
என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார்
3. கடன்
கடன் என்பதும் கடமை என்பதும் ஒன்றே. மாயா காரியமாகிய உடலைத் தாங்குதற்கு முன்னர், உயிர், அறிவுந் தொழிலும் விளக்கமுறப்பெறாமையான், அதற்கு அந்நிலையில் கடமை என்பது ஏற்படவில்லை. கடமை என்பது உயிர் உடலோடு தொடர்பு கொண்டுள்ள நிலையில் ஏற்படுவது. அக்கடமை பலதிறப்படும்.
வாழ்க்கை விதம்
மனிதனது கடமை பல திறமாகப் பகுக்கப்படலாம். நம் முன்னோர் மனிதர் வாழ்க்கையை நான்கு கூறிட்டு, அவ்வவ் வாழ்க்கையில் செய்யத்தக்க கடமைகளையுந் தொகுத்துள்ளனர். நான்கு கூறுகள் பிரமசரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்பன. இந்நான்கும் அன்பின் படிகளாகும். பிரமசரியம் அன்புக் குரிய கல்வி பயில்வது; கிரஹஸ்தம் கற்ற கல்வியைச் செயலிற் பெற்று அன்பை உணர்வது; வானப்பிரஸ்தம் கட்டுப்பட்ட அன்பில் நின்று தொண்டு புரிவது; சந்நியாசம் கட்டற்ற அன்பில் நின்று எவ்வுயிர்க்குஞ் செந் தண்மை பூண்டொழுகுவது. இவை அடங்கப்பெற்ற ஒன்றே வாழ்க்கை என்பது.
நான்கும் எல்லா நாடுகட்கும் பொதுவாயிருப்பன. ஒவ்வொருவரும் இந்நான்கும் அடங்கிய வாழ்க்கையில் நின்று ஒழுகுதல் அறம். இது பொதுமை அறம். இவ்வறத்துக்குச் சில புறனடைகளுமுண்டு.
ஒவ்வொரு நாட்டிலும் மனிதர் இளமையில் கல்வி பயில்கின்றனர்; வயதில் திருமணஞ் செய்கின்றனர்; அதற்குமேல் வானப்பிரஸ்தமோ சந்நியாசமோ ஏற்கின்றனர்.
இக்காலத்தில் பின்னிரண்டும் பெரிதும் அருகிவிட்டன என்று துணிந்து கூறலாம். முன்னிரண்டும் ஒருவாறு நிலவிக் கொண்டிருக்கின்றன.
நம் முன்னோர் மக்கள் கடமையை நான்கு கூறிட்டிருப்பது உன்னத் தக்கது. இந்த நான்கில் அடங்காத மக்கள் கடமைகள் இருத்தல் அரிது. மக்கள் கடமைக ளெல்லாம் நான்கில் அடங்கிவிடும்.
பணி மயம்
மனிதர் அறிவுஞ் செயலும் விளக்கமுற்று, வாழ்க்கையில் நுழைந்து, தங் கடமையைச் செய்து வருங் காலத்தில், அவர்தம் வினைகள் யாவும் பணி மயமாயிருப்பதைக் காண்பர் என்று கடமை ஏற்பட்டதோ அன்றே பணியும் ஏற்பட்டது. எனவே, மனிதரது கடமை, பணியைப் பற்றியே கிடக்கிறது. மனிதர் மேற்கொள்ளும் ஒவ்வொரு கடமையிலும் பணி இருப்பது கண்கூடாக விளங்குவ தொன்றாகலான், அதை விரித்துரைக்க வேண்டுவதில்லை. ஆதலால், இனிப் பணிமேற் செல்கிறேன்.



