சமரச சன்மார்க்கத் திறவு
திரு. வி. கலியாணசுந்தரனார்

3. வழிபாடும் அமைப்பும்

1.வழிபாடு, வாழ்வுக்குத் தேவை.

2. வழிபாடு பொருளுடையதாயிருத்தல் வேண்டும். பொருளற்ற வழிபாடு கண்மூடி வழக்க ஒழுக்கங்களைப் பெருக்கும்.

3. ‘வழிபாடு’ என்னும் நினைவு தோன்றும்போதே, மக்களுக்கு இறை நினைவு தோன்றுவது இயல்பு.

4. வழிபாடு இறைக்கே உரியதாய், இறையையே சாரும். 5. இறை ஒன்று; இரு நிலையுடையது. ஒன்று தனித்த நிலை; மற்றொன்று இயற்கையையும் குருவையும் கோயில் கொண்ட நிலை.

6. இறையின் தனித்த நிலை அகண்டாகாரமானது; மனம் வாக்குக்கு எட்டாதது; வழிபாடற்றது.

7. உருவங்களில் படியும் இயல்பு வாய்ந்த மனம் முதலிய கரணமுடையவர் அகண்டாகார இறையை எப்படி வழிபடுதல் கூடும்?

8. வழிபாடற்ற இறை நிலையைப்பற்றி மன உணர்வினர் மல்லாட வேண்டுவதில்லை.

9. இயற்கையுள்ளும் குருமாருள்ளும் கோயில் கொண்ட இறைநிலை, மனம் முதலிய கரணமுடையவரின் வழிபாட்டுக்கு உரியது.

10. மனஉணர்வு ஒடுங்கி, வழிபாடற்ற நிலை பெறுதற்கும் வழிபாடு தேவை.

11. மனம் வாக்கு முதலிய கரணமுடையோர், இயற்கை வாயிலாகவோ குரு வாயிலாகவோ அல்லது இரண்டின் வாயிலாகவோ இறையை வழிபடலாம். எவ்வகை வழிபாடும் இயற்கையின் பாற்பட்டதே. முன்னூல் பார்க்க.

12. இயற்கை வழிபாடும், பொது முறையில் குருமார் வழிபாடும் முன்னூலில் விரித்துக் கூறப்பட்டன. இந்நூலில் சிறப்பு முறையில் குருமார் வழிபாடு மட்டும் கூறப்படும்.

13. குரு வழிபாடென்பது ஒருவித முன்னிலைச் சுட்டு. அஃது இறையையே சாரும்.

14. குரு வழிபாடென்பது, குரு உள்ளத்தில் ஒளிரும் இறை ஒளியைக் குறித்து நிற்பதாகும்.

15. அவரவர் மனத்துக்கு இயைந்த குருவை அவரவர் கொள்ளலாம்.

16. வழிபாட்டுக்கு அமைப்பு வேண்டும்.

17. அமைப்பு வேண்டும் நிலையும் உண்டு; வேண்டா நிலையும் உண்டு.

18. மன உணர்வினர்க்கு அமைப்பு வேண்டும். மற்றவர்க்கு அமைப்பு வேண்டுவதில்லை.

19. இயற்கை, அமைப்பென்பதும் நூல், அமைப் பென்பதும் – அவ்வவ் வமைப்புக்குரியார் இன்னார் இன்னார் என்பதும் – முன்னூலில் சொல்லப்பட்டன.

20. குருமார் அமைப்பின் விளக்கம் ஈண்டுக் குறிக்கத்தக்கது.

21. ஒவ்வொரு வீட்டிலும், வேறு தனி இடத்திலும் குருமார் அமைப்பை ஏற்படுத்தலாம்.

22. பற்பல நோக்குடன் கட்டப்பெற்ற பழைய கோயில் மடம் முதலியவற்றைச் சன்மார்க்க முறையில் சீர்திருத்தஞ் செய்து, அவைகளை வழிபாட்டுக்குரிய அமைப்புக்களாகக் கொள்வதில் தவறுதல் இல்லை.

23. பழைய அமைப்புக்களின் பெயர்களை மாற்றுவது அநாவசியம். அவைகளில் சன்மார்க்கக் கொள்கை நிலவுவது சாலும்.

24. தெய்விக அமைப்பு எதுவும், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல், புரோகிதம், சம்பிரதாயம், கண்மூடி வழக்க ஒழுக்கம் முதலியவற்றிற்கு அடிமையாதல் கூடாது.

25. அமைப்புக்குரிய இடம், இயற்கை வளஞ் செறிந்ததா யிருத்தல் வேண்டும்.

26. காடு மலை அடர்ந்த இடங்களும், கடலோரமும், ஆற்றோரமும், இன்ன பிறவும் இனியன.

27. காடு மலை ஆறு சமீபத்திலில்லாத இடங்களில் அமைப்பு நிறுவ நேர்ந்தால், அவ்விடங்களைச் செய்குன்றாலும், மரஞ்செடிகளாலும், நீர் நிலைகளாலும் அழகு செய்தல் வேண்டும்.

28. இடம் எவ்வளவு விசாலமா யிருக்கிறதோ அவ்வளவும் நல்லது.

29. அமைப்புக்கெனக் குறிக்கப்பெற்ற இடத்தில் மிகச் சிறுபகுதி கட்டிடங்களுக்கென்றும், பெரும்பகுதி மரஞ்செடி களுக்கென்றும் ஒதுக்கப்படல் வேண்டும்.

30. மரஞ்செடிகளைப் பெருக்கல் நல்லது. அவைகளை அழித்துக் கட்டிடங்களைப் பெருக்கல் கூடாது.

31. ஆல், அரசு, வேம்பு, அத்தி, புன்னை, கடம்பு, வன்னி, மா, பலா, வாழை, தென்னை, கமுகு, கிச்சிலி, நாரத்தை, எலுமிச்சை முதலிய மரங்களை வைத்து வளர்ப்பது சிறப்பு.

32. அமைப்பின் நுழைவாய்ப் பக்கம் போக, மற்ற மூன்று பக்கங்களிலும் சம டை விட்டு விட்டு, வட்டமாகவோ சதுரமாகவோ, எட்டு இடம் குறித்துக்கொண்டு, ஒவ்வோரிடத் திலும் ஒவ்வொரு செய்குன்று அமைத்து, ஒவ்வொரு குன்றின் மீதும் ஓர் அழகிய கட்டிடம் எழுப்பலாம். முதல் கட்டிடத்தினுள், ‘தெய்வம் ஒன்று’ என்பது எழுத்தால் எழுதப் பெறலாம். அதில் எவ்வுருவமும் அமைத்தல் கூடாது. இரண்டு முதல் எட்டுவரையு முள்ள கட்டிடம் ஒவ்வொன்றிலும் முறையே, அன்னை, கிறிஸ்து, விருஷப தேவர், புத்தர், கிருஷ்ணமூர்த்தி, குமரன், தட்சணாமூர்த்தி ஆகிய இவர்தம் ஓவியம் அமைக்கலாம். இயற்கை, அன்பு, அஹிம்ஸை, தர்மம், நிஷ்காமியம், அழகு, மோனம் என்பன முறை முறையே ஒளிருமாறு ஒவ்வோர் ஓவியமும் அமைதல் நல்லது. இயற்கை முதலியவற்றை எழுத்திலும் வரைந்து ஆங்காங்கே வைக்கலாம். அமைப்பின் நடுவில் ஒரு குன்று செய்து, அதன்மீதும் ஒரு கட்டிடம் எழுப்பிப், புற இதழ் பலவாகவும், அக இதழ் எட்டாகவும் கொண்ட ஒரு தாமரைப்பூ முகிழ்த்ததுபோல ஓர் ஓவியம் பொறிக்கலாம். அக இதழ் எட்டிலும், தெய்வம் ஒன்று, இயற்கை, அன்பு, அஹிம்ஸை, தர்மம், நிஷ்காமியம், அழகு, மோனம் ஆகியவற்றை முறைமுறையே வரையினும் வரையலாம். இந்நடுக்கட்டிடத்தில் உருவங்கள் அமைத்தல் கூடாது.

33. வெள்ளிய துகிலில் தாமரைப் பூ ஓவியம் பொறித்த கொடி சன்மார்க்கத்துக்கு உரியது.

34. தாமரைப்பூ பொறித்த அழகிய சின்னத்தைச் சன்மார்க்க ஊழியர்கள் அணிந்து கொள்ளலாம்.

35. குருமார் திருமொழிகளின்வழி நின்றொழுகல், அவை களை ஓதல், பிரசாரம் செய்தில் முதலிய வகையில் வழிபாடு நிகழ்த்தலாம்.

36. வழிபாடுகளுள் தலையாயது தியானம்.

37. அவரவர் விருப்பத்துக்கியைந்த குருவை அவரவர் தியானிக்கலாம். ஒரு மரத்திலுள்ள கனிகளுள் எதை உண்டா லென்ன?

38. தியானம் தொடக்கத்தில் குருமீது செல்லும். நாளடைவில் அதனைக் குருபோதனைமீது செலுத்தப் பயிலல் வேண்டும். இப்பயிற்சி முதிர முதிரப் பன்மை உணர்வு கெடும். மேல் விளைவு முதலியவற்றை முன்னூலில் பார்க்க.

39. மக்கள் இயல் சார்ந்ததன் வண்ணமாவது. செம்மையுறத் தியானம் பெருந்துணை செய்யும்.

40. தன் விளக்கத்துக்கும், பிற நலனுக்கும் தியானமும் தொண்டும் செய்தல் முறைமை. இரண்டும் வழிபாடேயாகும்.

41. தன்னலத்துக்கு மட்டும் செய்யும் எதுவும் வழிபாடாகாது.

42. சன்மார்க்கம் மேலும் மேலும் விளங்குதற்குத் தன்னலம் துணை நில்லாது. அதற்குப் பரநல நாட்டமும் தொண்டும் தேவை.

43. பரநல நாட்டமும் தொண்டும் சன்மார்க்கத்துக்கு இன்றியமையாதன.

44. குருமார் வழிபாட்டில்,நாடு,நிறம், மொழி, பிறப்பு, மதம் முதலிய வேற்றுமைகளும் – புரோகிதம், சம்பிரதாயம், கண்மூடி வழக்க ஒழுக்கம் முதலிய கட்டுக்களும் – குறுக்கிடலாகாது. குருமார் போதனைகளால் சகோதர நேயம் பரவாதவாறு இவ்வேற்றுமைகளும் கட்டுப்பாடுகளும் தடைசெய்து வருகின்றன. இன்னும் இப்பீடைகளைக் கட்டி அழவேண்டுவ தில்லை.

45. ‘சத் என்னும் இறை, எவ்வுயிரிலும் நீக்கமற நிறைந் திருப்பது’ என்பது குருமார் போதனை. இதன் கருத்து என்னை? எல்லாருஞ் சகோதரர் என்பது. இச்சகோதர நேயத்தை மக்களிடை வளர்க்கப் போந்தவர் குருமார். அவர் வழிபாட்டில் வேற்றுமைகளும் கட்டுப்பாடுகளும் எற்றுக்கு?

46. வேற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள இடத்தில் குருமார் ஒளி விளங்கித் தோன்றாது.

47. சன்மார்க்கம் எல்லார்க்கும் உரியது. சகோதர நேயம் அதன் அடிப்படை. அதற்குரிய செயல்கள் அமைப்புகளில் நடை பெறுதல் நல்லது.

48. சகோதரநேயம் பெருகுதற்குக் கலப்புமணம், உடன் உண்ணல், இன்ன பிற, நற்றுணை செய்யும்.

49. மன உணர்வு ஒடுங்குநிலை எய்தியவரும், மற்றவர் பொருட்டு வழிபாடு செய்வது பரோபகாரமாகும்.

50. சன்மார்க்கப் பிரசாரத்துக்கென்று திருவிழாவுஞ் செய்யலாம்.

51. திருவிழா வெறுங்களியாடல் முறையில் செய்தல் கூடாது.

52. ஏழு உருவங்களையோ, எட்டுப் போதனைகள் பொறிக்கப்பெற்ற கொடிகளையோ, எட்டுப் போதனைகளை யுடைய தாமரை ஓவியத்தையோ, வெறும் தாமரை ஓவியத்தையோ அல்லது ஒருங்கே இவையனைத்தையுமோ தாங்கி ஊர்வலம் வரலாம்.

53. ஊர்வல முறைகளில் கட்டுப்பாடு வேண்டுவதில்லை. அவ்வவ் விடத்துக்குரிய நிலையை ஒட்டி முறைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

54. ஊர்வலத்தில் சன்மார்க்க பஜனை, பிரசாரம் முதலியன நடைபெறலாம்.

55. வாத்தியம், இசைப்பாட்டு, இன்ன பிற விரும்பப்படின், அவ்வவ்விடத்தின் இயல்புக்கு ஏற்றபடி, அவைகளைப் பயன்படுத்தலாம்.

56. அமைப்பு, திருவிழா முதலியன சன்மார்க்கப் பிரசாரத்துக் கென்று நடைபெறுவன என்பதை, மன்பதை உணரு முறையில் சங்கத்தார் நடந்துகாட்டல் வேண்டும்.

57. அமைப்பு முதலியவற்றிற்கென நிதி திரட்டிச் சேமித்து வைத்தலாகாது. அவ்வப்போதைய நிகழ்ச்சிக்குத் தேவையான அளவில் பொருள் சேர்த்து, அவ்வந் நிகழ்ச்சியை நிறைவேற்றி விடுதல் வேண்டும். இதுகுறித்து முன்னூலில் விளக்கஞ் செய்யப் பட்டிருக்கிறது. அதை ஊன்றிக் கவனிக்க.

58. இச்சிறு நூலில் அமைப்பு முறைகளுக்குரிய துறை களையெல்லாம் விரித்துக்கூறல் இயலாது. குறிப்பாகச் சில இங்கே சொல்லப்பட்ட ன. இவைகளை அடிப்படையாகக் கொண்டு கால தேச வர்த்தமானத்துக்கு எற்ற முறையில் அறிஞர் விரும்புமாறு செய்யலாம். சன்மார்க்க சங்க நோக்கத்துக்கு மாறு படாத முறையில் எதுவும் நிகழ்தல் வேண்டும். இது கருதத் தக்கது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *