதில்களுக்குள் ளிருப்பினும் அவர்க்குச் சிறைக் கட்டில்லை. இரு கூட்டத்தவரும் மதில் சூழ்ந்த சிறைக் கூடத்திலே யிருக்கின்றனர். ஆனால் சிறை ஒருவரைச் சார்கிறது; மற்றொருவரைச் சார்வதில்லை. இவ் வெடுத் துக்காட்டைக் கருத்துட்கொண்டு, காமியப் பணியாளர் உடல் நிலையையும் நிட்காமியப் பணியாளர் உடல் நிலையையும் ஆராய்ந்து பார்க்க.

வீடும் வேண்டாமை

செய்கையில்லாத நிரதிசயானந்தத்தை நுகர வீடு பேற்றை அடைவதினும், செய்கையுள்ள உடல் தாங்கிப் பயன் கருதாப் பணி செய்வது போற்றத்தக்கது. இப் பணியின் பயனாக வரும் உடல்களைத் தாங்குவோர் கடவுள்நிலை எய்தினவர் என்று கூறலாம்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

– சேக்கிழார்

இக்கொள்கையை இப்பொழுது, ‘ஆரிய சமாஜத் தாரும், ‘தியோசாபிகல் சங்கத்’தாரும் பெரிதும் போற்றுகின்றனர். இது நம் ஆகமங்களில் சொல்லப்பட்ட உண்மை. இடைக்காலத்தில் சோம்பேறி ஞானம் நமது நாட்டில் பழுத்து நாட்டின் ஊக்கத்தைக் கெடுத்தது. சுவாமி விவேகானந்தர் காலந்தொட்டுச் சோம்பேறி ஞானம் ஒரு வழியில் பட்டு வருகிறது. திலகர்பெருமான் தமது கரும யோகத்தால் – கீதா ரகசியத்தால் -நாட்டைத் தட்டி எழுப்பினர். நாடும் கண்விழித்துக் காந்தியடிகள் சத்தியாக்கிரகத்தைக் காண்கிறது.

வேண்டுதல்

நானும் எல்லாம் வல்ல இறைவனை நோக்கி,

ஐந்தொழில் புரியும் ஆண்டவனே,

வீட்டின்பம் வேண்டா; ஓய்வில் விருப்பமில்லை; மனிதப் பிறவி வேண்டும்; அப்பிறவியை எனதருமைத் தமிழ்நாட்டில் தாங்குதல் வேண்டும்; நின் திருவடியை என்றும் மறவா மனம் வேண்டும்; செல்வ வாழ்வு வேண்டா; எளிய வாழ்வு வேண்டும்; பயன்கருதாப் பணியில் நெஞ்சம் பதிதல்வேண்டும்; எனது தமிழ் மொழிக்கும். எனது அன்புச் சமயத்துக்கும், எனது அருமைத் தாய்நாட்டுக்கும் இடையறாது பயன் கருதாப் பணி செய்தவண்ண மிருத்தல் வேண்டும். இறக்கும் போதும் நின் திருவடி நினைவும், எனது மொழி சமயம் நாடு இவைகளின் நினைவும் அகலாமல் நிற்றல் வேண்டும். இவ்வேண்டுதல்களைத் திருவருள் செய்க என்று வேண்டுகிறேன்.

என்னைப் படைத்த கடவுள் என் எண்ணங்களை நிறைவேற்றுவார் என்னும் உறுதி எனக்குண்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *