
வடலூரும் ஈரோடும்
திருக்குறள் வீ.முனுசாமி
முன்னுரை
‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்னும் பழமொழியினை நினைவில் வைத்து இச்சிறு நூலினை எழுத ஆரம்பித்தேன். தமிழ்நாடு என்றும் மறக்க முடியாத இரு பெரும் சீர்திருத்தத் தலைவர்களின் தொண்டினை இச்சிறு நூல் மூலம் விளக்கி விடுதல் முடியாததொன்றுதான். எனினும், இந் நூலினை ஒரு குறிப்பாக வைத்துக்கொண்டு பகுத்தறிவு வாதிகளும் புரட்சி மனப்பான்மை கொண்ட அறிஞர்களும் உண்மையினை உணர்ந்து கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
அறியாமையில் நுழைந்து கொண்டிருக்கின்ற பெருங் கூட்டம் இந்த நாட்டைப் பல்லாண்டுகளாகப் படுகுழியில் ஆழ்த்தியதுமல்லாமல் உண்மைத் தமிழர்களாக வாழ்ந்து, சமூகத்தைச் செப்பனிடப் பாடுபட்ட சீர்திருத்தவாதிகளையும் தெய்வீகப் போர்வையில் வேதாந்த சித்தாந்த பெட்டிக்குள் அடைத்துக்காட்டி, அவர்கள் உள்ளத்தினை உலகமறியாது மறைத்து விட்டார்களே என்பதை நினைக்கும்பொழுது பரிதாபப்பட வேண்டியதாக இருக்கின்றது.
இல்லறமும் இல்லாமல் துறவறமும் இல்லாமல்-இந்த இரண்டிற்குமிடையே ஊசலாடும் திருக்கூட்டத்தாரால், மறை பட்டுக் கிடக்கும் பெரியார்களில் ஒருவர் வடலூர் இராமலிங்க அடிகளார் என்று என்னால் துணிந்து கூற முடியும். அவரை ஒரு தொண்டரடிப்பொடியாழ்வாரென்றோ அல்லது பஜனை செய்யும் பக்த கோடிகளின் வழிப்பட்டவரென்றோ யாரும் சுலபமாகக் கூறிவிட முடியாது. மூடப்பழக்க வழக்கங்களினால் கேடுற்றுக் கிடக்கும் சமுதாயத்தைச் செப்பனிட வந்து தன் கண்முன்னே வெற்றி காண முடியவில்லை என்று மனம் நொந்து விசனமுற்று மறைந்த ஒரு பெரும் சீர்திருத்தத் தலைவரே, வடலூர் அடிகள். சமத்துவம், சகோதரத்துவம்-இரண்டினையும் மக்கள் பின்பற்றவில்லையே என்று நொந்து மனம் கசிந்தார். பலன் கிட்டவில்லை. தனக்குப் பின்னேயாகிலும், வருங்காலத்தில் மக்கள் முன்னேறலாம் என்ற நம்பிக்கையுடன் மறைந்தார். கடைசியாக அவர் கூறிய வார்த்தைகள் அகில சகோதர ஒற்றுமையைப் பாராட்டும் இச் சங்கத்தில் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்) அங்கத்தினராக வர நீங்கள் அருகரல்லர். நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை. எனது போதனையின் கருத்துப்படி நடக்கவுமில்லை. நான் சொல்வதைக் கவனிக்க மாட்டோம் என்று திடப்படுத்திக் கொண்டீர்கள் போலும்”
இவ்வுலகில் ஐம்பத்தொரு ஆண்டுகள் வாழ்ந்த அடிகள், சற்றேறக் குறைய முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேலாக, மக்களுக்கு – அன்பு – சமத்துவம் – ஒற்றுமை-என்பதைப் போதித்து இறுதியில் கூறிய வார்த்தைகளை மேலே குறித்தோம். மேலும் அவருடைய மாணவரும், சென்னை மாவட்டக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராயும் இருந்த, தொழவூர் வேலாயுத முதலியார் கூறியதையும் கவனியுங்கள் :-
” மேலும், இவர் (இராமலிங்க அடிகள்) சாதி வேற்றுமை பாராட்டலாகாது என்று போதித்ததால், ஜனங்கள் அதில் பிரியப்பட்டார்களிலர். எனினும், பல ஜாதியாரும் இவரைச் சுற்றிப் பெருங் கூட்டமாகக் கூடினர். அவர்கள், இவருடைய போதனைக்காக வரவில்லை. இவரிடம், ஏதோ சக்தி இருக்கின்ற தென்று வந்தனர். அவ்வாறு, தன்னிடம் அபார சக்தி எதுவும் இல்லையென்று இவர் அடிக்கடி வற்புறுத்திக் கூறுவார்.”
இன்றைக்கு எண்பத்தைந்து வருடங்கட்கு முன்பு வாழ்ந்து மறைந்த இராமலிங்க அடிகள் தமது வாழ்க்கை முழுதும் சாதி- மதம் – சமயம் – குட்டிச்சாமிகள் – மூடப் பழக்கங்கள்
புராணக் குப்பைகள் – இவைகளைக் கண்டித்தொழிக்கவே கங்கணம் கட்டி வாழ்ந்தார். இவ்வுண்மையினை உணர்த்தவே இச்சிறு நூல்.
அன்பன்,
வீ. முனிசாமி



