என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார்

2. என் – (நான் – யான்)

நான் – யான் என்னுந் தன்மை ஒருமைச் சொல், வேற்றுமைப் படுங்காலத்து, ‘என்’ எனத் திரியும். ஈண்டு ஆராய்ச்சிக்கு, வேற்றுமைப்பட்ட ‘என்’ என்பதற்குப் பதிலாக, வேற்றுமைப்படாத முதலாகிய ‘நான்- யான்’ என்பதையே எடுத்துக்கொள்கிறேன்.

‘நான்’- எது, யார் என்னும் ஆராய்ச்சி, உலகக் தோன்றிய நாள் தொட்டு நிகழ்ந்து வருகிறது. அவ்வளவு நீண்டகாலம் அவ்வாராய்ச்சி நிகழ்ந்துவரினும், ‘நான்’ என்னும் பொருளைப் பற்றிக் கிடைத்துள்ள உண்மையை உலகத்தார் அனைவரும் ஒருமுகமாக இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. ஒவ்வோர் அறிஞரும் ஒவ்வொரு வழி நின்று, ‘நான்’ என்பதன் உண்மை கண்டு வருகிறார்; பிறர் கூற்றை மறுத்தும் வருகிறார்.

இருவிதக் கொள்கை

மண், புனல், தீ, காற்று இவற்றைப் பற்றி அறிஞர் ஆராய்ச்சி நிகழ்த்தி, இவற்றின் உண்மையை எவரும் ஒப்புக்கொள்ளும் முறையில் முடிவு செய்திருக்கின்றனர். இந்நான்கு பூதங்கட்கும் ஆதாரமாயுள்ள வெளியின் (ஆகாயத்தின்) உண்மையையும் புலவர் கண்டுவிட்டனர்.

இதுகாலை, ஐந்து பூதங்களின் உண்மையை மறுக்கும் அறிஞர் இல்லையென்றே கூறலாம். மண் முதலிய நான்கும் தூல பூதங்கள்; அவை புலனறிவிற்கெட்டக் கூடியவை அவற்றைக் கருவி கொண்டாய்ந்து, அவற்றின் உண்மையை எவரும் ஒப்ப நிறுத்திக் காட்டுதல் கூடும். நான்கு தூலபூதங்களின் துணைகொண்டு, புலனறிவுக் கெட்டாத சூக்கும பூதமாகிய ஆகாயத்தின் உண்மையும் புலவரால் இந்நாளில் நிறுவிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, பூதங்களின் உண்மையைக் காட்சி, வழி என்னும் இரண்டானும் நிறுவிக் காட்டலாகும்.

ஐந்து பூத உண்மை கண்ட புலவர் சிலர், இப்பூதங்கட்கு வேறாக ‘நான்’ என்னும் பொருள் ஒன்றில்லை என்ற முடிவிற்கு வந்தனர். ஐந்து பூத காரியமாகிய உடலே ‘நான்’ என்ற முடிவை அவ்வறிஞர் பெற்றனர் என்று தெரிகிறது. ‘நான்’ என்பதை ஐம்புல உணர்ச்சி யென்றும், மனமென்றும், கரணமென்றும், பிராணனென் றுங் கூறுவோரும் உளர். இக்கூட்டத்தார் அனைவரும் சித் (அறிவுப்) பொருளுண்மையை மறுத்து, அசித் (சடம்- அறிவில்லாப்) பொருளுண்மையை மட்டுங் கொள்வோர். (சடம்) அறிவில்லாப் பொருளுக்கு வேறாக (சித்) அறிவுப் பொருளொன்று உண்டு என்னும் கொள்கையுடையாரும் உலகில் வாழ்கின்றனர். இவர் கூற்றையும் அவர் கூற் றையும் ஈண்டு அளந்தளந்து ஆய்ந்து ஒரு முடிவு கட்டல் வேண்டுமென்பது இக்கட்டுரையின் நோக்கமன்று. ஆதலால் சுருங்கிய முறையில் சில சொற்களால் எனது கொள்கையை நிறுவி மேற்செல்கிறேன்.

மேலைநாட்டார்

சடத்துக்கு வேறாகச் சித்தில்லை என்னுங் கொள்கையினர் தொகை உலகில் அருகிவருகிறது. நமது நாட்டில் அக்கொள்கையிற் சிறந்து விளங்கும் அறிஞர் பெரும் பான்மையோரில்லை.

முன்னை நாளில் மேலைநாட்டுத் தத்துவர் தமக்கு வேறாக உள்ளனவும், புலன்களுக்குப் பொருளாகக் கூடியனவுமாக உள்ள பூதங்களையே தங் கூர்த்தமதியால் ஆராய்ந்து, அகமுக ஆராய்ச்சியில் தலைப்படாது, சித்துப் பொருளுண்மையை மறுத்துப் பற்பல நாத்திக நூல்களை எழுதினர். அந்நூல்களே மேலை நாட்டிற் பெரிதும் பரவி வந்தன.

நாத்திக நூல்களை வரைந்து விடுத்த மேலை நாட்டுத் தத்துவர், ஆராய்ச்சியில் முதிர்ந்த அறிஞர் என்பதை யான் ஏற்கிறேன். அன்னார் புறப்பொருளையே பெரிதும் ஆராய்ச்சி செய்தமையான், அகப்பொருளுண்மை அவருக்குத் தோன்றாது போயிற்று. பூத பெளதிக ஆராய்ச்சி யாதல் பிற ஆராய்ச்சியாதல் செய்யாது, ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்னும் மூட உணர்ச்சி கொண்டு திரிவோரை, மரம்-கல்- என்றே ஒதுக்குதல் வேண்டும். பூத பௌதிக நூல் ஆராய்ச்சியில் தலை சிறந்து, நாத்திகம் பேசுவோரது அறிவு, உண்மை காணும் அவாவில் தோய்ந்து நிற்கும். அவ்வாராய்ச்சியில்லாதார் அறிவு, விளக்கமின்றித் திண்மையாகி, மயக்குற்றுக், கட்டுப்பட்டு நுண்ணிய பொருள்களை விளங்கிக் கொள்ளுந் திறனிழந்து கிடக்கும். இவ்வறிவுடைய “பெரியோர்கள்” ஒழுக்க ஈனர்களாக உலகில் திரிந்து மாண்டு போவார்கள்.

மேலைநாட்டு நாத்திக நூல்கள் பல, கீழைநாட்டு ஆத்திக நூல்களுக்கு ஆக்கந் தேடுவன என்பது எனது அநுபவத்திற் கண்ட உண்மை. மேலைநாட்டு நாத்திகப் பெரியோர் புறப்பொருளை ஆராய்ந்து கண்ட உண்மையை ஆதாரமாகக் கொண்டு, அவர் பின் வந்தார் சிலர், அதை ஆராய்ச்சிசெய்து, இப்பொழுது சடப் பொருளுக்கு வேறாக ஒரு சித்துப் பொருளுண்டு என்னும் முடிவிற்கு வந்திருக்கின்றனர். பூதபௌதிக தத்துவ நூலில் தேர்ச்சி பெற்ற ஸர் ஓலிவர் லாட்ஜ் முதலியோர், கண்ணுக்குப் புலனாகுஞ் சடப்பொருளுக்கு வேறாகமற்று மொரு பொருள் இருத்தலை நிறுவிக் காட்டியிருக்கின்றனர். இத்தகைய அறிஞர் நூல்கள் பரவப் பரவ, மேலை நாடும் ஆத்திக பூமியாக மாறும்.

முதலாளியின் ஆக்கம்

இப்பொழுது மேலைநாட்டிலும் ஆத்திக நூல்கள் பல எழுதப்படுகின்றன. கடவுளுண்மை மறுக்கும் ‘அறிஞர்’ தொகை ஆண்டுஞ் சுருங்குந் தோற்றம் புலனாகி யிருக்கிறது. பூத பெளதிக ஆராய்ச்சி மேம்பாட்டான், இயந்திர வாயிலாக மக்கள் வாழ்க்கை நடைபெறும் அநாகரிகம் வலுத்தமையே, நாத்திகத்துக்கு மேலைநாடு இரையாதற்குக் காரணம். இயந்திரங்களும், விதவித மான கப்பல்களும், வேறு பல புதுமைக் கருவிகளும் செல்வத்தை ஒரு கூட்டத்தவர் பக்கம் திரட்டித் தள்ளுகின்றன. அக்கூட்டத்தவரே முதலாளிகள் எனப்படுவர். அவ்வினத்தவர் வழியே அரசுகள் நடைபெறுகின்றன. அவ்வரசுகள் வாணிப வாயிலாகச் செல்வம் பெறவேண்டியும், இயந்திரங்களால் செய்யப்படும் பொருள்களை விலைப்படுத்த வேண்டியும் அடிக்கடி தங்களால் நடத்தப் படும் பத்திரிகைகள் மூலமாகப் போர்களைக் கிளப்பி மகாயுத்தங்களை நடத்துகின்றன; யுத்தங்களில் வெற்றி பெறும் பொருட்டுப் பூத பௌதிகக் கருவிகளைப் புதிது புதிதாகக் காண்பதில் அறிவைச் செலுத்தி உலகத்தைப் பாழ்படுத்துகின்றன.

முன்னே (1914-18) நடைபெற்று ஓய்வடைந்த ஐரோப்பா யுத்தம் உலகத்தின் கண்களை ஒரோ வழித் திறந்தது. பின்னே (1939-44) நடந்த உலகப் போர் கண்களை நன்கு திறந்து வருகிறது. போரைக் கிளப்புவோர் முதலாளிகள் என்றும், போர் புரிந்து அமர்க்களத்தில் மடிவோர் தொழிலாளர் என்றும் உலகம் உணர்ந்து விட்டது. இவ்வுணர்ச்சியால் முதலாளியின் கருவியாக இனித் தொழிலாளி உழலமாட்டான். தொழிலாளியின் உணர்ச்சி, முதன்மையை (Capitalism) அழிப்பதாகும். முதன்மை நாசத்தால் உலகத்தில் சண்டை யொழிந்து, சுதந்திரம் சகோதரத்துவம் சமத்துவம் ஏற்படும். அப் பொழுதே மேலைநாடு ஆத்திகத்துக்கு அடிகோலும். இப்பொழுது மேலை நாட்டில் சில பகுதிகளில் ஆத்திகக் கண் மலர்கிறது. அப்பகுதியில் ஆத்திக உணர்ச்சி பெருகப் பெருகப், புறமுக உணர்ச்சி அருகி அருகி அகமுக உணர்ச்சி இயல்பாகவே தோன்றும். அப் பொழுது ஆண்டெழும் ஆராய்ச்சியால் சடப் பொரு ளுக்கு வேறாகச் சித்துப் பொருள் ஒன்றிருப்பது விளங்கும்.

சடமும் சித்தும்

ஐந்து பூத காரியமாக உள்ள உடலுக்கும். கரணத்துக்கும், மனத்துக்கும், பிராணனுக்கும் வேறாக மற்றுமொரு பொருள் இருத்தலெங்ஙனம் என்று எண்ணி எண்ணிக் கண்ணீர்விடும் சகோதரர்களுக்கு நான் இரங்குகிறேன். நம் முனிவரர் எழுதிவைத்துள்ள உபநிட தங்களையும், மேலைநாட்டு அறிஞர் எழுதி வரூஉம் அறிவு நூல்களையும் ஆராய்வோர் நெல்லிக்கனியென விளங்கப்பெறுவர். ஐந்து பூதக் கூட்டுறவால் தோன்றும் உணர்ச்சியே ‘நான்’ என்று கொள்ளும் ‘பெரியோர்’, ஐந்து பூதங்களுள் எப்பூதத்தினின்றும் அவ்வுணர்ச்சி தோன்றியது என்னும் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். மஞ்சளையும் சுண்ணத்தையும் குழைத்தால் ஒருவகைச் சிவப்பு நிறம் உண்டாவதையும், வெற்றிலை பாக்கு சுண்ணம் என்னும் மூன்றையும் ஒற்றி மெல்லுங் காலத்து ஒருவிதச் சிவப்பு நிறம் உண்டாவதையும் அப் ‘பெரியோர்’ எடுத்துக் காட்டுவர்.

அஃதுண்மையே. அதை மறுப்பாரில்லை. உள்ளதினின்றும் ஒன்று தோன் றுமேயன்றி இல்லதினின்றும் ஒன்று தோன்றுவதில்லை என்பது மாறாத உண்மை. புதிதாகத் தோன்றிய சிவப்பு நிறம், உள்ள ஒன்றினின்றுமே தோன்றியிருத்தல் வேண் டும். பாழினின்றும் (சூந்யத்தினின்றும்) ஒன்றும் தோன்றாது. மஞ்சளில் கரந்து நின்ற சிவப்பு நிறமும், பாக்கில் கரந்து நின்ற சிவப்பு நிறமும், பிறபொருள் கூட்டுறவால் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன. அது போல் எந்தப் பூதத்தினின்றும் ‘நான்’ என்னும் உணர்ச்சி கரந்து நின்று தோன்றுகிறது என்பது ஆராயற்பாலது.

ஐந்து பூதமும் சடம் என்பதை மறுப்பாரில்லை. அச்சடத்தினின்றும் தோன்றுவதும் சடமாகவன்றோ இருத்தல் வேண்டும்? சடப்பொருள்களாகிய மஞ்சள் பாக்குகளினின்றுந் தோன்றுஞ் சிவப்பு நிறமுஞ் சடத்துவ குணமுடையதே. அதுபோல ஐந்து பூதத்தினின் றும் ‘நான்’ என்னும் உணர்ச்சி தோன்றுவதாயின், அது சடமாகவன்றோ இருத்தல் வேண்டும்? ‘நான்’ என்பது சடமாக இருப்பின், மனிதனது அறிவு, ஆராய்ச்சியிற் புகாது, கிடந்த இடத்திலேயே கிடத்தல் வேண்டும். அஃது அங்ஙனமிருத்தல் காணோம். ஆதலால், ‘நான்’ என்னும் அறிவு (சித்) ஐந்துபூதக் கூட்டுறவால் உண்டாகும் ஒரு புதிய குணம் என்று கூறுவது பிழையேயாகும்.

சிறு கதை

மனிதர் தம்மிடத்திருந்து, தம்மை நடாத்தும் ஒன் றில் ஐயமுறுவது என்ன அறிவுடைமையோ தெரியவில்லை. எல்லாவற்றையும் ஆராய்ந்து, அவ்வாராய்ச் சிக்குக் கருவியாக நின்று துணைபுரிந்து வருந் தன்னை மறந்துவிடுவதன் அறியாமையை என்னென்று கூறுவது? ஈண்டு யான் இளமையில் வாசித்த ஒரு சிறு கதை எனது நினைவுக்கு வருகிறது. அக்கதை வருமாறு:-

ஓர் ஊரில் ஒரு விழா நடைபெற்றது. அதைக் காண அவ்வூருக்கணித்தாக உள்ள மற்றோர் ஊரிலிருந்து நூறு பேர் புறப்பட்டனர். அவருள் சிலர் தளர்ந்தும் மெலிந்தும் நடந்தனர்; சிலர் விரைந்து நடந்தனர். இங்ஙனம் முன்னும் பின்னுமாக நடந்து பலர் ஒரு குளக்கரை சேர்ந்தனர். அவர் பின்வந்த மற்றவரும் அக்கரை சேர்ந்தனர். அக்கூட்டத்தவருள் ஒருவர் ‘நாம் நூறுபேரும் வந்து சேர்ந்தோமா?’ என்று கேட்டனர். அப்பொழுது ஒருவர் எல்லாரையும் எண்ணி எண்ணித் தம்மை விடுத்து, ‘அந்தோ! தொண்ணூற்றொன்பது பேரே இருக்கின்றனர். ஒருவரைக் காணோம்’ என்று கூக்குரலிட்டனர். இன்னொருவர் அவரை மற்றுமொருமுறை எண்ணுமாறு தூண்டினர். பழையபடியே அவர், தம்மை விடுத்து எண்ணி, ‘தொண்ணூற்றொன்பது பேரே’ என்று கூவினர். அவர், தம்மை விடுத்து எண்ணுவதைக் கண்ணுற்றுக் கொண்டிருந்த வேறொரு நண்பர், ‘தோழனே! எண்ணிய உன்னோடு சேர்த்து நாம் நூறுபேர் இருக்கிறோம்’ என்று உரத்த குரலோடு அறைந்தனர். அது கேட்டு உண்மை கண்ட நண்பர் நாணமடைந்தனர்.

தனக்குப் புறமாக உள்ள எல்லாப் பொருளையும் ஆராய்ச்சி செய்து, ‘தோல் நானா’, ‘நரம்பு நானா’, ‘இரத்தம் நானா’, ‘நிணம் நானா’ என்று தன் உடலுறுப்புக்களைக் கூறிட்டாய்ந்து, ‘நான் என்பதைக் காணோமே’ என்று நாத்திகம் பேசுவோன் கூற்றுக்கு இக்கதையை ஒப்பிட லாம். உலகத்தையும், உடலையும், உறுப்பையும் ஆராயும் அறிவுடைய இவன், அவ்வாராய்ச்சி செய்யக் கருவியாக உள்ள ஒன்றை மறந்தது எவருடைய அறியாமை? எல்லாவற்றிற்குங் காரணமாக நின்று துணைபுரியும் அறிவை (நான் என்னும் என்னை) மறந்து, அதற்கு இன்மை கூறு வோர், மேற்போந்த கதையையாவது உற்று நோக்கி உறுதி பெறுவாராக.

பளிங்கனைய சித்து

இச் சிற்றாராய்ச்சியினால் ‘நான்’ என்பது, உட லன்று, கரணமன்று, இந்திரியமன்று; சுருங்கக் கூறின் சடமன்று என்பது ஏற்படுகிறது. ‘நான்’ என்பது மாயாகாரியமாகிய உடலுக்கு வேறாயிருப்பது. இதனை,

வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி ஐந்துபுல னைம்பூதங் கரண மாதி அடுத்தகுண மத்தனையு மல்லை யல்லை இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை யாதொன்று பற்றினத னியல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீயுன் பக்குவங்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம்

எனவருந் தாயுமானார் திருவாக்கானுணர்க.

பலதிறக் கருத்துக்கள்

‘நான்’ என்பதைச் சித்தாகக் கொள்வோருள்ளும் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உலவி வருகின்றன. ‘நான்’ என்பதைக் கடவுள் கூறாக்கொண்டு, அதற்கு வேறாக ஓர் அறிவு – சித்- இல்லை என்னுங் கொள்கை யுடையாரையும், ‘நான் என்பது சீவான்மா, அதற்கு வேறாகப் பரமான்மா என்பதொன்றுளது’ என்னுங் கொள்கையுடையாரையும், ‘சீவான்மா பரமான்மா என இரண்டு சித்துக்கள் வேறுபட்டிருப்பினும் ஒன்றை விட்டொன்று பிரிந்து நிற்பதில்லை’ என்னுங் கொள்கை யுடையாரையும் உலகம் பெற்றிருக்கிறது. சீவான்மா பரமான்மாக்களைப் பற்றி மற்றும் பல கொள்கை யுடை யாரும் இருக்கலாம். இவ் வாதங்களைச் சங்கரர், இராமாநுஜர், நீலகண்டர், மத்துவர்; சிவஞானமுளிவர் முதலிய அறிஞர் எழுதியுள்ள மாபாடியங்களிற் காணலாம். இவரனைவரும் ‘நான்’ என்பது ‘சடமன்று’ என்ற கொள்கை யுடையவராவர். இவருக்குள்ள பிற வேற்றுமைகளை ஈண்டுக் கருதவேண்டுவதில்லை.

ஆன்மாவின் முன்னிலை

‘நான்’ என்னும் ஆன்மா-உயிர்- உடலைப் பெறுதற்கு முன்னர், அறிவும் செயலும் விளக்கமுறாமல், பாம்பால் தீண்டப்பெற்ற மனிதனைப் போலக் கிடந்திருத்தல் வேண்டும். பாம்பு தீண்டிய மனிதனிடத்து உயிர் இருப்பினும் அவன் உணர்ச்சியின்றிக் கிடக்கிறான். அதனால் அவனை உயிர் நீங்கிய பிணம் என்று சொல்லுதல் முடி யாது. அவன் அறிவு, நஞ்சால் விழுங்கப்பட்டிருக்கிறது. அதனால் அவன், அறிவு செயல் விளக்கமின்றிக் கிடக் கிறான். பாம்பால் தீண்டப்பெற்றவன் நிலையை, உயிர் மாயாவுடல் தாங்குதற்கு முன்னர்ப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது முடிந்த கொள்கையா யிருக்கிறது இக் கருத்தையே தாயுமான சுவாமிகள்,

காரிட்ட ஆணவக் கருவறையி லறிவற்ற
கண்ணிலாக் குழவி யைப்போல்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற் கிசைந்த

பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுத மூட்டிப்
பெரியபுவ னத்தினிடைப் போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்ட மைத்திட்

டேரிட்ட தன்சுருதி மொழிதப்பி னமனைவிட்
டிடருந வுறுக்கி யிடர் தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்து துயில் கொண்மி னென்று

சீரிட்ட வுலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்த குருவே

என்னுந் திருப்பாசுரத்தில் விளக்கமுறக் கூறியுள் ளார்கள்.

கடவுள் துணை

அறிவுஞ் செயலும் விளங்கித் தோன்றாத நிலையைப் பெற்றிருந்த (நான்) உயிர், தானே தன் முயற்சியால் தன் அறிவுஞ் செயலும் விளங்குமாறு செய்துகொள்ளல் இயலாது. அறிவுஞ் செயலும் விளங்காது அறியாமையால் விழுங்கப் பெற்றுள்ள உயிர், மாயாவுடல் தாங்கப் பெற்றதும், அறிவுந் தொழிலும் விளங்கப் பெறுகிறது. அறிவு – செயல் – விளக்கத்துக்குக் கருவியாயுள்ள மாயை தானே இயங்கிச் சென்று உயிரைப் பற்றாது. என்னை? மாயை சடமாகலின் என்க. ஆதலால், மாயாவுடல் என்னுங் கருவிகொண்டு, உயிரின் அறியாமையைக் களையவல்ல பொருள், சடம் அல்லாததாயும், அறியாமை என்னும் இருள் செறிந்த உயிர் அல்லாததாயும் இருத்தல் வேண் டும். அப்பொருளே எல்லாவற்றையுங் கடந்தும், (மாயை யிலும் உயிரிலும்) எல்லாவற்றிலுங் கலந்தும் நிற்குங் கடவுள் என்பது. அக்கடவுள் அறியாமையால் விழுங்கப் பெறாது, அறிவு வடிவாயிருத்தலால் அஃதென்றும் அருள் வடிவா யிலங்கிக் கொண்டிருக்கும். அருள் வடிவா யிலங்குங் கடவுள், அறியாமை என்னும் இருளால் மூடப் பெற்று அறிவு செயல் முகிழ்த்தலின்றிக் கிடக்கும் உயிரைத் தன்னைப்போல் ஆக்கவேண்டி, மாயா உடலை அதற்கு (உயிருக்கு) வழங்குகிறது. உயிர். ஆண்டவனருளால் உடலைத் தாங்கப் பெற்றதும், அதற்குச் சிற்றறிவும் சிறுதொழிலும் அரும்பி வளர்ந்து வருகின்றன. மையால் மறைக்கப் பெற்ற கண்ணாடியைச் சிற்றுளியால் கீறினதும், அதன் மாட்டுச் சிறிது வெண்ணிறந்தோன்று கிறதன்றோ? அதேபோல இறைவன், தனு கரண புவன போகங்களை உயிருக்கு வழங்கியதும், அதன்மாட்டுச் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் முகிழ்க்கின்றன.

தண்ணீரைப் பாண்டத்தில் விட்டுக் காய்ச்சினால், அது கொதிக்கிறது. அக்கொதிப்பு எங்கேயிருந்து தோன்றுகிறது? நெருப்பின் வெம்மைக் கூட்டுறவால் தண்ணீரில் கரந்து நின்ற கொதிப்பு இப்பொழுது வெளி வருகிறது. நெருப்பிலிருந்து கொதிப்பு உண்டாகிற தென்று கூறுவது தவறு. தண்ணீரில் கரந்து கலந்திருந்த கொதிப்பு, வெம்மைக் கூட்டால் வெளித் தோன்றுகிறது. இதுபோல, உயிரில் அடங்கிக்கிடந்த செயல் (கருமம்) மாயையின் கூட்டுறவால் முகிழ்க்கிறது. விரிக்கிற் பெருகும்.

கடமை

உடலோடு கூடிய உயிர், தன் சிற்றறிவைக் கொண்டு தன்னை ஆராய்ந்தால், தான் உடலன்று என்பது நன்கு புலனாகும். இவ்வாராய்ச்சி உயிரின் அறிவு விளக்கத்தைப் பொறுத்து நிற்பது.

ஆண்டவன் உயிரின் அறிவை விளக்கும் பொருட்டு அதற்குப் படிப்படியாக மரம், புல், விலங்கு, மனிதன் முதலிய வடிவங்களை வழங்கி வருகிறான். அவ்வடிவங் களுக்கேற்ப உயிர் சிறிது சிறிதாக அறிவுந் தொழிலும் விளங்கப் பெறுகிறது. நம் முன்னோர் உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை வகுத்திருப்பது ஈண்டுக் கருதற் பாற்று.

உயிர் மனித உடல் தாங்கும்போது அதன் நிலையை அறிவிக்கும் ஆறாவதறிவு அரும்புகிறது. அவ்வறிவின் துணையால் மனிதன் கடவுள் நிலை யடைதல் வேண்டும். மனிதன் கடவுள் நிலையைக் கலைஞானத் தளவில் உணர்வ தால் எவ்விதப் பயனும் விளையாது. மனிதன் கடவுள் நிலையை மெய்ஞ்ஞானத்தால் பெறுதல் வேண்டும். உலகத்தில் எத்தனை வாய் வேதாந்திகளிருக்கிறார்கள்? அவர்களா லென்ன பயனுண்டு? மனிதன், ஆண்டவனருளால் பெற்ற அறிவைக்கொண்டு, தன்மாட்டு நிகழுஞ் செயல்களை அன்றாட வாழ்வில் தூய்மைப் படுத்திக் கொள்ளல் வேண்டும். ஈண்டே கடமை என்பது ஏற் படுகிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *