
என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார்
1. தோற்றுவாய்
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’- இத் திரு மொழி யாண்டுளது? இஃது அப்பர் சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம்-இரண்டாந் திருமுறை – திருக்குறுந் தொகை – திருக்கடம்பூர்ப் பதிகம் – ஒன்பதாஞ் செய் யுளின் இறுதியடியா யிருப்பது. அப்பர் தேவாரத்துள் மக்கள் உள்ளத்தைக் கவரத்தக்க பல மணிகள் மிளிர் கின்றன. அவற்றுள் ஒன்று ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது. எல்லார்க்கும் இம்மணி அணியாகும் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு சமயத்தையும் ஆராய்ச்சி செய்தால். அதன் அதன் முடிவு, ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னுந் திருமொழிக்கு அரண் புரிந்தே நிற்கும். சமயப் பற்றில்லார்க்கும் இம் மூதுரை பயன்படுமென்று கூறலாம். மனிதப் பிறவி தாங்கியுள்ள அறிஞர் கடைப்பிடித் தொழுகும் நெறிகட்கும் துறைகட்கும் ஏற்றவாறு பொருளை அறிவுறுத்தும் பெற்றி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்னும் அப்பர் மொழியில் உண்டு என்று சுருங்கச் சொல்லலாம். இத்துணைச் சிறப்பு வாய்ந்த பெருமொழியை ஆராய்வது அறிஞர் கடமை யாகும்.
பிறப்புரிமை
யான் இளமையில் அப்பர் சுவாமிகள் தேவாரத்தை ஆராய்ச்சி செய்தபோது, அப்பெரியார் உரைகள் பல என்னை ஆட்கொண்டன. அப்பர் தேவாரத்தைச் செவ்வனே ஆராய்வோர்க்குப் பிறப்புரிமை இன்ன தென்பது நன்கு விளங்கும். ‘நாமார்க்குங் குடியல்லோம்’; ‘என்றும் ‘நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்’; அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவதுமில்லை ‘; ‘அஞ்சல் நெஞ்சே ‘; ‘புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ’; ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே’ இவை போன்ற உறுதிமொழிகள் அப்பர் தேவாரத்தில் பலபடக் கிடக்கின்றன.
அப்பர் தேவாரத்தைத் துருவி ஆராயின், அதன் கண் மூன்று பொருள் சிறப்பாக விளங்கித் தோன்றுதல் காணலாம். அவை: அஞ்சாமை, உண்மை, இன்பம் என்பன. இம் மூன்றும் உள்ள இடத்தில் உரிமை என்னுஞ் செம்பொருளுமிருக்கும். இம்மூன்றும் இல்லாத இடத்தில் உரிமை யுணர்விராது. உரிமை இல்லாத இடத்து இம்மூன்றும் இரா என்க.
உரிமை என்பது முதன்மை. அதினின்றும் முகிழ்ப்பன அஞ்சாமை, உண்மை, இன்பம் என்பன. முதன் மைக்குக் கேடு நேரின், மற்றவற்றுக்குங் கேடு நேரும். ஆதலால், மனிதர் தம் பிறப்புரிமையை இழப்பாராயின், அவர் பாலுள்ள அஞ்சாமையும், உண்மையும், இன்பமும் தாமே மாயும். உரிமை யில்லா நாட்டில் இம்மூன்றும் அருகி நிற்றல் கண்கூடாம். தமிழ் நாட்டிற் றோன்றிய அப்பர், தம் பின்வருவோர்க்கு உடலுரிமை, உயிருரிமை இன்னவென்பதை அறிவுறுத்தவே தம் அநுபவத்தைத் தேவாரமாகப் பாடினர் போலும்!
பணி
அஞ்சாமை, உண்மை, இன்பம்-இவற்றின் முதன்மையாகிய உரிமை – இவற்றைப் பெறுதற்கு அப்ப ரெம் பெருமான் ஒரு வழி குறிப்பிடுகிறார். அது ‘பணி’ என் னுஞ் செவ்வழி. பணியினால் எல்லாம் பெறலாம் என்பது அவர்தங் கருத்து. அப்பர், மனமொழி மெய்களால் பணி புரிந்தே அஞ்சாமை, உண்மை, இன்பம், உரிமை என்பவைகளைப் பெற்றனர். பணியின் சிறப்பை அப்பர் தம் பாக்களின் ஊடே ஊடே விதந்தோதிச் செல்வது கருதத்தக்கது. சுவாமிகள்,
நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பத் திருக்கரக் கோயிலான்
தன்க டன் அடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே
எனவரூஉந் திருப்பாட்டில் உள்ளங்கை நெல்லிக் கனி போலப் பணியின் சிறப்பை எடுத்துக்காட்டி யிருக்கிறார்கள்.
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னும் திருவாக்கு என் கண்ணுக்குப் புலனாகிய நாள்தொட்டு, அதை ஓதி ஓதி, எனது நாவும் தழும்பேறியது. உறக் கத்திலும் எனது நா அத்திருவாக்கை உச்சரித்துக் கொண்டிருக்கும். நான் அதை மறந்தாலும் அஃது என்னை மறப்பதில்லை. ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னும் பொன்னுரையில் எனக்குள்ள அன்புக்கு ஓர் அளவும் உண்டோ? என்னைத் திருப்பணி வழியில் நிறுத்தி ஆட்கொண்ட அத் தமிழ்மொழி எனது குருமொழியாகும். அக்குருமொழி என்னைப் பண்படுத்தி வருவது போல் வேறெம்மொழியும் என்னைப் பண்படுத்தி வருவதில்லை. உலகிலுள்ள அறிவுநூல்களின் திரண்ட பொருள், ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பதாகவே இருக்கிறது. இவ்வொன்றே பல அறிவு நூல்களாகவும் விரிந்து நிற்கிறது.
பொருளாழம்
திருப்பணியை (Service)ப் பற்றிப் பேசாத பெரியோ ரில்லை; நூலில்லை. பணி செய்யாதார் உலகத்திலுளரோ? தோட்டியும் பணி செய்கிறான்; தொண்டைமானும் பணி செய்கிறான். அறவோனும் பணி செய்கிறான்; ஆண்டவனும் பணி செய்கிறான். இயங்கியற் பொருளும் பணி செய்கிறது; நிலையியற் பொருளும் பணி செய்கிறது; எல்லாம் எல்லாம் பணி செய்கின்றன. உலகமெல்லாம் ‘பணி’ மயமாகவே பொலிகின்றன. எல்லா உயிர்கட்கும் பொதுவாயுள்ள பணியின் சிறப்பை, நந்தமிழர் பெருமான். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று ஒரு பாவின் ஓர் அடியில் சுருங்கச் சொல்லி விளங்க வைத் திருக்கிறார்.
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னுஞ் செம்மொழி, காலதேச வர்த்தமானப் போக்குக் கேற்றவாறு பொருளை நல்கிக் கொண்டே நிற்கும். எவரெவர் எவ்வெப் பணியில் காதல் கொண்டிருக்கிறாரோ, அவரவர் அவ்வப் பணிவழி நின்று, ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பதற்குப் பொருள் விரிக்கலாம் எல்லா விதப் பணிசெய்வோர்க்கும் பொதுவாக நிற்பது, ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னும் பெருமொழி. இஃதோர் ஆழி.
யான் இளமைதொட்டு ஓதிவரும் இப்பெரு மொழியைப் பீடிகையாக் கொண்டு, என் சிற்றறிவிற் கெட்டிய வாறு ஒரு கட்டுரை வரைதல்வேண்டும் என்னும் அவா எனக் கு நீண்டநாளாக உண்டு அவ்வவா நிறைவேறுங் காலம் இன்று கூடிற்று. ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னும் அடியிற் போந்துள்ள ஒவ்வொரு சொல்லும், ஓசை நிரப்புவதாக மட்டும் நிற்கவில்லை; பொருள் நிரம்பியதாகவும், குறிக்கொண்ட ஒரு கருத்தை உருவாக்கும் உறுப்பாகவும், அளவைக்கு முரண்படாத தாகவும் நிற்கிறது. இஃது அறிஞரால் உற்று நோக்கத் தக்கது. அப்பர் ஆழியில் மூழ்குதல் என்னால் இயலாது. அதை ஓதத்தில் நின்று பார்க்கிறேன். ஒவ்வொரு சொல் லையும் எடுத்து ஆராயு முகத்தான் இக்கட்டுரையை முற்றுவிக்க ஒல்லும்வகை முயல்கிறேன்.



