
சிலம்பு பிறந்த கதை
கி. வா. ஜகந்நாதன்
துறவரசர்
பெரும் பயணமும் சிறு பயணமும் நிறைவேறிய பிறகு இளங்கோ
வஞ்சிமா நகரை அடைந்தார். தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் தம் தந்தைக்கும் தமையனுக்கும் விரித்துரைத்தார். தமிழ்ப் புலவராகிய
சாத்தனாரை ஒரு முறை வருவித்துச் சிறப்புச் செய்ய வேண்டும் என்ற தம்
விருப்பத்தையும் தெரிவித்தார்.
அவர் விருப்பப்படியே சாத்தனாரை அரசன் அழைத்துவரச் செய்தான்.
அவருடைய புலமையை உணர்ந்து பாராட்டிப் பரிசு அளித்தான்.
சாத்தனாரோடு செங்குட்டுவன் நன்றாகப் பழகினான். “அடிக்கடி இங்கே
வரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். இளங்கோ, ‘இனி என்
பொருட்டாக வர மறந்தாலும் என் தமையனாருக்காகவாவது
வரவேண்டும்’ என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார். ‘இரண்டு
பேருக்காகவும் வருவேன்; உண்மையைச் சொல்லப் போனால்
எனக்காகவே வருவேன். வருவதால் எனக்குத் தானே இலாபம்?’ என்றார்
சாத்தனார்.
ஒரு நாள் நெடுஞ்சேரலாதன் திரு ஓலக்கத்தில் இருந்தான்;
சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான். அமைச்சர், படைத் தலைவர், நியாய
சபைத் தலைவர், நகரத்திற் பெரியவர்கள், புலவர்கள் முதலிய பலர்
அங்கே இருந்தார்கள். அரசனுடைய வலப் பக்கம் ஒரு சிறிய பொன்
ஆதனத்தில் இளவரசன் செங்குட்டுவன் வீற்றிருந்தான். இடப் பக்கம் வேறு
தனியாசனத்தில் பெருநம்பி இளங்கோ அமர்ந்திருந்தார். இரு பக்கமும்
மன்னனுக்கு இரண்டு மங்கையர் கவரி வீசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாயில் காவலன் வந்து நெடுஞ்சேரலாதனை வணங்கி,
“மன்னர்பிரான் வாழ்க!” என்று சொல்லி நின்றான்.
“என்ன செய்தி?” என்று கேட்டான் அரசன்.
“யாரோ சோதிடராம். பல மன்னர்களைக் கண்டு சோதிடம் கூறிப் பரிசு
பெற்றவராம். மன்னர் பெருமானைக் காண வேண்டுமென்று
சொல்லுகிறார்” என்று பணிவுடன் வாயிலோன் சொன்னான்.
“அப்படியா? அவரை உள்ளே அனுப்பு” என்று அரசன் பணித்தான்.
“மன்னர்பிரான் வெல்க!” என்று சொல்லிச் சென்ற வாயிலோன், சிறிது
நேரத்தில் அந்தச் சோதிடரைக் கொண்டுவந்து விட்டுத் தன் இடம்
சென்றான்.
வந்த சோதிடர் மன்னனை வணங்கித் தாம் கொணர்ந்த பழத்தைக்
கையுறையாகக் கொடுத்தார்; பணிவாக நின்றுகொண்டிருந்தார்.
“நீர் சோதிடரா?” என்று கேட்டான் மன்னன்.
“ஆம்” என்றார் அவர்.
“உமக்கு எந்த நாடு?”
“சோழநாடு.”
“அப்படியே அந்த ஆசனத்தில் அமரும்” என்று சொல்லி ஓர் இடத்தைச்
சுட்டிக் காட்டினான் சேர மன்னன். சோதிடர் அதில் உட்கார்ந்து கொண்டார்.
“ நீர் எப்படிச் சோதிடம் பார்ப்பீர்? பிறந்த நாள், பொழுது முதலியவற்றைச்
சொன்னால் சாதகம் கணித்துப் பார்த்துப் பலன் சொல்வீரா? கை
இரேகைகளைப் பார்த்துச் சொல்வீரா?’ என்று மன்னன் கேட்டான்.
“அவற்றையும் பார்ப்பேன். அவற்றைப் பாராமலே உடற்கூற்றைப் பார்த்தே பலன் சொல்வேன்” என்றார் சோதிடர்.
“என்ன என்ன பொருளைச் சொல்வீர்?” என்று கேட்டான் அரசன்.
சோதிடர்: எதைக் கேட்டாலும் சொல்வேன். பிள்ளைகள் இத்தனை என்று
சொல்வேன்; மனைவிமார் இத்தனை பேர் என்று சொல்வேன்.
போனதையும் சொல்வேன்; வருவதையும் சொல்வேன்.
அரசன்: ஒருவருக்கு இத்தனை ஆயுள் என்று வரையறையாகச்
சொல்வது அரிது என்கிறார்களே! நீர் திட்டமாகச் சொல்வீரா?
சோதிடர்: ஓ! உறுதியாகச் சொல்வேன்.
அரசன்: அப்படியானால் என்னைப் பார்த்து ஏதாவது சொல்லும்;
பார்க்கலாம்.
சோதிடர்: அரசனை அடிமுதல் முடிவரையில் நோக்கினர். அங்கே இருந்த
அத்தனை பேரும் அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆவலுடன்
அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரசனை நன்றாகப் பார்த்த
சோதிடர், “மன்னர் பெருமானுக்கு எதைப்பற்றிச் சொல்ல வேண்டும்?”
என்றார்.
அரசன்: இன்னும் எத்தனை காலம் நான் இவ்வுலகில் வாழ்வேன்?
இந்தக் கேள்வியைக் கேட்டதும் அருகில் இருந்த அமைச்சர்
முதலியவர்களுக் கெல்லாம் வயிறு பகீரென்றது. சோதிடர் சிறிது
தயங்கினார்.
அரசன்: சிறிதும் கவலைப்படாமல் சொல்லும். என்றைக்காவது ஒரு நாள்
நான் உலகத்திலிருந்து விடைபெற வேண்டியவன்தானே? ஆகையால்,
இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என்பதைச் சொன்னால்
தெரிந்து கொள்கிறேன். நீர் ஒளிக்காமல் உண்மையைச் சொல்ல
வேண்டும். என் சாவு அணிமையில் இருக்குமானால் அதைச் சிறிதும்
அஞ்சாமல் சொல்லும். உண்மை எதுவானாலும் கேட்கச் சித்தனாக
இருக்கிறேன்.
சோதிடர்: மன்னர்பிரான் திருவுள்ளப்படியே சொல்வதில் தடை இல்லை.
ஆனால் அதைத் தெரிந்து கொண்டு மன்னர் பெருமான் செய்யப் போவது
ஒன்றும் இல்லையே!
அரசன்: எத்தனையோ இருக்கின்றன. போகும் இடத்துக்கு ஏற்ற
துணையைத் தேடிக்கொள்ள வேண்டாமா?
சோதிடர்: மறுபடியும் அரசனுடைய உடம்பு முழுவதையும்
உற்றுநோக்கி, “நான் நல்ல செய்தியைச் சொல்லவேண்டும் என்றுதான்
ஆசைப்படுகிறேன். ஆனால் உண்மையைத் தானே சொல்லவேண்டும்?”
என்றார்.
அரசன்: சுற்றி வளைத்துப் பேசாதீர். நேரே உண்மையை ஒளியாமல்
சொல்லிவிடும்.
சோதிடன் : இன்னும் சில மாதங்களில் மன்னர் பெருமானுக்குப்
பொன்னுலகு சென்று தேவர் போற்ற வாழும் வாழ்வு கிடைக்கும் என்று
தோன்றுகிறது.
அருகில் இருந்தவர்கள் தம்மை அறியாமலே ‘ஆ!’ என்று கூவினார்கள்.
சோதிடர், ‘ஏனடா இதைச் சொன்னோம்!’ என்று வருந்தினார்.
அரசனோ, “நல்லது; இறைவன் திருவுள்ளம் அதுவானால் அதை
ஏற்றுக்கொள்வதுதானே அறிவாளிகளுக்கு அழகு?” என்றான்.
தொடர்ந்து, “என் நிலையை உணர்ந்தேன். என் மக்கள் நிலையையும்
தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதோ இருக்கும் இரண்டு பேர்களும்
என் புதல்வர்கள். இவர்களைப்பற்றி ஏதாவது சொல்லும்” என்று
கேட்டுக்கொண்டான்.
சோதிடருடைய கண்பார்வை இளங்கோவின்மே விழுந்தது. அரசனுக்கு
வலப்பக்கத்தில் இருந்தவர்களோடு சோதிடர் அமர்ந்திருந்தார். அவருக்கு
எதிரில் இடப்பக்கத்தில் முன்னாலே இளங்கோ வீற்றிருந்தார். ஆதலின்
அவரையே முதலில் பார்த்தார்; மேலும் கீழும் பார்த்தார். பிறகு,
“இவருடைய அங்க அடையாளங்களைக் கண்டால் இவரே
மன்னர்பிரானுக்குப் பிறகு இந்தச் சிங்காதனம் ஏறும் பேறு பெற்றவர்
என்று தெரிகிறது” என்றார்.
இதைக் கேட்ட யாவரும் இரண்டாம் முறை திடுக்கிட்டனர். ‘சோதிடர் யார்
மூத்த புதல்வர் என்று தெரியாமல் சொல்லிவிட்டாரோ? அல்லது
இரண்டாம் புதல்வர் என்று தெரிந்தும் நடக்கப்போவதை ஒளிக்காமல்
சொன்னாரோ?’-அவர்களுக்கு இவ்வாறு சிந்தனை ஓடிற்று.
“இவனையா சொல்கிறீர்?” என்று அரசன் இளங்கோவைக் கையால்
சுட்டிக் காட்டியபடியே கேட்டான்.
“ஆம், இந்த இளைஞரைத்தான் சொல்கிறேன். வருங்கால மன்னர் இவர்”
என்று வற்புறுத்திச் சொன்னார் சோதிடர்.
மற்றவர்கள் யாவரும் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அரசனும் சற்றே,
திகைப்படைந்தான். செங்குட்டுவன் எப்படி இருந்தான்? அவன் கண்கள்
சிவந்தன, உடம்பு பதறியது. இப்போதே தன்னோடு தன் தம்பி போரிட்டுத்
தோல்வியடையச் செய்து, சிங்காதனம் ஏறியதாக எண்ணிவிட்டானே
என்னவோ? அவன் தன் தந்தையை நோக்கினான். அவனுடைய பார்வை,
‘என்ன இது? நீங்கள் யாருக்கு அரசுரிமை வழங்கப்போகிறீர்கள்’ என்று
கேட்பதுபோல இருந்தது.
சில கணங்கள் யாவரும் ஒன்றும் பேசத் தெரியாமல் மூச்சும் விடாமல்
குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது கணீர் என்று ஒரு குரல் எழுந்தது. இளங்கோவே எழுந்து
நின்று, “மன்னர் பெருமானே!” என்று அழைத்த குரல் அது. அரசன் அவரை
நோக்கினான். செங்குட்டுவன் பார்வையும் அவர்மேல் பதிந்தது.
மற்றவர்களும் அவரையே பார்த்தார்கள்.
“இதோ, இந்தச் சோதிடர் சொற்களைப் பொய்யாக்கி விடுகிறேன் நான்.
எனக்கா இந்த அரசாட்சி கிடைக்கும் என்று சொன்னார்? நான் இதோ
இந்தக் கணத்திலே துறவுபூண்பதாகச் சபதம் செய்கிறேன். என்
தமையனார் நெஞ்சில் ஐயம் இருந்தால் இப்போதே ஒழியட்டும். நான்
இன்றுமுதல் துறவி. எனக்கும் இந்த அரசுரிமைக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.”
“என்ன இது! என்ன இது!” என்று யாவரும் திணறிக்கொண்டு
கேட்டார்கள். சோதிடர்கூட ஒன்றும் தெரியாமல் விழித்தார்.
இளங்கோ மேலும் பேசலானார்; “இந்தச் சேர நாட்டரசு எனக்குப்
பெரிதன்று. முடிவே இல்லாத பேரின்ப அரசு எனக்குக் கிடைக்கும்படி
நான் விரதம் இருந்து நோற்பேன். முடிஏற்ற பிற அரசர்போல வாழாமல்
முடி எடுத்த துறவரசனாக வாழ்வேன்” என்றார்.
அரசன் மயக்கத்திலிருந்து விழித்தவன்போல, “என்ன அப்பா இது? நீ
எதற்காகத் துறவு பூண வேண்டும்? யாரோ பைத்தியக்காரச் சோதிடர்
வாய்க்கு வந்ததைச் சொன்னதற்காக நீ இப்படிச் செய்யலாமா?
செங்குட்டுவன் உன் அருங்குணத்தை அறியாதவனா?” என்று கேட்டான்.
“நான் செய்வது பிழையாக இருந்தால் பொறுத்தருள வேண்டும். நான்
துறவடைந்து ஞானம் பெற்றால் இந்தக் குலத்துக்கே பெருமை. இந்த
உறுதி மொழியை மாற்றுவது என்பது இனி இல்லை…… இதோ
இப்போதே நான் இந்த அரண்மனையை விட்டுப்புறப்படுகிறேன். இனி
எனக்கு இருப்பிடம் மடமோ, கோயிலோ ஆக இருக்கும்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார் இளங்கோ.
அமைச்சர்கள் எழுந்தார்கள்; அவரைத் தடுத்து விடவேண்டும் என்று
எண்ணம். ஆனால் அவர்களுக்குத் துணிவில்லை. அரசன், “என் செல்வா,
என் கண்ணே!” என்று அழைத்தானேயன்றி மேலே பேச முடியாமல்
தடுமாறினான். செங்குட்டுவன் அலங்க மலங்க விழித்தான்.
இந்தக் கலவரத்தினிடையே, சோதிடம் கூறின பேர்வழி எப்படியோ,
பெற்றேன் பிழைத்தேன் என்று ஒருவரும் அறியாமல் நழுவி விட்டார்.
அரண்மனையே துயரக் கடலில் மூழ்கியிருந்தது.
சிலம்பு பிறந்த கதை
கி. வா. ஜகந்நாதன்
இரு பெரும் புலவர்கள்
வஞ்சிமா நகருக்கு மேற்கே கடல். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும்
பெரிய கோட்டை வாயில்கள் இருந்தன. கிழக்குப் பக்கத்தில் ஒரு கோயில்
இருந்தது. அதைக் குணவாயிற் கோட்டம் என்று யாவரும் சொல்வார்கள்.
பெருநம்பி இளங்கோவாக இருந்தவர் தம் பட்டத்தையும் அரண்மனை
வாழ்வையும் உதறிவிட்டு அந்தக் கோட்டத்தில் துறவியாக இருந்தார்.
அரண்மனையை விட்டு வெளியேறினவர் வஞ்சி நகரை விட்டுச் சென்று
யாரோ ஒரு துறவியிடம் துறவு பெற்றுச் சில காலம் அவருடன் இருந்தார்.
தம்முடைய அழகிய தலைமுடியை மழித்துவிட்டார். துறவிக்குரிய எளிய
உணவை உண்டார்; எளிய உடையை உடுத்தார். உறக்கத்தையும்
குறைத்தார். அடிக்கடி தியானத்தில் இருந்தார். தம்முடைய
குருநாதருக்குத் தொண்டு செய்தார்.
அரண்மனையில் பலர் ஏவல் செய்ய, இனிதாக வளர்ந்து வந்த அந்த அரச
குமரர். இப்போது தம் குருவுக்கு ஏவல் செய்தார். அறுசுவை உண்டி
வேண்டும் போதெல்லாம் உண்டவர், இப்போது ஒரு வேளை சுருங்கிய
உணவை உண்டார். நன்றாகக் கொழுகொழு வென்று வளர்ந்திருந்த
அவர் திருமேனி மெலிந்தது. ஆனால் அதில் தவத்தேசு மிகுந்தது. அவர்
முகத்தில் ஒளி பரவியது. கண்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. அவரை யார்
கண்டாலும், “இவர் உண்மைத் துறவி” என்ற எண்ணம் உண்டாகும்படி
இருந்தது அவர் தோற்றம்.
சிலகாலம் குருநாதரோடு இருந்த இளங்கோத் துறவி இப்போது
குணவாயிற் கோட்டத்துக்கு வந்து விட்டார். முனிவராகிவிட்ட அவரை
மக்கள் யாவரும் இளங்கோ அடிகள் என்று அழைத்தார்கள். வஞ்சிமா
நகரிலுள்ளவர்களும் மற்ற ஊர்க்காரர்களும் அவரை வந்து கண்டு
அவருடைய நல்லுரைகளைக் கேட்டுச் செல்வார்கள்.
முதுமையினாலும் தன் இளைய புதல்வர் துறவு பெற்றதைக் கண்டு
மனம் உடைந்து போனமையாலும் நெடுஞ்சேரலாதன் நெடுநாட்கள்
வாழவில்லை. அந்த ஒரு திறத்தில்மட்டும் சோதிடர் சொன்னது பலித்தது.
நெடுஞ்சேரலாதன் உலக வாழ்வை நீத்தான். செங்குட்டுவன் அரியணை
ஏறினான் செங்குட்டுவன் சிவபக்தன். வீரமும் அறிவும் நிரம்பியவன். தன் ஆட்சியில் எல்லாச் சமயத்தினரையும் வேறுபாடின்றி அவரவர்களுக்குரிய
உதவிகளைச் செய்துவந்தான். இளங்கோவடிகளுக்கு வேண்டியவற்றை
அவர் அறியாமலே கிடைக்கும்படி செய்தான். அடிக்கடி அவரைக் கண்டு
பேசினான். அவர் பிராயத்தால் இளையவரானாலும் நிலையால்
உயர்ந்தவராதலின் செங்குட்டுவன் அவரிடம் பணிவாக நடந்து
கொண்டான்.
இளங்கோவடிகள் பல மாணாக்கர்களுக்கு ஞான நூல்களையும் தமிழ்
நூல்களையும் பாடம் சொல்லி வந்தார். சில சமயங்களில் வேறு
ஊர்களுக்குப் போய் வந்தார்.
மதுரையில் இருந்த புலவர் சாத்தனார் செங்குட்டுவன் அரசனான பிறகு
அடிக்கடி வஞ்சிமாநகரம் வந்து அவனுடன் அளவளாவினர். தம்முடைய
முதல் நண்பராகிய இளங்கோவடிகளைக் கண்டு பணிந்து தமிழ்
இலக்கியம்பற்றிப் பேசி இன்புற்றார். புலமை மிக்க இருவரும் பல பல
பேசிப் பொழுது போக்கினார்கள். சாத்தனார் மதுரையில் நிகழும்
சிறப்புக்களை எடுத்துச் சொல்வார். பழைய நூல்களிலுள்ள நயங்களைச்
சொல்வார். தாம் பாடிய கவிகளைச் சொல்லிக் காட்டுவார்.
இளங்கோவடிகளும் தமிழ் இலக்கியத்தில் உள்ள அழகை எடுத்துச்
சொல்வார். இவ்வாறு இருவரும் தமிழ் இன்பக் கடலில் அமிழ்ந்தனர்.
இளங்கோவடிகள் துறவியாகிவிட்டாலும் தமிழை விடவில்லை; தமிழ்ப்
புலவரின் நட்பைத் துறக்கவில்லை. சாத்தனாருக்கும் அவருக்கும்
இடையே இருந்த நட்பானது பின்னும் இறுகியது. அதனால் சாத்தனார்
வஞ்சிமா நகருக்கு அடிக்கடி வரத் தலைப்பட்டார். என்றாவது அவர்
மதுரையில் நினைத்தால் வஞ்சிமா நகருக்குப் பயணம்
கட்டவேண்டியதுதான். இளங்கோவடிகளும் எப்போதாவது
சாத்தினாரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினால் உடனே திருமுகம்
போக்குவார்; அதனைக் கண்டவுடனே சிறிதும் தாமதம் இன்றி மதுரைப்
புலவரும் புறப்பட்டு வந்து சேருவார்.
சிறந்த புலவர் ஒருவர் மற்றொரு சிறந்த புலவரோடு சேர்ந்து பழகும்
பழக்கத்தினால் கிடைக்கும் இன்பத்துக்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு
எந்த இன்பமும் இல்லை. ஒருவருக்கொருவர் அன்பு செய்து மனம்
கலந்து பழகுவார்களானால், அவர்கள் இந்த உலகத்திலே சொர்க்க
இன்பத்தைப் பெற்றுவிடு கிறர்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம்.
மற்றொரு சிறப்பும் உண்டு. இப்படி இரண்டு புலவர்கள் கூடிப்
பேசும்போது அருகில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் இலாபம்
கணக்கில் அடங்காதது. பல நாட்கள் படித்தும் தெரிந்துகொள்ள முடியாத
பல சுவையான பொருள்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இளங்கோவடிகளிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்களுக்கு இந்தச் சுவை
நன்றாகத் தெரியவந்தது. சாத்தனார் வந்து விட்டாரென்றால்
அவர்களுக்குக் கட்டுக்கடங்காத ஊக்கமும் உவகையும் உண்டாகி விடும்.
அவரும் இளங்கோவடிகளும் கூடிப் பேசும் பேச்சிலே எத்தனை மணிகள்
உதிரும்! எத்தனை தேன் துளிகள் சொட்டும் அவற்றையெல்லாம்
அருகிலிருந்து நுகர்கிறவர்கள் அல்லவா அவர்கள்?
ஒரு நாள் சாத்தனார் வஞ்சிமாநகருக்கு வந்திருந்தார். குணவாயிற்
கோட்டம் வந்து இளங்கோவடிகளுடன் அளவளாவினர். தாம் புதியனவாக
இயற்றிய கவிகளைச் சொல்லிக் காட்டினார். இளங்கோவடிகளும்
தம்முடைய பாடல்களைச் சொன்னார். சாத்தனார், “ஏதாவது பெரிய
நூலாக ஒன்றை இயற்ற வேண்டுமென்று எனக்கு ஆர்வம் உண்டாகிறது.
தொடர்ந்த வரலாறாக இருந்தால் சுவையாக இருக்கும். எதைப்பற்றி
எழுதலாம் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும்
புலனாகவில்லை” என்றார்.
“செய்ய வேண்டியதுதான். தமிழ் நாட்டுக்கு நல்வினைப் பேறு இருந்தால்
உங்கள் பெரு நூல் அதற்குக் கிடைக்கும்” என்று இளங்கோவடிகள் அவர்
கருத்துக்கு ஒத்துத் தம் கருத்தைக் கூறினார்.
“எனக்கு மட்டும் சொல்லிக்கொள்வது அன்று இது தங்கள் வாக்கும்
அருமையாக இருக்கிறது. துண்டு துண்டாகப் பல பாடல்களை
இயற்றுவதைக் காட்டிலும் தொடர்ச்சியாகப் பொருள் அமையும்படி ஒரு
பெரிய நூல் இயற்றுவது நல்லது. தாங்களும் யோசித்துப்
பார்க்கவேண்டும். ஏதேனும் பொருள் தோன்றினால் பாடத் தொடங்கலாம்.
இன்ன பொருளை வைத்துப் பாடலாம் என்று எனக்குப் பணித்தாலும்
நான் பாடுகிறேன்” என்றார் சாத்தனார்.
“பார்க்கலாம். முதலில் நீங்கள் பாடுங்கள். நீங்கள் புலவர் பெருமான்.
பாடும் தகுதி உடையவர்கள்” என்று இளங்கோ சொல்லவே,
இடைமறித்து, “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் புலவர்
அல்லர் என்று யார் சொல்லுவார்கள்? நான் ஒரு வியாபாரி. தாங்கள்
துறவி. இருந்தால் என்ன? இரண்டுபேருக்கும் தமிழ் ஒருங்கே உரியது.
தாங்களும் பெருநூல் ஒன்றாவது பாட முயல்வது மிக மிக அவசியம்”
என்று தீர்மானமாகச் சொன்னார் சாத்தனார்.
இவ்விருவரின் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்த
மாணாக்கர்கள், “இரண்டு பெருமான்களும் இரண்டு பெருநூல் இயற்றித்
தமிழ் மக்களுக்கு வழங்கினார் எப்படி இருக்கும் இரண்டும் இரண்டு
கண்களைப்போல, இரண்டு சுடர்களைப்போல, இரண்டு
கடல்களைப்போல இருக்கும்” என்று தங்களுக்குள்
பேசிக்கொண்டார்கள்.



