சிலப்பதிகாரமும் தமிழரும்
ம. பொ. சிவஞானம்

சிலப்பதிகாரமும் தமிழரும்

பயனற்ற ஆராய்ச்சிகள்

இளங்கோ யார்? அவரது வரலாறு என்ன ? என்பவைகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் வாதங் கள் இன்னும் அடங்கியபாடில்லை.

இளங்கோ சைவர் என்பார் சிலர்; சமணர் என்பார் பலர். எதையும் சாதி, சமயக் கண்கொண்டு ஆராயும் தொழிலை நமது தமிழ் அறிஞர்கள் இன்னமும் விட்டபாடில்லை. இளங்கோவுக்கு சமய உணர்ச்சி உண்டு. என்றாலும், அவர் அதை வெளியில் காட்ட விரும்பினாரில்லை. சாதி, சமய உணர்ச்சிகளைக் கடந்த அப்பெரியார் தம்மைக் காவியத்தில் மறைத்துக் கொண்டார். இந்த உண்மையை அறியாதவர்கள் தான் அவரைக் காவியத்திற்கு வெளியே காண முயலுகின்றனர். புலவர்களை வேண்டுகின்றேன் : அவரைக் காவியத்தில் காணுங்கள்; அது தான் உங்கள் காரியத்திற்குப் பயனளிக்கும்.

இளங்கோவிற்குப் பெருமை தந்தது அவரது சமயமல்ல ; அவர் இயற்றிய காவியமேயாகும். இளங்கோவிற்கு மட்டுமல்ல ; அவரைப் பெற்றெடுத்த தமிழுக்கும் தமிழினத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் சிலப்பதிகாரம் சிறப்பைத் தருகின்றது. இளங்கோ என்றொரு தம்பி செங்குட்டுவனுக்கு இருந்ததே இல்லை; சிலப்பதிகாரம் இளங்கோவால் இயற்றப் பட்டதே இல்லை; என்றெல்லாம் ஒரு ஆராய்ச்சியாளர் நமக்கு அறிவிக்கிறார். அவர் வேறு யாருமில்லை ; படித்துப் பட்டம்பெற்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராக முன்னாள் இருந்த பண்டிதர் வையாபுரிப் பிள்ளைதான்.

சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் உரை இயற்றி வெளியிட்டுள்ள சிலப்பதிகாரப் புகார்க் காண்ட நூலுக்கு வையாபுரிப் பிள்ளை எழுதியுள்ள மதிப்புரையில்தான் இந்த வம்பு வாதத்தைக் காண்கிறோம். இளங்கோவடிகள் இருந்ததுண்டு; சிலப்பதிகாரத்தையும் இயற்றியதுண்டு ; என்று நம்பி அந் நூலுக்கு உரைஎழுதவும் முற்பட்டார், சர். ஆர்.கே. அவரது கருத்தை மதியாமலே மதிப்புரை தந்தார், திரு. வையாபுரிப் பிள்ளை. செட்டியாரவர்களும் தம் கருத்தை மதியாத மதிப்புரையைத் தாம் மதித்து நூலில் சேர்த்துப் பிரசுரித்து விட்டார். பிள்ளையவர்கள் தமிழராயிற்றே என்ற பிரியத்தால் போலும். ஆனால், நமக்கு சிலப்பதிகாரத்தை இளங்கோதான் இயற்றினாரா? சாத்தனார் எழுதச் சொல்லி எழுதினாரா? என்பதைப்பற்றி யெல்லாம் கவலையில்லை. காவியந்தான் நமக்குத் தேவை.

புவியரசைத் துறந்த கவியரசர்

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் ஒரு பெரும் புரட்சிக் கவியாவார். அவரது வரலாறும் அவர் இயற்றிய காவியத்தில் வரும் கருத்துக்களும் இதை வலியுறுத்தும்.

தந்தை சேரலாதன், தமையன் செங்குட்டுவன் ஆகியோர்களுடன் அரச சபையிலிருந்த இளங்கோவைப் பார்த்து, ‘சேரநாட்டை ஆளப் பிறந்தவன் செங்குட்டுவனல்ல, ‘இளங்கோதான்’ என்று சோத டன் சொன்னான். அதைக் கேட்ட இளங்கோ, ‘மூத்தவன் இருக்க இளையவன் ஆள்வது முறையல்ல ; ஆளப்பிறந்தவன் நானல்ல; என் அண்ணனே. சோதிடன் சொன்ன விதியை என் மதியால் வெல்வேன்’ என்று கூறி அப்போதே துறவியானார்.

இளங்கோ எதைத் துறந்தார்? அரச பதவியையும் அரண்மனை வாழ்வையும். இது எத்தகைய புரட்சிகரமான தியாகம்! இளங்கோ புவியரசைத் துறந்தார். ஆனால், கவியரசராய் விளங்கினார். செம்மல் செங்குட்டுவனைவிடப் புகழுடையவர் கவி இளங்கோவே. செங்குட்டுவன் ஆட்சியின் துணைக் கொண்டு தனது பெயரை நிலை நாட்டினான். ஆனால் இளங்கோவடிகளோ அறிவின் திறத்தால் தமது புகழை நிலை நாட்டினார். என்றும் அழியாத கலைச் செல்வத்தைக் கொடுத்து அதற்கு நம் உள்ளத்தை உறைவிடமாக அமைத்து விட்ட பெருமை இளங் கோவைச் சாரும்.

இடைக்காலப் புலவர்களெல்லாம் நூலியற்றப் புகுங்கால், பிள்ளையார் தோத்திரமின்றித் துவங்குவதில்லை. ‘முந்தி முந்தி விநாயகரே’ என்றோ, ‘தொந்திக் கணபதியே’ என்றோ துவங்குவர். அந்தச் செய்யுளிலே அப்பம், முப்பழம், கடலை, உருண்டை அத்தனையும் காட்சியளிக்கும். இப்படிக் கணபதியின் தொப்பையைத் தடவித் துவக்கப்பட்ட நூல்களில் குப்பையில் போய்ச் சேர்ந்தவை எண்ணில. இந்த உண்டைக் கணபதியைத் தொழுது நூல் இயற்றும் வழக்கம் பண்டைப் புலவர்களிட மிருந்ததில்லை. ஏன்? இந்தத் தொந்திக் கணபதியே தமிழ் நாட்டில் மிகப் பிந்திய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டவர் தான். இதற்குச் சங்க நூல்களே தக்க சான்று.

இயற்கைக்கு வாழ்த்து

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எப்படித் துவங்குகின்றார் பாருங்கள்:

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை (போன்றிவ்
வங்கண் உலகளித்த லான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற் கவனளிபோல்
மேல்னின்று தான்சுரத்த லான்

என்று திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இயற்கைச் சக்திகளைப் போற்றுகிறார். அதிலே இறைவனது அருளைக் காண்கிறார் போலும் ! திங்களைச் சோழ மன்னனின் வெண்குடைக்கும், ஞாயிற்றினை அவனது ஆக்ஞா சக்கரத்திற்கும் உவமை காட்டுவதால் இயற்கை, அரசன் ஆகிய இரண்டினையும் சேர்த்து வணக்கமும் வாழ்த்தும் கூறுகிறார். இஃதோர் புது முறை.

திங்களின் தண்ணொளியும், ஞாயிற்றின் செஞ்சுடரும் இல்லாவிடில் உயிர்கள் வாழ்வது அரிது. மழை இல்லாவிடினும் அப்படியே! ‘வானம் வறக்கு மேல் வானவர்க்கும் பூசனை செல்லாது’ என்பதன்றோ வள்ளுவர் வாக்கு. ஆகவே, மக்கள் வாழவும் மண் தழைக்கவும் காரணமான இயற்கைச் சக்திகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவதே தமது தலையாய கடமை என்று இளங்கோ எண்ணுகிறார்.

இனி, நாட்டையும் வணங்குகிறார்.

பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!
வீங்குநீர் வேலி உலகிற் கவன் குலத்தோ
டோங்கிப் பரந்தொழுக லான்.

‘போற்றி போற்றி! பூம்புகார் போற்றி! பொன்னாடு போற்றி!’ என்று புகாரைப் போற்றுவதன் மூலம் தமிழ் நாட்டையே போற்றுகிறார். இங்கும் அரச வணக்கம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது.

புகார்ப்பதி வாழும் மக்களின் பெருமையையும் கூறுகின்றார்.

இமயமலை, பொதிகைமலை எல்லாம் எப்படி இடம் விட்டுப் பெயர்வ தில்லையோ, அதுபோலப் புகார் நகரத்து மக்களும் அந்நகரத்தைவிட்டு நீங்காது நிலை பெற்று வாழ்பவராவார் என்று சோழநாட்டு மக்களின் பெருமையைக் கூறுகிறார்.

மங்கல வாழ்த்து: தேசீய கீதம்

இதை ஒருதேசீயப் பாடலென் றே சொல்லலாம். சுதந்திர நாட்டில் தேசீயக்கீதம் என்பது என்ன? நாட்டின் இயற்கை வளத்தையும் மக்களின் மேன்மையையும் அரசின் மாண்பையும் போற்றுவதேயன்றோ! ஆனால் இன்று அடிமை நாட்டில் ஆளுவோரைத் தாக்கிப் பாடுவதுதான் தேசீயக் கீதமாக எண்ணப்படுகிறது. ஆனால், இளங்கோவடிகள் காலத்தில் தமிழகம் தன்னாட்சி செலுத்தியது. குறை களைந்து முறை செய்து காத்ததால், மன்னனை ‘இறை’ யென வாழ்த்தி வணங்கினர் மக்கள். எனவே, நாட் டுப் பற்றும் அரசபக்தியும் பிரிக்க முடியாதவாறு பிணைந்து இருந்தன. அதனால்தான் இளங்கோவடிகள் மண்ணைப் போற்றுவதோடு நில்லாமல் மன்னனையும் போற்றுகிறார்.

இதே போன்று மங்கல விழாவிலும், மற்றச் சடங்குகளிலும் நாட்டையும் நாட்டை யாளும் மன் னனையும் போற்றும் வமக்கம் மக்களிடையேயும் இருந்து வந்ததற்குச் சிலப்பதிகாரத்தின் வேறு சில இடங்களிலும் சான்றுகள் உண்டு.

பள்ளியறையிலும் அரச வாழ்த்து

கண்ணகி-கோவலன் திருமணத்திற்குப் பின் அவர்களைப் பள்ளியறை சேர்க்கையில், இளம் பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்துக் கூறுகின்றனர். அப்போது,

இப்பால் இமயத் திறுத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட் டுடையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே

‘எங்கள் சோழ மன்னன் இமயத்திற்கு இப்பால் பொறித்த புலிக் கொடியானது அப்பாலுள்ள பொன் மலையாகிய மேரு மலையிலும் விளங்குவதாக! எல்லாத் திசைகளிலும் போரில் வெற்றி பெற்ற எங்கள் செம்பியன் தனது ஆணையை ஒழுங்காகச் செலுத்துவோனாக!’ என்று தங்கள் மன்னன் இமயத்தில் புலிக்கொடி நட்ட பெருமையைக் கூறி, அக்கொடி மேரு மலையையும் எட்டிப் பிடிக்க வேண்டுமென்ற தங்கள் எண்ணத்தையும் வெளிப்படுத்தி, “திக்கெட்டும் வெற்றிபெற்ற சோழமன்னன் தீதின்றி நெடுங்காலம் வாழ்வோனாக!” என்று வாழ்த்துக் கூறுகிறார்கள்.

கானல் வரியிலும் இதே காட்சியைக் காண்கி றோம். கோவலனும் மாதவியும் மாறிமாறிப் பாடுங் கால் காவிரி ஆற்றை நாயகியாகவும், கரிகால் வளவனை நாயகனாகவும் பாவித்துப் பாட்டிசைக்கின்றனர்.

கோவலன்:

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி!
கங்கை தனனைப் புணர்ந்தாலும்
புலவர் தொழிதல் கயற்கண்ணாய்!
மங்கை மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி!

உழவர் ஓதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி!
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம வாய்காவா
மழவர் ஓதை வளவன்றன்
வளனே வாழி காவேரி!

மாதவி :

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங் கயற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி!.

கருங்க யற்கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
யறிந்தேன் வாழி காவேரி !

வாழி யவன் றன் வளநாடு
மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்குப் பேருதவி
ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல் வெய்யோன்
அருளே வாழி காவேரி!

என்று காவிரி ஆற்றின் வளத்தையும் அதற்குக் காரணமான கரிகால் வளவனின் வளையாத செங்கோலையும் வாழ்த்தி வரிப்பாடலைத் துவக்குகின்றனர்.

பெண்ணின் பெருமை பேசும் பெரியார்

இளங்கோவடிகள் தமது காவியம் முழுவதிலும் பெண்ணின் பெருமையையே பேசுகின்றார். காவியத்தின் பெயராகிய ‘சிலப்பதிகாரம்’ என்ற சொல் பெண்ணின் காலணியாகிய சிலம்பையே குறிக்கின்றது. சிலப்பதிகாரக் கதையில் கண்ணகியே முக்கியப் பாத்திரமாக இருக்கின்றாள். கண்ணகி மூலம் பெண்ணினத்தின் வரலாற்றிலேயே பெரும் புரட்சியைச் செய்கிறார் இளங்கோவடிகள். புரட்சிக்கு ஆண்களே தகுதியுடையவர் என்று எல்லோரும் எழுதுவர். ஆனால் இளங்கோவடிகள் தாங்க முடியாத கொடுங்கோன்மை தாண்டவமாடினால் ஆக்கும் செயல் படைத்த பெண்களும் பழிவாங்கும் படையின் முன்னணியில் நிற்பர், முரசை முழக்குவர், அரசை அழிப்பர் என்று அறிவிக்கிறார். தாய்மைக் குணத்தைப் பெண்மைக்கே உரிமையாக்கினர் பெரியோர். இதைத் தமிழ் இனத்தின் பண்பென் றும் பாராட்டுவர். ஆனால், அநீதி அரசோச்சினால் அரசியலில் ஈடுபடுவதும் அதை அழிப்பதும் பெண்களின் தலையாய கடமை என்பதே சிலப்பதிகாரம் காட்டும் செந்நெறி. அல்வழிப்பட்ட அரசில் தாய்மை உணர்வும் கூட அநீதியால் நிலை குலைக்கப்பட்டு ஆண்மையாகவும், அழிப்புச் சக்தியாகவும் மாறி விடும். அப்போது தையலர்களும் தளபதிகளாவார் கள் என்ற புதுநெறியை – வேறு யாரும் தீட்டாத புரட்சிச் சித்திரத்தைத் தீட்டியவர் இளங்கோவடிகள் இது இலக்கிய உலகத்தில் இளங்கோ செய்த ஒரு பெரிய புரட்சி.

புத்துரை வேண்டும்

சிலப்பதிகாரக் காவியம் மக்களுக்குப் பயன்பட வேண்டுமானால், பாட்டாளி மக்களாலும் பாராட்டப்பட வேண்டுமானால், மக்கள் அனைவரும் விரும்பத்தக்க வகையில் அதற்கு விரிவுரை செய்யவேண்டும். அத்தகைய மாற்றம் காண்பதற்கு தமிழ் இலக்கணமும் இடங் கொடுக்கின்றது.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையிலனே

இது நன்னூல் சூத்திரம். இதைத் தமிழ் அறிஞர்கள் அறியாமலில்லை. ஆனால், இதை மாணவர்களுக்கு பாடஞ் சொல்லித் தருவதோடு நிறுத்திக் கொள்ளுகின்றனர். அது போதாது. இந்த இலக்கண வழிப் படி நமது இலக்கியங்களில் உள்ள பயனற்ற பழைய உரைகளுக்குச் சீட்டுக்கொடுத்து மக்களது வாழ்க்கை யில் தோன்றும் புதுப்புது பிரச்சினைகளுக்கு வழி காட்டும் புதிய கருத்துக்களைப் புகுத்த வேண்டும். இது இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் உலக மெங்கும் புதுப்புது இலக்கியங்கள் தோன்றுகின்றன. பழைய இலக்கியங்களும் கூட புதுமை பெருகின்றன. தமிழ் இலக்கியம் மட்டும் இதற்கு விதிவிலக்காயிருப்பது கூடாது.

கற்பனைக்கும் கதைக்கும் உள்ள வேற்றுமையை நன்கு உணர வேண்டும். கற்பனைகள், அதுவும் கட வுள் அருள்வழிச் செல்லும் கற்பனைகள்தான் அறி ஞர்களின் கருத்தைக் கவர்ந்தன. எனவே, அந்தக் கற்பனை நிகழ்ச்சிகளைப் பற்றியே அவர்கள் போற்றி னார்கள்; புகழ்ந்தார்கள்; புத்துரை செய்தார்கள். இவை மக்களுக்குப் பயன்படுமா? என்பதைக் கூட அவர்கள் சிந்திக்கவில்லை.

பண்டிதர்களை மயக்கும் பகுதிகள்

சிலப்பதிகாரத்தில் நம் பண்டிதர்களின் கருத் தைக் கவர்ந்த பகுதிகள் எவை யென்பதைக் கவனிப்போம்.

கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு கடுங் கோபங் கொண்ட கண்ணகி கதிரவனைப் பார்த்து, “காய் கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ” என்று கேட்கிறாள். “நின் கணவன் கள்வன் அல்லன்; அவனை அநியாயமாகக் கொன்ற இவ்வூரை விரைவில் தீ யுண்ணும்” என்று அசரீரி சொல்லுகின்றது.

கண்ணகி கூப்பிட்டதும் கதிரவன் வாய் திறந்து பேசினான் ! கேட்க இன்பமாய்த்தான் இருக்கிறது. படிக்கவும் சுவையாய் இருக்கிறது. ஆனால் இது கற்பனையா? வரலாறா? உண்மை வரலாறென்றால் கற்புக்கரசிகள் ஆணையிட்டவுடன் கதிரவன் பேசுகின்ற அற்புதக் காட்சி, கண்ணகி காலத்தோடு நின்றுவிட்டதா? இல்லையானால், இன்று எந்தப் பெண்மணியேனும் கதிரவன் மூலம் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் அழியும் நாளை அறிவிக்க முடியுமா ? முடியாது; ஒருநாளும் முடியாது; முடியவே முடியாது. ஏன்? ஏகாதிபத்தியத்தைக் கண்டு கதிரவனுக்குப் பயமா ? அல்லது கதிரவனை வாய் திறக்கச் செய்யும் கற்புத்திறன் நம் நாட்டுக் காரிகைகளுக்கு இல்லையா ? நான் சொல்லுகிறேன்: கதிரவனுக்கே பேசும் சக்தி கிடையாது. இது சத்தியம். இந்த உலகத்திலேயே ஆதவனை வாய் திறக்க வைக்கும் பெண்மணியையும் காணமுடியாது. அப்படியானால், இந்தப் பாருலகில் பத்தினிப் பெண்களே இல்லையென்பது முடிவா? உண்மை என்ன வென்றால், பகலவன் பேசுவதற்கும் பத்தினிப் பண்பிற்கும் சம்பந்தமில்லையென்பது தான்.

சிலப்பதிகாரத்தில் செத்த பிணம் உயிர்பெற் றெழும் செய்தியைக் கேட்கிறோம். கோவலன் கொலை யுண்டு கிடக்கிறான். தலைவேறு முண்டம் வேறாகக் கிடக்கும் அவனது உடலைக் கண்ணகி கையால் தொடுகிறாள். தொட்ட அளவில் கோவலன் உயிர் பெற்று எழுகிறான்; எழுந்ததும் கண்ணகியின் கண்ணீரைத் தன் கையால் துடைத்து, ‘இரு’ எனச் சொல்லி கண்ணகியைக் கையமர்த்திச் செல்கிறான். எங்கே? மாதவி மனைக்கல்ல; பேரின்ப வீட்டிற்கு!

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? இறந்தவர்களை எழுப்பும் வித்தையல்ல ; முக்திக்கு மார்க்கமல்ல; கவிஞனின் கற்பனைத் திறத்தையே. கருத்துக்கினிய கற்பனை. ஆம், செத்த பிணம் எழுந்ததும் கற்பனை; கண்ணகியின் கண்ணீரைத் துடைத்ததும் கற்பனை; மண்ணுலகை மறந்து விண் ணுலகில் மறைந்ததும் கற்பனை.

என்னுரு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர்

”தன்னந் தனியளாய் நான் படும் துயரை அறிந் தும் ஏனென்று ஒரு சொல் கேளீரோ” என்று கண்ணகி கதறுகின்றாள். தன் கணவன் தன்னைக் கண் திறந்து பாரானா? வாய் திறந்து ஒரு வார்த்தை பேசானா ? என்றெல்லாம் அவள் உள்ளத்தே எழும் ஆசைகளைக் கவிஞன் தன் கற்பனையால் நிறைவேற்றிக் காட்டுகிறான். இந்தக் கற்பனை கண்ணகியின் இன்னலைக் கண்டு கலங்கும் நமக்கேனும் ஆறுதலை அளிக்கிறதல்லவா?

காவியமும் கற்பனையும்

காவியத்திற்குக் கற்பனை தேவையா? மிகமிகத் தேவை. கதையில்லாமல் எப்படி காவியத்திற்கு உயிரும் உருவமும் இல்லையோ, அது போலவே கற்பனை இல்லாமல் கதைக்கு அழகில்லை. கதையும், கற்பனையும் கலந்துதான் காவியமாகிறது. அந்தக் காவியத்திற்குத்தான் சிறப்பு ஏற்படுகின்றது. எப்படி உடலை அலங்கரிக்க உடை அவசியமாகிறதோ, அதுபோலவே கதைக்குச் சிறப்பளிக்கக் கற்பனை தேவையாகிறது. உடலோடு பொருந்தி யிருந்தாலும் உடையை உடலாக எண்ணப் படுவதில்லை. அது போலவே கதையோடு பொருத்தி வைக்கப்பட்டிருந்தாலும் கற்பனைகளை யெல்லாம் கதையோடு கலந்த உண்மை நிகழ்ச்சியாக எண்ணிவிடக் கூடாது. இராமலிங்க அடிகளார்,

கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம மண்மூடிப்போக

என்று கூறுகிறார். ஆம், கதையை நம்புங்கள்; கற்பனையை அனுபவியுங்கள். கதையின் கருப்பொருளை உணராது. கற்பனையைக் கட்டியழும் கண்மூடி வழக்கத்தால்தான் தமிழரின் பெருமை மண்மூடிப் போயிற்று.

சிலப்பதிகாரக் கதையின் உட்பொருள்

சிலப்பதிகாரக் கதையின் உட்பொருளென்ன? இன்னல் வந்துற்றால் இரக்கத்தின் இருப்பிடமான பெண்களின் இதயமும் எரிமலையாகும். அந்த எரி யானது தீய சக்திகளைச் சுட்டுப் பொசுக்கும் என்பதேயாகும். கவிஞனின் கற்பனை அந்தத் தீயை ஆங்காங்கு சிறிது தணியச் செய்கிறது.

இந்தக் கண்ணோட்டத்தோடுதான் சிலப்பதிகாரத்தை நான் காண்கிறேன். அன்னிய அரசை எதிர்த்துப் போரிடும் எனக்கு, என் நாட்டினர்க்கு, அதிலும் பெண்களுக்கு, அல்வழிப்பட்ட அரசை அழித்து முடித்த வீரக் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிலப்பதிகாரம் வழிகாட்டியாக இருக்கின்றது

வீரமூட்டும் இலக்கியமே வேண்டும்

நான் ஓர் அரசியல்வாதி. அதுமட்டுமல்ல ; ஆளப்பிறந்த மக்களை அடிமை கொண்ட அந்நிய ஆட்சியை, வாழப் பிறந்த மக்களைச் சாகவைக்கும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் போராட்டவாதி. ஆகவே, நான் சிலப்பதிகாரத்தை அரசியல் கண்கொண்டே நோக்குகின்றேன். அடிமையைத் தகர்க்கும் ஆண்மைமிக்க போராட்டத்திற்கு அது உணர்ச்சி ஊட்டுகிறதா? என்று பார்க்கிறேன். சிலப்பதிகாரம் மட்டுமல்ல; வேறு எந்தத் தமிழ்க் காவியமாயினும் அவை அனைத்தையும் கூட இந்தக் கண்கொண்டே பார்க்கிறேன்.

அந்தோ! நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது; மக்கள் வாழ்விழந்து வதைகின்றனர். பஞ்சமும், பிணியும்தான் மக்கள் பண்பாடு என்றாகிவிட்டது. அன்னிய அரசின்கீழ் அல்லல்பட்டு ஆற்ற முடியாது அழும் கண்கள் கோடானு கோடி. இந்நிலையில் ஆண்மை மிக்க ஒவ்வொரு தமிழனதும் கடமை என்ன? அன் னிய அரசை நீக்கித் தன்னரசு காண்பதேயன்றோ? இந்தக் கடமையைத்தான் நான் மேற்கொண்டுள்ளேன். ஆளப்பிறந்த நாம் அன்னியருக்கு அடிமைப் பட்ட நேரத்தில் அரசியல்தான் நமக்கு முக்கியம்.

எனவே, நமது தமிழ் இலக்கியங்களை சுதந்திரப் போராட்டத்திற்குப் பயன்படுமாறு செய்யவேண்டியது நம் கடமை. அந்த உரிமை நமக்கு உண்டு. இதைத்தவிர பேரின்ப வீட்டிற்கு வழிகாட்டும் எந்தப் பேரிலக்கியமும் இப்போது நமக்குத் தேவை இல்லை. நம்மவர் நாடு நலியும் காலை, ‘வானவர் நாடு’ வலியவரினும் அதை நான் வேண்டேன். கடவுளே என் கண்ணெதிர் நின்று, கைகாட்டி அழைப்பினும், “நான் பிறந்த நாட்டிலே, கஞ்சிக்குக் கதியற்று, கண்ணீரும் கம்பலையுமாகக் கலங்கியழும் ஏழை மக்களின் கவலையைப் போக்குவதே எனக்கு இன்பம். அதை விடப் பேரின்ப வீடும் எனக்குப் பெரிதல்ல” என்று பேசுவேன்.

சிலப்பதிகாரம் நமது சுதந்திரப் போருக்கு வழி காட்டுகின்றதா? கட்டாயம் காட்டுகின்றது. இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

நான் காணும் கண்ணகி

சிலப்பதிகாரத்தில் நான் காண்பது கதிரவனை சாட்சிக் கழைத்த – வெட்டுண்ட கணவனை உயிர் பெற்றெழச் செய்த – அறக்கற்புடைய கண்ணகியன் று. குற்றமற்றவனைக் கொன்று குவித்த கொடுங்கோலரசை அழித்து, மதுரையைத் தீக்கிரையாக்கிய மறக் கற்புடைய புரட்சிக் கண்ணகியே எனக்குக் காட்சியளிக்கிறாள்.

சிலப்பதிகாரத்தில், “அல்வழிப்பட்ட அரசை ஒழிப்பேன்” என்று கனன்றெழுந்து புரட்சி செய்த கண்ணகியைப் போன்று, இன்று நம் தமிழ்ப் பெண்கள் ஆகிவிடுவார்களானால், இந்தப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல; வேறு எந்த ஏகாதிபத்தியத்தையும் கூட அரை நொடியில் அழித்து முடிக்கலாம்; தமிழகத்தில் தமிழரசு நிறுவலாம்.

இளங்கோ அடிகள் அநீதியை எதிர்த்து நிற்கும் ஆண்மையை – அரசியல் நெறியை — புரட்சி வழியை போதிக்கத்தான் சிலப்பதிகாரத்தைச் செய்திருப்பார். மற்றபடி ஊழின் வலிமையை உணர்த்துவதற்கோ, செத்தாரை எழுப்பும் கற்பின் பெருமையைச் செப்புவதற்கோ சிலப்பதிகாரத்தைச் செய்திருக்கமாட்டார். ஏனெனில், இத்தகைய கதைகள், நீதி நூல்கள் இளங்கோ காலத்திலும் இருந்ததுண்டு. திருக்குறளை விட இன்னொரு நீதிநூல் இயற்ற இளங்கோ எண்ணி யிருப்பாரா?

பண்டைத் தமிழர் அரசியல் நெறி

இளங்கோ காலத்தில் அரசன் காலத்தில் அரசன் கடவுளுக்குச் சமம். ஏன்? கடவுளே ஆவான் என்பதே மக்களின் அரசியல் நெறியாக இருந்தது. அரசன் தவறு செய்ய மாட்டான்; அப்படிச் செய்யினும் அவனை அழிக்கும் உரிமை அருட்சக்திக்கே உரியது; ஜனசக்திக்கு இல்லை என்பதே அக்கால மக்களின் நம்பிக்கை.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்த மொல்லை கெடும்.

என்பது திருக்குறளின் தீர்ப்பல்லவா? இந்த அல் வழிப்பட்ட, மன்னன், அநீதி வயப்பட்ட அரசு ‘ஒல்லை கெடு’ மென்ற சொல்லின் பொருளை உணர்த்துகின்றது சிலப்பதிகாரம். அரசை யழிக்கும் முறையை அறிவிக்கின்றாள் கண்ணகி.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. “அல்லல்பட்ட மக்களே அழுங்கள், அழுங்கள்; ஆற்றொணாத் துயர் வந்தபோது அழுங்கள். அரசு அநீதி இழைத்தால் அழுங்கள்; நீங்கள் அழுத கண்ணீரே கொடுங்கோலை அழிக்கும் ஆயுதமாகும்” என்று ஆறுதல் கூறுகிறார் வள்ளுவர். ஆனால் சொன்னால் அழியுமா சூதான ஆட்சி; எழுதினால் அழியுமா இரக்கமற்ற ஆட்சி; அழித்தால்தான் அழியும் என்பதை எடுத்துக் காட்டினார் இளங்கோவடிகள். ஆம்; பாராள்வோர் தவறிழைத்தால் பழிதீர்க்கப் படை கிளம்பியே தீர வேண்டும்.

பழிச் சொற் கஞ்சிய பத்தினி

பாண்டியனின் ஆணையால் கொலைஞரின் வாளுக்குக் கோவலன் இரையாகிறான். கோவலன் கொலை யுண்ட செய்தி கண்ணகியின் காதுக் கெட்டியவுடன் விழுந்தாள்; விம்மினாள்; வேதனைப்பட்டழுதாள். ‘இன்பம் எய்தும் பருவத்தில் அன்பனை இழந்தேன்’ என்று அழுது துடித்தாள். தன் கணவன் ‘கள்வன்’ என்று குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைந்து நெடுமூச்செறிந்தாள். உண்மையறியா உலகம் தன்னைக் ‘கள்வனின் மனைவி’ என்று பழி தூற்றுமே என மனம் பதைத்தாள். அவளைச் சூழ்ந்து ஆயர்குல மாதர்கள் நிற்கின்றனர். “நல்லவள் என்று நம்பிய இவள் கள்வனின் மனைவியாமே!” என்று அவர்கள் அகத்தே தோன்றும் எண்ணத்தை அவர்களது முகத்தில் காண்கிறாள் கண்ணகி. கோவலன் குற்றமற்றவன் என்பதை ஆய்ச்சியர்களை நம்பச் செய்ய அவளுக்கு தன்னைத் தவிர வேறு சாட்சியில்லை. “கள்வனின் மனைவி; ஐயோ! இதை நினைத்தாலும் அவள் நெஞ்சு துடிக்கிறது. பதியை இழந்த நிலையில் பழிச் சொல் வேறா? என்று ஆத்திரங்கொள்கிறாள். கதியற்ற நிலையில் கதிரவனைச் சுட்டிக்காட்டி ஆய்ச்சி யர்களுக்கு அறிவிப்பாள்: ‘அதோ எரிந்துகொண்டு வரும் அந்தக் கதிரவன் சாட்சியாகச் சொல்லுகிறேன்; அவன் மீது ஆணையிட்டு அறைகின்றேன்; என் கணவன் கள்வன் அல்லன்’ என்கிறாள். இது தான் நிகழ்ச்சி.

பழுதற்ற இந்த உண்மையை, பத்தினியின் உரையை அருளுலகம் ஆமோதிக்கத்தானே வேண் டும்? இதைத்தான் கவிஞர் தமது கற்பனையில் அசரீரி, “ஆம், நின் கணவன் கள்வன் அல்லன்” என்று ஆமோதித்ததாக அறிவிக்கிறார். அதுமட்டுமல்ல; கதையின் பின் நிகழ்ச்சியை முன்னதாக நினைவூட்ட, “குற்றமற்ற அவனைக் கள்வனென்ற இவ்வூரைத் தீ யுண்ணும்” என்றும் அசரீரியின் வாயிலாக அறிவிக்கிறார். இந்தக் கற்பனையானது கதையை எவ்வளவு தூரம் அழகுபடுத்துகிறது பாருங்கள்.

இனி, மதுரை நகரின் பிரதான வீதிகளின் வழியே கண்ணகியைப் பின்பற்றுவோம்.

கோட்டங்களும், கொத்தளங்களும், மாடங்களும் கூடங்களும், மதில்களும், அம்மதில்கள் மீது அசைந் தாடும் கொடிகளும் காட்சியளிக்கின்றன. மாடங்களி லெல்லாம் மங்கையர் கூட்டம்; வீதியெல்லாம் மாந்தர் கூட்டம். இந்தக் கூட்டத்தினர் கண்ணகியைக் கண்ணிமைக்காது காண்கின்றனர். அவர்களைப் பார்த்து, “கூரிய வாளால் என் கணவனைக் கொல்லுவித்த பழி காரக் கொடுங்கோலன் ஆட்சியில் பத்தினிப் பெண் களும் உண்டோ? ஆன்றவிந்து அடங்கிய சான்றோரும் உளரோ? தென்னாடுடைய தெய்வமும் உளதோ? என்று பழித்துப் பேசுகிறாள் கண்ணகி, ஏகாதிபத்திய ஆட்சியில் அரசைப் பழித்து வீதிவழியே அழுதுகொண்டு போவாள் ஒருத்தியுண்டோ? அப்படிச் செய்வது அரசநிந்தனை அல்லவா ? இந்தியப் பாதுகாப்புச் சட்டம் அவளை இருட் சிறையில் தள்ளுமே! உரிமையைக் கேட்பவர்களுக்குச் சிறை; உண்மையைச் சொல்லுபவர்களுக்குத் தொல்லை. இது தான் ஏகாதிபத்திய ஆட்சியின் அன்றாட நிகழ்ச்சி.

அன்று மதுரையில், ‘பாண்டி நாட்டுப் பாது காப்புச் சட்டம்’ என்ற ஒன்று இல்லை. எழுதிவைத்த சட்டம் அந்நாளைய அரசியலில் இருந்ததில்லை.வயிறு வளர்க்க வம்பளக்கும் வக்கீல்களும் அரச சபையில் இருக்கவில்லை. அருளுக்குப் பயந்து மனச் சாட்சி வழி நின்று அரசாண்டான் நெடுஞ் செழியன். ஆகவே, கண்ணகிதேவி மதுரை வீதி வழியே தங்கு தடையின்றி அரச நிந்தனைப் பிரசாரம செய்துகொண்டே பல வீதிகளையும் கடந்து அரண்மனை வாயிலை அணுகினாள். அங்கே காவலன் ஒருவன் கையில் ஆயுதங் கொண்டு அரண்மனையைக் காவல் புரிகிறான். அவனைப் பார்த்த கண்ணகிக்கு ஆத்திரம் பிறக்கிறது. கையிகந்த தண்டம் செய்யும் பாண்டி வேந்தன் மனைவாயிலில் காவல் வேறா? என்று கனன்று நோக்கி, ”அறிவிழந்து, மக்களுக்கு அல்லல் விளைவிக்கும் அநீதி. வேந்தனின் காவலனே! கணவனை இழந்த பெண்ணொருத்தி கையில் சிலம்பேந்தி ஆசார வாசலில் காத் திருக்கிறாள் என்று உன் வேந்தனிடம் சொல்” என்று அறிவிக்கிறாள். கண்ணகியின் தோற்றத்தைக் காவலன் கண்டான். அவன் உள்ளம் உருகியது. மன்னனிடம் ஓடோடியும் சென்று அறிவித்தான்.

இப்போதும் அரசு உண்டு. அதன் தலைவனாக கவர்னர் வீற்றிருக்கிறார். அவருக்கு மேலாக கவர்னர் ஜெனரல் இருக்கிறார். அவர்களைக் குடிமக்கள் எவரேனும் எளிதில் நெருங்க முடியுமா? அவர்களது மாளிகைக் காவலர்கள்தான் ஏனென்று கேட்பார்களா? அடித்து விரட்டுவார்கள். அதற்குச் சட்டமுண்டு; அதைச் சரியென்று சாதிக்கக் கோர்ட்டு முண்டு ; இந்தக் கொடுமையை ஆமோதிக்கும் கூட்டமும் நம் நாட்டிலுண்டு. ஆனால்,கண்ணகி காலத்து நிலை வேறு. நீதியும் உரிமையும் நிலைத்திருந்த காலம் அது. ஆகவேதான் கண்ணகி தன்னைக்காண வந்திருக்கிறாள் என்ற செய்தி கேட்டதும் அவளை அழைத்து வர உத்தரவிட்டான். பெண்களிடத்தில் அரசர் காட்டிய பெருந்தன்மையை இதனால் அறிகிறோம். கண்ணீருடன் வந்து நின்ற கண்ணகியைப் பார்க்கிறான் மன்னவன். கையிலே சிலம்பு; மெய்யிலே புழுதி; கண்ணிலே நீர்; வாயிலே வன்சொல். இந்தக் கோலத் துடன் உள்ள ஒருத்தியைத் தன் முன் சமமாக நிறுத்தி, “நீரொழுகும் கண்ணுடன் என் அவையில் நிற்கும் ஆரணங்கே உனக்குற்ற குறை யாது?” என்றான் நெடுஞ்செழியன். ஆம், கையிலுள்ள ஒற்றைச் சிலம்புக்குக் காரணம் கேட்காது கண்ணில் நீரொழுகக் காரணம் என்ன? என்றான்.”ஏழைகள் அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பது தமிழர் நெறியன்றோ! அந்தோ! இந்நாளில் அந்தச் சாத்திர மெல்லாம் எங்கே? ஆம்; “பேயரசு செய்யின் பிணந் தின்னும் சாத்திரங்கள் ” என்ற பாரதி சொல் மெய்யாயின போலும்!

மன்னவன் கேட்க, கண்ணகி தேவி தன் மனக் குறையைச் சொல்கிறாள்: “கணவன் கள்வனல்லன்; அவன் கைப்பட்ட சிலம்பு என் காலுக்குரியதே” என்கிறாள். கண்ணகியின் சொல் கேட்ட மன்னவன் முன்னர் தான் கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பைக் கொண்டு வரச் சொல்லி கண்ணகியின் முன் வைத் தான். எந்தச் சிலம்பு சோழநாட்டிலிருந்து பாண்டிய நாடுவரக் காரணமாயிருந்ததோ, எந்தச் சிலம்பு தனது கணவனை இழக்கக் காரணமாயிற்றோ,எந்தச் சிலம்பு பழியறியாப் பாண்டிய மரபுக்குப் பழி தேடித் தந்ததோ அந்தச் செம்பொற் சிலம்பைக் கண்டதும் கண்ணகி சீற்றங் கொண்டு தன் கையால் எடுத்து உடைத்து நொறுக்கினாள். அதனுள்ளிருந்த மாணிக்கப் பரல்கள் சிதறக்கண்ட மன்னவன் தான் செய்த தவறை உணர்ந்தான். உணர்ந்ததும் அவன் உடல் சாய்ந்தது; உயிர் பிரிந்தது.

தன் புகழ் அழிந்ததற்காக அல்ல, பாண்டியன் உயிர் விட்டது; தனக்கு முன்னே தோன்றி, தனக்குப் பின்னேயும் என்றென்றும் நிலைத்திருக்கும் தமிழினத்தின் புகழ் பாழானதற்காகத்தான்.

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்

என்பதுதான் பாண்டியன் சொன்ன இறுதிச் சொல். மன்னன் அழிந்ததும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மன்னன் தவறிழைத்தால் அதற்கு மதுரையை எரிப்பதா? மக்களைக் கொடுமைக் குள்ளாக்குவதா? இது கற்பாகுமா? என்று குறை கூறலாம். ஆனால், ஆசிரியர் இளங்கோவடிகள் இதற்குத் தகுந்த சமாதானம் கொடுக்காமல் இல்லை. அவர் கொடுக்கும் சமாதானம் அறிவாளி களின் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றது. இளங்கோவின் சமாதானம் இதுதான்:

‘ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையை’ என்று வஞ்சினம் கூறிய கண்ணகி மதுரையைக் கொளுத்தத் துணிகிறாள். மீண்டும் சற்று தயங்கி ஒருவன் செய்த பிழைக்காக ஊரை அழிப்பதா? என எண்ணுகிறாள். மறுபடியும் குழப்பம் நீங்கி தெளிவடைந்து பின்வருமாறு பேசுகின்றாள்:

“யானமர் காதலன் றன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்”

அநீதி அரசு என் ஆளனைக் கொன்றது. கோன் செய்த இந்தக் கொடுமையைக் குடிமக்கள் திருத்தினார்களில்லை. எதிர்க்கவும் துணியவில்லை. கொடுங்கோன் மைக்கு அஞ்சி வாழ்ந்தனர். ஆகவே இது மக்கள் நாடல்ல; மன்னன் நாடு. எனவே இதைச் சீறினேன்; என்மீது குற்றமில்லை’ என்கிறாள். இதுதான் கண்ணகி மூலம் இளங்கோ கூறும் சமாதானம்.

மதுரையில் கண்ணகி நிகழ்த்திய புரட்சி நம் கருத்தைக் கவர்கிறது. அதனால்தான் பாரதியார், “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ” என்றார். பாஞ்சாலி சபதம் இயற்ற பாரதியாரைத் தூண்டியது கண்ணகி வரலாறாகவே இருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் தன் நெஞ்சை அள்ளிய மறக்கற்பைத்தான் பாஞ்சாலி இடமும் கண்டார் பாரதியார். இந்த உண்மையை, “பாஞ்சாலி சபதம்” என்ற தலைப்பைக் கொண்டே அறியலாம். மற்றும்,

காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் தீவேந்தன் றனைக்கண்டித் திறங்கேட்பல் யான்….

என்று கண்ணகி கூறிய வஞ்சினத்தோடு பாஞ்சாலி கூறிய வஞ்சினமும் ஒத்திருக்கக் கண்டார் பாரதியார்.

சிலப்பதிகாரத்தில், மங்கல வாழ்த்து, கானல் வரி, ஆய்ச்சியர் குறவை, வேட்டுவ வரி, குன்றக் குறவை முதலிய பல்வேறு காதைகளில் பெண்களின் இசை முழக்கத்தைக் கேட்கிறோம். இசையில் பெருமை பெற்றது தமிழினம். பண்டை நாளில் தமிழ் நாட்டுப் பெண் மக்களின் இசை முழக்கம் இல்லங்கள் தோறும் எழுந்தன. தொட்டிலில் இட்ட பிள்ளையைத் தூங்கவைக்க இசை (தாலாட்டுப் பாட்டு); அன்னமுண்ணும் பிள்ளையின் அழுகையை அடக்க இசை (அம்புலிப்பாட்டு); இல்லாளைக் கைப் பிடித்து இல்வாழ்க்கை ஏற்கும்போதும் இசை (மங்கலப் பாட்டு); இவ்வாறு பெண்கள், பிள்ளை பிறந்த காலையில் தாலாட்டுப் பாட்டு முதல் இறந்த காலத்தில் அழும் ஒப்பாரிப் பாட்டுவரை இசை முழக்கம் செய்தார்கள். ஆம்; இன்பத்தைத் துய்க்கவும் இசை, துன்பத்தைத் துடைக்கவும் இசை. அந்த உயர்ந்த பண்பு இப்போது தமிழ் நாட்டில் மறைந்தே போயிற்று. பாலுக்கழும் குழந்தையைப் பார்த்து, ‘இந்த எழவு ஏன்தான் இப்படிக் கத்துகிறதோ?’ என்று இடித்துரைக்கும் பெண்கள் எத்தனை பேர்! பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரியும் பாலரின் துடுக்குத் தனத்தைப் பொறுக்காது, ‘இதற்கு ஒரு சாவு கூட வரவில்லையே’ என்று சலித்துப் பேசும் பெண்கள் எத்தனை பேர்; அந்தோ ! அன்று இசைத்தமிழ் தாண்டவமாடிய நாவிலே இன்று வசைத்தமிழ் வழங்கக் காண்கிறோம். காரணம் என்ன ? இன்று தமிழரிடையே தமிழ்ப் பண்பாடு காணப்படவில்லை. பட்டினிப் பட்டாளம் பெருகிவரும் நாட்டிலே பண்பாடு காணமுடியுமா? அல்லல்படும் மக்களிடையே அன்பு காணமுடியுமா? தான் பெற்ற பிள்ளையிடம் கூட அன்பு காட்டும் அன்னையர் அருகி வருகின்றனர். தமிழ் மக்களே! தாயன்பு அழிந்து வருகின் றது. அதை முற்றும் அழிய விட்டீர்களானால் தமி ழினம் அழிந்து படுவது திண்ணம்.

இல்லைஎன்று சொல்லாத பண்பாடு

இல்லையென்று சொல்லாதது தமிழர் பண்பாடு. வந்தவர்க் கெல்லாம் இல்லையென்னாது ஈந்தது பண் டைத் தமிழ் நாடு. அது வளமிக்க தமிழ் நாடு.

இன்று நமக்கு வாய்த்துள்ளது வறுமைத் தமிழ் நாடு, வயிற்றுச் சோற்றுக்கு வழியற்ற மக்கள் வந்த வர்க்கு இல்லையென்னாது ஈவது எங்ஙனம் இயலும்? ஆனால், இல்லையென்று சொல்வதும் ஈனச் செயல். ஆகவே, தமிழரிடம் இன்றோர் புதுமையைக் காண்கிறோம். தங்கள் இல்லத்தை நாடிவரும் பிச்சைக்காரனைப் பார்த்து, ‘இந்த வேளை போய்விட்டு வாருங்கள்’ என்று சொல்லக் கேட்கிறோம். இது ஒன்றே தமிழினத்தார் வந்தவர்க்கெல்லாம் வாழ்வளித்து வறுமைப்பட்டாலும் கூட இல்லையென்று சொல்லும் வழக்கத்தைக் கைக் கொள்ளவில்லை யென்பதை உணர்த்தும். இல்லையென்று சொல்லும் நிலை தமிழனுக்கு ஏற்பட்டாலும், தமிழுக்கு ஏற்படாது. இது திண்ணம்.

தமிழகத்தின் வளம்

இளங்கோவடிகள் புகார் நகரத்தை வருணிக்குமிடத்தில் தமிழ் நாட்டின் செல்வ வளத்தை, தொழிற் சிறப்பை, வாணிபப் பெருக்கை ஒருவாறு உணரலாம். அதைப் படிக்கும்போது களிப்படைவதா? கண்ணீர் விடுவதா? என்று தெரியவில்லை. ஆனால்,அந்தத் தமிழ் நாட்டையும் இன்றைய அடிமைத் தமிழ் நாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் கண்ணீர் விடத் தான் வேண்டும். ஏன்? அந்த வளமிக்க தமிழ் நாடு அழிந்தே போயிற்று மீண்டும் புதுப்பிக்க முடியா த நிலைக்கு அழிந்து பட்டது. புரட்சிக் கண்ணகி பிறந்த அந்த பூம்புகார்ப் பட்டினத்தைப் பற்றிப் பட்டினப்பாலையில் பார்க்கிறோம்.

சீனம், யவனம், எகிப்து போன்ற தூரதேசங்களிலிருந்து கப்பல்கள் காவிரிப் பூம்பட்டினத்துக் கடற்கரையில் காத்து நிற்கின்றன. பல மொழி பேசும் பரதேச மக்கள் கடற்கரைப் பட் டினங்களில் தமிழ் நாட்டு மக்களுடன் கூடிக்குலவி வாழ்கின்றனர். இதனால் அவர்கள் தமிழ் மொழியை அறிந்திருந்தனர் என்பதையும் அறிகிறோம். நமது மலைநாட்டின் மிளகுக்குப் பிறநாட்டு வணிகர்களே யன்றி, மன்னர்களும்கூட மதிப்புத் தந்தனர். முத்துக்கும், பொன்னுக்கும் இல்லாத மதிப்பு அக்காலத்தில் சேரநாட்டு மிளகுக்கு இருந்தது.

இன்று தமிழ் நாட்டின் பூம்புகார் எங்கே? மண்ணில் மறைந்தது. பட்டினப்பாக்கம் பாதலத்தில் அமுங்கியது. ஏகாதிபத்திய ஆட்சி பம்பாய் துறைமுகத்தை இந்தியாவின் புகார் நகரமாக்கியது. இந்தியாவின் செல்வமெல்லாம் மேற்குநாட்டினர் கொள்ளை கொண்டு போவதற்கு பம்பாய் துறைமுகந்தான் சரியான இடம் என்று ஏகாதிபத்தியம் திட்டமிட்டது. ஆகவே, தமிழ் நாட்டில் வாணிபம் வளர வழியில்லை. இன்று ஆமதாபாத்தில் இந்தியா எங்குமில்லாத அளவுக்கு ஆலைத் தொழில்கள் பெருகி இருக்கிறது. இதற்காக நாம் ஆமதாபாத் அல்லது பம்பாய் மக் கள் மீது ஆத்திரங் கொள்வது ஆகாது. ஏனெனில் இந்த நிலை ஏற்படுவதற்கு ஆங்கில ஏகாதிபத்தியமும் அது வகுத்த சட்டங்களும்தான் காரணம். ஆகவே தான் ஏகாதிபத்தியம் தொலைந்த மறுகணமே இந்த நீதியற்ற முறையை நிலைக்கவிடக்கூடாது என்கிறோம்.

தமிழரசு காண்போம்

வெள்ளையன் வெளியேறினால் மட்டும் போதாது. தமிழகத்தில் தமிழரசு, தனியரசு காணும்வரை சுதந்திரப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஆங்கில ஏகாதிபத்தியம் தொலைந்ததும் இன்னொரு ஏகாதிபத்தியம் தோன்றி நம்மை ஆட்டிவைக்க அனுமதிக்க மாட்டோம். சிலப்பதிகாரத்தில் காணும் சிறப்பான வாழ்வைத் தமிழர் அடைய வேண்டுமானால், தமிழரசு அமைந்தே தீர வேண்டும். நாம் தனியரசு கோரக் காரணம், அது நமது பிறப்புரிமை என்பதனாலேயே யாகும். சிலப்பதிகாரம் முதல் செல்லரித்துப்போன எல்லா தமிழிலக்கியங்களும் தமிழரசின் வரலாற்றை தமிழினத்தின் சுதந்திர வாழ்வையே சித்தரிக்கின்றன. எனவே உரிமை உரிமை. உணர்ச்சி, பண்டை நாள் வரலாறு ஆகியவைகளை ஒட்டியே நாம் சுதந்திரம் கோருகிறோம்.

அந்த சுதந்திரத்தை அடைய சிலப்பதிகாரத்தில் காணும் அறிவு, ஆற்றல் அத்தனையும் நாம் பெறுவோமாக! தமிழரசு வேண்டி கிளர்ச்சி செய்வோம். கிளர்ச்சியால் கிட்டாவிடில் புரட்சி செய்வோம்.

வாழ்க தமிழகம் !

வாழ்க தமிழினம்!

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *